தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,779 
 
 

மகனின் வருகைக்காக ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் விஸ்வநாதன்.
“”என்னங்க… இப்படி ரொம்ப நேரமா குட்டி போட்ட பூனை மாதிரி ஹாலையே சுத்தி வர்றீங்க… என்ன விஷயம்?” என்ற மனைவி காமாட்சியின் பேச்சை கேட்டும், கேளாதவராய் நடந்து கொண்டிருந்தார்.
“”ஏங்க… காலையில தான் கரெக்டா வாக்கிங் போயிட்டு வந்தீங்களே… பிறகேன் ஹாலுக்குள்ளே வாக்கிங் போறீங்க… அப்படி என்ன யோசனை?” என்று கிண்டலடித்த மனைவியை, லட்சியம் செய்யாமல் நடந்து கொண்டிருந்தார்.
கும்பகோணம் பக்கம் உள்ள, ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்தவர் விஸ்வநாதன். தன் ஒரே மகன் மோகன் படிப் பிற்காக கொஞ்சம், கொஞ்சமாக இருந்த நில புலன்களை விற்று, அவனை சாப்ட்வேர் இன்ஜினியராக் கினார்.
மகனுக்கு, சென்னையில் பெரிய எம்.என்.சி., கம்பெனியில் வேலை கிடைத்ததும், கல்யாணம் முடித்து சென்னையில் குடித்தனம் வைத்தார்.
மற்ற பிள்ளைகள் போல் இல்லாமல், மோகன், தாய் – தந்தை மீது, மிகுந்த பாசம் கொண்டிருந்தான். அவர்கள் மீது உயிரையே வைத்திருந்தான்.
வயதான காலத்தில், பெற்றவர்கள் கிராமத்தில் தனியே இருந்து கஷ்டப்படுவதை கண்டு வருத்தப்பட்டான்.
பிறந்த மண்!“அப்பா… எனக்காக நீங்க கஷ்டப்பட்டது போதும். நான் இப்போ கை நிறைய சம்பாதிக்கிறேன்; வசதியான வாழ்க்கை வாழறேன். இப்படி உங்களை கிராமத்துல விட்டுட்டு நிம்மதியா இருக்க முடியலைப்பா… இது என்ன அந்த காலத்து காரை வீடு தானே… இத வித்துட்டு என்னோட வந்திடுங்கப்பா…’ என்று சொன்னவன் அதோடு நிற்காமல், தந்தை எவ்வளவோ மறுத்தும் கேளாமல், அந்த சிறிய காரை வீட்டை தன், பெரிய தாத்தா பேரனிடம் விற்று விட்டான்.
மூன்று வருடமாய் சென்னையில் தான், மகனோடு காலத்தை ஓட்டுகிறார்.
மருமகள் புனிதாவும் சரி, பேரப் பிள்ளைகள் யாழினி, தருணும் சரி அவரையும், அவர் மனைவியையும், மரியாதையோடு அன்பு காட்டி நடந்துகின்றனர்.
இன்று காலை ஆபீசில் இருந்து, போன் செய்தான் மோகன்.
“அப்பா… எங்க ஆபீஸ் அக்கவுன்டன்ட் மகாதேவனோட அப்பா இறந்து விட்டார். நம்ம பக்கத்து தெருவில் லக்கி காம்ப்ளக்ஸ், தேர்டு புளோர்ல தான் வீடு, என் சார்பா நீங்க போய் விசாரிச்சிட்டு வந்துடுங்க…’
“என்ன மோகன்… நீ போய் விசாரிக்கிறதுதானே முறை?’
“சாரிப்பா… நான் இப்போ சவேரா ஓட்டல்ல, ரொம்ப முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். மீட்டிங் முடிந்து டின்னர் நடக்கும், அதுல கம்பெனி சார்பா நான் கண்டிப்பா கலந்துக்கணும். நான் வர நைட் ஆயிடும். ப்ளீஸ்ப்பா… போயிட்டு வாங்க!’ என்று போனை துண்டித்தான்.
துக்கம் நடந்த வீட்டிற்கு சென்றார்.
அது, துக்க வீடு என்பதற்கான அடையாளமே இல்லை.
ப்ரீசர் பாக்சில், பிணம் வைக்கப்பட்டிருந் தது.
பிணத்துக்கு அருகில் யாரும் இல்லை.
வெளியில், எல்லாரும் சேர் போட்டு மாநாட்டிற்கு வந்தது போல அமர்ந்திருந்தனர். அவர்கள் ஷேர் மார்க்கெட் நிலவரம் பற்றியும், ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியும், காரசாரமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
வந்தவர்களுக்கு காபி, டீ கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தனர்.
“ஏம்பா… இழவு வீடுன்னா, வீட்டுக்கு முன்னாடி பச்சைப் பந்தல் போடணும்… சங்கு ஊதி, சேகண்டி அடிக்கணும்… அதையெல்லாம் செய்ய மாட்டீங்களா?’ என்று வருத்தமாக கேட்டார் விஸ்வநாதன்.
“ஐயா… நீங்க கிராமத்து மனுஷன். அதான் புரியாம பேசறீங்க… நாம இருக்கிறது அபார்ட்மென்ட்ல… இங்கே, எங்கே போய் பச்சைப் பந்தல் போட முடியும்… அது மட்டுமல்லாம இங்கே சங்கு – சேகண்டி அடிச்சா அபார்ட்மென்ட்ல இருக்கிற, மற்ற குடும்பங்கள் எல்லாம் தொந்தரவா இருக்குன்னு சண்டைக்கு வந்துடுவாங்க…’ என்று, ஒரு நகரத்து மனிதர் பதிலளித்தார்.
கிராமத்தில் இருந்து இழவிற்கு வந்த, ஒரு பெண்மணி நெஞ்சில் அறைந்து கொண்டு ஒப்பாரி வைத்தாள்.
“அய்யா… செக்க செவந்த சீமானே… சீரோட வாழ்ந்தீங்களே…’ என்று, அவள் பெருங்குரலெடுத்து ஒப்பாரி பாட… நகரத்து மனிதர்கள், அவளை வியப்புடன் பார்த்தனர்.
உடனே, ஒரு பெண்மணி ஓடிவந்து, “இங்க பாருங்க… இது கிராமம் இல்ல. மூக்க சிந்திப் போட்டு, அசிங்கமா ஒப்பாரி வைக்காதீங்க…’ என்று அவள் வாயை அடைத்தாள்.
“பாடியை எடுங்கப்பா… அக்கம், பக்கத்து ப்ளாட்ல, ஒரு மாதிரியா பேசறாங்க… “நேத்தே செந்த பிணம், தொற்று நோய் கிருமிகள் பரவிடும்…’ன்னு புலம்பறாங்க…’ என்று, ஒரு பெரிய மனிதர் துரிதப்படுத்தினார்.
பிணத்தை கழுவவில்லை. எந்த சடங்கும், சம்பிரதாயமும் செய்யவில்லை.
“அமரர் ஊர்தி’ ஒன்று வந்தது. அதில் ஏற்றிக் கொண்டு, மின்சார சுடு காட்டில் தகனம் செய்ய சென்றனர்.
ஒரு காகம் குருவி இறந்தால் கூட, அதன் இனமே ஒன்று கூடி கதறும். ஆனால், இங்கு ஒரு மனிதன் இறந்து விட்டான். அக்கம், பக்கத்து ப்ளாட்டில் இருந்து ஜன்னல் வழியாக கூட, யாரும் எட்டிப் பார்க்கவில்லை. இதையெல்லாம் கண்டு நொறுங்கி போனார் விஸ்வநாதன்.
அதனால் தான் மகனுக்காக, இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்.
டின்னர் முடித்து, இரவு, 8:00 மணிக்கு வந்தான் மோகன்.
மகன் தலையை கண்டதும், ஓடிவந்து அவன் முன் நின்றார் விஸ்வநாதன்.
“”மோகன்… உன்னோட, 10 நிமிஷம் பேசணும்பா.”
“”சொல்லுங்கப்பா… என்ன விஷயம்?” என்று புருவம் நெறித்தான் மோகன்.
“”மோகன்… நம்ம சொந்த ஊர்ல, நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்தில், சின்னதா ஒரு வீடு கட்டி, என்னையும், உன் அம்மாவையும், அங்கே கொண்டு போய் விட்டுடுப்பா.”
“”அப்பா… நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்… உங்க மருமக, ஏதாவது சொன்னாளா?” பதறினான் மோகன்.
“”அய்யய்யோ இல்லப்பா… என் மருமகள் சொக்கத்தங்கம். என்னை ஒரு குறையும் இல்லாம ராஜாவாட்டம் நீங்க பார்த்துக்கறீங்க. ஆனா, நான் சாகற காலத்தில், என் சொந்த பூமியில் சாகணும். என் உயிர் பிரியும் போது, என்னை சுத்தி என் சொந்த பந்தமா நிற்கணும்.”
“”ஏம்பா… இப்படி எல்லாம் பேசறீங்க?”
“”இல்ல மோகன்… நான் சாஸ்திரம், சம்பிரதாயமா வாழ்ந்த கிராமத்தான். இங்கே செத்துப் போனா, என் சாவுக்கு ஒரு அர்த்தமே இருக்காதுப்பா. என் சாவுக்கு தென்னை ஓலை வெட்டி, பச்சைப் பந்தல் போடணும். தாரை தப்பட்டை அடித்து, சங்கு – சேகண்டி ஊதணும். என் ஊர் ஆத்து தண்ணிய கொண்டு வந்து, என்னை கழுவி குளிப்பாட்டணும்…
“”நான் தூக்கி வளர்த்த, என் செல்லமான பேரப் பிள்ளைகள், எனக்கு நெய் பந்தம் பிடிக்கணும். என் பிரேதத்தை, பச்சை மூங்கில் பாடை கட்டி, நாலு பேர் தூக்கி சுமக்கணும். என் ஒரே பிள்ளை நீ கொள்ளி சட்டியை சுடுகாடு வரை தூக்கி வந்து, உன் கையால், எனக்கு கொள்ளி போடணும். என் பிறந்த மண்ணுல தான், என் உடம்பு வேகணும்.”
“”ஏம்பா… இப்போ எதுக்கு இந்தப் பேச்சு?” கண்கலங்கி நின்றான் மோகன்.
“”கண்ணா… இந்த ஊரில் தண்ணீர் தான் பஞ்சம் என்றால், கண்ணீருக்கும் பஞ்சம் தான் போலிருக்கு. ஒரு மனிதன் நல்லவனா வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமே, அவனுக்காக அவன் மரணிக்கும் போது, நாலு பேர் சிந்தும் கண்ணீர் தான்…
“”ஒரு சாவு விழுந்துட்டா, நம்ம ஊர்ல எவன் வீட்டில் என்ன வேலை கிடந்தாலும், போட்டது போட்டபடி ஓடி வந்துடுவாங்க. உயிர் பிரிந்ததில் இருந்து, சுடுகாடு கொண்டு சேர்த்து, 16ம் நாள் காரியம் செய்ற வரைக்கும், அங்காளி, பங்காளி, உற்றார், உறவு முறையெல்லாம், ஒண்ணா கூடி நின்று எடுத்துக்கட்டி செய்வாங்க; இங்கே யாரும் இழவுக்காக வரமாட்டேங்கறாங்கப்பா…
“”ஒரு மனுஷன் சாகும் போது, பந்தலில் கூடற கூட்டத்தைப் பார்த்து தான், அவன் எவ்வளவு பேர் மனசுல இடம் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்க முடியும். நம்ம ஊர்ல செய்ற, ஒவ்வொரு சடங்கிற்கும், ஒரு புனிதமான அர்த்தம் உண்டுப்பா… நீ எனக்கு கொள்ளிப் போட்டு,
16 நாள் விரதம் இருந்து காரியம் பண்ணணும்; செய்வியாப்பா?”
“”கண்டிப்பா… உங்க ஆசையை நான் நிறைவேற்றுவேன். நம்ம சொந்த கிராமத்துல உடனே, ஒரு மனையை வாங்கி, பெரிய வீடா கட்டறேம்பா. அது, உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தாம்பா…
“”உங்களை மாதிரியே, நானும் வயசான காலத்துல, நம் ஊருக்கே வந்து தங்கிடணும். நானும் சாகும் போது, என் பிறந்த மண்ணோட கலந்திடணும்பா,” என்ற மகனை, நெஞ்சோடு சேர்ந்து ஆரத்தழுவித் கொண்டார் விஸ்வநாதன்.

– தேவி சந்திரன் (நவம்பர் 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *