பித்தளைக் குடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2024
பார்வையிட்டோர்: 299 
 
 

இரவு ஒன்பது மணி. வெறியுடன் பாட்டும் கச்சேரியுமாக வந்த சிவநாதன் தனது பெற்றோரின் வீட்டுப்படலையின் முன்பாக அச்சொட்டாக சைக்கிளுடன் விழுந்தான்.

“நாதன்… என்ன நடந்தது? மனிசியோடை சண்டையா?” தாயார் கேட்டபடியே தலையில் பிடிக்க, தகப்பன் காலில் பிடித்தார். அவர்களால் சிவநாதனைத் தூக்கமுடியவில்லை.

“அதென்ணண்டு இந்தக் குடிகாரர்கள் எல்லாம் சரியாக தமது வீட்டு வாசலுக்கையே வந்து விழுகினம்?” கேட்டபடியே முன்வீட்டுக்காரர்கள் உதவினார்கள்.

“என்னடா மனிசியோடை சண்டையா?” திரும்பவும் தாயார் கேட்க, “மா…மா..” என்றான். தகப்பன் ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்து, நடுவீட்டுக்குள் சிவநாதனின் தலையில் ஊற்றினார். “குடம்… குடம்” என்று அரற்றியபடியே உறக்கத்திற்குப் போனான் சிவநாதன். மறுநாள் விடிந்தபோதுதான் முதல்நாள் என்ன நடந்தது என்பது அவனுக்கே நினைவுக்கு வந்தது.

சிவநாதனும் மாமாவும்—மனைவியின் தகப்பனார்—சாடியும் மூடியும் போல. சிவநாதன் கள்ளுக்கொட்டிலுக்குப் போனால், வரும்போது மாமாவுக்கு எடுத்து வருவான். மாமா போனால் மருமகனுக்கு. இருவரும் சேர்ந்து போனால், ஒருவரையொருவர் இழுத்து விழுத்தியபடி வேலி, பத்தையள் எல்லாம் சுகம்கேட்டு வீட்டுக்கு வந்து சேர்வார்கள். பார்ப்பவர்கள் கண்களுக்கு, ஒரு வண்டிலுக்கு இரண்டுபக்கமும் காளை மாடுகளைப் பூட்டியது போன்றிருக்கும். குடியாத வேளைகளில் இருவருமே சாதுக்கள். போதை தலைக்கேறினால் எதுவுமே தெரியாது. சிவநாதனின் மனைவியின் சொல் அங்கே எடுபடாது. அப்பாவிலும் கணவனிலும் மனமிரங்கி, சோற்றுடன் இறைச்சிக்கறி, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, வெங்காயச்சம்பல், அவித்த முட்டை என்பவற்றைப் பரிமாறுவாள். சாப்பிட்டு முடிய மாமனுக்கும் மருமகனுக்கும் சண்டை தொடங்கியது. ”சீதனம் தரேல்லை. இன்னும் வீடும் கட்டித் தரேல்லை. கண்டறியாத வாத்தி…” சிவநாதன் சொல்ல, “போக்கிரி… உனக்குப் பெம்பிளை காணுமெண்டுதானே வந்தனி” என்றார் மாமா.

சண்டை உரக்க, மனைவி சிவநாதனை ஒரு அறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டினாள். கதவை அடித்துக் களைத்துப் போனான் சிவநாதன். மாமனாருக்கு சண்டை போட ஆள் இல்லை. தனது அறைக்குள் தவண்டு நாலு கால்களில் போனார். அடுத்த அறைக்குள்ளிருந்த மருமகன், தீராந்தி வழியே குரங்குபோலத் தொத்தி, இவரின் அறைக்குள் வந்து கொண்டிருந்தான். படாரென்று தனது அறைக்கதவைப் பூட்டி, திறப்பை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டார்.

மாமனாரின் அறைக்குள் தாவிக் குதித்தான் சிவநாதன். என்றுமே அவன் அந்த அறைக்குச் சென்றதில்லை. உள்ளே ஒரு மேசையில் பெரியதொரு பித்தளைக்குடம் மாலையுடன் வீற்றிருந்தது. மேசைக்கு மேலே சுவரில் இறந்துபோன மாமியாரின் படம் தொங்கியது.

“கதவைத் திறக்கிறியா… இல்லையா?” கேட்டுக்கேட்டு அந்தப் பித்தளைக் குடத்தை நிலத்துடன் மோதி மோதி அடித்தான். குடம் நிலத்தினில் மோதி கணீர் கணீரென ஓசை எழுப்பியது. சத்தம் தாங்காமல், நீண்ட நேரத்தின் பின்னர் மாமனார் கதவைத் திறந்தார்.

மனைவியின் ஞாபகார்த்தமான பித்தளைக் குடத்தை மேசையில் காணாததால் அவர் வெறி கலைந்தது. அது மேசையின் கீழ் மூக்குப்பேணி போல சுருங்கியிருந்தது.

“கெற் அவுட்” என்று சிங்கத்தைப் போல கர்ச்சித்தார் மாமனார்.

என்ன சுகமான வாழ்க்கை. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். வெறி செய்த வேலை. குறைகுடம் கூத்தாடிவிட்டது. தான் அடித்து நொருக்கியது பித்தளைக்குடத்தையல்ல, வாழ்க்கையை என்பதை உணர்ந்தான் சிவநாதன்.

– November 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *