(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த நகரத்தின் பிரதான வீதியில் கலக்கும் குறுக்குச் சந்து மூலையில், காய்கறிகளைப் பேரம் பேசியபடியே தராசில் அள்ளிப் போட்டவளை, சம்பந்தம் சற்றுத் தொலைவில் நின்றபடி நோட்டம் போட்டார். அவர் போட்ட கணக்கில் ‘தேறுகிறவள்’ போல் தெரிந்தாள்; ஆகையால் – சம்பந்தமும் அந்தக் கடைக்குப் போனார்.
“உருளைக் கிழங்கு கிலோ என்னப்பா…? அவங்களுக்குக் கொடுக்கிற மாதிரியே எனக்கும் கிழங்கு இருக்கணும். அவங்க கொடுக்கிற காசுதான் நானும் கொடுப்பேன்…”
காய்கறிக்காரர் மட்டும் அவளைப் பார்க்கவில்லை. அவளும் பார்த்தாள். சிறிது அழுத்தமாகவே பார்த்தாள். பிறகு லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். சம்பந்தத்திற்கு கிளுகிளுப்பாகியது. சிவப்பு, வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட டி-சட்டையை இழுத்து விட்டுக்கொண்டார். கைக்குட்டையை எடுத்து முகத்தை முழுமையாகத் துடைத்துக் கொண்டார். இதற்குள், கடைக்காரர் அரைக்கிலோ உருளைக்கிழங்கை காகிதப் பையில் போட்டு அவரிடம் நீட்டினார். ஹோட்டலில் சாப்பிடும் அவர், அதை வாங்கிக்கொண்டு, ஸ்டைலாக சைட் பாக்கெட்டிற்குள் கையை விட்டுப் பத்து ரூபாயை நீட்டினார். காய்கறிக் கடைக்காரர். அங்கே இருப்பவர்களிடம் சில்லறை கேட்டார். எல்லோரும் கை விரித்ததும், பக்கத்தில் இருந்த வாடகைச் சைக்கிள் பையனிடம் பத்து ரூபாயை நீட்டி, சில்லறை கேட்டார். அவன் மெயின் பஜாருக்குள், டவுசரைக் கைகளால் தட்டியபடி, நிதானமாகப் புறப்பட்டான். வலக்கையில் தூக்குப் பையைப் பிடித்தபடி, சம்பந்தத்தைச் சம்மதமாய்ப் பார்த்தபடியே நடந்தாள். பிரதான வழியில் நின்றாள். எவருக்கோ காத்து நிற்பதுபோன்ற தோரணை.
சம்பந்தத்துக்கு எரிச்சலுக்கு மேல் எரிச்சல், சைக்கிள் பயலைக் காணவில்லை. கடைக்காரரிடம் கோபமாகப் பேசப் போனார். அது. அவர் இயல்புக்கு இயலாதது. கோபத்தைக் குளுமையாக்கியபடியே, “நாளைக்குச் சில்லறை வாங்கிக்கிறேன்” என்றார். கடைக்காரர் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தனவா இல்லையா என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமலே அவர் நடந்தார். நடை மாதிரியான ஓட்டம். ஒட்டம் மாதிரியான நடை.
சம்பந்தம், பிரதான வீதிக்கு வந்து, சுற்றுமுற்றும் பார்த்தார். கூட்ட நெரிசலில் அவளைக் காணாததால், கார்ப்பரேஷன்காரர்கள் காய்கறிகளையும் வாரிக் கொண்டு போகவேண்டும் என்று விருப்பப்பட்டார். பிறகு சீச்சி. இப்படியெல்லாம் நினைக்கப் படாது என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார். காரணம் அதே வீதியில் அந்தப் பெண் இப்போது தென்பட்டாள். எவளிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.
சம்பந்தம் பொறுமையாக நின்றபோது –
அவள் நடந்தாள். கையில் பிடித்த தூக்குப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு, சராசரி நடையாய் நடந்தாள். காலில் கொலுசுச் சத்தம், அவரையும் சுண்டி இழுத்து நடக்க வைத்தது. அவளுக்குச் சுமார் நூறடி தள்ளி மனித நடமாட்டத்திற்காகக் கட்டப்பட்ட பிளாட்டார விளிம்பில் அவரும் அவள் நடைக்கு ஏற்ப நடந்தார். அவளுக்கு பின்னால், தான் செல்லவில்லை என்று எல்லாரும் அனுமானிக்க வேண்டும் என்பதுபோல், ஆங்காங்கே நின்றுயாரையோ தேடுவதுபோல் நின்றார். கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டார். பிறகு தேடியவர் கிடைக்கவில்லை என்பதுபோல் பாசாங்காய் நடந்தார். அதேசமயம் எதிரே தென்பட்ட ஒரே ஒரு நண்பரைப் பார்க்காததுபோல் முகத்தைத் திரும்பியபடியே நடந்து –
அவளை நெருங்கி விட்டார். பத்தடி வித்தியாசத்தில் நடந்தபோது, லேசாக இருமினார். அவள் திரும்பிப் பார்த்தாள். லேசாய் நின்று பார்த்தது மாதிரிகூட அவருக்குத் தோன்றியது. அவருக்குள் திருப்தி…. ‘தேறாதவளாக’ இருந்தால், இந்நேரம், மடமடவென்று நடந்திருப்பாள். இல்லையானால் சாலையைக் குறுக்காய் கடந்து எதிர்ப்புக்கம் சென்று, நடந்திருப்பாள். கொஞ்சம் திமிர் பிடித்தவளாய் இருந்தால், காறித் துப்பியிருப்பாள். ஆனால் இவளோ காறவும் இல்லை. துப்பவும் இல்லை. நடையை மாற்றவும் இல்லை.
சம்பந்தம், அவளோடு சமபந்தப்பட்டவர்போல், இப்போது அவளுக்கு இணையாக நடந்தார். “நான் நடக்கிறேனாக்கும்” என்பதுபோல், கால் செருப்பைத் தரையில் தேய்த்தார். அவள், அவரைத் தோளுக்கு நேராய்ப் பார்த்தாள். பிறகு, சர்வசாதாரணமாய் நடந்தாள். சம்பந்தத்திற்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. நாட்டுக் கட்டைதான். ஆனால் கீரைத்தண்டு மாதிரி நிறமும், உடல்வாகும் உள்ளவள். அவர் காதளவு உயரம். அவருக்குப் பிடித்தமான சுருட்டை முடி சரியாமல், செழுத்த மார்பகம். ஏதோ ஒருவிதமான கிறக்கப் பார்வை.
சம்பந்தம், அவளிடம் பேச்சுக் கொடுக்கப் போனார். அவர் வாயெடுக்கும்போதுதான், எதிரே சைக்கிளோ. மக்கள் கூட்டமோ வரும். ஆனாலும் அவர் தளரவில்லை. மோதுவது மாதிரி ஒரு சைக்கிள் அவர்களைக் கடந்தபோது “சீ. ரோட்டைக் குத்தகைக்கு எடுத்தவன் மாதிரி போறான் பாரு” என்று பொதுப்படையாகப் பேசினார். அவள், அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தொலைவில்போன சைக்கிள் காரனையும் பார்த்துவிட்டு நிதானமாக நடந்தாள். பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவருக்கு மகிழ்ச்சி. ஆள் இல்லாத இடமா என்று திரும்பிப் பார்க்கிறாள். சபாஷ்…!
சம்பந்தம், அவளை இடிப்பதுபோல் நடந்தபடியே, “எதுவரைக்கும் போறாப்போல?” என்றார். அவள் பதில் சொல்லாமலே நடந்தாள். அதை மெளனச் சம்மதமாக எடுத்துக்கொண்டு, “ஒன்னைத்தாம்மா… பதில் சொல்லப்படாதா?” என்றார்.
அவள், நடைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நின்றாள். அவரை ஏற இறங்கப் பார்த்தாள். சம்பந்தம், சந்தோஷம் தாங்க, முடியாமல் மேலும் ஏதோ பேசப்போனபோது, அவள் வெடித்தாள். அவரைப் பொறுத்த அளவில், அது அணுகுண்டு, ரசாயன ஆயுதம், கண்ணி வெடி.
“ஏண்டா கிழட்டுப் பயலே… இந்த வயசிலே… ஒனக்கு என்னடா கேடு…? நானும் நீ என்னதான் செய்வேன்னு பார்த்துடலாமுன்னுதான் நடக்கேன்… ஏதோ எங்க நாய்னா போல இருக்கியேன்னு பார்த்தால்…. ஜோடி போட்டா நடக்கே…? பொறுக்கிப் பயலே…. ஒண் வயசுக்கு இது தகுமாடா? ஒன்ன விடப் போறதாய் இல்ல. தோ.. எங்கண்ணா சைக்கிள்ல வந்துட்டே இருக்கான், நீ ஆம்புளைன்னா இங்கேயே இருடா… டேய்… ஏண்டா ஓடுறே…? நீ எங்கேதான் போயிடப் போறே. ஒன்னை விடப் போற்தில்லடா…”
சம்பந்தம், அக்கம்பக்கத்தைப் பார்த்தபடியே லேசாய் நடந்தார். வேறு யாரையோ அவள் திட்டுவதுபோல், காதில் வாங்காதவர்போல் மெள்ள நடந்தார். அதே நடை… ஆகாய விமானம் புறப்படுவதற்கு முன்பு ஒடுவது போன்ற நடை… அந்த நடையும் ஓட்டமாயிற்று. ஆனால் சாலையோ அங்குமிங்கும் பிரியாமல் நேராய்ப் போயிற்று. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் ஓடிப் போக எந்தத் தெருவும் இல்லை. சாலையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய கட்டிடங்கள். மூன்று கிலோ மீட்டர் வித்தியாசத்தில் ஓடினால்கூட, அவரை, சைக்கிள் மடக்கி விடலாம். அவள், இப்போது கண்ட கண்ட வார்த்தைகளை ஏவுகணைகளாக்கி ஏவிக் கொண்டிருந்தாள். ‘ஒனக்கு ஒன் பொண்டாட்டிக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியுமாடா?’ என்பதுதான் அவளின் குறைந்த சக்தி ஏவுகணை.
சம்பந்தம் தலைவிரி கோலமாக ஓடினார். குதிகால் தரையில் படுகிறதா, அதற்குமேல் தாவுகிறதா என்று கண்டுபிடிக்க முடியாதபடி புயல் வேகமாய் ஓடினார். திரும்பிப் பார்த்தபடியே ஓடினார். ஒரு சைக்கிள்… சிங்கிள்… சிறிது நிம்மதி. இன்னொரு சைக்கிள், டபுள்ஸ். கலக்கத்தோடு பார்த்தால். பின்னால் ஒரு பையன். லேசாய்த் தெளிவு. அய்ய்யோ… அது என்ன, சைக்கிள் பின்னால் ஒரு பெண். யாரது… அவளேதான்… கையை நீட்டி நீட்டிக் காட்டுகிறாள்… அவன் அசல் ரெளடி மாதிரியே இருக்கான். அய்யோ… அய்யய்யோ… சீட்டில் இருந்து எழுந்து… சைக்கிள்பாருக்கு மேல வந்து… பிடலை என்னமாய் மிதிக்கிறான். நானும், பிடல் மாதிரி ஆயிடுவேனா. தனியாய் அடித்தால்கூட… கையெடுத்துக் கும்பிட்டுத் தப்பிக்கலாம்… நட்ட நடு வீதியில், பல பேர் முன்னால் அடிபட்டு, பத்திரிகைகளிலே பெரிய பெயராய் வாங்கி… சீசி… இவளெல்லாம் குடும்பப் பெண்ணா… இஷ்டமில்லேன்னா எதிர்பக்கமாய்ப் போக வேண்டியதுதானே… அய்யோ… சைக்கிள்… அவள் இருக்கிற சைக்கிள்…
சம்பந்தத்திற்கு, அந்த மூடுபனி உச்சி வெயிலாகியது. அந்த ஓட்டம் உயிரோட்டமாகி விட்டது. அந்தச் சாலையில் என்னதான் ஓடினாலும் தப்பிக்க முடியாது. என்ன செய்யுறது… ஒரு சின்னச் சந்துகூட இல்லாமல் போயிட்டதே. சந்து சந்தாய்க் கிழிச்சுடுவானே…
ஓடிய சம்பந்தத்தின் கால் இடறியது. அந்த வேகத்தில் கீழே விழுந்தவர் கையை ஊன்றி எழுந்து நிமிர்ந்தார். என்னது… கிளினிக்…
சம்பந்தம் அந்த சாலையோரக் கிளினிக்கின் படிகளில் ஏறி உள்ளே போனார். பரபரப்பாய்-படபடப்பாய் அதற்குள் ஓடினார். எவரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்படவில்லை. கம்பவுண்டரிடம் குட்டுப்படும் ஒரு சின்னப் பையன்தான் அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தான். சைக்கிளில் போகிறவர்களுக்குத் தெரியக்கூடிய நாற்காலி. சம்பந்தம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டே ஓடினார்… ஓடினார்… அந்த அறையின் ஓரத்திற்கே ஓடினார்…
அரைமணி நேரம் ஆடியடங்கி விட்டது. சம்பந்தம், ஓரளவு நிதானத்திற்கு வந்தார். எப்படியாவது சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்காக எழுந்தார்… எழுந்த வேகத்திலேயே அமர்ந்தார்… ஒருவேளை அந்தச் சைக்கிள்காரன் வெளியே காத்து நின்றால்… உள்ளே வந்தால் தன்னை அடிப்பது தடைபடலாம் என்று நினைத்து வெளியே காத்திருந்தால்…
சம்பந்தம் கூனிக்குறுகி உட்கார்ந்தார்… நடந்ததற்கு வருத்தப்படுவதுபோல் தலை குனிந்தார். அது “ஜானகி நகுவாள்” என்று ராவணன் வருத்தப்பட்டானாமே. அதுபோல் அந்தஸ்தைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ கவலைப்படாத வருத்தம். அவள் கேட்ட கேள்வியைச் சுற்றி வந்த வருத்தம். அவரது பால்பயணத்தில் இப்படிப்பட்ட பல கசப்பான அநுபவங்களும் கிடைத்ததால், அவரது பலவீனமும் தொடர்ந்தது. ஆனால் இன்று ஏற்பட்டதோ கொடிய அநுபவம்…. கொடூரமாகப் போகவிருந்த அனுபவம். இப்படி இதுவரை நாய் மாதிரி நடுரோட்டில் ஓடியதில்லை. அப்படி ஓடியதுகூடப் பாதகம் இல்லை. ஆனால் என்னமாய்க் கேட்டு விட்டாள். ‘கிழட்டுப் பயலாமே… இந்த ஐம்பத்தைந்து வயது ஒரு கிழடா… இல்லை. ஒருவேளை நான் கிழவன்தானோ… இதனால்தான் நான் எந்தப் பெண்ணோடவாவது சரசமாக நடக்கும்போது, சிலர் சிரிப்பார்களே… அந்தச் சிரிப்புக்களுக்கு எனக்கு வயதாகி விட்டது என்று அர்த்தமோ?
சம்பந்தத்தின் தலை, தரையைத் தொடப்போதுவது போல் தொங்கியது. நாற்காலியில் இருந்து கீழே விழப் போகிறவர்போல் இருந்தவரைக் கிளினிக் பையன் உசுப்பினான். அவர் கையிலேயே ஒரு டோக்கனைத் திணித்தபடியே கூறினான்.
‘உள்ளே டாக்டர்கிட்டே போங்க ஸார்…
‘இல்லப்பா, எனக்குச் சரியாயிட்டு… வெளியே போறேன்…
‘இப்படித்தான், மொதல்ல வரும்; முளையிலேயே கிள்ளிவிட்டால் நல்லது… எங்க டாக்டர் கைராசி டாக்டர். போங்க ஸார்.”
சம்பந்தம், காலத்தை வீணாக்குகிறார் என்பதுபோல், அவருக்குப் பிறகு உள்ளவர்கள் எரிச்சல்பட்டுப் பார்த்தார்கள். அவரும் யோசித்தார். இவ்வளவு நேரமும் இங்கே உட்கார்ந்ததுக்கு, வாடகைப் பணம் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டுப் போகலாம்… அதோடு பத்து நாளாய் லேசாய் வயிற்று வலி வந்து போகுது…
டாக்டரின் அறைக்குள் நுழைந்த சம்பந்தத்திற்கு, அந்த அறை வித்தியாசமாகப்பட்டது. வழக்கம்போல் தலையைத் தொங்கவிட்டபடிதான் டாக்டர்கள் எதையோ கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த டாக்டர் நிமிர்ந்து இருக்கிறார். சற்றுத் தள்ளிச் சின்ன மடிப்புக்கூட இல்லாத ஒரு பட்டு மெத்தைக் கட்டில். அதன் விளிம்பு படும் சுவரில் ஐந்தடிக்குமேல் பல்வேறு வட்டக் கோடுகள்… ஒரு வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம். மையத்தில் ஒளிப்பந்தம் போன்ற செஞ்சுடர்… டாக்டர் நாற்காலிக்கு எதிரே ஏழெட்டு பேர் உட்காரும்படியான சோபா செட் என்ன இதெல்லாம்…?
சம்பந்தம் திகைத்தபோது, டாக்டர் நிதானமாகப் பேசினார்.
“அந்தச் சேபாவுல உட்காருங்க. இதோ வர்றேன்…”
“எனக்கு வயிற்று வலி டாக்டர்.”
“எந்த வலியோ… பார்த்துடலாம்… மொதல்ல உட்காருங்க…”
சம்பந்தம், தயங்கியபடியே டாக்டரைப் பார்த்தார். அந்த முகத்தில் தோன்றிய அன்புப் பிரவாகத்திற்குக் கட்டுப்பட்டோ என்னவோ, மெள்ள நடந்து, சிறிது நின்று, டாக்டர் மீது வைத்த கண்களை விலக்காமலேயே சோபா ஸெட்டில் உட்கார்ந்தார். சிறிது நேரத்தில் டாக்டரும் வந்தார். சம்பந்தம் உட்கார்ந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் உட்கார்ந்தார். கரத்தை நீட்டி, சம்பந்தத்தின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே தம்மை அறிமுகம் செய்து கொண்டார்.
“நான் சைக்காட்ரிஸ்ட் டாக்டர் ரகுராமன்… நீங்க…”
“எனக்கு எதுவும் இல்லை. டாக்டர் ஏதோ தெரியாத்தனமாய்…”
“பல காரியங்களைத் தெரியாத்தனமாய்த்தான் செய்கிறோம். காரணம். ஏராளம்… ஏன்… செய்கிறோமுன்னு நம்மை நாமே கேட்டால், தெரியாத காரியங்களுக்கான காரணங்கள் தெரிந்து விடும். போகட்டும்… ஏன் ஒரே டென்ஷனாய் இருக்கீங்க… எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு. சும்மாச் சொல்லுங்க… மனசுக்குள்ளே என்ன செய்யுது?”
சம்பந்தம், டாக்டரையே வெறித்துப் பார்த்தார். வேதனையோடு பார்த்தார். அவரைப் பார்ப்பதுபோல் தன்னைத்தானே, தனக்குத்தானே… பார்த்துக் கொண்டார். திரைப்படச் சுருள்போல், மூளையில் உணர்வுகளாகச் சேகரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் மனத்திரையில் பிம்பங்களாயின. வேக வேகமாகவும், மெல்ல மெல்லவும், முன்னாலும் பின்னாலுமாகவும் வந்தன. ஓடின, நிழலாடின. ஏழு வயதில் அம்மாவைப் பறி கொடுத்தது. எட்டு வயதில் சின்னம்மா வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த மூன்று மாத காலத்திற்குள்ளேயே தலையில் குட்டத் துவங்கியது. தந்தையையும் குட்ட வைத்தது. வயிற்றைக் காயப் போட்டது. ஊராரிடம் தான் ஒரு ஊதாரிப் பிள்ளை என்று விளம்பரம் செய்தது. பள்ளிக்குச் சென்ற தன் படிப்பை நிறுத்தும்படி வாதிட்டது. அதையும் மீறி, படித்தது. அப்புறம் வேலையில் சேர்ந்தது. அப்பா ஒரு பெரிய இடத்துக்குத் தன்னைக் கொடுத்துவிட்டுப் பத்தாயிரம் ரூபாய் பணத்திை வாங்கிக் கொண்டது, எல்லா அரசு ஊழியர்களையும்போல் தன் கணவனும் சம்பளமும், கிம்பளமுமாய்த் தன்னை வாழ வைப்பார் என்று நம்பிய பெரிய இடத்து மனைவி, நாளடைவில் தன்னை நாலுபேர் முன்னால் அடிக்கடி நாறடித்தது. அலுவலகப் பணி மாற்றத்திற்கு உள்ளாகி, மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் சென்னையில் வைத்துவிட்டு, தான் மட்டும் டில்லி, கல்கத்தா, பம்பாய் என்று சுற்றிவிட்டு, இப்போது இந்தத் திருச்சியில் பணியாற்றுவது, அம்மாவின் போதனையாலோ என்னவோ பெற்ற மகளும், மகனும் பாராமுகமாய் இருப்பது-ஆகிய கடந்தகால வெறுப்பு நிகழ்ச்சிகளும், அதற்காக அவர் மேற்கொண்ட விருப்பு நிகழ்ச்சிகளும் அவர் மனதிலே காட்சிகளாகவும், கண்ணிலே நீராகவும் உருவெடுத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தச் பாலியல் சிந்தனை – அதனை மட்டுமே பற்றி நிற்கும் மனம், அதில் மட்டுமே ஈடுபடும் குணம்… இழி குணம்…
சம்பந்தம், திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுதார். முகத்தைக் கரங்களால் மூடியபடியே காலாட, கையாட குழந்தைபோலக் கத்தினார். வாலிபன்போல் தேம்பினார். தோளில் ஆதரவாய் விழுந்த டாக்டரின் கைகளை எடுத்துத் தன் முகத்தில் வைத்தபடியே விம்மினார். டாக்டரும், அவரை அழும்வரை அழவிட்டார். பிறகு, அவர் முகத்தை நிமிர்த்தி, தலையைக் கோதிவிட்டபடியே அறிவுறுத்தினார்.
“டாக்டர்கிட்டே உடம்பை நிர்வாணப்படுத்திக் காட்டுறது எப்படித் தப்பில்லையோ, அப்படி மனோதத்துவ டாக்டரிடம் உள்ளத்தை நிர்வாணப்படுத்திக் காட்டுறதுல தப்பில்ல ஸார். ஒங்க மனசுல உலகமே ஒங்களுக்கு எதிராய் இருக்குது மாதிரி எண்ணம் வருதா? முதலமைச்சராயும் பேட்டை ரெளடியாகவும் உங்களை நீங்களே கற்பனை செய்து பார்க்கிறீர்களா..? அல்லது எப்போ பார்த்தாலும் பெண் சிந்தனையே பெரிதாய் வருதா. சொல்லுங்க ஸார்…”
சம்பந்தம், வீறிட்டார்.
“கடைசில சொன்னதுதான் டாக்டர்…. கரெக்ட்… கடைசில சொன்னதுதான்… விவரம் தெரிந்த நாளில் இருந்தே, என் மனசில் ஒரே ஒரு எண்ணந்தான். ஏப்போதும் ஏதோ ஒரு பெண்ணோடு இருக்க வேண்டும்… முத்தமிட்டபடியே முழு நாளையும் கழிக்க வேண்டும். கனவுகள்கூடக் காதல் – காதல் கதைகளாய், கூடல் கதைகளாய்த்தான் வரும். காலையில் எழுந்தவுடனே முதல் சிந்தனையே ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றித்தான் இருக்கும். எந்த அலுவலகத்திற்குப் போனாலும், முதலில் ஆபீஸரைப் பார்க்க வேண்டிய நான் அங்கே இருக்கிற பெண்களைத்தான் பார்ப்பேன் டாக்டர்! அப்படிப் போன ஒரு நிமிஷத்திற்குள்ளே, எந்தப் பெண்ணாவது, இன்னொரு ஆடவனிடம் பேசி விட்டால், நான் இருக்கும்போது அவள் எப்படிப் பேசலாம் என்பது மாதிரியான பேயெண்ணம் வரும்.
“பன்னிரண்டு வயசுல இருந்து இந்த ஐம்பத்தைந்து வயசு வரைக்கும். மூச்சு எப்படி நிரந்தரமாய் இருக்குதோ அப்படிப் பெண் பித்தே எனக்கு மனம் முழுதும் வியாபித்து விட்டது டாக்டர்… காலையில டி சாப்பிடப் போகும்போது… ஒரு பெண்ணைப் பார்த்தால், அவள் பின்னால் டி சாப்பிடாமலே போவேன். ஆபீஸுக்கு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கிறதுக்காக, அவசரமாய்ப் போகும்போதுகூட வழியில் ஒருத்தி, ஓரிடத்தில் தெரிந்தால், அவளை நினைச்சு ஆபீஸை விட்டுடுறேன் டாக்டர். வெளியூருக்கு ஆபீஸ்ல இருந்து அனுப்பும்போதுகூட, அங்கே பெண்கள் கிடைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்போடு தான் போவேன் டாக்டர். பஸ் நிலையத்திலேயே ஒருத்தி கிடைத்துவிட்டால் பயணத்தை விட்டுடுவேன் ஸார். இப்போகூட ஒருத்தியை ‘ஃபாலோ’ செய்தேன். அவள் ரெளடி துரத்தினாள். அவளுக்குப் பயந்து ஓடி ஒளியத்தான் இங்கே வந்தேன் டாக்டர். பெண் பித்தனாய்ப் போயிட்டேன் டாக்டர்… நண்பர்கள் மனைவிகளைக்கூட தப்பாய் நினைத்து நினைத்து பெண் லோலனாய் ஆயிட்டேன் டாக்டர். ஒரேயடியாய் உதவாக்கரையாய்…. மனித மிருகமாய்ப் போயிட்டேன் டாக்டர் என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க டாக்டர்.”
சம்பந்தத்தின் உடலெல்லாம் குலுங்கியது. தலை முடி குத்திட்டு நிற்பதுபோல் தோன்றியது. அவர் அந்த அறைக்குள் அங்குமிங்குமாய் அலங்கோலமாய்ச் சுற்றினார். டாக்டர் அவரைச் சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்பு சோபாவில் உட்கார வைத்தார்.
“உங்க பெயர்?”
“மானங்கெட்டவனுக்குப் பெயர் எதற்கு டாக்டர்? பெண் பித்தன்னு வேணுமுன்னால் கூப்பிடுங்கள்.”
“நீங்க வேற… நீங்க வெளிப்படையாய்ச் சொல்லிட்டிங்க மத்தவங்க சொல்ல மாட்டாங்க அவவ்ளவுதான் வித்தியாசம் பெயர் என்ன ஸார்?”
“சம்பந்தம், அப்பா பெயர் தங்கையா. அதனால த. சம்பந்தம். அதுவே தறுதலை சம்பந்தமாய் ஆயிட்டேன்.”
டாக்டர். அவர் தோளில் ஆதரவாகக் கை போட்டபடியே பேசினார்.
“இதோ பாருங்க சம்பந்தம் ஸார். சிகரெட் பழக்கம், குடிப் பழக்கம், சூதாட்டப் பழக்கம். மாதிரி, பெண் பித்து என்பதும் ஒரு அடிக்ஷன் – அதாவது ஒரு கண்மூடித்தனமானப் பிடிப்பு… உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டால், தொடையில் எப்படி நெரி கட்டுதோ – அப்படி மனசுலே வரும் காயங்கள்… சில சமயம் பாலியல் உணர்வு ரூபங்களாக வரும். இது சமூகத்துக்கு ஒருத்தரைக் காமுகனாய்க் காட்டினாலும், எங்களை மாதிரி மனோதத்துவ நிபுணர்களுக்குத்தான், இது வயிற்று வலி, தலைவலி மாதிரி, நீங்களே கேட்டு வாங்காமல், உங்களிடம் வந்த மனோவியாதின்னு தெரியும். வாழ்க்கையில் – குறிப்பாய் இளமையில் அதிகச் சுமைகளைச் சுமந்தால். தண்ணீர் இறைக்கிறவன், கல் சுமக்கிறவன் ‘ஏலேலோ’ பாடுவது மாதிரி… கஷ்டம் சுமக்கிறவன் பெண் சுகத்தைக் கற்பனை செய்து பார்ப்பான். கோபம் வரும்போது எப்படி ஒருத்தன் சிகரெட் பிடிக்கிறானோ, அப்படித்தான் இந்தப் பெண் பித்தும். இதனாலே, இதில் சுய இரக்கம் தேவையில்லை. ஒங்களுக்கு வந்திருப்பது நாளைக்கு எனக்குக்கூட வரலாம். உடல் எப்படி பெளதிக – ரசாயன விதிகளின்படி இயங்குதோ, அப்படி மனமும் சில விதிகளின்படி இயங்கும். மனம் தன் வசத்தில் நிற்காது. ஓர் உணர்வை இன்னொரு உணர்வால்தான் மாற்ற முடியும். ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, அவளை உங்கள் மகளாக நினைத்துப் பாருங்கள். ‘என் அம்மா இந்த வயதில் இப்படித்தான் இருந்திருப்பள்’ என்று கற்பித்துப் பாருங்கள். ஒரு பெண்ணை காமுக சிறையில் இருந்து விடுவித்து, அவளைத் தாயாக்கிப் பாருங்கள். அவளை, அரூபமான ஆதிபராசக்தியின் உருவமாக ஆக்கிப் பாருங்கள். மகளாக்கிப் பாருங்கள். கண்ணில் படும் பெண்களையெல்லாம், உங்கள் பெண்களாகப் பாவித்துப் பாருங்கள். அந்த இனிமையான எண்ணத்தில் அந்தத் தூய தரிசனத்தில் நீங்கள் தந்தையாக இருந்துகொண்டே பிள்ளையாகலாம், பிள்ளையாக இருந்துகொண்டே தந்தையாகலாம்.
சம்பந்தம் கண்களை மூடி மனசைத் திறந்தார். சில்லிட்ட சிந்தனையைக் கற்பனையால் உலுக்கினார். அவருக்கு ஆயிரமாயிரம் மகள்கள்… கறுப்பிகள், சிவப்பிகள், இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள்… அத்தனை பேரும் பெறாமல் பெற்ற மகள்கள். அவரைத் துரத்திய அவளும் ஒரு மகள் தான்.
– கலைமகள் – 1/10/88
– சிக்கிமுக்கிக் கற்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.