(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஜீவாயி அவ்விடத்தைப் பெருக்கப் பெருக்க, தரையில் படிந்துகிடக்கும் அழுக்கும், தூசும் படை படையாகப் பெயர்ந்து அப்புறப்பட்டன. சுருங்கி, சித்திரப்பூ நூல் வேலை செய்யப்பட்டது போன்ற அவள் சருமமும், கால தேவனால் முத்திரையிடப்பட்ட அவளது தேகமும், வியர்வைத் துளிகளுடன் கலந்து பிரகாசித்தன. எலும்புக் கூட்டுக்குப் போர்வையென இருந்த அவளது தோலுக்கும் இன்று எழில் வாய்ந் திருப்பது, ஜன்னல் வழியே தூசி மண்டலத்தைப் பிளந்து கொண்டு வரும் கதிரவனின் தீட்சண்ய பார்வை யின் பலனோ? இல்லை, அம் முதிய மாதின் முகத்தில் ஜ்வலிக்கும் ஒளியின் முன் கேவலம் சூரியனின் வெளிச்சம் எம்மாத்திரம்? சந்திரிகையின் தண்மையுடன், வெய்யிலின் ஜகஜ் ஜோதியைப் பொருத்திக் கொண்ட அவளது வதனத்தின் பொலிவுதான் என்ன? பற்களில்லாத அவளுடைய வாய் மடிந்து மடிந்து இறுகிக் கொள்வதும், தளர்ந்த அவள் நடையும் ஓர் அழகாக வல்லவா இருக் கிறது. சக்தியேயில்லாத அவள் உடல், குடங் குடமாக ஜலம் கொண்டு வந்து அந்த அறையைக் கழுவும் போது, திடகாத்திரத்துடன் அல்லவா விளங்குகிறது!
துடைப்பத்தைக் கீழே வைத்து விட்டு, தன் முதிய வயதின் பயனாக நடுங்கும் விரல்களை மூலை முடுக்குகளில் செலுத்திச் சுத்தப்படுத்தும் போது, ஒரு தாய் தன் அருமைக் குழந்தையைக் குளிப்பாட்டும் போது காணப் படும் அன்பும் ஆதரவும் தோன்றின அவ்விரல் களினிடையே சுவரிலிருந்து ஓர் ஓட்டடைத் துண்டு பொத்தென்று ஜலம் விட்ட இடத்தில் விழ, அவள் அதை எடுத்து அப்புறம் போடுவதும், குழந்தையின் வாயை அலம்பித் துடைக்கும் அன்னை அன்புடன் கடிந்து கொள்ளும் பாவனையில் இருந்தது.
அவள் நிமிர்ந்து நோக்கினாள்: ‘நன்றாகத்தானே ஒட்டடை அடித்தேன்’ என்று அவள் வாய் முணு முனுத்தது. அந்த ஒட்டடை விழுந்த இடத்தில் பழைய சித்திர வேலையின் ஒரு முனை லேசாகத் தெரியவும், அது அவளுடைய சிந்தனையைக் கிளறி விட்டது.
அந்தக் கூரையில் சித்திர வேலை செய்வதற்கு என்ன முயற்சி! அப்பொழுது அந்த வீடு எவ்வாறு இருந்தது அம் மூதாட்டி அந்த நொடியில் இளம் பெண்ணாக மாறி விட்டாள். சிறு நகை அவளது அதரங்களில் லேசாக உட்கார்ந்து சாகஸம் புரிந்தது. குழிந்து கிடந்த அவள் கண்களும் ஒளி பெற்றுத் தேவதைகள் நடனமாடும் சபைகளெனப் பிரகாசித்தன. அவள் கைகள் பன்மடங்கு பலம் பெற்றுத் துடைப்பத்தை வேகமாக அழுத்தி அறையை அலம்ப ஆரம்பித்தன. ‘இந்த ஓர் அறையை மாத்திரம் அலம்பி விடுகிறேன்!’ என்று அவள் மனம் ஜபித்துக் ‘கொண்டேயிருந்தது- அந்தக் கூடம்! அந்த வீட்டில் எத்தனை கலியாணங்களைப் பார்த்திருக்குமோ அந்தக் கூடம்? எத்தனை சிறு குழந்தைகளின் சுதந்திரச் சிரிப்பை எதிரொலித் திருக்குமோ? எத்தனை முதியவர்கள் அதில் வாழ்க்கையையே மாற்றும் தீர்மானங்களை எட்டி யிருப்பரோ? அதில் கண்ட ஆனந்தம் அளவு கடந்தது. அவ்வறை கண்ணுற்ற துக்கமும் கணக்கற்றது. வாழ்க்கை ரசத்தை நன்கு உறிஞ்சி உண்டு, அதன் இனிப்பை ரசித்து, கைப்பைத் தள்ளி, ஆனந்தத்தை அள்ளிப் பருகித் துன்பத்தைத் துறந்து நன்றாக அநுபவம் கொண்ட அம் மூதாட்டியைப் போலவே பாக்கியம் பெற்றதல்லவோ அக் கூடம்?
பழுத்த வயது வாய்ந்து, பேரன், பேத்தி சூழக் கண் மூடிய கிழவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் மௌனம் சாதித்த அந்த அறை, எத்தனை தடவை தான் நல்ல யௌவனத்தில் மிளிரும் இளம் குழந்தைகள், பிஞ்சு புஷ்பித்த சமயத்தில் கிள்ளப்படுவது போல் கால தேவனுக்குப் பலியாவதைக் கண்டு திகைப்புடன் களிப்பு, வாயடைத்து நின்றிருக்கிறது! காதலர் க அன்னையின் அன்பு, இணை பிரியா நட்பின் இன்பம்-மாறி மாறிக் கஷ்டமும் சௌக்கியமும் பார்த்து பார்த்து வாழ்க்கையை. நன்கு ருசித்த அவ்வறை இன்று பாழடைந்து, கேட்பாரற்று, அந்தக் கிழவுடல் ஜீவாயி தவிர வேறு மனித சஞ்சாரமின்றி ஒளி மங்கிக் கிடக்கிறது.
நாளைக்கு யாரோ அந்த வீட்டில் ஆண்டு நிறைவு விழா காண்டாடப்போகிறார்களாம். அந்தக் கலியாண வீட்டாரின் வேலையாட்கள் வந்து விடுவார்கள், அவ் வீட்டைச் சுத்தம் செய்ய. இத்தனை நாட்கள் கேட்பாரற்றுக் கிடந்த அந்த வீடு இன்று அந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் ஓவர்ஸியர் வீட்டினரின் கண்களில் பட்டது. அந்த ஊரிலேயே இவ்வளவு பெரிய-விசாலமான கூடம் உள்ள வீடு இல்லையென்று இந்த வீட்டைப் பொறுக்கி னார்கள் அவர்கள். நாளைக்கு மீண்டும் அந்தக் கூடம் மனிதர்களின் நடமாட்டத்தை அறியப் போகிறது. அந்த இன்ப ஸ்பரிசத்தில் மதுவெறி அடையப் போகிறது.
ஜீவாயி அந்த வீடு கட்டும்போது வந்து வேலைக்கு அமர்ந்தவள். அப்பொழுது வீட்டு எஜமானர் இருபத் தைந்து வயது வாலிபர். அவர் மனைவி பதினாறு வயது பாலிகை. ஜீவாயியும் யௌவனத்தின் வஸந்தத்தில் புரண்ட காலம் அது. முக்கியஸ்தர் இளம் வயதினரா யினும், பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாத்தாவும், பாட்டியும் அண்ணனும், தம்பியும் அத்தையும், சித்தப்பா வும் நிரம்பிய குடும்பம். இந்த அறுபது வருஷங்களாக அந்த வீடு அடைந்த பெருமைக்கு இப்பொழுது அது சீர் குலைந்து கிடக்கும் பாழ்தான் ஈடு.
காலச் சக்கரத்தின் கொடூர ஆதிக்கத்தில் அகப்பட்டு, அந்த எஜமானனும், எஜமானியும் விபத்தில் உயிர் விட, உற்றார் உறவினர் எல்லோரும் மெல்ல நழுவிப் போய் விட்டனர். அந்தக் குடும்பத்தின் தொடர்பினால் ஏற்பட்ட பல்னோவென அவளும் தன் வாழ்வில் சகல சௌகரியங் களையும் சகித்து, கடைசியில் தனிமையில் விடப்பட்டாள். இப்பரந்த உலகில் அவளுக்கு உற்றார் உறவினர் யாரு மில்லை. நாதியற்றுக் கிடந்த அந்த வீடும் அவளும் தான் ஓர் இனம்.
கல்லும் சுண்ணாம்பும் கொண்ட அக்கட்டிடம் தன் சதையில் சதை, ரத்தத்தில் ரத்தம் எனும் மகவின் ஆசை மணத்துடன் கமழ்ந்தது அவளுக்கு; பாசத்தினால் அவளைக் கட்டிப் பிணைத்தது. அந்தக் கிழவி அந்த வீட்டிலேயே தனிமையாக, பாழடைந்த வீட்டைக் காக்கும் பரதேசிப் பிசாசாக விளங்கினாள்.
நாளைக்கு!
நாளைக்கு அந்த வீடு மீண்டும் புத்துயிர் பெறப் போகிறது. குழந்தைகள் கள்ளங்கபடமற்று அந்தக் கூடத்தில் தவழப் போகின்றன. இளம் தம்பதிகள் காதல் பாஷையில் பேசுவதை அச்சுவர்கள் செவி சாய்த்துக் கேட்கப் போகின்றன. வாழை மரம் சேர்ந்த அந்த வாசற்படி, புதிய நகைகளணிந்த இள நங்கை போல் ஒய்யாரப் பார்வை பார்க்கப் போகிறது. வாசலில் மங்களகரமான மேளச் சப்தம்; அகத்தில் சந்தோஷமான மனிதர்களின் சலசலப்பு; பின்னால் எண்ணெய்ப் புகை.
ஜீவாயி தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவள் உடலில் ஓய்வு அடைந்து விட்ட நரம்புகள் மீண்டும் ரத்த ஓட்டம் பெற்று ஆனந்தமாகக் குறுகுறுத்தது. அவள் உள்ளம் பூரித்தது. பெற்றெடுத்த தன் குழந்தையை மணப் பந்தலுக்குத் தயாரிப்பது போல் அவள் இருதயம் பெருமை கொண்டது. அந்தக் கூடத்தை வேறு யாராவது கழுவ அவள் மனம் சகியாது!
குனிந்த முதுகு நிமிர முடியாமல் நிமிந்தாள் அந்தக் கிழவி. ஜன்னல் கம்பிகளின் நடுவே உள்ளே சுதந்திரத் துடன் தலை நீட்டிய தென்னை மரத்தின் ஓலைகளை வெளியே அகற்றும் போது அவள் கைகளில் ஒரு நிதானம், ஓர் அடக்கம் மணப் பந்தலுக்குச் செல்லும் மகளின் தலையை வருடும் ஒரு நளினத்துடன் அவள் விரல்கள் துடித்தன.
“ஏ, கிழவி, எங்கே நீ வழியிலே வந்து எங்கள் பிராணனை எடுக்கறே?” என்றான் ஒரு ஆள்.
ஜீவாயி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவர்கள் வந்ததிலிருந்து, அந்த வேலையாட்கள் அவளை விரட்டு வதும், அவள் மீது எரிந்து விழுவதுமாகவே யிருந்தனர். துரிதமாக வேலை செய்யும்போது வழியில் குறுக்கும் நெடுக்குமாகத் திரியும் அப் பொக்கை வாய்க் கிழவியை அவர்கள் வையாமல் என்ன செய்வார்கள்? அந்த உடலில் இன்ப வேதனை செய்யும் ஆசையையும் அபிலாஷை யையும் அவர்கள் எவ்வாறு அறிவார்கள்?
“ஏ பாட்டி, உனக்குப் போக வேறு இடமில்லே?’ ஏன் இப்படி உயிரை எடுக்கறே?”
“சனியன், செத்துக் கித்துக் கிடக்கப் போறதே?”
“வீணுக்கு அபவாதம் தேடி வைக்காதே. தள்ளு. தள்ளுகிறேன்!”
அவர்கள் எரிந்து விழும் பேச்சே அவள் காதுக்குத் துந்துபி முழக்கம் போல் இருந்தது. தனது பொக்கை வாயைத் திறந்து கொண்டு, திரும்பத் திரும்ப அவர்கள் காலடியில் அடிபட நின்றாள் அவள். அவள் கண்களுக்கு அந்த வீடு முன்பு இருந்த புதுமையுடனேயே காட்சி யளித்தது. இன்று நடமாடும் மனிதர்கள் அவளுக்கு அறிமுகமானவர் களில்லை. அவள் மனம் முன்பு வாழ்ந்த தனக்கு மிகவும் உகந்த மனிதரையே கண்ட தல்லவோ? ஆனால், யாராக இருந்தாலென்ன? அவள் அகம் அழகு பெறுகிறது.
விருந்தினர் எல்லோரும் கண்ணைப் பறித்துக் கொண்டு போகும் படி விதவிதமாக அலங்கரித்துக் கொண்டு வந்தனர். பல வர்ணப் பட்சிகள் ‘வர்ண ஜாலம் புரிவது போல் இருந்த அந்தக் காட்சிக்கு, ஆண்டு நிறைவுக் குழந்தை அரசனைப் போல் அக்கிராசனம் வகித்தது. இளம் நுங்கு போன்ற அதன் உதடுகளில் மோகனப் புன்னகை தவழ, எல்லோர் உள்ளத்தையும் அம்மகவு ஒருங்கே கவர்ந்தது. வந்த வரெல்லாம் குழந்தையின் அழகையும் சமத்தையும் மெச்சுவதைக் கேட்டு அச்சிசுவின் பெற்றோர் புளகாங்கிதம் அடைந்தனர். அவ்விருவர் கண்களும் அடிக்கடி மோன’ பாஷையில் பேசிக்கொண்டன. பாலனின் நயனங்களில் தோன்றிய மருட்சியும், அவனது தளிர்க்கரங்கள் கழுத்தில் போட்டி ருக்கும் மாலையைப் பிய்த்துத் தள்ளும் அழகும் ஜீவாயி யின் உள்ளத்தில் புகுந்து தேனினும் இன்சுவையுடன் திகழ்ந்தன.
“இங்கே எங்கேடி வந்து ஹிம்சைப் படுத்துகிறாய்?” என்றாள் ஓர் அம்மாள்.
“ஒண்ணுமில்லை, அம்மா. கண்ணுக்கு என்ன கறுப்பு? பார்க்கிறேன்” என்றாள் ஜீவாயி.
“நன்னாயிருக்குடி, உன் சாகஸம்! உன் மூஞ்சியும், மோரக் கட்டையும்! போ, அந்தாண்டே” என்று விரட்டினாள் அந்த அம்மாள்.
ஜீவாயி அந்த இடத்தை விட்டு அகன்றாள். ஆயினும் அவளுக்கு வெகு நேரம் வெளியே இருக்க முடிய வில்லை. சற்றுக் கழித்து அந்தக் கிழட்டு உருவம் ஜன்னல் மூலமாக நோக்கிக் கொண்டிருந்தது. அவளைக் கடிந்து நோக்கும் விழிகள் அவள் கவனத்துக்கு எட்ட வில்லை. காரமாகப் பேசும் சொற்கள் எதுவும் அவள் செவிக்குள் விழவில்லை.
மெய்ய மறந்து அந்தக் கூடத்துக்கு அன்று கிடைத் திருக்கும் பாக்கியத்தை அமிர்தம் போல் அள்ளிப் பருகியவாறு அங்கு நின்றாள் ஜீவாயி.
அந்த இடத்தில் மீண்டும் சுபஞ்சைகள், உயிர் நாடிகள் நடமாடுவதைக் காணும்போது, அவள் மனதில் புதிதாக மணம் புரிந்த தன் மகளை மருமகன் குலாவுவதைப் பார்க்கும்போது அடையும் தாயின் பெருமிதமும், சந்தோளமும் மேலோங்கி நின்றன. அவள் பூதவுடல் இங்கே பார்த்ததே ஒழிய அவள், மனக் கண் முன்னாட் களில் நடந்த விஷயங்களையே கண்டது.
‘ஐயோ!” என்று ஒரு சிறு பெண்ணின் கூக்குரல் ‘கீச்’ சென்று கிளம்பிற்று.
“என்னடீ! என்னடீ, அம்மா?” என்று நான்கைந்து பேர்கள் ஓடிவந்தனர் பதை பதைத்து.
“இந்தக் கிழட்டுப் பிணம்” என்றாள் ஒரு ஸ்திரீ.
“குழந்தை பயந்து விட்டது.’
“பீடையே! உனக்கு வந்த கேடு காலம் என்னடீ?” என்றவாறு மற்றொரு ஸ்திரீ ஒரு கையைக் கொண்டு ஜீவாயின் முகத்தில் இடித்தாள். அவளது அந்தக் கை பயந்து போன தன் மகவை அணைத்தது.
தூங்கிவிட்ட ஜீவாயி கண்ணை விழித்துக் கொண்டு சிரமத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். மூக்கும் கண்ணும் பெயர்ந்து விழுந்ததுபோல் மிதமில்லாக் களைப்பு அவள் கண்களைச் செருகிற்று. முதல் நாள் இரவு உணவு உண்டது! பட்டினி அவளை வாட்டி, காய்ந்த சிறகு போல் உலர்த்தி விட்டது. அவளை ஓர் உபத்திரவம் என்று எண்ணிய அக்கலியாண வீட்டினர் அவளுக்கு வயிற்றுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. இவ்வளவு விமரிசையில் அந்தக் கிழவிக்கு ஒரு பிடி சோறு அரிதாகி விட்டது. அவளே சமைத்துக் கொள்ள இடமும் இல்லை. ஊருக்குள் போனால் யார் வீட்டிலாவது உண்டிருக்கலாம். ஆயினும், அவள் அன்று புதிதாகக் கண்ட பரவசத்தில் எங்கும் போக மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டாள்.
எழுந்து சாவதானமாகக் கண்ணைத் துடைத்துக் கொள்ளும் ஜீவாயியைப் பார்த்து அவர்கள் பக்கம் பக்கமாகச் சண்டைக்கு இழுத்தனர்.
அவள் யாதும் பதில் கூறாது, அவர்களை நிமிர்ந்து நோக்கி, “அம்மா, கண்ணை இருட்டுகிறது; ஒரு வாய் மோர் கொடுங்கள்” என்று மெதுவாகக் கேட்டாள்.
“அது ஒன்றுதான் குறைச்சல்!” என்று இடித்துக் காண்பித்தாள் ஒருத்தி.
மீண்டும் கண் பஞ்சடைவது போல் இருந்தது ஜீவாயிக்கு. மெள்ளத் தள்ளாடி எழுந்தாள். ஆனால் மறுபடியும் விழுந்து விட்டாள்.
அதைக் கண்ட ஒரு பெண் திகிலடைந்தவளாய், “இந்தா, இதைக் குடி!” என்று ஒரு சிறு செம்பில் பாயசம் கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கி இரண்டு வாய் விழுங்கியதும் தான் சற்றுத் தெம்பு வந்தது ஜீவாயிக்கு. “இந்தக் கிழம் இங்கே எங்காவது செத்து வைக்காமல் இருந்ததே!” என்று கேலியாகக் கூறிக் கொண்டே எல்லோரும் உள்ளே சென்று விட்டனர்.
இருட்டு நேரம். அவள் தனிமையில் அங்கே சுருண்டு தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் தான் தனிமை யில் வந்த அக் குழந்தை பயந்துவிட்டது. அதற்குப் பிறகு தான் இத்தனை ஆரவாரமும், ரகளையும்!
வயிற்றுக்குள் சிறிது ஆகாரம் சென்றதும், ஜீவாயிக்கு மீண்டும் ஆயாசமாக இருந்தது. அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டு, தன்னைச் சூழ்ந்து கொண்டிருக்கும் இருட்டைப் பார்க்காத கண்களுடன் நோக்கினாள் அவள்.
காலையிலிருந்து இதே தான். அன்று அங்குக் கூடியிருந்த குழந்தைகளும், பெரியோரும் அவளைத் திரஸ்கரிப்பதும், விடாமல் பலவாறு துன்புறுத்துவதுமாக இருந்தனர். தனது பழுத்த மேனியைக் கண்டு அவர்கள் கேலி செய்வதும், அவர்களுடைய எக்களிப்பும் அப் பேதைக்குத் தேவகானம் போல் இருந்தன. சிறு பெண்கள் அவளைப் ‘பேய்’ என்றும், ‘பிசாசு’ என்றும் அழைத்தனர். அழகு காட்டினர்; திட்டினர்; கீழே சுருண்டு விழுந்து கிடந்த அவள் தேகம் குறும்பு மிகுந்த பிள்ளை களின் சேஷ்டைகளுக்கு இலக்காயிற்று.
அவைகள் அவளுக்கு இதமாகவே. பட்டன. புக்ககத்தில் யார் என்ன கூறினாலும், எவ்வாறு அவமானப் படுத்தினாலும், தன் மகளைப் பார்க்க வேண்டுமென்று எந்தத் தாயார் தான் ஆசைப் படமாட்டாள்? அவ்விதமான ஒரு வெட்கமறியாத பாசம் ஜீவாயியைப் பீடித்தது. தனக்கு நேரும் இன்னல்களை அவள் லட்சியம் செய்ய வில்லை. அனாவசியமாகத் தன்னைத் துன்புறுத்தி னோரைக் கடிந்து பேசவில்லை. பட்டினிக்கு அஞ்ச வில்லை. தான் இருந்த பெருமையை நினைத்து ஏங்க வில்லை. யார் என்ன கூறினால் என்ன?. மனிதர்கள் எப்படிப் பட்டவராக இருப்பின் என்ன? ‘இந்த இடம் என் இடம்; இன்று பவித்திரமாகி விட்டது!’ என்று அவள் அகம் மகிழ்ந்தாள்.
அன்று அங்கே அவள் காலத்தில் கண் இன்பக் காட்சிகளை யெல்லாம் நினைவு மூட்டி இன்புறச் செய்த் அவர்களுக்கு மானஸீகமாக அவள் நன்றி செலுத்தினாள்.
உடம்பில் சற்றுத் தெம்பு தட்டியதும் கிழவி எழுந்து விட்டாள். கூடத்தில் என்ன நடக்கிறது என்று எட்டி நோக்கினாள். மற்றப் பேர்களெல்லாம் பின் கட்டில் சாப்பிடப் போய் விட்டிருந்தனர். நடுக் கூடத்தில் ஒரு நாற்காலியில் ஓவர்ஸியர் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் அவரது இளம்மனைவி குழந்தையுடன் நின்றாள். மகனை உறங்கச் செய்ய அவள் இப்படியும் அப்படியும் அசைந்து, குலுங்கிக் கொண்டிருந்தாள்.
அவளையே நோக்கின கணவர், இன்றைக்கு வைபவம் நன்றாக நடந்து விட்டதல்லவா?” என்றார்.
“குழந்தையைப் பற்றிப் புகழாதவர் கிடையாது. திருஷ்டி கழிக்க வேண்டும்.”
“அவன் அம்மாவுக்கு முதலில் கழிக்கச் சொல். உன் பிள்ளை உன்னைப்போல் அழகாக இருக்கிறான். அது தானே, ஹூம்?”
“இதெல்லாம் என்ன? உங்களையே உரித்து வைத்தாற் போல் இருக்கிறதே என்ற பெருமையாக்கும்!” என்று கொஞ்சுதலாகச் சிணுங்கினாள் மனைவி.
இந்தச் சரச சல்லாபத்தைப் பார்த்து அந்தப் பொல்லாத கூடம் கண் சிமிட்டுவது போல் ஒரு காரைத் துண்டு பெயர்ந்து கீழே விழுந்தது. மறை முகமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஜீவாயியின் கண்களிலிருந்து ஒரு சொட்டு ஜலம் கீழே சிந்தியது. ஆனந்த பாஷ்பம் என்பதைத் தவிர வேறு என்னசொல்ல முடியும்!
ஜீவாயி மீண்டும் தனிமையில் விடப்பட்டாள். ஒரு நாள் கூத்துக்காகத் தட்டி எழுப்பப்பட்ட அந்த வீட்டு அறைகள் வெறித்து நோக்கி நின்றன.
ஜீவாயி தரையில் உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றிக் குப்பையும் கூளமும் நிறைந்து கிடந்தன. வாடிய புஷ்பமும், வெற்றிலைக் காம்புகளும் இறைந்து கிடக்க, எறும்புகள் சாரி சாரியாக ஊர்ந்து சென்றன. பழுத்து முதிர்ந்து விட்ட அவள் கை இயந்திரம் போல் உலைடப் பிடித்து விட்டுக் கொண்டது. அவளை ஈக்ள் மொய்த்தன. அவள் தலைப்பால் விசிறிக் கொண்டாள். அவள் கண்கள் எங்கோ நோக்கின.
அவள் முகத்தில் ஒரு பளபளப்பு. அவள் கண்களில் ஜீவன் ததும்பிற்று. உதடுகள் பெருமிதம் தளும்பத் துடித்துக் கொண்டிருந்தன. அவள் கைகள் கீழேயிருக்கும் குப்பையைத் தடவித் தடவித் தள்ளிச் சேர்த்தன. அந்த ஸ்பரிசத்தில் என்ன நளினம், கனிவு, ஆதரவு! அதற்கு எதை இணை கூற முடியும்? சைத்திரிகன் தன் இருதயத்தில் வெடித்து வரும் ஓவியம் பெற்றுக் காணும் போது அடையும் மகிழ்ச்சி, அவள் உள்ளத்தில் அரவம் செய்தது. துள்ளி விளையாடி, களைத்து, இறைக்க இறைக்க அருகே நிற்கும் கன்றை நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசுவின் ஆதரவு, எஜமானனைக் கண்ட நாயின் நன்றி, மிகுந்த உற்சாகம்…
ஜீவாயி உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தத் துடிப்புக் கொண்டாள். கிளர்ச்சி கொண்ட அவளது நரம்புகள் இன்ப கீதத்துக்குச் சுருதி மீட்டின. இன்றே அவள் ஜன்மம் சாபல்யமடைந்ததாக நினைத்தாள். அந்தக் கட்டடம், அதிலும் அந்தக் கூடம் அடைந்த பாக்கியம். பெரிய பேறெனக் கருதியது அவள் பித்து மனம்.
அங்கேயே அயர்ந்து படுத்துக் கொண்டாள் ஜீவாயி. எறும்புகள் கடித்தன; கொசுக்கள் ‘நொய்’ என்று கீதம் பாடின; ஈக்கள் மொய்த்தன. அந்தக் கிழவியைச் சுற்றி இருள் சூழ்ந்துகொண்டது.
எங்கோ தூரத்தில் இருந்த அந்தப் பங்களா மீண்டும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டது. சிறுசிறு குடிசை களுக்குள் விளக்குகளுடன் மினுக்க, அந்த வீடு சீர்குலைந்த ராணி போல், அதற்கே தனியான கம்பீரத் துடன் தனித்து நின்றது.
ஜீவாயி ஜீவன் தந்த அவ்வீட்டுக்குப் புத்துயிர் கொடுத்த ஓவர்ஸியர் வீட்டினர் எங்குச் சென்றனரோ? அவர்கள் ஓர் ஆத்மாவுக்கு அளித்த ஆனந்தத்தை அறியாது அவர்கள் அகத்தில் இருந்தனர்.
– அமுதசுரபி-1949, பிரமாதமான கதைகள்