புத்துயிர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 596 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ராஜீநாமாக் கடிதத்தை ஒருவாறு எழுதி முடித்தேன். ஒரு நீண்ட பெருமூச்சு, மனத்தின் பாரத்தை வெளியே தள்ள முயன்றது. ஆனால், மனமென்ன புகையா, கர்ப்பூரமா, காற்றோடு கரைந்து போவதற்கு? அது ஒரு ‘குளோரபாரம்’; இன்பமும் துன்பமும் அளவுக்கு மிஞ்சும்போது, இந்தக் குளோரபாரம் மனிதனை மயக்கிவிடுகிறது. 

ஹும் வாத்தியார் உத்தியோகம்! இதுவும் ஓர் உத்தி யோகமா? “வாய்க்கரிசி அற்றவனுக்கு வாத்தியார் வேலை, போக்கற்றவனுக்குப் போலீஸ் வேலை” என்று சொல்வது சரியான வார்த்தைதான். ‘மாதா பிதா குரு தெய்வமாம்!’ அந்தக் காலம் மலையேறி விட்டதையா! நானும் ஒரு வாத்தியார்தான். ஆம். மந்தை மாடுகளைக் கட்டி மேய்க்கும் மாட்டிடையனைப் போலவுள்ள எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார்தான். ஆனால், மட்டைகளை இழந்த மொட்டைப் பனைமரத்தின் லக்ஷ்யமற்ற பார்வைதான் என் வாழ்விலும் மிதந்துகொண்டிருந்தது. 

ஆனால், அப்போது : நான்கு வருஷங்களுக்கு முன், நான் ஓர் ஆசிரிய மாணவன் என்று நெஞ்சை நிமிர்த்திக் காட்டிய அந்த நாட்களில்…

அப்போது, நான் ஒரு மாணவ ஆசிரியன் – இல்லை – ஆசிரிய மாணவன்; எப்படி வைத்துக் கொண்டாலும் சரி. ஆம். வாத்தியார் வேலைக்காகத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு பள்ளி மாணவன்தான். போதனா முறைகளை எங்கள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது, என்னுடைய மனத்திலேதான் எத்தனை நினைவுகள்! கலைவாணியே நம்மைத்தான் பிரதிநிதி களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறாள் என்றெல்லாம் எண்ணிய காலம்; இந்தியாவின் எதிர்காலப் பிரமுகர்களைச் சிருஷ்டிக்கும் பொறுப்பு எங்கள் தலைமேல்தான் விழுந்திருக்கிறது என்று இறுமாந்திருந்த காலம். “கிராம்ய சமூகப் பிரச்னைகள் (Rural Social Problems) என்றெல்லாம் படிக்கும்போது, அவ்வளவு கிராமங்களையும் சாந்திநிகேதனங்களாகவும், சேவா கிராமங்களாகவும் மாற்றி அமைத்துவிட முடியும் என்றெல்லாம் எண்ணினேன். பள்ளிக்கூடத்தை மையமாக வைத்துக்கொண்டு, இந்தியாவையே கை தூக்கி விடலாம் என்று மனக்கோட்டைகள் கட்டினேன். மனஸ்தத்துவ சாஸ்திரங்களைக் கொண்டு, சிறுவர் களைச் சிறந்த மேதாவிகளாக்கி விடலாம் என்றெல்லாம் கனவுகள் கண்டேன். இந்தியாவிலுள்ள ‘இல்லிடரேட்ஸ்’ (Illiterates) எல்லாம் எங்களையே எதிர்பார்ப்பதாக நம்பினேன். 

எல்லாம் எப்போது? கவலையற்றுக் கனவு காணும் பள்ளிப் பருவத்தில். ஆனால், இன்றோ? 

அந்த ஆகாசக் கோட்டையின் அஸ்திவார மெல்லாம் கிடுகிடுத்துத் தவிடுபொடி யாகிவிட்டன. கொடிகட்டிப் பறந்த எனது மனத்தில் இன்று ஒரு மொட்டைக் கம்பந்தான் மிஞ்சி நின்றது. நைந்து பழங் கந்தையான அந்த லக்ஷ்யத் துவஜம் எங்கே சென்றது என்பதே எனக்கு விளங்கவில்லை. 

ஆம். இன்று நான் ஒரு மாணவன் அல்ல. ஆனால், உலகத்தின் சிக்கல்களிடையே அகப்பட்டுத் தவிக்கும் ஒரு சாதாரண வாத்தியார். இந்த ‘டானா’உத்தியோகமே, அதிலும் என்னைப் போன்ற எலிமெண்டரி ‘டானா ‘வின் பாடு எப்போதும் ஆபத்துத் தான். ஹையர் கிரேடாம் ஹையர் கிரேடு ! கிரேடுக்கு மட்டும் ஒரு குறைச்சல் இல்லை! 

கொடுக்கிற சம்பளமோ ரூபாய் பதின்மூன்று. இதற்குள் ஒரு புருஷன், ஒரு பெண்ஜாதி, காணுங் காணாததற்கு ஒரு பிள்ளை வேறு. எப்படி ஐயா பிழைப்பது, இந்தப் பஞ்ச காலத்திலே? ஆனால், வேலை மட்டும் ஒரு வண்டிப் பாரத்துக்குக் கிடக்கும். இதிலே ஆயிரத்தெட்டு விஸிட்டுகள்! இன்ஸ்பெக்ஷன்கள்! 

‘சார்ட் எங்கே? படமெங்கே? அதெங்கே? இதெங்கே?’ என்றெல்லாம் கேள்விமாரி வேறு. சார்ட் வேணுமாம் சார்ட்! சுண்டைக்காய் கால் பணமாம்,சுமைகூலி முக்கால் பணமாம்! எப்படி இருக்கிறது கதை? 

உஸ்…அப்பா! என்ன புழுக்கம்? இந்த அழகில் பட்டிக் காட்டுப் பக்கம் வேறு மாற்றித் தொலைக்கிறான்கள். இந்தப் பட்டியிலே, கண்ணெட்டுந் தூரத்துக்கு, கட்டை மண் சுவர் கூடத் தெரியாத இந்தத் தண்ணீரில்லாக் காட்டிலே, மனுஷனாகப் பிறந்தவன் என்ன செய்வான்? 

பள்ளிக்கூடமோ, கேட்க வேண்டாம். வருகிற குழந்தை களோ பூராவும் குடியானவக் குழந்தைகள். பாதி நாள் வரும், பாதி நாள் வயற்கரைக்கோ, சாணம பொறுக்கவோ, புல் பிடுங்கவோ போய்விடும். மிஞ்சி நிற்கும் ஒன்றிரண்டும் ‘பெரிய’ வீட்டுச் சின்ன’ எஜமான்கள். அவர்கள் எல்லாம் செல்வமாய் வருவார்கள்; போவார்கள். தூசி துரும்பு மேலே படக்கூடாது. இதுவும் போக, சில சமயங்களில் குருதேவரே சிஷ்யகோடி களின் வீடுகளுக்குப் பிரதக்ஷிணம் செல்லவேண்டும். இந்த அழகிலே பள்ளிக்கூடம் நடக்கிறது.சிரிக்கிறீர்களா? சிரியுங்கள்! தொண்டை கிழியக் கத்தும் என்னைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வராது 

‘இதிலெல்லாமிருந்து விடுதலையடைய வழியே கிடையாதா ? பதின்மூன்று ரூபாய்க்கும், பதினாலு ரூபாய்க்கும் ‘லொண்டா அடிப்பதைவிடப் பிச்சை யெடுப்பது நலம். ஆம். கட்டாயம் ராஜீநாமாச் செய்துவிட வேண்டியதுதான். கூலி வேலையுமா கிடையாது? அதைப்போலக் கௌரவமான பிழைப்பு வேறு…’ 

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். 

“வாத்தியாரையா, எங்கம்மா” என்ற ஒரு பெண் குரல் என் சிந்தனையைக் குலைத்தது. 

இந்த உலகிற்குத் திரும்பினேன். ராஜீநாமாக் கடிதம் மேஜை மேல் திறந்து கிடந்தது, சிறைக்குள்ளிருக்கும் கைதியை வெறித்து நோக்கும் வெளியுலகைப் போல. 

எதிரே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்.நாட்கணக்காய், அலைமேல் அலையாய்ப் படிந்த சோகத் திரைகள் அவள் முகத்தில் நிறைந்திருந்தன. பக்கத்திலே ஒரு பெண் குழந்தை சிணுங்கிக் கொண்டிருந்தது. 

“என்னம்மா, குழந்தை யாரு?” என்று பரிவோடு கேட்டேன், அந்தப் பெண்ணிடம். அவள் பதில் கூறவில்லை. பாசி படிந்த பாறையில், நீரடியில் ஒட்டிக் கிடக்கும் சிப்பிகளைக் காணும் ஓர் அபூர்வப் பார்வையால் என்னை வெறித்து நோக்கி நின்றாள். 

“படிக்க வந்திருக்குதா, அம்மா?” என்றேன் மறுபடியும். 

“ஆமாம்” என்று பதில் கூறிவிட்டுப் பழையபடி நின்றாள். 

நானும் அவளைப் பார்த்தேன். அந்தப் பெண்ணின் முகம், களிம்பேறிய பித்தளை விக்கிரகம் போன்ற அந்த முகம், எனக்கு எங்கோ பழகிய முகம்போல இருந்தது. 

என் சிந்தனை, கடந்த காலத்தின் நினைவுச் சுழல்களில் சுழன்றது. 

அப்போது: ‘எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி யெண்ணி, எட்டாத பேராசைக் கோட்டை கட்டி’ வாழும் வாலிபப் பருவம் அது. 

நான் எங்கள் கிராமத்தில் வாழ்ந்துவந்தேன். பள்ளிப் படிப்பின் மயக்கத்திலே மூழ்கி உத்ஸாகமாகத் துள்ளித் திரிந்த காலம். அப்போதுதான், அவள் என் மனத்தைச் சூறையாடிக் கொள்ளைகொண்டிருந்தாள். என்றைக்காவது ஒருநாள் அவளைக் காணாவிடில் யுகமாயிருந்த காலம். காதலா? பிரமையா? அன்பா? நேசமா? நட்பா?- எந்த வார்த்தையினால், அந்த உணர்ச்சியைப் புலப்படுத்த முடியுமோ, தெரியவில்லை. எதுவா யிருந்தால் என்ன? வேனிற்காலத்திலே வெம்பரப்பான மைதானத் திலே, ஒரு நிமிஷம் சுழித்தடிக்கும் காற்றைப்போல, அவள் என் வாழ்வில் இருந்தாள். எதுவாயிருந்தென்ன? எனக்குக் கல்யாண மாகிப் பேர் சொல்ல ஒரு மகனையும் பெற்றாய்விட்டது.எனினும், மனத்தின் கவனிப்பற்ற ஒரு மூலையில், அவளுடைய உருவம் நன்கு அழுந்தியிருந்தது. ஆனால், அவளைப்பற்றி நினைப்பதிலும் பயனில்லைதான். அவளுக்கும் கல்யாணமாகி விட்டது. 

பனிமூடிய மலைபோன்ற அந்த முகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவள் முகந்தானா? என் எதிரே நிற்கும் இந்தப் பெண் தானா,அவள்? ஒருவேளை… 

”உங்கள் ஊர் எதம்மா?” என்றேன், மிகவும் ஆவலோடு.

“என்னுடைய ஊர் கருங்குளம். ஏன்?” என்றாள் தயக்கத்தோடு. 

“இல்லெ, நீ புதுவீட்டுப் பொண்ணுல்லே” என்றேன். 

“ஆமாம். நீங்களும் அன்னம்மா பிள்ளைதானே?” என்றாள் அவள். “ஆம், அன்னம்மாள் என் தாய்தான். ஆனால், அவளுக்கு என்னுடைய இந்தக் கஷ்ட நிலையைப் பார்க்க ஈசன் வழி வைக்க வில்லை. ஹூம்!” என் சந்தேகமும் தீர்ந்தது. 

“உனக்கு இங்கேதான் கல்யாணமாயிருக்கிறதா? குழந்தை உன்னுடையதுதானா?” 

“ஆமாம். அதுக்கொண்ணும் குறைச்சலில்லை. குழந்தையாவது நல்லா வாழணும் என்பதுதான் என் கவலை.” 

“அப்படியென்றால், உன் புருஷன் ஏதேனும் ……” 

“அதையேன் கேட்கிறிங்க! பிறந்த வீட்டிலே இருந்த சீர் சிறப்புக்கும் இங்கே வந்து சீரழிகிறேன். அவரோ வீட்டிலேயே தங்குகிறதில்லை. அடிக்கடி, பட்டணக்கரைக்குப் போறார். ஊா ஜனங்களோ, அவரைப் பத்தி என்னமோ குடியின்னும், கூத்தியின்னும்…” என்று கூறி அழ ஆரம்பித்தாள். 

அவளது சோபையிழந்த கன்னங்களில் அந்தக் கண்ணீர் ஓட ஆரம்பித்தது. அப்பா! பசும்புல் தரை போன்ற அவளது யௌவனம் கனிந்த முகத்தில் காலதேவன் இப்படி நடந்து நடந்து அதைக் கருக அடித்திருக்கவேண்டாம். பட்டுப்போன பசுமையை எழுப்ப எண்ணும் அமுத தாரைபோலக் கண்ணீர் வழிந்தது. 

“அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று மனசைச் சமாதானப் படுத்தவேண்டியது தான்”. 

“என்னமோ குழந்தைக்காகத்தான் உயிரோடிருக்கேன்… ம்…அது சரி. நீங்க இங்கேதான் இருக்கிறீங்களா?” 

“ஆமாம், மாத்திவந்து மாசம் ஒண்ணாச்சு. ஒரு வசதியில்லை. குடும்பத்தோடுதான் தங்கியிருக்கேன். என்ன இருந்தாலும், நம்ம ஊரு மாதிரி இருக்குமா?” 

“வீடு எங்கே?” 

“அதோ அந்தக் காரை வீடு தெரியுது பார்; அதுக்கு எதிர்த்த வளவிலேதான்.”

“நானும் அடுத்த தெருவிலேதான் இருக்கேன். என்னமோ நம்ம ஊர் மனுஷரும் ஒருத்தர் இருக்காரேன்னுதான் மனசை ஆத்திக்கொள்ள வேணும். விதிச்சுது அவ்வளவுதான்.”

“ஏம்மா சலிச்சிக்கிறே? இன்னைக்கிக் கெட்டவராயிருக்கிறவரு, நாளைக்கி நல்லவராயிடமாட்டாரா? நாம் நினைக்கிறபடி யெல்லாம் நடக்குமாம்மா!” என் கண்களில் நீர் சுரந்தது, காரணமின்றி. 

ஒரு கனைப்புக் கனைத்துக்கொண்டு,”குழந்தையை மட்டும் நல்லாக் கவனி. அதுதான் உனக்கு ஆறுதல்” என்றேன், மிகவும் அநுபவப்பட்ட புலிபோல. 

“என்னமோ நானும் இருக்கேன். குழந்தைக்குத் தாங்கள் தான் ஸர்வமும். அதை முன்னிலைக்குக் கொண்டு வரவேண்டியது உங்கள் பொறுப்பு. நானோ…” 

“அதற்கென்ன? உன் பிள்ளை வேறு, என் பிள்ளை வேறா?” என்றேன். அந்த நிமிஷத்திலேயே என் தலைமேல் ஓர் இன்பகரமான சுமை ஏறுவதுபோல இருந்தது. 

அவள் போய்விட்டாள். 

என் மனம் பழையபடி சுற்றி அலைந்தது. 

துருப்பிடித்துக் கிடந்த என் மனத்தில் ஏதோ ஒரு புது மின்சார சக்தி பாய்வதுபோல இருந்தது. என்னுடைய நரம்புகளும், உணர்ச்சிகளும் ஏதோ புத்துயிர் பெற்றவைபோல் துள்ளின. வாடிக் கிடந்த எனது இருதயச் செடி தலை நிமிர்வதாகத் தோன்றியது. 

அந்தக் குழந்தைக்கு வித்தியாப்பியாசம் செய்து, அதனை முன்னிலைக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு இன்றியமையாத நிர்ப்பந்தமாகக் காட்சி அளித்தது. 

மேஜையின்மேல் கிடந்த ராஜீநாமாக் கடிதத்தை வெறித்து நோக்கினேன்; எடுத்தேன். அர்த்தமில்லாமல் இரண்டு மூன்று தடவை வாசித்தேன். உள்ளத்தில் உவகை ஊற்றெடுத்தது. 

ராஜீநாமாக் கடிதத்தைக் கிழித்தெறிந்து வெளியில் பறக்க விட்டேன். மனம் குதூகலித்தது. 

“ஸார், ஸார்! நம்ம வாழையிலே, புதுக் குருத்து விட்டிருக்கு ஸார்!” என்று ஓடிவந்தான், ஒரு சிறுவன். 

“அப்படியா!” என்றேன் நிம்மதி நிறைந்த மனத்தின் உவகையோடு.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email
தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *