பிறை தேடும் இரவு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 3,612 
 
 

(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20

அத்தியாயம்-17

சாந்தி தலைகுனிந்து அமர்ந்திருக்க… கமலம் கண்கலங்கி நிற்க, அவர்கள் நிலை புரியாமல் பிரபுவும், மதுமிதாவும் விளையாடிக் கொண்டிருக்க… 

“என்னம்மா நீங்க. நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துட்டிங்களா. பெட்டியோடு இந்த வெய்யிலில் பிரபுவையும் அழைத்துக்கொண்டு தெருவில் நிலைபுரியாமல் நடக்கணுமா… எனக்கு ஒரு போன் செய்திருக்கலாமே. சரி சரி.. நடந்ததை நினைச்சு வருத்தப்படாதீங்க.”

“இது உங்க வீடு. உங்களுக்கு நான் இருக்கேன். நீங்க எங்கேயும் போக வேண்டாம். என்னை உங்க மகன் மாதிரி நினைச்சுக்குங்க.”

“உங்க நல்ல மனசு உங்களை இப்படி பேச வைக்குது. சாந்தியை நினைச்சுதான் கவலைப்படறேன். எவ்வளவோ கஷ்டங்களை சகிச்சுக்கிட்டு புகுந்த வீட்டில் இருந்தா… புது மருமகள் வந்ததும் இவ வேண்டாதவளாக போயிட்டா”. 

கமலம் பேச, பேச சாந்தியின் கண்களில் கண்ணீர் பெருகுவதை சரவணன் கவனிக்கிறான். 

“அம்மா ப்ளீஸ். நடந்து முடிந்ததை பேச வேண்டாம். சாந்திக்கு இருக்கப் பிடிக்கலை வந்துட்டாங்க. பிறந்த வீட்டில் உங்க மருமகள் ஏத்துக்க தயாராக இல்லை. மகளோடு நீங்களும் புறப்பட்டு வந்துட்டீங்க. இந்த உலகில் வாழ ஆயிரம் வழிகள் இருக்கும்மா. சாந்தி விருப்பப்பட்டா என் ஹாஸ்பிடலில் வேலைக்கு சேர்த்துக்கிறேன். நீங்க என்னோடு கூட தங்க வேண்டாம். பின்னால் அவுட்ஹவுஸ் இருக்கு அதில் தங்கலாம்.” 

“என்னை உங்க மகனாக நினைச்சு மனசில் வித்தியாசமில்லாமல் நீங்க நிம்மதியா இருக்கலாம்மா”.


வீட்டிற்கு தேவையான அனைத்து சாமான்களையும் வரவழைத்து. அவர்களுக்கு எந்த குறையுமில்லாமல் பார்த்துக் கொள்கிறான்.

“சாந்தி, ஒண்ணும் அவசரமில்லை. நீங்க நல்லா யோசிங்க. அப்புறம் வேலைக்கு வரலாம்”. 

சரவணன் சொல்கிறான். 


“அம்மா, வைராக்கியத்தோடு நானும் புறப்பட்டு வந்துட்டேன். நீயும் எனக்காக வீட்டை விட்டு வந்துட்டே, ஆனா யாரோடு என்னை சேர்த்து என் அத்தை பழி சொன்னாங்களோ, அவர்கள் வீட்டில் நாம் தங்கறது சரியில்லம்மா. ஆனாலும் நம்ப வயிற்றுப் பாட்டை பார்க்கணும், பிரபுவை படிக்க வைக்கணும் எனக்கு பொறுப்புகள் இருக்கு. அதனால் வேலைக்கு போய்தான் ஆகணும். அதுவும் சரவணன்கிட்டேயா.. இல்லை வேறு எங்காவது தேடலாமான்னு யோசிக்கணும். கூடிய சீக்கிரமே நாம் இந்த இடத்தை விட் கிளம்பனும்மா.”

“எதுக்கு சாந்தி. அந்த தம்பியை பிரிச்சு பேசற, நமக்கு இதைவிட பாதுகாப்பான இடம் கிடைக்குமா. நரம்பில்லாத நாக்கு எதையாவது பேசத்தான் செய்யும். தாயில்லாத பொண்ணு மதுமிதாவும், நாம் வந்ததிலிருந்து சந்தோஷமா இருக்கா”. 

“நல்லா யோசனை பண்ணி முடிவு பண்ணுவோம்.” 


“அம்மா… அம்மா… 

“இதோ வந்துட்டேன்”. 

“எத்தனை முறை கூப்பிடறது. உன் காதென்ன செவிடா?”

“இல்லப்பா. தோட்டத்தில் அப்பாவோடு பேசிட்டு இருந்தேன்.”

“ஆமாம் அதுதான் ரொம்ப முக்கியம். மத்தியானம் சமையல் சரியில்லையாம் அபர்ணா சொன்னா”. 

“ஆமாம்பா… காலையிலிருந்து தலைவலி. அதனால பருப்பு, ரசம் வச்சு கீரை மட்டும் செய்தேன்.” 

“அப்பாவோடு கதை பேச நேரமிருக்கு. நாலு காய்கறி சமைச்சு வைக்க முடியலை அப்படிதானே”. 

“எதுக்கு தினகர் இப்படி கோபப்படறே. ஃபிரிட்ஜில் வேணுங்கிற காய்கறி இருக்கு. வேணுமினா அவளே எடுத்து சமைச்சிருக்கலாமே. எனக்கு வயசாயிடுச்சு இல்லையா.” 

“உங்க அண்ணி இருந்தவரை சிரமம் தெரியலை. என்னதான் மேல் வேலைக்கு ஆள் இருந்தாலும், என்னால ஒண்டி ஆளாக சமையல் பண்ண முடியலைடா. கொஞ்சம் அபர்ணாகிட்டே சொல்லி எனக்கு சமையலில் உதவ சொல்லு.” 

“நினைச்சேன். ஆட்டிவச்ச உன்னால சும்மாயிருக்க முடியுமா. அபர்ணாவை ஒண்ணுமில்லாத வீட்டிலிருந்து வந்த அண்ணி மாதிரி நினைச்சியா? அவ கோடீஸ்வரி. அவளுக்கு அடுப்படியில் நின்னு உங்களுக்கெல்லாம் சமைச்சு போடணும்னு அவசியமில்லை. உன்னால முடியலைன்னா ஒரு சமையல்காரியை வை. காசை விட்டெறிஞ்சுட்டு போறேன். இப்படி டென்ஷன் பண்ணாதே.” 

தினகரா இப்படி பேசுகிறான். சிலையாக நிற்கிறாள் அம்சவல்லி. 


“சுமதி வா வா. நல்லாயிருக்கியா. வாங்க க்ருபாகரன்”. 

இருவரையும் வரவேற்கிறாள் சாந்தி, 

“நான் நல்லா இருக்கிறது இருக்கட்டும் அண்ணி. அப்பா எல்லா விபரமும் சொன்னாரு, அம்மா இப்படி ராட்சசியாக மாறுவாங்கன்னு கனவிலும் நினைக்கலை. புது பணக்காரங்க ஆயிட்டாங்க. அந்த கர்வம் கண்ணை மறைக்குது. உங்களை போய் தப்பாக பேசி… சை..” 

“விடு சுமதி. இப்ப என்ன நான் நல்லாதான் இருக்கேன். மாமாவை பிரிஞ்சு வந்ததுதான் கஷ்டமா இருக்கு”. 

க்ருபாகரன் அன்போடு சாந்தியை பார்க்கிறான். 

“நீங்கதான் அண்ணி சகோதரியாக இருந்து எங்க கல்யாணத்தை நடத்தி வச்சீங்க. என்னை உங்க சகோதரனாக நினைச்சு எங்களோடு புறப்படுங்க. உங்களையும், அம்மாவையும் நாங்க பார்த்துக்கறோம்”. 

“ஆமாம் அண்ணி. உங்களை கூட்டிட்டு போகத்தான் வந்தோம்”. 

“ரொம்பவே சந்தோஷமா இருக்கு சுமதி. என்னை சுத்தி அன்பான உள்ளங்கள் இத்தனை இருக்கும்போது நான் ஏன் கவலைப்படணும்”. 

“ஆனா தயவுசெய்து வருத்தப்படாதீங்க. நான் இன்னும் எந்த முடிவுக்கும் வரலை சுமதி. பிரபுவின் எதிர்காலத்தை பற்றி நிறைய யோசிக்க வேண்டியிருக்கு. அப்புறம் என் பொறுப்பில் இருக்கும் அம்மா. இவங்களை நான்தான் பாதுகாக்கணும். என் மேல் உள்ள பாரத்தை அடுத்தவங்க மேலே சுமத்த விரும்பலை. க்ருபா சொன்ன மாதிரி எந்த உதவி வேணுமினாலும் ஒரு சகோதரியாக அவரை தேடி வருவேன்”. 

அத்தியாயம்-18

கிளினிக்கில் ஓ.பி.யில் பிஸியாக இருக்கிறான் சரவணன்.

“பேஷண்ட் முடிஞ்சாச்சா…”

“ஆமாம் டாக்டர். ஆனா ஒரு தம்பதிங்க இரண்டு மணி நேரமாக வெயிட் பண்றாங்க. டாக்டரை பார்க்கணும். அவர் பேஷண்ட் பார்த்து முடிச்சதும் வெயிட் பண்ணி பார்க்கிறோம்னு சொன்னாங்க.”

“அப்படியா அவங்களை உள்ளே வரச்சொல்லு”.

சுமதியும், க்ருபாவும் உள்ளே நுழைகிறார்கள். 

“வாங்க, உட்காருங்க” 

“எங்களை தெரியுதா?”

“ஆமாம். அன்னைக்கு சாந்தியை பார்க்க வீட்டுக்கு வந்தீங்களே. கமலம்மா நீங்க யாருன்னு சொன்னாங்க.”

“அண்ணியாலதான் நாங்க இன்னைக்கு சந்தோஷமா வாழ்ந்துட்டிருக்கோம்”. 

“ம்… எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன்”. 

“அண்ணி ஏன் வீட்டை விட்டு வந்தாங்கன்னு காரணம் தெரியுமா?”

“வெளிப்படையாக அவங்க சொல்லாட்டியும். அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்க நடத்தையை தப்பாக பேசி…” 

“எங்கம்மா, இப்படி மாறுவாங்கன்னு நான் நினைக்கலை டாக்டர். எங்கண்ணன் இறந்தபிறகும், புகுந்த வீட்டை பிரியாம எங்களுக்காக வாழ்ந்தவங்க. ஒரு தாயின் பரிவைதான் எல்லார்கிட்டேயும் காட்டினாங்க. அம்மா அவங்களை திட்டாத நாள் இல்லை. அதையெல்லாம் பொறுத்துகிட்டவங்களுக்கு தன்னைப் பத்தி அபாண்டமாக பேசியதை பொறுக்க முடியலை”. சுமதியின் குரல் தழுதழுக்கிறது.

“ஓகே சுமதி, இப்ப நாம எதுக்காக வந்தோம்ங்கிற விஷயத்தை பேசலாமா?”

“சொல்லுங்க க்ருபாகரன்,” 

“தனியா இருக்கிற அண்ணியை நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க. அதுவும் இப்ப உங்க வீட்டில் இருக்காங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டணும் டாக்டர்.”

“என்ன செய்யணும் சொல்லுங்க?”

“அண்ணிக்கு துணையாக நீங்க ஏன் இருக்கக்கூடாது. அவங்களுக்கு வாழ்க்கை கொடுத்து பிரபுவையும், மதுமிதாவையும் சகோதர, சகோதரியாக வாழ வைங்க டாக்டர்”. 

பட்டென்று க்ருபா சொல்ல… என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் மெளனமாக இருக்கிறான். 

“டாக்டர் நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா”. 

“இல்லை க்ருபா. உண்மையை சொல்லணும்னா அந்த எண்ணம் ரொம்ப நாளைக்கே முன்னாலயே என் மனசில் வந்துடுச்சி. எனக்கு ஒரு துணை வேணும்னு இல்லை. அன்பான சாந்தி. என் மகளுக்கு ஒரு நல்ல தாயாக இருப்பாங்கிற எண்ணத்தில் நினைச்சேன். ஆனா… அவங்க மனசில் திவாகர் இருக்கும்போது அது நிச்சயம் சாத்தியமில்லைன்னு எனக்கு புரிஞ்சுது.” 

சுமதியும், க்ருபாவும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். 

“நாங்க அண்ணிகிட்டே பேசி சம்மதிக்க வைக்கிறோம்.”

“அப்படி ஒண்ணு நடந்தா நானும், என் மகளும் ரொம்ப அதிர்ஷ்டம் செய்திருக்கோம்னு நினைச்சுப்பேன்”. 

“டாக்டர், நீங்களும் உங்க மனசில் நினைச்சதை அண்ணியோட அம்மாகிட்டே பேசுங்க. மகளோட எதிர்காலம் என்னாக போகுதோன்னு கவலைப்படறவங்க நிச்சயம் அண்ணிகிட்டே பேசி சம்மதிக்க வைப்பாங்க.” 

க்ருபாகரன் சொல்ல, சரவணன் அமைதியாக இருக்கிறான். 


“என்னம்மா வாசலில் தனியா உட்கார்ந்திருக்கீங்க?” 

அவுட்ஹவுஸ் பக்கம் வருகிறான் சரவணன். 

“பசங்களும் சாந்தியும் உள்ளே இருக்காங்களா. வந்ததிலிருந்து மதுமிதாவை பார்க்கலை. எப்பவும் இங்கேதான் இருக்கா. இன்னும் கொஞ்ச நாளில் என்னையே மறந்துடுவா போலிருக்கு.”

சிரித்தபடி சொல்ல… 

“மது, பிரபுவை அழைச்சுக்கிட்டு சாந்தி பக்கத்திலிருக்கிற பார்க் வரை போயிருக்கா. பிரபுவோட தாத்தா அடிக்கடி இப்படி கூட்டிட்டு போய் பழக்கப்படுத்திட்டாரு. அதான் வெளியே போகணும்னு ஒரே அடம். போய் நேரமாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க. காபி போட்டு தரட்டுமா.” 

“வேண்டாம்மா. காபி, டிபன் எல்லாம் சாப்பிட்டுதான் வரேன்.”

அவளருகில் உட்காருகிறான். 

“என்ன தம்பி நீங்க. தரையில் உட்காருறீங்க. நான் போய் சேர் எடுத்துட்டு வரேன்”. 

“வேண்டாம்மா. இதுவே சௌகரியமாகதான் இருக்கு”. 

“உங்ககிட்டே சில விஷயம் பேசணும். நான் சொல்றதை தயவு செய்து தப்பா புரிஞ்சுகாதீங்க” 

“என்ன தம்பி.. உங்க நல்ல மனசும், குணமும் தெரியாதா. நீங்க நியாயமானதைதான் பேசுவீங்க. என்ன விஷயம் சொல்லுங்க”. 

“நான் மனசுக்குள் ரொம்ப நாள் யோசித்துதான் இந்த விஷயத்தை பேசறேன்மா. நேத்தைக்கு சுமதியும், கிருபாகரனும் என்னை பார்க்க ஹாஸ்பிடல் வந்தாங்க.” 

“ஏன் யாருக்கு உடம்புக்கு முடியலை?” 

“டாக்டராக என்னை பார்க்க விரும்பலை. என்கிட்டே பேசிட்டு போச வந்தாங்க… அவங்க அண்ணி சாந்தியை பத்தி”. 

“நானும் அனுதினமும் அவளை நினைச்சுதான் கவலைப்படறேன். மாப்பிள்ளை போய் சேர்ந்துட்டாரு. இப்ப மகனுடன் இவ அஷ்டப்படறா. புகுந்த வீட்டு ஆதரவும் இல்லை. கூட பிறந்தவனும் ஆதரவு கரம் நீட்ட தயாராக இல்லை. வியாதியோடு போராடற நான் எத்தனை நாளைக்கு காவல் இருக்க போறேன். எனக்குப் பிறகு என் மகள் எப்படியிருக்கப் போறா. நினைச்சா தூக்கமே வர மாட்டேங்குது தம்பி.”

“நான் பேச வந்ததை ரொம்ப சுலபமாக்கிட்டிங்கம்மா, என் மகள் மதுவுக்கு அன்பான தாய் வேணும். அது ஏன் உங்க மகள் சாந்தியாக இருக்கக்கூடாது.”

“தம்பி… நீங்க சொல்றது…”

“ஆமாம்மா, பிரபுவுக்கு தந்தையாக… சாந்திக்கு ஒரு நல்ல துணையாக என்னால் இருக்க முடியும்மா. இதை நான் சாந்தி மேல் ஈடுபாடு கொண்டு கேட்பதாக நினைக்காதீங்க. எனக்கு மனைவி வேணுங்கிறதை விட என் மகளுக்கு சாந்தி ஒரு நல்ல தாயாக இருப்பாங்கிற பரிபூரண நம்பிக்கையில், உங்க மகளை மறுதிருமணம் செய்துக்க நினைக்கிறேன்மா.”

உடம்பு புல்லரிக்க, மெய் மறந்து உட்கார்ந்திருக்கிறாள் கமலம். 


மாடியிலிருந்து விறுவிறுவென்று கோபமாக இறங்கி வருகிறான் தினகர், 

“அப்பா, அப்பா…” 

அவன் கோபக் குரலை கேட்டு அடுப்படியில் சமையல்காரியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த அம்சவல்லி வெளியே வர, வாசலில் இருந்து உள்ளே வருகிறார் சிவனேசன்.

“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?”

“ஏய்… என்னடா அப்பாவை இப்படி பேசற?”

“நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?”

அதே கோபத்துடன் தினகர் முறைக்க… நிதானமாக அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவர்.. 

“இப்ப சொல்லு, என்ன விஷயம்?”

“வயசானா மூளை மழுங்கி போகுமா. எதுக்காக காலையில் எங்க பெட்ரூமுக்கு வந்தீங்க.”

“தினகர், நீ பேசற முறை சரியில்லை. நான்தான் துவைக்க துணிமணிகள் மாடி ரூமில் கிடக்கும். அபர்ணா வெளியே போயிருக்கா. வேலைக்காரிக்கு துணிகள் போடணும் எடுத்துட்டு வாங்க என்னால் மாடி அடிக்கடி ஏற முடியலைன்னு அனுப்பினேன். அதுக்கென்ன இப்ப?” 

“அவர் துணிமணி மட்டும் எடுக்க வரலை. எங்க அலமாரி யெல்லாம் நோண்டியிருக்காரு.”

“தப்பு தினகர். அபர்ணா நகையெல்லாம் கழட்டி அப்படி, அப்படியே போட்டிருந்தா. அதை எடுத்து பத்திரமா அலமாரியில் வைத்தேன்”. 

“ரொம்பத்தான் அக்கறை. அபர்ணா வந்து சத்தம் போடறா. என் பெட்ரூமில் நான் எப்படி வேணும்னா வச்சிருப்பேன். இவர் ஏன் அதையெல்லாம் எடுக்கணும். மருமகள் நகையை திருடலாம்னு ஆசை வந்திடுச்சு போலிருக்கு அப்படிங்கிறா. எனக்கு அவமானமா இருக்கு”. 

“எங்க அப்பா அப்படிப்பட்டவர் இல்லைன்னு அவளை சத்தம் போட்டு வாயை அடைக்காம… எங்களை வந்து கேட்கற. நாங்க என்ன அடுத்தவங்க பொருளுக்கா ஆசைப்படறோம்.” 

“அப்பாவை இப்படி அவமானப்படுத்தறது சரியில்லை தினகர்” அம்சாவின் குரல் ஆற்றாமையுடன் ஒலிக்கிறது. 

“ஏன் உங்ககிட்டே கோடி, கோடியாக கொட்டி கிடக்கா. வாங்கற பென்ஷனில் தனியா இரண்டு பேரும் சாப்பிட முடியாது. அதனால தான் இருந்துட்டு போகட்டும்னு பேசாம இருக்கேன். இப்படி தேவையில்லாம எங்களுக்குள் பிரச்சினையை கொண்டு வர்றீங்க”. 

தினகர் பேசுவதை கேட்டபடி படி இறங்குகிறாள் அபர்ணா. 

“நல்லா கேளுங்க. சமையலுக்கு ஆள், மேல் வேலைக்கு ஆள்னு வீடு முழுக்க வேலைக்காரங்க இருக்காங்க தண்டத்துக்கு உட்கார்ந்து வீட்டில் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறவங்க எதுக்கு தேவையில்லாத நாட்டாமை பண்ணனும்.”

“நம்ப பெட்ரூமுக்கு என் அனுமதி இல்லாம வேலைக்காரங்க யாரும் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அதேதான் உங்களுக்கும் புரிஞ்சுதா?” 

கண்கள் சிவப்பேற மகனை பார்க்கிறார். 

“உன் தயவில் வாழறோம்னு இரண்டு பேரும் எங்களை இவ்வளவு மட்டமாக பேசக்கூடாது. நாங்க உன்னை பெத்தவங்க, பெண்டாட்டி படிச்சவதானே, வேலைக்காரங்களுக்கு சமமாக எங்களை பார்க்கிறா…” 

“அட்டா. உங்க அப்பா ரொம்பத் தான் கோபப்படறாரு. அவரை என்ன தினமும் உட்கார வச்சு மரியாதை பண்ணனும்னு சொல்றாரா, நான் இப்ப என் செயினை காணும்னு சொன்னா என்ன செய்வாரு. மனுஷனுக்கு எப்ப வேணும்னாலும் ஆசை வரும். எனக்கு வேலைக்காரங்களும், இவங்களும் ஒண்ணுதான்.”

“அபர்ணா… நீ இப்படி பேசறது தப்பு, இப்படி நிக்க வச்சு எங்களை இரண்டு பேரும் அவமானப்படுத்துறீங்க.” அம்சவல்லியின் கண்கள் கலங்குகிறது. 

“தினகர். அவளை முதலில் வாயை மூடச்சொல்லு”. 

கோபத்தில் நரம்புகள் புடைக்க கத்துகிறார். 

“இதுக்கு மேல கேவலப்பட்டு நீ போடற சாப்பாட்டை சாப்பிட நான் ரோஷமில்லாதவன் இல்லை. அம்சா துணிமணியை எடுத்து வச்சிட்டு கிளம்பு”. 

“அப்பா..” 

“ஒரு வார்த்தை பேசாதே..”

கோபத்தோடு கர்ஜிக்க… 

“போகட்டும் விடுங்க. ரோஷப்பட்டு என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்…”

அமர்த்தலாக சொன்னவள் மாடி ஏறுகிறாள். 

அத்தியாயம்-19

சுமதியும், க்ருபாவும் அவளையே பார்க்க… 

“பேசு சாந்தி… உன் நல்லதை நினைச்சுதான் எல்லாரும் இந்த முடிவுக்கு வந்தோம். உனக்கு வயசாயிடலை இன்னும் வாழ்க்கை இருக்கு சாந்தி. இப்படி மௌனமாக இருந்தா என்ன அர்த்தம்” – கமலம் சொல்ல… 

தலைகுனிந்து இருந்தவள் நிமிர்கிறாள். கண்களில் கண்ணீர் குளம்கட்டி நிற்கிறது. 

“நீங்க யாருமே என்னை சரியா புரிஞ்சுக்கலை, நானும், திவாகரும் உயிருக்கு உயிராக காதலிச்சவங்க. அவர் என்னை விட்டு போனாலும், அவர் அருகாமையில் இருக்கிற நினைவோடுதான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவர் இருந்த வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாதுன்னு தான் எத்தனையோ கஷ்டங்களை பொறுத்துக்கிட்டு இருந்தேன். மனசில் மகனை சுமந்துட்டு இருக்கிற என்னை தப்பா பேசியதை பொறுக்க முடியாமதான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். 

இப்பவும் யாரோடு என்னை இணைச்சு பேசினாங்களோ அவர் வீட்டில் இருக்கோமேங்கிற மன உறுத்தல் தாங்காம, நானும் அம்மாவும் இருக்க தனி வீடு பார்த்திருக்கேன். அடுத்த வாரம் போகணும். எனக்கு தெரிஞ்சவங்க மூலம் எனக்கு வேலையும் தேடிக்கிட்டேன். 

தயவுசெய்து இனிமே யாரும் இதை பத்தி பேசாதீங்க. இந்த ஜென்மத்தில் திவாகர்தான் என் கணவர். அதுவும் என் மனசில் உயிரோடு வாழ்ந்திட்டிருக்கிறவர். 

இப்ப சொல்லு சுமதி. உங்க அண்ணனை மறந்துட்டு என்னால் இன்னொருத்தரோடு…” 

வாய்விட்டு அழ. கண்ணீருடன் அண்ணியை தழுவுகிறாள் சுமதி. 


ஏமாற்றம் கண்களில் அப்பட்டமாக தெரிய… 

“சாந்தியின் உணர்வுகளை மதிக்கிறேன். இறந்த பிறகும் அவங்க மனசில் வாழ்ந்திட்டிருக்க என் நண்பன் கொடுத்து வச்சவன். ஆனா என் மகளுக்கு ஒரு நல்ல தாய் கிடைப்பாங்கிற என் கனவு சிதைந்துடுச்சு. பார்ப்போம். கடவுள் நினைச்சதுதானே நடக்கும்”. 

“வருத்தப்படாதீங்க டாக்டர். யதார்த்தமாக நாங்க நினைச்சு பேசினது… உங்க ரெண்டு பேரையுமே காயப்படுத்திடுச்சு. உங்களுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து உங்க மகளுக்கு ஒரு நல்ல தாயை கொண்டு வரவேண்டியது எங்க பொறுப்பு.” 

க்ருபாகரன் சொல்ல, விரக்தி புன்னகை சரவணன் இதழில் படர்கிறது.

காரில் சென்று கொண்டிருந்த சரவணன் மனதில் ஏதேதோ நினைவுகள் மனதில் இளம் புரியாத சங்கடம். என் மகள் மதுவிற்கு சாந்தி ஒரு நல்ல தாயாக இருப்பாள் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே. 

என் மகளும், நானும் கடைசி வரை தனிமையில்தான் வாழ வேண்டுமா? அப்படியே நான் ஒருத்தியை கல்யாணம் செய்து கொண்டாலும் உண்மையான பாசத்துடன் என் மகளை கவனிப்பாளா… கார், பங்களா, சொத்து, சுகம் இருந்தும் நானும் என் மகளும் அனாதையாக… 

கண்களில் கண்ணீர் திரள, கையால் துடைத்தவன் அப்போது தான் எதிரில் அசுர வேகத்தில் வரும் மணல் லாரியை பார்க்கிறான். ஸ்டீயரிங்கை ஒடித்து திருப்ப… 

அதே கணம் பயங்கர வேகத்துடன் டமால் என்ற சப்தம் காதை பிளக்க சரவணனின் கார் அப்பளமாக நசுங்குகிறது. 


“ஐயோ, என்ன சொல்றீங்க?”

“ஆமாம் மேடம். சீரியஸான கண்டிஷனில் டாக்டர் அமர் ஹாஸ்பிடலில் இருக்காரு. மகளை பார்க்கணும்னு துடிக்கிறாரு. உடனே கூட்டிட்டு வாங்க மேடம்”. 

ஐ.சி.யூ.வின் முன்… மனம் கலங்க அம்மாவுடனும், மதுமிதா, பிரபுவை கையில் பிடித்தபடி தவிப்பு கொள்ளாமல் நிற்கிறாள் சாந்தி, 

“சிஸ்டர்… சரவணன் இப்ப எப்படி இருக்காரு”. 

“நிறைய ப்ளட் போயிடுச்சு. பலமான அடி… அவர் சுயநினைவோடு இருக்கிறதே ஆச்சரியமாக இருக்கு. பெரிய டாக்டரே உங்களை கூப்பிடுவாரு”. 

“அவர் உயிர் பிழைச்சுப்பாரா… சொல்லும்மா… அந்த நல்ல மனுஷனுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது…” 

அழுகையுடன் கமலம் சொல்ல…

“அந்த கடவுளை வேண்டிக்குங்க…”


ஐயோ… சரவணனா இது. உடம்பு முழுக்க கட்டுடன்… கடவுளே… மனம் அற்ற, சாந்தியின் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டுகிறது. வார்த்தைகள் தடுமாறுகிறது.

“சாந்தி… ப்ளீஸ்… அழாதீங்க… கொஞ்சம் என் பக்கத்தில் வாங்க…”

“தம்பி… உங்களை இந்த நிலைமையிலா நாங்க பார்க்கணும்”. முந்தானையால் வாயை மூடி கதறுகிறாள் கமலம். 

“ப்ளீஸ் அழாதீங்க. சீக்கிரம் பார்த்துட்டு வாங்க.”

நர்ஸ் சொல்ல… அருகில் வந்த மதுவை கண்ணீருடன் பார்க்கிறான்.

“டாடி.. டாடி… உங்களுக்கு என்னாச்சு டாடி… எனக்கு பயமா இருக்கு….”

அழும் குரலில் மதுமிதா… 

“மது… மதும்மா… “

சரவணனின் கண்கள் கலங்குகிறது.

“சாந்தி.. என் மகளை நீங்கதான்…”

“உங்களுக்கு ஒண்ணும் ஆகாது டாக்டர். நீங்க பிழைச்சுக்குவிங்க. தயவுசெய்து மனசை தளர விடாதீங்க”. 

சாந்தியை அவன் கண்கள் ஏக்கத்துடன் பார்க்கிறது. 

கையை மெல்ல அசைத்து, மதுவின் கைபிடித்து… சாந்தியிடம் நீட்ட… 

அழுகையுடன் இருவர் கைகளையும் பிடித்தவள்… 

“பயப்படாதீங்க டாக்டர். எந்த காலத்திலும் மதுவை நான் பிரிய மாட்டேன். அவ என் மகள். இது என் மகன் பிரபுமீது சத்தியம்.”

சரவணனின் கண்களில் தெளிவு. 


சரவணனின் ஆடிட்டரும், வக்கீலும் உட்கார்ந்திருக்க… அவர்கள் முன் சாந்தி மதுவுடன் முகத்தில் சோகம் ததும்ப நிற்கிறாள். பெரிய ரோஜா மாலைக்கிடையே சரவணன் போட்டோவில் புன்னகையுடன் இருக்கிறான். 

“டாக்டர் சரவணன், தன்னோட சொத்துக்களையெல்லாம் உங்க பேரில் எழுதி வச்சிருக்காரு. அதோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இதில் இருக்கு” – அதிர்ச்சியுடன் நிமிர்ந்தவள்… 

அவர் மகள் மதுமிதா பேரில் எழுதலையா… 

“இல்லை. என் மகளையே அவங்ககிட்டே ஒப்படைக்கப் போறேன். சாந்தி என் மகளோட தாய். அவளுக்கு தெரியும். தயவுசெய்து நான் சொன்னபடி செய்துடுங்கன்னு…” 

மாஜிஸ்ரேட் முன்னிலையில் சாசுரதுக்கு முன்னால உயில் எழுத சொல்லிட்டாரு. 

அத்தியாயம்-20

டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைக்கிறாள் சுமதி. 

“சுமதி மணி ஒண்ணாகிடுச்சு. மாமா, அத்தை ரூமிலேயே அடைஞ்சு கிடக்காங்க, போய் சாப்பிட கூப்பீடு”. 

“அம்மா, அப்பா பாவம்ங்க. கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம அண்ணன் அவங்களை அனுப்பி வச்சுட்டாரு. உலகத்தில் பணம் தான் பிரதானமா. பணம் வந்தால் மனுஷங்க மாறிடுவாங்களா” 

“எல்லாரும் மாற மாட்டாங்க சுமதி. உன் அண்ணன் மாதிரி சில பேர்” 

அங்கு வருகிறார் சிவனேசன், 

“மாப்பிள்ளை… இது கடவுள் எங்களுக்கு கொடுத்த தண்டனை. ஐந்து வயது மகனோடு நெஞ்சில் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாம் விரட்டுனோம்ல அதுக்கான தண்டனை. அந்தப் பெண் சாந்தி பாவம்மா… உங்க அண்ணனை ஆத்மார்த்தமாக நேசிச்சவ… அந்த ஈர மனசோடு உங்கம்மாவை பொறுத்துக்கிட்டு இருந்தா… ஆனா எப்ப அவ நடத்தையை சந்தேகப்பட்டாலோ வீட்டை விட்டு வெளியேறிட்டாமா…” 

“அண்ணி நல்லவங்கப்பா. அம்மா யாரோடு அபாண்டமாக அண்ணியை இணைச்சு பேசினாங்களோ… அந்த டாக்டருக்கே கல்யாணம் பண்ண நானும், அவரும் முயற்சி பண்ணினோம். இந்த ஜென்மத்தில் திவாகர் மட்டும்தான் என் கணவர். அவர் நினைவுகளோடு நான் வாழ்ந்திடுவேன்னு சொல்லிட்டாங்கப்பா.” 

“அது மட்டுமில்லை அந்த டாக்டரும் ஆக்ஸிடெண்டில் இறந்துட்டாரு. இப்ப அவர் மகளையும், தன் மகளாக அண்ணிதான் வளர்க்கிறாங்க”. 


வாசலில் கார் வந்து நிற்க… சுமதியும், க்ருபாகரனும் இறங்க, அவர்களை தொடர்ந்து சிவனேசனும், அம்சவல்லியும் வருகிறார்கள்.

மதுமிதாவையும், பிரபுவையும் வாசலில் விளையாட விட்டு உட்கார்ந்திருந்த கமலம்.

“சாந்தி உன் மாமனார், மாமியார் வர்றாங்க” எழுந்திருக்கிறாள்.

“சாந்தி என்னை மன்னிச்சிடும்மா” – அவளை கட்டிக் கொண்டு அம்சவல்லி கதற…

“ஐயோ அத்தை.. நீங்க எதுக்கு என்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிட்டு.. நீங்க எந்தத் தப்பும் செய்யலை.” 

“இல்லம்மா. உன் நல்ல மனசு அப்படிதான் சொல்லும். நான் உன்னை விஷமா வெறுத்தேன். விதியின் வசத்தால் போய் சேர்ந்தவனை… உன் துரதிருஷ்டம் தான் கொண்டு போச்சுன்னு நாக்கில் நரம்பில்லாமல் பேசினேன். எல்லாத்துக்கும் மகுடம் வச்சாற்போல, என் மகனை நெஞ்சில் சுமந்து வாழ்ந்திட்டிருக்க உன்னை அபாண்டமாக பேசினேனே… அது மன்னிக்க முடியாத தப்பும்மா….” 

“ஆண்டவன் அதுக்கான தண்டனையை கொடுத்திட்டாரு. பணம்… பணம்னு ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தேனே… அந்த மருமகள் எங்க இரண்டு பேரையும் வார்த்தைகளால கொன்னுட்டா. இனியும் உன்னை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்காட்டியும், என் மனசாட்சி என்னை. தூங்க விடாது. நீ நல்லா இரு சாந்தி. உனக்கு அந்த ஆண்டவன் துணையிருப்பான்.” 

“சரிம்மா சாந்தி. நாங்க கிளம்பறோம். சுமதி எல்லா விபரமும் சொன்னா. உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தா, அந்த நல்ல மனுஷன் மகளையும், சொத்தையும் உன்கிட்டே ஒப்படைச்சிருப் பாரு. உனக்கான கடமைகள் நிறைய இருக்கும்மா. இப்ப அம்மாவும் உன் பொறுப்பில்” 

“என் சாந்தி எல்லாத்தையும் நல்லவிதமா சமாளிப்பான்னு எனக்கு தெரியும். என் ஆசி என்னைக்கும் உனக்கிருக்கும்மா. வா… அம்சா… போகலாம்.” 

“எங்கே மாமா?” 

“சுமதி வீட்டுக்குதாம்மா. இனி நாங்க தினகரை நம்பி வாழ முடியாதும்மா…” 

“உங்களுக்கு ஒரு மகன்தானா மாமாக திவாகர் உங்க பிள்ளைதானே…” 

“சாந்தி…”

“ஆமாம் மாமா. இது திவாகர் ஆத்மார்த்தமா என்னோடு வாழ்ந்திட்டிருக்காருன்னு நான் நம்பறேன் மாமா. அந்த எண்ணம் உங்க மனசிலும், அத்தை மனசிலும் இருந்தா நீங்க இந்த வீட்டில்தாள் இனி இருக்கணும். என்னை விட்டு போகக்கூடாது மாமா…” 

“சாந்தி.. உன்னை புரிஞ்சுக்காத இந்த பாவியையா உன்கூட வச்சுகிறேன்னு சொல்றே.” 

“ஆமாம் அத்தை. இப்பதான் என் அத்தை என்னை புரிஞ்சுக்கிட்டாங்களே. இனி எப்பவும் என்னை பிரிய மாட்டாங்க.” அம்சவல்லிரை அன்போடு அணைக்க.. 

சுமதி கண்ணில் வடியும் நீரை துடைத்துக் கொள்கிறாள்.

“அம்மா… அம்மா… இவங்க யாரும்மா…”

மதுமிதா சாந்தியின் முந்தானையை பிடித்திழுக்க… 

“மதும்மா… இவங்க உன் தாத்தா, பாட்டி. இனி நம்மோடுதான் இருக்கப் போறாங்க…”

“ஐ… எனக்கு அம்மா, இரண்டு பாட்டி, தாத்தா, அண்ணன், சுமதி அத்தை, அங்கிள் எத்தனை பேர் இருக்காங்க. ஆனா டாடிதான் இல்லை. அவங்களும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் இல்லையாம்மா…” 

அந்த சிறுமியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அனைவரும் நெகிழ்வுடன் பார்க்க… 

“மது… உனக்கும் எனக்கும் டாடி இருக்காங்க. நமக்கு இரண்டு டாடி… இரண்டு பேரும் சாமிகிட்டே இருக்காங்க… அதுக்கு பதிலாகத்தான் நமக்கு இத்தனை பேரை கொடுத்திருக்காங்க.”

பெரிய மனுஷத்தனமாக பிரபு சொல்ல… இரண்டு பேரையும் தன்னோடு சேர்த்து தழுவுகிறாள் சாந்தி. 

திவாகர், உன் மனைவியை என்னை பொறுப்பாக பார்த்துக்க சொன்னே… ஆனா அவதான் இப்ப இந்த சிறு பிள்ளைகளுக்கு மட்டுமில்லை, வயதான பிள்ளைகளான எங்களுக்கும் தாயாக இருக்கப் போறா… உன் நினைவுகள் அவளை நல்லபடியா வாழ வைக்கும்பா – சிவனேசனின் மனம் நிறைகிறது. 

(முற்றும்)

– பிறை தேடும் இரவு (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2014, செல்வி பெண்கள் நாவல், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *