பிள்ளைக் கனியமுதே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 5,414 
 

‘பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே!
அள்ளி யணைத்திடவே – என்முன்னே
ஆடிவருந் தேனே!’

ரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தரத்தின் மனத்தில் இன்பவலை பின்னியது.

“கண்ணம்மா ஆம்; பேசும் பொற்சித்திரமேதான்! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினாள் அந்தக் கண்ணம்மா. ஆனால் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு நிரவல் கொடுத்து வாழ்விலே அமுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா.”

டாக்டரின் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது. “கண்ணம்மா” என்று அழைத்துக்கொண்டே எழுந்து நின்றார். தந்தையின் மனநிலையை அறிந்து கொண்டது போலக் கண்ணம்மா தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து நயனங்களை உருட்டி விழித்தாள். அத்தருணம் டாக்டரின் தங்கை லலிதா குழந்தைக்கு அன்னம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள்.

“அண்ணா, கண்ணம்மா வரவர அதிக சேட்டை பண்ண ஆரம்பிக்கிறாள். இந்த மாதிரி சிரித்துக்கொண்டு விளையாடும் சமயம் பார்த்துச் சாதம் ஊட்டினால் தான் கொஞ்சமேனும் சாப்பிடுகிறாள். மற்ற சமயங்களில் ஒரு பிடி அன்னம் கூடச் சாப்பிடமாட்டேன் என்கிறாள். தப்பித் தவறி அண்ணியின் போட்டோப் படத்தண்டை எடுத்துச் சென்றுவிட்டால் படத்தைப் பார்த்து விரலைக் காட்டி ‘அம்மா’ எனக் கதற ஆரம்பிக்கிறாள்!”

“பாவம், தாயில்லாக் குழந்தை. இந்த ஒரு வருஷம் பட்டதெல்லாம் கஷ்டமில்லை. ஆனால் இனித்தான் நமக்கெல்லாம் சிரமம் காத்திருக்கிறது. இனிமேல் தான் தவழும் பருவம்; அப்போது பேணிக் காப்பதுதான் ரொம்பவும் சங்கடம். நீயும் கூட இன்னும் சில நாளில் சென்னை போய்விடுவாய். என்னமோ ஈசன் விட்டவழி.”

இவ்விதம் பேசிக்கொண்டிருந்த டாக்டர், தன் தங்கை லலிதாவின் முகத்தை நோக்கினார். அவர் முகத்தில் சஞ்சல ரேகைகள் தடம் பதிந்திருப்பதைக் கண்டதும் அவர் கண்கள் கலங்கின.

“லலிதா, குழந்தை தூங்கி விழுகிறது. கொண்டு போய்ப் படுக்க வை” என்று சொல்லித் திரும்பவும் தன் அறைக்குச் சென்றார் சுந்தரம். அவரது கண்ணோட்டம் மேஜை மீது ஸ்டாண்டில் வைத்திருந்த புகைப்படத்தின் மீது லயித்தது. காஞ்சனா உயிருடனிருந்த பொழுது எடுத்த போட்டோ அது. அவளுயை மென்மலர் வதனத்தில் அன்புக்குழி மிளிரப் புன்முறுவல் பூத்தவண்ணம் சல்லாப மொழி பல பேசித் தன்னை ஊக்குவித்து வருவது போன்ற ஒரு பிரமை தட்டியது அவருக்கு.

டாக்டரின் மனம் கடந்ததை நினைத்து வருந்த, எண்ணங்கள் அலையலையாய் மிதந்து கண்வழியே நீர்முத்துக்களைச் சிதறின.

***

கல்யாணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் படலத்தின் முதல் அத்தியாய ஆரம்ப தினம்!

காஞ்சனாவின் வீட்டில் மலர் மணம் எங்கும் பரவியிருந்தது. குழல் ஊதி லீலைகள் செய்த மாயக்கண்ண னின் படம் ஒருபுறம்; மற்றொரு பக்கம் கால்மாறி நடம் புரிந்த நடராஜமூர்த்தியின் திருவுருவம்! இரண்டிற்கும் நடுவில் அஹிம்சையின் திருஉரு தியாகத்தின் சின்னம் அமரவாழ்வெய்திய அண்ணல் காந்தி மகாத்மாகவின் மோகன பிம்பம். தீபஒளியாகப் பரிணமித்தது.

அறையின் மத்தியில் வீற்றிருந்த சுந்தரத்தின் கவனம் நாற்புறமும் சுழன்றோடி நிலைத்தது.

சகலகலாவல்லி போலக் காட்சியளித்தாள் காஞ்சனா, கையில் வீணையுடன், வீணையின் நரம்புகளை மெதுவாக மீட்டி ஜீவநாதத்தைத் தட்டி எழுப்பினாள். அவளது வீணாகானத்தில் லயித்த அவர், அவளை நிமிர்ந்து நோக்கின சமயம், ஒருகணம் அவர் மனம் சஞ்சலித்துவிட்டது.

நாணிக் கண்புதைத்த வண்ணம் எழுந்து சென்றாள் பூத்துக் குலுங்கும் கொடி போன்ற அக்கட்டழகி. ஒய்யாரமான அவள் உருவத்தின் ஒவ்வொரு அங்க அமைப்பிலும் இளமை கொந்தளித்தது.

அவளது முகச் சாயலிலே ஒருவிதக் கவர்ச்சி; அந்த வசீகரத்தில் ஒரு குளுமை ! பிடியிலடங்கும் இடை : கொடி மாதிரித் துவளும் மெல்லுடல். மெல்லிய கீற்றுப் போன்ற இதழ்களிலே முறுவல் ஊறும் போதெல்லாம் குழி விழும் ரோஜா நிறக் கன்னங்கள். நீண்ட புருவத்தின் கீழ் இருட்கனலெனத் திகழும் விழிகள்!

அந்த அழகியின் வனப்பில் சுந்தரம் மயங்கியதில் ஆச்சரியமென்ன?

முகூர்த்தம் நிச்சயமாகித் திருமணமும் நடந்தேறியது.

சாயந்தரம் ஆனவுடன் ‘காஞ்சனா’ என்று தேன் குரலில் அழைத்துக்கொண்டே உள்ளே நுழையும் சமயம் அவளும் தன் பதியின் வரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பாள். வசந்தத்தின் வரவை எதிர்கொண்டழைக்கும் வானம்பாடியைப் போல. சுந்தரத்தின் இதயம் அப்படியே ஆனந்தப் பூரிப்பிலே ஒருமுறை சிலிர்த்து அடங்கிவிடும். இம்மாதிரி இனிய சந்தர்ப்பங்கள் எத்தனை எத்தனையோ!

அன்று பிரசவ நாள். சுயஉணர்வு தப்பிவிட்டது காஞ்சனாவிற்கு. பிரவசம் சுகமாகத்தான் ஏற்பட்டது. ஆனால் டாக்டரை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாள் அந்தக் காஞ்சனா!

தன் வாழ்வு அஸ்தமித்துவிட்டதென எண்ணிப் பொருமினார். ஆனால் அவ்விதம் நினைவு வரும் சமயமெல்லாம் அவருக்கு ஆறுதல் அளித்து வந்தது அவரது கண்ணம்மாதான்!

டாக்டர் சுந்தரத்திற்கு வேண்டிய உற்றார் உறவினர்கள். அவரை ‘இரண்டாம் கல்யாணம்’ செய்து கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்களது வார்த்தைகளுக்கெல்லாம் சிறிதும் மசியவில்லை டாக்டர். அதே சமயம், பச்சைக் குழந்தையின் பராமரிப்பிற்குப் பெண் உதவி மிகவும் அத்தியாவசியம் என்பதைத் தீர உணராமலுமில்லை.

“காஞ்சனா போல இனிமேல் இந்த ஜன்மத்திலா ஒரு மனவிை எனக்கு வாய்க்கப் போகிறாள்?” இந்த ஒரு கேள்வியைத்தான் தன்னை நாடி வரும் பந்துக்களிடம் பிரயோகித்து வந்தார். காஞ்சனாவுடன் கழிந்து போன இன்பமயமான அந்நாட்களைத் திரும்பவும் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் மறுமணத்தைப் பற்றிய நினைவே அவரது மனதில் தலைகாட்டாமலிருந்தது”

இப்படியே நாட்கள் நகர்ந்தன.

அன்று நடுநிசி. குழந்தையைப் படுக்க வைத்துவிட்டுச் சிறிது நேரம் புத்தகம் படிப்பதில் முனைந்திருந்தார் சுந்தரம்.

“டாக்டர் ஐயா!”

அந்த அறிமுகமற்ற குரலில் வருத்தத்தின் சாயல் தெரிந்தது.

வெளியே சென்று பார்த்தார். பெரியவர் ஒருவர் படபடக்க ஓடிவந்த களைப்புடன் செய்தியைச் சொன்னார்.

டாக்டர் சுந்தரம் உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார். ஓர் பெண் கட்டிலில் உணர்வு தப்பிப் படுத்திருந்தாள். ‘ஸ்டெத்தாஸ்கோப் கொண்டு பரிசோதிக்கக் குனிந்தார். அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டார் டாக்டர். ஏனென்றால் அந்தப் பெண், காஞ்சனாவை அப்படியே உருக்கிவைத்தாற்போலக் காணப்பட்டாள்!

அவ்வுருவத்தைக் கண்டது முதல் அர்த்தமற்ற ஒருவித அனுதாபம், வாத்சல்யம் ஏனோ அவரையும் அறியாமல் கிளர்ந்தெழுந்தன!

நான்கு நாள் கழித்து அந்த யுவதி ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட சமயம் கண்கள் கலங்க அவளை வழியனுப்பி வைத்தார் அவர்.

***

“லலிதா, என்னை உடனே புறப்பட்டு வரும்படி அத்தை இன்று தந்தி கொடுத்திருக்கிறார். கண்ணம்மாவை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்” என்று தன் சகோதரியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் டாக்டர் சுந்தரம்.

அத்தை வீட்டையடைந்ததும் வரவேற்பு உபசாரம் பலமாக நடந்து முடிந்தது.

“அத்தை, ஒன்றும் விசேஷம் கிடையாதே. தந்தியைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்து போய் விட்டேன்.”

“சுந்தரம், தந்தி கொடுத்திராவிட்டால் இவ்வளவு எளிதில் உன்னை இங்கே வரவழைத்திருக்க முடியுமா? காஞ்சனா, இறந்ததற்கப்புற மீதான் நீ இங்கு வரவில்லையே. எத்தனை நாளைக்குத்தான் இப்படிக் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கப் போவதாக உத்தேசம், கையில் ஒரு பச்சைக்குழந்தையை வைத்துக்கொண்டு? பெரிய பிள்ளைக்கு அதிகமாக நான் எதைச் சொல்ல இருக்கிறது?”

“அத்தை, நான் என்ன யோசிக்க இருக்கிறது? காஞ்சனா மாதிரி இனிமேல் இந்தப் பிறவியிலா எனக்கு ஒரு பெண் மனைவியாக வாய்க்கப்போகிறாள்? ஊஹும். ஒருக்காலும் இருக்காது. ஏதோ விட்டகுறை, தொட்டகுறை என்பார்களே, அந்த மாதிரிதான் எங்கள் திருமணம் முன்னர் நடந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்…”

டாக்டரின் பேச்சிற்குச் சோகம் சுருதி கூட்டிற்று.

“சுந்தரம், தேரடித்தெரு சோமுபிள்ளையின் சொந்தக்காரப் பெண்ணாம், பர்மாவிலிருந்து வந்திருக்கிறாள். முதன் முதலில் அவளைக் கண்டதும் அப்படியே திகைத்து விட்டேன். அப்படியே உன் பெண்டாட்டி போல ஒரே அச்சு . நல்ல பதவிசு. நீ ஊம்’ என்றால் போதும். காரியம் முடிந்த மாதிரிதான். மேலும், கைக்குழந்தைக்கு நல்ல ஆதரவாயிற்று. அதன் நன்மையை உத்தேத்தாகிலும் சம்மதம் கொடு, அப்பா ”

இவ்விதம் முகாந்தரங்கள் பலவற்றை எடுத்துக்காட்டி, அதற்கு அத்தாட்சி போல அப்பெண் போட்டோவையும் அவரிடம் நீட்டினாள்.

படத்தைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார் டாக்டர். ஏனென்றால். அதே பெண்தான் சில தினங்களுக்கு முன்பு அவரிடம் வைத்தியம் செய்து கொண்டயுவதி. தன்னையும் அறியாமல் அந்தப் பெண்மீது உண்டான அன்பின் காரணம் இப்பொழுதுான் அவருக்குப் புலப்பட்டது.

“அத்தை, இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமா என்று கேட்டீர்களா பெண்ணிடம்?”

“எல்லாம் கேட்டாய்விட்டது. இதன்மூலம் ஏழைக்குடும்பத் திற்கும் ரொம்பவும் ஒத்தாசை செய்தது போல் இருக்கும்”

“புதியவள் வந்துவிட்டால் அப்புறம் கண்ணம்மாவை நன்றாகப் பேணி வளர்ப்பாள்”… இந்த ஒரே ஆசையுடன் மனத்தைச் சாந்தியுறச் செய்து கொண்டு அவர் தன் அத்தையிடம் விடைபெற்று வீடு வந்தடைந்ததும், அவரது நெஞ்சம் பிளந்துவிடும் போலாய்விட்டது.

எங்கும் ஒரே அந்தகாரம்; மோன அமைதி! திடீரென்று அலறல் சத்தம் கேட்கத் திரும்பினார் டாக்டர்.

“அண்ணா, கண்ணம்மா போய்விட்டாள் அண்ணா, இன்று காலையில் குளித்துவிட்டுத் திரும்பும் சமயம் குழந்தை தண்ணீர்த் தொட்டியில் தவறிவிழுந்து இறந்து கிடந்தது, அண்ணா ” என்று நினைவிழந்து, நெஞ்சம் விம்மத் தேம்பித் தேம்பி அழுதாள் லலிதா.

தன் குழந்தையை நீர் மல்கும் கண்களுடன் ஏறிட்டு நோக்கினார். கண்ணம்மா ஆனந்தப்பள்ளி கொண்டிருந்தாள். டாக்டர் அழுதார்! புரண்டார். பைத்தியம் பிடித்து விடாதது ஒன்றுதான் பாக்கி. தன் அருமைக் கண்மணிக்காக வாங்கிவந்த பிஸ்கட்டுகள், விளையாட்டுச் சாமான்கள் இவையனைத்தும் சிதறிக்கிடந்தன. அவரது மனம்போல.

என்னதான் வாழ்க்கை வேண்டிக் கிடக்கின்றது? அவரது வாழ்விலே சாந்தி, இன்பம் என்பனவெல்லாம் தாமரை இலையின் ஒளிரும் நீர்த்திவலைகள் தாமா? ஆமாம்; மனிதன் வகுக்கும் திட்டங்களை கட்டும் மனமாளிகைகளைத் தகர்த்தெறியத்தான் ‘விதி’ குறுக்கிட்டு விடுகிறேதே! விதி! நல்ல விதி!

அதே தினம் டாக்டரிடமிருந்து அவர் அத்தைக்கு ‘ரிஜிஸ்தர்’ தபால் ஒன்று பறந்து சென்றது.

‘அத்தை’

இத்தனை காலம் எந்த ஒரே லட்சத்திற்காக எனது உயிர் காஞ்சனா இறந்ததையும் பொருட்படுத்தாமல் என் உடலில் தங்கியிருந்ததோ, எந்த ஒரே குறிக்கோளைக் காப்பாற்ற உங்களது பிடிவாதத்தின் துணைகொண்டு மறுமணம் புரிந்து கொள்ளச் சம்மதித்தேனோ அந்த லட்சியம் சிதைந்துவிட்டது! என் கண்மணி கண்ணம்மா இன்று இறந்துவிட்டாள்! என் கண்ணைச் சீராட்டிப் பேணிப் போஷிக்கத்தானே மறுகல்யாணம் செய்துகொள்ள இருந்தேன். இனி எதற்கு இந்தக் கட்டை’ க்குக் கல்யாணம்?

பெண் வீட்டில் விஷயத்தைத் தெரியப்படுத்துங்கள். பாவம், ரொம்பவும் ஏழைக்குடும்பம். பெண் தங்கமான குணம். சேற்றில் முளைத்த செந்தாமரை! இத்துடன் அனுப்பியிருக்கும் ரூ.500 செக்கை மாற்றி, நல்ல மாப்பிள்ளையாகத் தேடித் தாங்களே நேரில் இருந்து அப்பெண்ணுக்குக் கல்யாணத்திற்கு ஆயத்தம் செய்யுங்கள்! இதுவேதான் என் கடைசி வேண்டுகோள்!

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *