மணி ஒன்பது. அழகேசன் சட்டையை மாட்டிக் கொண்டு வேலைக்குக் கிளம்பினான். தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டு தண்ணீர் பிடிக்கச் சென்ற சுசீலா குடத்துடன் ஓடி வந்தாள். குழந்தையின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அழகேசனிடம் “ஏங்க குழந்தைக்கு இன்னும் ஜூரம் குறையல. கைவைத்தியமும் செஞ்சு பார்த்தாச்சி. நேரத்தோட யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வந்தீங்கன்னா டாக்டர்கிட்ட கொண்டு போய் காட்டிடலாம்” என்று சொல்லிவிட்டு அழகேசன் முகத்தையே பார்த்தபடி நின்றாய் சுசீலா.
அழகேசன் சட்டைப் பையை தொட்டுப் பார்த்துக் கொண்டான் அதில் பத்து ரூபாய் தான் இருந்தது தேதி இருபது தான் ஆகியிருந்தது. ஒன்னாம் தேதி வர்ற வருமானத்துக்கு எல்லாத் தேதியிலும் செலவிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த முருகன் படத்தைப் பார்த்துக் கொண்டே “கேட்டுப் பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அழகேசனை சொந்தங்கள் சீந்துவதில்லை. அவன் என்ன கோடீஸ்வரனா, என்னப்பா என்னைத் தெரியலையா நான் தான் அவரோட சம்மந்தி இவரோட கொழுந்தன் என்று ஒரு கூட்டம் கையேந்தி நிற்க. சர்க்கரை இருந்தால் தானே எறும்புகள் மொய்க்க வரும். பிச்சைக்காரனிடம் குசலம் விசாரிக்க வந்தால் சில்லறை போட வேண்டுமே என சொந்தங்கள் அவன் இருக்கும் பக்கமே தலை காட்டுவதில்லை. உலகப் பணக்காரர்கள் வரிசையில் நான்கைந்து இந்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் ஏழ்மை மிகுந்த நாட்டில்.
அழகேசன் சைக்கிளை வாத்தியார் வீட்டின் முன்பு நிறுத்தினான். காலிங் பெல்லை அழுத்திவிட்டு முருகா என்று சொல்லிக் கொண்டான். கோவணத்துடன் மலை ஏறிய சாமி இவன் கூப்பிட்டா மட்டும் வந்துவிடப் போகிறதா என்ன. கதவைத் திறந்த வீட்டுக்கார அம்மாவிடம் “சார் இருக்காங்களா பார்க்கணும்” என்று சொன்னான். அந்தம்மா ஏற இறங்க பார்ததுவிட்டு “நீங்க யாரு” என்றாள். “ராமு பிரஸ்ல வேலை செய்யற அழகேசன்னு சொல்லுங்க வாத்தியாருக்கு தெரியும்” என்றான்.
உள்ளே சென்ற அவள் தன் கணவனிடம் “இந்த மாதிரி ஆளுங்ககிட்டயெல்லாம் எதுக்கு சிநேகிதம் வச்சிக்கிறீங்க இப்ப பாருங்க காலைலங்காட்டியும் வீட்டு வாசல்ல ஏதோ கொடுத்ததை கேக்கற மாதிரி வந்து நிக்கிறான் பாருங்க, ஏதாச்சும் சொல்லி அனுப்புங்க போங்க வெள்ளிக்கிழமை அதுவுமா” என்று வாத்தியாரிடம் அவள் முணுமுணுத்தது அழகேசன் காதில் விழுந்தது.
சட்டையை மாட்டிக் கொண்டு பட்டனைப் போட்டபடி வெளியேவந்த பொன்னுதுரை வாத்தியார் “என்ன அழகேசா சொல்லு பள்ளிக் கூடத்துக்கு நேரம் ஆவுது” என்றார். “பாப்பாவுக்கு மூணுநாளா காய்ச்சல் நிக்கவே இல்லை. கைவைத்தியமும் பண்ணிப் பார்த்தாச்சி பிரயோஜனப்படலை. சுசீலா டாக்டர்கிட்ட காட்டிடலாம் யார்கிட்டயாவது ஐநூறு ரூபாய் வாங்கிட்டு வாங்கண்ணா அதான்” என்றான் அழகேசன் எச்சிலை மென்று விழுங்கியபடி.
“அழகேசா எனக்கும் குடும்பம் குட்டியெல்லாம் இருக்கு. அதுக்கு நல்லது கெட்டதுக்கு நான் தான் செலவு செய்யணும். கொழுந்தியாளுக்கு திடீர்ன்னு கல்யாணம் நிச்சயம் ஆயிடிச்சி உதவி பண்ணுங்கன்னு மாமனார் வந்து நிக்கிறாரு கால்ல விழாத குறைதான் என்ன, கஷ்ட நஷ்டத்தில பங்கெடுத்துக்கிறது தானே சொந்தம் செய்ய முடியாதுன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்ல முடியுமா சொல்லு, இருக்கிறதையெல்லாம் புரட்டி ஒரு நாலு லட்சம் கொடுத்தேன். அக்காவை கட்டினவன் கையை விரிச்சிட்டான்னு நாளைக்கு நாலு பேர் நாக்கு மேல பல்ல போட்டு பேசிடக் கூடாதுல்ல. நேத்து பாரு பள்ளிக்கூடம் விட்டு வர்ற வழியில ஒரு நாயி பைக்ல மோதிட்டு நிக்காம போயிட்டான். கருமாரி தயவுல எனக்கு அடி ஒண்ணும் இல்ல. ஆனா வண்டி செலவு வச்சிடிச்சி அதுக்கே காசில்லாம நான் மணிவாத்தியார்கிட்ட கேட்கலாம்ன்னு கிளம்பிட்டு இருக்கேன் நீ வந்து நிக்கற, நான் என்ன பண்றது சொல்லு” என்றார். குழந்தை வீல்லென்று அழும் சத்தம் அழகேசனுக்கு கேட்டபடி இருந்தது அவன் மனம் குமைந்தபடி “சரிங்கய்யா நான் வேற இடத்துல விசாரிச்சிக்கறேன்” என்று சொல்லிவிட்டு தன்னை நொந்தபடியே சைக்கிளை எடுத்தான் அழகேசன்.
சைக்கிளை நிழலில் போட்டுவிட்டு பிரஸ்ஸூக்குள் நுழைந்தான் அழகேசன். முதலாளி கார்மேகம் ஊதுபத்தியை சாமி படங்களுக்கு காட்டியபடி “அழகேசா ஆயிரம் நோட்டீஸ் அர்ஜெண்டா மதியம் கொடுத்தாகணும் ஓட்டிடு” என்றார். தயங்கியபடியே நின்ற அவனைப் பார்த்து “என்ன பஞ்சப்பாட்டு பாடப் போறியா ஐநூறா, ஆயிரமா ஏற்கனவே நீ வாங்கினதுக்கு நான் உனக்கு சம்பளமே தரப்படாது. போனா போவட்டும் குடும்பஸ்தன்னு கொடுக்கறேன். தரேங்ககிறதுனால அப்பப்ப கை நீட்டுனா என்ன அர்த்தம். இந்த ராமு பிரஸ்ஸை விட்டு வெளியில போய் வேலை பார்த்தா தெரியும் இந்த கார்மேகத்தோட அருமை என்னன்னு. உனக்கு சுகம் கொடுத்தவளுக்கு என்னை சோறு போட சொல்லிறியே உனக்கு வெக்கமா இல்ல” என்று வெடித்தார் முதலாளி கார்மேகம்.
அழகேசன் கோபத்தை அடக்கிக் கொண்டான் இயலாமையினால் அவன் கண்களில் நீர் கோர்த்தது. சட்டையை கழட்டி ஸ்டான்டில் மாட்டிவிட்டு மெஷினை ஓட்டச் சென்றான். எங்கு பார்த்தாலும் குழந்தை வித்யாவே அவன் கண்முன் நின்றாள். வித்யா கடவுள் எனக்கு போட்ட பிச்சை அவள் சிரிப்பில் தான் என்னால் கஷ்டங்களை மறக்க முடியுது அவ இல்லைனா நான் இல்ல முருகா முருகா என தனக்குள் சொல்லிக் கொண்டான்.
மதியம் மெஸ்லேர்ந்து வந்த சாப்பாட்டு பார்சலை பிரிக்காமல் சுசீலாவுக்கு கொடுக்கலாம் என்று எடுத்துக் கொண்டு, “ முதலாளி குழந்தைக்கு சுகமில்லை அரைநாள் லீவு வேணும்” என்றான். “மூணு ஆர்டர் வந்திருக்கு டைப் பண்ணி முடிச்சாச்சி நாளைக்கு நைட் இங்கேயே இருந்து நீ தான் ஓட்டித்தரணும் போ” என்றார் முணுமுணுத்தபடி.
சைக்கிளை தள்ளிக் கொண்டே நடக்க ஆரம்பித்தான் அழகேசன். தான் வக்கத்து போய்விட்டதை எண்ணி வருந்தினான். கடைத்தெருவில் தாயின் இடுப்பில் அமர்ந்தபடி செல்லும் குழந்தையெல்லாம் அவனுக்கு வித்யாவைப் போலவே தெரிந்தன. தன்னையே விற்றால் கூட என்னை நம்பி யாரும் ஐநூறு ரூபாய் கொடுக்க மாட்டார்களே கடவுளே என்று தலையில் அடித்துக் கொண்டான். சுசீலா காலையில் சொல்லி அனுப்பியது அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. தன்னிலை மறந்து சென்று கொண்டிருந்தவனை பிரபோ, பிரபோ என்று சொல்லிக் கொண்டே யாரோ பின் தொடர்வதைப் போலிருந்தது. அழகேசன் திரும்பிப் பார்த்தான்.
கருத்த நிறமும் மெலிந்த தேகமும் வெண்தாடியும் உடலெல்லாம் திருநீற்றுப் பட்டையும் கொண்ட அந்த பிச்சைக்காரன் கைநீட்டியபடியே அழகேசன் முன் நின்றான். போடுவதற்கு சில்லறை இல்லை பத்து ரூபாயை போடுவதற்கு அழகேசனுக்கு மனம் வரவில்லை. சைக்கிளை தள்ளிக் கொண்டு நகர முயன்ற அழகேசனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரன் “ஆண்டி ஆண்டியாத்தான் அலைய வைப்பான் பிச்சைக்காரனுக்கு எதுக்கு சைக்கிள்ங்கறேன், அவன் கொடுத்ததை காப்பாத்திக்க, அவன் கொடுத்ததை காப்பாத்திக்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான் அந்தப் பிச்சைக்காரன்.
உடம்பெல்லாம் வியர்த்திருந்தது அழகேசனுக்கு. சைக்கிளை வேகமாக மிதித்தபடி மூர்த்தி சைக்கிள் கடையில் போய் நின்றான். “இந்த சைக்கிளை வச்சிகிட்டு எவ்வளவு கொடுப்பீங்க எனக்கு அவசரமா ஐநூறு ரூபாய் தேவைப்படுது” என்றான். கடைக்காரர் உள்ளே சென்று கல்லாப்பெட்டியிலிருந்து 600 ரூபாய் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்.
தனது உதிரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தனது வீட்டை நோக்கி ஓடினான் அழகேசன். நாடே கம்பெனி ஆகிவிட்ட போதிலும் ஏழைகளின் வாழ்வு இப்படித்தான் உள்ளது எங்கள் இந்தியாவில்.