புதுமனைவி மோகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 7,109 
 
 

வனஜாவுடன் திருமணம் ஆனபோது எனக்கு இருபத்தைந்து வயது.

நான் உடனே பெங்களூரில் தனிக் குடித்தன வாழ்க்கையைத் தொடங்கி விட்டேன். கல்யாணமானவுடனே மனைவியுடன் தனிக்குடித்தன வாழ்க்கை கிடைப்பது அதிர்ஷ்டமானது.

தாம்பத்ய வாழ்க்கையின் ஆரம்ப நாட்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அற்புதமானவை. மனைவியின் சின்னச்சின்ன பார்வைகள்கூட கணவனை மயங்க வைப்பவை.

மனைவியின் கை வளையல்கள்களின் ஒலி, கால் கொலுசுகளின் சப்தம்…எல்லாமே காதல் பொதிந்தவை. மனசும் உடம்பும் எந்த நிமிஷமும் பாலுறவு மேற்கொள்ள, நீருக்குள் வளர்ந்து கிடக்கும் தாவரங்கள் போல நிசப்தமான சிலிர்ப்பில் போதை ஏறிப் போயிருக்கும். அந்தப் போதைக்கு இளமையிலேயே கிடைக்கிற தனிக்குடித்தன வாழ்க்கை மிகச் சுதந்திரமான ஒரு வடிகால்.

அந்தச் சுதந்திரத்தை என் மனைவி வனஜாவுடன் விரும்பிய போதெல்லாம் நான் பகிர்ந்து கொண்டேன். ஆனால் எத்தனை பகிர்ந்து கொண்டால்தான் என்ன? வெயில் காலத்தில் எவ்வளவு தண்ணீர் பருகினாலும் தாகம் தீர்ந்தா போகிறது? அது போலத்தான் தாம்பத்ய வாழ்வின் ஆரம்பக் காலப் பாலுறவு மோகம்.

அலுவலகப் பணியில் ஆழ்ந்திருக்கும் போதுகூட மனைவியின் அருகாமை மனதில் வந்து வந்து போகும். உடனே வீட்டுக்குப் போக உடம்பும் மனசும் ஏங்கும். பல தினங்களில் அலுவலகம் போகாமல் வீவு போட்டுவிட்டு மனைவியுடன் இருக்க விருப்பப்பட்டு வீட்டில் தங்கிவிடுவதும் உண்டு.

அப்படியெல்லாம் ஆரம்ப நாட்களில் ஒரு உணர்வுப் புயலில் நான் சுழன்றாடினாலும் திருமணத்திற்கு முன் பாலுறவிற்காக நான் தவறான எந்த வழியிலும் சென்றதில்லை. உருவம் இல்லாமல் அந்த உணர்வுகள் இதயத் துடிப்பில் கலந்திருந்தாலும் கூட, வடிகால் தேடுகிற அளவிற்கு உணர்வுகள் எனக்குள் பொங்கி வழிந்ததில்லை. இயல்பான தன்மையாக மட்டும்தான் அவ்வுணர்வுகள் எனக்குள் கலந்திருந்தன.

காரணம் திருமண வாழ்க்கைக்காக ஏங்கிப்போகிற காலதாமதம் எனக்கு ஏற்படவில்லை. ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டிருந்து, அந்த உணர்வுகள் உள்ளுக்குள் விரைந்து சுழலத் துவங்கியிருந்தால் அதற்கான பெண்களை நோக்கி நானும் போயிருக்கலாம். கிடைக்கத் தாமதமாகிக் கொண்டிருக்கின்ற விஷயத்தை அனுபவிக்கத் துடித்து ஓடியிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் அம்மாதிரி ஓடிக் கொண்டிருந்தார்கள். ஓட்டத்தில் கிடைத்த அனுபவங்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி சிரித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த அனுபவசாலிகள் எல்லோருமே கல்யாணத்திற்காக மட்டுமே ஏங்கவில்லை. ஏனெனில் அவர்களில் கல்யாணமாகி குழந்தை பெற்றவர்களும்கூட இருந்தார்கள்.

கல்யாணமான புதிதில் இதைப்பற்றி ஆச்சர்யத்துடன் வனஜாவுடன் நான் பேச முற்பட்டபோது, “வேண்டாம் இந்தப்பேச்சு” என்று ஒருவரியில் என்னை அடக்கிவிட்டாள். அதனால் நான் அந்தமாதிரி விஷயங்களை அவளிடம் பேசுவது கிடையாது. வனஜாவின் இந்தக்குணம் எனக்கு மிகவும் பிடித்தது.

ஆனால் எனக்குள் அந்த ஆச்சர்யமான கேள்வி மட்டும் பெரியதாக எழும்பி நின்றது. குழந்தைகள் பிறந்த பிறகும்கூட சில ஆண்கள் ஏன் தப்பான பெண்களை நாடிச் செல்கிறார்கள்? இதை அப்படிப்பட்ட நடத்தை கொண்டிருந்த சில நண்பர்களிடம் நிஜமான ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

சிலருடைய பதிலில் ஆண் என்ற அகம்பாவம் தெரிந்தன. வேறு சிலரின் பதிலில் பணமும் இளமையும் இருப்பதால் வாழ்க்கையை மனம் போகிறபடி அனுபவித்துப் பார்க்கிற அலட்சியமும் உல்லாசமும் தெரிந்தன. நான் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்கிற ஏளனமும் அவர்களின் பதிலில் தொனித்தது.

ஆனால் நான் மாசுபடாத பனி ஸ்படிகம் போன்ற உடல் நிலையோடு எனது இருபத்தைந்தாவது வயதில் வனஜாவை என் மனைவியாகப் பெற்றேன் என்று நினைத்தபோது சந்தோஷத்தில் இறுமாப்படைந்தேன்.

திருமணம் ஆனதும் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வியப்பு மனித உடம்புதான். மனிதனின் உடல் உள்ளுக்குள் எத்தனை ரகசியமான உரம் கொண்டிருக்கிறது? சின்னக் கடல் பொங்கினாற் போலத்தான் பொங்குகிறது கலவியின் அந்தக் கணங்களில் சப்தமில்லாத புயல் போலத்தான் வீசுகிறது. உயிர்மையின் சக்தி அது என நினைக்கிறேன். மற்றொரு ஜீவனைப் படைக்கப் போகின்ற தீப்பொறி அல்லவா அது….

அந்தத் தீப்பொறி மிக விரைவிலேயே என் மனைவியின் உடம்பிற்குள் வடிவம் கொண்டுவிட்டது.

முதலில் இந்தச் செய்தியை வனஜா என்னிடம் வெளியிட்டபோது சினிமா கணவன் மாதிரியெல்லாம் என் சந்தோஷங்களை மிகைப்பட நான் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு கணம் உடம்பு சிலிர்ந்தாற் போலிருந்தது. வனஜாவின் கையை மென்மையாகப் பற்றிக் கொண்டேன்.

என் வாழ்க்கைக்கூடம் விசாலப்படுவது தெரிந்தது. உலகத்தில் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாகிறேன்…! எனக்கும் வனஜாவிற்கும் இருக்கிற பிணைப்பில் இன்னொரு ஜீவனும் இணையத் தயாராகிக் கொண்டிருக்கிறது! வாழ்க்கையில் மகத்துவம் மிக்க சம்பவம் இதுவாகத்தான் இருக்க முடியும்… அந்தச் சம்பவத்தின் முழுமையான வெளிப்பாட்டுக்கு நானும் வனஜாவும் ஏகப்பட்ட கனவுகளுடன் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நாளும் காத்திருந்தோம். அதுவும் இரவு நேரங்களில் மிக நெருக்கமாகவும் அன்னியோன்யமாகவும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு முன்பாகவே எட்டாவது மாதத்தில் வனஜாவுக்கு சீமந்தம் நடத்தி பிரசவத்திற்காக அவளுடைய அம்மா வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

திருமணத்திற்குப்பின் நீண்ட முதல் பிரிவு.

அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரத்திற்கு நான் வணஜாவைச் சார்ந்து இருந்திருக்கிறேன் என்பது அந்தப் பிரிவில்தான் தெரிந்தது. எழுந்ததும் காப்பி சாப்பிடுவதில் இருந்து, படுக்கைக்குப் போகும் பொது பால் சாப்பிடுவது வரை எல்லாமே வனஜா இல்லாமல் கலைந்து போயிருந்தது.

தனிமையின் விசாலம் வீட்டில் விரிந்து கிடந்தது. கொடியில் வனஜாவின் புடவைகள் இல்லை. அருகில் அவளின் பிரத்யேக வாசனை இல்லை. பெண் வாசனை என்பதின் மொத்த வடிவமும் வனஜாதான் என்பதால் அந்த வாசனை முற்றிலுமாக அற்றுப் போயிருந்த வீட்டின் சூழல் நீண்ட நாட்கள் மழை பெய்திராத பிரதேசமாக வறண்டு தெரிந்தது. அதிலும் இரவில் என் அருகில் கமழ்ந்து கொண்டிருக்கும் அந்த மோகம் மிக்க நெடியை உணர வழியில்லாமல் மனம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. கல்யாணமான புதிதில் வனஜாவின் வாசனையை நெஞ்சு நிறைய நிறைய நான் சுவாசித்திருக்கிறேன். எங்களுள் பாலுறவு இயக்கத்திற்கு அந்த வாசனைதான் ஆரம்பச் சுழியாக அமையும்.

அந்த ஆனந்த வாசனை இல்லாத நாட்களை ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிப் புரட்டித் தள்ளிக் கொண்டிருந்தேன். என் வாழ்வின் மற்றொரு முக்கியமான தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் காலை நான்கு மணிக்கு அந்தத் தருணமும் நிகழ்ந்தது.

ஆம்… வனஜாவிற்கு ஆண் குழ்ந்தை பிறந்தது.

அனுமதிக்கப்பட்டதுமே அறைக்குள் ஓடினேன். சிவந்த ஆப்பிள் நிறத்தில் என் மகன் வனஜாவின் அருகில் படுத்திருந்தான். என்னுடைய சந்தோஷத்தை எப்படிக் காட்டுவதேன்றே தெரியவில்லை. வெறுமனே வனஜாவின் முகத்தையே ஆனந்தக்கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு நிக்கில் என்று பெயர் வைத்தோம்.

மூன்று மாதங்கள் சென்றபின் நிக்கிலுடன் வனஜா வீடு திரும்பினாள். சில மாதங்கள் அவளுக்குத் துணையாக இருக்க அவள் அம்மாவும் உடன் வந்தாள். வனஜாவுக்கு அம்மாவின் உதவி தேவைதான். ஆனால் அதற்காக அம்மா எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தது எனக்கு இடைஞ்சலாக இருந்தது.

ஆறு மாதங்களாக வனஜாவின் அருகாமையை இழந்திருந்த எனக்கு அவள் நிறையத் தேவைப்பட்டாள். இயல்பான அன்னியோன்யம் மனதிற்கு ஏராளமாக வேண்டி இருந்தது. அதிலும் தாயாகியிருந்த பரவசமும் பெருமிதமும் அவளின் உடல் பூராவும் பொங்கிய பால்போல் தோற்றமளிக்க, என்னால் வெறும் அப்பாவாக ஈஸிசேரில் சாய்ந்து கிடக்க முடியவில்லை.

அதுவும் தினமும் காலையில் அவள் தலைக்கு குளித்துவிட்டு, ஈர மயிரை காய்வதற்காக பிரித்துப்போட்டு அதை நுனியில் முடிந்து, மஞ்சள் பூசிய முகத்தின் நெத்தியில் குங்குமமும் அதன்மேல் தீற்றலாக வீபூதியும் என மங்களகரமாக காட்சி தரும்போது அவளை அள்ளிக்கொள்ள மனம் ஏங்கும்.

என் கைக்கு எட்டிய தூரத்தில் என் மனைவி என் மகனின் தாயாக மட்டும் நின்று கொண்டிருந்தாள். கொடுமைதான்! பிரக்ஞையே சுத்தமாக இல்லாமல் வனஜாவின் அம்மா குறுக்கே நந்தி மாதிரி நின்று கொண்டிருந்தாள்.

என்னுடைய நிலைமை வனஜாவுக்கும் புரிந்தது. ஆனால் அதற்காக அவள் அனுதாபம் காட்டாமல், என் நிலையை ரசித்தாள். தூரத்தில் நின்று கள்ளச் சிரிப்புவேறு சிரித்தாள். மாமியாரும் மகனும் எந்த நிமிஷம் தூங்குவார்கள் என்று காத்துக்கிடப்பேன். ஆனால் சாமிவரம் தந்தாலும் பூஜாரி வரம் தராத கதையாக, அவர்கள் தூங்கும்போது வனஜாவும் தூங்கிப் போயிருப்பாள். தூங்காவிட்டாலும் ‘வேண்டாமே இன்றைக்கு’ என்பாள். ‘மகன் முழித்துக்கொள்வான்’ அல்லது ‘மிகவும் களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு ஒருமாதிரி இருக்கிறது’ என்பாள். இந்த மாதிரி எதையாவது சொல்லிச் சொல்லி என் மனநிலையை மாற்றி விடுவாள். மொத்தத்தில் மகன் பிறந்த பிறகு வனஜாவுக்கு அந்த விஷயத்தில் ஈடுபாடு நிறையக் குறைந்து விட்டிருந்தது.

நான்கு மாதங்கள் கழித்து என் மாமியார் ஊருக்குப் புறப்பட்டுப் போனார். ஆனால் என் போதாத நேரம், மறுநாளே என் அம்மாவும் அப்பாவும் ‘கொஞ்சநாள் பேரனுடன் இருக்கலாம்’ என்ற எண்ணத்தில் கிளம்பி வந்துவிட்டார்கள்.

“பாத்தீங்களா என்னோட அம்மா புறப்பட்டு போயிட்டாங்க, உடனே உங்க அம்மா போட்டிக்கு கிளம்பி வந்துட்டாங்க..” வனஜா எரிச்சலுடன் குமைந்தாள்.

அன்றைக்குத்தான் நான் வனஜாவை என் மனைவியாக இல்லாமல் என் அம்மாவின் மருமகளாக முதல் முறையாக காண நேரிட்டது. நானும் அன்றைக்குத்தான் முதல் முறையாக வனஜாவிடம் என் அம்மாவின் மகனாக ரியாக்ட் பண்ணினேன்.

எரிச்சலுடன், “ஏன் உன்னோட அம்மா மட்டும்தான் வரலாமா? என் அம்மா வரக்கூடாதா பேரனைப் பாக்கறதுக்கு?” என்றேன்.

“உங்க அம்மாவை நான் ஒண்ணும் வரக்கூடாதுன்னு சொல்லலை… குழந்தையையும் பாத்துகிட்டு உங்க அம்மா அப்பாவையும் என்னால கவனிக்க முடியாது.”

“நீ ஒண்ணும் அவங்களை கவனிக்க வேண்டாம்…”

“உண்மையைச் சொன்னா குத்தமாத்தான் தெரியும், நீங்க கூடத்தான் என்னோட அம்மா எப்படா கெளம்பிப் போவாங்கன்னு காத்திட்டு இருந்தீங்க..”

“ஆமா… ஏதோ வந்தா பத்துநாள் தங்கி இருக்கலாம். நாலு மாசம் வந்து தங்கியிருந்தா எவனுக்குத்தான் சங்கடமா இருக்காது?”

“இனிமே என்னோட அம்மா வரமாட்டாங்க… போதுமா?”

வனஜா விருட்டென்று அறைக்குள் போய் குப்புறப் படுத்துக் கொண்டாள். இரவு சாப்பிடும்போது நானும் அவளும் பேசிக்கொள்ளவில்லை. முதுகைக் காட்டியபடி ஆளுக்கொரு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டோம்.

இதுதான் எங்களுக்குள் வந்த முதல் சண்டை. அது மட்டுமில்லை, கணவன் மனைவிக்குள் இப்படிச் சண்டைகூட வரும் என்பதையும் அன்றைக்குத்தான் நான் தெரிந்து கொண்டேன்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *