கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2024
பார்வையிட்டோர்: 2,422 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆவலுடன் எதிர்பார்த்து. எதிர்பார்த்திருந்து. ரமழான் தலைப் பிறை கண்டு நோன்பு நோற்றவர்கள் அவர்கள்.

மாலை ஐந்து மணியிலிருந்தே தலை நோன்பு துறக்கும் வேளை, களை கட்டியிருந்தது. சேரியில் அந்த நெரிசலான குடில்கள் எங்கணும் கலகலப்பாக ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன.

“ரமீஸ் எழும்புங்க மகன், நேரம் சரி”

ரஷீதா மூன்றாம் முறையாக ரமீஸை எழுப்பினாள். பள்ளியில் அஸர் தொழுது விட்டு வந்து படுக்கையில் சற்று சாயப் போய் நித்திரையில் ஆழ்ந்து போயிருந்தான் அவன்.

தூக்கம் கலைந்தவுடன், எழுந்து சென்று எதிர் வீட்டுச் சுவரில் தொங்கும் கடிகாரத்தைப் பார்த்ததும் அவனுக்கு எரிச்சலாகவே இருந்தது.

“என்னம்மா நீங்க…. இன்னும் அஞ்சரை கூட இல்லியே…” ரமீஸ் அலுத்துக் கொண்டான்.

நோன்புக் காலங்களில் அவன் நித்திரையில் காலம் கழிப்பதில்லை. சகர்’ செய்தபின் சுபஹுக்கு ஸ்பீக்கரில் அழைப்புக் குரல் கேட்கும் வரைக்கும் குர் ஆனை திருத்தமாக ஓதுவான் கல்விக்காக நேரத்தைச் செலவிடுவான். அப்புறம் வீட்டு வேலைகள் சிலவற்றை அவனே செய்வான். வீட்டுச் சாமான்கள் வாங்குவற்காகத் தூர உள்ள கடைகளுக்குச் செல்ல வேண்டியதும் அவனது பொறுப்பு.

மற்றும் படி ‘டியூசன்’ வகுப்புகளுக்குத் தவறாமல் செல்வான். அவனுக்கு விளையாட்டு. பொழுது போக்கு என்று ஒன்றுமே இல்லை. அவனுக்கு ஒரேயொரு தங்கை, ஜெசீலா. வயது பத்து. இன்னும் விளையாட்டுச் சிறுமி. அதுவும் ரஷீதா சமைக்க உட்கார்ந்து விட்டால். நினைத்து நினைத்து விடும் ஏவுகணைகளை ஏற்று. சின்னச் சின்ன பொருட்களை கொணர்வதற்காகக் கிட்டவுள்ள சில்லறைக் கடைக்குப் பத்து முறைகளுக்கு மேல் ஓட்டமும் நடையுமாகச் செல்வாள். நோன்பு இல்லாத காலங்களில். ‘ம்மா எனக் கொரு கிரிடொப்பி’ என்று பிடிவாதம் பிடிப்பாள்.

ரஷீதா மீண்டும் குரல் கொடுத்தாள்.

“ரமீஸ் நீங்க ரெடியாகி ஆடி அசஞ்சி போறதுக்குள்ள நேரம் சரி…

நோன்பு துறப்பதற்குப் பள்ளிக் கஞ்சி இல்லா விட்டால் வெறும் பச்சைத் தண்ணீரும் ஒரு சுளை ஈச்சம் பழமும் தான் என்ற நிலை.

அதற்கு மேல் ரமீஸ் ஒன்றும் பேசாமல், எழும்பிக கைகால் அலம்பி. பள்ளிவாசலுக்குப் போக பிரத்தியேகமாக வைத்துள்ள வெள்ளை டிரௌசரை உடுத்தி, அரைக் கைச் சேட்டை அணிந்து. தொப்பியை மடித்து சேர்ட் பொக்கட்டிற்குள் செருகி, தயாராக நின்றான்.

அதற்குள் துப்பரவாகக் கழுவிக் கொண்டு வந்த பெரிய அலுமினியக் கோப்பையை ஒரு ஷொப்பிங் பேக்கிற்குள் திணித்து:

“ரமீஸ் இண்டக்கி தலை நோன்பு, கஞ்சி எடுக்க நெறைய புள்ளகள் வந்து கெடக்கும்….. கவனம் சரியா……”

நோன்பு துறக்க பள்ளியிலிருந்து கஞ்சி கொண்டு வர வேண்டும் என்று காலையிலிருந்தே எத்தனை முறை ஞாபகப்படுத்தியிருந்தாள் அவள்.

“பாவம், புள்ள வெள்ளெனக்கி கொஞ்ச நேரம் தூங்க மாட்டிச்சி. எதையாவது எழுதி எழுதி படிச்சிக் கொண்டிருக்கும் வாப்பா இல்லாத பெரிய கொற….’ ரஷீதாவின் தாய்க் கிழவி சதா முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

ரஷீதாவுக்கு வயது முப்பத்தேழு. இரண்டு வருடங்களுக்கு முன்பு விதவையானாள். அவளது கணவன் முஜீப் பேவ்மென்ட் வியாபாரியாக இருந்தாலும் குடும்பப் பொறுப்புடையவனாக இருந்தான். ‘சீதேவிக் குணம்’ என்று பலரும் பாராட்டுவார்கள். பிள்ளைகளின் கல்வியிலும். ஒழுக்கத்திலும் மிக….. மிக அக்கறை காட்டுவான்.

‘ரமீஸ் என்னப் போல பேவ்மென்டில் திரியப் படாது’ என்று அடிக்கடி ரஷீதாவிடம் வலியுறுத்திக் கூறி இருக்கின்றான். அவனது அயரா முயற்சியின் பயனாக ரமீஸ் ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து, நல்ல பாடசாலையும் உதவிப்பணமும் கிடைத்திருந்தது.

ஆனால் இப்பொழுது அவனுக்கு இக்கட்டான பதினான்கு வயதில், ஆண்டு ஒன்பது கற்கும் போது –

தந்தையின் வழிகாட்டல் இல்லாத அனாதையாகக் காட்சியளிக்கின்றான். ஆனால் ரஷீதா அவனது கல்விக்காக மட்டுமல்ல. அவனை ஒரு நல்ல பிரஜையாக உருவாக்குவதிலும் தூண்டு கோலாக இருக்கிறாள்.

முஜீபின வருமானம் இல்லாமல் போனதும் . நாளாந்த செலவுகளுக்கு ஈடு கொடுப்பதற்காக, அவள் எதிர் வீட்டு ஜெசிமாவுடன் கூட்டாக இணைந்து. விடியற்காலையில் பிட்டு, இடியப்பம் அவித்து. உழைத்து உருக்குலைந்து. தன்னை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தாள். என்ன செய்வது? ரமழான் மாதத்திலாவது வசதியுள்ளவர்களிடமிருந்து கட்டாய தானதர்ம நிதியம் திரட்டி வசதியற்ற கைம்பெண்களுக்கும். அநாதைகளுக்கும் பகிர்ந்தளித்து. வறுமைத் தீயிலிருந்து காப்பாற்ற முடியுந்தானே?

எப்படியோ. புனித நோன்பு வந்ததும் இந்த வெள்ளென கடையப்ப பிஸ்னஸிற்கு’ முப்பது நாட்கள் முற்றுப் புள்ளி. பலகாரமாக மாலையில் நோன்பு துறக்கும் வேளையில் ஏதோ செய்ய வேண்டும் என்று எடுத்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வி.

ஒரு புறம் பள்ளி வாசலில் நோன்பு துறந்து. ம. றிப் தொழுகையை ‘ஜமாத் துடன் கூட்டாக நின்று நிறைவேற்ற ஆட்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

மறுபுறம் பள்ளி வாசலின் நீண்ட வெளி விறாந்தையில் பகிர்ந்தளிக்கப் படும் அரிசிக் கஞ்சியை வீடுகளில் நோன்பு துறப்பவர்களுக்கு எடுத்துச் செல்வதில் சிறுவர்கள் சிறுமிகள் பாத்திரங்களை ஏந்திய வண்ணம் எனக்கு முந்தி ஊற்று உனக்கு முந்தி ஊற்று’ என்று போட்டா போட்டி. போட்டுக் கொண்டு முண்டியடிக்கின்றனர். சிறுவர்கள் என்றால் அப்படித்தான். சின்னச் சின்ன விசயங்களைப் பெரிது படுத்தக் கூடாது.

அத்துடன் பல்வேறு அலுவல்களுக்காகத் தைைலநகர் வந்து நேரத்திற்கு ஊர்களுக்குப் போய்ச் சேரமுடியாத தவிப்பில், பள்ளி வாசலில் நோன்பை விடலாம் என்று பலர் காத்திருக்கின்றனர்.

சிறுவர்களுக்கு மத்தியில் ரமீஸ் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

இதற்கிடையில் சில சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணாக வரம்பு மீறப் பார்க்கின்றனர். இரைச்சல்கள் வேறு. இந்த மீறல்களைக் கண்ணுற்றதும் கஞ்சி பங்கிட்டுக் கொடுப்பவர்களுக்கு நிதானம் தவறி. பொல்லாத கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது.

“யார்டா அங்க மாடுமாதிரி பாய்ரவங்க…போலிங்கில வந்தா தான் கெடைக்கும் தெரீமா…”

இது ஒருவருடைய மனதில் புஷ்’ சென்று தெறித்த ஆவேஷம். மற்றவரையும் தொற்றிக் கொள்கிறது. அவரும் பட்டாஸ் வெடித்தாற் போல –

“சொல்ராரே காது செவிடா. கியூல வந்து தொலைங்கடா…” படபடக்கிறார்.

அதைத் தொடர்ந்து, ‘என்னமோ இவர் தான் பெரிய ஒழுக்க சீலர் என்ற உளப்பாங்கில் உபந்நியாசம்.

“டேய் நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்கோம். என்னடா இது மீன் மார்க்கட்டா…? ஒழுக்கமில்லாம. கழுத கத்து கத்திக்கிட்டு இருக்கீங்களே…. மனிசர் பள்ளிக்குள்ள தொழுதுகிட்டு இருக்கிறாங்க….. தெரீதில் லயா. மூளை இல்லாத மிருகங்க மாதிரி…எனக்கு என்னத்துக்கு வாய்க்கு வருது…நோன்பெண்டு பாக்கிறன்…’

மாறி மாறித் தொடர்ந்து வார்த்தைகள் குத்து ஊசிகளாய்க் குருத்து இதயங்களை ஓராயிரம் முறை சுரீர் சுரீரென்று குத்தி விடுகின்றன.

பிள்ளைகள் அனைவரும் ‘கப்சிப்’ ஆகின்றனர். ரமீஸ் போன்றவர்களுக்கு ‘ஏன்டா வந்தோம்’ என்றிருந்தது. குடும்பத்தின் வறுமை நிலை அவனைத் துளைத்தெடுக்கிறது. சற்று நேரத்தில் கஞ்சி விநியோகிக்கும் வேலை நின்று விட்டது.

ஏந்திய வண்ணமிருந்த பல பாத்திரங்களுக்குக் கஞ்சி ஊற்றப்படவில்லை.

“கஞ்சி முடிஞ்சிருச்சி புள்ளகள்…கிடைக்காதவர்கள் நாளக்கி நேரத்தோட வந்து குழப்பம் பண்ணாம முன் வரிசையில் நில்லுங்க…சரியா…?”

சற்று முன் கொதித்துக் கொண்டிருந்த வார்த்தைகள் ஆறின கஞ்சியாகிவிட்டன.

வெறுங் கோப்பையுடன் திரும்பும் சிறார்களின் வதனங்களில் பதிந்து விட்ட வாட்டம், கஞ்சி கிடைக்காததனாலோ. தலை நோன்பின் களைப்பினாலோ ஏற்பட்டதல்ல. ரஷீதா முன் வாசலில் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள். நோன்பு துறக்க இன்னும் அரை மணி நேரம்தான்.

“ரமீஸ் என்ன வெறுங் கோப்பையோட, கிடைக்கலியா….? அதுதானே ரமீஸ் நேரத்தோட போக சொன்னது…”

ரஷீதா கோப்பையில் தான் கண்ணுங் கருத்துமாய் இருந்தாளே தவிர அவன் கொண்டு வந்திருந்த ஒரு ‘பார்சலைக்’ காணவில்லை.

அவன் வலது கையிலுள்ள அந்தப் பொலித்தீன் ‘பேக்’ பொதியை நீட்டினான்.

அவள் ஆவலுடன் அதைப் பிரித்தாள்.

“ஆ…என்ன இது?…பச்சையரிசி, தேங்கா.. ஈச்சம்பழம் பெக்கட்…கஞ்சி காய்ச்ச எல்லா சாமான்களும் இருக்கே…! யாரு மகன் தந்த…”

“…”

அவன் மௌனம் சாதித்தான்.

அவள் மீண்டும் மீண்டும் வினாவினாள்.

“ரமீஸ், பார்சல் யாரு தந்தது…”

“உம்மா நான் ஒங்களுக்கு ஒண்டு சொல்றன். நீங்க யாரும் தாரத நம்பிக்கொண்டிருக்காதீங்க…சரியா…” என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லிவிட்டு…

“இதும்மா. நீங்க ஸ்கூல் தொடங்கினதும், தெஹிவல ஸு பாக்கப் போக, தந்த அம்பது ரூபா சல்லிக்கி வாங்கினன்…நான் தான் இங்கயே சில மிருக சாதிகள பாத்துட்டேனே, தெஹிவல ஸுவில பாக்க வேண்டிய மிருகங்கள எப்பவும் பாத்துக் கொள்ள ஏலுந்தானே ம்மா…”

இவ் வார்த்தைகளைக் கேட்ட ரஷீதா சிலையாக நின்று கொண்டிருந்தாள்.

– வீரகேசரி – ஜுன் 1993.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *