பிரசுரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 8,018 
 
 

மகேஷ் தான் எழுதிய காகிதத்தை எல்லாம் கிழித்து கொண்டிருந்தான். வீட்டு வாசலில் இருவர் பதுங்கிப் பதுங்கி வருவதைக் கண்டு மகேஷின் அப்பா யாரது என்றார். வந்தவர்கள் தயக்கத்துடன் உள்ளே வந்து, மகேஷைப் பார்க்க வந்தோம் என்றனர். அவன் ஏதாவது எழுதிக்கிட்டு இருப்பான். இல்ல காகிதத்தைக் கிழித்து கொண்டியிருப்பான். அந்த ரூம்ல போய் பாருங்க என்றார். இருவரும் தன்னை விட்டால் போதும் என்று மகேஷின் அறைக்கு வேகமாக சென்றனர். மகேஷ் உனக்கு என்ன.. எப்போதும் எழுதிக் கொண்டேதான் இருப்பியா? நாங்களும் படிக்கிறோம். ஆனால் உன்னை மாதிரி இல்லப்பா. சும்மா எந்த நேரமும் படித்துக்கொண்டு இருக்க மாட்டோம். சரி நாங்க சொல்ல வந்த விஷயமே வேற என்றார்கள். இதைக் கேட்ட மகேஷ் என்ன விஷயம்! என்னோட கவிதை இல்ல சிறுகதை ஏதாவது பேப்பர்ல வெளிவந்து இருக்குதா? என்று ஆர்வத்துடன் கேட்டான்.

ஆமாம் அதுதான் உனக்கு குறைச்சல். நாங்க சினிமாவுக்குப் போறோம். நீயும் வருவதாக இருந்தால் வா கிளம்பு போகலாம், நேரமாயிடுச்சு சீக்கிரம் என்றார்கள். அட ச்சீ ச்சீ இதுதான் நீங்கள் சொல்ல வந்த செய்தியா? நான் வேற என்னமோ என்றுதான் மகிழ்ச்சியா இருந்தேன் என்றான் மகேஷ். ஆமா உனக்கு எப்ப மகிழ்ச்சின்னா நீ எழுதிய கவிதை அல்லது கதை இதழில் பிரசுரமாகி வரணும் அதானே.

சரி நீ ஏம்பாபா ரொம்ப கஷ்டப்படுற. இதோ பாரு நாங்க இல்ல, எனக்கு என்ன உன்ன மாதிரி ஆசையா இருக்குது. எங்களுக்கும் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறதுதான். ஆனால் அதையெல்லாம் அப்புறமா படிச்சிடலாம் என்றுதான் நாங்க சினிமாவுக்குப் போறோம். சரி சரி நீ வரியா இல்லையா?. இல்ல நான் கொஞ்சம் எழுதனும், அப்புறம் வேலைவேற இருக்கு. அதனால நீங்க போயிட்டு வாங்க என்றான் மகேஷ். சரி ஊங்கூட பேசியதில் நேரம்போனதே தெரியல டைமாயிடுச்சு. நாங்க சினிமாவுக்குப் போறோம் என்று சொல்லி இருவரும் புறப்பட்டு சென்றனர்.

மகேஷ் உன்னோட பிரண்டு வந்தார்களே? போய் விட்டார்களா? இல்லையா? போகலன்னா கூப்பிட்டுகிட்டு வா சேர்ந்தே சாப்பிடலாம். அப்பா அவர்கள் அப்பவே போய்விட்டார்கள். சரி சரி வா சாப்பிடலாம் என்று அழைத்தார். அபிராமி, அபிராமி சாப்பாடு கொண்டு வா தூக்கம் வேற வருது என்று சொல்வதைக் கேட்டவுடன் என்னங்க சத்தம் போடுறீங்க, டேபிளில் சாப்பாடு ரெடியா இருக்குது என்றாள். இதோ பால் காய்ச்சிட்டு வந்துடறேன். பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்றாள். பிறகு சாப்பிட்டுவிட்டு அவரவர்கள் தூங்கச் சென்றனர்.

அபியும் தான் தூங்குவதற்காக தன் அறைக்குச் சென்றார். செல்லும் வழியில் அங்கே மகேஷ் முழித்து கொண்டு இருப்பதைப் பார்த்து விட்டு, மகேஷ் என்னப்பா தூக்கம் வரல, இல்லம்மா கவிதை எழுதுறேமா என்றான். உன்னோட ஒரே தலைவலியா போச்சு. வேலையா சாப்பிட்டமா? தூங்கணுமா? என்றில்லாமல் எப்போதும் பேனாவும் கையுமாக உட்கார்ந்துகிட்டு எழுதுற. நான் சொல்லித்தான் எங்கு கேட்கப்போற. சரி சரி வேலையா எழுதிட்டு லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு சரியா. காலையில காலேஜுக்கு போகணும் என்று சொல்லிவிட்டு அவளும் தூங்கச் சென்றாள்.

மகேஷுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அவனுக்குள் பலவாறு பேசிக் கொண்டிருந்தான். ஒரு இதழுக்குக் கவிதை அனுப்பி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் இதழில் வரல. அனுப்பிய கவிதையும் நமக்குத் திரும்ப வரல. என்னப்பா இது? நம்ம கவிதை பிரசுரம் ஆகலையே. அப்படி எல்லாம் இருக்காது கண்டிப்பாக இந்த வாரம் வெளியாகும்.

அது சரி, ஒரு சிறுகதைவேற எழுதி பாதியிலேயே இருக்குது. அத இப்ப முடிச்சிட்டு தூங்குவோம் என நினைத்துக் கொண்டே மெல்ல மெல்ல அதை எழுத ஆரம்பித்தான். காற்று வாங்குவதற்காக அறையிலிருந்து அவனுடைய அப்பா வெளியில் வர நினைத்து லைட் போட்டார். என்ன இது? இன்னுமா மகேஷ் தூங்கல லைட் எரிகிறது என்று கேட்டுக்கொண்டே அவனது அறைக்குள் நுழைந்தார். என்னப்பா மகேஷ் உனக்குத் தூக்கம் வராதா?. இல்லப்பா எனக்கு ஏதாவது ஒரு இதழில்ல நான் எழுதின கவிதை அல்லது கதை வெளிவரவரைக்கும் எனக்குத் தூக்கமே கிடையாது என்றான். என்னமோ உனக்குள்ள நீ ஒரு பாரதியார்ன்னு ஜெயகாந்தன்ன்னு நினைப்போ? அதெல்லாம் மூடிவைச்சிட்டு தூங்கு போ என்று வேகமாக சீறி எழுந்த பாம்பு மாதிரி சொல்லி நழுவிவிட்டார்.

காலை அழகாக விடிந்தது. மகேஷின் அம்மா சமையல் அறையில் டீ போட்டுவிட்டு வந்தார். மகேஷ், மகேஷ் எழுந்திரு. அப்பாவை எழுப்பு. விடிஞ்சிடுச்சிப் பாரு என்று சொன்னவுடன் மகேஷ் எழுந்திருக்க முயன்றான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் அப்பா எழுந்திரிச்சி வந்துவிட்டார். நைட்ல தூங்குன்னு சொன்னா பெருசா எழுதிட்டு இருப்பாரு. இப்ப பாரு இப்படி தூங்குறான்னு என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றுவிட்டார். அபியும் இவனை எழுப்பி சாப்பாடு போட்டார். சாப்பிட்டவுடன் அவன் தன் அறைக்குச் செல்ல நினைத்து போகமுற்படும்போது மகேஷ் எங்கப்பா போற. எழுதவா? ஏண்டா ஒன்னு சொன்னா கோவிச்சுக்குவியா? எப்பப்பாரு எழுதிகிட்டுதான் இருப்பியா? போய் கெளம்பு. இன்னைக்குக் காலேஜ் போகனும். அம்மா சொன்னதுதாம் அவனுக்குக் காலேஜ் ஞாபகமே வந்தது.

காலேஜிக்குப் போனான். அவன் நண்பர்கள் அவனைப் பார்த்து ஏன்டா? லேட்டா வர்ற என்றார்கள். இல்ல ரமேஷ் நான் நல்லா தூங்கிட்டேன். அதனால்தான் லேட்டாகிடுச்சு. நல்லா இருக்கியாடா. வேலையா தூங்கினா ஏன் நீ காலைல எழுந்திருக்கிற மாட்ட என்றான் ரமேஷ். நீ எப்பப்பாரு எழுதிகிட்டே இருப்பியே, நைட்டு ஏதாவது எழுதினியா என்று கேட்டவுடன் மகேஷ் தாங்கிக்கொள்ள முடியாதபடி மகிழ்ச்சி அடைந்தான். ஆமா ஒரு சிறுகதை எழுதி இருக்கேன் என்றான். உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? ஆவுன்னா கவிதை, சிறுகதை ஏதாவது எழுதி இதழுக்கு அனுப்புவதே உனக்கு வேலையா போச்சு.

சரி சரி ஏதாவது உன் படைப்பு ஒரு இதழில் வெளிவந்து இருக்கா? சொல்லு பார்ப்போம் . ஆமாம் ரமேஷ் நானும் நாலஞ்சு நாளிதழுக்கு எழுதி அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறேன். ஏன்தான் தெரியல என் கவிதை மட்டும் வெளிவராமல் இருக்குன்னு தெரியல. அதற்குள் ரமேஷ் பேசத் தொடங்கினான்.

மகேஷ் எல்லாரும் பல்லக்கில் உட்கார்ந்துக்க ஆசைப்பட்டா? அப்புறம் யார்தான் பல்லக்கத் தூக்குவது. நன்றாக யோசித்து பார். கவிதை, கதை எழுதுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. நீயும் அதையே செஞ்சா? என்னவாகும் சொல்லு. அதனால நான் சொல்றமாதிரி கேளு. சும்மா கதை, கவிதை எழுதுற நேரத்தில வேற ஏதாவது புக் எடுத்து படிச்சினாலும் நல்லதாயிருக்கும். கத எழுதுற பழக்கத்தை விட்டுடு என்று ரமேஷ் சொல்றத கேட்டதும் மகேஷ் தன் காதில் அம்பு கொண்டு குத்துவதுபோன்று உணர்ந்தான். ரமேஷ் உன்னால எழுத முடியலன்னா ஏண்டா? எழுதுற எங்களைப் போன்றவர்களைக் கெடுக்கிற. என்னால கவிதை, கதை எழுதாம இருக்க முடியாது. அது என்னோட சொந்த விஷயம். இதில் நீ தலையிட்டு ஏன்டா நம் நட்பை முடிச்சிக்கிற என்று கோபமாக பேசிவிட்டு நகர்ந்துவிட்டான்.

காலேஜ் பெல் அடித்து வகுப்புத் தொடங்கியது. வகுப்பிற்கு பேராசிரியர் வந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் மகேஷின் நினைவுகளெல்லாம் நேற்று ஒரு இதழுக்குக் கதை அனுப்பினோமே அது நாளைக்குப் பிரசுரம் ஆகுமா? ஆகாதா? என்ற முறையில் அவனுக்குள்ளும் ஒரு பாடம் நடந்து கொண்டுதான் இருந்தது.

இடைவேளை வகுப்பில் அனைவரும் எழுந்து வெளியில் சென்று விட்டனர். அப்போது ரமேஷ் கண்ணனிடம் ஏண்டா மகேஷ் எங்கே? காணோம் என்று கேட்க, உடனே கண்ணன் அவனா? அவன் எப்பவும் போலதான் அப்க்கப்பாரு அங்க உட்கார்ந்துகிட்டு என்னமோ கவிதையோ அல்லது கதையையோ எழுதிகிட்டு இருக்கான். இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு ஒரே லட்சியம்டா அவனோட கவிதை ஒன்னு ஒரு வருடத்திற்குள் இதழில் வெளியாகும்படி செய்யற்ன்னு சொல்லிட்டு என்னிடம்தான் பந்தயம் கட்டினான். ஆமாம் அவன் பந்தயத்தில் ஜெயிச்சிடுவான் போல இருக்குதே. பாப்போம் இன்னும் மூணு மாசம் தான் பாக்கி இருக்கிறது. அதுக்குள்ள என்னதான் செய்கிறான் என்று பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டே கல்லூரியைவிட்டு இருவரும் வெளியே சென்றனர்.

மகேஷ் எப்போதும் போல் எழுதுவதை நிறுத்தாமல் எழுதிக்கொண்டேதான் இருந்தான். ஒவ்வொரு நாளும் தான் எழுதிய கவிதை இதழில் வெளிவரும் என்று ஏக்கத்துடன் படிப்பதே அவனுக்குத் தினசரி வழக்கமாகிவிட்டது. அவன் மனதில் பல கேள்விகள் எழுந்ததுண்டு. நானும் எத்தனை கவிதைகள், கதைகள் எழுதி அனுப்பிகிட்டே இருக்கேன் ஒன்னுகூட வெளிவரவில்லையே? நான் எழுதுவதுதான் சரி இல்லையா? இல்ல இது என் நேரமா? பந்தயம் முடிவதற்கு இன்னும் ஒரு மாதம்தானே இருக்குது. என்ன செய்வது. நான் ஜெயித்திடுவேன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு சிறு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இத்தனை அனுப்பியும் வெளிவராத படைப்பு இனிமேல் அனுப்பிதான் வெளிவருமா? சரி பார்க்கலாம். இந்தமுறை கண்டிப்பாக வெளிவரும் என்ற முழு முயற்சியில் ஒரு சிறுகதையை எழுதி வேறு ஒரு இதழிற்கு அனுப்பினான்.

காலேஜ் சென்றான். வகுப்பில் ரமேஷ் சொன்னான். ஏன்டா? மகேஷ் நீ பந்தயத்தில் தோத்துடுவ போல உனக்குத் தோணல? இப்போவும் ஒன்னும் கெட்டுப்போகவில்லை. நீ சொன்ன பந்தயத்த வாபஸ் வாங்கிக்கோ. அதற்குள் கண்ணன் பேச ஆரம்பித்தான். ஏன்டா மகேஷ் இன்னும் நல்லா எழுத முயற்சி பண்ணுடா என்று கண்ணன் சொன்னான். ரமேஷ் பந்தயம் வைக்கலனாலும் பெரிய எழுத்தாளனாக வருவேன் நீ சொன்னல்ல. என்ன ஆச்சு. இன்னும் பந்தயம் முடிவதற்கு ஒரு வாரம்தான் இருக்கு. என்ன சொல்ற பந்தயத்த வாபஸ் வாங்கிக்கிறீயா? இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே மகேஷ் பேசத் தொடங்கிவிட்டான். ரமேஷ் நான் உன்னிடம் பந்தயம் கட்டியது என்னமோ நிஜம்தான். ஆனா அதுக்கு முன்னே இருந்து என்னுள் எழுத்தாளன் என்ற நெருப்பு எரிந்துகொண்டேதான் இருந்தது. நீ பந்தயம் வைத்து எனக்கு அந்த நெருப்பில் எண்ணெய்விட்டது போல இருந்தது. முன்பு எப்போதாவதுதான் எழுதுவேன். ஆனா பந்தயம் வைத்தவுடன் எழுதுவதே என் முழு நேர வேலை ஆகிவிட்டது.

கண்டிப்பாக என் முயற்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் ஜெயிப்பேன். இதை நீ விரைவில் பார்க்கப் போகிறாய். அதையும்தான் பார்ப்போமே. இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. ஒரு வாரம் கழிச்சு நீ எழுத்தாளனா? இல்லை புத்தகப் புழுவா? என்று பேசிக்கொண்டு இருந்தனர். வாதத்தை முடித்துக் கொண்டு அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். நாட்கள் நகர நகர மகேஷுக்குத் துணிச்சல் இருந்தாலும், சின்ன வருத்தம் அவனுக்குள் இருக்கத்தான் செய்தது. நாம் தோற்றுப் போய்விடுவோமோ? என்று வருந்தினான். இருப்பினும் தன் மனதிற்கு ஆறுதல் கூறிக்கொள்வான். மறுநாள் இதழைப் பார்த்தான். அதில் தான் எழுதிய கவிதை ஒன்று பிரசுரமாகி இருந்தது. அதைப் பார்த்ததும் தன்னையே மறந்து துள்ளிக் குதித்தான்.

சூரியனையே வென்றுவிட்டதாக நினைத்து ஆடிப்பாடி திரிந்தான். அந்த இதழை தன் கையில் வைத்துக்கொண்டு தெருவெல்லாம் ஓடினான். மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திரிந்தான். தான் பந்தயத்தில் ஜெயித்துவிட்டது ஒரு புறமாகவும் தன்னைத் திட்டிய அப்பாவிற்குப் இப்பிரசுரம் பதில் தருவதாகவும் இருப்பதை நினைத்து பெருமைப்பட்டான். வழியில் தன் நண்பனைப் பார்த்து ரமேஷ் நான் சொன்னேனே பார்த்தியா? என்று சொல்லமுடியாமல் ஆனந்தக் கடலில் குதித்தான்.

அவன் தன் அப்பாவிடம் சென்று இதழைக் காட்டினான். நான் வருங்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளனாக ஆவேனென்று தன் அப்பாவிடம் கூறி மகிழ்ச்சி அடைந்தான். . இப்படி உரக்க கத்திவிட்டு சற்றுதூரம் சென்று இந்த ஒரு குழந்தைக்காக நான் பட்டபாடு இருக்கிறதே! அப்பப்பா சொல்லமுடியாத வார்த்தைகளை அவன் உதடுகள் முணுமுணுத்தன. ஆனந்தக் கண்ணீர் தள்ளத்தள்ள அவனுள் மீண்டும் எழுத்தாளன் என்ற இலட்சியப் பந்தயம் எரியத் தொடங்கிவிட்டது. ஆம் பிரசுரம் மீண்டும் தொடர்ந்து பிரசவிக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *