புலம்பல்.!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 3,851 
 

சேகர் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான்.

அவனின் முழு ஜாதகமும் தெரிந்த கணேசன் அவனைத் தேற்றிக் கொண்டிருந்தான்.

‘இவன் இருக்கும் இடம் எவ்வளவு கலகலப்பாக இருக்கும்..! இப்போது எல்லாம் போய், எது சொல்லியும் கேட்காமல், பயல் மனதைத் தேற்றிக்கொள்ள மாட்டேன் என்கிறானே..! ‘- நினைக்க நினைக்க அவன் மீது வருத்தமாகவும், அதே நேரம் ஆத்திரமாகவும் வந்தது கணேசனுக்கு.

“கணேஷ் ! அவளுக்கு எப்படிடா… மனசு வந்தது…?” பத்தாவது தடவையாக ஆதங்கத்துடன் கேட்டு நண்பனைப் பரதாபமாகப் பார்த்தான் சேகர்.

“போனாப் போறா விடுடா…”இவன்ரொம்ப அலட்சியமாக சொல்லி அவனைச் சமாதானப் படுத்தினான்.

“நினைக்க நினைக்க ஆத்திரமா இருக்கு. நான் அவள் மேல எவ்வளவு பிரியம் வைச்சிருந்தேன் தெரியுமா…? அவள் இப்படி செய்யவாள்ன்னு நான் கனவுல கூட நினைக்கலை. எல்லாம்தான் உனக்குத் தெரியுமே..! இவளால என் வீட்டில எவ்வளவு எதிர்ப்பு, சண்டை, சச்சரவுன்னு. வீடு, ஊர், உலகம் எல்லாம் எது சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும்ன்னு இவளேக் கதின்னு இருந்தேன். பாவி ! நல்லது கேட்டது எல்லாத்திலும் மண்ணை அள்ளிப் போட்டு என்னை ஏமாத்திட்டா. நான் அவளுக்கு சின்ன விசயத்துல கூட குறை வைக்கலை..!” சேகர் விடாமல் புலம்பினான்.

கணேசன் கேட்டு அமைதியாக இருந்தான்.

“சொல்லு கணேசன். நான் அவளுக்குக் குறை வைச்சிருக்கேனா.. ?” சேகர் அவனை உலுக்கினான்.

“இல்லே..!”

“பின்னே… எதுக்காக அவள் என்னை விட்டுப் போனாள். துரோகம் செய்தாள் …?”

‘இதற்கு என்ன பதில் சொல்வது…? ‘என்று தெரியமால் இவன் நண்பனை கிறக்கமாய்ப் பார்த்தான்.

சற்று நேரம் அமைதியாக இருந்த சேகர்…

“அவுங்க ரெண்டு பெரும் என்னை ஏமாத்திட்டுப் ஓடிப் போற அளவுக்கு நான் ஏமாளியாய் இருந்திருக்கேன்லே…?!”

“அ… ஆமா….”

“நான் முதன் முதலா அவளோட அவனைப் பார்த்தபோது சாதாரணமாத்தான்டா நினைச்சேன். அவள் இப்படி செய்வாள்ன்னு எதிர்பார்க்கவே இல்லே. கணேஷ் ! அவுங்க ரெண்டு பேருக்கும் எனக்குத் தெரியாம ரொம்ப நாளாய்ப் பழக்கம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ..”

“ம் ம்.. ரெண்டு பேரும் ஓடிப்போனதைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது.”

“கணேஷ் ! எனக்கும் முந்தி விரிச்சி, அவனுக்கும் முந்தி விரிச்சி… ஒரு பொண்ணுக்கு எப்படிடா மனசு வரும்…?”

“தான் நல்ல பெண் இல்லேன்னு அவளே நிரூபிச்சுக்கிறாள் அவ்வளவுதான் !!”

“எனக்கு மனசு ஆறலைடா. அவள் கண்ணு மூக்கு, முழியெல்லாம் ரொம்ப அழகு. அவளைப் போல ஒரு அழகியை இனிமேல் என் வாழ்நாளில் சந்திப்பேனான்னு சந்தேகமா இருக்கு !”

“அப்படியா…? ! எனக்கும் அப்படித்தான் தோணுது. சரி, போனாப்போறாள் விடு. அடுத்தவனுடன் ஓடிப்போகணும்ன்னு மனசு வைச்சவள்கிட்ட நாம் எவ்வளவுதான் பிரியமா நடந்துக்கிட்டாலும் அவள் நினைச்சப்படிதான் நடப்பாள்.”

“எனக்கு அவளோட திட்டம் முதல்லேயே தெரிஞ்சிருந்தா எப்படியும் அவளைத் தடுத்து நிறுத்தி இருப்பேன். தெரியாமல் போச்சு ..!”

“போறாள் விடு. ஓடிப்போனவளைப் பிடிச்சி இழுத்து வந்தால் இருக்கவா போறாள்..? நமக்குத்தான் மேலும் அவமானம்.”

“என் மனம் பொறுக்கலை! நெஞ்சு கொதிக்குது ..! பாவி இப்படிப் பண்ணிட்டாள்ன்னு மனம் பதைபதைக்குது.”

என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்தும் கேட்காமல் ஓடிப்போனவளைப் பற்றியே சேகர் திரும்பத் திரும்பப் புலம்புவதை பார்க்க கணேசனுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.

“ஓடிப்போனவளை நினைச்சி ஏன்டா ஒப்பாரி வைக்கிறே..? எழுந்து போய் முகத்தைக் கழுவு..”கொஞ்சம் காட்டமாய்ச் சொன்னான்.

“இல்லைடா. அவளைப் பத்தி உனக்குத் தெரியாது. அவள்….”என்று எதையோ சொல்லத் தொடர்ந்தான்.

அவ்வளவுதான் கணேசனுக்கு அதற்கு மேல் தாங்கமுடியாமல் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

“படவா ராஸ்கல் ! நினைச்சுக்கிட்டிருக்கே மனசுல. ..? என்னவோ நீ தொட்டு தாலிக்காட்டினவள் இன்னொருத்தனோடு ஓடிப்போனது மாதிரி புலம்புறே..! உன்னைவிட அவன் காசு அதிகமாத் தர்றேன், வசதியாய் வைச்சிக்கிறேன்னு சொல்லி இருப்பான். அதான்… அவனுக்குச் சின்ன வீடாய் இருக்கச் சம்மதிச்சி அவனோடு ஓடி இருக்காள். விட்டது சனியன்னு… இனிமேலாவது நீ பொண்டாட்டி புள்ளைகளோடு ஒழுங்கா குடும்பம் நடத்தப் பார்ப்பியா..? அதை விட்டுட்டு புலம்புறானாம் புலம்பல். ! இனி ஒரு வார்த்தை அவளைப் பத்தி பேசினே.. கொலை விழும்…! உன் மனைவியோட சேர்ந்து நானும் உன்னைப் பின்னிடுவேன் பின்னி பெடலெடுத்துடுவேன் ஜாக்கிறதை !” ஆவேசமாகக் கத்திக் குதற….

அவ்வளவுதான் ! சேகர் கண்களில் திடீர் பயம். அரண்டு…. கப்சிப் !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *