புனர் மரணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 4,611 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூக்க பிள்ளை செத்துப் போனார்.

அப்படித்தான் நினைத்தார்கள் எல்லோரும். ‘ஹூம் அவ்வளவு தான்!’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அப்பாடா, ஒரு மட்டுக் கிழம் உயிரை விட்டது’ என்று முணுமுணுத்தார்கள் கூடியிருந்தவர்கள்.

பார்க்கப் போனால் மூக்க பிள்ளை பொல்லாதவர் அல்ல. சர்வாதிகாரியோ, வல்லாளகண்டனோ அல்ல, சர்வ சாதாரண மனிதர். அறுபது வயதுக்கு மேலாகி, தேகத்து எலும்புகள் எல்லாம் தோலைக் கிழித்து வெளிப் பாய்வது போல் தோன்ற, தேக சாஸ்திர மாணவனது ஆராய்ச்சிக்கு ஏற்ற உலவும் எலும்புக் கூடாக விளங்கிய அவர் யாருக்கும் துன்பம் நினைக்காதவர். நினைத்தாலும் செய்யத் திராணி இல்லாதவர்.

அவர் செய்த ஒரே ஒரு தவறு எல்லோரையும் ஏமாற்றி வந்ததே. எதிர்பார்த்தவர்கள் வைத்தியர்கள், ஜோதிடப் புலிகள் முதலியவைகளுக் கெல்லாம் ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு அவர் சாகாமலே கிடந்தது தான் அவர் செய்த செய்ல்.

மாதக் கணக்காக படுக்கையில் விழுந்து கிடந்த அவர் ‘இப்பொ செத்து போவார். இந்த அமாவாசையன்று நிச்சயமாக குளோஸ்… இன்று ராத்திரி பொழுது கழியணும்’ என்று சொல்லப்பட்ட வாய்தாகளுக்கெல்லாம் சீட்டுக் கொடுத்துவிட்டு தான்மட்டும் எலும்புக் கூடாகக் கிடந்தார்.

அவர் சாவதினாலோ, இருப்பதினாலோ யாருக்கும் லாபம் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால் சாகாமல் செத்துக்கொண்டிருந்தது தான் இருப்பவர்களுக்குத் தொல்லை கொடுத்தது.

மூக்க பிள்ளையின் மூத்த மகன் பொன்னையாவுக்கு ‘சனியன் சட்டுபிட்டுனு ரெண்டிலே ஒண்ணு ஆச்சுன்னு இல்லையே’ என்ற துடிப்பு. அவன் சொல்வதுண்டு: பாருங்க இப்படி இழுத்துக்கிட்டு கிடப்பதினாலே எதையும் செய்ய் ஓடுவதில்லை, ஒரு வகையிலும் நம்புவதற்கில்லை அல்லவா? சாகிறதுன்னா சீக்கிரம் சேத்துப்போகணும், இல்லை, எழுந்து நடமாட வேணும், அதுவுமில்லாமல் இதுவு மில்லாமல்..

அவனுக்குத் தெரியாதா என்ன, இருப்பதும் இறப்பதும் மூக்க பிள்ளை-அவருக்கு மட்டும் என்ன! எந்த மனிதன் கையிலுமே இல்லை என்று. ஆனால், ரொம்ப காலமாக அவர் படுத்த படுக்கையாகி விட்டதும் ‘இந்தா அந்தா’ என்று இழுத்துக்கொண்டிருப்பதும் அலுப்பு ஏற்படச் செய்து விட்டது. வீண் செலவு, பிரயாசை. தொழில் முடக்கம், பணமுடை இன்னும் எவ்வளவோ காரணங்கள்! காரணத்துக்கா குறை!

பொன்னையாவின் மனைவி அகிலாண்டத்தைக் கேட்டால் வேண்டிய மட்டும் அடுக்குவாள். ‘இந்த கிழடாலே வீண் சங்கடம். வேறு எழவு எதையும் கவனிக்க முடிவதில்லை’ என்று ஆரம்பித்தால் – எழவு என்பதன் மூலம் ஊரில் நிகழும் சாவுகளைக் குறிப்பிடவில்லை அவள்; சம்பிரதாயமான காரியங்களைத் தான் அந்த பாஷையால் சுட்டுகிறாள் ! விடிந்தால் பொழுது போனால் மூக்க பிள்ளைக்கு செய்ய வேண்டிய சிச்ரூஷைகள் அது இது என்று பொரிந்து தள்ளி ஒரு பெரு மூச்சுடன் தான் முற்றுப் புள்ளி வைப்பாள்,

ஸ்ரீமதி மூக்க பிள்ளை என அழைக்கப்பட வேண்டிய சண்முகத்தம்மாளின் அபிப்பிராயம் என்னவாக இருக்க முடியும் இந்த நிலையிலே என்பது புரிந்து கொள்ள இயலாத விஷயம். காரணம் அவள் அதிர்ஷ்ட வசமாக மஞ்சளும் குங்குமமும்,பூவையும் சேர்த்துத்தான் – இழக்க விரும்பாமல் மூக்க பிள்ளைக்கு முந்திக் கொண்டாள், இரண்டு வருஷங்களுக்கு முன்பே. அவள் இருந்தால் மட்டுமென்ன. அவள் கருத்தும் – ‘மேற்படி மேற்படி’யாகத் தான் இருக்குமே தவிர, வேறென்ன சிறப்பு பெற்றுவிடப் போகிறது. மனித ஜந்துக்களில் எல்லாமே ஆராய்ப் போனால், ஒரே ரகம்தான்!

மூக்க பிள்ளை எப்பொழுது சாவார் என்று அவர் பேரன் மூக்கப் பயல்கூட எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்றால் பிறகு என்னத்தைச் சொல்லக் கிடக்கிறது! ஆனால், அவன் விஷயம் வேறு. அவனை எதிர் பார்க்கும்படி தூண்டியதே செத்துக் கொண்டிருந்த மூக்க பிள்ளை தான்.

அவர் காதுகளில் சிவப்புக் கல் கடுக்கன்கள் மங்கலாக மினுங்கின. அவை மீது பயலுக்கு ஒரு கண். ‘தாத்தா, இந்தக் கடுக்கனை எனக்குத் தரமாட்டியா?’ என்று கெஞ்சுவான் அடிக்கடி. அவனுக்கு வரும் பதில் – ‘நான் செத்த பிறகு உனக்குத் தான்டா’ என்பது தான். ஆகவே, அவன் எதிர்பார்த்தது குற்றமில்லையே!

இதனால் எல்லாம் மூக்க பிள்ளை செத்துப் போனார் என்றறிந்ததும் விடுதலை மூச்சு பிறந்தது அந்தக் குடும்பத்திலே. குடும்பத்தின் பாரமாகக்கிடந்த கிழடு ஒருவகையாகத் தனது கணக்கை முடித்துக் கொண்டதே போதாதா? அதற்காக சிரித்துப் பேச முடியுமா? என்ன இருந்தாலும் சம்பிரதாயங்கள் என்று சில இருக்கின்றனவே. ஆதலால் ஓவென்ற கூச்சலும் ஒப்பாரியும் எழுந்தன, காலத்தின் அமைதியைக் கலைத்த வண்ணம்.

அப்பொழுது இரவு ஓயவில்லை. காலை மணி நாலு, நாலரை இருக்கலாம். இரவின் நெடு நேரம்வரை தூக்கமில்லாமலும், வேண்டு மென்றும் விழித்திருந்து களைத்துப் போனவர்களெல்லோரும் அசந்து துயிலும் வேளை. வைகறைக் குளிர் காற்று மட்டும், சாந்தியற்றவனின் மூச்சுப் போல, அடிக்கடி எழுந்தும் அமுங்கியும் சுழன்று கொண்டிருந்தது. அத்துடன் திடீரென்று கிளம்பிய ஓலம் அண்டை அயல் வீட்டில் உள்ளவர்கள் நெளிந்து புரள வைத்தது. ‘ஒரு வகையாக கிழவன் போயிட்டான் போலிருக்கு’ என்ற நினைப்பையும் உண்டாக்கியது.

மூக்க பிள்ளை வீட்டில் ஒவ்வொருவரும் முகத்தில் துயரத்தைப் பூசிக் கொண்டு ‘உம்’ மென்று இருந்தனர். ‘ஊங், ஊங். ஆகவேண்டிய காரியத்தைப் பாருங்க. பொன்னையா, குருக்கள் ஐயாவுக்குச் சொல்லியனுப்பு. அப்படியே அம்பட்டனையும் கூட்டி வரச்சொல்லு’ என்று ஒரு அனுபவஸ்தர் கெடு பிடியில் இறங்கினார். வீட்டுக்குள்ளே தம் திம் மென்று தலையில் அறைவதும், தரையிலே முட்டுவதுமாக, ஒப்பாரி வைத்து தங்களால் ஆகவேண்டிய காரியத்தை ஒழுங்காக நிர்வகித்துக் கொண்டிருந்தார்கள்.

காலம் ஊர்ந்தது. சட்டென்று ஒப்பாரி நின்றது. கிழவன் சாகவில்லை என்ற விஷயம் அம்பலத்துக்கு வந்தது, ‘என்ன!’ என்ற திகைப்பைக் கிளறிய வண்ணம்.

‘ஆமா.. அவரு சாகலை. இப்போ இருமினாரே, லேசாக மூச்சுகூட வருது’ என்று சொல்லப்பட்டது. பார்த்ததும் அது உண்மையாகத்தான் இருந்தது.

‘முட்டாள் தனம்! முதலிலேயே சரியாகப் பார்த்திருக்க வேண்டாமா?’

‘பாராமல்? அப்ப மூச்சே வரலியே.’

‘நூல் போல வந்து கொண்டு தான் இருந்திருக்கும். உங்களுக்குத் தெரிந்திராது.’

‘தண்ணீரை வாயில் ஊற்றினோம். கீழே வழிந்ததே தவிர உதடு நாக்கு ஒண்ணும் அசைய வில்லை என்றால்!’

“கொஞ்சம் பொறுத்திருக்கலாம். மடத்தனம்.’

இப்படிப் பேச்சு உலவியது.

குருக்களையா வந்து சேர்ந்தார். விஷயம் தெரிந்ததும் ‘வலுக் கிழவன்! எமனுக்கே கடுக்காய் கொடுக்கிற பேர்வழி தான்’ என்றார்.

‘நல்ல வேளையாக அம்பட்டன் சங்கை முழக்கிக் கொண்டு வந்து சேராமல் இருந்தானே! அது வேறு மானக்கேடு. எதையும் கவனித்துச் செய்ய வேணும்’ என்று பொன்னையா முணங்கினான்.

‘என்னவோ, கடந்தது நடந்து விட்டது. விட்டுத் தள்ளு. இனிமேல் நடக்க வேண்டியதை யோசிப்போம்’ என்றார் அனுபவஸ்தர்.

வழக்கம்போல் பொழுது விடிந்தது. மூக்க பிள்ளை குடும்பத்தினர் முகத்தில் மட்டும் இருள் வழிந்துகொண்டிருந்தது, தங்கள் அசட்டுத் தனத்தால் எழுந்த களையின் சாயை வேறு.

மூக்கபிள்ளை இருமல் மூலம் தான் வாழ்வதை ஒலி பரப்பினதுடன் நிற்கவில்லை. தமது தாகத்தையும் அறிவித்தார். தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதில்லாமல் அந்நிலையில் அவருக்குப் பாலா ஊற்றப் போகிறார்கள்!

இந்தச் சுவை யற்ற வாழ்வில் அவருக்கே அலுப்புத் தட்டி விட்டதோ என்னவோ. மூக்க பிள்ளை முடிவாக மூச்சை விட்டார், மறுபடியும் அவர் செத்தார் என்ற பேச்சுப் பிறந்தது. ஆனால், அதை நம்ப முடியாமல் தவித்தனர் மற்றவர்கள்!

காலம் சுமையாக அசைவது போல் தோன்றியது அவர்களுக்கு, மௌனமாக காத்திருந்தார்கள். மணிக் கணக்காக இருந்து பார்த்தார்கள். விழிகள் உள்ளே சொருகி, உதடுகள் பிரிந்து, மூக்க பிள்ளை கட்டையாகத்தான் கிடந்தார். ஆம், அவர் செத்தே போனார்.

மீண்டும் ஒப்பாரி எழுந்தது. அகிலாண்டம் மட்டும் ‘அழுகை என்ன வேண்டி கிடக்கு கெட்ட கேட்டுக்கு’ என்று முணகினாள். அத்துடன் நிறுத்தவில்லையே. தனியாகத் தனது தம்பியிடம் ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ!’ என்று தான் நாலாவது வகுப்பில் படித்த பாட்டை நினைவு மூட்டினாள். இந்த சமூகத்தில் விசித்திரமாக கெளியும் ஜந்துக்களில் அவளும் ஒருத்தி தானே!

குருக்கள் ஐயா வந்து சேர்ந்தார். ‘என்ன முடிந்து விட்டதா?” என்று கேட்டார். அவருக்கும் ஒரு துளி சந்தேகம். ஆனால், இந்த முறை ஏமாற்றம் இல்லை.

ஸ்ரீமான் மூக்க பிள்ளை உண்மையாகவே செத்துப் போனார்.

விதிவசம் என்ற பெயரால் வாழ்வில் ஒட்டியும் ஒட்டாமலும் ஊசலிட்ட அவர் உயிர் ஏட்டை நிச்சயமாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் கிழித்தாயிற்று.

அதை ஊர்ஜிதப்படுத்தி இரட்டைச் சங்கை நீட்டி முழங்கினான் அம்பட்டன்.

– கல்யாணி முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, சினிமா நிலையம் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *