புதுசாக முளைத்த நவீனரக மாளிகைகளின் வரிசையில் அமர்ந்திருந்த கடைசி வீட்டின் முன்னால், கார் வந்து தரித்து நிற்கிறது. காரை விட்டிறங்கிய நண்பர், வீட்டின் முகப்பு நோக்கிப் படியேறிப் போய், அழைப்பு மணியை அழுத்துகிறார்.
தந்தத்தைக் குடைந்தெடுத்துக் கெட்டியாகக் கட்டியெழுப்பிய குட்டித் தாஜ்மஹாலைப் பார்த்தது போன்ற பிரமிப்புடன், அந்த வீட்டின் புறவடிவை விழிகளால் அளைந்தவாறு நான் நண்பரைப் பின்தொடர்கிறேன்.
கதவு திறப்பதைக் கட்டியங் கூறும் மெல்லிசை ஒன்று, வீட்டின் முன் மண்டபத்திலிருந்து மிதந்து வந்து, கதவுவழி வெளியேறிக் காற்றோடு கரைகிறது.
உற்சாகமான வரவேற்போடு கதவைத் திறந்த அந்த நங்கைக்கு ‘ஹாய்’ சொல்லிக்கொண்டு, என்னை அறிமுகம் செய்ய எத்தனிக்கிறார், எனது நண்பர்.
‘இவரை உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே …..’
வீட்டுக்குள் முதன் முதலாக இடதுகாலை எடுத்து வைத்த என்னை, ஒரேயொரு கணம் அவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.
‘இல்லையே!’
சட்டென உற்சாகம் குறைந்தவளாய், சாவகாசமான பதிலுடன், முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டே கதவை உட்புறமாகப் பூட்டுகிறாள்.
‘வாருங்கோ…உள்ளை வாருங்கோ…’
வீட்டு மண்டபத்திலிருந்து அவனது குரல் எங்களை வரவேற்றது. எங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறான் என்பதை அவனது குரலில் கலந்திருந்த ஆரவாரம் அடையாளம் காட்டுகிறது..
நண்பரும் நானும் உள்ளே சென்று, அவனுக்கு முன்னால் போடப்பட்டிருந்து உயர்ந்த ரக சோஃபாவில் அமர்கிறோம்.
வேலைத் தலத்தில் நிகழ்ந்த சிறு விபத்தின்போது காயப்பட்டிருந்த அவனது இடது ஆள்காட்டி விரலில், ப்பன்ட்டேஜ் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது. அயோடைற் கலந்த மருந்தினால் ப்பன்டேஜ் முழுவதும் பழுப்பு நிறம் பரவிக் கிடக்கிறது. வீட்டுக்குள்ளேயும் சாடையான மருந்து நெடி!
நண்பனை அறிமுகப்படுத்தும் நன்முயற்சியில் சற்றேனும் சளைக்காத விக்கிரமாதித்தன், எனது நண்பர்.
‘இவரை உமக்குத் தெரியுந்தானே…!’
‘ஓமோம்…நல்லாத் தெரியும். கனடாவிலை தமிழ் ரீவி, தமிழ்ப் பேப்பர் பார்க்கிறவையளுக்கு நல்லாத் தெரிஞ்ச முகமெல்லே…!’
முகமெல்லாம் பல்லாக, முகமன் கூறி வரவேற்ற அவனது வார்த்தைகளால் நான் உச்சி குளிர்ந்திருப்பேன் என்று அவர்களிருவரும் எண்ணியிருப்பர். பரஸ்பரம் இருவரும் சுக துக்கங்கள், சொந்தக் கதைகாரியங்கள் பற்றிய செய்திகளைப் பரிமாறத் துவங்குகின்றனர்.
என்னைக் குளிர்வித்த வார்த்தைகளுக்குக் கைமாறாக, தன்னடக்கமும் நன்றியும் கலந்த ஒரு மென்முறுவலை உதிர்த்துவிட்டு, பார்வையை வீட்டுக்குள் உலாவ விடுகிறேன். உள்ளும் புறமும் அழகு துலங்கும் ஆடம்பர மாளிகையைக் கட்டியெழுப்பிய ஸாஜஹானின் கதைகளில் பதிய மறுத்த மனம், அந்த அற்புதக் கலைப் படைப்பின் மூல காரணியான மும்தாஜை எனக்கு ஏற்கனவே தெரியும் என நினைவுறுத்திய போதிலும், எங்கே, எப்படித் தெரியும்? என்ற வினாவுக்கு விடை தெரியாமல், தேடி அலைந்து கொண்டிருக்கிறது!
அவள் சட்டென்று சமையலறைப் பக்கம் போய் மறைந்துகொண்டமைக்கு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றவாறான ‘தமிழ்த் தனம்’ ஏதும் காரணமாக இருக்குமோ என்றெல்லாம் தலையைப் பிய்த்துக்கொள்ளத் தேவையில்லை. ஏதோ, தன் கணவரைச் சுகம் விசாரிக்க வந்த விருந்தினருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகப் போயிருக்கிறாள்; அவ்வளவுதான்!
ஏறக்குறைய இரண்டு வருடங்களிருக்கலாம். மூன்று வயதும் ஐந்து வயதும் மதிக்கத் தக்க இரண்டு பெண் குழந்தைகளுடன் சமூக சேவைகள் அலுவலகத்தில் அவளைச் சந்தித்தமையும், ஆங்கிலம் தெரியாத அவளுக்கும், தமிழ் புரியாத சமூக சேவைகள் அலுவலர் ஒருவருக்கும் இடையே தொடர்பாடற் பாலமாக நான் பணியாற்றப் போயிருந்தமையும் நினைவுப் பாறையிலிருந்து நீர்த்துளியாகக் கசியத் துவங்குகிறது. சமூகநல உதவிப் பணத்தைப் பெறுவதற்கான அவளது தகுதியை மீளமதிப்பீடு செய்யும் மேலதிகாரியுடன் நிகழ்ந்த நேர்காணல், அது.
அவள் கணவனோடு மீண்டும் இணைந்து வாழ்வதற்கு ஏன் முயற்சி செய்யக் கூடாது? என்ற கேள்விக்கு விடை காண்பதிலேயே அந்தப் பெண் மேலலுவலர் பெரிதும் ஆர்வம்கொண்டு காணப்படுகிறாள்.
சமூகநலக் கொடுப்பனவு என்பது வருமானத்துக்கு வழியில்லாத சகலருக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிப் பணம். பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்தின் ஒரு பகுதி. அது விரையமாவதையோ அல்லது மோசடிக்கு இரையாகுவதையோ அரசும் விரும்பாது; பொதுமக்களும் விரும்ப மாட்டார்கள்.
மீண்டும் கூடிவாழ்வதற்குக் கணவன் சம்மதமாயிருந்தும், மனைவி மட்டும் மறுப்புக் கூறிப் பிடிவாதமாகப் பிரிந்திருப்பது நல்லதல்ல.
இன்னும் பல காலம் வாழவேண்டிய இளம் கணவனும் மனைவியும் பிரிந்து, தனித்தனியாக வாழ்ந்து வருவதில் உள்ள பொருள், பாதுகாப்பு, சமூகம், உளம் சார்ந்த நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம்.
பிரதானமாக, இந்தச் சிக்கல்களால் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகவும் கெடுதியானவை.
வாழ்க்கை என்பது எப்போதும் வசந்தமல்ல. தென்றலும் புயலும், கோடையும் மாரியும், உதிர்வும் துளிர்ப்பும் எப்படி இயற்கையின் எதிரும் புதிருமான குணாம்சங்களோ, அப்படியேதான் குடும்ப வாழ்க்கையும். இந்த உண்மையை இரு தரப்பினரும் மனதில் உள்வாங்கி, முரண்பாடுகளைக் களைந்து மீண்டும் கூடிவாழ முயற்சிக்க வேண்டும்.
சமூகநல உதவிப் பணத்தைக் கொடுப்பதா? இல்லைத் தடுப்பதா? என்பதனைக் கண்டறிவதில் மட்டுமே பொதுவாக சமூக சேவைகள் அலுவலர்கள் குறியாயிருப்பது வழக்கம். அதற்கு மாறாக, குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை இத்தகைய புத்திமதிகளுடன் வலியுறுத்தும் இந்த வெள்ளையினப் பெண் அதிகாரியின் கரிசனை மிகுந்த அணுகுமுறை ஆச்சரியமளித்தது! மேற்குலக ஆங்கிலச் சூழலில் அந்த அலுவலர் ஒரு புதினமான புறநடை!
‘நீ ஏன் உன்னுடைய கணவனுடன் இணைந்துகொள்ள மறுக்கிறாய்? அது என்ன காரணமாக இருந்தாலும் பயப்படத் தேவையில்லை. துணிந்து என்னிடம் சொல்லாம்’
பதிலேதுமின்றி மௌனமாக அவள் தலை குனிந்திருக்கிறாள்.
உலகில் மிகக் கூடுதலான தடவை மொழிபெயர்க்கப்படும் மொழியும் – அடிக்கடி தவறாக மொழிபெயர்க்கப்படும் பொழியும் மௌனம்தானாம். அந்தத் தவறைத் தவிர்க்கும் பொருட்டு நானும் மௌனமாக இருக்கிறேன்.
குழந்தைகளோ தாயின் வாடிய முகத்தை ஆவலோடு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேசையின் லாச்சியை இழுத்து, சில வெள்ளை நிற வெற்றுக் கடுதாசிகளையும் பலவர்ணக் கிறேயோன்களையும் எடுத்து அவர்களிடம் கொடுகிறாள், அந்த அதிகாரி. அறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த சின்ன மேசையருகே போயிருந்து படம் கீறி விளாயாடுமாறு அன்போடு பணிக்கிறாள். குழந்தைகள் படம் கீறி விளையாட ஆரம்பிக்கின்றனர்.
‘சரி…சொல்லு… உன்னுடைய கணவனோடு வாழ்வதில் உனக்கு என்ன பிரச்சினை?’ தனது முயற்சியில் தளராத அந்த அதிகாரி திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டிருந்த கேள்வியால் சினமடைந்த அவள், சற்றேனும் எதிர்பாராத வகையில் திடீரென வெம்பி வெடிக்கிறாள்.
‘அந்த மிருகத்தோடை என்னாலை வாழேலாது…!’
வெஞ்சினத்துடன் வார்த்தைகள் அவளது வாயிலிருந்து தீப்பொறிகளாய்ப் பறக்கின்றன!
சற்றேனும் எதிர்பாராத அந்த எதிர்வினை ஏற்படுத்திய ஆச்சரியத்தோடு, அவளது முகத்தை உற்று நோக்கிய அதிகாரி, ஒரு கணம் நிலை குலைந்து போகிறாள். படம் வரைந்துகொண்டிருந்த குழந்தைகள் திகிலுடன் அம்மாவைத் திரும்பிப் பார்க்கின்றனர். நிசப்தம் அறையில் நிரம்பி வழிகிறது!
நிலம் நோக்கிக் கவிழ்ந்திருந்த அவளது முகத்தை மிகுந்த பொறுமையுடனும் அநுதாபத்துடனும் அவதானித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரி, தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் கேட்கிறாள் –
‘என்ன காரணம் என்பதை அறியலாமா?’
‘நானெடுக்கிற இந்தப் பிச்சைக் காசுக்காக, இந்த ஒஃப்பீசிலை என்னை விசாரிச்ச எல்லாரிட்டையும் எத்தனை தடவை அந்தக் காரணத்தைச் சொல்லிப்போட்டேன்.’
அவளது குரல் தளதளக்கிறது!
‘அவன் ஒரு கேடுகெட்டவன். என்னிலையோ என்ரை பிள்ளையளிலையோ எந்தவிதமான அன்போ, அக்கறையோ இல்லாத மிருகம்.’
குமுறும் எரிமலையாய் மீண்டும் வெகுண்டெழுகிறாள்!
‘குடும்பம் இருக்குதெண்டு ஒரு கொஞ்சமும் பொறுப்புணர்வு கிடையாது. ஒழுங்காக வேலைக்குப் போறதில்லை. இடைக்கிடை கிடைக்கிற ஒரு சொட்டுச் சம்பளத்தையும் வீட்டுச் செலவுக்குத் தாறதில்லை. எப்ப பார்த்தாலும் கசினோவிலை போயிருந்து சூது விளையாடிறதும் குடியும், கூத்தும் கும்மாளமும்தான். கை நீட்டி இன்னும் அடிக்கையில்லையே தவிர, சொல்லாலையும் செய்கையாலையும் என்னையும் என்ரை பிள்ளையளையும் சித்திரவதை செய்யிறவனோடை எப்பிடி நான் வாழ முடியும்?’
‘அவனுக்குப் பசிக்கிற நேரமெல்லாம் சமைச்சுக் கொட்ட வேணும். ஆசைப்படுகிற நேரமெல்லாம் அவன் போட்டுக் காட்டுற அசிங்கமான வீடியோப் படங்களை அவனோடை சேர்ந்து பார்க்க வேணும் – அப்பிடியே அவன்ரை ஆசை தீர்க்க வேணும். உணர்ச்சி இல்லாத ஒரு வெறும் யந்திரமாக அவனோடை எப்பிடி என்னை வாழச் சொல்லுறியள்…?’
‘அம்மாவின்ரை அன்பையும் அரவணைப்பையும் மட்டும் நம்பி எதிர்பார்த்து வாழும் இந்தச் சின்னஞ் சிறிசுகளைக் கொண்டுபோய் ஒரு டேகெயாரிலை தள்ளி விட்டிட்டு, எப்பிடி என்னை நிம்மதியா வேலைக்குப் போகச் சொல்லுறியள்? எப்பிடி என்னை இங்லிஷ் வகுப்புக்குப் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்துறியள்?’
கண்ணீர் தாரையாக வழிய, அவள் விக்கி விக்கி அழுகிறாள். சளி மூக்கு முட்ட நிரம்பிக்கொள்கிறது. மூச்செடுக்க முடியாமல் தடுமாறுகிறாள்.
அவளது கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரி, அடை மாரிப் பனிக்கட்டிப் பாறையாக அப்படியே உறைந்து போகிறாள். தனது முதுகுக்குப் பின்னால் உள்ள ஷெல்ஃபில் கிடந்த க்ளீனெக்ஸ் பெட்டியை எடுத்து அவளுக்கு முன்னால் வைக்கிறாள். ஒரு ரிஷியூவைப் பெட்டியிலிருந்து இழுத்தெடுத்து, ஈரம் படர்ந்திருந்த தனது கண்களை இரகசியமாகத் துடைத்துக்கொள்கிறாள்.
‘இந்தப் பிள்ளைகள் தங்கள் தகப்பனை எப்போது கடைசியாகப் பார்த்திருப்பர்கள்?’
‘ஒண்டரை, ரெண்டு வருசமாச்சுது!’
அதிகாரியின் முகம் இறுகிச் சிவந்துபோகிறது. ஏதோ முடிவுக்கு வந்தவளாக, கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்ட அவளது விரல்கள் கணினி விசைப் பலகையில் வேகமாக இயங்குகின்றன. கண்களோ படபடப்புடன் திரையில் இடம் வலமாக ஓடத் துவங்குகின்றன. தன் முன்னால் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தவள் பற்றிய அறிக்கையைத் தயாரிப்பதில் அவளது புலன்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன.
சற்று நேரத்தின் பின்னர், சில ஆவணங்களையும் படிவங்களையும் அச்சு இயந்திரத்திலிருந்து எடுத்து மேசையில் பரப்பி வைக்கிறாள். ‘துணையைப் பிரிந்து வாழும் ஒற்றைப் பெற்றார்’ என்ற பிரிவின் கீழ், தொடர்ந்தும் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்குமான சமூகநல உதவிப்பணத்திற்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறாள். அதற்குரிய படிவங்கள் பலவற்றில் கைச்சாத்தினைப் பெற்றுக்கொள்கிறாள்.
அவ்வப்போது இலவச உலர் உணவுகளைப் பெறும் வகையில் உணவு வங்கியில் பயன்படுத்தக்கூடிய கூப்பன்களைக் கையளிக்கிறாள். குழந்தைகளின் உடைகளுக்கான மேலதிக உதவியாகச் சிறு தொகைப் பணத்துக்கான வவுச்சர் ஒன்றையும் எழுதிக் கொடுக்கிறாள்.
தாயும் பிள்ளைகளும் தற்போது வாடகை கொடுத்து வாழ்ந்துவரும் நிலக்கீழ் வசிப்பிடத்தின் வசதிகள், வசதியீனங்கள் பற்றி மிகுந்த அக்கறையோடு அந்த அதிகாரி விசாரிக்கிறாள். குழந்தைகளது பொழுதுபோக்குகள், ஒத்த வயதுடைய நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களுடனான உறவுகள், ஊடாட்டங்களை அக்கறையோடு கேட்டறிகிறாள். காலம் தாழ்த்தாமல் பிள்ளைகள் படிப்படியாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறாள். அதற்கு உதவியாக, அருகிலுள்ள நல்ல Day Care நிலையம் ஒன்றில், தானே இடம் எடுத்துத் தருவதாக வாக்குறுதி அளிக்கிறாள்.
‘கனடா மனிதநேயப் பண்புகளால் கட்டி எழுப்பப்பட்ட நாடு. எவரும் தம்மை அநாதைகள் என எண்ணி வருந்துவதற்கு அனுமதிக்காத நாடு. எந்த உதவியானாலும் நீ எங்களை அணுகத் தயங்க வேண்டியதில்லை…’
இவ்வாறு அந்த அதிகாரி கூறிக்கொண்டிருந்த சமயம், குழந்தைகள் இருவரும் படம் கீறி விளையாடி அலுத்துக் களைத்தவர்களாக ஓடிவந்து, தாயை அணைத்துக் கொள்கின்றனர். சின்னவள் தாயின் மடியில் தலை வைத்துச் சிணுங்குகிறாள்.
‘அழகான குழந்தைகள்…நீ அதிஷ்டசாலி!’ என்று அந்த அதிகாரி மனம் திறந்து தனது மகிழ்ச்சியைச் சொல்லிக்கொண்டிருக்கையில், தாயின் தோளில் சாய்ந்து நின்ற மூத்தவள் சொல்கிறாள் –
‘எனக்கு ப்போரடிக்குதம்மா…வெளியிலை போய், அப்பாவோடை காருக்குள்ளை இருக்கப்போறன்….’
மாடிப்படியிலிருந்து இரண்டு பெண் குழந்தைகள் தும் தும்மென்று துள்ளிகுதித்துக்கொண்டு கீழிறங்கி வந்த ஓசையில் நான் துயில் கலைகிறேன்.
ஏழு வயது மதிக்கத்தக்க பெரியவள் என்னை ஆச்சரியத்தோடு பார்த்துச் சொல்கிறாள் –
“I know this uncle”
“Ok…ok…go and do your home work, go up stairs”
தாயிடமிருந்து பிறந்த கடுமையான இராணுவத்தனம் மிக்க கட்டளை வீடெங்கும் எதிரொலிக்கிறது. ஆணைக்கு அடிபணியும் நாய்க் குட்டிகள் போல, குழந்தைகள் மீண்டும் மாடிப் படியேறிச் செல்கின்றனர்.
அவளோ எவ்வித சலனமும் இன்றி, தனது கணவனருகே நெருக்கமாகச் சாய்ந்திருந்தவாறு, அவனது காயமுற்ற ஆள்காட்டி விரலை வருடி விட்டுக்கொண்டிருக்கிறாள்.
எமக்கு முன்னாலிருந்த கொஃபி ரேபிளில் வைக்கப்பட்டிருந்த தட்டின் ஒருபாதியையும் தேநீர்க் குவளையையும் எனது நண்பர் ஏற்கனவே காலியாக்கிவிட்டுக் கதையில் மும்முரமாக மூழ்கி இருக்கிறார்.
மறுபாதியில் விடப்பட்ட கேக் துண்டுகள், தேடுவாரற்றுக் காத்துக் கிடக்கின்றன.
எனக்கான தேநீர்க் குவளையினுள் –
இலையான் ஒன்று வீழ்ந்து செத்துக்கிறது!
– 2016