பிரியமுள்ள என் அம்மாவுக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 2,326 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணுக்குக் கண்ணாக எனைக் காத்து வந்தாள்
கருத்துக்கள் பலசொல்லி எந்நாளும் வளர்த்து வந்தாள்
அநியாயம் அல்லவோ என் அம்மாவை நான் இழந்தேன்
பெற்றவளும்போனபின்பு பொய்யாக வாழ்கின்றேன். 

சுகந்தியின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் வெளியே வானமும் அழுது வடித்துக்கொண்டிருந்தது. 

யன்னலுக்கும் திரைச்சீலைக்கும் இடையில் முகத்தைப் புதைத்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்த சுகந்தியை தொலைபேசி மணி சிணுங்கிச் சிணுங்கி அழைத்தது. 

இந்தநேரத்தில் யாராக இருக்கும்? என எண்ணியபடியே மௌனமாக இருந்தாள் அவள். 

அடம்பிடித்து அழும் குழந்தை அழுதழுது ஓய்வதுபோல் தொலைபேசியும் அடித்து ஓய்ந்தது. 

சில நிமிட சிந்தனைக்குப் பின்- 

ஓ..அது ரவியின் அழைப்பாகத்தான் இருக்கவேண்டும், என எண்ணிய சுகந்திக்கு ரவியை நினைக்க பாவமாக இருந்தது. காலையில் எழுந்து வேலைக்குச் செல்லும் ரவி சுகந்தி எழுந்தவுடன் ஒருமுறை பேசவேண்டும். பேசாவிட்டால் தனக்கு வேலையே ஓடாது எனப் புலம்புவது அவனின் வழக்கம். அதுவும் இன்றைக்கு அவர்கள் இருவருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னான நாள் அல்லவா? 

எப்படியும் மறுபடியும் அழைப்பு வரும், என எதிர்பார்த்தபடி சோபாவில் அமர்ந்த அவளின் கண்கள் கலங்கித் தவித்தன. 

ரவிக்கு வேண்டுமானால் ஒவ்வொருவருடமும் இந்தநாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கலாம். ஆனால் சுகந்திக்கு.? 

திரிசங்கு நிலை என்பார்களே அதைப் போலத்தான் இன்றைய நாள் மகிழ்ச்சியா சோகமா எது அதிகம் என அவளுக்கே புரிவதில்லை. 

அம்மாவின் அந்த அழகானமுகம் அழுதபடி அடிக்கடி நினைவில் வந்து அவளை அழவைத்தது. 

‘ஏன் இப்படிச் செய்தாய்?’ எனக் கேள்வியும் எழுப்பியது. 

இன்று எப்படியும் என் அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என எண்ணியபடி எழுத ஆரம்பித்தவளை மறுபடியும் தொலைபேசி அழைத்தது. 

“ஹலோ..!” என்றவளிடம், 

“என் இனியவளுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்!”என இனிமையான குரல் சங்கீதமாய் நீங்காரித்தது. 

எதுவும் பேசப்பிடிக்காமல் மௌனம் சாதித்தவளை ரவி அழைத்தான். “சுகந்தி.. என்னது கவலையா?” 

அவனுக்குப் புரிந்தது… அவள் அழுகின்றாள். 

‘என்ன செய்யலாம்?’ என யோசித்தவன் 

*சுகந்தி லீவு எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வரட்டுமா?” எனக்கேட்டவனை “வேண்டாம் ரவி எனக்குத் தனியா இருக்கவேண்டும்போல் இருக்கு. நீங்க யோசிக்காதீங்க!” எனக் கூறி தொலைபேசியை வைத்துவிட்டு மறுபடியும் எழுத் ஆரம்பித்தாள். 

பத்துவருடங்கள் கடந்து ஓடியபின் என் பிரியமுள்ள அம்மாவுக்கு… என்று எழுத ஆரம்பித்தவளின் கண்கள் கார்மேகமாயின. நீலமை நீலக்கடல்போல் கரைந்து வழிந்தது. 

அடிக்கடி கரைந்தபடி காகம் ஒன்று பறந்து திரிந்தது. 

கமலத்துக்கு ஏதோ ஒரு உணர்வு உறுத்திக்கொண்டு இருந்தது. 

குமார் முற்றத்தில் சாய்வாக கோடுபோட்டு முற்றத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான். 

அவன் கூட்டும் அழகை ரசித்தபடி இருந்த கமலம், எத்தனை பிள்ளைகள் எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன… கடைசிக்காலத்தில் யாரோ பெற்ற இந்தப் பெடியன்தான் எனக்குத் துணை. உறவுகளுக்குள் நிகழ்வது வெறும் கொடுக்கல் வாங்கல் வியாபாரம்போல்தான் பாசமும். ஒரு தாயின் அன்பில்கூட பாதுகாப்பு சார்ந்த எதிர்பார்ப்பே நிறைந்திருக்கிறது என்ற தாயுமான சுவாமிகளின் கூற்றில் எவ்வளவு உண்மை நிறைந்திருக்கின்றது. சாதாரணமாக ஒரு மரத்தை நட்டு வளர்ப்பதுகூட அது வளர்ந்து பிரயோசனம் தரும் என்றுதானே. சாதாரணமாக மரத்தில்கூட மனிதர்களுக்கு இத்தனை எதிர்பார்ப்பு இருக்கும் பொழுது பத்துமாதம் சுமந்து பெற்றுவளர்த்த பிள்ளைகளிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு பெற்றோருக்கு இருக்கும் என்பது இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரிவதே இல்லை?’ என்றுயோசித்தபடி தற்செயலாக கலண்டரைப் பார்த்த கமலத்துக்கு யூலை மூன்றாம் திகதி என்று சிவப்பு மை பெரிதாக காட்டியது. அவளுக்குப் பிடிக்காத அந்த நாளை உற்று நோக்கியபடி இருந்தவள் இந்தநாள்…. இந்தநாள்தானே இந்த வீட்டு மகிழ்ச்சியை அப்படியே அள்ளிக் கொண்டு போனது!” என்று நினைத்தவளின் கண்கள் கலங்கியது. பத்துவருடங்களாக கலண்டரில் இந்தத் திகதி கிழிக்கப்படாமலே இருந்தது. 

முன்பெல்லாம் இந்த வீட்டில் எப்ப பார்த்தாலும் சுகந்தியின் சிரப்பொலி வீட்டைப் பிளந்து கமலத்தின் காதுகளில் வந்து அறையும். 

“பொம்பிளைப் பிள்ளை என்ற அடக்க ஒடுக்கம் கொஞ்சமும் இல்லாமல் அப்படி என்ன இந்த சுகந்திக்கு சிரிப்பு?” என்று சினக்கும் கணவரை “பிள்ளைகள் எங்களுடன் இருக்கும்மட்டும்தானே இந்த சிரிப்பும் கும்மாளமும்…. பிறகு தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை பொறுப்பு வந்துவிட்டால் அதுகள் சிரிக்கப்போகுதுகளோ? என்ன செய்யப்போகுதுகளோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.. விடுங்கோ பிள்ளைகள் சிரிக்கட்டும்!” என கணவரை அடக்கிவிடும் கமலம் இன்று யாருமின்றி தனிமையில் சுகந்தியின் நினைவில் மூழ்கினாள். 

தானும் சிரித்து எங்களையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த என்ர பிள்ளை கடைசியிலை ஊரே சிரிக்க, என்னை அழவைத்துவிட்டுப் போய்விட்டாள்! என நினைத்த கமலத்தின் கண்கள் குளமாயின. 

பேசாமல் சாய்மனைக்கதிரையில் சாய்ந்து படுத்துக்கொண்டாள். 


வசந்தகாலங்கள் வருடத்தில் ஒருமுறை மண்ணுக்கு வரும். 

மனிதவாழ்க்கையில் வசந்தங்கள் என்பது தாய்மையின் சிறகின் அணைப்பில் இருந்த காலங்களே! ஓ…! அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை…? 

அன்று சுகந்தி உயர்தர வகுப்பில் பயின்றுகொண்டிருந்தாள். 

பயமற்ற பரவசம்.. ஆடலும் பாடலும்… ஆனந்தமாகக் களித்த காலம் அது. பாடசாலையில் நடைபெறும் வருடாந்த கலைவிழா நிகழ்ச்சிப்பொறுப்பு அனைத்தும் சுகந்தியின் கையில் கொடுக்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ரிக்கற்விற்பதில் இருந்து வரவேற்புரைமட்டும் அவளே பார்த்துப் பார்த்து களைத்துப்போய் ஒரு ஓரமாக இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள். 

பல இடங்களில் சுகந்தியைத் தேடிக் களைத்துப்போன நிம்மி அவள் மூலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மகிழ்ச்சியில் –

“ஏய் சுகந்தி! உன்னை எங்கையெல்லாம் தேடித்திரியிறது? இங்க பார் உன்னைப்பார்க்க ஒரு புது விருந்தினர் வந்திருக்கிறார்!” எனக் கூறியபடி அவளின் கையைப் பிடித்து இழுத்தாள். 

ஒருமுறை நிமிர்ந்தவள் அதிர்ச்சியடைந்தாள். 

‘இவர் எப்படி… இங்கே?’ என வியப்புடன் தோழியைப் பார்த்தவளுக்கு பதில் ரவியிடம் இருந்து வந்தது. 

“மிஸ் சுகந்தி! நான் நிம்மியின் அண்ணனின் நண்பன் அவன் கட்டாயப்படுத்திக் கூப்பிட்டதால்தான் வந்தனான்… ஆனால் வந்தததற்கு இப்போது சந்தோஷப் படுகிறேன்!” என்றான். 

“எதற்கு?” என விழிகளை உயர்த்தி வினவியவளுக்கு- 

“உங்களை மறுபடி சந்தித்ததற்கு!’ எனக் கூறியவனை ஆச்சரியத்துடன் பார்த்த சுகந்தி மௌனமானாள். ஆனால் அவளின் இதயமோ வெளியில் விழுவதுபோல் இடித்துக்கொண்டிருந்தது. 

அந்த இடம் ஒரு நிமிடம் மௌனத்தில் ஆழ்ந்தது. 

“சரி சரி வாங்கோ நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குப் போவோம்!” எனக் கூறியபடி சுகந்தியின் கையைப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினாள். 

ஏதோ கனவில் சஞ்சரிப்பதுபோல் நடக்கும் சுகந்தியிடம் “என்னடி என்ன நடந்தது உனக்கு?” எனக் கேட்டவளுக்கு 

“ஒன்றுமில்லை..ஏன் இவர் இங்க வந்தார்?” என இழுத்தாள். 

“ஏன் சுகந்தி இப்படிக் கேட்கிறாய்? ரவி, அண்ணனுக்குத் துணையாக வந்திருப்பார்.. அது சரி… ரவி வந்ததற்கு நீ ஏன் பயப்படுகிறாய்?” 

“இல்லையடி பழையபடி இவரை எங்கள் வீட்டில் யாராவது பார்த்துவிட்டால் வேறு கதையே வேண்டாம்!” என்றவள் அன்று நடந்த அந்தச் சம்பவத்தை மறுபடியும் நினைத்துக்கொண்டாள். 


அது ஒரு சனிக்கிழமை. 

‘லொஜிக்’ பாடம் முடிந்தவுடன் இருக்கும் இடைவெளி நேரத்தில் சுபாஸ்க்கு சென்று குளிர்பானம் அருந்துவோம் என சென்றவர்கள் அங்கு நிம்மியின் அண்ணாவும் ரவியும் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை பார்த்து இவளையும் இழுத்துக்கொண்டு அவர்களுக்கு அருகாமையில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள் நிம்மி. 

அப்போது சுகந்திக்கு இவர்களுடன் அமர்ந்து ஐஸ் சாப்பிடுவதால் தனக்கு வரவிருக்கும் பிரச்சனையைப்பற்றி எதுவும் அறியாமல் அறிமுகங்கள் பரிமாறப்பட்டு நிம்மியின் அண்ணாவின் செலவில் ஐஸ்கிறீம் சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு திரும்பியவளுக்கு இடி ஒன்று காத்திருந்தது. 

கண்ணால் காண்பதை யெல்லாம் உண்மையென நம்பி கற்பனைகளை தவழவிட்டுக் கதையை புனைந்துவிட்டுச் சென்ற பக்கத்துவீட்டு மாமாவின் அதீத கற்பனையின் விளைவு 

வாழ்க்கையில் முதல்முதலாக அம்மாவின் கைகள் அவளின் கன்னங்களிலும் முதுகிலும் கோலம்போட்டன. 

அந்தநாளை சுகந்தியால் எப்படி மறக்க முடியும்? 

“அவர் யார் என்று எனக்குத் தெரியாது என்னை நம்புங்கள் அம்மா!” என்று அழுத சுகந்தியை நம்ப மறுத்த கமலம், “ஊர் பேர்தெரியாத ஒருத்தன் உனக்கு அவரா போய்ட்டான்!” எனக் கூறி மறுபடியும் விழும் அடியை தாங்கமுடியாது அழுது அழுது தூக்கத்தைத் தொலைத்தாள் சுகந்தி. 

இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி அந்த சம்பவத்தை உண்மை ஆக்கினாள் கமலம். 

பொய்யை உண்மை என்று நம்பிய அம்மாவின் வார்த்தைகளால் அடிபட்டு அடிபட்டு ரணமான மனதில் ரவியின் பெயர் ஆணிகொண்டு அறையப்பட்டு விட்டது. அந்த சம்பவத்தை அவளால் எப்படி மறக்க முடியும்? 

சுகந்தியின்மனம் சஞ்சலப்பட்டபடி இருந்தது. 

இதனால் நிகழ்ச்சிகள் எவற்றினுடனும் அவளால் ஒன்றிப் போகமுடியவில்லை. ‘இங்கே ரவி வந்திருப்பதை அம்மாவிடம் யாரும் கூறிவிட்டால் வேறு வினையே வேண்டாம்’ என்ற பயம் ஒரு புறம். 

ரவியைப் பார் பார் என எங்கும் மனத்தை சாட்டைகொண்டு அடித்து அடக்கி அடக்கி தோல்விகண்ட சோர்வு மறுபுறம். இத்தகைய போராட்டத்துடன் அன்றைய மாலை மங்கிமறைந்தது. 

நிகழ்ச்சிகள் முடிவடைந்தது. 

நன்றியுரைகூற மேடைக்கு சென்ற சுகந்தியின் கண்கள் ரவியைத் தேடிக் களைத்தன. நிம்மியை அழைத்துப்போக வந்த அண்ணாவுடன் ரவியைக் காணாமல் தவித்தாள் சுகந்தி. அவளின் அழகிய கண்கள் அலைபாய்ந்தன. இவளின் பதட்டத்தை மறைந்திருந்து கவனித்த ரவி வேண்டுமென்றே தாமதமாக வெளியில் வந்து, 

“சுகந்தி மறுபடியும் நாம் சந்திப்போம் என்று நான் நினைக்கவே இல்லை. எமது முதல் சந்திப்பில் உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நிம்மியின் மூலம் கேள்விப்பட்டு நான் மிகவும் கவலைப்பட்டேன். இம்முறை அப்படி எதுவும் நடக்கக்கூடாது. Have a nice time என சிரித்தபடி கூறிக்கொண்டு திரும்பியவன் தன்னை மறந்து சிலையாக நின்ற அவளிடம் “சுகந்தி நாம் மறுபடியும் சந்திப்போமா?” எனக் கேள்விக் கணையைத் தொடுத்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அவளின் பதிலுக்காகக் காத்திருந்தான். 

திடுக்கிட்டு நிமிர்ந்த சுகந்தி, “ம்.. என்ன?… என்ன?” என தடுமாறியபடி நின்றவளின் பதிலுக்காகக் காத்திருக்காமல், *சந்திப்போம்!” என தானே பதிலையும் அளித்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தவனை கண் இமைக்க மறந்தபடி பார்த்துக்கொண்டே இருந்தவளின் இதயத்தில் இருந்து சிறு வலி ஏற்படுவதுபோல் உணர்ந்தாள் சுகந்தி. 


அதன் பிறகு மறைந்த சில நாட்கள் சுகந்தியின் வாழ்க்கையில் பிரிவின் துயரை உணரவைத்தன. அவளின் மனத்தை கசக்கிப் பிழியும் ரவிமின் நினைவில் இருந்து தன்னை நீக்க முடியாமல் தவித்தாள். 

அவளுக்கே தன்னை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படி இப்படி மாறினேன்?” 

‘காதல் என்மனதில் எப்படி இடம்பிடித்தது?’ 

அவளால் விடையைத்தேட முடியவில்லை.ஆனால் கவிதைமட்டும் தவழ்ந்து வந்தது. 

உன் மனதில் என்னை மறைத்து வைத்து
என்மனதில் உன்னை பதியவைத்து 
என் கண்களில் உன் நிழல் வரைய வைத்து 
எனை காதலில் நிதமும் துடிக்க வைத்து
காற்றினில் உன்னைத் தேடவைத்து 
கடல் அலைகளின் ஓசையில் எனை அலையவைத்து 
மலர்களின் மணத்தில் உனை உணர வைத்து 
மன்னவன் எனை நீ வாடவைத்து 
அன்பே நீ உனை மறைத்து வைத்து 
ஆடவன் உன்னில் மயங்கவைத்து 
உயிரே உயிரைப் பறக்கவைத்து 
நிதமும் என்னைத் துடிக்கவைத்து 
அன்பே எங்கே மறைகின்றாய்? 


அன்று வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற சுகந்திக்கு நிம்மியின் வரவு  மகிழ்ச்சியான செய்தியுடன் மலர்ந்தது. ஆமாம் ரவி கொழும்பில் இருந்து அவளுக்கு கடிதம் அனுப்பியிருந்தான். 

மட்டற்ற மகிழ்வுடன் கடிதத்தை பிரித்தவளின் கண்கள் குளமாயின. 

முத்து முத்தான கையெழுத்தில் இரண்டே இரண்டு வரிகள்.. 

‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்? ஏன் என்வாழ்வில் நுழைந்தாய்? தருவாயோ உனை எனக்கு வருவாயோ வாழ்வின் இறுதிமட்டும்?’ 

அந்த இன்பமான நாளை சுகந்தியால் மறக்கவே முடியாது. ரவியின் கடிதத்தை அன்று எத்தனை முறைபடித்திருப்பாள். அவளுக்கே தெரியாது.

புல்லெல்லாம் பூத்திருந்தன. பூந்தோட்டமே வந்திருந்தன. வருவோர் போவோர் மனதில் எல்லாம் சிரிப்பிருந்தன. இந்த உலகில் துன்பமே இல்லையோ என்பதுபோல் ஓர் கேள்வியும் அவள்மனதில் எழுந்தது. 

காலங்கள் மறைந்தன. 

வார் இறுதிநாளில் கொழும்பில் இருந்துவரும் ரவிக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பாள் சுகந்தி. 

மற்றைய நாட்கள் எல்லாம் அவள் காதலுக்கு விலங்கிட்டதுபோல் ஓர் உணர்வில் தவித்தாள். சனி ஞாயிறு தினங்களில் ரியூட்டரிக்கு படிப்பதற்காக செல்லும் சுகந்தி ரவியைச் சந்தித்து பேசுவதில்மட்டும் ஆர்வம் காட்டியதன் விளைவு பொருளாதாரத்தின் அடிப்படை பண்டமாற்று என்றால் என்ன என்ற வரைவிலக்கணத்தைக்கூட மறந்து மூளையைக் குழப்பினாள். இவள் மட்டுமா குழம்பி நின்றாள்.

படிப்பில் படுசுட்டியாக விளங்கிய இந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது?’ என ஆசிரிய குழாமும் விழித்து வியந்தது. 

காற்றோடு மெல்லென அவள் காதல் பரவியது. 

அம்மாவின் காதில் மெல்ல உரசியது. அடிகளும் உதைகளும் பரிசாகக் கிடைத்தன. ஒவ்வொரு அடியிலும் அவள் காதல் மேலும் உறுதிபெறும். ஆனால் அம்மாவின் அழுகை அவள் காதலைக் கரைக்கும். 

இறுதியாக அம்மா எடுத்த முடிவு சுகந்தியைக் குழப்பியது. அவளின் சம்மதம் இல்லாமலே திருமண ஏற்பாடுகள் விரைவாக நடைபெறத்தொடங்கியது. சுகந்திக்கு என்ன செய்வதென்று புரியாமல் தவித்தாள். 

நிம்மியுடன் சேரக் கூடாது அவளைப் பார்க்கக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து அமுலுக்கும் கொண்டுவந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ரவியின் முயற்சியின் பலனாக வீட்டுக்குப் பத்திரிகைபோடும் பெடியன் மூலம் அம்மாவுக்கு தெரியாமல் கடிதங்கள் பரிமாறப்பட்டன. 

திருமணவிடயத்தை எப்படியாவது ரவிக்கு தெரிவிக்கவேண்டும் நாளை எப்போது விடியும் என காத்திருந்தவள் சகலவிடயங்களையும் எழுதி ரவியை உடனடியாக வருமாறு அழைத்திருந்தாள். ஆனால் ரவி நேரடியாக வீட்டுக்கே வருவார் என சுகந்தி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 

அந்தநாளை நினைத்தால் சுகந்தி இப்போதும் நடுங்குவாள். 

அவளை திருமணம் செய்து தருமாறு கெஞ்சினான். 

தனது வங்கிவேலை தனது குடும்ப விபரம் எல்லாவற்றையும் விபரித்தான். முடிவு பூச்சியம்தான். 

அம்மா எதுவும் பேசாமல் ரவியை வெளியில் போகுமாறு வாசலை நோக்கிக் கைகாட்டினாள். இவை எல்லாவற்றையும் பார்த்தவாறு மழையில் நனைந்த சின்னப் பறவபோல் நடுங்கிக்கொண்டிருந்த சுகந்தி ரவியின் அழைப்பைக்கேட்டு திடுக்கிட்டு விழித்தாள். 

‘சுகந்தி…! நீர் இப்பவே இந்த நிமிடமே என்னுடன் வாறீர். வேறு எந்தக் கதையும் கதைக்கக் கூடாது!” என்றான் ரவி. 

என்னசெய்வது என்று புரியாமல் விழித்த சுகந்தியை 

‘சுகந்தி…! தயவுசெய்து என்னுடன் வாரும் இல்லாவிட்டால் இனி எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் இணையவே முடியாது!” என்றவனை அழுத கண்ணும் சிவந்து முகத்துடனும் நோக்கினாள் சுகந்தி. 

“என்ன தைரியம் உனக்கு. யாரும் இல்லா வீட்டிற்குள்ள வந்து என்ர மகளை கூப்பிடுகிறாய்? ஏய் சுகந்தி நீ முதல்ல உள்ளுக்க போ!” எனக் கத்தினாள் அம்மா. 

இருதலைக்கொள்ளி எறும்புபோல நின்ற சுகந்தியின் கையை இறுகப் பிடித்தபடி ரவி வெளியில் அழைத்துச் சென்றான். 

ஒரு கணம் அந்த ஒருகணம் அம்மாவின் முகத்தை திரும்பிப் பார்த்தாள். வட்ட நிலவின் அழகை ஒத்திருந்த அம்மாவின் முகம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தாள் சுகந்தி. 

அன்று பாத்த அம்மாவின்முகம் இந்தப் பத்துவருடங்கள் ஆகியும் அவளின் மனத்தைவிட்டு அகல மறுத்தது. 

அழுத அழுது கண்கள்எரிந்தன சுகந்திக்கு. 

பழைய நினைவில் இருந்து மீண்டவள் மீண்டும் எழுதத் தொடங்கினாள்.

என் பிரிமுள்ள அம்மாவுக்கு! 

நீங்கள் நலமில்லாது வாழந்துகொண்டிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என் அன்பு அம்மாவே நானும் இங்கு நலமில்லாமலே வாழ்ந்துவருகிறேன். என் கணவர் என்னை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்கிவருகிறார். அது உங்களுக்குப் புரியும். எது இருந்தும் என்ன அம்மா நான் சிறுவயதில் உங்களுடன் பார்த்து மகிழ்ந்த அதே பூரண நிலவை இன்றும்பார்க்கிறேன். ஆனால் அன்று கிடைத்த ஆனந்தம் இன்று இல்லை. 

ஒருவேளை நீங்கள் என்னருகில் இருந்திருந்தால் ஆனந்தமாக இருந்திருக்குமோ என்னவோ? 

அம்மா நான் இப்பவெல்லாம் அடிக்கடி யோசிப்பேன் இயற்கை செய்த பெருந் தவறு மனிதனைப் படைத்ததுதான். 

மரம் கொடி செடி பறவைகளுடன் விட்டிருந்தால் சில வேளை இந்த உலகம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்திருக்கும். அதுபோலத்தான் அம்மா நீங்கள் செய்த பெரிய தவறு என்னை உங்கள் மகளாகப் பெற்றது. அம்மா நீங்கள் அடிக்கடி என்கனவில் வந்து சீ..! நீ என்மகளா?’ எனக் கேட்கிறீர்கள். உண்மைதான். அம்மா உங்கள் கேள்விக்கு விடைகூறமுடியாத கேள்விக் குறியாக அந்தரத்தில் நிற்பது என்வாழ்க்கையாகிவிட்டது. 

உங்களைப் பிரிந்த நாட்கள் மிகவும்கொடுமையானது அம்மா 

எத்தனை உறவுகள் உடன் இருந்தாலும் எல்லோரும் தனித்தவர்கள்தானே சுயமான எண்ணங்கள் தனித்துவிடப்பட்ட சிந்தனைகள் இப்படிப் பலவிதத்தில் தனித்து தவிப்பவர்களில் நானும் ஒருத்தியாகி பத்துவருடங்கள் ஆகிவிட்டன. என் அன்பு அம்மாவே! 

உங்களுடன் கழித்த அந்த ஆனந்தமான நாட்கள் இறந்தகாலமாகிவிட்டன.என் எதிர்காலத்தில் வசந்தங்கள் மலரவேண்டும் குயில்கள் கூவவேண்டும் மலர்கள் மலரவேண்டும் புற்கள் புத்தெழில் பெறவேண்டும் இலைகள் துளிர்க்கவேண்டும். இவைகள் எல்லாம் வெறும் கற்பனையே. மண் இல்லாது மரங்கள்எப்படி துளிர்க்கமுடியும்? அதுபோல்தான் அம்மா. என் வாழ்க்கையும். நீங்கள் இல்லாமல் இறந்தகாலங்களாகி இருண்டுபோய்விட்டன. 

அம்மா அன்று சிறுவிடயத்திற்கெல்லாம் நான் அழுது அடம் பிடிப்பதை நினைத்து இன்றும் சிரிக்கின்றேன். ஆனால் அன்று சிரித்ததை நினைத்து இன்று அழுகின்றேன். 

அம்மா தேனருவிபோல் பாய்ந்து அதில் மூழ்கி எழும் அன்பிருந்தும் சலசலப்பில்லாமல் மரங்களின் வேரையும் புல்லின் நுனியையும் மெதுவாகத் தடவி நகரும் சிறு அருவி போலான அந்த மென்மையான அன்பு மறுபடியும் எனக்குக் கிடைக்குமா அம்மா? உங்கள் இதமான மடியில் சிறிது இளைப்பாற எனக்கு மறுபடியும் இடம் கிடைக்குமா அம்மா? 

அம்மா! நான் இப்படி எழுதுவதுகண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். 

இவைகள் எல்லாம் அனுபவங்கள் தந்த பாடங்கள். அன்று என் முகமே எனக்குத் தெரியாத வயது. 

இப்போ அப்படி அல்ல. வாழ்க்கையில் பல பொய்முகங்களை சந்தித்து சந்தித்து சோர்ந்துபோன உள்ளம்தான் இப்படி வெளிப்படுகின்றது. சில வேளைகளில் நான் நினைப்பேன் என் அம்மாவின் அன்பைவிடவா ரவியின் அன்பு அன்று எனக்கு பெரிதாகத் தெரிந்தது. பருவவயதுக் கவர்ச்சியாக இருக்குமோ.. பெற்றோரிடம் கிடைக்காத அன்பை வேறு ஒருவரிடம் கிடைக்கும்பொழுதும் காதல் வயப்படுகிறார்கள் என்று படித்திருக்கின்றேன். ஆனால் நான் ஏன் காதலித்தேன்? என் வீட்டில் கிடைக்காத எந்த அன்பு ரவியிடம் கிடைத்தது? 

இது எனக்கு இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது அம்மா. 

நான் ரவியிடம் அடிக்கடி கேட்பேன் ஏன் என்னைப் பார்த்தீர்கள்? ஏன் என்மீது அன்புகாட்டினீர்கள்? உங்களால்தானே நான் என் அம்மாவை பிரிந்தேன். எனக்கு என் அம்மா திரும்பவும் வேணும். இப்ப வேணும் என்று அடிக்கடி அடம்பிடித்து அழுது அவரின் வாழ்க்கையையும் நரகமாக்கிக்கொண்டு வாழ்கின்றேன். 

அம்மா! நான் என்தாய்க்கு நல்ல மகளாக வாழவில்லை. ஆனால் நல்ல மனைவியாக நல்ல தாயாக வாழ ஆசைப் படுகின்றேன். 

ஆனால் உங்கள் நினைவால் அதுவும் முடியாமல் போகின்றது. 

ரவி அடிக்கடி கூறுவார். கடந்த காலங்களை இறந்துவிட்ட காலமாக விட்டுவிடவேண்டும்.. அந்தக் காலத்தை மீண்டும் மீட்டி அந்த வேதனையை அனுபவிப்பது மடத்தனம். இப்படி அவரால் இலகுவாகக் கூறமுடியும். என்னால் எப்படியம்மா உங்களை உங்களுடன் வாழ்ந்த அந்த இனிய நாட்களை மறக்கமுடியும்? 

எத்தனை இரவுகள் நித்திரையின்றி தவித்து தனித்து அழுதிருக்கிறேன். எதனால் அம்மா எதனால் அம்மா நான் உங்களை இழந்தேன்? 

என்னுள் வளர்ந்த காதலா? அல்லது காரணமே இல்லாது காதலில் உங்களுக்கு ஏற்பட்ட வெறுப்பா? எது அம்மா எம்மைப் பிரித்தது? 

அம்மா வீசும் காற்றைக் கேளுங்கள் என்கதை கூறி அழும். 

விழித்திருக்கும் விண்மீனைக் கேளுங்கள் விம்மி அழும் என்நிலை கூறும். என் அம்மாவே! ‘தவறு புரிந்தவர்கள் அனைவரும் உங்கள் வழியில் நடக்க முடியுமா?’ என காந்தியைக் கேட்டபொழுது எவர் ஒருவர் தவறை தவறென ஒப்புக் கொள்கின்றாரோ அவர்கள் அனைவருமே என் வழிநடப்பார்கள் என மகாத்மா காந்தி கூறியிருக்கின்றார். 

அந்தவகையில் சிறு பிள்ளைத்தனமாக நான் செய்த பிழையை மன்னிக்கும்படி நான் ஒருபோதும் உங்களைக் கேட்கமாட்டேன். ஏனெனில் நான் செய்தது மன்னிக்கக் கூடிய குற்றம் அல்ல. அம்மா உங்கள் இதயத்தை சுக்கு நூறாக்கிவிட்டு உங்கள் வாழ்க்கையை பாலைவனம் ஆக்கிவிட்டு என் அம்மாவின் கண்ணீரில் கவலையில் அாழ்க்கையை ஆரம்பித்த என்னை ஒருமுறைகூட என் அம்மா மன்னிக்கக் கூடாது. ஆனால் நான் இறைவனைக் கேட்பதெல்லாம். எத்தன பிறப்பெடுத்தாலும் நான் என் அம்மாவின் மகளாகவே பிறக்கவேண்டும் என்பதுதான். 

அம்மா என் ஆசை அம்மா என் உயிர் என்னைவிட்டு பிரியும் முன்னர் ஒரு முறை ஒரேயொருமுறை என் அன்பு மகளுக்கு என ஒரு கடிதம் எழுதுவீங்களா அம்மா? 

உங்கள் கடிதத்திற்காகவே உயிர்வாழும்.
உங்கள் அன்புமகள். 


காலை மலர்ந்தது 

கண்விழித்த கமலம் பத்துவருடங்களாக வெறுமையாகக் கிடந்த பக்கத்துக் கட்டிலைப் பார்த்தபொழுது துக்கம் தாங்கமுடியாது கன்னங்களில் கண்ணீர் கோடு போட்டன. 

இன்று ஏன் என்று தெரியவில்லை. சுகந்தியின் நினைவு அடிக்கடி கமலத்தின் இதயத்தைத் தாக்கிக்கொண்டு இருந்தது. 

‘இவளை மறக்கவேண்டும் என்பதுதான் எனக்கு அடிக்கடி மறந்துபோகின்றது’ என நினைத்தபடி எழுந்து தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு வழக்கம்போல தன் சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி பத்திரிகைக்காக காத்திருந்தவளை நோக்கி குமார் மகிழ்ச்சியுடன் ஓடிவந்தான். ‘அம்மா! வெளிநாட்டிலிருந்து கடிதம் வந்திருக்கு. நான் நினைக்கிறன் அக்காதான் எழுதியிருக்கிறா!” என சிரித்தபடி கடிதத்தை நீட்டினான். 

‘குமார். முதல் என்ரை கண்ணாடியை எடுத்துத் தரவேணும் என்று எத்தனை தரம் உனக்குச் சொல்லியிருக்கிறன். அந்தக் கடிதத்தைத் தந்திட்டு ஓடிப்போய் கண்ணாடி எடுத்துவா!” என்றபடி கமலம் கடிதத்தின்மேல் எழுதியிருந்த கை எழுத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். 

என்ன செய்வது எனப் புரியாமல் கதிரையில் சாய்ந்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. 

கமலத்தைப் பார்த்த குமார் 

“அம்மா உங்களுக்கு என்னம்மா செய்யுது?” என பதறினான். 

“எனக்கு ஒன்றுமில்லை அப்பன் நீ போய் சாப்பிடு!” என்ற கமலம் கடிதத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள். 

“பிரியமுள்ள என் அம்மாவுக்கு!’ என்ற வார்த்தையைப் பார்த்ததும் பத்துவருடங்களின்பின் சுகந்தி நேரில்வந்து “அம்மா!” என்பதுபோல் கமலத்துக்கு ஓர் பிரமை ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து கமலத்தால் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. 

இவ்வளவு வருடங்களாக அடக்கிவைத்திருந்த அன்பு பீரிட்டுக்கொண்டு கண்ணீராக வெளிப்பட்டது. 

“என் செல்வமே!” என கூறிய கமலம் சுகந்தியின் கடிதத்தை அணைத்தபடி சாய்ந்து கொண்டாள். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த கமலம் இவ்வளவு நாட்களாக எதைப் பார்க்கக்கூடாது என பிடிவாதமாக இருந்தாளோ அதை மறந்து சுகந்தியின் புகைப்படத்தை எடுத்து தூசி தட்டத் தொடங்கியவளின் மனமோ… சுகந்தியின் கடிதத்தை அசைபோடத் தொடங்கியது. என்மகளே என்ன கேள்வி கேட்டுவிட்டாய்? நான் உன்னை மறந்துவிட்டேனா? அடி அசட்டுப்பெண்ணே நீ என்னில் இருந்தும் என் நினைவில் இருந்தும் ஒரு கணப்பொழுதும் நீங்கவில்லை. நீ விளையாடிக் கழித்த பொம்மையில் இருந்து வேண்டாம் என்று தூக்கி எறிந்த உன் அம்மாவும் இப்பொழுதும் அப்படியேதான். ஆனாலும் என் பெண்ணே உன் அசட்டுத் துணிச்சலையும் ஆக்ரோஷமான கோபத்தையும் என்னால் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை!” என எண்ணித் தனக்குள் சிரித்துக்கொண்டாள் கமலம். 


சில நாட்களாகக் காலை எழுந்தவுடன் தவறாமல் தபால் பெட்டியைப் பார்ப்பதும் வெறுமையான பெட்டியைப் பார்த்து கவலையுடன் திரும்புவதே சுகந்தியின் வேலையாக இருந்தது. 

அந்த நாட்களிலெல்லாம் ரவியுடன் பேசப்பிடிக்காமல் மௌனம் சாதிப்பாள் சுகந்தி. இன்றும் அப்படித்தான் தபால் பெட்டியை திறந்தவள் தன் கண்களையே நம்ப முடியாமல் தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்தாள். அம்மாவின் முத்து முத்தான கையெழுத்தில் முத்தம் இட்டாள். 

‘அம்மா அம்மா’ என மனம் அழுதது. 

ஆனந்தம் தாங்க முடியாமல் ரவிக்கு சொல்வோம்!” என தொலைபேசியை எடுத்தாள். இல்லை முதலில் கடிதத்தை படிப்போம் என்ர ஆசை அம்மா என்ன எழுதியிருக்கிறா என்று பார்ப்போம் என நினைத்தபடி மாடியை நோக்கி ஓடினாள். 

கடிதத்தைப் பிரித்தாள். 

பிரியமுள்ள என் ஆசைமகளுக்கு என்ற வரியைப் படித்ததும் கண்கள் ஆறாக பெருக்கெடுத்தது. கண்களைத் துடைத்துத் துடைத்து அம்மாவின் கடிதத்தைப் படிக்கநினைத்து தோல்விகண்டாள் சுகந்தி. 

“முடியவில்லையே அம்மா முடியவில்லையே!” என வாய்விட்டு அழுதாள். தொலைபேசி அலறியது. அலறட்டும் என்றது ஒரு மனம். 

‘ஒருவேளை ரவியாக இருக்குமோ..ஓடு! ஓடிப்போய் சொல்!’ என்றது இன்னொரு மனம். 

அம்மாவின் கடிதத்தை மார்போடு அணைத்தபடி மகிழ்ச்சியுடன் படிகளைத் தாவித் தாவிக் கடந்தாள் சுகந்தி. 

கால்களுக்குள் சிக்கண்ட கவுஸ்கோர் அவளை தடுமாறி தலைகுப்புற விழுத்தியது. படிகளில் உருண்ட சுகந்தியின் இதயம் ‘அம்மா அம்மா’ என அலறியது. அம்மாவின் கடிதத்தை இறுகப்பிடித்தபடி அவள் இரத்த வெள்ளத்தில் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நினைவை இழக்கத் தொடங்கினாள் சுகந்தி. ஆனால் அவள் மனம்மட்டும் அந்த நிலையிலும் அம்மாவின் கடிதத்தைப் படிக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்துடனே அவளின் உயிர் மெல்லப் பிரிந்தது. 

அவளின் நிலை அறிந்தோ என்னவோ தொலைபேசி தொடர்ந்து அலறியபடி இருந்தது. 

அன்பு மகளுக்கு! 

ஆசையாய் ஓர் மடல் 
நேற்று உன் நேசம் போனதாய் 
எனக்குள் ஓர் நெருடல் 
பாசம் வைப்பதும் 
பட்டென்று துடைப்பதும்
என்னால் இயலாது
என் பெண்ணே!
எத்தனை வருடங்கள்
என் உயிர் உள்ளதோ
அத்தனை வருடமும்
என் அன்பும் ஆசியும்
என்றும் உண்டு! 

– 02-01-2001, பூவரசு இருமாத இதழ், 18வது ஆண்டு நிறைவுப் போட்டியில் முதற்பரிசுபெற்ற சிறுகதை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *