புளிக்கவைத்த அப்பம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2012
பார்வையிட்டோர்: 9,951 
 
 

இப்படித்தான் நடந்தது. யூதப் பெண்மணி ஒருவர் எங்களை மாலை விருந்துக்கு அழைத்திருந்தார். இதிலே என்ன அதிசயம். நான் பலவிதமான கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டு சென்றிருக்கிறேன். விருந்துகளும் அனுபவித்திருக்கிறேன். இந்துக்கள், இஸ்லாமியர், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் சகல பண்டிகைகளிலும் விருந்துகளிலும் பங்கேற்றிருக்கிறேன். யூத வீட்டுக்கு மட்டும் போனது கிடையாது. பெரும் எதிர்பார்ப்பில் நானும் மனைவியும் விருந்து நாளுக்காக காத்திருந்தோம்.

விருந்துக்கு அழைத்த பெண்மணியின் கணவர் ஓர் எழுத்தாளர். அவர் எழுதிய பெரிய நாவலின் எழுத்து நல்லாக இல்லையென்றாலும் கதை சுவாரஸ்யமானது. சினிமாவாக எடுத்தால் வெற்றிபெறும். முழுக்கதையும் சைபீரியாவில் ஒரு ரயில் வண்டியில் நடைபெறுகிறது. அதை எடுப்பதற்கு ரொறொன்ரோவிலுள்ள பல தயாரிப்பாளர்களை அவர் அணுகியிருந்தாலும் ஒருவரும் துணிந்து முன்வரவில்லை.

விருந்துக்கு போன அன்று ஓரா (அதுதான் அவர் பெயர்) தன் கணவர் ஊரில் இல்லையென்றார். வீட்டிலே அவரும் அவர் தாயார் மட்டுமே இருந்தனர். அதுவும் நல்லதுதான். இலக்கியம் கதைக்கும் சங்கடத்திலிருந்து விடுதலை கிடைத்திருந்தது. ஓரா எங்களை அமரச் செய்து, தாயார் சமையல் அறையில் வேலையாக இருப்பதாகவும், விரைவில் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார் என்றும் சொன்னார். நாங்கள் பார்க்கக்கூடிய தூரத்தில் உணவு மேசை இருந்தது. அதிலே பலவிதமான உணவு வகைகள் பளிச்சென மின்னும் பாத்திரங்களில் அலங்காரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் அன்று குறைந்தது இருபது விருந்தாளிகளாவது வருவார்கள் என நினைத்தோம். ஆனால் ஓரா நாங்கள் மட்டுமே விருந்தாளிகள் என்று சொன்னபோது நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்தோம். இரண்டு பேருக்கு இத்தனை உணவா என்று திகைப்பை அடக்க நாங்கள் தனித்தனியாக சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம்.

ஓரா கிளைக்கு கிளை தாவி உட்காரும் குருவிபோல சுறுசுறுப்பாக இருந்தார். அவருடைய தாயார் சமையலறையில் இருந்து வெளிப்பட்டார். கூழாங்கற்களை வாய்க்குள் நிறைத்துக்கொண்டு ‘குலேபகாவல்லி’ என்று சொன்னால் ஒரு சத்தம் உண்டாகுமே அதுதான் அவர் பெயர். அது என் வாயில் நுழையாது; எழுத்திலும் எழுதமுடியாது. ஆகவே வசதிக்காக அவர் பெயரை சாரா என சுருக்கியிருக்கிறேன். அவருக்கு வயது எண்பதுக்கு மேலே இருக்கும். சாந்தமான முகம் ஆனால் எதையோ ஞாபக மறதியாக வைத்துவிட்டது போன்ற கண்கள். இரண்டு கைகளிலும் இரண்டு பாத்திரங்களில் மேலும் புதிய பதார்த்த வகைகள். அவற்றை மேசையில் வைத்துவிட்டு எங்களுக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார். ’நான் இப்பொழுது கொண்டுவந்த பதார்த்தம் அபூர்வமானது. புது விருந்தாளிகளுக்கு புளிக்க வைத்த மாவில் தயாரிப்பது யூத கலச்சாரத்தில் முக்கியமானது. இதன் பெயர் அரணிகலுஸ்கா. கறுவா போட்டுத் தயாரித்த இழுபடும் கேக். இப்பொழுதுதான் சூட்டடுப்பில் இருந்து இறக்கினேன். இது சுடச்சுட உண்ணவேண்டியது. வாருங்கள், வாருங்கள்’ என்று எங்களை மேசைக்கு அழைத்தார். மஞ்சள் கோடு போட்டு சரி பாதியாக வீதியை பிளப்பதுபோல கேக்கின் நடுவில் கோடு வரைந்திருந்தது. ’இது என்ன?’ என்று பீதியுடன் கேட்டேன். ’உங்களுக்கு ஒரு பாதி, மீதி மனைவிக்கு’ என்றார். நாங்கள் முந்திப் பிந்தி பார்த்திராத உணவு வகைகள். ஒரு கிராமமே உண்டு பசியாறக்கூடிய அந்த பதார்த்தங்களின் பெயர்களைக் கேட்டோம். எப்படி சமைப்பது, எப்படி அவற்றை உண்பது என வினவியபடியே உண்டோம். ’தாராளமாக கூச்சப்படாமல் சாப்பிடுங்கள், இன்னும் உள்ளே இருக்கிறது’ என்றார் சாரா.

சாராவுக்கு விதம் விதமான உணவு வகைகளில் ஒருவிதமான மோகம். அவர் உண்ணவே தேவையில்லை, உணவின் மணத்தை வைத்தே தரத்தை சொல்லிவிடுவார். மகளுக்கு வேலை சந்தையிலிருந்து சாமான்களை வாங்கி வந்து போட்டுக்கொண்டேயிருப்பதுதான். சாரா தினமும் சமைப்பார். ஏதாவது புதிதாக யோசித்தால் உடனே அவருக்கு அதைச் சமைத்துப் பார்க்கவேண்டும். சில சமயம் நடு இரவு ஏதாவது யோசனை தோன்றினால் அடுத்த நாள் காலைவரை காத்திருக்கும் பொறுமை கிடையாது. அந்தக் கணமே சமைக்கத் தொடங்கிவிடுவார். அவர் சமைக்கும் அனைத்துமே ருசியாகத்தான் இருக்கும். ஆனால் சமைக்கும்போது ஆராவது குறுக்கிட்டால் அவர் மனம் வெதும்பிவிடுவார். ஆகவே அவர் விசயத்தில் எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பார்கள் என மகள் சொன்னார்.

சாராவுக்கு கிரேக்கம், இத்தாலியன், ரஸ்யன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஹீப்ரு மற்றும் ஆங்கில மொழிகள் தெரியும். அவர் எந்த மொழியிலும் எங்களுடன் பேசத் தயாராக இருந்தார். எங்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால் எங்களிடம் ஆங்கிலத்திலும், மகளிடம் ஹீப்ருவிலும் பேசினார். அவர் பிறந்து வளர்ந்தது கிரீஸ் நாட்டில் சலோனிக்கா என்ற நகரத்தில். அவர் சிறுமியாக இருந்தபோது இரண்டாம் உலக யுத்தம் வந்தது. ஜேர்மன் படைகள் சலோனிக்காவுக்குள் நுழைந்துவிட்ட நாளிலிருந்து யூதர்களின் வாழ்க்கை நரகமாக மாறியது. சாராவின் தகப்பன் அவர்களிடமிருந்த பணம், நகை எல்லாவற்றையும் மதகுரு மூலம் ஜேர்மன் படையினரிடம் ஒப்படைத்தார். அப்படித்தான் ஜேர்மன் ராணுவத்திடமிருந்து கட்டளை வந்திருந்தது. அங்கே வசித்த 60,000 யூதக் குடும்பங்களும் அப்படியே செய்தன. பணம் கொடுத்ததால் பாதுகாப்பு கிடைக்கும் என நம்பினார்கள், ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமானது.

நான் சாராவைப் பார்த்து ‘அப்போது உங்களுக்குச் சின்ன வயதாக இருந்திருக்கும். உங்களுடைய ஆகப் பழைய ஞாபகம் என்ன?’ என்றேன். சாரா சொன்னார். ‘என்னுடைய தகப்பன் ஒரு மருந்தகத்தில் வேலை பார்த்தார். போர் தொடங்கிய நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது 1941, ஏப்ரல் மாதம். அம்மா முழங்காலில் உட்கார்ந்து அக்கா அணிந்திருந்த பாவாடை மடிப்பை அவிழ்த்து நீளமாக்கினார். எங்கள் சம்பிரதாயத்தில் ஒருவர் அணிந்திருக்கும் உடையில் தையல் வேலை செய்யக்கூடாது. பிணத்தைச் சுற்றும் துணியை மட்டும்தான் அப்படி தைக்கலாம். பறந்து கொண்டிருக்கும் மரண தேவதை, யாராவது ஒருவர் உடை அணிந்திருக்கும்போதே அதை தைப்பதைக் கண்டால் அந்த ஆள் இறந்துபோனவர் என நினைத்து உயிரை எடுத்துவிடும். ஆகவே அம்மா அக்காவிடம் ஒரு அப்பிளைக் கொடுத்து அதை வாயை ஆட்டி சாப்பிடச் சொன்னார். வாயை ஆட்டினால் மரண தேவதைக்கு அந்த ஆள் உயிரோடு இருப்பது தெரிந்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிடும். நானும் ஓர் அப்பிள் கேட்டு அம்மாவிடம் சண்டை பிடித்தேன். அந்த நேரம் அப்பா வாசல் கதவை உடைப்பதுபோல திறந்து உள்ளே ஒடி வந்து ‘அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்று கத்தினார். அவர்கள் என்று சொன்னது ஜேர்மன் ராணுவத்தை. அன்றிலிருந்து நாங்கள் வேளியே போவதைக் கணிசமாக குறைத்து, மறைந்து வாழப் பழகிக்கொண்டோம். அது உலகச் சண்டை என்பது எனக்கு தெரியாது; ஆனால் பயப்படவேண்டும் என்பது தெரிந்திருந்தது.

யூதர்கள் வெளியே போகும்போது ஒரு மஞ்சள் நட்சத்திரத்தை நெஞ்சிலே குத்திக்கொண்டு போகவேண்டும் என்பது புதுச் சட்டம். ஒரு நாள் அம்மா வெளியே புறப்பட்டபோது மஞ்சள் நட்சத்திரத்தை மறந்துவிட்டார். நான் வீதியில் உருண்டு புரண்டு அழுதேன். அம்மா வீட்டுக்கு போய் மறுபடியும் நட்சத்திரத்தை அணிந்து புறப்பட்டார். ஏன் அப்படி அன்று செய்தேன் என்பது எனக்கு புரியவில்லை. பல வருடங்கள் கழித்து நான் அமெரிக்க எழுத்தாளர் நதானியல் ஹாவ்தோர்ன் எழுதிய The Scarlet Letter நாவலைப் படித்தேன். அதிலே வரும் கதாநாயகிக்கு தவறான முறையில் குழந்தை ஒன்று பிறக்கிறது. ஊர் அவரைத் தள்ளி வைத்ததும் அல்லாமல் அவர் வெளியே புறப்படும்போது ஊதா நிறத்தில் A எழுதிய துணிப்பட்டையை நெஞ்சிலே அணிந்து செல்லவேண்டும் என்றும் தண்டனை பிறப்பிக்கிறது. ஒருநாள் அவர் துணிப்பட்டையை அணியவில்லை. அவருடைய மகள் தாயார் பட்டையை அணியவேண்டும் என்று அழுது முரண்டு பிடிப்பாள். அதைப் படித்தபோது எனக்கு கண்ணில் நீர் நிறைந்தது. என்னுடைய தாயாரின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை பல வருடங்கள் கழித்து உணர்ந்தேன். அந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே என் தாயாரை விட்டு நான் பிரிய நேர்ந்தது. பின்னர் அவரை நான் காணவே இல்லை.’

’யுத்தம் முடிவுக்கு வரும்வரை சலோனிக்காவில்தான் இருந்தீர்களா?’

’ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகிக்கொண்டு வந்தது. உணவுக்கு பெரும் தட்டுப்பாடு என்றபடியால் ரேசன் நடைமுறைக்கு வந்துவிட்டது. என் அப்பா நீண்ட நேரம் வரிசையில் நின்று ரொட்டி வாங்கி வருவார். ஒருநாள் அப்பா என்னையும் தன்னுடன் கூட்டிப் போனார். அவர் அப்படி என்னை வெளியே அழைத்துப் போவதே கிடையாது. ஆனால் முதல் தடவையாக அன்று அப்படிச் செய்தார். ஏன் அப்படிச் செய்தாரோ நானறியேன். நானும் அப்பாவுடன் வரிசையில் நின்றேன். திடீரென்று ஜேர்மன் ராணுவத்தின் நீண்ட ட்ரக் வண்டி வந்து நிமிடத்தில் அங்கே வரிசையில் நின்ற யூதர்களை எல்லாம் சுற்றிவளைத்துப் பிடித்து வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. நான் திகைத்துப்போய் நின்றதில் ஓவென்று கத்தி அழுவதற்குகூட மறந்துவிட்டேன். அந்தக் கூட்ட நெரிசலிலும் அப்பா வண்டியின் கம்பித் தடுப்பு வழியாக இரண்டு விரல்களை நீட்டி என்னை ஓடிவிடச்சொல்லி சைகை காட்டினார். அந்த முகத்தை என்னால் மறக்க முடியாது. அதுதான் நான் என் அப்பாவை கடைசியாக பார்த்தது. இப்பொழுது கனவு காணும்போதும் அந்த முகம்தான் வரும். அந்தச் சம்பவம் நடந்து 70 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் என்னால் வரிசையில் நிற்க முடியாது, மயக்கம் வந்து விழுந்து விடுவேன். நான் வரிசையில் நின்றது அன்றுதான் கடைசி.’

’அம்மாவும் அண்ணாவும் அக்காவும் நானும் ஒரு கிரேக்க குடும்பத்தினர் வீட்டில் போய் ரகஸ்யமாகத் தங்கினோம். அவர்கள் அப்பாவின் நண்பர்கள், அப்பாவுக்கு விசுவாசமாக இருந்தவர்கள். எங்கள் முக்கிய பிரச்சினை உணவுதான். கிடைக்கும் உணவு அவர்களுக்கே பற்றவில்லை அதை எங்களுடன் அவர்கள் பகிர்ந்துண்ணும் கட்டாயத்தில் இருந்தார்கள். அண்ணரோ அம்மாவோ வீட்டைவிட்டு புறப்பட மாட்டார்கள். நானும் அக்காவும் வெளியே சென்று ஏதாவது உணவு கிடைக்கிறதா என்று தேடி வருவோம். ஒருநாள் அப்படி போய்த் திரும்பியபோது எங்கள் வீதியை நிறைத்து சனங்கள் நின்றார்கள். அம்மாவையும் அண்ணாவையும் ஜேர்மன் ராணுவம் கைது செய்து போனதாகப் பேசிக்கொண்டார்கள். நாங்கள் அந்த வீட்டுக்கு திரும்பவும் போகவில்லை. என்னுடைய அக்கா அந்த வீட்டுக்காரர்தான் ராணுவத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார் என நம்பினாள். முதல் தடவையாக அன்று இரவு நாங்கள் வீதியிலே படுத்து உறங்கினோம்.

’இப்படி பல மாதங்களை கழித்தோம். பகலிலே காட்டுக்குள் போய் ஒளிந்து கொள்வோம். இரவானதும் வெளியே வந்து பணக்கார குடியிருப்புகளுக்கு சென்று குப்பைத் தொட்டிகளில் தேடுவோம். சில நாட்கள் திருடுவோம். அந்தக் காலங்கள் மிகவும் கொடுமையானவை. ஏழை விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிர் செய்வார்கள். நாங்கள் விதைகளை கிண்டியெடுத்து பச்சையாக உண்டுவிடுவோம். எங்கள் சப்பாத்துகள் கிழிந்து போனதால் இடது காலுக்கு ஒரு சப்பாத்தை அக்காவும், வலது கால் சப்பாத்தை நானும் அணிந்துகொண்டோம். மற்றக் காலுக்கு இலை தழைகளைச் சுற்றிக் கட்டிவிடுவோம். இரவு பகலாக எங்களை விரட்டியது பசிதான். இந்த நாட்களில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாங்கள் ஒளித்து வாழ்ந்த காட்டில் ஒரு தேன்சிட்டும் வசித்தது. சாம்பல் வண்ணத்தில், மென்சிவப்பு தொண்டை கொண்டது. அதன் அலகு அதன் உடம்பிலும் நீளமாக இருக்கும். எந்நேரமும் வேகமாக சிறகசைத்து பறந்து தேன் குடிக்கும். ஒரு நாளைக்கு அதன் எடையளவு தேனை உண்டே ஆகவேண்டும். அல்லது உயிர் தரிக்காது. ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் அது பறந்து தேடுவதைப் பார்க்க எனக்கு திகிலாக இருக்கும். அதன் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் பாடுபட்டது. எங்களில் யார் முதல் இறக்கக்கூடும் என நினைப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் அது உயிருடன் இருக்கிறதா என்று பார்ப்பேன். நான் முதலில் இறந்து அது என் உடலை பார்ப்பதாக சில நாள் கற்பனை செய்வேன்.

அந்த நாட்களில் எங்கள் உடம்பில் இருந்த அத்தனை உறுப்புகளிலும் நாங்கள் ஒரு கணமும் விடாமல் நினைத்த உறுப்பு வயிறுதான். பட்டினியால் நாங்கள் இறந்துபோயிருக்க வேண்டும். எப்படியோ சாகாமல் போனதற்கு ஒரு காரணம் இருந்தது. ஜேர்மனிக்கு எதிராகப் போரிடும் ரகஸ்யக் குழு ஒன்றுடன் நாங்கள் இணைந்துகொண்டோம். அவர்களுக்கு உதவி செய்தோம். தகவல் கொண்டு போவது, அவர்கள் பொருட்களைக் காவுவது, கண்காணிப்பது, வேவு பார்ப்பது போன்ற வேலைகள். அணிவதற்கு பழைய கோட்டும் சப்பாத்துகளும் கிடைத்தன. அதுவும் சில மாதங்கள்தான்.

ஒரு பணக்கார கிரேக்க வீட்டில் வேலையாட்களாக சேரும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நேரம் சாப்பிடக் கிடைத்ததில் சொல்லிக் கொள்ளமுடியாத மகிழ்ச்சி அடைந்தோம். வீட்டைத் துப்புரவாக வைத்திருப்பது, துணி துவைப்பது, பிள்ளைகளைப் பார்ப்பது, இப்படி வேலை. ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. காலையில் எழும்பியதுமே வீட்டுக்கார அம்மா மாடியிலிருந்து இறங்கிவந்து, இரட்டைச் சோபாவின் நடுவே உட்கார்ந்து அதை நிறைப்பார். எல்லா கட்டளைகளையும் உட்கார்ந்தபடியே பிறப்பிப்பார். நாங்கள் அவற்றை நிறைவேற்றுவோம். அவர் கைப்பையை மேசைமேலே வைத்திருப்பார். நாங்கள் அறைக்குள் நுழைந்ததும் அதை எடுத்து தன் மடிமீது வைத்துக் கொள்வார். தினமும் துடைப்பத்தால் வீட்டை கூட்டி குப்பையை அவர் கண்களுக்கு முன்னால் காட்டிவிட்டுத்தான் வீசுவோம். வீசுவதற்கு அனுமதி கேட்டோமா அல்லது குப்பையின் அளவை அங்கீகரிக்கும்படி வேண்டினோமா என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு குளிர் நாள் அதிகாலை அங்கேயிருந்து வெளியேற்றப்பட்டோம். என்னுடைய அக்காவை பொலீஸ் கைதுசெய்து கொண்டுபோனது. அவர் ஒரு நகையை திருடிவிட்டார் என்ற குற்றச் சாட்டு. நகையை திருடி என்ன செய்வது. உணவை திருடினார் என்றால் நம்பமுடிந்திருக்கும். பொலீஸ் நிலையத்தில் அக்காவை கொடுமைப் படுத்தினார்கள். அவர் எழுந்து நின்றபோது அவர் கால்களைச் சுற்றி ரத்தம் தேங்கிக் கிடந்தது. இப்பொழுது நான் நினைக்கிறேன் அவரை பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்று. ஆனால் அக்கா அதுபற்றி என்னிடம் மூச்சுவிடவில்லை. சில நாட்களில் ஜேர்மனி தோற்று இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.’

பழைய கதைகளை சொல்லிக்கொண்டு தாயும் மகளும் எங்களை உபசரித்தபடியே இருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டது மாலை உணவுக்கும், இரவு உணவுக்கும், அடுத்தநாள் காலை உணவுக்கும் போதுமானதாக இருந்தது. மூன்று விதமான பிஸ்கட்; இரண்டு விதமான கேக். மாமலிகா என ஒன்று. பார்ப்பதற்கு பாயசம் போலவும் இருந்தது, பால்கஞ்சி போலவும் இருந்தது. ஆனால் ருசி இரண்டுமே அல்ல. விவரிக்க முடியாத ஒரு புதிய ருசி. உலர்ந்த பழங்களில் தேனை ஊற்றி சூடாக்கிய ஓர் உணவு வகை. என்றுமே அனுபத்திராத அந்த இனிப்புச் சுவையில் என்னுடைய சொண்டுகள் ஒட்டிக் கொண்டதால் உடனே அடுத்த கேள்வியை கேட்க முடியவில்லை.

ஏதாவது கேள்வி கேட்டால் சாரா அதை முதலில் தலைக்குள் உள்வாங்கி, பரிசுச்சீட்டு குலுக்குவதுபோல தலையை குலுக்கி, பின்பு பதில் இறுப்பதுதான் வழக்கம் என்பதை அவதானித்திருந்தேன். ’அதன் பின்னர் என்ன செய்தீர்கள்?’ என்றேன். தலையை ஆட்டிவிட்டு அவர் பதில் சொல்லத் தொடங்கினார். ’நானும் அக்காவும் தினமும் ரயில் நிலையத்தில் போய் காத்திருக்கத் தொடங்கினோம். எங்களைப்போன்ற இன்னும் சிலரும் வந்து அங்கே நெடுநேரம் நின்றார்கள். வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட யூதர்கள் சிலர் திரும்பி வந்தார்கள், அண்ணன், அம்மா, அப்பா இவர்களில் யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கை. ஒருநாள் எலும்புக்கு மேல் பெரிய தலை நிற்கும் ஓர் உருவம் வந்து இறங்கியது. எங்கள் அண்ணன்தான். நாங்கள் அவரைக் கட்டிக்கொண்டு அழுதோம். அவர்தான் எங்களை முதலில் அடையாளம் கண்டார். அவரை நாங்கள் அடையாளம் கண்டிருக்கவே முடியாது. அவர் முன்னங் கையிலே அவர் கைதியாக வதை முகாமில் இருந்ததற்கான ஆதாரமாக ஓர் எண் பச்சை குத்தப்பட்டிருந்தது.

’எங்கே அவரைக் கொண்டுபோனார்கள்? அவர் மட்டும் தப்பி எப்படி திரும்பினார்?’

’என் அம்மாவையும் அண்ணாவை அழைத்துப்போனது போலந்தில் புதிதாக உருவாக்கிய பேர்க்கனோ ஆஸ்விட்ஷ் இரண்டாவது வதை முகாமுக்கு. அங்கேதான் என் அப்பாவையும் வைத்திருந்தார்கள். அப்பா ஆரோக்கியமாக இருந்ததால் அவரை வேலைக்கு பயன்படுத்தினார்கள். அவருடைய வேலை விஷ வாயுக் கூடத்துக்குள் யூதர்களை அனுப்பும்போது அவர்கள் களையும் ஆடைகளை பத்திரப்படுத்துவது. கூடத்துக்குள் போகும் அத்தனை பேரும் இறந்துபோவார்கள். அப்பாவுடைய வேலை அந்த உடுப்புகளை ஆராய்ந்து ஏதாவது மதிப்புள்ள பொருள்கள் இருந்தால் அவற்றை ஜேர்மன் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது. என் அம்மா வதை முகாமுக்கு போய்ச் சேர்ந்தபோது ஜேர்மன் அதிகாரிகளிடம் கெஞ்சிப் பேசி அவருக்கும் ஒரு வேலை கொடுக்கவைத்தார் அப்பா. அது நீடிக்கவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் எல்லோரும் வரிசையாக நிற்கவேண்டும். ஜேர்மன அதிகாரி ஒரு தடியினால் தொட்டுக்கொண்டே போவார். அப்படி தொடப்பட்டவர்கள் விஷவாயுக் கூடத்துக்கு அனுப்பப் படுவார்கள். என் அம்மாவையும் அவர் தொட்டுவிட்டதால் வதைமுகாமுக்கு சென்ற ஒரு வார காலத்திலேயே அம்மா விஷவாயுக் கூடத்தில் கொல்லப்பட்டார். அவர் செய்த ஒரே குற்றம் அவர் யூதராகப் பிறந்ததுதான்.

’என்னுடைய அண்ணனுக்கு பிணங்களை எரிக்கும் இடத்தில் வேலை. அண்ணனும் அப்பாவும் அடிக்கடி ரகஸ்யமாகச் சந்தித்துக் கொண்டார்கள். அப்பாவுக்கு போதிய உணவு இல்லாததால் நாளுக்கு நாள் மெலிந்து பலயீனமாக இருந்தார். காலையில் வரிசையில் பார்வைக்காக நிற்கும்போது நல்ல வலுவான உடம்பு இருப்பதுபோல நிமிர்ந்து நின்று நடிப்பார். ஆனால் போர் முடிவதற்கு சரியாக ஒரு வாரம் இருந்தபோது என் அப்பாவை ஜேர்மன் அதிகாரி தடியினால் தொட்டுவிட்டான். அவரையும் விஷவாயுக் கூடத்துக்குள் கொண்டு சென்றார்கள். அவருடைய ஆடைகளை இன்னொரு இளம் யூதன் சோதித்து பிடுங்கிக்கொண்டான். ஒரு வாரம் கடந்திருந்தால் அப்பா தப்பியிருப்பார். அவர் உடலையும் என் அண்ணன்தான் எரித்தார்.’

’நீங்கள் எப்போது ஹீப்ரு படித்தீர்கள்?’

’நான் எங்கே பள்ளிக்கூடத்திற்கு போனேன். எல்லா மொழிகளையும் நானாகவே கற்றுக்கொண்டேன். போர் முடிந்த பின்னர் யூதர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். அநேகம் பேர் அமெரிக்காவுக்கு போயினர். எனக்கு ஒருவரும் அங்கே இல்லை அத்துடன் இளவயது வேறு. ஒரு முதியவருடன் சென்றால்தான் ஒரு நாடு என்னை ஏற்றுக்கொள்ளும். அண்ணரும் அக்காவும் அங்கேயே தங்குவதாக முடிவு செய்துவிட்டார்கள். ஒரு மீன்பிடிப்படகில் சிலர் பாலஸ்தீனத்துக்கு கள்ளமாகப் போய் குடியேறுவதற்கு புறப்பட்டார்கள். பல யூதர்கள் அப்படி ஏற்கனவே போயிருந்தார்கள். அப்பொழுது இஸ்ரேல் என்ற நாடு பிரகடனம் செய்யப்படவில்லை. எனக்கு எப்படியாவது கிரீஸ் நாட்டைவிட்டு தப்பிப் போய்விடவேண்டும் என்று பட்டது. என்னுடன் அந்தப் படகில் 500 பேர் நெருக்கியடித்துக்கொண்டு பயணம் செய்தார்கள். புறப்பட்ட பதினோராவது நாள் பிரிட்டிஷ் காவல் படை எங்களை தடுத்து விசாரித்து குடியேற அனுமதி தந்தது.

’நான் பாலஸ்தீனத்தில் போய் இறங்கியது 1947ம் வருடம் யூன் மாதம். அங்கே ஆயிரக் கணக்கானோர் ஏற்கனவே வந்து குவிந்தபடி இருந்தனர். எல்லோரும் தனித்தனிக் குழுக்களாக இயங்கினர். அது ஒரு புதிய வாழ்வு முறை. அதை கிப்புட்ஸ் (kibbutz) என்று அழைத்தார்கள். நான் ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக் குழுவில் 63 பேர் இருந்தோம். அந்தக் குழு பெரிய கூட்டுக் குடும்பம்போல இயங்கியது. எங்களுக்கு ஒரு தலைவர் இருந்தார். நாங்கள் எல்லோரும் காலையில் எழுந்ததும் எங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டும். அங்கே ஒரு பொருளும் ஒருவருக்கும் சொந்தமானதில்லை. ஆனால் எல்லாப் பொருள்களும் எல்லோருக்கும் சொந்தம். வேலைக்கு சம்பளமில்லை. படுக்க இடமும், சாப்பிட போதிய உணவும் கிடைக்கும்; அணிவதற்கு உடை கிடைக்கும். மருத்துவ வசதி உண்டு. எல்லா தேவைகளையும் குழு கவனித்துக்கொண்டது. நான் அங்கு வாழ்ந்த காலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

ஒரு வருடம் முடிவதற்கிடையில் இஸ்ரேல் என்ற நாடு பிரகடனம் செய்யப்பட்டது. அப்பொழுதுதான் நான் ஹீப்ரு படிக்க ஆரம்பித்தது. ஹீப்ரு மொழி வலது பக்கத்தில் தொடங்கி இடது பக்கத்தில் எழுதப் படுவது. உயிர் எழுத்து இல்லை. உச்சரிப்புக்காக மேலும் கீழும் புள்ளிகளும் கோடுகளும் இடுவார்கள். ஆறுமாதத்திலேயே நன்று பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டு விட்டேன். அங்கேயே ஒருவரைக் காதலித்து மணம் முடித்தேன். எல்லா தாய்மாரும் வேலைக்கு போனபடியால் குழந்தைகளுக்கான பொது காப்பகம் ஒன்று இயங்கியது. ஒன்றிரண்டு தாய்மார் காப்பகத்துக்கு பொறுப்பாக இருந்தார்கள். எல்லா பிள்ளைகளுக்கும் எல்லா தாய்மாரும் பால் கொடுப்பர். நான் ஆரம்பத்தில் வயலில் வேலை செய்தேன் பின்னர் என்னை குழந்தைகள் காப்பகத்துக்கு மாற்றினார்கள். அப்பொழுது எந்தப் பிள்ளை பசித்து அழுகிறதோ அதற்கு பால் கொடுப்பேன். ஓரா முழுக்க முழுக்க பொது காப்பகத்தில்தான் வளர்ந்தாள்.’

நான் ஓராவிடம் ‘உங்களுக்கு குழந்தையாக கிபுட்ஸில் வளர்ந்தது ஞாபகத்தில் இருக்கிறதா? அந்த வாழ்க்கை எப்படி இருந்தது.?’ என்று கேட்டேன்.

’மிக சந்தோசமான நாட்கள். விளையாடுவதற்கு நிறைய பிள்ளைகள் இருந்தார்கள். என்னுடைய அம்மா உன்னுடைய அம்மா என்ற வித்தியாசம் தெரியாமல் வளர்ந்தோம். பணக்காரர் ஏழை என்பது கிடையாது. எல்லோரிடமும் எல்லாம் இருந்தது. என்னுடைய அம்மாவும் காப்பகத்திலே வேலை பார்த்ததால் நான் ஒருவித வித்தியாசமும் உணரவில்லை. ஆனால் பின்னர் அம்மாவை சமையல்கூடத்துக்கு மாற்றிவிட்டார்கள்.’

’சமையலறை உங்களுக்கு பிடித்ததா?’

’சொர்க்கம் பிடிக்குமா என்று யாராவது கேட்பார்களா? சமையலறை என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. நான் அப்பொழுதுதான் முதல் முறையாக ஒரு சமையல் அறையை பார்க்கிறேன். என் வாழ்நாளில் நான் சமைத்தது கிடையாது. உணவை இரந்து அல்லது திருடி அல்லது பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டுத்தான் பழக்கம். சமையல் அறையில் சொந்தமாகச் சமைக்கத் தொடங்கிய அந்த நாளை மறக்க முடியாது. இனந்தெரியாத ஆனந்தத்தில் மிதந்தேன். இந்தப் பூமியில் நான் பிறந்தது இதற்காகத்தான் என்ற உணர்வு எனக்குள் எழுந்தது. எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சமைத்தபடி இருப்பேன். அல்லது புதிதாக எதையாவது உண்டாக்குவேன். தலைமை சமையல்காரர் என்னை பல தடவை கண்டித்திருக்கிறார்.

’அங்கே பல நாடுகளில் இருந்து யூதர்கள் வந்திருந்தார்கள். பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெய்ன், எதியோப்பியா எனப் பல நாடுகள். அந்த நாட்டு சமையல் பதார்த்தங்களை எல்லாம் சமைக்கப் பழகினேன். என் சிறுவயதில் நான் இழந்த அனைத்தையும் மீட்டுவிடவேண்டும் என்பதுபோல சமையல் கலையில் ஆர்வமாக ஈடுபட்டேன். அங்கிருந்த எல்லோரும் என் சமையலை ஆவலோடு எதிர்பார்த்து ருசித்து சாப்பிட்டார்கள்.

இப்பொழுது ஓரா பேசினார். ‘என்னுடைய அம்மாவுக்கு இன்றைக்கும் சமையல் என்றால் ஒருவித பற்றுத்தான். சமையல் அறைக்குள் நுழைந்தால் அவரை இலகுவில் வெளியே கிளப்ப முடியாது. சின்ன வயதில் குப்பைத்தொட்டி உணவை பொறுக்கியபோது என்ன உணவு என்று அவர் பார்க்கவில்லை. ‘உண்ணக்கூடியதா?’ என்றுதான் பார்த்தார். அந்த இழப்பை ஈடுசெய்யத்தான் இப்படி ஒரு வெறியோடு சமைக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவரைத் தடுப்பதில்லை. சமையலுக்கு என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கிறேன். நீங்கள் வருவதை சொன்னதும் மூன்றுநாள் முன்னரே திட்டமிடத் துவங்கிவிட்டார். என்னென்ன விசேஷமாகச் சமைக்கலாம் என்பதை அவரே தீர்மானித்தார். யூதர்களின் புளிக்கவைத்த உணவான அரணிகலுஸ்கா செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கான கூட்டுப்பொருள்களை வாங்குவதற்காக நான் இரண்டு நாள் அலைந்தேன். அது இல்லாமல் அவர் விருந்து படைக்கவே மாட்டார்.’

இவ்வளவு நேரமும் சரியாகத்தான் போனது. என் மனைவி வாயை திறந்தபோது எல்லாமே மாறியது. ’எங்களுடைய தோசை சாப்பிட்டிருக்கிறீர்களா? அதுவும் புளித்த மாவில் செய்வது. வட்டமாக இருக்கும். அதற்காக தயார் செய்யும் ஒரு வகை medley சாம்பாருடன் சேர்த்து உண்ணும்போது மிகவும் சுவையாக இருக்கும்.’

‘அப்படியா? அப்படியா? அதை எப்படிச் செய்வது? என்றார் சாரா. அவர் கண்கள் மின்னின. என் மனைவி தோசை செய்வதற்கு வேண்டிய கூட்டுப்பொருள்களை ஒவ்வொன்றாக கைவிரல்களை மடித்து மடித்து கூறினார். என்னுடைய மனைவியின் தோசை சுடும் திறன் பற்றி நான் நீண்ட காலமாக அறிவேன். அதன் வடிவம் சதுரமாகவும், முக்கோணமாகவும் சில சமயம் வட்டமாகக்கூட வருவதுண்டு. முதலில் தோசைக் கல்லை விட்டுக் கிளப்பின பிறகுதான் வடிவம் என்னவென்று பிடிபடும். பிடிவாதமாக என்னை ஒரு கண்ணால் பார்த்தபடி எப்படி உளுந்தை ஊறவைப்பது, அரைப்பது, புளிக்க வைப்பது என்றெல்லாம் விளக்கினார்.

சச்சின் டெண்டுல்கருக்கு எப்படி கிரிக்கட் மட்டையை பிடிப்பது என்று சொல்லிக்கொடுத்ததுபோல ஆகிவிட்டது. சாரா உடனேயே பிடித்துக்கொண்டார். சிறந்த இசைக் கலைஞரின் மூளையில் இசைக்குறிப்புகளை படிக்கும்போதே இசை ஓடும் என்று சொல்வார்கள். அப்படியே சாராவின் மூளையில் தோசை எப்படி உருவாகும் அதன் ருசி எப்படியிருக்கும் என்பதெல்லாம் வெளிச்சமாகிவிட்டது. சாரா ’உங்கள் தோசையை இப்படியும் செய்யலாமே. தோசை கல்லில் வேகும்போது முட்டை மஞ்சள் கருவை பரப்பி, வால்நட் துகள்களையும் கோவா இலையையும் பொடிசெய்து அதன் மேல் தூவி சுருட்டிக் கொடுத்தால் அது அலாதியான ருசியாக இருக்கும். அல்லது கல்லிலே இருந்து எடுத்த பிறகு மேப்பிள் சிரப்பை தடவிச் சாப்பிடலாம். அதுவும் சொல்லப்பட்ட பக்குவமாக வரும். ஆனால் இதைக் கேளுங்கள். கோழி இறைச்சியின் எலும்பை நீக்கி, நீராவியில் வேகவைத்து சின்னச்சின்னதாக வெட்டி ,கறுப்பு பீன்ஸ், தக்காளி, கொத்தமல்லிக்கீரையுடன் சேர்த்து தோசைமேல் பரப்பி, பாதி சூட்டில் உருட்டி சாப்பிட்டால் அது இன்னும் ருசியாக இருக்குமே’ என்றார். மனைவி என்னைப் பார்த்தார். அவர் நினைப்பது என்னவென்று எனக்கு தெரிந்தது. அத்தனையும் குறுஞ்செய்திகளாக நேரே என் மூளைக்கு வந்துகொண்டிருந்தன.

’அடுத்த சனிக்கிழமை நீங்கள் தோசை விருந்துக்கு வரமுடியுமா?’ என்றார் மனைவி. அது சூரியன் எட்டிப் பார்க்கத் தொடங்கிய ஓர் ஏப்ரல் மாதம். சாரா தன் மகளைப் பார்க்க, அவர் உள்ளே சென்று யூதக் காலண்டரை எடுத்து வந்தார். அதைப் பார்த்துவிட்டு சாரா ’நாங்கள் வரமுடியாதே, பாஸோவர்’ என்றார். என் மனைவி ’அது என்ன பாஸோவர்?’ என்று கேட்க ஓரா சொன்னார், ’யூதர்கள் ஒரு காலத்தில், அதாவது 3400 வருடங்களுக்கு முன்னர், எகிப்திலே பார்வோன் அரசன் ஆட்சிக்காலத்தில் அடிமைகளாக இருந்து கஷ்டப்பட்டனர். அவர்களின் தலைவன் மோசே அவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கப் போராடினான். ஒருநாள் அரசன் வெறுத்துபோய் ’சரி போய்விடுங்கள், உடனே உடனே’ என்று ஆணையிட்டான். அடிமைகள் அவசர அவசரமாகப் புறப்பட்டபோது அப்பத்துக்காக புளிக்க வைத்த மா புளிக்கவில்லை. வேறு வழியின்றி புளிக்காத அப்பத்தை சுட்டுத் தின்றபடியே வெளியேறினர். அந்தக் கொடுமையையும், அந்த நாளையும் அவர்கள் மறக்கவில்லை. எகிப்தைவிட்டு வெளியேற எடுத்துக்கொண்ட ஏழு நாட்களும் அவர்கள் புளிக்காத உணவை உண்டனர். இன்றைக்கும் அந்த சம்பவத்தின் நினைவாக ஏழு நாட்கள் புளிக்கவைத்த உணவை யூதர்கள் உண்பதில்லை. தோசை புளிக்கவைத்த உணவு. அது பாஸோவரில் தடுக்கப்பட்டது’ என்றார்.

மகள் தாயாரைப் பார்த்தார். சாரா சொன்னார். ’இந்த நாள் எனக்கு முக்கியமானது. நான் சலோனிக்காவில் பட்டினியாக அலைந்தபோது ஒருநாள் பாஸோவர் தினத்தில் புளிக்க வைத்த அப்பம் கிடைத்தது, ஆனால் நான் உண்ண மறுத்துவிட்டேன். 3400 வருடங்களுக்கு முன்னர் விரட்டப்பட்ட மக்களை அந்த ஏழு நாட்களிலும் நினைக்கிறேன். அன்று துடங்கிய ஓட்டம் சலோனிக்கா வரைக்கும் என்னை துரத்தியது. உலகமெங்கும் அலைந்துழன்று மடிந்தவர்களை நினைக்கிறேன். விஷவாயுக் கூடத்தில் இறந்தவர்களை நினைக்கிறேன். எல்லாம் மாறக்கூடியது. ஆனால் நேற்று நடந்தது மாறக்கூடியது அல்லவே? நான் உலகத்து நேற்றைய துயரங்களுக்காகவும், நாளைய நம்பிக்கைகளுக்காகவும் விரதம் காக்கிறேன்’ என்றார். அவர் உணர்ச்சிவசப்பட்டு மேசையை நோக்கி வளைந்துபோய் இருந்தார். சமைத்த அத்தனை உணவும் மேசையில் அவருக்கு முன் இருந்தன. மகள் மெதுவாக தாலாட்டுவதுபோல அவர் முதுகில் தட்டினார்.

இதுவெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பாஸோவர் முடிந்து வரும் முதல் சனிக்கிழமை இன்று. சமையலறையில் காலையில் இருந்து பலவிதமான சத்தங்கள் கிளம்பிய வண்ணம் இருக்கின்றன. மனைவிதான் அவற்றை எழுப்புகிறார். இன்றுதான் அவர்கள் எங்கள் வீட்டு விருந்துக்கு வரும் நாள்.

– 2011-12-30

Print Friendly, PDF & Email

1 thought on “புளிக்கவைத்த அப்பம்

  1. கதையைச் சரித்திரம் போல் எழுதிய இனிய குப்பைகளை (உ .பொன்னியின் செல்வன் ) விழுந்து விழுந்து படித்திருக்கிறேன் இங்கே சரித்திரம் மிக மிக அழகாகக் கதைபோல் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள் .நன்றியும் பாராட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *