புரிதலுடன் பிரிவோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 5,899 
 
 

தன்கூட வேலைசெய்யும் சுதாகரின் பண்பும், அமைதியும் பவானிக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் குறித்த நேரத்தில் முடித்துவிடும் அவனின் வேகமும், விவேகமும் அவளுக்கு அவன்மேல் ஒரு ஆரம்பக் காதலை உண்டாக்கியிருந்தது.

இருவரும் சென்னை ஏ.ஜி ஆபீஸில் வேலை செய்கிறார்கள். ஒரே பிரிவில் வேலை பார்ப்பதால் அடிக்கடி பழகும் சந்தர்ப்பம் எளிதாக அமைந்தது.

சுதாகர் சென்னை ஐ.சி.எப்பில், கல்யாணம் ஆன தன் அக்கா வீட்டில் குடியிருக்கிறான். ஏழ்மையான லோயர் மிடில் க்ளாஸ் குடும்பம். அக்கா, அவளின் கணவர், இரண்டு குழந்தைகளுடன் இவனும் ஒட்டிக்கொண்டு இருக்கிறான்.

சுதாகரின் அம்மா திருச்சியில் தனியாக இருக்கிறாள். அப்பா இறந்துவிட்டார்.

பவானிக்கு வீடு பாலவாக்கத்தில். தினமும் காரில் ஏ.ஜி ஆபீஸ் சென்று வருமளவுக்கு வசதியானவள். துடிப்பானவள். தனக்கு ஏற்ற ஒரு சிறப்பான கணவனைத் தேடி தன் வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக்கொள்ள விரும்புபவள்.

அந்தத் தேடலில் ஈடுபட்டிருந்தபோதுதான் சுதாகர் இவளது பிரிவுக்கு மாறுதலாகி வந்தான். க்ரேட்தர வரிசையில் இவளைவிட ஒரு லெவல் மேலாக பணிபுரிபவன். பவானிக்கு அவனைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. அந்தக்கால உயர்ந்தமனிதன் சிவக்குமாரை நினைவு படுத்தினான். அவனுடன் அடிக்கடி தன் மனதில் ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ பாட்டுப் பாட ஆரம்பித்தாள்.

ஒரு சனிக்கிழமை மதியம் அவனை தன்னுடன் தன் வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றாள். கார் ஓட்டும்போது கியர் மாற்றுகையில் வேண்டுமென்றே தன் இடது கையை அவனது தொடையில் ஒருமுறை உரசினாள். சுதாகர் உடனே தன்னை சுருக்கி அமர்ந்துகொண்டான்.
அவன் தன்னிடம் ஒருபோதும் வழியவில்லை என்பதை அடிக்கடி அவனுக்கு பல தேர்வுகளை வைத்து உறுதிப் படுத்திக்கொண்டாள்.

சுதாகரைப் பார்த்ததும், பவானியின் பெற்றோர்கள் பவானியின் விருப்பம்தான் தங்களது விருப்பம் என்று சொல்லிவிட்டனர்.

தன் பெற்றோர்கள் சான்றிதழ் கொடுத்ததும், பவானி சுதாகருடனான தன் மணவாழ்க்கையை திட்டமிடலானாள்.

முதலில் தன் காதலை அவனிடம் சொல்லிப் புரிய வைத்தாள். அடுத்ததாக அவன் அம்மாவை நேரில் சந்திக்க வேண்டும்; அடுத்து திருச்சியிலிருந்து அவளைக் கிளப்பி சென்னைக்கு கொண்டுவந்து குடியமர்த்தி சுதாகரை அம்மாவுடன் வாழச் செய்யவேண்டும்; அவர்கள் நல்லபடியாக செட்டில் ஆனவுடன், எல்லோரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் அமர்க்களமாக செய்துகொள்ள வேண்டும். திருமணம் பெண்வீட்டு செலவு என்பதாலும், தான் ஒரேபெண் என்பதாலும் அப்பா தடபுடலாகச் செய்வார்.

தன் திட்டமிடுதலை ஒவ்வொன்றாக செயல் படுத்த விழைந்தாள்.

சுதாகரிடம் “எனக்கு உன் அம்மாவைப் பார்க்கணும்” என்றாள்.

“தாராளமா பவானி…..நீ எப்பன்னு சொல்லு திருச்சிக்கு ரெண்டு டிக்கெட் அரசு பஸ்ஸில் வாங்கிவிடலாம்…”

பவானி சிரித்துக்கொண்டே, “என்னது கவர்ன்மென்ட் பஸ்ஸுலயா? யப்பா நான் வரல….நான் உன்னை என் டிசையர் காரில் கூட்டிப் போகிறேன். ஒரு சனிக்கிழமை காலை கிளம்பி, ஞாயிறு மாலை திரும்பி விடலாம். நான் அம்மாவுடன் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்கிறேன்” என்றாள்.

“அது உன் வசதி. ஆனால் எங்கள் வீடு ரொம்பச் சின்னது. அதை அப்போது பார்த்துக்கலாம்….நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன.”

இருவரும் அடுத்த சனிக்கிழமை திருச்சி போவது என்று முடிவாயிற்று.

பவானிக்கு ஒரே எக்சைட்மென்டாக இருந்தது.

சனிக்கிழமை…..

பவானி தன் டிசையரில் திவாகருடன் காலை ஆறுமணிக்கு உற்சாகமாகக் கிளம்பினாள். மதியம் திருச்சியை அடைந்தனர். குறிஞ்சியில் மதிய உணவு சாப்பிட்டனர்.

திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில்தான் வீடு என்று கூட்டிச் சென்றான்.
மலைக்கோட்டை தெருக்களின் நெரிசலில் பவானி காரை மிக மெதுவாக ஓட்டிச் சென்றாள்.

“பவானி, காரை இங்கயே நிறுத்திக்க…என்வீடு வரையும் கார் வராது.”

காரை நிறுத்தி, இருவரும் இறங்கி நடந்தனர்.

மலைக்கோட்டையின் அடிவாரத்தில் நிறைய குடில்கள் நெருக்கமாக குவிந்திருந்தன; போகும் வழியில் தெருவெல்லாம் ஒரேதண்ணீர் மயம்.
குழந்தைகள் பலர் தெருவில் குளித்துக்கொண்டிருந்தனர். “பார்த்துவா பவானி, வழுக்கிடப் போகுது.”

தன் புடவையை மெல்லத் தூக்கியபடி, கவனமாக நடந்து சென்றாள்.
பவானிக்கு என்னவோபோல் இருந்தது. எனினும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

“இதத்தான் திருச்சில மலைக்கோட்டை ஸ்டோர்ன்னு சொல்லுவாங்க….இப்ப போறமே அந்த வீட்ல இருந்துதான் நான் என் கல்லூரி வரையும் படித்தேன்…அந்த வீட்டை அம்மாவுக்கு விட மனசில்ல. எல்லாம் பக்கத்துலேயே…” அவன் குரலில் பெருமை இழையோடியது.

தெருவில் நின்றபடியே, “அம்மா” என்றான்.

சற்று நேரத்தில் ஒரு சிறிய பொந்தில் இருந்து அம்மா வெளியே வந்தாள்.

தெருவில் நின்றபடியே இருவரையும் வரவேற்றாள். இவளை அறிமுகப்படுத்தியதும் இவளைப் பார்த்து அன்புடன் சிரித்தாள். பிறகு எல்லோரும் தலையைக்குனிந்து அந்தப் பொந்தினுள் சென்றனர். நான்கடிக்கு ஐந்தடியில் அந்த ஜாகை இருந்தது. கட்டில், மின்விசிறி என்று எதுவும் கிடையாது. தரையில் மூன்றுபேர் கஷ்டப்பட்டு படுத்துக்கொள்ளலாம். அவ்வளவுதான். நிறைய சாமிப்படங்கள் வைக்கப் பட்டிருந்தன. அம்மா பக்கத்துவீட்டுக்குள் சென்று ஒரு சிறிய ஸ்டூல் எடுத்து வந்து, பவானியை அமரச் செய்தாள். காபி போட்டுக் கொடுத்தாள்.
வாஞ்சையாகப் பேசினாள்.

கக்கூஸ், பாத்ரூம் எல்லாமே பொதுவானது என்பதாலும், வீடு மிகச்சிறிய ஸ்டோர் என்பதாலும், பவானி ஒரு ஹோட்டலில் தங்கிக்கொள்ள முடிவு செய்தாள்.

மறுபடியும் காரில் ஏறி ஹோட்டல் பெமினாவில் ஒரு ஏஸி ரூம் எடுத்துக்கொண்டாள்.

இரவு பவானிக்கு தூக்கம் வரவில்லை. தான் ரொம்ப அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணினாள். எனினும் அம்மாதான் சென்னைக்கு சுதாகருடன் வந்து விடுவாளே! அந்தவீடு பெரியதாக பார்த்துவிட்டால் போயிற்று…. இந்த வீட்டிலேயே மிகவும் கஷ்டப்பட்டு சுதாகர் முன்னுக்கு வந்திருக்கிறான் என்பதில் சிறிது பெருமையாகவும் இருந்தது.

அடுத்தவாரமே மயிலாப்பூரில் சுதாகருக்கு ஒரு பெரியவீடு பார்த்து, பவானிதான் அட்வான்ஸும் கொடுத்தாள்.

மயிலாப்பூர் புது வீட்டில் அம்மாவுடன் குடியேறினான் சுதாகர். அன்று அம்மா கபாலீஸ்வரர் கோவிலுக்கு அவனுடன் கிளம்ப எண்ணி, சேலை மாற்றிவர உள்ளே போனாள். அடுத்த சிலநிமிடங்களில் ‘சுதாஆ” என்று கத்தினாள்

சுதாகர் பதட்டத்துடன் வீட்டினுள் ஓடினான். அவனுடைய அம்மா சேலையைக்கூட மாற்றாமல் கீழே விழுந்து கிடந்தாள். அவளின் உடம்பு இயல்புக்கு மாறாக ஒரு உடைந்த கிளைபோல் புரண்டிருந்தது.

அவளை அருகிலிருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தான்.

டாக்டர், “சீரியஸ் பேராலிசிஸ் அட்டாக்” என்றார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட பவானி ஸ்தம்பித்துப் போனாள். நல்ல சகுனமல்ல என்று நினைத்தாள். வேறொரு பிசகாத கணிதங்களில் வாழ்வின் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிந்தது.

தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள். ‘சுதாகரின் அம்மாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பது நல்லதற்கா கெட்டதற்கா?’ தன் அறிவுக்குப் புலப்படாத பொருள் ஒன்று புதைந்திருப்பது போலிருந்தது பவானிக்கு.

ஹாஸ்பிடல் சென்று சுதாகருடன் டாக்டரைப் பார்த்தாள்.

“உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை…. உடம்பின் வலதுபக்கம் முழுவதும் அட்டாக்…அதனால வாழ்நாள் முழுதும் இந்த அம்மாவுக்கு பணிவிடை தேவை.” என்றார்.

இருவரும் வெளியே வந்தனர்.

பவானி “அம்மாவைக் கவனிக்க வீட்டோடு ஒரு வேலைக்காரியை வைத்துக்கொண்டு விடலாம்..” என்றாள்.

“அது ஒத்து வராது. அம்மாவுக்கு நானும் நீயும்தான் இருக்கோமே…கையும் காலுமா?”

வீட்டிற்கு வந்த பவானி தீவிரமாக யோசித்தாள்.

‘சுதாகருடன் மேற்கொள்கிற மணவாழ்க்கை அவனுடன் அமைத்துக்கொள்கிற காதல் வாழ்க்கையாக இல்லாமல், அவனுடைய அம்மாவிற்கு பணிவிடைசெய்கிற செவிலி வாழ்க்கையாக மாறிப்போய்விடுமோ?’ என்கிற குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

அதன்பிறகு அம்மாவை அவள் ஹாஸ்பிடல் சென்று பார்க்கவில்லை.

ஏதேனும் காரணம் சொல்லி சுதாகரை தட்டிக் கழித்தாள்.

அலுவலகம் வந்ததும் தன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்த தோழி நிர்மலாவிடம் தன் குழப்பத்திற்கான விடை தேடினாள்.

“நன்றாக யோசித்துப் பார்த்தேன் நிம்மி. கை, கால் விளங்காத மாமியாரை அல்லும் பகலும் பார்த்துக்கொண்டும், பணிவிடை செய்து கொண்டும் இருக்கத்தான் எனக்கு நேரம் சரியாக இருக்கும். காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட இன்பச் சிலிர்ப்புக்கும், கிளுகிளுப்புக்கும் எனக்குச் சந்தர்ப்பமே இருக்காது. போயும் போயும் இதற்குத்தானா இந்தக் காதல் கல்யாணம் எனக்கு?”

“அப்படியானால் சுதாகருடன் உனக்கு ஏற்பட்ட காதல்?

“இளமையில் யார்தான் காதலிக்கவில்லை? காதலித்தவனைத்தான் ஒருபெண் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்றால், எத்தனையோ பெண்களுக்கு கல்யாணமே ஆகாமல் போய்விடும்.”

“சுதாகர் பாவம்டி….இதெல்லாம் நமக்கு ஏற்படும் சின்ன இடையூறுகள்தான். இதயெல்லாம் மீறி அவரை திருமணம் செய்துகொள்வதுதான் நேர்மை.
ப்ளீஸ் உன் எண்ணத்தை மாற்றிக்கொள் பவி…”

“வயதான காலத்தில் பக்கவாதத்திற்கு ஆளாகும் மாமியார் நிச்சயமாக எனக்கு ஒரு சுமைதான்… ஒரு இரும்பு விலங்குதான். இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொண்டே நான் கிணற்றில் விழத் தயாராக இல்லை நிம்மி. என் மனம் அதற்குப் பயப்படுகிறது.”

“புரிகிறது… அவரை நீ மணந்தால் தியாகி; இல்லாவிட்டால் துரோகி..”

“நான் துரோகியோ, தியாகியோ; எனக்கு இல்வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தமாக இருக்க வேண்டும்; சந்தோஷத்தில் பொங்கிப் பூரிக்க வேண்டும் ! நான் சுதாகருக்கு குட்பை சொல்லிவிடுகிறேன்…”

அன்றிரவு, பவானி முடிவு எடுத்துவிட்டாள்….

அவளுடைய முடிவு அவளுக்கே வெட்கமாக இருந்தது. அசிங்கமாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது. தானே சுதாகரை இழப்பதற்கு தயாராகிவிட்ட அவமானத்தில் அவளுக்கு அழுகையும் வந்தது.

மறுநாள் சுதாகரிடம் நேரில் சென்றாள். முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “சுதா, லெட் அஸ் அக்ரி டு டிஸ்அக்ரி வித் ஈச் அதர்…
நாம் புரிதலுடன் பிரிந்துவிடுவோம்..” என்றாள். அவள் குரல் அவளுக்கே வித்தியாசமாக இருந்தது.

“ஷ்யூர் பவானி…”

அதன்பிறகு பவானிக்கு அந்த அலுவலகத்தில் வேலை செய்யப் பிடிக்கவில்லை. மூன்று மாதத்தில், ஹெவி ரெகமண்டேஷனில் பெங்களூர் ஏ.ஜி. ஆபீஸுக்கு மாற்றல் வாங்கிச் சென்றாள்.

பெங்களூரின் உடம்பை வருடும் மெல்லிய குளிரும், ஈரப்பதமுள்ள காற்றும், பவானிக்கு மிகவும் பிடித்துவிட்டது. தவிர, எ.ஜி.ஆபீஸின் பிரம்மாண்ட கல்கட்டிடமும், அருகே இருந்த விதான்சொளதாவின் அழகையும் பார்த்து சொக்கித்தான் போனாள்.

ஆண்களிடமிருந்து விலகியே இருந்தாள்.

ஆறு மாதங்கள் சென்றன…

அன்று திடீரென்று நிர்மலா போன் செய்தாள். பெங்களூர் மல்லேஸ்வரம் வந்திருப்பதாகவும், அவளைப் பார்க்க ஆபீஸ் வருவதாகச் சொன்னாள்.

மாலை நான்கு மணிக்கு வந்தாள். புதிய புடவையில் வளப்பமாகவும், அழகாகவும் காணப்பட்டாள்.

“பவீ…எப்படிடி இருக்க?” என்றவாறு அவளை அணைத்துக்கொண்டாள்.

“என்னடி திடீர்னு?”

“எனக்கு அடுத்தமாசம் கல்யாணம்டி. பையில் வைத்திருந்த பத்திரிக்கைகளை எடுத்து அதில் ஒன்றில் ‘பவானி’ என்று எழுதி அவளிடம் கொடுத்தாள்.

“அடிசக்கை….அப்படிப்போடு அரிவாளை..”

சிரித்துக்கொண்டே பத்திரிக்கையை பிரித்துப் பார்த்தாள்.

மணமகன் சுதாகர், எ.ஜி.ஆபீஸ், சென்னை என்று போட்டிருந்தது.

பவானிக்கு உடனே முகம் இருண்டது.

எனினும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இது எப்படி சாத்தியமாச்சு நிம்மி?”

“சுதாகரோட அம்மா மூன்று மாதங்களுக்கு முன் இறந்துட்டாங்க பவி. அம்மா செத்த ஒரு வருடத்திற்குள்ள சுபகாரியம் நடக்கனும்னு இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும்னு பெரியவங்க முடிவு செஞ்சாங்களாம். இத அவரு என்கிட்ட லஞ்ச் சாப்பிடும்போது சொன்னாரு….”

“…………………………”

“உடனே என்னோட ஆசையை அவர்கிட்ட நான் சொன்னேன் பவி. அதற்கு சம்மதம் சொல்லி, என் வீட்ல வந்து என்னைப் பெண் கேட்டாரு…..உடனே மளமளன்னு காரியம் நடந்துருச்சு….நீ வேண்டாம்னு ஒதுக்கியதை நான் இப்ப கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்.” சந்தோஷமாக சிரித்தாள்.

பவானிக்கு சிரிப்பு வரவில்லை. நிர்மலா போட்டியில்லாமல் தன்னை ஜெயித்து விட்டதாகத் தோன்றியது. எப்படா அவள் கிளம்பிச் செல்வாள் என்று சுரத்தில்லாமல் அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

அவள் சென்றதும், மொத்த வாழ்க்கையிலுமே தான் தோற்றுப் போய்விட்டதாக எண்ணிக் குமைந்தாள்.

உடனே எழுந்து விரைந்து பாத்ரூம் சென்று அதன் கதவை மூடிக்கொண்டாள்.

அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது ஏமாற்றமும், சுயபச்சாதாபமும் கொப்புளிக்க, கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து வாய்விட்டு கதறி அழுதாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *