கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 4,769 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படுக்கையில் புரண்டு படுத்த பட்டுவை அத்தையின் கீச்சுக் குரல் தட்டி யெழுப்பியது. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்ட குழந்தை ஒன்றும் விளங்காமல் நாற்புற மும் நோக்கி விழித்தாள்.

அத்தை பாகீரதிக்கு அவள் விழிப்பதைக்கண்டு சிரிப்பு வந்தது.

” என்னடி பட்டு? அப்படி விழிக்கிறாயே? இன்றைக் குச் சாவித்திரி அக்காவுக்குக் கல்யாணமல்லவா? எல்லா ரும் எழுந்து குளித்துத் தயாராகிவிட்டார்கள். நீ மாத்திரம் இன்னும் தூங்கிக்கொண்டே யிருக்கிறாயே. எழுந்திரடி சீக் கிரம்!”

ஒரு வினாடி திகைப்புடன் மலர விழித்த குழந்தைக்குச் சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. ஆமாம். அக்காவுக்குக் கல்யாணம் ; அதுதான் ஏழெட்டு நாளாக வீட்டிலே வருவோரும் போவோருமாய் ஒரே அமர்க்களமா யிருக்கிறது. அத்தை கூப்பிடுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் எழுந்து ஜன்னலண்டை ஓடினாள்.

ஏயப்பா ! வாசலிலேதான் எவ்வளவு பெரிய பந்தல்! எத்தனை அழகழகான விளக்குகள் ! யார் இத்தனை அழகான கோலம் போட்டிருப்பது? சந்தேகமென்ன? அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். வேறு யாருக்கு இத்தனை பெரிய கோலம் போடத் தெரியும்?

மீண்டும் உட்புறம் திரும்பிய குழந்தையைப் பார்த்து, “பட்டு ! சீக்கிரம் பல் தேய்த்துக் காப்பி பலகாரமெல்லாம் சாப்பிடு. அப்புறம் – தலையை வாரிப் பின்னிப் பட்டுப் பாவாடையெல்லாம் கட்டிவிடுகிறேன்.” என்று அழைத் தாள் அத்தை .

அவளுடைய கையைப் பிடித்தபடி குதித்துக் கொண்டு ஓடினாள் பட்டு. அட! சமையலறைப் பக்கத்தில்தான் என்ன கூட்டம் ! எவ்வளவு பேர் கும்பலாக உட்கார்ந்து காப்பி பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அக்கா வின் கல்யாணத்துக்காகவா இத்தனை மாமா, மாமி யெல்லாம் வந்திருக்கிறார்கள் ! அவளை உட்காரவைத்து ஒரு சின்ன இலையில் சொஜ்ஜியும் இட்டிலியும் பரிமாறினாள் அத்தை.

வாசலில் மேளச் சப்தம் கேட்டது. உள்ளேயிருந்தவர் களெல்லாம் அவசர அவசரமாய் வாசற்பக்கம் போனார்கள்.

பாகீரதி அத்தை பட்டுவுக்குத் தலை பின்னிப் பாவாடை சட்டையெல்லாம் போட்டுக் கல்யாணப் பந்தலுக்கு அழைத் துக்கொண்டு கிளம்பினாள்.

“அத்தை ! சாவித்திரியக்கா எங்கே?”

“மாடியறையிலே அலங்காரம் பண்ணிக்கொண்டிருக்கிறாள். வா ! அதோ மாப்பிள்ளை புறப்பட்டுவிட்டார்.” என்று பட்டுவின் கையைப் பிடித்திழுத்தாள் அத்தை.

ஆனால் பட்டு மாடிப் படியை நோக்கி ஓடிவிட்டாள்.

வெளியே மேளம் பலமாய்க் கேட்டது. ஒரு வினாடி நிதானித்த குழந்தை, தனது பட்டுப் பாவாடையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு படிகளில் ஏறினாள்.

சாவித்திரியின் அறையில் ஒரே கூட்டம். அக்கூட் டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போக முடியுமென்று தோன்றவில்லை பட்டுவுக்கு. அவளை ஒருவரும் கவனிக்கவு மில்லை. ஒரு மூலையில் நின்றபடி எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அறைக்கு நடுவே ஒரு ஜமுக்காளத்தின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தாள் சாவித்திரி. அவளுடைய நீண்ட பின்னலின் தலைப்பில் அழகான பட்டுக் குஞ்சலம் தொங்கியது. மேல் தலையில் பெரிய செண்டாகச் சூட்டப்பட்டிருந்த மல்லிகைப் பூ முதல், அவள் கால் நகத்தில் தீட்டப்பட்டி ருந்த மருதோன்றிச் சிவப்பு வரையிலும் ஆவலுடன் கவனித் தாள் பட்டு. சாவித்திரியின் உடம்பில் பொன்னும் ஜரிகையு மாய் மின்னின. நெற்றியில் அழகான திலகம்; கண்களில் மைக் கீற்று. உதடுகளில் வெற்றிலைச் சிவப்பு.

அக்காதான் எவ்வளவு அழகாயிருக்கிறாள்! இத்தனை கூச்சலுக்கும் அமர்க்களத்துக்கும் நடுவில் ஆடாமல் அசையாமல் பொம்மை போல் உட்கார்ந்திருந் தாள் சாவித்திரி. இடையிடையே அவள் தலை நிமிரும் பொழு தெல்லாம் அவளுடைய அழகிய முகத்தில் ஒரு புன்னகை ஒளி வீசியது. பட்டுவின் பிஞ்சு மனத்திற்கு எல்லாமே வியப்பாயிருந்தன.

வயதான ஓர் அம்மாள், சாவித்திரியின் கழுத்தில் அட்டிகையைப் பூட்டியபடியே சொன்னாள் :

“இந்த நாலு நகையைப் பூட்டிக்கொள்ளவே மூக்கால் அழுகிறார்கள் இந்தக்காலத்துக் கல்யாணப்பெண்கள் ! எங்கள் நாளிலேயெல்லாம், ஒரு காறை யென்ன? காசு மாலையென்ன? கிள்ளட்டியென்ன? ஒவ்வொன்றும் குறைந் தது ஒரு சேர் தங்கமிருக்கும். கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன்னாலேயே இதை யெல்லாம் மாட்டிப் பழக்கம் பண்ணி விடுவார்கள். இந்தக்காலம் மாதிரியா?”

இதைக் கேட்டதும் அருகே சுவரில் சாய்ந்து உட்கார்ந் திருந்த ஓர் அம்மாள், ஐம்பது வருஷத்துக்கு முன்னால் நடந்த தன் கல்யாண அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்து விட்டாள்.

சாவித்திரி ஒன்றும் பேசாமல் பொம்மை போல் உட் கார்ந்து கொண்டிருந்தாள் . அவள் ஏன் அப்படி இருந்தா ளென்பது பட்டுவுக்கு விளங்கவே யில்லை. சதா சிரிப்பும் விளையாட்டுமாகவே கலகலவென்று இருக்கும் அக்கா இப் பொழுது ஏன் என்னவோ மாதிரி பேசாமலிருக்கிறாள் ? கல் யாணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா? அன்றைக்கு வந்தாரே, உயரமாய்ச் சிவப்பாய் , அந்த மாமாவைத்தானே அவள் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாள்? அவருக் கென்ன, நன்றாய்த்தானே இருக்கிறார் ? ஆனாலும் பட்டுவுக் கென்னவோ, அவரைப் பார்த்ததிலிருந்தே பிடிக்கவில்லை. கல்யாணம் ஆனவுடனேயே சாவித்திரியை அவர் அழைத் துக் கொண்டு போய் விடுவாரென்று அம்மா சொன்னாள். பட்டுவின் வெறுப்புக்கு அதுதான் காரணம்.

சாவித்திரியைச் சுற்றியிருந்த கூட்டம் கொஞ்சம் கலைந்தது. அறைக்கு வெளியே நின்றிருந்த குழந்தையைக் கண்டாள் அவள். புன்சிரிப்புடன் சைகை காட்டி அவளைத் தன்னிடம் வருமாறு அழைத்தாள்.

ஓட்டமாயோடி அவளுடைய மடியிலேறி உட்கார்ந்து கொண்டாள் பட்டு.

காதோடு கேட்டாள். “அக்கா, நீ சொஜ்ஜி சாப்பிடலை?”

“சாப்பிட்டேனடி கண்ணே” என அவளை அணைத்து முத்தமிட்டாள் சாவித்திரி. ஏனோ அவள் கண்ணில் மள மளவென்று நீர் நிறைந்தது.

பார்த்துக் கொண்டேயிருந்த பட்டுவுக்கும் அழுகை வந்துவிட்டது. சட்டென்று சட்டைமுனையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“வெகு நன்றாயிருக்கிறது அசடுகள் மாதிரி அழுவது. கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்கள்” என்று பக்கத்திலிருந்த வயதான அம்மாள் அதட்டினாள்.

அனேகமாக அறையிலிருந்த எல்லாருமே கீழே போய் விட்டார்கள். மிகுதியிருந்த இரண்டொருவரும் கீழே இறங்கிப் போக எழுந்து கொண்டிருந்தார்கள்.

அக்காவை அழைத்துப்போக அம்மா வருவாள். அப் புறம்தான் அவள் கல்யாணப் பந்தலுக்குப் போகவேண்டும். இந்தச் சந்தர்ப்பம் பட்டுவுக்கு அக்காவிடம் பேசுவதற்குச் சாதகமாயிருந்தது.

“அக்கா , நீ நாளைக்கே அந்த மாமாவுடன் ஊருக்குப் போய் விடுவாயா?”

அழுகையிலும் சிரிப்பு வந்தது சாவித்திரிக்கு.

“இல்லை, கண்ணு. இன்னும் இரண்டு நாள் கழித்துத் தான் போவேன்.”

“அப்புறம் எனக்கு யார் தலை பின்னுவார்கள்? யார் சாதம் போடுவார்கள்? ராத்திரி நான் யாரிடம் தூங்கு வேன்?” என்று பலவிதமான கேள்விகளை அடுக்கினாள் பட்டு .

கேட்டுக் கொண்டேயிருந்த சாவித்திரிக்கு மீண்டும் கண் கலங்கியது. குழந்தை சொல்லுவது உண்மைதான். பட்டு பிறந்தவுடன் அவளுடைய அம்மா நோய் வாய்ப் பட்டுப் படுக்கையில் விழுந்து விட்டாள். சுமார் ஒரு வருட காலம் வரையிலும் வீட்டுப் பொறுப்பும், பச்சைக் குழந் தையான பட்டுவைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் மூத்த பெண்ணான சாவித்திரியின் தலையில் விழுந்தது. பன்னிரண்டு வயதே ஆகியிருந்தபோதிலும், தன் மீது சுமத்தப்பட்ட அப்பொறுப்பைத் திறமையாக ஏற்று நடத்தினாள்.

“அக்கா, அக்கா” என்று எதற்கும் சாவித்திரியையே நாடலானாள் பட்டு. இந்த வழக்கம் ஆறு வயதான பிறகு கூட அவளைத் தொடர்ந்தே வந்தது. இக்காரணம் பற்றியே சாவித்திரியின் கல்யாணப் பேச்சு ஆரம்பமானதிலிருந்து அக்குழந்தையின் மனத்தில் ஒரு வகையான வேதனை யுண்டாகி வருத்திக்கொண்டே யிருந்தது. சாவித்திரியைப் பெண் பார்க்க வந்த தினம் ஒரு சம்பவம் நடந்தது. அதை அக் குழந்தையின் பளிங்கு மனம் மறக்கவேயில்லை.

அன்றைய தினம் வீட்டில் ஏற்பாடுகளெல்லாம் பலமா யிருந்தன. கூடத்தில் பட்டுப் பாயெல்லாம் விரித்துப் பாக்கு வெற்றிலை பழமெல்லாம் எடுத்து வைத்திருந்தார்கள். சாவித்திரியை நன்றாக அலங்கரித்து மாடியறையில் உட்கார வைத்திருந்தார்கள். கூடவே இருந்த அவளுடைய தோழி கமலி , அவளைப் பலவிதமாகக் கேலி செய்துகொண் டிருந்தாள். சாவித்திரி எல்லாவற்றையும் கேட்டபடி மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் மட்டும் லேசான புன்சிரிப்பொன்று இழையோடிக் கொண்டிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் கீழிருந்து அப்பாவின் குரல் கேட்டது, “சாவித்திரி ! இங்கே வந்து இவர்களையெல்லாம் நமஸ்காரம் செய், அம்மா?”

அவசரமாக எழுந்த சாவித்திரி , கமலியுடன் கீழே போனாள். கூடத்துக்கு வெளியே கையில் ஒரு புதிய ரிப்பனுடன் காட்சியளித்த பட்டு , “அக்கா! எனக்குத் தலை பின்னிவிடு” என்று அவளுடைய புடவையைப் பிடித்து இழுத்தாள்.

“நல்ல சமயம் பார்த்தாயடி, தலை பின்னுவதற்கு! அம்மாவிடம் போய் பின்னிவிடச் சொல்லு” என்று அவளை ஒரு கையால் ஒதுக்கிவிட்டு, இன்னொரு கையால் சாவித்திரி யிடம் வெற்றிலைத்தட்டை எடுத்துக் கொடுத்தாள் கமலி.

குழந்தைக்கு ஒன்றும் விளங்கவில்லை. அக்காவுக்கு என்ன வந்துவிட்டது? தினமும் அவள் தானே தனக்குக் குளிப்பாட்டி, தலை பின்னி, எல்லாம் செய்வாள்?

துக்கம் அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டது.

குழந்தைக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. கையிலிருந்த ரிப்பனைத் தூர எறிந்துவிட்டு மாடிக்குப் போய்ச் சாவித் திரியின் கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டாள்.

கீழே வீணையை மீட்டும் நாதமும் அக்கா பாடுவதும் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டன. ஆனால் என்ன? அவளுடைய பிஞ்சு மனத்தில் துயரத்தின் பாரம் அழுகை யாய் வெடித்துவிட்டது.

அழுதுகொண்டே யிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள்.

வெகு நேரம் கழிந்தது! “பட்டு! எழுந்திரம்மா! சாப்பிட வேண்டாமா?” என்று எழுப்பினாள் சாவித்திரி.

கண்ணை விழித்துப் பார்த்துவிட்டு, “நான் ஒன்றும் வரவில்லை போ!” என்று சிணுங்கினாள் குழந்தை.

அவள் பின்னாலேயே உள்ளே வந்த அம்மா, “உன் பேரில் அவளுக்குக் கோபம், நீ மத்தியானம் அவளுக்குத் தலை பின்னிவிடவில்லை யென்று!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

சாவித்திரி குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் பிறகு அவளை வாரியெடுத்து அணைத்துக்கொண்டு உள்ளே போனாள். அப்பொழுது அவள் விழிகளிலிருந்து கண்ணீர் முத்துக்கள் பட்டுவின் ரோஜாக் கன்னத்தில் சிதறின. குழந்தை தன் துயரத்தையெல்லாம் உடனே மறந்து அவளுடைய கழுத்தைத் தன் பிஞ்சுக் கரங்களால் கட்டிக் கொண்டாள்.

சாவித்திரியை அழைத்துப்போக அம்மா மாடிக்கு வந்தாள். அக்காவுடன் கூடவே பட்டுவும் மணப்பந்தலுக்குப் போனாள்.

கல்யாண முழுவதும் தன் அக்கா பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள் குழந்தை. அந்தப் புதிய மாமாவிடம் அவளுக்குப் பெருத்த வெறுப்பும் கோபமும் உண்டாயின. ஊர்வலத்தின் பொழுது அவ்விருவருக்கும் நடுவில் உட்கார வேண்டுமென்று அடம் பிடித்தாள். அப்பா வந்து அதட்டியபொழுது அந்தப் புதிய மாமா , “பரவாயில்லை. அவளும்

***கதையின் தொடர்ச்சி உங்களிடம் இருந்தால் தயவு செய்து அனுப்பவும்.***

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *