புது அப்பா!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 3,348 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேம்ளி கோர்ட்! குடும்ப வழக்கு மன்றத்தின் தலைவாசல் முன்…. வரவேற்பறையைப் போல் சதுர வட்ட வடிவில் அமைந்திருந்த அந்த விசாலமானப் பகுதியில்… வலக்கோடி மூலையில் நான் நிற்கிறேன்; பாதுகாவலன் சீருடையில்…! ஆம்! இங்கு சுமார் ஆறாண்டுகளுக்கும் மேலாக நான் பாதுகாவலராக பணியாற்றி வருகிறேன். சற்று நேரத்துக்கு முன்புதான் குளிர்சாதன வசதி கொண்ட அந்த ஐந்து மாடிக் கட்டிடத்துக்குள்… ரோந்து பணியில் ஈடுபட்ட நான்… குளிரில் ஊறிய உடலை சூடாக்கிக் கொள்ளத்தான், வழக்கம் போல் அங்கு நின்று கொண்டிருக்கிறேன். ‘சூரிய ஒளியில்’ என் உடல் காய எனது விழிகள் பரந்த வானத்தை மெல்ல உறிஞ்ச ஆரம்பிக்கின்றன. அந்த நீலவான வீதியில் வெண்முகில்கள் பலவித கோலங்களில் குந்தியிருப்பதைக் கண்டு என் உள்ளத்துள் மகிழ்ச்சி… குளிர்ச்சி! தவழும் வெண்முகில்கள் மீது எனது விழிகள் ஏறி குதித்து விளையாட நான் மெய்மறந்து நிற்கிறேன். வானத்தில் விழிகள் நடைபயில்வது… இதயத்துக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! ஆனால், வானத்தை அன்னாந்துப் பார்க்கக்கூட நேரமில்லாது மனித வாழ்க்கை ஓர் இயந்திர வாழ்க்கையாக அல்லவா இன்று மாறி நிற்கிறது! ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வானவீதியில் நடைபயில எனது விழிகள்… தயங்குவதில்லை ! எனது விழிகள் வானவீதியில் நடைபயில ஆரம்பித்துவிட்டால்…… கற்பனை வானிலே நான் சிறகடிக்க ஆரம்பித்து விடுவேன். இப்போதும் எனது விழிகள் வானவீதியில் நடைபயில, நான் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்.

“கா…க்கா!….க்கா!’ காக்கைகளின் கரை…யொலி….! எனது செவிபறைகளை கிள்ள… வானவீதியில் முகில்களுக்கு பின்னால் தவழ்ந்துக் கொண்டிருந்த எனது சிந்தனை தடைப்படுகிறது. வானவீதியில் நின்று…அருகில் ‘குடும்ப வழக்கு மன்றத்தின் தலைவாசலுக்கு எதிரே அமைந்திருந்த அந்த சிறிய பூங்காப்பக்கம் எனது விழிகள் தாவுகின்றன. படர்ந்த பசுமையான மரங்கள்; அம்ச மரங்களில் பூத்துக் குலுங்கும் சிறு மஞ்சள் நிற பூக்கள்! செந்நிற பூக்களை தாங்கி நிற்கும் கொடிகள்! பல வண்ண மலர்களை ஏந்தி நிற்கும் செடிகள்! அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கைகள்; அது சிறு பூங்காவாக இருந்தபோதிலும் அழகு-பூங்கா!

அந்த பூங்கா காதலர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. குடும்ப வழக்கு மன்றத்தை நாடிவருவோர்… இளைப்பாரவும் தங்கள் வழக்கு சம்பந்தமாக ஆலோசனை நடத்தவும் அது உதவியாக நிற்கிறது.

கா…!கா…கா! மீண்டும் அடித் தொண்டையில் குரலெழுப்பி காக்கைகள் என்னை அழைக்கின்றன. அந்த பூங்காவை தழுவி நின்ற எனது விழிகள், நீண்ட கொடிகளைப் போல தரையை நோக்கி சாய்ந்திருக்கும் சிறு கிளைகளை தாங்கி நின்ற… அந்த படர்ந்த மரத்தை தழுவுகின்றன. ‘முருகக் கடவுளின் கைவேல்’ போல விரிந்து குவிந்து…. முதிர்ந்த இலைகள் அடர்ந்து காணப்பட்ட, அந்த கிளைப் பக்கம், எனது விழிகள் நழுவுகின்றன. அங்கே இரு காக்கைகள்… இல்லை…! இல்லை ! மூன்று காக்கைகள்! இலைகள் அடர்ந்திருந்த அந்தப் பகுதியில்…. சிறு பள்ளம்; அதன் மீது சிறு குச்சிகளால் பின்னப்பட்ட கூடு; அதனுள் குந்தியிருக்கும் குஞ்சு! காக்கைக் குஞ்சு! என் பார்வையில் நின்று தப்பவில்லை! உடலை கூட்டுக்குள் பதுக்கி தலையை மட்டும் வெளியில் அது காட்டிக்கொண்டு நிற்கிறது…. உணவுக்காக! என் விழிகள் மலர்கின்றன; அங்கே பரவசம் ஊட்டும் காட்சி…! உள்ளத்தை தொடும் காட்சி! ஒரு காக்கை… சிறகடித்து நிற்கும் அக்குஞ்சுக்கு உணவூட்ட… உணவுண்னும் தன் குஞ்சுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது’ எனும் நோக்கில் அடித்தொண்டையில், குரலெழுப்பியபடி மற்றொரு… காக்கை, காவலுக்கு நிற்கிறது! அவ்விரு காக்கைகளுள் எது தாய்? எது தந்தை? என்பதை, என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாசவுணர்வை எல்லா உயிர்களுக்கும் இறைவன் சமமாகத்தான் படைத்திருக்கிறான். ஆனால்… மனித இனத்தில் அஃது தொடர்கதையாகவும் மற்ற உயிரினங்களில் சிறுகதையாகவும் அமைந்திருப்பதைக் கண்டு என் உள்ளம் பல வேளைகளில் வியந்ததுண்டு. ஆம்! இறப்பை எட்டிப்பிடிக்கும் வரை… மனிதன் பந்த பாசங்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறான்; ஆனால் மற்ற உயிரினங்கள்? சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்தவுடன் பந்த பாசங்களை உதறி தள்ளிவிடுகின்றன. பந்த பாசங்களுக்கு மதிப்பளிக்கும் மனித இயல்பைக் கண்டு என் உள்ளம் பெருமைப்படுகிறது. ஆனால் அதேசமயம், பிற… உயிரினங்களிடம் காணப்படாத இழிச்செயல்கள், மனித இனத்திடம் நிரம்பி வளிவதைக் கண்டு என் உள்ளம் நாணவே செய்கிறது. குறிப்பாக சபலபுத்திக்கு மனித இனம் அடிமையாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆம்! இல்வாழ்க்கை எனும் பசுமரங்களை ‘விவாகரத்து’ எனும் ‘கோடரி…’ வெட்டி சாய்த்து வருகிறது. மற்ற உயிரினங்களில்… ஆணும் பெண்ணும் ஜோடி சேர்ந்துவிட்டால் உயிர் உள்ளவரை அவை பிரிவதுமில்லை! வேறொன்றை நாடுவதுமில்லை! ஆனால் இன்று இந்நவ நாகரீக உலகில் மனித இனத்தின் நிலை என்ன?

‘ஒருத்திக்கு ஒருவன்… ஒருவனுக்கு ஒருத்தி என்று கூப்பாடு போட்டுவந்த மனித இனம்… இன்று… கல்யாணத்துக்கு முன்பே பல காதலர்கள் – காதலிகள்…! கல்யாணத்துக்கு பின்னே பல மனைவிகள் – கணவர்கள் எனும் இழிநிலையில், வாழ்க்கையை மேற்கொண்டுள்ளது. உடல் வேட்கையில் கருத்திழந்து, ஒருவரை ஒருவர் நன்று அறிந்துக்கொள்ளும் முன்னே கூடிவாழும் ஆசையில் சட்டத்தின் மூலம் இல்லற வாழ்விலே இணைகின்றனர். பிறகு ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள் எனும் முதுமொழிக்கிணங்க கருத்து வேறுபாட்டால் வாழ்க்கை கசந்து அதே சட்டத்தின் வழி விவாகரத்து மூலம் பிரிகின்றனர்!

நம் சின்னஞ்சிறு சிங்கை திருநாட்டில் கூட விவாகரத்து பிரச்சனைகள் இன்று ஈசல்புற்றுப்போல் வளர்ந்து கொண்டு வருகிறது! ‘மற்ற இனத்தவர்களுக்கு… நாங்கள் சளைத்தவர்கள்’ அல்ல என்று கூறி சவால் விடுவது போல், நம் இந்தியர் இனத்திலும் இந்த விவாகரத்து பிரச்சனை தலைதூக்கி நிற்கிறது. இதை நான் நடைமுறையில் கண்ட உண்மை ! ஆம்! இந்த குடும்ப வழக்கு மன்றத்தில் நான் கண்ட உண்மை! இங்கு நான் காலடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. திங்கள் முதல் சனி வரை பலர் இக்குடும்ப வழக்கு மன்றத்தை முற்றுகையிடுகின்றனர். ‘நாளொன்றுக்கு குறைந்தது ஐம்பது பேர்களாவது வருகின்றனர்; அவர்களுள் நம் இனத்தவர். ஓர் பதினைந்து சதவீதமாவது இருப்பர். விவாகரத்து கோரி வருபவர் எல்லோரும் ‘இளம் வயதினர்’ என்று சொல்லிவிட முடியாது; ஐம்பது வயதை தாண்டியவர்களும்… பேரன்- பேத்திகளைக் கண்டவர்கள் கூட இங்கு விவாகரத்து கோரி வருகின்றனர். இளம் ஜோடிகள்! இளம் ரத்தம்! இளமை வேகத்தில் முன்பின் யோசிக்காமல் விவாகரத்து கோருவதை சகித்துக் கொள்ளலாம். ஆனால் இல்லற வாழ்க்கை எனும் கடலிலே மூழ்கி குழந்தைகள் எனும் இன்ப முத்துக்களை அள்ளி எடுத்தவர்கள் முதுமை தழுவி வரும் வேளையில் கூட வாழ்க்கை துணை மீது குற்றஞ்சுமத்தி விவாகரத்து கோருவது வேடிக்கையாக மட்டுமல்ல வேதனையாகவும் இருக்கிறது.

கா…!கா!க்கா! காக்கை எழுப்பிய கனகடுரமான சத்தம் என் செவிகளை துளையிட விவாகரத்து விவகாரங்களில் மூழ்கி நின்ற என் சிந்தனை மெல்ல கரைகிறது. என் விழிகள் மீண்டும் காக்கைகளை கட்டியணைக்கின்றன; அங்கே ஓர் அரிய காட்சி! சற்று நேரத்துக்கு முன்பு தாய் ஊட்டிய உணவை ‘லபக்! லபக்’கென்று விழுங்கிய அக்காக்கை குஞ்சு… இப்போது உணவுண்ண மறுத்து அடம்பிடித்து நிற்கிறது! என் சிந்தனை எங்கோ சிறகடித்து பறக்க ஆரம்பிக்கிறது!

“ஊஹீம்! எனக்கு ‘மம்மு’ வேணாம் போ! என்று மழலை மொழிக்கூறி தன் பிஞ்சுக்கரங்களால் தன் சின்னஞ்சிறு வாயை பொத்திக் கொண்டு தலையாட்டி நிற்கும் மழலையையும் ‘ஏ கண்ணுல்லே! வைரமில்லே! இன்னும் ஒரே… ஓர் வாய்தாம்மா! நல்ல பிள்ளையில்லே வாயை திறம்மா! ஆ…! ஆ!! என்று தன் கைச்சோற்றை தன் மழலைக்கு ஊட்டிவிடும் ஆசையில் தன் மழலையோடு போராட்டம் நடத்தும் தாயையும் பார்த்திருக்கிறேன். பந்த பாசங்களில் ஊறிப்போன மனிதர்களின் இயல்பு அது! ஆனால் ஓர் பறவை காக்கை. உண்ண மறுக்கும் தன் குஞ்சுக்கு உணவூட்ட போராட்டம் நடத்துவதைக்கண்ட என் உள்ளம் நெகிழ்கிறது. தாய்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல… எல்லா உயிர்களுக்கும் பொது வானதுதான் என்பதை அந்த… ‘காகம்’ உணர்த்துகிறது. ‘வேணாம் பாட்டி! போதும்’ வயித்தை பாருங்க….! வெடிச்சிடும்! ‘ஒரு சிறுவனின் கீச்சுக்குரல்!’ என் செவிகளை ஊடுறுவுகிறது. காக்கைகளை அணைத்து நின்ற எனது விழிகள் குடும்ப வழக்கு மன்றத்தின் தலைவாசலுக்கு வருகிறது. என்னை ஒட்டினாற்போல் இருவர் நின்று கொண்டிருப்பதை அப்போதுதான் கவனிக்கிறேன். அவர்களது கைவிரல்களுக் கிடையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கிறது. வானில் முகத்தை புதைத்துக் கொண்டு முதுகை எனக்கு காட்டியபடி நிற்கின்றனர். சொல்லி வைத்தார்போல் இருவரும் மஞ்சள் வண்ண டி-ஷர்ட்டும், கருநீல வண்ணத்தில் ஜீன்சும் வெள்ளை காலணியும்… ஆரஞ்சு வண்ணத்தில் சிகை அலங்காரம் செய்திருக்கின்றனர். நிச்சயம் இவர்கள் அண்ணன் தம்பிகளாக இருக்க வேண்டும்! அல்லது உற்ற நண்பர்களாக இருக்க வேண்டும்! இங்க்! இங்க்! சிகரெட்டை ஆழமாக உறிஞ்சி ஆகாயத்துலே புகைவிட்டுக் கொண்டிருக்கின்றன; இல்லை… இல்லை எமனுக்கு தூது…தூதனுப்பிக் கொண்டு நிற்கின்றனர். ஆம்! ‘புகைப்பிடித்தல் எமனுக்கு அழைப்புவிடும் செயல்தானே! இதை நன்கு அறிந்திருந்தும் இப்பழக்கத்தை ‘கைவிடமாட்டேன்’ என்று அடம்பிடிப்போரை என்ன… சொல்வது…?

“என்ன? கீதா! மணி 9.30 மணி ஆகுது…. இன்னும் பாமாவை காணோம். எனக்கு நம்பிக்கை… யில்லை; அவள்… வரமாட்டாள்!”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னேதான்… டெலி போனுலே…. அவள் என்னோடு பேசினாள்ர டாக்ஸியிலே வந்துகிட்டிருக் கலாம்! அவளுக்கு அப்பாய்மெண்ட் 10 மணிக்காம்! பாமா!”

”அவருக்கு டைவர்ஸ் கிடைச்சுட்டால்…? நம்ப மாதிரி அவளும் சுதந்திரப் பறவையாய் மாறிடுவாள்! பிறகு ஒரே என்ஞ்ஜோய்தான்..! ஹா…ஹா” கலகலவென சிரிப்பொலி… என்னை சரிக்கு விழவைக்கிறது. இத்தனை நேரமும் இதுங்களை ஆம்பளைங்கன்னுலே நினைச்சேன்! ஏ கண்களும் இதுங்களை ஆம்பிளைங்களாகத்தானே எனக்கு காட்டிச்சுங்க! என் கண்களே ஏ காலை வாரிவிட்டுடுச்சுங்களே! கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்! என்று அன்று அந்த கவிஞர் சொன்ன வரிகள் எவ்வளவு உண்மையான தத்துவ வரிகள்! பெண்களை ஆண்களாக கருதிய என் அறியாமையை எண்ணி, என் மனம் வெட்கப்படுகிறது. “ஏய்..கீதா…!! பாமா!! நான் வந்துட்டேன்! ஒரு பெண்… உரத்தக் குரலில் கூவுகிறாள். வானத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிகரெட் புகையை ஊதித்தள்ளிக் கொண்டிருந்த அந்த இரு பெண்களும் அந்த கூவலைக் கேட்டு…. தங்கள் முகத்தை வானிலிருந்து பிடுங்கி, குடும்ப வழக்கு மன்றத்தின் தலைவாசலை ஒட்டி அமைந்திருந்த அந்த சிறு சாலைப்பக்கம் பதிக்கின்றனர். ‘பிரேமா வந்துட்டியாடி!’ என்று ஒருவன் முகமெல்லாம் பல்லாக… கூற ‘ஆமாண்டி!!’ என்று மற்றவள் ‘ஜால்ரா’ போட, அந்த அமைந்திருந்த ஒருவழி சாலைக்கும் இடையில் அமைந்திருந்த அந்த சிறு படிக்கட்டுகளில் ‘தடதட’வென்று இறங்குகின்றனர். என் விழிகளும் செவிகளும் அவர்களை பின் தொடர்கின்றன.

படிக்கட்டுகளை ஒட்டினாற்போல்…. ஒரு நீலநிற டாக்ஸி… அந்த டாக்ஸியிலிருந்து இறங்கிய பாவனையில் ஒரு இளம் பெண்! சேலை கடைகளில் காட்சியளிக்கும் ‘சொகுசு பொம்மையை’ போல காட்சியளிக்கிறாள்! துள்ளி குதித்துக் கொண்டு ஓடிய அந்த புகைக்கும் ராணிகள் இருவரும் அந்த… அந்த சேலை ராணியின் கரங்களை இறுகப்பற்றி கொள்கின்றனர். ‘என்ன பிரேமா! உறுதியான முடிவோடுதானே வந்துருக்கே? விவாகரத்து மனுவிலே கையெழுத்து போடறதுக்கு முன்னே நல்லா யோசிச்சுப் பார்த்துக்கோ பிரேமா! உன் வாழ்க்கையை நாங்கதான் கெடுத்தோம்ன்னு பின்னாலே எங்களை நீ பழிச் சொல்லக் கூடாது! இல்லற வாழ்க்கை இனிமையான வாழ்க்கைன்னு நினைச்சுதான் எங்கம்மா பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கிட்டேன்; ஆரம்பத்திலே அந்த வாழ்க்கை இனிமையானதாகத்தான் இருந்துச்சு! பிறகுதான் தெரிஞ்சுது அந்த வாழ்க்கை பெண்ணை அடிமைப்படுத்துற வாழ்க்கையன்னு! ‘கணவன்’ எனும் போர்வையிலே நம்ப சுதந்திரத்தை பறிக்கிறானுங்க! அப்படிப்பட்ட அடிமை வாழ்வு தேவையில்லை…ன்னு முடிவுக்கு வந்துதான்… விவாகரத்து மூலமாய் கணவரை தூக்கியெறிஞ்சேன்! சுதந்திர பறவையாய் இன்ப வானிலே சிறகடித்து பறந்தேன்! என்னைப் போலவே பாமாவும் கணவனை தூக்கியெறிஞ்சிட்டு என்னோடு சேர்ந்துக்கிட்டாள். இப்போ நீயும் உன் கணவனை விவாகரத்து செஞ்சுட்டு எங்களோடு வரப்போறே! இனி ஜாலிதான்’ என்று அந்த வாழாவெட்டிகளில் ஒருவள் கூற… ‘நானும் நல்லா யோசித்துப் பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்தேன்; நாமே இந்த உலகத்துலே பிறந்தது… சுதந்திரமாய்… இன்பமாய் வாழத்தான்! கணவன் – குழந்தை – குடும்பம் என்று இத்தனை நாள் நான் வாழ்ந்த அடிமை வாழ்வு போதும்! அந்த நரக வாழ்க்கை வேணாமுன்னுதான் இப்போ இங்கே வந்துருக்கேன்! இனி என் வழி… உங்க வழி” என்று அந்த சேலைக்கடை பொம்மை, ‘இந்த சமுதாயத்தில் நானும் உங்களைப்போல ஓர் நவீன கால வாழா வெட்டியாய் வாழப்போறேன்னு பெருமிதத்தோடு கூற…. மூன்று மூதேவிகளும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி… மகிழ்ந்தபடி குடும்ப வழக்கு மன்றத்துக்குள் நுழைய, என் உள்ளத்தில் அதிர்ச்சி… வியப்பு! ‘குடும்ப வாழ்க்கைத்தானே பெண்களின் கற்புக்கு பாதுகாவலாகவும்… ஒழுக்கத்துக்கு வேலியாகவும் திகழ்கிறது. அதே குடும்ப வாழ்க்கைதானே… ‘மனைவி’, ‘தாய் எனும் உயரிய பதவிகளை கொடுத்து அவர்களுக்கு பெருமை சேர்க்கிறது…!’ என் மனக்கடலில் அலைமோதிய எண்ண அலைகள் அந்த மூதேவிகளை சாடுகின்றன. மலர்களுள் விஷத்தன்மை உள்ள மலர்களும் இருக்கத்தானே செய்கின்றன. அதேபோல் பெண்களில் இதுங்களை போல் சாக்கடை உள்ளம் கொண்ட பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்!

‘பாட்டி! போதும் பாட்டி! வேணாம்! என் வயிறு பெரிசாயிடுச்சு…! வெடிச்சுடும் பாட்டி!’ சிறுவனின் சிணுங்கள் மீண்டும் என் செவிகளில் பாய்ந்து என் உள்ளத்தை கிச்சுகிச்சு மூட்டுகிறது. ‘வயிறு வெடிச்சிடும்!’ என் உதடுகள் முணுமுணுக்க மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன். அன்று என் சின்னஞ்சிறு வயதில் நான் கேட்ட… சொன்னா வார்த்தைகள். என் தாயார் வலுக் கட்டாயமாக எனக்கு உணவு ஊட்டும்போதெல்லாம் என் வயிற்றை காட்டி நான் கூறிய வார்த்தைகள்! அன்று சர்வசாதாரணமாக நடமாடிய வார்த்தைகள்! இன்று கேட்பதற்கு அரிதாக இருக்கிறது. ‘வயிறு வெடிச்சிடும்…! பல ஆண்டுகளுக்கு பிறகு என் செவிகளில் புகுந்து என் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறது. அந்த வார்த்தைகளை கொட்டிய சிறுவனை தேடி, என் விழிகள் சுழலுகின்றன. அதோ! அந்த சின்னஞ்சிறிய படிக்கட்டுகளில் பூங்காவை நோக்கியபடி ஒரு பெண்மணி! அமர்ந்திருக்கிறாள்; அவரது மடியில் ஓர் சிறுவன்! பஞ்சாபி உடை! இரட்டை ஜடை! காதுகளில் வளையங்கள்! அந்த பெண்மணி அச்சிறுவனின் தாயாராக இருக்குமோ? இருக்க முடியாது! அந்த சிறுவன்தான் அப்பெண்மணியை ‘பாட்டி’ என்று குறிப்பிட்டானே! இந்த நவநாகரிக உலகில் பாட்டிமார்களும் இளமை கோலத்தில் உலாவரத்தானே பெரிதும் விரும்புகின்றனர்.

‘வேணாம்… பாட்டி! என்னை விடு! பாட்டி! அந்த பெண்மணியின் மடியிலிருந்து அந்த சிறுவன் எழுகிறான். ‘வயிறு வெடித்து விடும்’ என்று கூறிய அச்சிறுவனை நோக்குகிறேன்; எங்கோ பார்த்த முகம் போல் தெரிகிறது. எங்கே? சிந்திக்கிறேன்!

“நீதானே… இந்த கறிபாவை வாங்க சொன்னே? இன்னும் கொஞ்சம்தான்! சாப்பிட்டு முடிச்சிடு… ராஜா!” அந்த பெண்மணியின் குரல்…! என் இதயத்தில் கலக்கத்தை எற்படுத்துகிறது; அந்தக் குரல்? அந்த பொம்பளைக் குரல், மாதிரி இருக்கே? ஒருவேளை இது அந்தப் பொம்பளையாய் இருக்குமோ?” என் இதயத்தில் கேள்வி எழுந்து அடங்கும் முன்… படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்த பெண்மணி உடைகளை சரிசெய்தபடி படிக்கட்டில் நின்று எழுகிறாள்.

‘வாங்கப் பாட்டி! அம்மாவை போயி பார்க்கலாம்!’ அந்தச் சிறுவன்தான் அந்தப் பெண்மணியின் கரத்தைப் பற்றியபடி அழைக்கிறான். கையிலிருந்த மிச்சமீதி… ‘கறிப்பாப் துண்டை அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போடாமல் அலட்சியமாக சாலைப்பக்கம் தூக்கி எறிகிறாள்; தூக்கியெறிந்த மறுகணமே மின்னல் வேகத்தில் பறந்து வந்த காக்கை ஒன்று அந்த கறிப்பாப் துண்டை பற்றி… பறந்து செல்கிறது. சீக்கிரம் பாட்டி! வா… உள்ளே போலாம்! ‘கறிப்பாப்போடு பறந்து செல்லும் அக்காக்கையை வெறித்து நோக்கி நிற்கும் அப்பெண்மணியை… பேரன் கரம் பற்றி அழைக்கிறான்; அந்த பெண்மணியின் முகத்தை காண என் விழிகள் கலக்கத்தோடு காத்திருக்கின்றன. “சரி வா! ராஜா உள்ளே போகலாம்” என்றபடி அப்பெண்மணி…. குடும்ப வழக்குமன்ற வாசல் பக்கம் திரும்புகிறாள்… ‘என் விழிகளிலே அதிர்ச்சி! ‘சந்தேகமே… யில்லை! அந்தப் பொம்பளைதான்…! அந்த சனியன்தான்!’ வெறுப்போடு என் மனம் முணுமுணுக்கிறது. ‘இந்த சனியனின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்!’ என் மனம் என்னை எச்சரிக்க; பக்கத்தில் நின்ற தூணின் பின்னால் மறைந்துக் கொள்கிறேன். நீலவண்ண கடலைப்போல பரந்து கிடக்கும் வானிலே மீண்டும் எனது விழிகளை புதைத்துக் கொள்கிறேன்.

பெண்மைக்கு என்றுமே மதிப்பு கொடுப்பவன் நான்; என் ஐம்பது ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தில் எந்த பெண்ணின் மீதும் நான் கோபத்தையோ வெறுப்பையோ காட்டியது கிடையாது; கடிந்து கொண்டதும் இல்லை! பெண்ணினத்தை போற்றினேன்…. வணங்கினேன். ஆனால் இந்த குடும்ப வழக்கு மன்றத்துக்குப் பாதுகாவலராக வந்த பிறகுதான் பெண்களின் மேல் நான் கொண்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஆம்! மலர்ச்சோலையில் வண்ண மலர்களும் நறுமணம் வீசும் மலர்களும்தான் நிறைந்திருக்கும் என எண்ணியிருந்தேன்; ஆனால் இந்த குடும்ப வழக்கு மன்றத்துள் பாதுகாவலராக நான் நுழைந்த பிறகுதான் உண்மை புரிந்தது. ஆம்! பூஞ்சோலையில் மணம் வீசும் மலர்கள் மட்டுமல்ல; நச்சவரங்களும் அங்கு உலாவவே செய்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த குடும்ப வழக்கு மன்றத்துக்கு விவாகரத்து கோரி மனு செய்ய வருவோரில் நூற்றுக்கு தொண்ணூரு சதவீதம் பெண்கள்; விவாகரத்து அவர்கள் கூறும் ஒரே காரணம்… ‘என் புருஷன் இன்னொருத்தியை வச்சுருக்கான்! என்பதுதான்! பெரும்பாலோர் கூறுவது போலிக் குற்றச்சாற்றாக இருந்த போதிலும் ‘இவள் இவ்வளவு தூரம் வந்த பிறகு… இனியேன் இவளோடு வாழ வேண்டும்’ எனும் எண்ணத்தில் ஆண்கள் ஒதுங்கிக் கொள்வதாலும் வக்கீல்களின் வாதத்திறமையாலும் பெண்கள் தாங்கள் நினைத்ததை…. எளிதாக சாதித்துக் கொள்கின்றனர். இங்கு விவாகரத்து மனு செய்ய வரும் பெண்கள் யாரும் தலைவிரி கோலமாக அழுது புலம்பிக் கொண்டு வந்ததை நான் பார்த்ததேயில்லை! ‘ஜிகினா ஜொலிக்கும் காகிதப் பூக்களைத்தான் பார்த்திருக்கிறேன்; அதுவும் மணமகனைப் பார்க்க வருவது போல உற்றார் உறவினர் புடைசூழ குதூகலத்தோடு வருவதை பார்க்கும்போது வேதனை என் நெஞ்சை அழுத்தும்! ‘விவாகரத்து’ எனும் சொல்லைக் கேட்டாலே அஞ்சி நடுங்கிய பெண்கள் இன்று அதை… விவாகரத்தை… அல்வா-துண்டை சுவைத்து ருசிப்பது போல சுவைக்கின்றனர். விவாகரத்தால் விளையப்போகும் தீமைகளை இளமைத்துடிப்பில் நிற்கும் பெண்கள் உணர்வதே… யில்லை!’

“டேய்… ராஜா! ஓடாதே…!! கணீர் குரல் என் செவிப் பறைகளில் பாய அந்த சனியனின் முகம் ஆம்! அந்த பொம்பளைக்கு என் மனம் மரியாதை கொடுக்க விரும்ப வில்லை ! குழிக்குள் விழ விரும்பும் மகளை தடுத்து நிறுத்தாமல், மகள் குழிக்குள் விழ உதவி செய்யும் தாய்க்கு எப்படி மரியாதை கொடுப்பது? இந்த வழக்கு மன்றத்துக்கு பலபேர்கள் வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்… சில சமயங்களில் பழைய நண்பர்களின் முகங்களைக்கூட காண வேண்டிய சூழ்நிலை ஏற்படும்! ஆனால் பாதுகாப்பு அதிகாரியாக நான் பணியாற்றுவதால்… யாரிடமும் அனாவசியமாக பேச்சு வைத்துக் கொள்வதில்லை! ஆனால் சிலர் குறிப்பாக தந்தைமார்கள் தாய்மார்கள் வந்து தங்கள் மனபாரத்தை என்னிடமோ அங்குள்ள மற்ற பாதுகாப்பு அதிகாரிகளிடமோ இறக்கி வைத்துவிட்டுச் செல்வர். அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி பொம்மையாக இருக்கணுமே தவிர, ஆலோசனையோ அறிவுரையோ சொல்ல ஆரம்பித்தால் அது பிறகு நமக்கு தலைவலியை கொடுத்துவிடும். பொதுகாக குடும்ப வழக்கு மன்றத்தில், தமிழர்களை கண்டால் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்வேன்; இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் இங்கே நின்று கொண்டு வானத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன.

தம்பீ! என்று ஓர் கணீர் குரல் என்னை அழைக்க… திடுக்கிட்ட நான் சட்டென்று எனது விழிகளை வான் பரப்பிலிருந்து பிடுங்கி என்னருகே கொண்டு வந்தேன்; என் முன்னே வெற்றிலை கறை படிந்த பற்களைக் காட்டியபடி ஓர் 45 வயது மதிக்கத்தக்க ஓரு பெண்மணி அருகில் அழகோவியமாக ஓர் இளம் பெண்; அவளது வலக்கரத்தை பற்றியபடி ஓர் சிறுவன்; ‘யார் இவர்கள்?’ என்ன கேட்கப் போகிறார்கள்? கேள்விக்குறியோடு அவர்களை நோக்கினேன். ஹி…ஹி…. என்று ஓர் அசட்டு சிரிப்பை அள்ளி வீசிய அப்பெண்மணி, ‘தம்பீ! இதுதான் பேம்ளி கோர்ட்டா? என்று வினவ, நானும் ‘ஆமாம்’ என்று தலையசைத்தேன். ‘என் மவள் விவாகரத்து செய்யப் போறாள்; யாரைத் தம்பி போயி பார்க்கணும்? என்று அப்பெண்மணி வினவ, என் உள்ளம் வியந்தது. பொதுவாக பெண்கள் ‘விவாகரத்து’ என்று இங்கு வந்தாள்… புருஷன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்தருக்கிறாள் என்று பழி சொல்வார்கள். ஆனால் இந்தப் பெண் இவ்வளவு லட்சணமாக இருக்கும்போது இவள் புருஷன் வேறொரு பெண்ணை நாடியிருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ‘என்னா தம்பீ யோசிக்கிறீங்க. என்று அப்பெண்மணி வினவ, நான் சுதாரித்துக் கொண்டேன். அவர்களை வாசல்வரை அழைத்துச் சென்று உள்ளே செல்லும் வழியை சுட்டிக் காட்டிவிட்டு மீண்டும் வாசலுக்கு வந்தேன். பிறகு அப்பெண்மணி ஒரு பதினொரு மணி வாக்கில் தன் பேரனோடு வந்து, ‘தம்பீ! என் பேரனுக்கு பசிக்குது, இங்கு ஏதாவது காப்பிக்கடை – சாப்பாட்டுக்கடை ஏதாவது இருக்கா? தம்பீ! என்று வினவ – எதிரே இருந்த சாப்பாட்டுக் கடையை சுட்டிக்காட்டினேன், வாசலின் வலப்புற கௌண்டரில் இரண்டு மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் நின்று கொண்டிருக்க, அவர்களிடம் கேட்காமல் என்னிடம் வந்து கேட்டது எனக்கு சற்று வெறுப்பாகவே இருந்தது. பொதுவாக வேலை நேரத்தில் நான் யாரிடமும் அநாவசியமாக பேசுவது கிடையாது; குறிப்பாக தமிழர்களிடம்! பேச்சுக் கொடுத்தால் உறவு கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் நான் சற்று ஒதுங்கியே நிற்பேன்; ஓர் இரண்டு மணி வாக்கில் தன் மகள் பேரனோடு அந்த பெண்மணி குடும்ப வழக்கு மன்றத்தை விட்டு வெளியிலே வர – நான் இதே தூணின் மறைவில் மறைந்து கொண்டேன். ஆனால் அந்த பெண்மணி என்னை தேட… பாதுகாவலர் ரஹீம் என்னை காட்டிக் கொடுத்துவிட்டார். தம்பீ! வந்த வேலை முடிஞ்சிடுச்சு! எங்க வக்கீல்கிட்டே என் மவள் விவரமாய் எழுதிக் கொடுத்துட்டாள்! தகுதியில்லாத அவனோடு வாழறதை விட சாவதே மேல்ன்னு ‘என் மவள் உறுதியாய் சொல்லிட்டாள் தம்பீ; வக்கிலும் சொல்லிட்டாரு! இந்த ஓர் பயிண்டை வச்சே எளிதா… விவாகரத்தை வாங்கிடலாமுன்னு? ஆனா அந்தப் பையன் மட்டும் விவாகரத்து பத்திரத்திலே கையெழுத்து போடமாட்டேன்னு சொன்னால்தான் கொஞ்சம் பிரச்சனை எழும்’ என்று அந்தப் பெண்மணி சொல்லி முடிக்க… ‘அவனது முகத்திலே காரி துப்பிட்டேன்! அவன் மானங்கெட்டு போயி இன்னும் என் கூட வாழ விரும்பி டைவார்ஸ் பத்திரத்துலே மட்டும் கையெழுத்து போடலைன்னா… நேரே போயி அவனை விளக்கமாற்றாலே நாலு சாத்து சாத்திட மாட்டேன்! இல்லேன்னா என் பாய்பிரண்ட் ராஜாக்கிட்டே சொல்லி, அவனை உண்டு இல்லேன்னு ஆக்கிடமாட்டேன். பொன்னப்பயல்! என் பக்கத்துலே கூட நிற்கத் தகுதியில்லாத ராஸ்கல்! எப்படியோ மாயமந்திரம் செஞ்சி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்! குரங்கு மூஞ்சி!” என்று அந்த அழகி அசிங்கமாக பேச நான் விக்கித்துப் போனேன்; முக லட்சணத்தைப் பார்த்து யாரையும் எடைப்போட கூடாது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்! அந்த பெண்ணின் முகத்தில் அழகு இருக்கிறது; ஆனால் உள்ளம்… எண்ணம்… சாக்கடையாய் இருந்தது. முந்தானையில் இன்னொருவனை முடிஞ்சி வைச்சுக்கிட்டுதான்… முதல் கணவனை… தாலிக்கட்டிய கணவனை ஐந்தாண்டுகளுக்கு மேலாக கணவனாக வாழ்ந்தவனை எட்டி உதைக்க நினைக் கிறாள்! என் முன்னே நிற்பது… தாய் எனும் கருநாகமும் மகள் எனும் கண்ணாடி விரியனும்’ என்பதை உணர்ந்து கொண்டேன்! அதன் பிறகு இரண்டு மூன்று முறை குடும்ப வழக்கு மன்றத்துக்கு அந்த சனியன்கள் வந்து சென்றன. அவர்களது கண்ணில் படாது நான் தப்பித்துக் கொண்டேன்.

இன்றும் சனியன்கள் இங்கு வந்திருக்கின்றன; ஒரு வேளை இன்று விவாகரத்து பத்திரம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்குமோ…? நான் எண்ணி முடிப்பதற்குள் மீண்டும் அந்த கணீர் குரல் என் செவிகளை கிள்ளுகிறது.

“அம்மா! சாட்சி ரூம்லே இருக்காங்க ராஜா! அம்மாவுக்கு இன்னைக்கு ‘டைவர்ஸ் கிடைச்சாலும் கிடைச்சிடும். ‘வா! இப்படி வந்து உட்காரு!” தலைவாசலின் வலப்பக்கம், தன் பேரனோடு அந்த சனியன் அமருகிறது; என் உள்ளத்தில் வெறுப்பு; உட்காருவதற்கு வேறு இடம் கிடைக்க வில்லையா! நான் எப்படி இப்போ வழக்கு மன்ற கட்டிடத் துக்குள் நுழைவது? முடியாது! அந்த சனியனை மீறி உள்ளே நுழைய முடியாது! பேசாமல்… அதுங்க போறவரை இந்த தூணின் பின்னாலேயே மறைந்து நிற்க வேண்டியதுதான்! என் தலையெழுத்தை எண்ணி நான் நொந்து கொள்கிறேன்!

அம்மா! அம்மா! என்று கூவியபடி ஓர் கடிதத்தோடு அந்த கண்ணாடி விரியன் குடும்ப வழக்கு மன்றத்திலிருந்து குதூகலத்தோடு வெளிப்படுகிறது. ‘என்னாம்மா? ராதா! என்ன…. ம்மா ஆச்சி? ‘அந்த சனியன் வினா-தொடுக்க, வெற்றி!

வெற்றி….ம்மா! எனக்கு விடுதலை கிடைச்சிடுச்சி! இனி நான் சுதந்திரப் பறவை! என்றபடி அந்தப் பெண் துள்ளிக் குதிக்கிறாள். “ஏ மவளுக்கு விடுதலை கிடைச்சிடுச்சி! டேய்! ராஜா! உன் அம்மாவுக்கு விடுதலை கிடைச்சிடுச்சு! உன் அம்மா உனக்கு புது அப்பாவை கொடுக்கப் போறாள்’ என்ற அந்த சனியன் கூற புது அப்பாவா? ஹாய்! எனக்கு புது அப்பா…! எனக்கு புது அப்பா! விவரமறியா அச்சிறுவன் மகிழச்சியோட துள்ளிக் குதிக்கிறான். சீக்கிரம் வாம்மா! இந்த நல்ல விஷயத்தை அவரிடம் சொல்லணும்.

அந்த பூங்காவை ஒட்டி அமைந்த அந்த நடைப் பாதையில் ஒரு நஞ்சுள்ளம் கொண்ட நாகங்களோடு அச்சிறுவன் புது அப்பா..! எனக்கு புது அப்பா! என்று கூறியபடி துள்ளிக்கொண்டு செல்கிறான். அச்சிறுவனின் துள்ளாட்டத்தைக் கண்டு என் ஈரக்குலையே நடுங்குகிறது.. பயமறியா கன்று என்பார்களே… அது இதுதானா? இல்லை! இது பயமறியா கன்றல்ல! விவரமறியா கன்று! புதிதாக அப்பா வேடம் போட்டு வருபவன் உண்மையிலேயே தன்னை நேசிப்பானா? அல்லது தாயின் உடலை மட்டும் நேசிப்பானா? விவரமறியாது கருநாக நஞ்சை நெஞ்சிலே வைத்திருப்பவளின் பின்னால் கன்று துள்ளிக் கொண்டு போவதைக்கண்டு என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஓர் ஈர இரக்க பெருமூச்சு எழுந்து காற்றிலே கலக்க, என் விழியோரங்களில் கண்ணீர் துளிகள் கண் சிமிட்டுகின்றன. “முருகா! அந்த சிறுவனை நீ தான் காப்பாற்ற வேண்டும்! அந்த சிறுவனின் எதிர்காலத்தை எண்ணி என் உள்ளம் இறைவனை வேண்டுகிறது.

இந்த சமுதாயத்தில் புது அப்பாக்களால் புது அம்மாக்களால் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம், சூன்யமாகிறது?

– புது அப்பா!, முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

1 thought on “புது அப்பா!

  1. சிறப்பான கதை. புது அப்பாக்களால் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பற்றி நிறைய செய்திகளை நாளேட்டில் படிக்கிறோம். பாவம் இந்தப் பிள்ளைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *