(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வேம்பு வண்டியிலிருந்து இறங்கி பெல்ட்டைத் தளர்த்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார். சாலை வெறுமையாக இருந்தது. ஒரு கடுதாசு போட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றியது. லுங்கியை மடித்துக் கட்டியபடி பெரிதாகக் கனைத்து, ‘பெட்டியை எடுத்தா’ என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டுப் படி ஏறி சின்ன வீட்டிற் குள் நுழைந்தார்.
வாசலில் வண்டியைக் கண்டு வெளியே வந்த பாப்பா திடுதிப் பென்று உள்ளே வரும் மனிதனைக் கண்டு அச்சமுற்று ஒதுங்கினாள். அவளைக் கண்டதும் வேம்பு லுங்கியை அவிழ்த்து விட்டு, ‘வேணு எங்கே?” என்றார்.
கனமான வேம்புவின் குரல் அவளுக்கு இன்னும் பயமூட்டியது. எங்கோ பார்த்தபடி, “ஆரக் கேட்கிறீங்க?” என்றாள்.
“வேணு-இது அவன் வீடுதானே” என்ற வேம்பு ஓரடி முன்னே வந்து சிரித்தபடி, ”நீ அவன் பெண்டாட்டிதானே?” என்று கேட்டார்.
“நீங்க யாருன்னு தெரியலியே”
வேம்பு பெரிதாக நகைத்துச் சொன்னார்.”வேணு பயலுக்கு அப்பன்னு ஒருத்தன் இருந்தானே-சிங்கப்பூருக்கு ஓடிப்போனவன்- அவன்தான் இவன்”
பாப்பா வேம்புவை நிமிர்ந்து பார்த்தாள். ஆச்சரியத்தாலும் -சந்தோஷத்தாலும் என்ன செய்வதென்று ஒரு கணம் தெரியவில்லை. அப்புறம் சமாளித்து, பரபரக்க உள்ளே சென்று பாயை எடுத்து வந்து விரித்து, ”குந்துங்க மாமா” என்றாள்.
“இருக்கட்டும் இருக்கட்டும்” என்ற வேம்புவின் பார்வை பாப்பாவைத் தாண்டி சுவரில் பாய்ந்தது. சுவரில் சின்னதாக ஒரு போட்டோ, பெரிய மீசையோடு. சிங்கப்பூருக்குப் போன புதிதில் எடுத்தது. அதைப் பார்த்து அடங்காத சிரிப்பு வந்தது. சிரித்த படியே அவள் பக்கம் திரும்பினார்.
“போட்டோ பார்த்துப் பார்த்து பழக்கமானதாலே தாங்க மாமா சட்டுன்னு அடையாளம் கண்டுக்க முடிஞ்சிச்சு”
“இல்லாட்டா வெளியே துரத்தி இருப்பே”
“திடுதிப்ன்னு உள்ளே வந்ததும் யாரோ எவரோன்னு பயந்துட்டேங்க மாமா”
”நிஜமாவா” என்று வேம்பு வாசல் பக்கம் வந்தார்.
வண்டிக்கார அல்லாபிச்சை பெட்டியைத் தூக்க முடியாமல் தவித்தபடி இருந்தான். இவர் படியிறங்கி அவன் அருகில் சென்று தோள்மீது கை வைத்து, “ரொம்ப கனக்குதா” என்றார்.
“அசைக்க முடியலீங்க”
“செத்த இப்படிவா” வேம்பு அவன் கையைப்பிடித்து பின்னால் இழுத்துவிட்டுப் பெட்டியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டார்.
“அனாசயமா-புல்லுக் கட்டுக் கணக்காத் தூக்கிட்டீங்களே”
வேம்பு பெட்டியை இறக்கிக் கீழே வைத்தார். பார்வை திடீ ரென்று பாப்பா பக்கம் திரும்பியது. அவரையே பார்த்துக் கொண் டிருந்த பாப்பாவின் பார்வை மரத்தின்மேல் சென்றது. அதைக் கவ னிக்காதது போல வேம்பு வண்டிக்காரனிடம் ஊர் பேரெல்லாம் விசாரித்தார்.
அவன் சொன்னதை யெல்லாம் கேட்டுவிட்டு, ”கனக்குதுன்னா நின்னுட்டா போதுமா. இப்பகூட, ஓடுற உன் வண்டிய நிக்க வைப்பேன்” என்றார்.
“உங்களால முடியாததுங்களா”
“வேலையில இல்லாட்டாலும், வாய் நல்லா இருக்கு”
“பொளப்புன்னு ஒண்ணு இருக்குதுங்களே”
“ஒரு பெட்டியைத் தூக்காததுக்காக உனக்கு ரெண்டணா கொறச்சுத் தரணும். நம்ப காஜா மொகைதீன் பையன்னு சொல்லுற அவரு ரொம்ப வேண்டியவரு. அதுக்காக ரெண்டணா சேத்துத் தரேன்”
வண்டிக்காரனுக்கு இவர் செயல் வியப்பளித்தது. காசை வாங்கி மடியில் செருகிக்கொண்டு ஒரு சலாம் போட்டு விட்டு வண் யைத் திருப்பி ஓட்டினான். அவன் போனதும் வேம்பு பெட்டியைத் தூக்கி வந்து உள்ளே வைத்தார். கொஞ்ச நேரம் அதன் மேலே உட்கார்ந்தபடி வீட்டை பார்வையாலேயே அளந்தார். அப்புறம் திடீ ரென்று மகனைக் காணும் ஆவலில் எழுந்து வாசல் பக்கம் வந்தார்.
“நீங்க குந்துங்க மாமா, இப்ப வந்துடுவாங்க”
“இம்மா நேரம் வயல்ல என்ன பண்ணுறான்”
“எருவுக்கு வண்டி பாக்கணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க”
சாலையையே பார்த்துக் கொண்டிருந்த வேம்பு சட்டென்று திரும்பி, “உனக்கு எப்பக் கல்யாணம் ஆச்சு” என்றார்.
“இந்த ஆனி வந்தா ரெண்டு வருஷம் முடியப் போவுதுங்க மாமா”
”வந்துச்சு, வந்துச்சு. அப்பவே பொறப்பட்டு வரணும்ன்னு பார்த்தேன். முடியல”
”ஆளும் வராம-கடுதாசியும் இல்லாமபோவ நாங்க என்னமோ ஏதோன்னு ரொம்ப பயந்துட்டோங்க மாமா”
“செத்த இடத்துல புல்லும் முளச்சுப் போயிருக்கும்னு நெனெச் சிட்டீங்களா”
“அது இல்லீங்க மாமா”
“என்ன இல்ல” வாசலில் நிற்கச் சலிப்புற்றதுபோல உள்ளே வந்த வேம்பு பெட்டியைத் திறந்து, “பாப்பா இந்தா இதெப் பாரு” என்று ஐந்தாறு புடவைகளை எடுத்து அவளிடம் கொடுத்தார்.
“மாமா, எல்லாம் எனக்குங்களா?”
“பின்ன. ஒரு பயலப் பெத்து போட்டிருக்கேனே. அவனுக்குக் கலியாணமும் ஆயிடுச்சு. மருமவளும் வீட்டுக்கு வந்துட்டப்புறம், கையை வீசிக்கிட்டு சும்மா வந்து நிக்க முடியுமா?”
பாப்பா பதிலொன்றும் சொல்லாமல் புடவைகளை மார்போடு அணைத்தபடி அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்ணாடி, பீங்கான்கள், வளையல்கள், பாததிரங்கள், துணிகள் என்று நாலாவித மான பொருள்களையும் வேம்பு எடுத்துப் பரப்பினார். அத்தனையும் தனக்கு என்கையில் கிளர்ச்சியுற்றாள், கணவன் நினைவு வந்தது. ‘எங்க ஊர் சுத்துதோ’. தூரத்தில் அவன் வருவது தெரிந்தது. அடங்காத களிப்போடு உள்ளே ஓடி வந்து, “மாமா, அவுங்க வராங்க?’ என்றாள்.
பெட்டிமீது கால்போட்டு உட்கார்ந்து சுருட்டு பற்ற வைத்துக் கொண்டிருந்த வேம்பு தீக்குச்சியை இவள்மீது வீசி, “எவுங்க?” என்றார்.
ஒரு கணம் தவித்த பாப்பா, கண்களை உருட்டி வெடுக்கென்று சொன்னாள்: “உங்க மவன்”
புகையை நன்றாக ஊதியபடி, “பெரிய ராசா வரார். வூட்டத் தூக்கி வாசல்ல வை; வாசலத் தூக்கி வூட்டுல வை”
அவளுக்கு எரிச்சல் மூண்டது. ‘சரியான பிசாசாகத்தான் இருக்கணும்-‘ என்று முணுமுணுத்துக் கொண்டு தெருப் பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.
“கோவுச்சுக்கிட்டீயா, பாப்பா” வேம்பு எழுந்து வந்து அவள் தோளில் கை வைத்தார். அவள் மருண்டு பின்னுக்கு ஒதுங்கினாள். ஆனால் அவரோ அதைப் பொருட்படுத்தாமல் புகையை ஊதியபடி வாசல் பக்கம் நடந்தார்.
வேணு செருப்பைக் கழட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.
“வாங்க ராசா, வாங்க”
வேணு நிமிர்ந்து பார்த்தான். நினைவு வந்தது.
“வாங்க அப்பா”
“அடெ, பயலே, உனக்கு ஞாபகம் இத்துப் போவுலடா”
அவன் பதிலொன்றும் சொல்லாமல் தகப்பனாரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஞாவகம் இல்லாம திருதிருன்னு முழிச்சுக்கிட்டு நிப்பேன் நெனெச்சிக்கிட்டு இருந்தேன். அதனாலே நல்லா ஏமாந்துட்டேன்” அவன் ஆனந்த முற்றதுபோல முறுவலித்து, “எப்பப்பா வந் தீங்க?” என்றான்.
“-இப்பதான். செத்த முந்தி”
“வாசல்ல வச்சுதான் பேசிக்கணுமா?” என்றாள் பாப்பா கணவனிடம்,
“கோவிச்சிக்காத அம்மா” என்று வேம்பு அவள் பின்னோடே உள்ளே வந்தார்.
வேணுவுக்கு எட்டு வயதாகும்போது, வேம்பு கப்பல் ஏறினார். கப்பல் ஏறவே மனமில்லை. பையனும் – மனைவியும் மனத்தில் நிறைந் திருந்தார்கள். ஒரு வருஷம் போல இருவர் நினைவும் மிகவும் வருத்தி யது. சம்பாதித்து நிறைய அனுப்பினார் ஆனால் ரொம்ப நாட்களுக்கு அது நீடிக்கவில்லை. இன்னொரு பெண்ணோடு வாழ்வு இணைந்தது; செலவு கூடியது. அடுத்த மாசம் பணம் அனுப்பலாம் என்று ஒரு மாசம் தள்ளிப் போட்டார். அடுத்த மாசம் அடுத்த மாசமென்று தள்ளித் தள்ளி போயிற்று. அப்படி ஆகுமென்று நினைக்கவில்லை. ஆனால் ஆகிவிட்டது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மனைவி இறந்து விட்டதாக ஒரு கடிதம் வந்தது. தானே அவளைக் கொலை செய்துவிட் டதாக வருந்தினார். ஊருக்குச் சென்று மகனைப் பார்க்க வேண்டு மென்று நினைத்தார். அந்த நினைப்பும் மனத்தில் வெகு நாட்களுக்குக் கால் கொள்ளவில்லை. விரைவிலேயே தனக்கொரு மகன் இருப்பது கூட அவருக்கு மறந்துவிட்டது.
பதினைந்து பதினாறு வருஷங்களுக்குப் பிறகு எங்கெல்லாமோ சென்றுவிட்டு வந்த ஒரு கலியாண பத்திரிகை-கலியாணம் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் கைக்குக் கிடைத்தது. மகனின் திருமணம் சந்தோஷத்தையும் வருத்தத்தையும் அளித்தது. தான் முன் நின்று நடத்த வேண்டிய காரியத்தை யாரோ நடத்தியது அவரை வேதனையுற வைத்தது. அவன் யாருமற்றவன் அல்ல- அவன் தகப்பனார் உயிரோடு இருக்கிறான் என்பதை உலகறியச் செய்ய வேண்டுமென்ற வேட்கை மனததில் நிறைந்தது. அவசரஅவசரமாகப் பிரயாண ஏற்பாடுகளைச் செய்தார். வருஷம் போல தள்ளிப் போயிற்று. யுத்தத்திற்குப் பிறகு கிடைத்த கப்பலில் அதிர்ஷ்டவசமாக அவ ருக்கு இடம் கிடைத்தது. கப்பலில் அனுபவித்த கஷ்டமெல்லாம் மகனையும் – மருமகளையும் பார்த்ததும் ஒரு பொருட்டாகவே தெரிய வில்லை. தான் ரொம்பவும் சந்தோஷமாக இருப்பதாக நினைத்தார்.
சாப்பிடும்போது மகனைக் கேட்டார்: “சாயந்தரம் உனக்கு ஒண்ணும் வேலெ இல்லிய?”
“ஒண்ணும் இல்லீங்க அப்பா”
“அப்ப, உன் மாமன் வீடு வரைக்கும் போயிட்டு வரலாம்”
“சரிங்க அப்பா”
“பாப்பா நீயும் வா”
“நான் எதுக்குங்க மாமா”
சோற்றுக் கையை உதறினார் குரல் திடீரென்று உயர்ந்தது. ”புறப்படுன்னா. எதுக்குன்னா கேக்கற?”
பாப்பா சப்தத்தில் அதிர்ந்து போனாள். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை ‘பார்வை வேணு பக்கம் சென்றது. அவனோ குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண் டிருந்தான். கண்களில் திரண்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
வேம்பு சாப்பிட்டெழுந்ததும். “பாப்பா செத்த பாய எடுத்துப் போடு. ஒரு தூக்கம் போடலாம்” என்றார்.
அவள் அவசரம் அவசரமாகப் பாயை எடுத்துவந்து விரித்தாள். வேணு-வண்டி பாத்துக்கிட்டு வரேன் என்று வெளியே சென்றான். பாப்பா வீட்டு வேலைகளை முடித்துவிட்டு-மாலையில் என்ன புடவை உடுத்திக்கொண்டு போகலாமென்று யோசிக்கலானாள்.
வேர்பு கொடுத்த ஒவ்வொரு புடவையையும் இடுப்பில் சுற்றி உருவிப் போட்டாள் ஒவ்வொன்றும் நன்றாக இருப்பது போலவும்- அதே நேரத்தில் நன்றாக இல்லாதது போலவும் இருந்தது கடைசி யாக நீலப் புடவையை அரை மனத்தோடு கட்டிக் கொண்டாள்.
தரையில் புரண்ட பட்டு வேட்டியை சற்றே உயர்த்திக் கட்டிக் கொண்டு வேம்பு, இவளைப் பார்த்து, “என்ன இன்னும் புறப்படலீயா?” என்றார்.
“புறப்பட்டாச்சுங்க மாமா”
அவர் பார்வை இவள்மீது ஏறி இறங்கியது. மனத்தில் சந்தோ ஷம் பொங்க, ‘புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கும்மா எடுக்கச்ச பயந்துகிட்டே இருந்தேன் எப்படி இருக்கு மோ-என்னமோன்னு. இப்பப் பார்த்தா உனக்குன்னே நெஞ்சது போல இருக்கு”
பாப்பா முறுவலித்தாள்.
“புடுச்சு இருக்கா பாப்பா”
“ரொம்பங்க மாமா”
“உங்க அத்தை ஒரு வாட்டிக்கூட நான் எடுத்துக் கொடுத்த புடவை புடுச்சு இருக்குன்னு சொன்னதில்ல”
அவள் பெரிதாகச் சிரித்தாள்.
வாசலில் வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
“பய வந்துட்டான் போல இருக்கு”
இவள் எட்டிப் பார்த்து, “ஆமாங்க மாமா” என்றாள்.
“பாப்பா, பச்சைப் பெட்டியை எடுத்துக்கிட்டு வா” அவர் படி இறங்கி வண்டியருகில் சென்றார்.
வேணு வண்டியிலிருந்து கீழே இறங்கினான்.
பாப்பா பச்சைப் பெட்டியோடு வந்தாள்.
“இங்க கொடு அம்மா”
பாப்பா வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், பெட்டியை அவள் அருகில் வைத்து விட்டு. வேணு பக்கம் வந்தார் வேம்பு.
“நீங்க குந்துங்க அப்பா”
அவர் பெரிதாகச் சிரித்து, ” எலே, ரொம்ப நல்லா இருக்கு நீ சொல்லுறது” என்று அவன் கையிலிருந்த தார்க்குச்சை வெடுக் கென்று பறித்துக் கொண்டு தாவி வண்டியின் முன்னே உட்கார்ந் தார். வேணு தயங்கியபடி வண்டியில் ஏறி பாப்பா பக்கத்தில் அமர்ந்தான்.
“உங்க அதிகாரமெல்லாம் இங்கதான்”
அவன் இவள் பெருந் தொடையில் கை வைத்து அடித்தினான். அவள் சிணுங்கி சப்தமில்லாது சிரித்தாள். வண்டி ஆற்றில் இறங்கி ஏறியது.
ஊருக்குச் சென்று வந்த பிறகு மகனுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வைக்க வேண்டுமென்று வேம்புக்குத் தோன்றியது. செலவு பற்றி யோசித்தார் மூவாயிரம் என்று தெரிய வந்தது. கையில் நாலுக்கு மேலே இருந்தது. நிலம் வாங்கிப் போடலாம் என்றுதான் முதலில் நினைத்தார். ஆனால் மகன் ஓலை வீட்டில் இருப்பது அவரை யோசனை பண்ண வைத்தது.
ஒரு நாள் மாலைப்பொழுதில் மருமகளைக் கூப்பிட்டுக் கேட்டார்.
“பாப்பா உனக்கு வூடு வேணுமா-இல்ல நிலம் வேணுமா”
“என்னக் கேட்டா. நீங்களாச்சு -ங்கி பிள்ளையாச்சு”
“அவன் கிடக்கறான்; நீ சொல்லு”
“மாமாவுக்கு என்ன தோணுதாம்”
“மொதல்ல நெலம்னு தோணுச்சு”
“அப்புறம்”
*இப்ப வீடுன்னு தோணுது”
“எதுக்கு?”
”எதுக்கோ”
வேம்பு மடியிலிருந்து சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு புகையை அவள் மூஞ்சிக்கு நேராக ஊதினார்.
அவள் முகம் சுளிக்க, “நாத்தம் கொடலப் பிடுங்குது”என்றாள்.
“அப்படியா-” சிரித்து சுருட்டை அணைத்து காதில் சொருகிய படி வாசலுக்கு வந்தார். இவர் வரவும் வெளியிலிருந்து வேணு வந்தான். அவனைக் கண்டதும் மறுபடியும் சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டு உள்ளே வந்தார். வேணு கொல்லைப் பக்கம் சென்றான்,
“தம்பி, செத்த இப்படி வா” என்றார். இவராக அழைத்தா லொழிய அவன் எதிரே வருவதில்லை. தாயைப் பல விதத்தில் அவன் கொண்டிருப்பதாக நினைத்தார். அந்த நினைப்பு வந்ததும துக்ககர மான பல காட்சிகள் மனத்தில் படர்ந்தன. மகனையும் மருமகளையும் பார்த்தார். அவர்கள் மௌனமாக இவர் பேச்சுக்காகக் காத்திருந்தார்கள்.
தலையசைத்து குழந்தையிடம் கதை சொல்வதுபோல, “கயில ரெண்டு காசு இருக்கு. முதல்ல நெலம் வாங்கலாமுன்னு தோணுச்சு. ஆனா இப்ப வூட்ட எடுத்துக் கட்டலாமுன்னு தோணுது. ஓல வூட்டுல எத்தனை நாளைக்குத்தான் இருப்ப-“
வேணு தலையசைத்தான்.
“இவுங்களக் கேட்கணுமா மாமா? நீங்க பெரியவங்க. யோசன பண்ணி ஓண்ணு செஞ்சா தப்பா இருக்குங்களா”
“அதுக்கு இல்லம்மா. உங்களக் கலக்காம ஒண்ணு செய்யலாமா”
“நாங்க என்னங்க மாமா சொல்லிடப் போறோம்”
பாப்பாவின் சாமர்த்தியத்தில் திருப்தி உற்றதுபோல வேணு பக்கம் திரும்பி, “தம்பி,ராவுத்தர் நெலத்தத் தந்துடப் போறதா ஒரு பேச்சு காதுல உளுந்துச்சு. அதக் கொஞ்சம் விசாரிச்சு வா. பாக்கலாம்”
“சரிங்க அப்பா”
வீடு கட்டும் வேலை தொடங்கியதும் கல்லும் மண்ணும் வண்டி ‘வண்டியாக வந்தன. வேம்பு, தான் சிங்கப்பூரில் கண்ட ஒரு வீட்டைப் பற்றி கொத்தனாரிடம் விவரித்து அது மாதிரி இருக்க வேண்டும் என்றார். கொத்தனார் அரையுங் குறையுமாக வாங்கிக் கொண்டு தலையசைத்தான். அவர் சொன்னதுபோல இல்லாமல் வீடு வேறு மாதிரியாக எழுந்தது. ஆனாலும் அதுவும் நன்றாக இருப்பதாகவே வேம்புக்குப் பட்டது. அரைக்கால் சட்டையை மாட்டிக் கொண்டு உற்சாகத்தோடு வேலை செய்தார் அந்தத் தெருவிலே தன் வீடு தான் முதல் மாடி வீடு என்பது பெருமையும் களிப்பையும் இவருக்கு அளித்தது மேலெல்லாம் சுண்ணாம்போடு நிற்கையில் ஒரு நாள் பாப்பா கேட்டாள், “என்னங்க மாமா வேஷம் இது?” என்று.
“நாளைக்கு பேரப் பசங்கக் கிட்ட சொல்ல வேணாமா. எலே பசங்களா வீட்டுல இருக்கற ஒரு ஒரு கல்லும் உங்க தாத்தா எடுத்து வச்சக் கல்லுன்னு-“
“உங்களுக்கு ரொம்ப ஆங்காரங்க மாமா”
அதை ஏற்றுக் கொள்வது போல சிரித்தார்.
“அவன சுண்ணாம்பு வாங்கியாற போவச் சோன்னேனே போயிருக்கானா”
”அவுங்கள அனுப்பிட்டுத்தாங்க மாமா வரேன். சாப்பாட்டுக்கு நீங்க வர்றீங்களா-இல்ல இங்க கொண்டாந்துட்டுட்டுங்களா”
“நீ எதுக்குமா வீணா அலையணும் நானே வந்துடுறேன்’ என்று கையைத் துடைத்து அவள் பின்னே நடந்தார். இவருக்குப் பிடித்தமான ஆட்டுக்கறி குழம்பு. வயிறு முட்டத் தின்றுவிட்டு எழுந்தார். எழுந்ததும் நடக்க முடியாதது போல இருந்தது. சுவரில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து, “ரெண்டு மாசம் இப்படித் தின்னா- மலையைக்கூட உருட்டிடலாம் பாப்பா’ என்றார்.
வெற்றிலை மடித்த பாப்பா பதிலொன்றும் சொல்லாமல் புன் னகை பூத்தாள்.
ஒன்றறை மாதத்திற்குள் வீடு கிட்டத்தட்ட உருவாகியது. நாளை தளம் போடலாம் என்றிருக்கும்போது -மாலைப் பொழுதில் வானம் கருக்க ஆரம்பித்தது. வேம்பு வானத்தையும் வீட்டையும் மாறி மாறி பார்த்தார். கருத்த மழை மேகங்கள் ஒன்றாகக் குவிந்தன. சில்லென்று சாற்று அடித்தது. மழைக்கு என்ன பண்ணுவது என்று யோசிக்கையில் தூறல் ஆரம்பித்தது. தூறல் சற்றைக்கெலலாம பெரும் மழையாகியது. மழையில் சுவர்கள் கரைந்தன. சிறிது நேரத்திற் கெல்லாம் சுவர்கள் கடைந்து விழலாம் என நினைத்தார். மழை காற் றோடு பெரிதாகப் பொழிந்தது. மூஞ்சியில் விழுந்த மழை நீரைத் துடைத்துக் கொண்டு “எலே, வேணு” என்று கத்தினார். இவர் கத்தவும் – வேணு அருகில் வரவும் சரியாக இருந்தது. சுவரைப் பார்த்து அவன் பதறினான்.
”அப்பா, சுவரு விழுந்திடும் போல இருக்கே”
வேம்பு சுவரில் தாவி ஏறி, “எலே, கீத்தக் கொடு. முடிஞ்ச வரைக்கும் மூடி வைப்போம்” என்றார்.
அவன் கீற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு – தகப்பனாருக்கு உதவியாக மேலே ஏறினான். இவன் ஏறவும் காற்று பலமாக அடித்தது. கை பிடித்த கல் நழுவுவது போல இருந்தது.
எம்பி மேல் சுவரைப் பிடிக்கப் போனான். ஆனால் சுவர் பிடி படவில்லை. தான் நழுவிக் கொண்டு போவது போல இருந்தது.
”அப்பா” என்று கத்தினான்.
சப்தம் கேட்டுத் திரும்பிய வேம்பு பதறி அவனுக்குக் கை கொடுத்தார். அவன் கை, இவர் கையைத் தொட்டுக் கொண்டு வேகமாகக் கீழே சென்றது. அவர் வேணுவைப் பிடிக்க, இன்னொரு சுவருக்குப் பாய்ந்தார். அவர் கால் வைத்த சுவர் இடிந்து வேணு தலையில் விழுந்தது.
வேம்பு இன்னொரு சுவருக்குத் தாவ, “அடப் பாவி பயலே” என்று கத்தினார். சப்தம் கேட்டு பாப்பா வெளியே ஓடி வந்தாள். மழை விடாமல் பொழிந்து கொண்டு இருந்தது.
கற்களை விலக்கி, வேணுவைப் பிணமாகத் தூக்கினார்கள்.
பாப்பா வேம்புவைக் கட்டிக்கொண்டு அழுதாள். இவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் தானும் அழுதார்.
மகன் போனது வேம்புவுக்குத் தாள முடியவில்லை. அவசர அவசரமாக வீட்டைக் கட்டி முடித்துவிட்டு ஒரு விடியற்காலைப் பொழுதில் கப்பல் ஏறினார்.
கப்பலிலிருந்தபடி பாப்பா, உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் அலைகளை ஒரு குழந்தையைப் போல ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
– ஜூன் 1975, கசடதபற (மாத இதழ்)