(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-4 | அத்தியாயம் 5-8 | அத்தியாயம் 9-12
அத்தியாயம்-5
காலையில் எழுந்தபோது லேசாக இருந்த தலைவலி, வேலைகளின் பளுவால் விண்,விண்ணென்று தெறிக்க ஆரம்பித்தது. பொறுத்துக்கொண்டாள் சாந்தி. ஆனால் சோர்ந்த முகம் காட்டி கொடுத்தது.
“என்னம்மா சாந்தி, உடம்புக்கு எதுவும் முடியலையா முகம் வாட்டமாக இருக்கு. கண்கள் சிவந்திருக்கு”.
“பெரிசா ஒண்ணுமில்லை மாமா. லேசா தலைவலி அவ்வளவுதான்”.
நெற்றியில் கைவைக்கிறார்.
“என்னம்மா இது. உடம்பு அனலாக கொதிக்குது. ஒண்ணு மில்லைன்னு சொல்றே. போ… போய் படு. வேலையெல்லாம். கிடக்கட்டும். அத்தை இருக்காங்க. சாயந்திரம் சுமதி வந்து பார்ப்பா”.
“இருக்கட்டும் மாமா. பாத்திரத்தை மட்டும் ஒழிச்சு போட்டுட்டு போறேன்”.
“போம்மா… சொன்னா கேளு.”
கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அடுப்படியை விட்டு வெளியேற்ற…
“போய் படும்மா… நான் ஜுர மாத்திரையும், காபியும் கொண்டு வரேன். போட்டுக்க. பனிரெண்டு மணிக்கு அடுத்த தெருவில் இருக்கிற டாக்டர் கிளினிக் வந்துடுவாரு. போய் காண்பிச்சுட்டு வருவோம்”.
“அதெல்லாம் வேண்டாம் மாமா. ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.”
“நீ போம்மா. நான் பார்த்துக்கிறேன்.’
குளித்துவிட்டு வந்த அம்சவல்லி,
காபி போட்டுக் கொண்டிருக்கும் கணவனை பார்க்கிறாள்.
“எதுக்கு நீங்க அடுப்படியில் நிக்கிறீங்க. சாந்தி எங்கே போனா. அவக்கிட்டே கேட்டாபோட்டு தரப்போறா…”
காபியை நுரை பொங்க ஆற்றியபடி…
“இந்த காபியே அவளுக்குத்தான்…”
“இப்ப அவ இந்த வீட்டுக்கு மகாராணியாக மாறினா… அவளுக்கு தொண்டூழியம் செய்ய கிளம்பிட்டீங்க…!”
“உனக்கு இப்படிதான் பேச வருமா அம்சா… கொஞ்சமும் மனசில் அந்த பெண்ணு மேலே இரக்கம் இல்லாம பேசறியே, சாந்திக்கு ஜுரம். உடம்பு நெருப்பா சுடுது. அதையும் மீறி வேலை பார்த்துட்டு இருந்தவளை நான்தான் படுக்க சொன்னேன் போதுமா.”
“அதானே பார்த்தேன். எல்லாம் நீங்க கொடுக்கிற இடம். பாதிக்கு மேலே நடிப்பு, இவள் நடிப்பிலும், அழகிலும் மயங்கிதானே என் பிள்ளை போய் சேர்ந்தான். துரதிருஷ்டம் பிடிச்சவளை கட்டாம இருந்திருந்தா… அவன் ராஜாவாட்டம் வாழ்ந்திருப்பான்”.
“அம்சா… வார்த்தையை அளந்து பேசு, நடந்து முடிச்சதுக்கு… அந்த அப்பாவி பெண்ணை குற்றம் சொல்லாதே. நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான். நகரு… நான் போய் சாந்திக்கு மாத்திரையும், காபியும் கொடுக்கிறேன். அவளை கூட்டிக்கிட்டு டாக்டர்கிட்டே போகணும்”
எரிச்சலும், ஆத்திரமும் கிளம்ப…
“நல்லா போங்க… நீங்க இடம் கொடுக்கிற தைரியத்தில்தான் அவளும் ஆட்டம் போடறா. நம்ப பிள்ளை போய் சேர்ந்த அன்னைக்கே, இவளை அம்மா வீட்டிற்கு விரட்டி இருக்கணும். நான்தான் தப்பு பண்ணிட்டேன்.”
வேண்டாம். இவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால், பிரச்சினை வளருமே தவிர குறையாது.
வழக்கம்போல மௌனமாக அந்த இடத்தை விட்டு அகல்கிறார் சிவனேசன்.
படுத்துக் கொண்டிருந்தவள் அருகில் வருகிறான்.பிரபு.
“அம்மா ஜுரம் சரியாயிடுச்சா.’
“சரியாயிடும் கண்ணா. நீ போய் தாத்தாகிட்டே இரு”
“அம்மா… என் அப்பா டாக்டர்தானே…”
கண்ணீர் கோர்த்து கொள்ள…
“ஆமாண்டா ராஜா…”
“அப்பா இருந்திருந்தா இத்தனை நேரம் உனக்கு ஊசி போட்டு சரி பண்ணியிருப்பாரு..”
“ஏன்ம்மா… அப்பா இவ்வளவு சீக்கிரம் சாமிகிட்டே போயிட்டாரு”.
“அது நான் வாங்கி வந்த வரம்பா. அப்பாவோட அருகாமை இல்லாம, என் மகள் வளரணும்ங்கிற விதி… வேறென்ன சொல்றது.”
அங்கு வந்த சுமதி…
“என்ன அண்ணி இது. எதுக்கு இப்படி பேசறீங்க. படுத்து ரெஸ்ட் எடுங்க, பிரபு கண்ணா.. அத்தையோட வா… கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடலாம்…”
கைபிடித்து அழைத்து போகிறாள்.
ஃபைவ் ஸ்டார் ஓட்டலின் ரெஸ்ட்ரண்ட். மெல்லிய விளக்கொளியில் பௌர்ணமியாய் ஜொலிக்கும் சுமதியை பார்த்தபடி இருக்கிறான் க்ருபாகரன்.
“ஐஸ்கிரீம் உருகுது. சாப்பிடுங்க.”
முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி, சிரிக்கிறாள் சுமதி.
“நினைச்சு பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு சுமதி.”
“எதை?”
“நான் முதன்முதல் சந்தித்த நாள் நினைச்சு கூட பார்க்கலை. நீதான் என் மனம் கவர்ந்த மகாராணியாக வளைய வரப் போறேன்னு.”
“ஐயா… கவிஞரே.. நேரமாச்சு… சீக்கிரம் சாப்பிடுங்க. நான் வீட்டுக்கு போகணும்”.
“இன்னும் எத்தனை நாளைக்கு சுமதி நாமரெண்டு பேரும் இப்படி காதலர்களாக இருக்கிறது. நம் கல்யாணம்..”
“அதான் சொன்னீங்களே க்ருபா. என் படிப்பு முடிய வேண்டாமா. ஒரு ஆறு மாசம் பொறுங்க.”
“என்ன செய்யறது பொறுத்துதான் ஆகணும்”.
நீண்ட பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்படுகிறது.
சுமதி சொன்னபடி டயகிராம் போட்டாகி விட்டது. அவள் ரிகார்ட் நோட்டை கொண்டு வந்து அவள் ரூமிலிருக்கும் அலமாரியில் வைக்கிறாள்.
எப்படி புஸ்தகத்தை தாறு மாறாக போட்டு வைத்திருக்கிறாள். எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்தவள், கீழே விழும் கவரை எடுக்கிறாள். என்ன இது கவர்… இதயத்தின் படம் வரையப் பட்டு அம்புகுறி… மனதில் ஏதோ புரிய, கவரினுள் இருப்பதை வெளியே எடுக்கிறாள். என் இதயராணி சுமதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், உன்னுடைய க்ருபா.
ரோஜா பூக்களின் நடுவே மலர்ந்து சிரிக்கும் இளைஞன். அப்படியானால் இவன்.. இவன்தான் கிருபாவா…. சுமதி இவனை காதலிக்கிறாள்.
இவளும் என்னை போலவே..
தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு அவள் வாழ்க்கை பட்டுவிடக் கூடாது. சுமதி நல்ல பெண். அவள் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும். சாத்தியின் மனம் பிரார்த்திக்கிறது.
அத்தியாயம்-6
பொழுது சாயும் மாலை நேரம். மொட்டை மாடியில் ஈஸிசேரியில் கைகளை மடக்கி தலையணையாக வைத்து, வானத்தை பார்த்தபடி சாய்ந்திருக்கிறார் சிவனேசன்.
சுதாகர் நீ இருந்தவரை, எந்தவித கவலையும் இல்லாமல் இருந்தேன். நீயும் போனே… என் நிம்மதியும் போயிடுச்சு. தகப்பனின் கண்ணுக்கு முன்னே, மகன் இறந்து போகும் கொடுமையாருக்கும் நடக்கக் கூடாது. பொறுப்புகளை நீ ஏத்துப்பேன்னு இருந்தேன். இப்ப உன் பொறுப்பையும் என்னை சுமக்க வச்சு போய் சேர்ந்துட்டியே..
சாந்தியின் எதிர்காலம்… சுமதியின் கல்யாணம்… இதெல்லாம் எந்த வழிலில் நல்லபடியாக நிறைவேற போகுதுன்னு தெரியலையே.
தினகர் அவன் அம்மாவை போல சுயநலவாதியாக இருக்கான். எவ்வளவு தூரம், இந்த குடும்பத்துக்கு உதவுவான்னு தெரியலையே… எண்ணங்களின் சுமைகளால், மனம் பாரமாக கனக்கிறது.
“மாமா… மாமா..”
மூடிய கண்களை திறக்கிறார்.
கையில் காபியுடன் எதிரில் சாந்தி.
“வாக்கிங் போயிட்டு வந்துட்டு, காபிகூட முடிக்காமல் மாடிக்கு வந்துட்டிங்க. அதான் எடுத்துட்டு வந்தேன். இந்தாங்க.”
“ஏன்ம்மா. நீ சிரமப்படறே. பிரபுவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டிருந்தே. உங்க அத்தை வழக்கம்போல டி.வி. சீரியலில் மூழ்கியிருந்தா. ஒருநாள் காபி குடிக்காட்டி என்னன்னு மாடிக்கு வந்துட்டேன்மா.”
“இதுக்கூட செய்யாம எப்படி. இனிமே இப்படி செய்யாதீங்க மாமா. இந்தாங்க….”
அன்போடு அவளை பார்த்தபடி வாங்குகிறார்.
“மாமா… அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்…”
“என்னம்மா?”
“பதட்டப்படும்படி எதுவும் இல்லை. நம்ப சுமதி..”.
“ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு. லேட்டா வருவேன்னு சொல்லிட்டு போனா வரலையேன்னு கவலைப்படறியா…”
“இல்லை மாமா, அவள் மனசில் யாரையோ விரும்பறா… இன்னைக்கு அவரூமில் இந்த போட்டோவை பார்த்தேன்.”
அவரிடம் கொடுக்கிறாள்.
சிறிது நேரம் அதையே பார்த்தபடி மௌனமாக இருக்கிறார்.
“மாமா… என்ன மாமா… எதுவுமேபேசாமல் இருக்கீங்க,”
“இது விஷயம், உங்க அத்தைக்கு தெரியுமா?”
“இல்ல மாமா, அவங்களுக்கு தெரியாது. தேவையில்லாமல் பிரச்சினையை பெரிசு பண்ணிடுவாங்க.”
“நல்ல காரியம் பண்ணினே. இது விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். என்கிட்டே சொன்னதாக சுமதிக்கு தெரிவிக்காம… நீயா அவக்கிட்டே இதுபத்தி விசாரிம்மா.”
“சரி மாமா…”
“அப்புறம் அவன் நல்லவனாக அவளுக்கு ஏற்றவனாக இருந்தா, அவ படிப்பு முடிஞ்சதும் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்போம்னு சொல்லு…”
“அப்படியில்லாம்… வேறு ஏதாவது… சரியா வராதுன்னு பட்டா.. நீதான் அவளை இதிலிருந்து மீட்டெடுக்கணும். செய்வியாமா…”
“என்ன மாமா… அது என் கடமை. இதைதான் நானும் செய்யணும்னு இருந்தேன். ஆனா உங்ககிட்டே தெரிவிக்காம இருக்கக்கூடாதுன்னு தான் சொன்னேன் மாமா”.
“சரிம்மா… நீ கீழே போ. இந்த போட்டோவை உங்க அத்தை கண்ணில் படாமல் வை.”
“என்ன அண்ணி இன்னும் தூங்கலையா. இந்த நேரம் என் பெட்ரூமுக்கு வர்றீங்க. பிரபுதூங்கிட்டானா..”
“ம்… அவன் தாத்தாகிட்டே படுத்திருக்கான். நீ இன்னும் தூங்கலையா சுமதி”
“படிக்க வேண்டியது கொஞ்சம் இருந்துச்சு. இப்பதான் முடிஞ்சுது. குட்நைட் அண்ணி போய் தூங்குங்க”.
“அதுக்கு முன்னால உன்கிட்டே கொஞ்சம் பேசணும் சுமதி.”
“இந்த நேரத்திலா…”
“ஆமாம். விஷயம் நமக்குள் இருக்கணும்னுதான் இப்ப பேச வந்தேன்”.
கண்களை கூர்மையாக்கி சுமதியை பார்க்கிறாள்.
“யார் அந்த க்ருபா?”
“அண்ணி..”
தெரிந்துவிட்டதே என்ற அதிர்வு அவள் கண்களில்…
“நானும் காதலை கடந்து வந்தவள்தான். என்னை உன் சிநேகிதியாக நினைச்சு மறைக்காம எல்லாத்தையும் சொல்லு சுமதி”.
சுமதி தன் காதலை சாந்தியிடம் சொல்கிறாள்.
“அண்ணி எல்லாத்தையும் உங்ககிட்டே சொல்லிட்டேன். நீங்கதான் எங்க காதல் நல்லபடியா கல்யாணத்தில் முடிய உதவணும்”.
“அந்த க்ருபாகரனுக்கு சொந்தம்னு யாருமில்லையா சுமதி”.
“சின்ன வயசிலேயே பெத்தவங்க இறந்துட்டாங்க. அவங்க சித்தப்பாதான் அவரை வளர்த்திருக்காரு. இப்ப சித்தப்பாவும், அவரும்தான் இருக்காங்க. ரொம்ப நல்லவர் அண்ணி. இவ்வளவு பெரிய பதவியில் இருக்கோம்ங்கிற கர்வம், ஆடம்பரம் அவர்கிட்டே கிடையாது. சொந்தமா வீடு, கார்னு சகல வசதிகளோடு இருக்காரு”.
“அதுதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு”.
‘அண்ணி..”
“ஆமாம் சுமதி. என் நிலை உணராம, காதல்தான் பெரிசுன்னு இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தேன். அவங்க அந்தஸ்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவன்னு இன்னும் அத்தை என்னை வார்த்தைகளால் காயப்படுத்தறாங்க. நீ சொல்றதை பார்க்கும்போது, அவர் எல்லா விதத்திலும் நம்மைவிட உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கார்னு படுது. நாளைக்கு இதனால உன் வாழ்க்கையில எந்த பிரச்சினையும் வந்துட கூடாது சுமதி”.
“அவர் ரொம்ப நல்லவர் அண்ணி. அவருக்கு எங்கம்மா மாதிரி தேளாக கொட்ட யாருமில்லை. நீங்க பயப்படாதீங்க. உங்க மனசுக்கு திருப்தி வேணுமினா, க்ருபாவை நீங்க நேரில் சந்திச்சு பேசுங்க”.
“இந்த விஷயம் நம்ப ரெண்டு பேருக்குள்ளே இருக்கட்டும். உன் படிப்பு நல்லவிதமா முடியணும். அத்தை எந்த காரணம் கொண்டும். இப்போதைக்கு தெரியக்கூடாது”.
“சரி அண்ணி.”
“நீ படுத்து தூங்கு சுமதி, குட் நைட்”,
“அண்ணி…”
அவள் கைகளை பிடிக்கிறாள்.
“அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது அண்ணி…”
மெல்லிய புன்சிரிப்பை படர விட்டவள்… பதிலேதும் சொல்லாமல் அறைக் கதவை திறந்து வெளியே வருகிறாள்.
அத்தியாயம்-7
காலையில் எழுந்திருக்க விடாமல் மயக்கம் வர, கமலம் படுத்திருந்தாள். இரண்டு நாட்களாகவே உடம்பு சரியில்லை. சமாளித்து கொண்டுதான் வேலைகளை பார்த்தாள். கிரிஜாவிடம் சொன்னால், நிச்சயம் கோபப்படுவாளே தவிர, அவளிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. இன்று அவளால் எதையும் செய்ய முடியாது என்பது நன்றாக தெரிந்தது.
லோகுவிடம் சொல்ல வேண்டும்.
“என்னாச்சு… உங்கம்மா படுக்கையை விட்டு எழுந்திருக்க மனசில்லாமல் படுத்திருக்காங்க. போய் என்னன்னு கேளுங்க.”
“உடம்புக்கு ஏதும் முடியலைடா. இத்தனை நேரம் படுக்க மாட்டாங்களே…”
“அம்மா, அம்மா…”
மெல்ல கண் திறக்கிறாள்.
“மயக்கமா இருக்கு லோகு. ஒரு வாரமாகவே உடம்பு சரியில்லை. டாக்டர்கிட்டே கூட்டிட்டு போறியா…”
அவன் பதில் சொல்லும் முன் வேகமாக அங்கு வருகிறாள்.
“உங்களுக்கு நேரமாகலையா. போய் கிளம்பற வழியைப் பாருங்க. கஷாயம் ஏதும் போட்டு குடிச்சா சரியாயிடும். இப்படி தொட்டதுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓட முடியாது”.
“அம்மா… கொஞ்ச நேரம் கழிச்சு கஷாயம் போட்டு குடி. நான் சாந்திக்கு போன் பண்றேன். அவ வந்து பார்த்துட்டு போவா.”
“அதை செய்ங்க. அம்மா, அம்மான்னு உருகுவாளே… அவளே வந்து பார்க்கட்டும். முடிஞ்சா டாக்டர்கிட்டே கூட்டிட்டு போகட்டும்”.
“கடவுளே… என்னை ஏன் இன்னும் இந்த உலகில் வச்சிருக்கே. அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் என்னை உன்னிடத்தில் எடுத்துக்கப்பா.”
மனம் பிரார்த்திக்க, கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது.
“மாமா, அம்மாவுக்கு முடியலையாம். போன் பண்ணினாங்க. போய் பார்த்துட்டு டாக்டர்கிட்டே காண்பிச்சுட்டு வரேன்.”
“போயிட்டு வாம்மா. பிரபு ஸ்கூல் விட்டு வந்தா நான் பார்த்துக்கிறேன். அம்மாவை போய் கவனி. பாவம் வயசான மனுஷி.”
“ரொம்ப நல்லாயிருக்கு. ஏன் இவதான் அந்த குடும்பத்தை தாங்கறாளா… அவ அண்ணன், அண்ணி என்ன செய்யறாங்க. உங்க கிட்டே கேட்டதும் உடனே போயிட்டு வான்னு அனுமதி கொடுக்கிறீங்க.”
“அம்சா… பாவம் சாந்தி… அம்மாவுக்கு முடியலைன்னு பரிதவிக்கிறா… நீ என்ன பேச்சு பேசற.. இங்கே பாரு… அவ அனுமதி கேட்டு போக சின்ன பிள்ளை இல்லை. தேவையில்லாமபேசி, மனசை கஷ்டப்படுத்தாதே”.
சொன்னவர்…
“நீ கிளம்பு சாந்தி”.
அம்சவல்லி கோபமாக உள்ளே போக, முந்தானையால் முகத்தை துடைத்தபடி, தெருவில் இறங்குகிறாள் சாந்தி.
டாக்டர் சரவணன் கிளினிக்.
கூட்டம் சற்று குறைவாக இருந்தது.
டோவிலிருந்து அம்மாவின் கைபிடித்து இறக்குகிறாள்.
“இவர் புதுசா வந்திருக்காரு. நல்லா பார்க்கிறான்னு சொன்னாங்க. அதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.”
டோக்கன் வாங்கி கொண்டு உட்கார, அரைமணி நேரத்தில் அவர்களுக்கான அழைப்பு வந்தது.
“இவங்களுக்கு ஷுகர் அதிகமாக இருக்கு. அதனால்தான் மயக்கம், பிரிஸ்கிரிப்ஷன் படி மாத்திரைகளை கொடுங்க. இன்ஜக்ஷன் போட்டிருக்கேன். மயக்கம் குறைஞ்சுடும். இவங்களுக்கு எல்லா டெஸ்ட்டும் பண்ணனும். ஒரு வாரம் கழிச்சு திரும்ப கூட்டிட்டு வாங்க.”
“தாங்கியூடாக்டர்… ஃபீஸ்..”
“வேண்டாம்.”
“டாக்டர்”
“உங்களுக்கு என்னை தெரியலை. எனக்கு நீங்க யார்னு தெரியும். நீங்க மிஸஸ்.சாந்தி திவாகர்தானே.”
“ஆமாம்”.
“நான் டாக்டர் திவாகரோட ப்ரெண்ட் திருச்சியில் இருந்தேன். இப்ப சென்னைக்கு வந்து நான்கு மாதமாகுது. உங்க கல்யாணத்துக்கு வந்தேன். உங்களுக்கு ஞாபகம் இல்லைன்னு நினைக்கிறேன்”.
‘ஸாரி டாக்டர் மறந்துட்டேன்”.
“இட்ஸ் ஓகே திவாகர் மாதிரி நல்ல ப்ரெண்ட்டை இழந்துட்டோம். உங்க இழப்புதான் அதிகம். தயவுசெய்து உங்க துக்கத்தை கிளறேன்னு தப்பா நினைக்காதீங்க சாந்தி…”.
மௌனமாக இருக்கிறாள்.
“ நீங்க வேலையில் இருந்தீங்களே. திரும்ப ஓர்க் பண்றீங்களா?”
“இல்லை டாக்டர். வீட்டில்தான் இருக்கேன்.”
“உங்களுக்கு ஒரு மகன் இல்லையா.”
“ஆமாம். பிரபு யுகேஜி போறான்.”
“உங்களுக்கு எப்ப எந்த உதவி தேவைப்பட்டாலும், தாராளமாக என்னை தேடி வரலாம். நீங்க திரும்ப வேலைக்குப் போக பிரியப் பட்டால், என் ஹாஸ்பிடலில் தாராளமாக வந்து சேரலாம். இதை நான் என் நண்பனுக்கு செய்யற உதவியாகத்தான் நினைக்கிறேன்.”
“உங்க அன்புக்கு நன்றி. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சயம் வரேன். தாங்க்யூ டாக்டர்.”
அம்மாவின் கைபிடித்து அழைத்து, வெளியே வருகிறாள்.
“அந்த டாக்டர். ரொம்ப நல்லவராக இருக்காரு சாந்தி. மாப்பிள்ளையின் நண்பர் போலிருக்கு. எவ்வளவு அன்பாக பேசறாரு.”
“ம்… மாப்பிள்ளை இருந்திருந்தா வீட்டிலேயே எனக்கு ராஜ வைத்தியம் நடந்திருக்கும். எதுக்கும் கொடுப்பினை இல்லாம போச்சே.. “
அம்மா பேசுவதை காதில் வாங்காதவளாய். அங்கு வரும் ஆட்டோவை கைநீட்டி நிறுத்துகிறாள்.
“அம்மா, இந்த கஞ்சியை குடிச்சுட்டு மாத்திரை போட்டுக்க. இப்ப எப்படியிருக்கு?”
“எவ்வளவோ தேவலாம். நீ ஏதும் சாப்பிடலையே சாந்தி, ஒரு வாய் காபியாவது போட்டுக் குடி”.
“வேண்டாம்மா. அண்ணி ரூமைவிட்டே வெளியே வரலை. வந்தவளை வான்னு கூப்பிட கூட மனசில்லை. தேவையில்லாமல் நாளைக்கு உன்னை ஏதாவது சொல்லி காயப்படுத்துவாங்க. நான் வீட்டுக்கு போய் பார்த்துக்கிறேன். நீ இரண்டு நாளைக்கு படுத்து ரெஸ்ட் எடும்மா. அண்ணிக்கு பயந்து வேலை செய்து இழுத்து விட்டுக்காதே.”
“நாம ரெண்டு பேருமே பாவப்பட்ட ஜென்மமா பிறந்துட்டோம். உனக்கும் வாழ்க்கையில் சந்தோஷமில்லை. எனக்கும் நிம்மதி யில்லை.”
“அம்மா இப்படி பலதையும் நினைச்சு மனசை போட்டு வருத்திக்காதே. இந்த பாத்திரத்தில் கஞ்சியிருக்கு. பசிக்கும்போது குடி. நான் வரட்டுமா. இரண்டு நாள் கழிச்சு வரேன்.”
டாக்டர் என்ன சொன்னார் எதுவும் கேட்காமல், இவர்களை பார்த்ததும் வாசல்கதவை திறந்துவிட்டு ரூமிற்குள் சென்று கதவடை கொண்ட அண்ணியிடம் சொல்லாமல் புறப்படுகிறாள் சாந்தி.
அத்தியாயம்-8
வாசலில் நான்கு லாரிகள் கம்பிகள் ஏற்றப்பட்டு நயாராக இருக்க… ஸ்டீல் பாக்டரியின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தினுள் நுழைந்தார் சூப்பர்வைசர்.
“எம்.டி.வந்தாச்சா?”
“கார் நிக்குதே பார்க்கலையா.. “
“இந்த லெட்சரில் கையெழுத்து வாங்கணும்.”
“உள்ளே போங்க பாஸ் ரூமில்தான் இருக்காரு”.
மெல்ல தட்டி உள்ளே நுழைகிறார்.
“என்ன ராமானுஜம் லோடு ஏற்றி தயாராக இருக்கு அப்படி தானே.”
“ஆமாம் சார்.”
“கொண்டாங்க”
கையெழுத்து போட்டு தந்த தினகர், கம்ப்யூட்டரில் மூழ்கினான்.
‘ம்… இந்த சின்ன வயசிலேயே பாக்டரிக்கு முதலாளியாக இருக்காரு நல்ல திறமைசாலி. இன்னும் கல்யாணமாகலை. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ.’
வெளியேறினார் சூப்பர்வைசர்.
“சார், உங்களை பார்க்க உங்க ரிலேடிவ் பரமானந்தம்ங்கிறவரு வந்திருக்காரு. பரமு மாமான்னு சொன்னா தெரியும்னு சொன்னாரு”.
அட்டெண்டர் சொல்ல…
‘பரமு மாமா எதுக்கு வீட்டிற்கு வராமல் என்னை தேடி ஆபிசிற்கு வந்திருக்கார்’.
நினைத்தபடி…
“வரச்சொல்லுப்பா.”
உள்ளே நுழைந்தவரை எழுந்து வரவேற்றான்.
“வாங்க மாமா, நீங்க பாக்டரிக்கு வரமாட்டீங்க என்னை தேடி இங்கே வந்திருக்கிங்க வீட்டுக்கு வந்திருக்கலாமே மாமா.”
“இருக்கட்டும்பா. உன்கிட்டே சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கு, வீட்டில் அம்சா, உன் அப்பா இருப்பாரு. இது உன்கிட்டே பேசி முதலில் தெளிவுபடுத்திக்க வேண்டிய விஷயம்.”
“என்ன மாமா புதிர் போடறீங்க சரி. முதலில் ஏதாவது ஜூஸ் குடிங்க வெயில் நேரம் வந்திருக்கீங்க.”
இண்டர்காமில் சொல்ல. சிறிது நேரத்தில் ஆப்பிள் ஜூஸ் வர…
ரசித்து குடிக்கிறார்.
“இப்ப சொல்லுங்க மாமா.”
“வீட்டில் உன் கல்யாணத்துக்கு பெண் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா தினகர்”.
கல்யாண பேச்சை எடுத்ததும் லேசாக முகம் சிவக்க…
“எனக்கென்ன அவசரம் மாமா. சுமதி கல்யாணம் முடியணுமே.”
“அதான்பா. இரண்டையும் ஒரே சமயத்தில் முடிக்க நல்ல சம்பந்தத்தோடு வத்திருக்கேன்.”
“புரியலை மாமா.”
“புரியும்படியாவே சொல்றேனே. கோயமுத்தூரில் அபர்ணா டெக்ஸ்டைல்ஸ் மில் கேள்விப்பட்டிருப்பியே… அப்புறம் அபர்ணா ரைஸ்மில், அபர்ணா தியேட்டர்.”
“இதுக்கெல்லாம் வாரிசாக இருக்கிற அவர் பெண்ணுக்கும், பையனுக்கும் ஒரே இடத்தில் கல்யாணத்தை முடிக்கணும்னு ரகுபதி பிரியப்படறாரு. அண்ணன், தங்கை இருக்கிற நல்ல குடும்பம். கௌரவமான இடமாக இருந்தா சொல்லுங்கன்னு சொன்னாரு.”
“அவர் எனக்கு ரொம்ப நாள் பழக்கம். கோடிக்கணக்கில் சொத்து இருக்கு உனக்கும், சுமதிக்கும் இந்த இடம் அமைந்தால் இரண்டு பேரும் கோடீஸ்வரர்களாகிடுவீங்க. அந்த பொண்ணு அபர்ணா பார்க்க தங்கச்சிலை மாதிரி இருக்கும்.”
“செல்வ செழிப்பில் வளர்ந்தவ. பார்க்க தேவதை மாதிரி ஜொலிப்பா. இந்த போட்டோவை பாரேன்.”
அவன் முன் நீட்ட…
உண்மையில் மயங்காத குறையாக வியக்கிறான்
என்ன ஒரு அழகு, காந்த விழிகள், புன்னகை தவழும் இதழ்கள்…. செல்வ செழிப்போடு, இப்படிப்பட்ட அழகரசி மனைவியாக வாய்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
“என்ன தினகர், போட்டோவை பார்த்ததும் அசந்துட்டே. நேரில் இன்னும் அழகா இருப்பா. உனக்கு பிடிச்சிருக்கா.”
புன்னகையுடன் கேட்க…
“என்ன மாமா, இதையெல்லாம் என்கிட்டே கேட்டுகிட்டு அம்மாவை பார்த்து பேசுங்க. ஆனா… இப்படி ஒரு அழகி எனக்கு மனைவியாக வர கொடுத்து வச்சிருக்கணும்னு தோணுது”.
“அழகி மட்டுமில்லப்பா, கோடீஸ்வரி”.
“பையன் என்ன செய்யறான் மாமா.”
“படிப்பு சரியா வரலை. அப்பாவோட பிஸினஸில் துணையா இருக்கான். பொண்ணு அம்மாவை போல அழகுன்னா… பையன் அப்பாவை போல நிறம் கம்மி. அதுவுமில்லாம சின்ன வயசில் போலியோ வந்து ஒரு காலை சற்று வளைச்சு நடப்பான். இதை பெரிய குறையாக சொல்ல முடியாது. பணம், காசு எக்கசக்கம். இந்த குறையை மறைச்சுடும். ஆனா சுமதிக்கு கட்டிக்க வீட்டில் சம்மதிக்கணுமே”.
‘கடவுளே… என்ன இது… இப்படியொரு வாய்ப்பை கொடுத்து, நடக்குமாங்கிற சந்தேகத்தையும் கொடுத்திட்டியே… ‘
“மாமா… அப்பா அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியலையே. சுமதியும் சம்மதிக்கணும்”.
யோசனையுடன் பார்த்தான்.
“நீதான் சம்மதிக்க வைக்கணும் தினகர். ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து வச்சிருக்காரு. கால் கொஞ்சம் வளைஞ்சிருக்கு. அவ்வளவுதான். நடக்கும்போது கொஞ்சம் சாய்ந்து நடப்பான். மத்தபடி பார்க்க கம்பீரமாக இருப்பான். அதனால் தான் இது விஷயம் வீட்டில் பேசாம் உன்கிட்டே வந்து சொன்னேன். நீயே அம்மாகிட்டே பேசு. நான் சொன்னதாக சொல்லு. அம்சா நீ எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா”
“உங்கப்பா தான் கொஞ்சம் முரண்டு பண்ணுவாரு. சுமதி என்ன சின்ன பெண். நல்லது, கெட்டது எடுத்து சொல்லு… நாளைக்கு ராணி மாதிரி வாழலாம். எல்லாம் உள் கையில்தான் இருக்கு. ஒரு வாரம் கழிச்சு போன் பண்றேன். சுமுகமாக முடியும்னா சொல்லு… நேரில் வந்து பேசி முடிக்கிறேன். வரட்டுமா” -எழுந்திருக்க…
“மாமா, இந்த போட்டோலை நான் வச்சுக்கலாமா?”
“தாராளமா, போட்டோ பின்னால் அபர்ணா செல்போன் நம்பர்கூட இருக்கு. வேணுமினா பேசிப்பாரு. அதிர்ஷ்ட தேவதை உன் வீட்டு வாசலில் வந்து நிக்கறா.. உள்ளே அழைக்கிறதும், வெளியே அனுப்புறதும் உன் கையில்தான் இருக்கு…”
– தொடரும்…
– பிறை தேடும் இரவு (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2014, செல்வி பெண்கள் நாவல், சென்னை.