புத்தாண்டுக் கொண்டாட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 12,532 
 
 

பொதுவாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அதிவீரன் வெளியே செல்வதில்லை. அதற்கு அர்த்தம் வீட்டுக்குள் கொண்டாடுகிறான் என்பதல்ல. புத்தாண்டையே கொண்டாடுவதில்லை. அதற்கும் விசேஷமான காரணம் ஒன்றும் இல்லை. அவனுக்கு கூட்டம் என்றால் பிடிக்காது. அதனால் அன்று இரவு வெளியே செல்வதில்லை; அவ்வளவுதான்.

இன்னொரு காரணம், ஆழ்வார் தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுவிடுவான். அதிவீரனுக்கு ஆழ்வாரை விட்டால் வேறு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்பதும் கூட அவன் அன்றைய இரவு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு இரவு அன்று பெஸண்ட் நகர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து விடு என்று சொல்லியிருந்தான் ஆழ்வார். புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் பொது பெருந்தேவியைக் தனியாக வீட்டில் விட்டுப் போக வேண்டாம் என்று எண்ணி அவளையும் அழைத்துச் சென்றான் அதிவீரன். அங்கே பார்த்தால் எதிர்பாராத விதமாக மீராவும் வந்திருந்தாள். மீராவை பெருந்தேவியிடம் அறிமுகப்படுத்தி வைத்து “Another version of Adhiveeran” என்றான் அதிவீரன். அப்படிச் சொன்னதற்கு ஒரே காரணம், அதிவீரன் பேசும்போது அடிக்கடி ஆண், பெண் அந்தரங்க உறுப்புகளின் பல்வேறு பெயர்களையும், கலவி குறித்த வார்த்தைகளையும் தமிழில் தன் பேச்சின் இடையே உபயோகிப்பது வழக்கம். மீறவும் அதைப் போலவே பேசுவாள். அதிலும் அவளுடைய நவநாகரீகமான ஆடை அலங்காரத்துடன் அப்படிப்பட்ட தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கும்போது ஒரு தினுசாகவே தோன்றும். ஆனால் அதிவீரனும் மீராவும் வேறொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதும், ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த மொழி பேசும் அந்தக் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெரும்பாலான பெண் அந்தரங்க உறுப்புகளின் பெயர்களையும் கலவி குறித்த வார்த்தைகளையும் தமிழில் உபயோகிப்பதை அவன் பல சமயங்களில் பார்த்து வியந்திருக்கிறேன் என்றாலும் அவனுக்குப் பிடித்த கவிஞரான பாரதியார் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடியிருப்பதால் அந்த ஜாதி விஷயத்தைப் பற்றி நாம் இங்கே அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம்.

மறுநாள் அதிவீரனுக்கு ஒரு போன் வந்தது. மீராதான் பேசினாள். மீராவின் தொலைபேசி என்னை அதிவீரன் ‘சேவ்’ செய்து வைத்துக் கொள்ளவில்லை. “உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; என்னைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அப்படியிருக்கும்போது எப்படி நீங்கள் என்னை உங்கள் மனைவியிடம் “Another version of Adhiveeran” என்று சொல்லலாம். இனிமேல் என்னிடம் இந்த மாதிரி வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்றால் மீரா. நேரில் இருந்தால் அடித்திருப்பாள் போல் இருந்தது அவளுடைய குரல்.

இதற்குத்தான் முன்பின் தெரியாதவர்களுடன் குடிக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டான் அதிவீரன்.

– ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி என்ற சிறுகதைகள் தொகுப்பில் இடம் பெற்ற கதை (டிசம்பர் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *