பூக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 187 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கோமதியின் எதிர் வீட்டுக்காரி கனகம், நைலக்ஸ் புடவையும், ஊதாநிற ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு, கண்ணிற்கு மை தீட்டி, முகத்திற்கு நிதானமாகப் பவுடர் போட்டுக் கொண்டிருந்தாள் அவளின் இரண்டு வயதுப் பையன் பால்கனியில் நின்று வெளியே எட்டிப் பார்க்க முயற்சி செய்தான் சுவர் அவனுக்கு எட்டாமல் இருந்ததால் எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தான்.

“குழந்தையை இப்படியா வெளியே விட்டுட்டு நிற்பது?” என்ற குரல் கேட்டு, கனகம் வாசலுக்கு வந்தாள் அங்கே அவள் கணவன் குழந்தையை எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்கு முன்புவரை. தலைவலி விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பவள் போல் போரடித்து’ப் போயிருந்த அவளது முகம் கணவனைக் கண்டதும் புன்னகை பூத்தது.

“ஆபீசில் இருந்து வர, பத்து நிமிடம் தான் ஆகும் ஐந்து பத்துக்கு வரவேண்டிய நீங்கள், ஏன் ஐந்தரைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்று பொய்க் கோபத்தோடு, சிணுங்கிக் கொண்டு கேட்டாள் அவன் அதற்குப் பதிலளிக்காமல், அவள் இடையை வளைத்துப் பிடித்தான். “சரி சரி யாராவது பார்க்கப் போகிறார்கள்” என்று சொல்லிக் கொண்டு, கோமதி தங்களைப் பார்க்கிறாளா என்று நோட்டம் விட்டாள் அவள் நினைத்தபடியே கோமதி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவன், இடையைப் பிடிக்கும் போது, அவள் போய்விட்டாள் கனகத்திற்குப் பரம திருப்தி இன்னும் இடையை விடாத கணவனைப் பார்த்து “விடுங்க அவள் பார்க்கிறாள்” என்று கூறியபடி, எங்கே எடுத்து விடுவானோ என்று பயந்துபோய் அவன் கையின் மேல், தன் கரத்தை வைத்துக் கொண்டு, எவரும் பார்க்காத வீட்டிற்குள் கணவனை இழுத்துக் கொண்டு சென்றாள் நடந்ததை எல்லாம், பாதி பார்த்தும், பாதி பார்க்காமலும் இருந்த கோமதி பெருமூச்சு விட்டபடி, கட்டிலில் உட்கார்ந்தாள் கனகம் அவளை மட்டந்தட்ட வேண்டும் என்பதற்காகத் தான், பகிரங்க’க் காதலை அதிகப் படுத்துகிறாள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அதற்கு தன்நிலையும் ஒரு காரணமல்லவா? கோமதியால் கண்ணிரை அடக்க முடியவில்லை.

கோமதியும், எதிர்வீட்டு இளம் பெண்ணிற்கு அழகில் குறைந்தவளல்ல. சொல்லப்போனால், அவளை விட இவள் நல்ல நிறம், இளமை ஒரே ஒரு பல் தெற்றிக் கொண்டிருந்தது ஆனால், அதுவே அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. அவள் கணவன் தியாகுவே, இதைப் பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறான் எல்லாம் ‘அந்த ‘முப்பது நாள் காலம் வரைதான் கோமதிக்கு நினைக்க, நினைக்க அழுகையாக வந்தது அவள் தனது கணவனுக்கு மனதறிந்து, எந்தவிதத் தொல்லையும் கொடுக்கவில்லை இருந்தும் அவன் அவளை அலட்சியப் படுத்துகிறான் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழுவதும், சிலசமயம் அடிப்பதற்குக் கையை உயர்த்துவதும், இரவு பத்து மணிக்கு மேல் வீட்டிற்கு வருவதும் அவனுக்கு வாடிக்கையாகி விட்டது.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, கோமதி, புடவைத் தலைப்பால் கண்ணிரைத் துடைத்துவிட்டு, கதவைத் திறந்தாள் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது வழக்கத்துக்கு விரோதமாக, அவள் கனவன் தியாகு, வீட்டிற்கு வந்திருந்தான். ஏதோ நல்ல காலம் பிறந்து விட்டதாக நினைத்த கோமதிக்கு தான் பட்ட கஷ்டமெல்லாம் கடந்தகாலமாகி விட்டதாக நினைத்தாள் அந்த மகிழ்ச்சியில் இதோ ஒரு நிமிடத்தில் காபி கொண்டு வருகிறேன்’ என்று சொல்ல நினைத்தவள். அவரே, முதலில் பேசட்டும்’ என்று நினைத்து, காபி போடுவதில் முனைந்தாள் அவளின் கடைக்கண், அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.

தியாகு, மனைவி என்ற ஒருத்தி இருப்பதை நினைத்ததாகத் தெரியவில்லை அவசர அவசரமாக, புதிய பேண்டையும், சட்டையையும் போட்டுக் கொண்டு, தலைமுடியோடு சற்று அதிகமாகப் போராடிவிட்டு முகத்துக்குப் பவுடர் பூசி பீரோவைத் திறந்து இருபது ரூபாயை எடுத்து, பையில் வைத்துக் கொண்டு. வெளியே செல்வதற்காகக் கதவைத் திறப்பதற்கும், கோமதி காபி கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது அவன் அவசரமாக வந்த வேகத்திலேயே, வெளியேறுவதைப் பார்த்த கோமதியால் அழுகையை அடக்க முடியவில்லை.

“வந்ததும், வராததுமாக எங்கே போகிறீர்கள்?” தியாகு விசுவாமித்திரனானான். “போகும்போதே கேட்டுவிட்டாயா தரித்திரம்.போகிற உருப்பட்டால்தான்” என்றான் அலட்சியம் கலந்த கோபத்துடன். பத்து நிமிடம் தாமதமாய் வந்ததற்காகக் கணவனைக் கடிந்து கொண்ட எதிர்வீட்டுக்காரியின் நினைவு, கோமதிக்கு வந்தது. விளக்கின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும், அதே நேரத்தில் அதைவிட்டு, அகல முடியாமலும் தவிக்கும் விட்டில்பூச்சியைப் போல், கோமதி தவித்தாள். சோகத்தைத் தைரியமாக மாற்றிக் கொண்டு, “இப்படிப்பட்டவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்? ஏதாவது விடுதியில் தங்கி விரும்பியவாறு நடக்கலாமே!” என்று சொல்லிக் கொண்டு விம்மினாள்!

“அதைப் பற்றித்தான். நானும் நினைக்கிறேன: விவாகரத்து செய்துவிட்டால் போகிறது” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, அவசரமாக வெளியேறினான். அவன் அவசரம் அவனுக்கு.

சொல்லக்கூடாத ஒன்றை, அவனிடமிருந்து கேட்ட கோமதி, நிலைகுலைந்துபோய் கட்டிலில் அப்படியே சாய்ந்தாள். அந்தக் கட்டிலையே பாடையாக நினைத்து, தான் இறந்ததுபோல் கற்பனை செய்துகொண்டு நினைவிற்கும் கனவிற்கும் இடைப்பட்ட நிலையில், வாழ்வும் சாவும் சந்திக்கும் எல்லைக்கோட்டில், துன்பத்தின் தொடுவானில் தவித்து, புரண்டு விரக்தியடைந்து, தன்னையே மறந்து தலை சாய்த்தாள்.

தியாகு தலைவிரி கோலமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். இன்றைக்கு எப்படியாவது அந்தப் பூக்காரியை வழிக்குக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற நோக்கத்தோடு மாம்பலம் செல்லும் பல்கக்காகக் காத்து நின்றான். பஸ் வரும் வரைக்கும் காத்திருக்க அவனுக்குப் பொறுமையில்லை. வழியில் வந்த டாக்சியில் ஏறி மாம்பலம் விரைந்தான்.

தியாகுவிற்கும் கோமதிக்கும் திருமணம் நடந்து ஒரு வருடம் ஆகிறது. கிராஜுவேட் மனைவி கிடைப்பாள் என்று நினைத்த தியாகு, பெற்றோரின் வற்புறுத்தலால் எட்டாவது படித்த கோமதியை மணம் செய்ததில் ஒரளவு வருத்தம் இருந்தாலும் அந்தக் குறை. தொடக்க கால இல்லறத்தில் தெரியவில்லை. ஆபீசர் வேலையில் எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாத கணவன் கிடைத்ததில் கோமதி மகிழ்ந்து போனாள். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீர் என்று தியாகுவிற்கு அவள் மேல் வெறுப்பு வந்துவிட்டது தனது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத, தன்னுடைய கலைத்திறன்களைப் புரிந்துகொள்ளும் அறிவில்லாத, தன் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாத ஒரு ஜடத்தை மனந்துவிட்டதாகத் தியாகு நினைத்தான்.

திருமணத்திற்கு முன்பு தனக்கு வரப்போகிறவள் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும்’ என்று கற்பனை செய்த தியாகுவிற்கு வந்தவள் அந்தக் கற்பனையில் கால்பங்குகூட இல்லை என்று எண்ணியதும், அவனுக்கு வாழ்க்கையே பிரச்சினையாகியது அதன் எதிரொலியாக, அலுவலகம் விட்டதும் நேராக வீட்டுக்கு வராமல் கண்டபடி சுத்துவது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. பரிவு உணர்ச்சியோ பாசமோ இல்லாதவள் மனைவியாகக் கிடைத்துவிட்டாள் என்ற நினைவில் எழுந்த சுய இரக்க உணர்வில் அவதிப்பட்ட அவன் இன்றைக்கு ஒரு முக்கியமான காரியத்திற்குப் போவதால் டிப்டாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளை மாற்றுவதற்காக வீட்டிற்குச் சென்றான்.

டாக்சி மாம்பலம் சென்றதும் பஸ் ஸ்டாண்டிற்குச் சற்று தொலைவில் இறங்கி ஐந்து நிமிடம் அங்குமிங்குமாகச் சுற்றிவிட்டு பஸ் நிலையத்திற்கு வந்தான் அங்குத் தன்னந்தனியாகப் பூக் கட்டிக் கொண்டிருந்த இளம் பெண்ணை, வேகத்தோடு பார்த்தான்.

இப்படி ஒரு பெண், இங்கே இருக்கிறாள் என்பது, நேற்று தான் அவனுக்குத் தெரியும். வழக்கமான ஊர் சுற்றும் வேலையில், நேற்று அவளைச் சந்தித்தான். அவள் பார்வை என்னவோ போல் இருந்ததால், இன்று வந்து விட்டான். அவளுக்கு, பதினெட்டு, பத்தொன்பது வயதிருக்கும். தலையில் போதிய எண்ணெய் இல்லாததால், அவளின் கேசம், முன் நெற்றியை வருடிக் கொண்டிருந்தது. அதுவே, அவளுக்குத் தனி அழகைக் கொடுத்தது. செழிப்பான ஆமணக்குச் செடியைப் போன்ற தேகம் வறுமையில் வாடிய அதே நேரத்தில் வைரம் பாய்ந்த கண்களும், வாயில் புடவையும், ஸ்டைல் இல்லாத ஜாக்கெட்டும் அணிந்திருந்த அவள், ஆடி ஆடி பூத்தொடுக்கும்போது, அழகு அவயவங்கள் அத்தனையும் ஆடுவது, அழகே உருவெடுத்து, பிறகு அதுவே, ஆடுவது போல் தோன்றியது (குறைந்த பட்சம், தியாகுவுக்கு அப்படிக் காட்சியளித்தாள்.) அவளின் கண்கள் அங்குமிங்குமாக, ஊஞ்சல் போல் ஆடின. வறுமையையே பெருமையாகக் கருதுபவள் போல், ஒருவித அலட்சிய – ஆனால் அகம்பாவமில்லாத பார்வை.

நேரம், இருட்டை நெருங்கிக் கொள்டே வந்தது பஸ்சுக்காகக் காத் திருப்பவன்போல், பாவலா செய்து கொண்டே, தியாகு அவளை நோட்டம் விட்டான் ‘ஏன் இப்படி ஒரேயடியாக நிற்கிறாள்’ என்று எவரும் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இடம் கிடைக்காது என்று தெளிவாகத் தெரியும் பஸ்களில் ஏற முயற்சி செய்வான் பஸ் கிடைக்காமல் தவிப்பவன் போல் “சே! சே! இந்த பஸ்களே மோசம்” என்று அவள் காது கேட்கும்படி முணங்கினான். அவளும் ஒருவிதமாகப் பார்த்து. சூள் கொட்டினர்ள்.

ஆயிற்று. பஸ்களும் ஆட்களும் நகர்ந்தபடி இருந்தன. இப்போது ஆள் அரவம் இல்லை. அவள் மட்டும் தனியாக இருந்தாள் பூக்கடைகளை எடுத்து வைத்து விட்டு, புறப்படுவதற்கோ படுப்பதற்கோ தயார் செய்பவள் போல் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டாள். தியாகு அவளை நெருங்கினான் கால்கள் தாமாக நடுங்கின வியர்த்துக் கொட்டியது. எப்படிப் பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை.

‘எப்படிப் பேச்சைத் தொடங்குவது?’ என்று அவன் தடுமாறிக் கொண்டிருக்கையில், “என்னா சாமி பூ வேணுமா?” என்று அவளே கேட்டாள், குறும்பு தவழும் கண்களுடன்

“ஆமாம். வேனும்.”

“எத்தனை முழம் சாமி?”

“மூன்று முழம் “

“உன் வீட்டுக்காரி, கொடுத்து வச்சவங்க. எந்த ஆம்பிளையும், பொண்டாட்டிக்கு முணுமுழம் வாங்கிதை இந்த நல்லம்மா பார்த்ததில்லை ” நல்லம்மாவின் இந்தப் பேச்சைக் கேட்டதும், தியாகுவின் மனச்சாட்சி உறுத்தியது எப்படியோ சமாளித்துக் கொண்டு. “எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை’ என்று சொல்லி, முழுப்பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முயற்சி செய்தான்.

“அப்படின்னா, பூ யாருக்கு?” அவள் கேட்டாள்.

“சாமிக்கு.”

கோயில் பக்கம் தலையே வைக்காத தியாகுவிற்கு, தன் காதுகளையே நம்பமுடியவில்லை தான் பேசியதைத் தானே கேட்டதும், இவ்வளவு தூரம் பொய் பேசத் தனக்கு சக்தி இருக்கிறது என்பதை அறிந்ததும், அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. நல்லம்மா, பூவை அளந்தான் பூ மென்மையா, அவள் கரம் மென்மையா என்ற ஆராய்ச்சியில் தியாகு ஈடுபட்டான்

“நல்லா, பார்த்துக்க சாமி. மூன்று முழம்” என்று சொல்வி, பூவை அவனிடம் கொடுத்தாள். கரங்கள் உரசின. கண்கள் கிரங்கின. “உன் கையால், எதைக் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்வேன்.”

“அடி கொடுத்தால் கூடவா?” அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள். தியாகுவுக்குத் துணிச்சல் வந்து விட்டது.

“நல்லம்மா! நீ சினிமாவுக்குப் போறதுண்டா?”

தன் பெயரை உச்சரித்ததும் அவளுக்கு மகிழ்ச்சியாகி விட்டது. இந்தப் பொறுக்கிப் பசங்க “நள்ளம்மா…நள்ளம்மா.” என்பாங்க. இந்த ஆளு எவ்வளவு அயகா உச்சரிக்கான். நல்லம்மா, அவன் கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, “நான், அனாதை, வயகப் பொண்ணு; சினிமால்லாம் கட்டுபடியாகாது” என்றாள்.

“அப்படின்னா, என் கூட வர்றியா?”

சொன்ன பிறகு, ஏன் சொன்னோம் என்று நினைத்து, அவள் திட்டப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்தான் தியாகு. மாறாக, அவள் நாணத்தால் தலை கவிழ்ந்து, மெல்ல அவனை நோக்கி “நாளைக்குப் போவோமா?” என்றாள்.

தியாகுவிற்கு உலகம் அனைத்தும், தன்னை மதிப்பது போலவும், நல்லம்மாவிற்கும் தனக்கும் பூர்வஜென்மத் தொடர்பு இருப்பது போலவும் நினைத்தான். தெருவைச் சுற்றி வருகிற அவள் முகம் கருத்துவிட்டது. “சீக்கிரம் போயிடுங்க…அதோ பொறுக்கிப் பசங்க ..சந்தேகத்தோடு பார்த்துட்டு வர்றாங்க. போங்க” என்றாள்.

“போகமாட்டேன். உன்னைக் காப்பாற்றி விட்டுத்தான் போவேன்.”

“ஐயோ, அவங்க பொல்லாதவங்க முதல்லே கைவச் சுட்டுத் தான் பேசுவாங்க அதோ பஸ் வருது அதுல போங்க “

“உன் கதி?’

“எனக்கு இதெல்லாம் சகஜம். எப்படியும் நான் டெய்லி அவங்க கண்ணுல முழுச்சித்தானே ஆகணும் பழகிப் போச்சி. நீங்க போயிடுங்க “

நல்லம்மா அழாத குறையாகக் கெஞ்சினாள் சிறிது தயங்கிய தியாகு நிற்கலாமா வேண்டாமா என்பதுபோல் தயங்கித் தயங்கி, வந்து கொண்டிருந்த பஸ்ஸில் ஏறினான்.

அப்படி ஏறும்போது கண்டக்டர் விசில் அடிப்பதற்காக விசிலை வாயில் வைத்திருந்தார். தியாகு அதில் மோத, விசில் கண்டக்டர் உதட்டில் மோத, தியாகுவிற்கு நெற்றி வீங்கிவிட்டது. கண்டக்டர், மூன்று நாளைக்கு விசிலே அடிக்க முடியாதபடி உதடு வீங்கிவிட்டது கண்டக்டர், தமக்கே உரிய பாணியில் திட்டியதையும் பொருட்படுத்தாமல், தியாகு, சேத்துப்பட்டில் இறங்கி, வீட்டை நோக்கி விரைந்தான். கையில் இருந்த மூன்று முழப் பூவை, அருவருப்பாக நோக்கினான். கோமதிக்குத் தேவை மூன்று முழக் கயிறுதானேயன்றி பூவல்ல, அந்த அசடுக்கு பூ ஒரு கேடா? கையில் இருந்த பூவை நழுவ விட்டான் பின்னால் வந்த அப்பாவி ஒருவர் “சார் இந்தாங்க, உங்க பூவு. கெட்டியாப் பிடிச்சுக்கங்க” என்று சொல்லி அந்தப் பூவைக் கொடுத்துவிட்டு தேங்ஸ்க்காகக் காத்து நின்றார் தியாகு முணங்கிக் கொண்டே நடந்தான்.

அனாதையான அந்தப் பூக்காரி பொறுக்கிகளிடம் எப்படி அவஸ்தைப் படுகிறாளோ? சிந்தனையிலாழ்ந்த தியாகு. பூவை எறிய வேண்டுமென்பதை மறந்து, வீட்டுக் கதவைத் தட்டினான்.

அவன் நெற்றி வீங்கியிருப்பதைப் பார்த்த கோமதி துடிதுடித்துப் போனாள். “ஐயோ என்னங்க இது” என்று சொல்லிக் கொண்டே, அவன் நெற்றியை வருடினாள் தியாகு அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான் அவனுக்குக் காயம் படுவதும், அவள் அதற்காகத் துடிதுடிப்பதும் இதுதான் முதல் தடவை. இருந்தாலும் வழக்கமான பாணியில் தரித்திரம் பிடிச்ச நீ, போகும் போதே கலாட்டா பண்ணியதால் வந்தது’ என்று வாய்வரை வந்த சொல்லை அடக்கிக் கொண்டு “இப்போ சரியாயிட்டுது” என்று எந்திரம்போல் கூறினான் அவன் கையில் இருந்த பூவை, கோமதி கவனித்தாள் தனக்காக ‘அவர் பூ வாங்கியிருக்கிறார். எவ்வளவு அன்பிருக்க வேண்டும் அவருக்கு இவ்வளவுக்கும், சாயங்காலம் ஏதோ ஆபீஸ் காரியமாய் புறப்பட்டவரிடம் சண்டை போட்டாள். இருந்தும் அவர் பூ வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் முதன் முதலாக, கணவன் பூ வாங்கிக் கொண்டு வந்திருப்பதை நினைத்த அந்தப் பேதைக்கு அவன் உலகையே தன் கையில் “இந்தா பிடி” என்று கொடுப்பது போல் தோன்றியது அவன் கரங்கள் இரண்டையும் தூக்கி, தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள் உணர்ச்சி பொங்க.

“அத்தான் ! உங்க கையாலே இதை தலையில் வையுங்க சாயங்காலம் உங்களைப் புரிஞ்சிக்காமே பேசிட்டேன்” என்று சொல்லி அவன் மார்பில் தலை சாய்த்தாள்.

தியாகு துணுக்குற்றான் பிள்ளையார் பிடிக்கப் போனால், அவனையறியாமலே அவனுக்குத் தெளிவு பிறக்கத் தொடங்கியது. புதிய கோமதி ஒருத்தி இருக்கிறாள் என்பதை உணர்ந்த அவன் சிந்தனை பின்னோக்கிச் சென்றது.

பூக்காரி அனாதைதான்.

ஆனால், கசப்பான அனுபவங்களாலும், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளாலும், துன்பப்பட்டு, எதையும் சமாளித்துக் கொள்வாள் ஆனால் கோமதி இவள்தான்!

கோமதியையும் பூக்காரியையும் ஒப்பிட்டு நோக்கிய தியாகுவிற்கு ஞானம் பிறந்தது. குரங்காட்டம் போட்ட அவன் மனம் மெல்ல மெல்ல சம நிலைக்கு வந்தது.

கோமதியின் உயர்ந்த குணமும் அன்புள்ளமும், அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது!

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *