புத்தாண்டு முத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2012
பார்வையிட்டோர்: 8,032 
 
 

கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது போல இருக்கும் கிறிஸ்துவ தேவாலயங்களின் கோபுரத்தின் உச்சிவரை இழுத்து நான்கு புறங்களிலும் அலங்காரமாய்த் தொங்கவிடப்பட்ட சீரியல் விளக்குகளும், மின் மாயத்தினால் மறைந்து மறைந்து தோன்றும் சிலுவையும் அதைப்போன்றே அப்படி மறைந்து பின் தோன்றுவதால் இருபுறமும் ஆடி ஆடி அடித்துக்கொண்டிருப்பதுபோல அமைக்கப்பட்ட மணிகளின் வசீகரம் மனதிற்குள் நம் விருப்பத்திற்கேற்ற சப்தங்களை எழுப்பிக்கொண்டிருக்கும். புது வருடத்திற்கான கீதங்களை ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும் இசைக்குழுவின் தனித்தனி மனிதர்கள் பாடலின்போது எப்படிக் கரைந்து ஒன்றாகிவிடுகிறார்கள் என்று புரிவதே இல்லை. சர்ச்சுகளில் ஒளிரும் தொடர் விளக்குகள்போல் சில வசதியான வீடுகளிலும் அலங்காரம் பிரமாதப்படும். மரங்களின்மேல் படரவிடப்பட்ட வண்ணவிளக்குகள் இரவின் கனிகளாகச் சிரித்துக்கொண்டிருக்கும். ரயில்வே காலனியின் நீள அகலங்களை அலுக்காமல் அளக்கவைக்கும் அந்த இரவுகளின் பனிதோய்ந்த இனிமை ஃபிலிப்ஸின் அருகாமையில் பன்மடங்கு பெருகிவிடும்.

ரயில்வே காலனியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் க்வார்டர்ஸில் வசிப்பதின் ஸ்வாரஸ்யத்தை அதிகப்படுத்துவதாய் இருந்தது. ஃபிலிப்ஸின் அப்பாவும் அண்ணனும் எப்போதும் பேண்டோடும் குளறித் தடுமாறும் கெட்டவார்த்தைகளோடும் அலைந்துகொண்டிருக்க அவன் அம்மா வெகு சீக்கிரத்திலேயே வயதாகி உடலுக்குப் பொருந்தாத கவுனோடு இருந்தார். அவன் தங்கை சோஃபி அமைதியாய் அந்த வயதிலேயே தன்னை டீச்சர் உத்யோகத்திற்குத் தயார்ப்படுத்திக்கொண்டவள்போல் நடந்துகொண்டிருந்தாள். தம்பி மோவின் அவன் பார்க்கும் நாய், பன்றி மற்றும் இதர வாயில்லா ஜீவன்களை ” நாய் வர்றாண்டா, பன்னி போறாடா” என்று அதனதன் பால் வகை அறிந்து சொல்லிக்கொண்டு காதில் அடிக்கடி சீழ்வடிய ரயில்வே ஆஸ்பத்திரிக்கு அடிமையாயிருந்தான். ஃபிலிப்ஸ் தீராத சங்கீத ஆர்வத்தில், கைகளில் இல்லாத கிடாரின் சப்தத்தை நாக்கால் நிரடித் துப்பிக்கொண்டிருப்பான். டிரம்ஸ் மீதும் அவனுக்குத் தீராத காதல். கால்களை அகட்டிவைத்துப் பருத்த எருமைமாட்டின்மீது பயணிப்பவன்போல் நடப்பான். அவன்தான் சர்ச் இசைக்குழு ப்ராக்டிஸ் செய்யும்போது என்னைக்கூட்டிக்கொண்டுபோய் எலெக்ட்ரிக் கிடாரை முதன் முதலாகக் காட்டினான். இசைக்குழுவிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒருமுறை தாளவாத்தியம் வாசிக்க சான்ஸ் கிடைத்தபோது அவர்களைப்போலவே இருகால்களுக்கிடையில் மூன்று ட்ரம்ஸ்களை திருப்பிப்போட்ட அஃஹ்ஹன்னா போன்று இடுக்கிக்கொண்டு அதை டட் டட் டட்டென்று பரபரப்பாகத் தட்டி ” ஜஸ் “ என்று முத்தாய்ப்பாக ஒரு இரும்புக் குச்சியில் தலைசாய்ந்திருக்கும் வட்டத் தகரத்தைக் கையிலுள்ள ஸ்டிக்கால் வேகமாய் அடிக்க அந்தத் தகரம் பிய்த்துக்கொண்டு மேலெழுந்து சுழன்று இசைக்குழுவின் பொறுப்பாளர் முன்கையில்பட்டு ரத்தம் கொட்ட, ஃபிலிப்ஸ் பயந்துபோய் கால்களில் இடுக்கிக்கொண்ட ட்ரம்ஸ்களோடேயே மனிதக்குரங்குபோல் கொஞ்சதூரம் ஓடிப் பின் அவற்றை அப்படியே போட்டுவிட்டுத் தலைதெறிக்க ஓடிவிட்டான். அவனைப்போல் ட்ரம்ஸ்கள் ஒன்றும் கால்களுக்கிடையில் இல்லாதிருந்தும் ஓடாது நின்ற நான்தான் மாட்டிக்கொண்டேன். ஆனாலும் அதன்பின் மானசீகமாக ட்ரம்ஸ் வாசித்து, ஏதோ ஒரு தவிர்க்கக் கூடாத சம்பிரதாயம் போல் வட்டத் தகரத்தைத் தட்டி வாயாலேயே ” ஜஸ் ” என்று அவன் சொல்லும்போது தெறிக்கும் எச்சில் நான் எவ்வளவு தூரம் தள்ளி நின்றாலும் தேடி வந்து என்மேல் விழும். அன்று, இப்போது செய்வதுபோலவே குச்சியைத் தவிர்த்து வாயாலேயே “ஜஸ்” சொல்லியிருந்தால் நிஜ ட்ரம்ஸையே தொடர்ந்து கொஞ்ச நாட்கள் வாசித்திருக்க முடியும். ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்பட்டு நிகழ் காலத்தைக் கெடுத்துக்கொள்ளும் மனோபாவம் அவனிடம் இல்லை. அவனுடன் சேர்ந்து அலைந்ததில் நானும் ” ப்ளடி , ஷிட், பிட்ச் , பெக்கர்” போன்ற வசவுச் சொற்களுடன் அப்பா யாரென்று தெரியாத பையன் மற்றும் கலவிக்கான கொச்சை ஆங்கில வார்த்தைகளையும் வெகு சாதாரணமாகப் பயன் படுத்த ஆரம்பித்ததில் எங்கள் ஆங்கிலம் கேட்டு அர்த்தம் தெரியாமல் அம்மா புளகாங்கிதமடைந்தாலும் அந்த வார்த்தைகளை நாங்கள் துப்பிக்கொண்டிருந்ததைக் கேட்ட எங்கள் அண்ணன் விட்ட அறையில் காதுக்குள் ரெண்டு நாட்கள் வண்டு ரீங்கரித்துக்கொண்டிருந்தது. இனி அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தாமலிருந்தால் மட்டுமே ஃபிலிப்ஸுடன் பேசலாம் என்று வீட்டில் கண்டிஷன் போட்டதில் எங்களின் ஆங்கில தாகம் டெம்பரிரியாக வற்றிப்போயிற்று.

வீட்டிற்கு வெளியிலேயே செருப்புப் போட்டுக்கொள்ளாமல் அலையும் எனக்கும் என் தம்பிக்கும், ஃபிலிப்ஸ் வீட்டில் எல்லோரும் வீட்டிற்குள்ளேயே செருப்புப் போட்டுக்கொண்டு நடப்பது ஒத்துக்கொள்ள முடியாததாயிருந்தது. அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போதே எங்கள் நாசிக்கு ஒவ்வாத வாசனை எங்களைத் திணறடிக்கும். ஹாலின் இடதுபுறச் சுவற்றின் நடுவில் ஏசு நாதர் சிலுவையில் தலைசாய்ந்திருக்க பக்கவாட்டில் ஒரு ஸ்டாண்டில் பெரிய மெழுகுவர்த்தி நேற்றுவரை எரிந்ததன் அழுகை வடுக்கள் முட்டி நிற்க, சோஃபி ஒரு புறாவைப்போல வீட்டிற்குள் ஏதோவேலையாய் நடந்துகொண்டிருப்பாள். முன்புறமுள்ள ஷெல்ஃபில் ஃபிலிப்ஸின் அப்பாவால் விற்கவோ அல்லது அடகுவைக்கவோ முடியாத பீங்கான் சாமான்கள் மட்டும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். முட்டை சேர்க்காத கேக்கை அவர்கள் செய்யமுடியாததால், ஃபிலிப்ஸின் அம்மா கொடுக்கும் ‘ப்ளம்’ கேக்கை நாங்கள் சாபிடமுடியாது தவிப்போம். நாங்கள் அவன் வீட்டிற்குப்போவது அந்த ஷெல்ஃபில் வைத்திருக்கும் ஒரு பொம்மையைப் பார்க்கத்தான். ஒரு பொம்மையென்றால் அது ஒன்றல்ல. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து முத்தத்திற்கான ப்ரயத்தனத்தில் இருக்கும் ஒரே அடித்தட்டிலுள்ள பொம்மை. ஃபுல் சூட்டிலிருக்கும் ஆணின் தலையிலுள்ள தொப்பி பின் பக்கம் சற்றே சாய்ந்திருக்க அடுக்கடுக்காய் சரிந்துவரும் வெள்ளையுடை தரித்த பெண் கண்களைப் பாதி மூடிக்கொண்டுஅந்த ஆணின் முத்தத்தை எதிர் நோக்கியிருப்பது போன்ற பொம்மை அது. தானே ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் “ரேடிய” பொம்மை அது. சிகப்பாய் ஒளிரும் அதன் விளிம்புகளில் நீலம் நெளிந்து கொண்டிருக்கும். என்னுடன் அந்த பொம்மையைப் பார்க்க ஒரு தடவை கிருஷ்ணன் வந்திருந்தான். கிருஷ்ணன் ஃபிலிப்ஸுடன் ஒன்றாய் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவன். சிவந்த நிறத்துடன் பூசின உடல்வாகுகொண்ட அவனின் பச்சைக்கண்கள் அந்தக்காலத்து வால்வ் ரேடியோவின் இண்டிகேட்டர் போல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அத்தகைய பூனைக்கண்கள் பளபளக்க அவன் அந்த பொம்மையை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே சோஃபி அந்தப்பக்கம் வர அவன் கவனம் கலைந்தது. அந்தப் பொம்மையை சோஃபி வரும்போது பார்த்துவிட்டதில் இவனுக்கு வெட்கம்வந்து அந்தப் பொம்மைபோல ஏற்கனவே சிவப்பாயிருக்கும் முகம் மேலும் சிவந்துவிட, சோஃபியோ கன்வேயர் பெல்ட்டில் போய்க்கொண்டிருப்பதுபோல் அவனைக் கடந்து போய்விட்டாள்.

கிருஷ்ணன் எங்களுக்கு ஒருவிதத்தில் தூரத்துச் சொந்தம். எனினும் அவன் அப்பா ஒர்க் ஷாப்பில் பெரிய உத்யோகத்தில் இருந்ததால், எங்கள் குடும்பங்களுக்கிடையில் போக்கு மாத்திரம் உண்டு வரத்து இல்லை. அவர்கள் வீடு மிகவும் பெரியது. வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் நிறைய பூச்செடிகளும் மரங்களும் நன்கு பராமரிக்கப்பட்டுச் செழுமையாய் இருக்கும். அந்தத் தோட்டத்தின் நடுவில் ஒரு சின்னக் குளத்தில் ராஜா காலத்து அழகிய பெண்ணொருத்தி சற்றே குனிந்து குடத்திலிருந்து தண்ணீரைக் கொட்டிக்கொண்டிருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்ததில் தோட்டத்திற்கு நீர் பாய்ந்து கொண்டிருக்கும். எப்போதாவது அங்கு போக நேரும்போதெல்லாம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஐந்தாவது நிமிடத்திலேயே அக்கா வெளியே வந்து என்னையும் என் தம்பியையும் ” வாங்கடா, போகலாம் ” என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவாள். கிருஷ்ணனுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்கக் கூப்பிட்டனுப்பியபோது மட்டும் ஒரு மணி நேரம் நாங்கள் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணன் வீடு ரயில்வே இன்ஸ்டிட்யூட்டிற்கு அருகிலேயே இருந்தததால், அவன் அங்கேயே அதிக நேரம் இருந்து நாங்கள் கேள்வியே பட்டிராத பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் பற்றியெல்லாம் எங்களிடம் அளந்து கொண்டிருப்பான். கிருஷ்ணனின் அக்காவும் அண்ணனும் எங்களிடம் பேசவே மாட்டார்கள். ஆனால் இவன் அது போலில்லையென்றாலும் எங்களை மட்டம் தட்டிப் பேசுவதற்குக் குறை இருக்காது.

அப்படிப்பட்டவன் ஃபிலிப்ஸின் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் எங்களுக்குப்பிடித்த அந்த முத்த பொம்மையை வெகுவாக ஸ்லாகித்துவிட்டு இதைப்போலவே நேரிலும் முத்தக்காட்சியை ரயில்வே இன்ஸ்டிட்யூட்டில் நடக்கும் புது வருடக் கொண்டாட்டங்களில் பார்க்கலாம் என்று சொன்னதில் எங்களுக்கு வெட்கமும் அதைவிட ஆர்வமும் அதிகமாகிப் போனது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ரயில்வே காலனியிலிருக்கும் பெரும்பாலான ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் இன்ஸ்டிட்யூட்டில் குழுமி பளபளக்கும் உடைகளிலும் பாலிஷ் ஏற்றின ஷூக்களிலும் துள்ளலுடன் அந்த இரவில் ஒருவரை ஒருவர் அணைத்து ஆடிக்கொண்டிருக்கும் விதத்தையும் அழகுமிக்கக் கண்ணாடிக் கோப்பைகளில் ஒயின் நாகப்பழக்கலரில் தத்தளிக்க, ஆடிக்கொண்டே ஆங்கிலோ இந்திய ஆண்களும் பெண்களும் அந்தத் திரவத்தை அருந்துவதையும் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு எல்லா விளக்குகளும் அணைக்கப்பட முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் எனவும் இவனே நிகழ்ச்சி நிரலைத் தயார்ப்படுத்தியவன் போலச் சொன்னதில் எங்கள் ஆர்வம் உச்சத்திற்குப் போய்க்கொண்டிருந்தது. ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்ததாலோ என்னவோ அவன் தமிழ் நாட்டு மக்களுக்கு நிறைய சீர்திருத்தங்களை வைத்திருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்போது வெறும் வணக்கம் மட்டுமில்லாது ஆங்கிலோ இந்தியர்களைப்போலத் தோளொடு தோள் சேர்த்து அணைத்து கன்னங்களிழைய முத்தம் பரிமாறிக்கொள்வதைச் சட்டமாகவே இயற்றி நடைமுறைப் படுத்துவது அதில் தலையாயதாய் இருந்தது. பிற்காலத்தில் அவன் பெரும் கமல் ரஸிகனாக ஆனதற்குக் காரணம் இல்லாமலில்லை.

கிருஷ்ணன் அந்த வருடத்தின் கடைசி நாட்களை எங்களுக்குக் கிளுகிளுப்பாக்கிக்கொண்டிருந்தான். ஒரு வாய்ப்பு கிடைத்தால், அந்த வருடப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ரயில்வே இன்ஸ்டிட்யூட்டிற்குள் புகுந்து டான்ஸ் ஆடிவிடத் துடிப்பாய் இருந்தான். அவனுடைய பெரியண்ணாவின் நல்ல பேண்ட் மற்றும் ஷர்ட்டை அவனுக்குத் தெரியாமல் அயர்ன் பண்ணி எடுத்து வைத்திருப்பதாகவும் ஸ்கூல் யூனிஃபார்மின் டையையே உபயோகப்படுத்தப் போவதாகவும் கோட் மட்டும்தான் எப்படியாவது தேற்றவேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தான். டவுனுக்குப் போய் டைலர் கடைகளில் வாடகைக்குக் கோட் கிடைக்குமா என்று விசாரித்ததில் சின்னப்பையனான இவனை விரட்டி அடித்துவிட்டார்கள். ஒரு டைலரிடம் விடாப்பிடியாகக் கெஞ்சிக்கொண்டேயிருந்ததில் அந்த டைலர் போலிசைக் கூப்பிட கிருஷ்ணன் ஓடியே வீடுவந்து சேர்ந்துவிட்டான்.

ஃபிலிப்ஸின் அப்பாவோ தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்ததில் அவர்கள் கிறிஸ்துமஸ்கூடச் சரியாகக் கொண்டாடவில்லை. அவர்கள் வீட்டில் போன வருடப் பழைய நட்சத்திரக்கூண்டையே எடுத்துத் தொங்கவிட்டிருந்தார்கள். நியூ இயருக்காவது புது ட்ரெஸ்ஸிற்கும் கேக் செய்யவும் செலவிற்கு அவன் அம்மா கடன் வாங்க அலைந்துகொண்டிருந்தாள். ரயில்வே இன்ஸ்டிட்யூட் முகப்பில் கலர்ப் பேப்பர்களில் தோரணமும் பலவண்ணங்களில் பலூன்களும் “ஹேப்பி நியூ இயர்” என்று ஜிகினா எழுத்துக்கள் கொண்டும் அலங்கரித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆள் “வாழமரம் கட்டணுங்களா சாமி ” எனக் கேட்டதைக் கிருஷ்ணன் ரசிக்காது அவனை விரட்டிவிட்டான்.” ஏண்டா?” என்று என் தம்பி கேட்டதற்கு ” வேஷ்டி கட்டி மேலே கோட் போட்டுக்கொண்ட மாதிரி இருக்கும் அது ” என்றான். ஃபிலிப்ஸ் ஆர்க்கெஸ்ட்ரா அருகிலேயே நின்று ரிஹர்ஸல் செய்து கொண்டிருக்கும் வாத்தியக்காரர்களையும் அவர்களது சங்கீத அசைவுகளையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தான். குறிப்பாக கிடாரிஸ்ட்டின் ஹிப்பித் தலையும் தொங்கு மீசையும் அவனை வெகுவாகக் கவர, திடீரென்று ஃபிலிப்ஸின் கவனம் மாறி , சக்ராயுதம் போலிருந்த அந்த வட்ட இரும்புத் தட்டை அவன் வெறித்துப் பார்க்க ஆரம்பித்தபோது, சர்ச்சில் நேர்ந்த “ம்யுஸிகல் ஆக்ஸிடெண்டின் ” ஞாபகம் கொடுத்த பயத்தில் நான் யாரும் பார்க்காதபோது திரைமறைவில் அதை ரகசியமாய் எடுத்துவைத்து விட்டேன்.

கிருஷ்ணன் என்னையும் டிசம்பர் மாதத்தின் கடைசி இரவன்று ரயில்வே இன்ஸ்டிட்யூட்டிற்கு வருமாறு வற்புறுத்தினான். அந்தப் ப்ரிட்டிஷ்காலக் கட்டிடம் வண்ணமயமாக்கப்பட்டு தோரணங்களும் பலூன்களும் “வா! வந்துவிடு ” என்று அந்த நாளின் கடைசி நிமிட இருள்மூழ்கலுக்குள் ரத்தம் துள்ளவைக்கும் காட்சிக்கான அழைப்பை விடுத்துக்கொண்டிருந்தது. நான் செகண்ட் ஷோ சினிமா போவதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு ஒன்பதுமணிக்கே அங்கு வந்துவிட்டேன். கிருஷ்ணனும் குடைத்துணியில் தைத்ததுபோன்ற கோட்டை எப்படியோ வாங்கி மாட்டிக்கொண்டு கோர்ட் வாசலில் அலையும் வாய்தா வக்கீல் மாதிரி அலைந்து கொண்டிருந்தான். ஃபிலிப்ஸ் குடும்பம் மற்ற ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களோடு டிரம்ஸ், கிடார் இரைச்சல்களுக்கு நடுவில் குலவிக்கொண்டிருக்க டான்ஸ் சரியாகப் பத்து மணிக்கு ஆரம்பித்துவிட நாங்களெல்லாம் வெளியே அனுப்பப்பட்டு ஜன்னல் வழியே அவர்களின் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்க கிருஷ்ணன் மட்டும் எப்படியோ உள்ளே இருந்தான். தயங்கித்தயங்கி இருள் படர்ந்த ஓரமாய் நடந்துகொண்டிருந்த அவனை சோஃபி பிடித்திழுத்து நடனமாடவைத்தது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. மணி பதினொன்றாகும்போது திடீர் என்று யாரோ விழும் சபதம்கேட்டதில் அந்த இடம் பரபரப்பானது. சற்று நேரத்தில் வெளி வந்த கும்பலில் இரண்டுபேர் ஃபிலிப்ஸின் அப்பாவைத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்க அவரை ஒரு சைக்கிள் ரிக் ஷாவில் ஏற்றிவிட்டவன் ” பார்த்துப் போப்பா, ஆளு ஃபுல்லுல இருக்கு ” என்றான். கிருஷ்ணனும் நானும் ஃபிலிப்ஸும் சோஃபியும் ரிக் ஷா பின்னால் நடந்துவர கனத்த மௌனம் எங்களைக் கவ்விக் கொண்டிருந்தது. ஃபிலிப்ஸின் அப்பாவை வீட்டிற்குள் படுக்கவைத்துவிட்டு வெளியேவரும்போது மணி பன்னிரண்டு என மாதா கோவில் மணி அடித்தது. கொஞ்ச தூரம் நடந்துவந்தபின் கிருஷ்ணன் எங்கே நான் என்று திரும்பியபோது கிருஷ்ணனின் கைகளில் சோஃபி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது நட்சத்திரக்கூண்டிலிருந்து வழிந்த சன்னமான மஞ்சள் வெளிச்சத்தில் தெரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *