விமான நிலையத்தின் வாகணத்தரிப்பிடத்தின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கிறேன்,வாகணத்துள் எனது மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள்.இன்னும் ஒரு மணித்தியாலத்தால் அவர்கள் விமானத்திற்குள் இருந்தேயாகவேண்டும்,வருடத்தின் இருமுறை நடைபெறும் தற்காலிக பிரிவுதான் இருந்தும் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை,
வியர்வை என்று பொய்சொல்லிக்கொண்டு கைக்குட்டையை நனைத்துகொள்கின்றேன்,
ஊரில் இருந்து அதிகாலை புறப்படும்போதே அழக்கூடாது என்று எனது மூத்தபேரனிடம் சொல்லியிருந்தாலும் சிலவேளைகளில் நானே சிறுபிள்ளையாகிவிடுவேனோ என்பதுபோல் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொள்கிறேன்,
அவன்… பேரன் ஓமானில் ஆண்டு இரண்டில் படித்துக்கொண்டிருக்கிறான்,அடுத்தது இரு பேத்திகள் “எனது ஊர் ஓமான் தான் நான் அங்குதான் போகப்போறன்” இப்படி அடம்பிடிக்கின்ற விபரம் புரியாத வயது,அடுத்தது எல்லாத்திற்கும் சிரித்துக்கொள்ளும் கைக்குளந்தை,
பேரன்… வயதை மீறிய விபரம் தெரிந்தவன் எண்று அடித்துச்சொல்லலாம் நாட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் “எனக்கு இப்போதுதான் நல்லசந்தோசம் என்க்கு சிறிலங்காதான் பிடிக்கும்” இப்படி எனது காதுக்குள் குசுகுசுக்கத்தவறமாட்டான் அதேவேளை “நான் சொன்னதாக யாரிடமும் சொல்லக்கூடாது’என்றும் ஒரு வேண்டுகோளும் சொல்லுவான்.
வாப்பா ஏதாவது பேசிவிடுவார் என்ற ஒருபயம் அவனுக்கு.
காலையில் ஊரில் இருந்து புறப்படும்போது அழுதவந்தான் என்னைப்பார்த்து அழுவதும் வாப்பா பார்த்தால் வேறுபக்கம் பார்வையை செலுத்துவதுமாக என்மடியில் படுத்துக்கொள்வான்,நான் அவனது தலையை கோரிவிடுவேன்,
“உம்மா நாணா ஏன் அழுகிது ஊருக்குதானே போறம் அழவேணாம் எண்டு சொல்லுங்க உம்மா”
அது விபரம் புரியா பேத்தியின் வேண்டுகோள், பதில் சொல்லமுடியாமல் எனது மகளின் கண்கள் கலங்கும்போது அந்த வினாடியில் நான் எங்கோ சென்றுவிடுகிறேன்
மதிய சாப்பாட்டுக்காக குறுநாகலில் சாப்பாட்டுக்க்டையில் சாப்பிடும்போது “நான் ஒங்களோடத்தான் ஊருக்குவரப்போறன் ஊரில் ஒழுங்கா படிப்பன் என்க்கு ஓமான் புடிக்கல்ல சிறிலங்காதான் வேணும் உம்மாகிட்ட சொல்லுங்க தாத்தா” ரகசியமாக அடம்பிடிக்கத்துடங்கிவிட்டான், ”முதல்ல சாப்பிடுங்க அப்புறம் உம்மாவிடம் சொல்றன்” அவன் எனது பேச்சைக்கேட்பதாக இல்லை
வாப்பா,உம்மா,தங்கசி எல்லாரும் போகட்டும் நான் ஒங்களோடத்தான் ஊருக்கு வருவன்”
எனக்கு சாப்பிடவே முடியவில்லை சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.
’எங்களை .ஓமானுக்கு அனுப்பத்தான் போறீங்களா ”என்னால் பதில் சொல்லமுடியவில்லை “கெதியா சாப்பிடுங்க நேரம்போகுது வாப்பா ஏசும்”அவனது தலையை கோரியபடியே மொளனமானேன்.
இன்னும் அரைமணித்தியாலங்களில் விமானத்திகுள் இருந்தாகவேண்டும்
உள்ளே சென்று வழியனுப்புவதற்காக் ஒரு பற்றுச்சீட்டை வாங்கிக்கொள்கிறேன்
”நாம் ஒரு புகைப்படம் எடுத்தால் என்ன”எனது வேண்டுகோளுக்கு அவன் “சரி” என்றான்
பிரயாணிகள் எல்லோரும் வரிசையாக் நிற்கின்றார்கள் “எனக்கு ஏலா நான் ஊருக்குபோகப்போறன்” ஓ என்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான் எனக்கும் அப்படித்தான் அழவேண்டும்போல் இருந்தது அப்புறம் உனக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் மனதை தேற்றிக்கொள் மனசாட்சி உறுத்தியது,
”நீங்கள் உள்ளே வரவேண்டாம் இவன் சரியாக அழுகிறான் “மகள் என்னிடம் வேண்டிக்கொண்டபோது நான் சங்கடப்பட்டவனாக மொளனமானேன்,
“மகன் அழாதிங்க இந்தவேக்க தூக்கிங்க” வப்பாசொன்னபோது அழுகையை அடக்கியவனாக சில வினாடிகள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றான்
“ம் போங்க போங்க நேரம் போகுது” மீண்டும் வாப்பாவின் வேண்டுகோள்
என்னையே பார்த்தவனாய் முன்னால் சென்றுகொடிருந்தான்,கன்னங்களை ஈரமாக்கியபடி
நான், அவன் பார்வையை விட்டு மறையும்வரை அழுகையை அடக்கிக்கொண்டவனாய் நின்றுகொண்டிருந்தேன்,
தூரத்தில் மகளும் என்னைப்பார்த்து அழுவது சில நொடிகளுக்குள் மறைந்துவிடுகிறது,
கையில் இருந்த அனுமதி பற்றுச்சீட்டை கிழித்தெறிந்தவனாய் ஒரு நடைப்பிணமாய் விமானநிலையத்தைவிட்டும் வெளியாகிக்கொண்டிருக்கிறேன்,”அவன் இப்போதும் அழுதுகொண்டுதான் இருக்கிறான்”மகள் விமானத்திற்குள் இருந்தவாறு தொலைபேசியில் சொல்லும்போது “உள்ளே போய்யிட்டாங்களா” ஊரில் இருந்து மனைவி தொலைபேசியில் வினவவும் நேரம் சரியாகத்தான் இருந்தது, மனைவிக்கு பதில் சொல்ல முடியாமல் அழுதேன் ,
பிரிவுகள் தற்காலிகம் என்றாலும் அதன் வேதனை கொடுமையானது என்பதை அந்த வினாடிகளுக்குள் கடந்த நொடிகளுக்குள் உணர்ந்துகொண்டேன்.
– இக்கதை ‘தமிழ் மிறர்’ என்ற பத்திரிகையில் கடந்த 14/10/2016 ல் வெளியானது