கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 83,274 
 
 

பீட்டர்ஸ்பேர்க். பனிக்காலத்தின் அந்திநேரம். பனி எங்கும் வெண்பூக்களாய் பொழிந்தபடியும், சற்று நேரம் முன் ஏற்றி வைக்கப்பட்ட தெருவிளக்கை சோம்பறித்தனமாக சுற்றியபடியும், மெல்லிய அடுக்குகளில் மெண்மையாக கூரைகளிலும், குதிரைகளின் முதுகெங்கிலும், படர்ந்திருந்தது. தோள்பட்டைகளில், தொப்பியில், உடையில் என எங்கும் வெண்பனியோடு காணப்பட்ட குதிரைவண்டிக்காரர் அயோனா போடபோவ்(Iona Potapov) ஒரு வெண்ணிற பூதம் போல் காட்சியளித்தார். தன் இருக்கையில் எந்த சலனமுமின்றி அமர்ந்திருந்த வண்டிக்காரரின் உடம்பு வளைந்து குனிந்துதிருந்தது. தொடர் பனிபொழிவில் தன் மீது பனி, குவியலாக படர்த்திருந்தாலும் அதை உடலசைத்து கிழே தள்ளும் எண்ணம் இல்லாதவராக காணப்பட்டார் அயோனா போடபோவ். அந்த சின்ன குதிரையின் அசைவற்ற தன்மையும், நேர்கோட்டில் நிற்பது போன்ற தோற்றமும், ஒட்டி வைத்ததுபோல் நேராக நிற்கின்ற கால்களும் பார்க்க அரைக்காசு குதிரைவடிவ பிஸ்கட் போல் இருந்தது. அவர் எதோ நினைவில் மூழ்கி இருந்திருக்கலாம். அமைதியான கிராமத்து வாழ்க்கையில் இருந்து விலகி வந்து நகரத்தின் சகதியில், ராட்சத ஒளியில், இடைவிடாத பெரும் கூச்சலில், எப்போதும் பரபரப்பாக இயங்கும் மக்களோடு வாழ நேர்ந்தவர்கள் இப்படி நினைத்துப்பார்க்கக்கூடும்.

அயோனாவும் அவர் குதிரையும் அசைந்து நீண்ட நேரமாகியது. இரவு உணவுக்கு முன் குதிரைலாயத்திலிருந்து வந்து நீண்ட நேரமாகியும் இன்னும் ஒரு சவாரி கூட கிடைக்கவில்லை. மாலை நேரம் விலகி மெல்ல இருள் கவிய தொடங்கியது. மங்கிய தெரு விளக்கின் வெளிச்சம் பிரகாசமாகவும், ஜனசந்தடி அதிகமாகவும் ஆரம்பித்தன.

“வண்டிக்காரா, வைபோர்க்யா(Vyborgskaya)வுக்கு போகணும்”

அயோனா செவியில் மெல்ல விழ, தன் பனி மூடிய இமைத்திறந்து, ஒரு அதிகாரி ராணுவ உடையில் தலைப்பாகையுடன் இருப்பதை பார்க்கிறார்.

அந்த அதிகாரி மீண்டும் கேட்கிறான் ” வைபோர்க்யா(“வுக்கு போகணும்.. என்ன தூங்கிறியா…”

“சரி போகலாம்” என்று சொல்லும் விதமாக குதிரையின் தலைமுடியை இழுத்து அதன் தலையிலும், தோளிலும் உள்ள பனியை சரிய செய்ய, அதிகாரி வண்டியில் ஏறுகிறார். சாட்டையை உயர்த்தாமல், நெடு நாள் பழக்கமாக தன் இருக்கையை உயர்த்தி சரி செய்து கொண்டு ஓர் அன்னப்பறவை போல் குனிந்து குதிரையை தட்டி ஒட வைக்கிறார். குதிரை மெல்ல கழுத்தை சாய்த்து கால்களை மடக்கி தயக்கத்துடன் ஓட ஆரம்பித்தது.

“யோவ்.. வண்டிய எங்கய்யா பார்த்து ஓடிட்ற!”. இருட்டில் குலுங்கியபடி வந்த அதிகாரி கத்தினான். ” வண்டிய எப்படி ஓட்றதுன்னே தெரியலே.. உனக்கு”

“வலது பக்கம் திருப்புயா. .” அதிகாரி மீண்டும் கத்தினான்.

அயோனா, எதோ ஒரு வேகத்தில் சட்டென்று வண்டியை வலது பக்கம் திருப்ப, சாலையை கடந்து சென்ற பாதசாரியின் தோள்களின் மேல் குதிரையின் மூக்கு உராய்ந்து கொண்டு சென்றது. பாதசாரி கோபமாக தன் மேல் விழுந்த பனி தூள்களை தட்டியபடி அயோனாவை எதோ திட்டிக்கொண்டு சென்றான். கலவரமடைந்த அயோனாவுக்கு முட்களின் மீது அமர்ந்திருப்பது போல் இருந்தது. சட்டென்று முழங்கையை வெட்டி இழுத்து கொண்டார். தான் எப்படி இங்கு வந்தோம், எதற்காக வந்தோம் என்று தெரியாது போல தலையை திருப்பி கொண்டார்.

“படுபாவிங்க.. என்ன எப்படி இருக்கானுங்களே!” என்றார் அதிகாரி நகைத்தபடி. “வேண்டும்னே கண்ணுமண்ணு தெரியாம ஓடி உங்க மேல மோதுறது.. இல்லனா.. குதிரை கால் கீழ விழறது.. ”

அயோனா அதிகாரியை நோக்கி உதட்டசைத்து, எதோ சொல்ல வந்தவர் கடைசியில் தும்மலில் முடித்து கொண்டார்.

“என்ன?” என்று வினவினார் அதிகாரி.

அயோனா, வறண்ட புன்னகையுடன் தொண்டையை செறுமியபடி தணிந்த குரலில் “என் பையன்.. என் பையன் போன வாரம் இறந்துட்டான் சார்.. ”

“ம்ம்.. எப்படி இறந்தான்?”

அயோனா, தன் முழு உடம்பையும் அதிகாரியின் பக்கமாக திரும்பி சொல்ல ஆரம்பித்தார்.

“எப்படி சொல்லுவேன் சார்.. ஜுரம் வந்ததுனால தான் செத்து இருக்கணும்.. மூணு நாள் ஹாஸ்பிடல இருந்தான் சார். எல்லாம் கடவுளுடைய விருப்பம். ”

” யோவ்.. வண்டிய திருப்பு.. பைத்தியக்காரா..” குரல் இருட்டிலிருந்து வந்தது. .”கிழட்டு நாயே! உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுக்கிச்சா?.. எங்க போகிறோம்ன்னு பார்த்து ஓட்டு.. நிக்காம ஓட்டு.,” என்றார் அதிகாரி. “இப்படியே ஓடிட்டிருந்த, நாளைக்கு கூட போயி சேர முடியாது. ம்ம்.. சீக்கிரம்! சீக்கிரம்!”

குதிரை வண்டிக்காரன் மீண்டும் கழுத்தை திருப்பி, இருக்கையை உயர்த்தி, உத்வேகத்துடன் சாட்டையை குதிரையை நோக்கி வீசினான். அவ்வப்போது அதிகாரி பக்கம் திரும்பி பார்த்தான். அதிகாரி, எங்கே மீண்டும் மகன் இறந்த கதையை சொல்ல ஆரம்பித்து விடுவானோ என்று கண்ணை மூடி பாசாங்கு செய்தான். சேர வேண்டிய வைபோர்க்யாவும் வந்தது. வண்டி ஒரு உணவகம் முன் நிற்க பயணி இறங்கி கொண்டான். அயோனா தன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். பனி மீண்டும் தன் தூரிகையால் அயோனா மீதும் குதிரை மீதும் வெண் நிற வர்ணத்தை பூச ஆரம்பித்தது.

ஒரு மணி நேரம் அமைதியாய் கடக்க.. அப்பொழுது, மூன்று இளைஞர்கள், அதில் இருவர் உயரமாகவும் ஒல்லியாகவும், மூன்றாமவன் குள்ளமாகவும் கூனனாகவும், ஒருத்தர் மீது ஒருத்தர் இடித்து கொண்டும், ரப்பர் ஷூக்களால் நடைபாதையை சத்தமாக மிதித்து நடந்தபடி வந்தார்கள்.

“வண்டிக்காரா! போலீஸ் பிரிட்ஜ் போகணும்..” என்று கத்தினான் கூனன் கரகரத்த குரலில். “நாங்க மூணு பேர்.. இருபது கொபேக் (ரஷ்ய பணம்).. ஓகே வா..”

அயனோ லகானை இழுத்து குதிரையை ஓடவிட்டான். இருபது கோபெக் குறைந்த கட்டணம் தான்.. ஆனால் அதை யோசிக்கும் மனநிலையில் இல்லை. ஐந்து கோபெக்கோ, ரூபிலோ எதுவும் பெரிதல்ல.. சவாரிக்கு ஆட்கள் வந்தால் போதும்.. இருவர் உட்காரவும், மற்றவர் நின்று பயணம் செய்யவும் வசதி கொண்ட அந்த கோச் வண்டியில் மூன்று இளைஞர்களும் ஒருவர்க்கொருவர் இடித்து கொண்டும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டும் அவ்வப்பொழுது ஓட்டுநர் இருக்கைகே சென்று அலம்பல் செய்தபடியும் இருந்தார்கள். மூவரும் தீவிரமாக விவாதித்து கொண்டார்கள்.. யார்-யார் உட்காருவது யார் நிற்பது என்று. நீண்ட வாய்ச்சண்டை, வசவுகளுக்கு பிறகு குள்ளமான கூனனே நிற்பது என்று முடிவானது.

நின்று கொண்டு பிரயாணம் செய்யும் கூனன், குனிந்து அயனோ காதருகே சென்று கரகரத்த குரலில் ” நிறுத்தாம ஒட்டு” என்றான்.

” யோவ்.. நேராவே பார்த்து ஓட்டிட்டு இருக்காததே.. கொஞ்சம் லெப்ட், ரைட் பார்.. முன்னாடி எவ்ளோ கேப் தெரியுது.. சட்டுனு ரைட்ல கட் பண்ணி போ.. இப்படி ஒரு கேப் இந்த பீட்டர்ஸ்பெர்க்ல அடிக்கடி கிடைக்காது!”

“ஹி.. ஹி! ….. ஹி . ஹி!” சிரித்தார் அயனோ. ” “இதுல பீத்திக்கிறதுக்கு என்ன இருக்கு!”

“பீத்திக்க வேண்டாம்.. ஒழுங்கா ரோட்ட பார்த்து ஒட்டு! இப்படியே தான் ஓட்டினு போக போறியா! கழுத்தாம்மட்டையில ஒன்னு போடடுமா!”

“எனக்கு தலைவலிக்குது!” உயரமாக இருந்தவர்களில் ஒருவன் சொன்னான். நேற்று டுக்மாஸோவ்ல(Dukmasov), நானும் விஸ்தாவும் நாலு பாட்டில் பிராந்தி சாப்பிட்டோம்..”

“எனக்கு ஒன்றும் புரியல.. நீ ஏன் இந்த மாதிரி விஷயத்தைலாம் பேசுறேன்னு” உயரமானவன் கோபமாக சொன்னான், “முரடனை போல் பொய் பேசுகிறாய்..”

“வாஸ்தவம்ப்பா! என்ன கொன்னுடு!”

“பேன் இருமுவதை போல் உள்ளது.”

“ஹி.. ஹி…” என்று பல்லிளித்தார் அயனோ. “மகிழ்ச்சி கனவானே!”

“ச்சி! நாசமா போ!” கூனன் கோபமாக கத்தினான். ” “கிழமே.. கொஞ்சம் முன்னேறி போறியா! “இதுதான் நீ ஓட்ற லட்சணமா! “குதிரை என்ன இப்படி ஓடுது.. சவுக்கு எடுத்து நல்லா விளாசு!”

“அயனோ முதுகின் பின்னால் குலுங்கியபடி வருபவனையும், கூனனின் நடுங்கும் குரலையும், உணர்கிறார்.. தன்னை நோக்கிய வசவுகளை கேட்கிறார்.. மனிதர்களை பார்த்து கொண்டு வருகிறார்.. கொஞ்சம் கொஞ்சமாக தனிமையின் கனம் நெஞ்சை அழுத்துவதை உணர ஆரம்பிக்கிறார்.. கூனன், இரும்பலில் தொண்டையடைத்து திணறும் வரை அயனோவை திட்டியபடிய வந்தான். அவனின் கூட்டாளிகள் இளவரசி நடேழுதா பெட்ரோவ்னவை (Nadyezhda Petrovna) பற்றி பேசி கொண்டு வந்தார்கள். அயனோ அவர்களை திரும்பி பார்த்தார். பேச்சின் சிறிய இடைவெளிக்காக காத்திருந்து, அவர்களை பார்த்து “இந்த வாரம் தான் சார்.. என் மகன் இறந்து போனான்.. ”

“யோவ்! நாம எல்லோருமே ஒரு நாள் சாவ தான் போறோம்.. வண்டிய வேகமா ஓட்டுவியா.. உதட்டை துடைத்தபடி இரும்பி கொண்டு சொன்னான் கூனன்.

“நண்பர்களே! என்னால இப்படி ரொம்ப நேரம் நின்று கொண்டு தவழ்ந்து போற மாதிரி போக முடியாது.. இவர் நம்மை எப்பொழுது கொண்டு போய் சேர்ப்பார்?”

“ஆள் டல்லா இருக்காரு.. கழுத்துல ஒண்ணு போடு.. தெம்பாயிடுவாரு..”

“கிழமே! காது கேட்குதா! எதோ மாப்பிள்ளை ஊர்வலத்தில் நடந்து போற மாதிரி இருக்குது.. காது கேட்குதா இல்லையா.. நாங்க பேசுறது கேட்டா கோவம் வரலை?”

அயனோவுக்கு கழுத்தில் அறைவது போல் இருந்தது.

” “ஹி.. ஹி…” சிரிக்கிறார். ” மகிழ்ச்சி, கனவான்களே…கடவுள், உங்களுக்கு நல்ல உடல்நலத்தை கொடுக்கட்டும்..”

“வண்டிக்காரரே, உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா!” உயரமானவர்களில் ஒருத்தன் கேட்டான்.

“எனக்கா! ஹா.. ஹா.. மகிழ்ச்சி கனவான்களே… என் ஒரே மனைவி இப்பொழுது இந்த பூமிக்கடியில்.. அதோ.. அந்த இடுகாட்டில் தான்.. இப்போ என் மகனும் செத்துட்டான்.. ஆனா நான் மட்டும் உயிரோட இருக்கேன்.. என்ன ஒரு விசித்திரம்.. மரணம் தவறான வாசலை தட்டியிருக்குது….என்ன கொடுமை பாத்திங்களா எனக்கு வரவேண்டிய சாவு என் பையனுக்கு வந்திருக்கு”

“அயனோ, அவர்கள் பக்கம் திரும்பி, மகன் எப்படி இறந்தான் என்பதை சொல்ல முனைகையில், கூனன், பலகீனமான பெருமூச்சுடன் “கடவுளுக்கு நன்றி.. எப்படியோ.. கடைசியில் சேர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டோம்..” என்றான்.

இருபது கோபெக்கை பெற்று கொண்ட அயனோ சிறிது நேரம், அந்த மூவர் இருட்டில் சென்று மறைவதை வெறித்து பார்த்தபடி இருந்தார். மீண்டும் அயனோ தனிமையானார். அமைதி அவரை மீண்டும் சூழ்ந்து கொண்டது. சிறிது நேரம் இல்லாதிருந்த புத்திர சோகம் மீண்டும் அவர் இதயத்தை முன் எப்போதும் இருந்ததை விட குத்தி கிழித்தது. கண்களில் கனத்த சோகத்துடன் அயனோ, சாலையின் இருமங்கிலும் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டு இருந்த மக்கள் கூட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தார்.. அத்தனை மக்கள் கூட்டத்தில் அயனோவால், தன் துக்கத்தை பகிர்ந்து கொள்ள, ஒருத்தரை கூடவா கண்டுகொள்ள முடியவில்லை? அவரின் பெருந்துயரம் கட்டுக்கடங்காதது. ஒருவேளை அயனோவின் இதயம் வெடித்து துக்கம் சிதறி வழிந்தோடினால் அது இந்த பூமியை மூழ்கடித்து விடும், ஆனால் அப்படி எதுவும் நடக்க சாத்தியம் இல்லை. அத்துயரம் எந்த சிறப்புமற்ற கூட்டை மறைவிடமாக கொண்டு இருக்கிறது. அதை எவனொருவனும் பகல் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி கொண்டு தேட முடியாது.

அயனோ, கையில் பொட்டலத்துடன் இருக்கும் வேலையாளிடம் “நண்பரே! என்ன டைம் ஆகுது?” என்று வினவுகிறார்.

“பத்து ஆகப்போகுது.. ஏன் நிறுத்திட இங்க .. கிளம்புங்க ”

அயனோ, சிறிது தூரம் வண்டியை செலுத்திய பிறகு மெல்ல குனிந்தபடி சோகத்தில் மூழ்கிப்போகிறார். தன் துயரம் பற்றி இனி எவரிடமும் பேசுவது அர்த்தமற்றது என்று உணர்கிறார்.

அவரால் இதற்கு மேல் தாங்கமுடியாது. கடுமையான தலைவலியுடன், குதிரையின் தலைமுடியை இழுத்து வண்டியை ஓடவைக்கிறார்.

“நேரா.. நேரா.. குதிரைலாயத்திற்கு தான் போகணும்!”

அந்த சின்ன குதிரை, எஜமானனின் மனஓட்டத்தை அறிந்தது போல் ஓட ஆரம்பித்தது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின், அழுக்கடைந்த ஒரு பழைய அடுப்பின் அருகில் வந்து அமர்கிறார். தரையில், பெஞ்சில் எங்கும் மக்கள் குறட்டைவிட்டபடி தூங்கி கொண்டு இருந்தனர். காற்றில் புழுக்கமும் நெடியும் விரவி இருந்தது. அயனோ, கழுத்தை சொரிந்தபடி தூங்கி கொண்டு இருப்பவர்களை பார்க்கிறார். தான் சீக்கிரம் வீட்டிற்கு வந்து விட்டோமோ என்று கவலைபட்டார்.

“ஓட்ஸ் வாங்க கூட போதுமான அளவுக்கு சம்பாதிக்கலை.. அதான் ரொம்ப கவலையா இருக்கேன்.. எவனொருவனுக்கு எப்படி வேலை செய்யணும் தெரியுமோ…. அவனுக்கு போதுமான அளவுக்கு உணவும், அவன் குதிரைக்கு போதுமான அளவுக்கு தீனியும் எளிதாக கிடைக்கும்” என்று பெருமூச்சுவிட்டார்.

அவ்விடத்தின் மூலையில், ஒரு வண்டிக்கார இளைஞன் தூக்க கண்களுடன் தொண்டை கனைத்தபடி தண்ணீர் பக்கெட் நோக்கி நகர்ந்து வருகிறான்.

“குடிக்க ஏதாவது வேண்டுமா? அயனோ அந்த இளைஞனை கேட்டார்.

“ம்.. ஆமா”

” நல்லது நண்பரே.. உங்களுக்கு விஷயம் தெரியுமா? என் மகன் செத்துட்டான்.. இந்த வாரம் ஹாஸ்பிடல்ல.. கேட்குறீங்கல்ல?”

அயனோ, தன் பேச்சால் ஏற்பட போகும் எதிர்வினையை எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த இளைஞன் தலையை போர்த்திக்கொண்டு தூங்கி போனான். அந்த பெரியவர் பெருமுச்சு விட்டார். அந்த இளைஞனின் தாகம் தண்ணீருக்காக இருந்தது போல் அவருடைய தாகம் பேச்சுக்காக இருந்தது. மகன் இறந்து ஒரு வாரமாகியும் அவர் இன்னும் அதைப்பற்றி யாரிடமும் சரியாக பேசவில்லை. அவருக்கு யாரிடமாவது மனம் திறந்து பேச வேண்டும். அவருக்கு தன் மகன் எப்படி நோய்வாய்ப்பட்டான்… எப்படி துன்பப்பட்டான்.. எப்படி இறந்து போனான். இறப்பதற்கு முன் என்ன சொன்னான்.. என்று யாரிடமாவது தன் மனக்குறைகளை கொட்டி தீர்க்க வேண்டும். மகனின் உடைகளை பெற்று கொள்ள மருத்துவமனை சென்றது, இறுதிக்கிரியை எப்படி நடந்தது என்று யாரிடமாவது சொல்ல வேண்டும். அவருக்கு அனிசியா(Anisya) என்றொரு மகள் இருக்கிறாள். அவளிடமும் பேச வேண்டும். ஆம், அவரிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது… கேட்பவர்கள், பெருமூச்சுடனும், வியப்புடனும் மனம் வருந்தியும் கேட்க வேண்டும்… பெண்களிடம் பேசினால் இன்னும் நல்லது.. அவர்கள் தான் முதல் வார்த்தை கேட்டமட்டிலும் கதறி அழுவார்கள்.

‘வெளியே போய் குதிரை என்ன செய்கிறது என்று பார்க்கலாம்” என்று அயனோ கோட்டை அணிந்து கொண்டு தன் குதிரை நிற்கும் குதிரைலாயத்திற்கு செல்கிறார். அவருக்கு ஓட்ஸை பற்றியும் வைக்கோலை பற்றியும் சீதோஷ்ணநிலை பற்றியும் நினைவு வருகிறது. தனிமையில் அவரால் தன் மகனை பற்றி நினைக்க முடியவில்லை. மகனை பற்றி மற்றவர்களிடம் பேச முடிகிறது.. ஆனால் அவனை பற்றி நினைக்கவோ.. அவன் முகத்தை ஞாபகப்படுத்தி பார்ப்பதோ… சொல்லொண்ணா வேதனையை அளிக்கக்கூடியது.

“என்ன,, தீனியை அசை போட்டுட்டு இருக்கியா? புத்திர சோகத்தில் இதயம் விம்மிட, அயனோ பளபளக்கும் குதிரையின் கண்களை பார்த்து பேச ஆரம்பிக்கிறார்.

“நல்லா.. நல்லா மென்னு சாப்பிடு… இன்னைக்கு ஓட்ஸ் வாங்குற அளவுக்கு சம்பாதிக்கல.. அதனால வைகோலை தின்போம்… ஆமாம்.. எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு… வண்டி ஓட்ட முடியலை… என் மகன் உயிரோட இருந்து வண்டி ஓட்டியிருக்கணும்.. நான் இல்ல.. அவன் தான் உண்மையான குதிரை வண்டிக்காரன்… அவன் உயிரோட இருந்திருக்கணும்..”

அயனோ சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் தொடர்கிறார்..

“அப்படி தான்.. அந்த பெரிய பெண்.. குஸ்மா லோனிட்ச்(Kuzma Ionitch) இறந்து போனாள்.. கையசைத்து விடை பெற்றாள்.. இப்போ இவன்.. ஒரு காரணமும் இல்லாமல் செத்து போனான்… இதோ பார்.. இப்போ, ஒருவேளை உனக்கு ஒரு குட்டி குதிரை இருந்து… அந்த குட்டி குதிரை திடீர்ன்னு ஒரு நாள் உன்னைவிட்டு செத்து போச்சுன்னா.. உனக்கு எப்படி இருக்கும்? எவ்வளவு வருத்தப்படுவ?

அந்த சின்ன குதிரை எதோ கேட்பது போன்ற பாவனையில், அசை போட்டு கொண்டும், தன் எஜமானின் கரங்களில் மூச்சிரைத்து கொண்டும் இருந்தது. அந்த குதிரையிடம், அயனோ சகமனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அத்தனை துயரத்தையும் உணர்ச்சிபொங்க கொட்டி தீர்க்க ஆரம்பித்தார்.

– அன்டன் செகோவ் (Anton Chekov) எழுதிய ‘Misery என்ற சிறுகதையின் மொழிபெயர்ப்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *