பாலுவின் கோடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 7,681 
 
 

பம்மலில் நாங்கள் புது வீடு கட்டிக் கொண்டிருந்தக் காலம். என் தாத்தா ‘நிறைய வீடு கட்டியிருக்கிறேன் பேர்வழி’ என்று தனக்குத் தானே தலைமை மேஸ்திரி சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டு தினம் வெயில் வீணாகாமல் மேற்பார்வைக்குப் போய்விடுவார். நெருங்கிய நண்பன் ஸ்ரீதரின் அம்மா சிமெந்ட் வியாபாரம் செய்து வந்தவர். கடனுக்கு சிமெந்ட் கொடுத்து உதவியதோடு தானும் மேற்பார்வை பார்ப்பார். நானும் ஸ்ரீதரும் சைக்கிளில் சுற்றுவோம். சைக்கிள் சுற்று போரடித்தால் வீட்டுப் பக்கம் போவோம். சித்தாள்களை சைட் அடிக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருந்த வயது. வீட்டு வாசலில் சிந்தாளம்மன் கோவில். கோவிலின் தென்கிழக்கு மூலையில் ஒற்றைப் பனைமரம். பனைமரத்தில் சைக்கிளை சாய்த்து நிறுத்திவிட்டு, கோவில் சுவரில் உட்கார்ந்து சைட் அடிப்போம்.

அப்படி சைட் அடிக்கும் சாக்கில் பல புது நட்புக்களைப் பெற்றேன். எல்லோரும் என்னைப் போல் ரகசியமாக சைட் அடிக்க வந்தவர்கள். ரவி, தேசி, சுரேஷ், ஜேம்ஸ், சாம்பா என்று எங்கள் கூட்டம் சேர்ந்தது. சில நாள் கோவில் வெளியறையில் உட்கார்ந்து கேரம் ஆடுவோம், சீட்டாடுவோம், அதுவும் இல்லையென்றால் ‘புக் க்ரிகெட்’ என்று புத்தகத்தைப் புரட்டி ரன் எடுக்கும் கேனத்தனமான ஆட்டம் ஒன்றை டீம் கட்டி ஆடுவோம்.

அப்படி ஒரு நாள் சேர்ந்தக் கூட்டத்தில் பாலுவைச் சந்தித்தேன். ரவியின் மாமா பையன் என்று அறிமுகம் செய்து கொண்டான். “பாஞ்சு நாள் லீவுக்கு வந்திருக்கான்” என்றான் ரவி. எங்களை விட சற்றே மூத்தவன் என்றாலும் பத்தே நிமிடங்களில் எங்களுடன் நெருங்கிப் பழகியவன் போல் ஆகிவிட்டான் பாலு.

தினம் வந்தான். “கூமுட்டைங்களா! சும்மா கொலுசுங்களையே பாத்துட்டிருந்தா எப்படி?” என்றபடி, சித்தாள் செங்கல் சுமக்கும் பொழுது நாங்கள் கவனிக்க வேண்டிய உடற்பகுதிகளையும் அசைவுகளையும் துல்லியமாகக் கற்றுக் கொடுத்தான். கொலுசு என்பதற்கான மெய்ப்பொருளும் எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. பாலு பேரில் இருந்த மதிப்பு ஏகத்துக்கு உயர்ந்து போனது.

சரோஜாதேவி புத்தகம் நாலைந்து எடுத்து வந்து கைக்கிரண்டாக வைத்துக்கொண்டு வானில் உயர்த்துவான் பாலு. அதைப் பணிந்துப் பெறும் பாவனையுடன், “குருவே!” என்று பரவசமடைந்து விளிப்பான் சாம்பா. விளித்ததும் நாங்கள், “பாலுவே! ப்ராண வல்லபே! ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேகி!” என்று வணங்குவோம். கருணையே வடிவான பாலு, படம் வரைந்து பாகங்களைக் குறிக்காதக் குறையாக விவரங்களைப் படிப்பான். தன்யமாவோம்.

மதியத்தில் கோவில் பூசாரி தணிகாசலம் வாசனைக்குச் சாராயம் கலந்த நீர் மோர் அருந்திவிட்டு ஓரமாகப் புரண்டுப் படுப்பார். பாலு அவருடைய வேட்டியை உருவிவிட்டு அமைதியாக எங்களுடன் வந்து உட்கார்ந்து விடுவான். மதிய நேரங்களில் கோவிலுக்கு வரும் ‘பெண்டுகள்’ கிசுகிசுத்தபடி தலையை எங்கள் பக்கமாகத் திருப்பி நடப்பதைப் பார்த்து ரசிப்பான்.

ரவி சங்கடப்பட்டாலும், ரவியின் அக்காவைப் பற்றி எங்களுடன் பேசுவான். “அத்தைப் பெண் இருக்குறதே தொட்டுப் பாக்கத்தாண்டா!” என்பான். ஒரு முறை, “டேய் துரை.. உங்க தாத்தா ஏண்டா ஜட்டி கூடப் போடாம வேட்டியைக் கட்டிகிட்டு உயரத்துல ஏறி நிக்கறாரு? கோவணமாவது கட்டச் சொல்லுரா. கண்றாவி.. சித்தாளுங்கல்லாம் பயப்படுறாங்கடா” என்று சபையில் கேட்டு என்னைத் திடுக்கிட வைத்தான்.

அத்தனை சித்தாள்களின் பெயரையும் வயதையும் தெரிந்து வைத்துக் கொண்டுக் கிண்டலடிப்பான். வீட்டுப் பின்புறத்தில் இருந்த சண்முகா கொட்டகையில் ஒரு மதியம் எங்கள் அனைவரையும் இரண்டு சித்தாளுடன் சினிமா பார்க்க வைத்தது எங்களுக்கு அன்று எட்டாவது அதிசயமாக இருந்தது. ஜெய்சங்கர் படம். சத்தியமாக பாலு சினிமா பார்க்கவில்லை என்று எந்த நீதிமன்றத்திலும் சொல்வேன்.

பீடி வலிக்கக் கற்றுக் கொடுத்தவன். முழங்கை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த சொல்லுக்கு வேறு பொருள் அறியக் காரணமான ஆசான். கேரம் ஆடும்பொழுது சிவப்புக் காயினை திருடிக்கொண்டு விடுவான். ட்ரம்ப் விளையாடும் பொழுது எப்படியோ அவனிடம் மட்டும் ஐந்து துருப்பு எப்போதும் இருக்கும். புக் க்ரிகெட்டில் கூட ஏமாற்றுவான்.

பாலு ஊரில் இருந்த பதினைந்து நாட்களும் சிந்தாளம்மன் கோவிலில் சந்தித்துக் கொட்டமடித்தோம் என்பேன்.

பதிமூன்று நாட்கள் என்று திருத்தி விடுகிறேன். ஏனென்றால் பதிமூன்றாம் நாள் நள்ளிரவில் வாயிலிருந்து ரத்தம் கக்கத் தொடங்கினான் பாலு. வலது கண் மட்டும் தையல் தெறித்தது போல் பிதுங்கிப் பிளந்தது என்றார்கள். தாம்பரம் சேனடோரியம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போனார்கள். பதினாலாம் நாள் காலை டெம்ப்ரசர் எடுக்க வந்த டாக்டரின் இடது கைக் கட்டை விரலை ஒரே கடியில் கடித்து மென்றுச் சப்புக் கொட்டிச் சாப்பிட்டு விழுங்கினான் என்பதற்காக நர்சுகள் அலறி அடித்துப் போட்ட அமைதி ஊசியில், பாலு கோமா வந்தது போலானான். அன்றிரவு இரண்டு மணிக்கு ஆஸ்பத்திரி அமைதியாக இருந்த வேளையில், திடீரென்று விழித்து, ஆஸ்பத்திரியே நடுங்கும்படிப் பத்து நிமிடம் போல் சிரித்துச் செத்தான்.

தொடர்வது பாலுவுடன் பதிமூன்று நாள் கதை..

2

குரோம்பேட்டையில் இருந்தபோது, ஏமாந்தால் பம்மல் கோகுலம் காலனியில் இருந்த என் மாமா வீட்டிற்கு வந்துவிடுவேன். எங்கள் புதுவீடு தயாராகிக் கொண்டிருந்தது ஒரு வசதியானக் காரணமானதால் அந்தக் கோடையில் தினம் பம்மலில் தங்கியிருந்தேன். எதிர் வீட்டில் ஒரு பிரபல பல்பொடிக் கம்பெனி. வெள்ளை நிறப் பல்பொடியைப் பேக்கெட்டில் அடைத்து விற்பனை வண்டியில் ஏற்றுவார்கள். சில சமயம் வேறு உபயோகத்துக்கான வெள்ளைப் பொடியும் பொட்டலம் கட்டுவார்கள். என் பதின்ம வயதின் தொடக்கத்தில் பல்பொடிக் கம்பெனியில் நான் பார்க்காத கேட்காத தெரிந்துகொள்ளாத உலக விஷயமே கிடையாது. எனக்கு ஞானம் கிடைத்த ஆசிரமம். எட்டு வயதிலிருந்து இருபது வயது வரையிலான பெண்களும் ஆண்களும் தினம் புழங்கிய இடம். அவர்களுடன் கலந்துத் தொழிலாளியாகி, தலைமுதல் கால் வரை பல்பொடி மணக்க வீட்டுக்குள் வந்தால் மாமி திட்டுவார். பல்பொடி வேலையில்லாத நாளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், அதே பெண்கள் சுள்ளி ஒடிக்க வருவார்கள். ஒரு வேலி விடாமல் சுள்ளி ஒடிப்பார்கள். என் மாமி ஒரு மூங்கில் கழியை எடுத்துக்கொண்டு “டீ.. தடிச்செறுக்கி” என்று அவர்களைத் துரத்துவார்.

ஈசு அந்தப் பெண்களில் ஒருத்தி.

பாலு எங்கள் கூட்டத்தில் சேர்ந்த வாரம். எங்கள் வீட்டில் ஈசுவைச் சித்தாளாகப் பார்த்தேன். தாத்தாவிடம் கூலி வாங்கிக்கொண்டு கைநாட்டு வைத்துவிட்டுப் போனாள். என்னைப் பார்த்து, “ஐரே.. உன் வீடா?” என்றாள், கீழுதட்டை உள்ளுக்குச் சுருட்டி முன்பல்லால் கடித்தபடி. பாலு சற்றும் தயங்காமல், “ஆமாம்.. என் வீடு தான்” என்றான். நெருங்கிப் பழகியவன் போல், “இங்க வா.. உன் பேரென்ன.. இப்படி எங்களோட வந்து உக்காந்துக்க” என்றான்.

பதில் சொல்லாது போன ஈசு, பனைமரத்தருகே சென்றதும் சட்டென்று நின்றாள். திரும்பி எங்களைப் பார்த்தாள். கடகடவென்று நடந்து சலனமில்லாமல் பாலுவின் பக்கத்தில் அமர்ந்தாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. பெண் என்ற கூச்சமா அல்லது எங்கள் வீட்டுச் சித்தாளுடன் உட்கார்ந்திருப்பது தெரிந்தால் அவமானம் என்ற ஜாதி உணர்வா தெரியவில்லை. எனினும் அவள் எங்கள் நடுவில் இருந்தது ஒரு சாதனை போல் பட்டது. “எவ்வளவு கூலி?” என்று சாதாரணமாக அவள் கைகளிலிருந்து பணத்தைப் பிடுங்கப் போனான் பாலு. “தே!” என்று அவனைத் தள்ளிவிட்டு பணத்தை இடுப்பில் முடிந்து கொண்டாள். “அரை நாள் கூலி” என்றாள். மற்ற சித்தாள் பெரியாள் பெயர்களையும் வயதையும் கேட்டுத் தெரிந்து கொண்டான் பாலு. சிறிது நேரத்தில் ஒரு கொத்தனார் அவளையழைக்க, ஈசு எழுந்தாள்.

“நாளைக்கு எங்க கூட ஏரியம்மன் குளத்துல குளிக்க வரியா?” என்றான் பாலு. “டேய்!” என்று திடுக்கிட்டான் சாம்பா. “வேணாண்டா” என்று நடுங்கினேன் நான்.

ஈசு சாதாரணமாக, “வேணாம் ஐரே.. தாளமாட்டே” என்றுத் தன் முழுப்பாவாடையை லேசாக உயர்த்திச் சிரித்தபடி ஓடினாள். பனைமரத்தருகே மறுபடியும் நின்றாள். யாரோ அவள் தலையைத் திருப்பியது போல் எங்களைத் திரும்பிப் பார்த்தாள்.

பாலு என்னிடம், “ஈசு.. நல்ல பேருடா..அவளோட ஒட்டிக்கிட வேண்டியது தான்” என்றான். ஜேம்ஸ் குறுக்கிட்டு, “டேய் பாலு.. துரை சின்னப்பையன்.. நீ வம்புல மாட்னாலும் அவனை மாட்டி வுட்றாதே” என்றான்.

பாலு பலமாகச் சிரித்தான். “டேய் புண்ணாக்கு மயிராண்டிங்களா.. என்னடா வம்பு வரப்போவுது? நாம எல்லாருமே டீனேஜு. கொஞ்சம் தொட்டுப் பாக்கப் போறோம்.. அவ்வளவு தான்.. ஈசுவைப் பாத்தா வம்புக்காரப் பொண்ணாவா தெரியுது? இப்ப என்ன ஆச்சுன்றே? பொதுக் குளத்துல நம்ம கூட குளிச்சா ஒண்ணும் ஆயிராது…” என்றான். ஈசுவுடன் குளிப்பதன் கிளுகிளுப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அமைதியாக இருந்தேன். எங்கள் கூட்டத்தில் நான் இளையவன் என்றாலும் ஜேம்ஸ் என்னைச் சின்னப்பையன் என்றது உறுத்தியது.

“அவளைப் பாருடா.. இன்னும் நம்மளையே பாத்துட்டிருக்கா” என்று கிசுகிசுத்தான் ரவி. பனைமரத்தடியில் ஈசு இத்தனை நேரமாக எங்களையே பார்த்துக் கொண்டிருந்தது விசித்திரமாக இருந்தது. நிமிர்ந்த பாலு, “போய்ட்டு வா ஈசு” என்று பலமாகக் குரல்கொடுத்தான். “நாளைக்கு மறந்துடாதே”. அவள் எங்களைப் பார்த்துத் தலையசைத்தபடியே பின்னால் நடந்தது அப்போது விபரீதமாகத் தோன்றவில்லை.

ஸ்ரீதர் சைக்கிளில் வருவதைப் பார்த்ததும் எங்கள் கவனம் கலைந்தது. ஸ்ரீதருக்குக் கொடுப்பதில்லை என்று நாங்கள் தீர்மானித்திருந்த வேர்க்கடலைப் பொட்டலங்களை அவசரமாகச் சாப்பிட்டுத் தீர்த்தோம். ஸ்ரீதர் வந்ததும் காலிப் பொட்டலங்களைப் பார்த்துவிட்டு வாயில் வந்தபடித் திட்டினான். கடுப்பு வந்து கிளம்பினான். ஜேம்ஸ் சமாதானமாக, “ரைட்ரா.. கோச்சுக்காத மச்சி.. நைட்டு கோவிலுக்கு வருவில்லே? நானே வெல்லமும் வேர்க்கடலையும் வாங்கி வரேன்” என்றான். அப்பொழுது தான் அன்றிரவு கோவிலில் பேயோட்டம் என்பது எங்கள் நினைவுக்கு வந்தது. மாமியிடம் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வந்தாக வேண்டும். இரவு பேயோட்டம் பார்ப்பதற்கானத் திட்டங்கள் போட்டோம்.

அந்தப்பக்கம் வந்தத் தணிகாசலம் எங்களைத் தடுத்து, “வேணாம் கண்ணுங்களா.. இன்னிக்குக் காட்டேறி பூஜை” என்றார்.

பாலு அவரை முறைத்தான். “பூசாரிண்ணே.. எங்களைப் பாத்தா எப்படித் தெரியுது?” என்றான்.

“அதுக்கில்ல கண்ணுங்களா.. ரத்தக்காட்டேறி பூஜை ரொம்பக் கனமா இருக்கும். வயசானவங்களே பயந்துருவாங்க. நீங்கள்ளாம் சின்னப்பசங்கள்ளா..” என்றார்.

“நாங்க வரோம் பூசாரிண்ணே”. கிளம்பினோம். இரவு திரும்புவோம் என்பது எங்களுக்குத் தெரியும். அவருக்கும் தெரியும்.

பனைமரத்தடியிலிருந்து ஸ்ரீதர் அலறினான். “இங்க வாங்கடா!”. ஓடினோம். ஈசு நின்ற இடத்தில் வட்டமாக ரத்தக்கறை. ஈரமாக இருந்தது. திக்கென்றது.

“சே.. அவ ஒண்ணும் இங்கே நிக்கலைடா!” என்றான் பாலு. “மதியம் எதுனா கடா வெட்டி பொங்கினாங்களா பூசாரிண்ணே?”

“ஆமப்பா” என்றார் பூசாரி. எனக்கு என்னவோ உள்ளுக்குள் கலங்கியது.

பம்மல் அனகாபுத்தூர் பிரதேசத்தில் பேயோட்டம் நிறைய நடக்கும். கிறுஸ்துவ பெந்தகொஸ்தே திருச்சபை இரண்டிலும் இரவு எட்டு மணிக்கு மேல் ‘பிலுபிலுபிலுபிலுபிலு’ என்று கீச்சுக்குரலில் அலறி உடலைக் குலுக்கி இரண்டடி உயரத்துக்குக் குதித்துக் கலக்கடிப்பார்கள். பிற மதத்தினருக்கு ஏரியம்மன் கோவில். சில சமயம் பேய்கள் மதம் மாறிவிட்டதோ என்ற சந்தேகத்தில் இரண்டு இடங்களிலும் பேயோட்டுவார்கள். சாதாரணப் பேய்களுக்கு பூவாத்தா எல்லையம்மன் துர்கை நீலி பாம்புப்புத்து மாரியம்மன் பிடாரியம்மன் என உற்சவர் சன்னதிகள் போன்ற கோவில்கள் பரவலாக இருந்தாலும், குறிப்பாக ரத்தக்காட்டேறி பித்தகாட்டேறி பூஜை இரண்டும் மூலவரான ஏரியம்மன் கோவிலில் மட்டுமே நடக்கும்.

பேயோட்ட இரவுக்கு மறுநாள் ஏரியில் என்னென்னவோ மிதக்கும். பூக்கூடை, மயிற்கற்றை, ரத்தம், கடாயில் வறுபட்டுக் காய்ந்த நார்த்தங்காய் போல் சுருங்கிய ரத்தப் பொறிகள், குங்குமம், மஞ்சள் பொடி, பால் தொன்னைகள், சாராயக் குப்பிகள், வேட்டிகள், சில ரவிக்கைகள்…. என்று கோவிலோரமாக, மதியத்துக்கு மேல் போதை தெளிந்தபின் தர்மகர்த்தா வேலாயுதம் வீட்டு ஆட்கள் வந்து சுத்தம் செய்யும் வரை மிதந்து கொண்டிருக்கும்.

கோடைக் காலைகளில் மாமா வீட்டில் தினம் ஒரே மெனு. கெட்டித் தயிரில் பிசைந்தப் பழைய சோறு. அதில் பச்சை மிளகாய், மணத்தக்காளி, மோர்மிளகாய், மாங்காய் இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை எல்லாம் அளவாக வறுத்துப் போட்டுக் கலந்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு குடுவையில் முந்தைய வருடத்து மாவடு. இருபது பேருக்குத் தயாராக இருக்கும் சோறு. பத்து பேராக அதை ஒரு பிடி பிடிப்போம்.

மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு மூச்சு விடக்கூட முடியாமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஏரியம்மன் கோவிலுக்குப் போனேன்.

ஏற்கனவே பாலுவும் சாம்பாவும் ஜேம்சும் தண்ணீரில் இறங்கியிருந்தார்கள். கை நிறைய ஏரிக்குப்பையை அள்ளிக் காற்றில் என் பக்கமாக எறிந்தான் பாலு. “ஆத்தா வந்துட்டா!” என்றான். “ஆத்துல இறங்கு ஆத்தா!” என்று சிரித்தார்கள். சைக்கிளைச் சாய்த்துவிட்டு அப்படியே தண்ணீரில் இறங்கினேன். முதல் நாளிரவு பார்த்தப் பேயோட்டம் இன்னும் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. “என்னடா ஈசு வரலியா?” என்றேன்.

இரவு, பேயோட்டத்தில் ஈசுவின் அக்கா யார் மேலோ வந்துவிட்டாள் என்று வேப்பிலையால் மாறி மாறி ஒருத்தியை அடித்தார்கள். பேய்ப் பெண்ணை முடியால் இழுத்து ஒரு கற்றையை ஏரியம்மன் சூலப் படியில் ஆணியடித்து நிறுத்தினார்கள். அந்தப் பெண் உறுமிக் கொண்டே இருந்தாள். ஈசு கூட பயந்து விட்டாள். “அக்கா! அக்கா!” என்று அலறிக் கொண்டு ஓடியவளைப் பிறகுக் காணவில்லை. அதற்குப் பிறகு வேப்பிலையும் உடுக்கடியும் ரொம்ப ஓவரானதென்று நாங்களும் கிளம்பிவிட்டோம்.

“தோடா.. நாங்களாம் கிறோம்.. ஈசு வரலியான்றான்” என்றான் ஜேம்ஸ். கோவிலோரமாக நீந்திக் கொண்டிருந்த பாலு, நீரில் இருந்த வாழைப்பழத்தை எடுத்து தோ ராஹா ஜாடை காட்டினான். பலமாகச் சிரித்தான். “அதுக்குள்ளே என்னடா அவசரம் உனக்கு?” என்றான்.

“வராட்டிப் போறா விடு” என்ற சாம்பா, என்னைத் தள்ளினான்.

நான் பாலுவைச் சாதுவான கெட்ட வார்த்தையில் ஏதோ சொல்லப் போக, திடீரென்று பாலுவைக் காணோம். இப்போது தானே நீரில் இருந்தான்? சாம்பாவும் திடுக்கிட்டான். அடுத்த சிலக் கணங்களில் பாலு மேலே வந்தான். மூச்சுத் திணறி மறுபடியும் மூழ்கினான். நாங்கள் அரண்டோம். ஜேம்சும் சாம்பாவும் பாலு இருந்தப் பக்கமாக மூழ்கினார்கள். நான் தயக்கத்துடன் அவர்கள் பக்கமாக நீந்தினேன். திடீரென்று என்னை யாரோ காலைப் பிடித்து நீருக்குள் இழுத்தார்கள். இவர்களாக இருக்கும் என்று எண்ணி விளையாட்டாக இருந்தால் என்னைத் திரும்பவிடாமல் இழுத்துக் கொண்டே இருந்தது புசுபுசுவென்று கால்களில் உறுத்திய ஏதோ ஒன்று. எட்டி உதைத்துத் திணறி மேலேறி வந்தால் மூவரும் நீந்திக் கொண்டிருந்தார்கள். “எங்கடா போனே?” என்றார்கள். நான் திணறித் துப்பிக் கொண்டிருந்தேன்.

“நிச்சயம் யாரோ தண்ணில இருக்காங்கடா” என்றான் பாலு. “இல்லடா.. நாங்கதான் பாத்தமே?” என்றான் சாம்பா.

“போயிடலாம்டா” என்றேன்.

இரண்டு நிமிடங்கள் பொறுத்து நீரிலிருந்து மேலே திடுப்பென்று மாயமாக வந்தாள் ஈசு. கைகளை உயர்த்திக் காட்டுத்தனமாகச் சிரித்தாள். அவள் கைகளைச் சுற்றிக் கோரைப் புல்லினால் கட்டியிருந்தாள். புல்கட்டுக் கையுறையை அவிழ்த்து எறிந்து, “என்னா அய்ரே.. பயத்துல ஒண்ணுக்கிருந்தியா?” என்று என்னை நெருங்கித் தோள்களைக் கட்டினாள். நான் சற்றும் எதிர்பாராமல் என் நிஜாரின் நடுவில் கை வைத்து “ஈரமாயிருச்சு” என்றுச் சிரித்தாள். “பயந்துட்டியா?” என்றாள். அவள் என் நிஜாரில் கைவைத்ததால் இன்னும் பயந்தேன். “மாமியாண்ட சொல்றாதப்பு. உன் மாமி.. அய்ரூட்டு மாமியா அது?” என்றாள்.

“நீதானு எனக்குத் தெரியும் ஈசு.. அதான் சும்மா இருந்தேன்” என்றான் பாலு.

“சேய்! கம்னு கெட. நீ எத்தினி பயந்தேனு எனக்குத் தெரியாதா?”

“ஆமா! எங்கே ஒளிஞ்சிருந்தே?” என்றேன்.

“ஏரியம்மா காவா குகை தெரியாதா உனக்கு?”

“தெரியாதே?” என்றோம்.

எங்களை நீருக்குள் அழைத்துப் போனாள். முதன் முறையாகப் பார்த்துத் திடுக்கிட்டோம். ஏரியம்மன் உள் சன்னதியில் அம்மன் சிலையின் பின்புறத்தில் ஆள் புகும் அளவுக்குச் சுரங்கக் கால்வாய். அம்மன் மேல் செய்த அபிஷேக நீரெல்லாம், குறிப்பாக ரத்தம் பொடி போன்ற திக்திக் பொருட்களையெல்லாம் ஏரிக்குள் பைசல் பண்ண வசதியாக வெட்டியிருந்தார்கள். ஏரியின் உள்வாயை ஒரு மூங்கில் தட்டிக் கதவினால் அடைத்திருந்தார்கள். தட்டியைத் தட்டியபடி அலட்சியமாகக் கோவிலுக்குள்ளிருந்து ஏரிக்கு வந்து போனாள் ஈசு. புதுமை காரணமாக நாங்களும் கோவிலுக்கு உள்ளும் ஏரிக்கும் மாறி மாறி நீந்தினோம்.

“இங்கிருந்து தான் உங்க அத்தினி பேரையும் பயங்காட்டினேன்” என்றாள்.

“ஆமா.. இது உனக்கெப்படித் தெரியும்?” என்றான் பாலு.

“அஞ்சு வருசத்துக்கு முந்தி எங்கக்கா இங்கதானே செத்துச்சு?” என்றாள்.

அதிர்ந்தேன். “இங்..கியா?”

“தெரியாதா? எங்கக்காவை இந்தக் காவாயிலதான் திக்கித் திணறி சாவடிச்சிருக்காங்க தேவடியா பசங்க” என்றாள்.

“யே.. உங்கக்கா பனைமரத்துல தொங்கிச்சுனு சொன்னாரு பூசாரி நேத்து?” என்றான் ஜேம்ஸ்.

“நான் பாத்தன் கண்ணு.. இந்தக் காவாயில தான் உடம்பு ஊதிப் போயி.. போலீஸ் நாய் வந்து.. அப்ப நான் சின்னப்புள்ளைனாலும் நல்லா பாத்தனே..?”

“உனக்குப் பயமா இல்லே?” என்றேன்.

“என்னாடா.. லூசாட்டம் கேக்குறே?” என்றான் பாலு.

“எனக்கு இன்னா பயம்? எங்கக்காவைக் கெடுத்தவனை எனக்குத் தெரியும். நாந்தான் அந்தாளைப் பழி வாங்கப் போறேனில்லே? பயந்தா முடியுமா?” என்றாள்.

“யாரு?” என்றான் பாலு.

“சொல்லிருவனா.. இங்கே வச்சிருக்கேன்” என்று மறுபடியும் நான் எதிர்பாராத விதமாக என் கையை எடுத்து அவள் இடது மார்பில் வைத்தாள். நான் அவசரப்பட்டு விலகினேன். ஈசு பலமாகச் சிரித்தாள். நீரில் மூழ்கி வெளிவந்து வாயைக் குவித்துத் துப்பினாள். ஊற்று போல வெளியேறித் தெறித்தது தண்ணீர்.

“எங்கே வச்சிருக்கே? எனக்கும் சொல்லேன்?” என்று வேகமாக அவள் பக்கமாக நீந்தினான் பாலு.

ஈசு மறுபடி சிரித்தாள். “ஐரே.. நீ யாரு.. இன்னா விசயம்னு உன்னைப் பத்தித் தெர்யாதா?” என்று மறுபடி நீரில் மூழ்கி வெளிவந்து வாயைக் குவித்துத் துப்பினாள். ஊற்று போல வெளியேறித் தெறித்தது ரத்தம்.

“ஏண்டா.. என்ன ஆச்சு?” என்று அலறினார் பாட்டி.

சுவரோரமாக இருந்தக் கட்டிலில் என்னை உட்காரவைத்த பாலு, “ஒண்ணுமில்லே.. ரொம்ப சாப்பிட்டானா என்ன தெரியலே.. ஏரில வாந்தி எடுத்து மூழ்கப்போனான்.. பயப்படாதீங்கோ.. நாங்க உடனே பிடிச்சுக் கொண்டு வந்துட்டோம்”. வழியெங்கும் பாலுவின் கறார் அறிவுரை. “டேய்.. சும்மா நம்மள ட்ரிக் பண்ணியிருக்காடா ஈசு.. வாயிலந்து ரத்தம் வரதாவது? பேயோட்டக் குங்குமம் எல்லாம் தண்ணில மிதந்திட்டிருந்ததை நீதான் பாத்தியே.. நீ எதுனா நல்லா தின்னுட்டு வந்திருப்படா.. அதான். வீட்ல இதெல்லாம் சொன்னா எல்லாருக்குமே வம்பாயிரும் தெரியுதா?”. நான் பார்த்தது குங்கும நீர் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரிந்தும் குழம்பியிருந்தேன். ‘ஈசு ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?’ என்ற கேள்வியை என்னுள் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘எங்கக்காவை கெடுத்தவனை எனக்குத் தெரியும்’ என்று என் கையை எடுத்து நெஞ்சில் வைப்பானேன்?

“தொரப்பாவுக்கு ஒடம்பெல்லாம் நடுங்குறதே? சாந்தி.. சித்த வா இங்கே” என்றார் பாட்டி. என் மேல் வெயிலோ நிழலோ அதிகமாக விழுந்தால் கூட என் பாட்டிக்குக் கவலை வந்துவிடும். இந்த நிலைமையில் சும்மா இருப்பாரா? அடுத்த நிமிடம் மாமி வந்துவிட்டார். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும் எட்டூருக்கு மிரட்டி உருட்டுவார். எனக்கிருந்த குழப்பத்தில் எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன். “ஈசு என்னைப் பழி வாங்கப் போறா. அவ அக்காவைக் கெடுத்தேன்னு நெனைச்சிட்டிருக்கா” என்றேன்.

“அதெல்லாம் இல்லிங்க மாமி” என்றான் ஜேம்ஸ். அய்யர் வழக்கில் ஜேம்ஸ் பேசுவது தமாஷாக இருக்கும். அந்த நிலையிலும் ரசித்தேன். பாலுவின் முகத்தில் கோபம் வெடித்தது. சாம்பா வெளியே ஓடத் தயாராக வெளிக்கதவருகே நின்றிருந்தான். வழியில் எங்களைப் பார்த்து விவரம் தெரிந்து கொண்ட ரவி, இந்நேரம் பாலுவைப் பற்றி அவன் வீட்டில் வத்தி வைத்துக் கொண்டிருப்பான்.

மாமி வெடிக்கப் போகிறார் என்று நினைத்தேன். மாறாக ஒரு தட்டில் மிளகாய், எள், பச்சைக்கற்பூரம் என்று என்னென்னவோ எடுத்து வந்தார். “சும்மா இருடா.. மீசை கூட முளைக்கலை.. கன்னாபின்னானு பேசிண்டு.. கெடுக்கறதுனா என்னனு தெரியுமாடா உனக்கு? தத்துபித்தாட்டம்.. உக்காருங்கடா எல்லாரும்” என்று அதட்டினார். எல்லோரும் என்னைச் சுற்றி அமர்ந்தனர். “குழந்தை பயந்துடுத்தே.. காத்து கருப்பு பட்டிருக்குமோ?” என்று புலம்பிக் கொண்டிருந்த பாட்டியையும் அதட்டினார். “சும்மா இருங்கோ. ஒண்ணும் ஆகல உங்க தொரப்பாவுக்கு. டேய்.. உக்கார்டா. கண்ட இடத்துல எதையாவது சாப்பிட வேண்டியது.. இஷ்டத்துக்கு சுத்த வேண்டியது..” என்றபடி என் தலையை அழுத்தி உட்கார வைத்தார். “சுத்திப் போட்டா சரியாயிடும்” என்று எங்கள் முன் நின்றுகொண்டு தட்டைச் சுற்றத் தயாரானார்.

“இதெல்லாம் வேணாம் மாமி.. எனக்கு நம்பிக்கையில்லை” என்ற பாலுவை முறைத்தார். “நம்பிக்கையில்லேனு நாசமாப் போனதால தானே இப்பக் கிடந்து அவஸ்தைப் படறோம்? சும்மா இருடா.. உனக்கு நம்பிக்கையில்லேனா எனக்கு இருக்கு. உக்காருடா” என்று அதட்டி, “உனக்கென்னடா தனியா பத்திரிகை அனுப்பணுமா? வா இங்க” என்று சாம்பாவையும் வரச்சொல்லி உட்காரவைத்தார்.

அதற்குள் ரவியும் அவன் அம்மாவும் வந்துவிட்டார்கள். “என்னடா பாலு?” என்றபடியே உள்ளே வந்தார். “வாங்கோ.. உங்க பையனா இவன்?” என்றார் என் மாமி.

“இல்லே.. அண்ணா பையன்.. லீவுக்கு வந்திருக்கான்.. ஏண்டா பாலு, என்ன ஆச்சு?”

எல்லாவற்றையும் சொல்ல வேண்டியிருந்தது. ரவியின் அம்மா அழத்தொடங்கி விட்டார். “இந்த மாதிரி ரெண்டுங்கெட்டானெல்லாம்.. யாரு மாமி அது ஈசு? யாரோட அக்கா? என்ன விஷயம்? இவனுக்கு ஏதாவது ஆச்சுனா எங்கண்ணாவுக்கு என்ன பதில் சொல்வேன்?” என்றார். சிக்கல் பாலுவின் பக்கம் திரும்பியதில் எனக்குக் கொஞ்சம் நிம்மதி.

“ஒண்ணும் ஆகலே. பயப்படாதீங்கோ” என்றார் மாமி. “நீங்கள்ளாம் குடிவரதுக்கு முன்னால நடந்தது. இந்த ஈசுவரியோட அக்கா திலகமோ என்னவோ அவ பேர்.. நல்லா தெரியும்.. பல்பொடி கம்பெனியிலயும் இங்கயும் அங்கயும் சுத்திண்டிருப்பா.. வயசுக் கோளாறு.. திடீர்னு ஒரு நா ராத்திரி, “ஓடிப்போயிட்டா ஐரே!”னு அவ அம்மா இங்க வந்தா. இவர்தான் போலீசுக்குச் சொல்லி என்னவோ செஞ்சு வச்சார். ஒண்ணும் நடக்கலே. ஒரு மாசம் கழிச்சு அவளே வந்துட்டா. எவனோ அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லிக் கூட்டிண்டு போய் திருத்தணில தாலி கட்டி நாலு நாள் வச்சுண்டிருந்துட்டு பம்பாய்லயோ விஜயவாடாலயோ வித்துட்டானாம். த்வம்சம் பண்ணிட்டாளாம் சின்னப் பொண்ணைப் பாவம்.. எப்படியோ ஓடி வந்துட்டா. ரெண்டு மாசம் கழிச்சு கர்ப்பம்னு தெரிஞ்சதும் மறுபடியும் ஓடிப்போயிட்டா. அப்புறம் மூட்டைப் பூச்சி மருந்து குடிச்சு செத்துப் போயிட்டானு சொல்லி.. ஏரியம்மன் கோவில்ல கிடந்தாளாம்.. எடுத்துப்போட்டு..பதினாறு வயசோ என்னமோதான் பாவம்.. மூக்கும் முழியுமா.. சூத்ரக்குட்டி மாதிரியே தெரியாது” என்றவரை பாட்டி தடுத்தார். “போறும் போறும்.. குழந்தை ஏற்கனவே பயந்து போயிருக்கான்”

“தெரியட்டும் தெரியட்டும்.. தடிமாடு மாதிரி சுத்தலே?” என்றார் மாமி. சாதாரணமாக என்னை ‘வாடா கண்ணா’ எனும் மாமி கோபம் வந்தால் தடித்தாண்டவராயா, எருமைமாடு போன்ற சொல்லடிகள் கொடுப்பார். தெருப்பொறுக்கிக்கு இணையாக “டேய்!” என்று உதார் விடும் மாமியென்பதால் அடங்கிவிடுவேன்.

“சுத்திப் போட்டா சரியாயிடும்” என்றார். “வாங்கோ நீங்களும் பிடிங்கோ” என்று ரவியின் அம்மாவிடம் ஒரு தட்டைக் கொடுத்து கைப்பிடிக் கற்பூரத்தை நடுவில் வைத்து ஏற்றினார். “நீங்க முதல்ல மகமாயி ராசி சுத்திப் போடுங்கோ. நான் திருஷ்டி சுத்திப் போடுறேன்” என்றார். ரவியின் அம்மா எங்கள் முன் தட்டைச் சுற்றத் தொடங்கினார். இரண்டாவது முறை சுற்றும் பொழுது பாலு தும்மினான். “இருங்கோ” என்று நிறுத்திய என் மாமி கற்பூரத்தட்டில் ஒரு உப்புக்கல்லை எடுத்துப் போட்டு, “மறுபடியும் சுத்திப் போடுங்கோ. தும்மிட்டான்” என்றார். இந்த முறை முதல் சுற்றில் பாலு எதிரில் வந்ததும் கற்பூரம் அணைந்தது. ரவியின் அம்மா பயந்து விட்டார். “வேணும்னே வேகமா மூச்சு விடறான் மாமி. டேய் பாலு, தொலைச்சுடுவேன்.. சும்மா இருடா” என்ற மாமி, “நானும் சுத்தறேன் வாங்கோ” என்றார். ஒரு பெரிய தட்டில் திருஷ்டிப் பொருளையும் கற்பூரத்தையும் மாற்றி இருவரும் முனைக்கொருவராகப் பிடித்துக் கொண்டு சுற்றினர். இரண்டாவது சுற்றில் கற்பூரம் சொல்லிவைத்தாற் போல் அணைந்தது. “பரவாயில்லை விடுங்கோ” என்ற மாமி, சுற்றுவதை நிறுத்தவில்லை. மூன்றாவது சுற்றில் “இன்னாடி முண்டைங்களா.. கயிசடை.. தூ!..” என்று பாலு துப்பியது அதிர்ச்சியாக இருந்தது.

கட்டைப் பெண் குரலில் அவன் பேசியது இன்னும் அதிர்ச்சி.

3

ரவி வீட்டில் ஹோமம் புண்யாசனம் என்று கூத்தடித்தார்கள். குரோம்பேட்டை போனால் வீட்டில் அபிராமி அந்தாதி மற்றும் மகிஷாசுரமர்த்தனி சுலோகங்களை உருட்ட வைத்தார் என் அம்மா. மாமி வீட்டிற்கு வந்தால் கந்தசஷ்டி கவசம், காத்யாயனி காயத்ரி என்று புதிதாக ஏதாவது கிளப்பிப் பாராயணம் செய்யச் சொன்னார்கள். சாம்பா வீட்டில் ருத்ரம் சொல்லத் தொடங்கினார்கள். ஜேம்ஸ் வீட்டில் தோமையார் அகவல், சாக்காடு அறத்தோத்திரம் என்று நோகடித்தார்கள். வீட்டுக்குப் போவதற்கே பயந்தோம். “பேய்த்தொல்லையே பரவாயில்லைடா” என்றான் சாம்பா. பேயை நாங்கள் வீட்டுள் கொண்டு வந்தோம் என்று அவர்களுக்குச் சந்தேகம் வந்ததோ இல்லையோ, எங்களுக்கு வந்தது. அதனால் இரண்டு நாளாக நாங்கள் உண்டு, சிந்தாளம்மன் கோவிலில் சீட்டாட்டம் புக் க்ரிகெட் அல்லது சைக்கிளில் ஊர் சுற்றல் உண்டு, என்று இருந்தோம். பெண் குரலில் சீறியதற்காக பாலு எதுவும் சொல்லவில்லை. நாங்களும் அதிகம் கேட்கவில்லை. ஒரே ஒரு முறை “ஏண்டா பாலு அப்படிப் பேசினே?” என்று கேட்டபோது மட்டும், பாலு தலையை ஆட்டி மர்மமாகச் சிரித்தான். அடுத்தக் கணமே இயல்பாகிவிட்டான். “ஒண்ணுமில்லடா” என்று எங்களையும் அடக்கிவிட்டான்.

மூன்றாம் நாள் மதியம் ஈசு வந்தாள். பாலுவுக்கு அவள் மேல் கடுங்கோபம். அனாவசியமாக என்னைப் பயமுறுத்தியதால் இப்படி எல்லார் வீட்டிலும் தினம் நோக வேண்டியிருப்பதைச் சொல்லித் திட்டினான். அவள் ஏதோ சொல்ல, இருவரும் வாக்குவாதம் செய்கிறார்கள் என்று நினைக்கும் பொழுதே அடிதடிக்குப் போய்விட்டது. ஈசு ஏறக்குறைய பாலுவின் உயரம். பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டாள். பாலுவுக்கு அவமானமும் ஆத்திரமும் மேலோங்கினாலும் பெண்ணை எப்படி அடிப்பது என்ற தயக்கம். ஈசுவோ தயங்காமல் மறுகன்னத்தில் அறைந்தாள். இயேசுவுக்கு பொறுமை இருந்திருக்கலாம், பாலுவுக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. ஈசுவின் தலைமுடியை இழுத்துக் கழுத்திலும் கன்னத்திலும் அறைந்தான். அவள் திமிறி பாலுவின் முகத்தில் துப்பினாள். பாலுவின் குத்து சரியாக ஈசுவின் நெற்றியில் விழுந்தது. திக்குமுக்காடிப் போனாள். தளராமல் பாலுவை வேகமாகச் சுவரோரம் தள்ளி அவன் மூக்கைக் கடித்து முகத்தில் ரத்தம் வரும்படிக் கீறிவிட்டாள்.

பார்த்துக் கொண்டிருந்த எங்களில் ஜேம்சுக்கு முதலில் விழிப்பு வந்தது. ஓடி இருவரையும் விலக்கினான். உதவினோம். பெண்ணிடம் அடிவாங்கிவிட்டோமே என்று பாலுவுக்கு பெரும் அவமானம். எதுவுமே பேசாமல் ரவியின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான். ஈசுவை ஏதோ கேட்கப் போன ஜேம்சை அவள் எச்சரித்துவிட்டு பல்பொடி கம்பெனி பக்கமாக நடக்கத் தொடங்கினாள். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சாம்பா வீட்டுக்குப் போக முடிவெடுத்தோம்.

அந்நாள் பம்மலில் காலை மாலை என்று எந்த வேளையிலும் காற்றடிக்கும். எங்கள் வீடுகளைச் சுற்றிலும் ஏரியோ குளமோ இருந்ததால் கொஞ்சம் இதமாகவே இருக்கும். சாம்பா வீட்டு மொட்டை மாடியில் அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்கள், அசந்து தூங்கி விட்டோம். சாம்பாவின் தங்கை “சிவா சிவா” என்று கூவிக்கொண்டே மேலே வந்தவள், எங்களையெல்லாம் பார்த்துத் திடுக்கிட்டு நின்றாள். எழுந்தோம். சாம்பாவுக்காக எடுத்து வந்த காபியை ஜேம்ஸ் வாங்கி ஒரே வாயில் குடித்தான். “இன்னும் நாலு கப் எடுத்தா” என்றான். “வந்து நீயே எடுத்துக்க” என்று அவள் ஓடினாள்.

“போய் பாலுவைப் பார்ப்போம் வாங்கடா” என்று கிளம்பிய ஜேம்சைத் தொடர்ந்தோம். பாலு வீட்டில் இல்லை. “டேய், ரவி.. எங்கடா உங்க மாமா பையன்?”.

“எனக்கெப்படிரா தெரியும்? நானே உங்ககூடத் தானே இருந்தேன்?”

சைக்கிளில் அங்கே இங்கே சுற்றிவிட்டு சிந்தாளம்மன் கோவில் பக்கம் வந்தோம். எங்கள் வீட்டில் மறுநாள் கூரைவேயும் தினமானதால் அன்று சீக்கிரமே வேலை முடித்துக் கிளம்பிவிட்டார்கள். “டேய்.. உங்கூட்ல முழுக்க சுவர் எழுப்பிட்டாங்கடா” என்று ஜேம்சும் சாம்பாவும் எங்கள் வீட்டுக்குள் தாவியேறிப் போனார்கள். கோவில் பின்புறச் சுவரோரமாக நின்றப் பூசாரி தணிகாசலத்தைப் பார்த்த ரவி, “பூசாரிண்ணே! பாலுவைப் பாத்திங்களா?” என்றான். “இல்லியப்பா” என்ற பூசாரி, “இந்தப் பக்கம் வராதிங்க கண்ணுங்ளா” என்றார்.

அதற்குள் நாங்கள் அங்கே வந்துவிட்டோம். பூசாரி எதிரே தரையில் ஒரு ஆட்டுக்குட்டி செத்துக் கிடந்தது. உடலில் ரத்தக்காயம். அருகே மண்டியிட்டு ஒரு குருவன் உட்கார்ந்திருந்தான். பேயோட்டங்களை முன் நின்று நடத்தும் குருவன். பீடி புகைத்தபடி ஆட்டுக்குட்டியைச் சுற்றி மஞ்சள் பொடியினால் ஒரு வட்டம் போட்டுக் கொண்டிருந்தான். “ஊர்ல காட்டேறி எறங்கிட்டா. இது காட்டேறிக் கடியாக்கும்” என்றார் பூசாரி.

திடீரென்று ஜேம்ஸ் ஓடிவருவதைக் கவனித்தோம். ‘ஷ்! இங்க வாங்க’ என்று சைகை காட்டினான்.

எதுவும் புரியாமல் அவன் பின்னால் சென்றோம். “சத்தம் போடாம வாங்கடா” என்று எங்களை சமையலறை ஜன்னலுக்கு அழைத்துச் சென்றான். எங்கள் வீட்டின் பின்னால் கிணற்றைத் தாண்டி செப்டிக் டேங் கட்டுவதற்காகக் குழி தோண்டியிருந்தார்கள். குழிக்குள் பாலுவும் ஈசுவும்! இங்லிஷ் சினிமா போல் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்!

ரவிக்குப் பொறுக்கவில்லை. “டேய் பாலு!” என்று கூவினான். சாம்பா அவர்களைக் கைகொடுத்து மேலேற்றினான். ஈசு சிரித்துக்கொண்டே “வரட்டா ஐரே?” என்று என் தலைமுடியைக் கோதிவிட்டு ஓடினாள்.

“இப்ப என்ன ஆயிருச்சுன்ற? சண்டை போடத்தான் வந்தேன்.. அவளும் இங்கத்தான் இருந்தா. என்ன ஆச்சுனு தெரியலே.. திடீர்னு அவளாத்தான் கட்டிப்பிடிச்சா” என்ற பாலுவை ரவி அடக்கினான். “நிறுத்துடா. அடுத்த வருசம் நீ எஸெல்சி.. இதென்னடா? கண்டவளோட.. அன்னக்கு சினிமா கூட்டிட்டு வந்தே.. இன்னக்கு..கருமம் கருமம்” என்று தலையிலடித்துக் கொண்டான்.

“.. ஏண்டா எங்கப்பன் மாதிரி பதட்டமாவுற? சும்மா கிஸ்ஸடிச்சோம். அவ்ளோ தான்.. விடுறா.. இருந்தாலும் ரொம்பத்தான் கிஸ்ஸடிச்சாடா.. வாயெல்லாம் வலிக்குது” என்று எங்களைக் கடுப்பேற்றிக் கொண்டிருந்த பாலு, வழியில் திடீரென்று வருத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. “அவளைத் தொட்டிருக்கக் கூடாது.. டேய் ரவி.. அத்தை கிட்டே சொல்லிறாதே.. இன்னும் ஒரு வாரம் தானே..?” என்று புலம்பிக் கொண்டே வந்தான்.

ரவியின் வீட்டுக்குள் நுழைந்ததும் ரவியின் அம்மா, “பாலு.. ஏம்பா உன் மூஞ்சி ஒரு மாதிரி இருக்கு? அடி பட்டிருக்காப்ல இருக்கு?” என்றார். முகத்தில் கீறியதைச் சொல்கிறார் என்று எண்ணி, “ஒண்ணுமில்லேத்தே.. எங்களுக்குள்ள சண்டை.. இப்போ சரியாயிடுச்சு” என்றான் பாலு.

“இல்லப்பா வாயெல்லாம் வீங்கியிருக்கே?” என்று அவர் விடாமல் அவன் முகத்தைத் தொட்டுப் பார்த்தார். அடுத்து அலறினார்.

அவருடைய அலறலில் நாங்களும் பயந்துவிட்டோம். பாலு தன் வாயைத் தொட்டுப் பார்த்தான். “என்னடா, எதுனா தெரியுதா?” என்றான் எங்களிடம்.

ஜேம்ஸ் மெள்ள, “டேய்.. உனக்கு காட்டேறிப் பல்லு வந்திருக்குதுடா.. ரெண்டு ஓரத்துலயும்.. கோரப்பல்லு நல்லாத் தெரியுது” என்றான்.

க்ருஷ்ணா நகரில் தட்சிணாமூர்த்தி க்ளினிக்குக்கு பாலுவுடன் விரைந்தார் ரவியின் அம்மா. நாங்களும் தொடர்ந்தோம். பல்லைப் பார்த்த டாக்டர், “ஒண்ணுமில்லே.. சில சமயம் இப்படி வளர்ச்சி வரும். நாளைக்கு ஆர்தோடான்டிஸ்ட் கிட்டே கூட்டிட்டுப் போயிருங்க.. இதெல்லாம் சாதாரணம்” என்று தி.நகரில் ஒரு மருத்துவமனைக்கு சீட்டெழுதிக் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் “என்னமோப்பா.. இருண்டதெல்லாம் பேயாத் தெரியுது” என்ற ரவியின் அம்மா, எங்களுக்கு நன்றி சொன்னார். “பாலு, நீ இனிமே எங்கயும் போக வேண்டாம்பா. அண்ணா வர வரைக்கும் வீட்டுக்குள்ளயே இருக்கணும். கறாரா சொல்லிட்டேன்” என்றார். பாலு சாதுவாக “நீ சொன்னா சரி அத்தே” என்றான்.

பாலு-ஈசு-கோரைப்பல் பதட்டத்தில், இறந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தது எனக்கும் ரவிக்கும் மறந்தே போனது.

அன்று இரவு குரோம்பேட்டை போக வேண்டியிருந்தது. மறுநாள் அதிகாலை தாத்தாவுடன் சைக்கிளில் பம்மல் வரும்பொழுது திருநீர்மலை ரோடருகே வந்ததும், “எலே.. உன்னோட ப்ரென்டு பாலு.. சல்லிப்பய.. அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு” என்றார். “சித்தாளோட சுத்தறான்..நேத்து மத்யானம் அவன் தணிகாசலம் வீட்டு ஆட்டைக் கடிச்சிட்டிருந்தான்.. கண்ணால பாத்தேன்” என்றார்.

தாத்தாவை வீட்டில் இறக்கிவிட்டேன். அன்றைக்கு கூரை வேய்வதால் எல்லாருக்கும் காலையில் விருந்து சாப்பாடு என்று கூட்டமான கூட்டம். தாத்தா என்னைப் பரிமாறச் சொன்னார். கடுப்போடு ஒரு மணி நேரம் வேலை செய்துவிட்டு ரவி வீட்டுக்குப் போனேன். வீடு அமைதியாக இருந்தது. ரவி மட்டும் இருந்தான்.

“விஷயம் தெரியாதா? டேய்.. ஈசுவுக்குப் பேய் பிடிச்சிருச்சுனு தணிகாசலம் வந்து சொன்னான்.. அவனோட ஆட்டைக் கடிச்சது ஈசு மேலே வந்தக் காட்டேறியாம்.. காட்டேறி கபால பைரவினு என்னென்னவோ சொன்னான்.. பசங்களை கவனமா இருக்கச் சொல்லுங்கனு சொல்லிட்டுப் போனான்.. சொல்லி வச்சாப்புல பாலுவுக்கு பல்லுல ரத்தம் வரத் தொடங்கிச்சு.. என்னால பொறுக்க முடியலே.. பாலுவையும் ஈசையும் உங்க வீட்டு செப்டிக் டேங்க்ல பாத்ததையெல்லாம் எங்கம்மாட்டே சொன்னேன்.. அம்மா பாலுவோட உங்க மாமி வீட்டுக்குப் போயிருக்காங்கடா”

“டேய்.. ஆட்டைக் கடிச்சது ஈசு இல்லைடா..”

சாம்பா, ஜேம்ஸ், ஸ்ரீதர், நான் எல்லோரும் மறுநாள் ரவி வீட்டில் கூடினோம். பாலு வாயில் கட்டுப் போட்டிருந்தார்கள். முதல் நாள் ரவியின் அம்மாவும் என் மாமியும் அவனைத் தி.நகர் மருத்துவமனைக்கு அழைத்துப் போய் கோரைப்பல்லைப் பிடுங்கிவிட்டிருந்தார்கள். அனைவரின் அம்மாக்களும் ஸ்ரீதரின் அப்பாவும் வந்திருந்தார்கள். ஸ்ரீதர் எங்களுடன் அவ்வளவாகச் சுற்றவில்லையெனினும் அவன் வீட்டிலும் அழைத்திருந்தார்கள். பூசாரி தணிகாசலம், குருவன் இருவரும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இன்னொரு முண்டாசு ஆசாமி. முண்டாசின் முகத்தையே பார்க்க முடியவில்லை.

ரவியின் வீட்டில் பேயோட்டும் ராசிச் சடங்கு செய்யப் போவதாகச் சொன்னார்கள். ஈசுவின் நடவடிக்கைகள், இறந்த ஆட்டுக்குட்டி, பாலு-ஈசு நெருக்கம், ஈசுவின் பேய்வெறி, பாலுவின் பல் வளர்ச்சி எல்லாம் சேர்ந்து இனி எதையும் சாதாரண நிகழ்வாக ரவியின் அம்மாவால் எடுக்க முடியவில்லை.

“காட்டேறி வந்திருச்சும்மா” என்றான் குருவன். “கருப்பாவும் வெளுப்பாவும் உலாத்துது.. பச்சைப் புள்ளங்க ரொம்பக் கவனமா இருக்கோணும்”

ரவி வீட்டு மாடியில் நாலு கம்பம் நட்டு ஒரு பெரிய ஜமக்காளத்தை கூரை போல் கட்டியிருந்தார்கள். தரையில் நாலடி விட்டத்துக்கு ஒரு வட்டம் வரைந்திருந்தார்கள். வட்டத்தின் வெளியே நான்கு திசைகளிலும் எடையான பாறாங்கல் நாலு வைத்திருந்தார்கள். கல்லில் கரிக்கட்டியினால் ஒரு முகம் வரைந்திருந்தார்கள். ஒரு முகத்தை மஞ்சளிலும் இன்னொரு முகத்தைக் குங்குமத்திலும் மாற்றிப் பூசியிருந்தார்கள்.

வட்டத்தையொட்டி ஒரு முக்கோணம் வரைந்திருந்தார்கள். முக்கோணத்தின் மூலைகளில் அரிசிமாவு குவித்திருந்தார்கள். மாவைக் குழியாக்கி ஒவ்வொரு குழியிலும் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்திருந்தார்கள்.

வட்டத்தின் முன்னும் முக்கோணத்தின் முன்னும் ஒற்றைப் புதுச் செருப்பு வைத்திருந்தார்கள்.

அருகே இரண்டு ப்லேஸ்டிக் வாளிகளில் மஞ்சள் கலந்தத் தண்ணீர். ஒரு கூடையில் பிரித்து வைக்கப்பட்டிருந்த வேப்பிலைக் கொத்துகள். இன்னொரு சிறு கூடையில் பத்துப் பதினைந்து முழுதும் கனியாத எலுமிச்சைப் பழங்கள். நாலைந்து கிண்ணங்களில் குங்குமம், மஞ்சள் பொடி, விபூதி, அரிசிப்பொறி. அதையொட்டி அவசரமாக இழைக்கப்பட்ட இரண்டு மரப்பொம்மைகள். கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு விரிசல் முறக்கூடை. உள்ளே கோழிக்குஞ்சு திரிவது துல்லியமாகத் தெரிந்தது. அருகே ஒரு சிறிய மண் சட்டி. அதன் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் இரண்டு துண்டுகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. தோசைக்கல் போல் ஒன்று. அருகே மெல்லிய இரும்புக் கொட்டுத்தடி.

மாடிக்கு வந்து இவற்றைப் பார்த்ததும் எனக்கு வயிறு கலங்கியது. ரவியின் அம்மா அழத் தொடங்கிவிட்டார். “என்ன மாமி இது.. பிராமண வீட்டுல இதெல்லாம் பண்ண வேண்டியிருக்கே..” என்று விசும்பினார்.

“அதனால என்ன மாமி.. இதுல பிராமணாளாவது சூத்ராளாவது.. காத்யாயினி தான் காட்டேறி.. நம்மக் குழந்தைகள் நல்லா இருக்கணும்னு தானே கழிப்பு செய்யறோம்?” என்றார் என் மாமி.

குருவன் “அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா.. நான் நெறிய பாப்பாரப் பேய் ஓட்டிகிறேன். மலையேறுனா முட்டும். கெட்டித்தயிர் கேக்கும். மசால்வடை துன்றியானு கேட்டா பாவக்கா வறுவல் கொணாறச் சொல்லும். இன்னான்ற நீ.. பேஜாருனாலும் இதெல்லாம் சவஜம்..” என்றதும், ரவியின் அம்மா ஓவென்று பலமாக அழத்தொடங்கினார்.

மாமி குருவனை அதட்டினார் “சும்மா இருக்க மாட்டே நீ? அம்மாவே நொடிச்சுப் போயிருக்காங்க.. நீ வேறே!”

பூசாரி பாலுவை வட்டத்தின் நடுவில் உட்காரச் சொன்னார். முண்டாசு ஆசாமியை அழைத்து முக்கோணத்தின் நடுவில் உட்காரச் சொன்னார்.

வட்டத்துள் பாலு சாதாரணமாகப் புன்னகைத்தான். அதுவே எங்களுக்குப் பயமாக இருந்தது. பாலுவின் பின்னே எங்களை வரிசையாக உட்காரச் சொன்னார். “பாத்து.. அரிச்சந்திரன் கல்லை உருட்டிறாதீங்கப்பா..”

“பாத்துப்பா..” என்றான் ஜேம்ஸ். எனக்கும் சாம்பாவுக்கும் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டோம்.

ஸ்ரீதரின் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? எல்லாம் உங்களால வந்த வினை. பேய் ஓட்டணும்னு எனக்கு என்ன தலையெழுத்து..?” என்று பொறிந்தார்.

ரவியின் அம்மாவும் பிடித்துக் கொண்டார். “வச்சு சாத்திருவேன் படவா” என்றார்.

பூசாரி அனைவரையும் சமாதானப்படுத்தினார். “பொறுங்கய்யா.. பொறுங்கம்மா.. சீக்கிரம் கழிப்பு நடத்திருவோம்.. பசங்க முக்கியம்.. கர்ப்பிணிகளையும் வயசுப் பிள்ளைங்களையும் தான் காட்டேறி.. சவைச்சு உறிஞ்சிருவா. நாம உஷாரா இருக்கோணும்.. கண்ணுங்ளா.. கலாட்டா பண்ணாமக் குந்தியிருக்கணும்.. ஆத்தாவுக்குக் கோவம் வந்துச்சினா நூலாக் கிழிச்சிருவா.. பெரியவங்க பேச்சைக் கேட்டு கம்னு இருங்கய்யா.. கவலைப்படாதீங்கம்மா.. அய்ரூடுன்றதால அடக்கமா செய்யுறோம்”.

கைப்பிடிச் சுவரோரமாக விரிக்கப் பட்டிருந்த இன்னொரு ஜமக்காளத்தில் அம்மாக்களும் ஸ்ரீதர் அப்பாவும் உட்கார்ந்தனர்.

பூசாரியும் குருவனும் எங்கள் எதிரே அமர்ந்தார்கள்.

“அரிசி மாவு இருக்குதா?” “து” என்ற குருவன் அரிசிமாவைக் காட்டினான்.
“எலுமிச்சை?” “து”
“செருப்பு?” “து”
“காட்டேறி கபாலம்?” “து” என்றக் குருவன் மரப்பொம்மைகளைக் காட்டினான்.

பூசாரி, “கண்ணுங்ளா.. அனாவசியமா வாயைத் தொறந்து பேசாதீங்க. பாலுக்குள்ற இருக்குற காட்டேறியைக் கழிச்சுப் போட்டதும் அவருக்கு எல்லாம் சரியாயிரும்.. உங்களைச் சுத்தியிருக்குற காத்துக் கருப்பும் கழிஞ்சிரும்” என்றார்.

என் மாமி, “காட்டேறி இனிமே இந்தப் பக்கமே வரப்படாது பூசாரி” என்றார் கண்டிப்பாக.

குருவன் மறித்து, “அதெப்படிமா? காட்டேறி பூஜை பௌர்ணமில தானம்மா செய்ய முடியும்..” என்றான்.

பூசாரி எல்லாரையும் அடக்கினார். “அம்மா.. இது கழிப்பு பூசம்மா. பௌர்ணமி நாலாம் சனிக்கிழமை. அதுவரைக்கும் கழிப்பு உங்க வீட்டுக்கும் இந்தப் பிள்ளங்களுக்கும் ஒரு பாதுகாப்பு. எல்லையம்மா வந்து காத்திருப்பா. சனிக்கிழமை அந்தப் பொண்ணு மேலே வந்திருக்கும் காட்டேறியை ஓட்னதும் எல்லாம் சரியாயிரும். காட்டேறிக்கு இன்னொரு பிறவியே வராம ஓட்டிறுவோம்” என்றார். “இனி யாரும் பேசாதீங்க”

பாலு தன் வாயில் இருந்தக் கட்டைக் காட்டி “என்னால் எப்படிப் பேச முடியும்?” என்று சைகை செய்தான், ரவியின் அம்மா முறைப்பதையும் பொருட்படுத்தாமல்.

குருவன் தோசைக்கல்லையும் இரும்புத் தடியையும் எடுத்துக் கொண்டான். பூசாரி ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துக் காற்றில் வீசியபடி திடீரென்று உரத்தக் குரலில் தொடங்கினார். குருவன் தோசைக்கல்லை இடது கையால் உயர்த்திப் பிடித்துக் கொண்டு கொட்டுத்தடியினால் தட்டினான். “முனீஸ்வரன் அருள வேணும்”. தட்டு. “அங்காளம்மமன் அருள வேணும்”. தட்டு. “அரிச்சந்திரன் வரவேணும்” தட்டு. “அமைதியைத் தரவேணும்”. தட்டு. “வா.. ஆத்தா”. தட்டு. “சீக்கிரம் வா ஆத்தா”. தட்டு. “கேடழிக்க வா ஆத்தா”. தட்டு. “பீலியம்மா நீலியம்மா சுடுகாட்டுக் காளியம்மா சீக்கிரம் வாடியம்மா…” தட்டுக்கேற்றவாறு பூசாரி டப்பாங்குத்து மெட்டில் பாடத் தொடங்கினார்.

கிண்ணங்களில் இருந்த குங்குமம் மஞ்சள் பொடியை எடுத்து பாலு மீதும் முண்டாசு மீதும் தூவத் தொடங்கினார். குருவன் காட்டேறிக் கபாலங்களை எடுத்து வட்டத்துக்கும் முக்கோணத்துக்கும் இடையில் பாலம் போல் வைத்தான். பூசாரி ஒரு வேப்பிலைக் கொத்தை அதன் மேல் வைத்தார்.

மறுபடி பாட்டு. தட்டு.

திடீரென்று பாலு அசைந்தான். பூசாரி வேப்பிலைக் கொத்தால் அவன் முகத்தை லேசாக வருடினார். பிறகு வேகமாக அவன் முகத்தை வேப்பிலைக் கொத்தால் சுற்றிச் சுற்றி முண்டாசு இருந்தப் பக்கமாக வீசினார். பக்கெட்டில் இருந்து ஒரு குவளை நீரை பாலுவின் தலையில் கொட்டினார். “வா.. காட்டேறி.. வந்துரு.. சோறும் பொறியும் தாரேன்.. கோழியும் கெடாவும் தாரேன்.. வா நீலியம்மா சூலியம்மா சுடுகாட்டுக் காளியம்மா…” என்றபடி சற்றும் எதிர்பாராமல் செருப்பால் பாலுவின் கன்னத்தில் அறைந்தார். முண்டாசு குதித்து உட்கார்ந்தான். “ஈஈஈ” என்றான்.

“வந்துட்டா.. வந்துட்டா.. யார் வீட்டு ராணியம்மா நீ?”

எங்களால் நம்ப முடியவில்லை. பாலு அசையவே இல்லை. முண்டாசு பேசத் தொடங்கினான். புரியவில்லை.

“தென்னாட்டு ராசாத்தியா? வடநாட்டு மவராணியா? யாரம்மா நீ? அடையாளம் காட்டு” என்று வேப்பிலையால் தொடர்ந்து பாலு முகத்தை வருடி முண்டாசு மீது எறிந்து கொண்டிருந்தார் பூசாரி.

குருவன் பழக்கூடையிலிருந்த ஒவ்வொரு எலுமிச்சைப் பழத்திலும் கட்டைவிரலை நறுக்கென்று குத்தியெடுத்தான். கொஞ்சம் மஞ்சள் குங்குமம் திணித்துப் பூசாரியின் முன் வைத்தான்.

பூசாரி பாலுவைக் கன்னத்தில் அறைந்தார். “ராணி யாரு சொல்லு.. மருவாதியா சொல்லு.. அரிசிப்பொறி தாரேன்.. வெளியே வா தாயே”.

இந்த முறை முண்டாசு பேசியது தெளிவாகக் கேட்டது. பெண் குரலில் பேசினான். “அரிசிப் பொறி குடு. பாயசம் குடு”

குருவன் முண்டாசை செருப்பால் அறைந்தான். “குடுத்தா போயிருவியா?”

பூசாரி ஒரு குவளை நீரை முண்டாசு மேல் வீசினார். “இவங்களை விட்டுரு.. அந்தப் பொண்ணைப் பிடிச்சிக்க.. பௌர்ணமி ராவுக்கு வா. கெடா ரத்தம் தாரேன்”

பாலு திடீரென்று முனகினான். முண்டாசு தலையை முன்னும் பின்னும் ஊஞ்சல் போல் ஆட்டிக் கொண்டிருந்தான்.

குருவனைப் பார்த்துத் தலையசைத்தப் பூசாரி என் மாமி பக்கமாகத் திரும்பி, “அய்யா.. அம்மா.. இப்ப வாடை மாத்தப் போறோம்.. காட்டேறிப் பித்தம் தெளியணும்.. அய்ரு வூடுன்றதால அளவாச் செய்யுறோம்.. பிடிக்கலேனா கிழே போயிருங்க.. இல்லாப்னா மூஞ்சைத் திருப்பிங்கம்மா.. இடையில எந்திரிக்கக் கூடாது” என்றார். யாரும் எழுந்திருக்கவில்லை. எங்களுக்கோ சுவாரசியம் கூடிப் போனது.

பூசாரி “ம்ம்” என்றார்.

குருவன் கூடையை விலக்கி உள்ளிருந்தக் கோழிக்குஞ்சை லாவகமாக எடுத்தான். காட்டேறிக் கபாலத்தின் மீது வைத்துப் பிடித்துக் கொண்டான். கோழிக்குஞ்சின் மீது மஞ்சள் குங்குமம் கரித்தூள் தடவினார் பூசாரி. கோழிக்குஞ்சை இடது கையால் உயர்த்திப் பிடித்தபடி, தனியாக இருந்த மண்சட்டியை எடுத்துக் கபாலத்தின் மீது வைத்தான் குருவன். கும்பத்தேங்காய் வைப்பது போல் சட்டியின் நடுவில் கோழிக்குஞ்சை உள்ளிருத்திப் பிடித்தான்.

பூசாரி இடுப்பிலிருந்து ஒரு கத்தியை எடுத்து மஞ்சள் தண்ணீரால் கழுவித் துடைத்தார். குங்குமத்தை அப்பி குருவனிடம் கொடுத்தார். குருவன் கோழிக்குஞ்சின் கழுத்தில் சருக் என்று துரிதமாகச் சீவினான். ‘கீங்’ என்று கீச்சிட்டு ஒடுங்கியது குஞ்சு. தேங்காய் மூடி பிளந்து இளநீர் விழுவது போல் கோழிக்குஞ்சின் உடலிலிருந்து ரத்தம் கசிந்துச் சட்டியில் கொட்டத் தொடங்கியது. சில நொடிகள் பொறுத்து பூசாரி தலையாட்ட, கோழிக்குஞ்சைச் சிவப்புத் துண்டில் நன்றாகச் சுற்றி மறுபடிக் கூடைக்குள் வைத்தான் குருவன். கத்தியை மஞ்சள் நீரில் கழுவித் துடைத்து பூசாரியிடம் திருப்பினான்.

பூசாரி சட்டியை முண்டாசின் முன் வைத்தார். முண்டாசு ரத்தத்தை எடுத்து இரண்டு கைகளிலும் முழங்கை வரை பூசிக் கொண்டான்.

குருவன் சட்டியை மற்ற சிவப்புத்துண்டால் மூடி போல் கட்டிக் கூடைக்குள் வைத்தான். பிறகு தோசைக்கல்லையும் கொட்டுத்தடியையும் எடுத்துக் கொண்டு நிறுத்தாமல் தட்டத் தொடங்கினான்.

ஒரு நிமிடம் பொறுத்து, “ராசா முடியைத் தேடு ராசா..” என்றான் முண்டாசு. மிக இனிமையானப் பெண் குரல்.

பூசாரி இடுப்பிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டு சரேலென்று பாலுவின் அருகில் சென்றார்.

“எந்த முடியில தங்கியிருக்கே தாயி?” என்று பாலுவின் தலையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

“தேடு ராசா” என்றான் முண்டாசு.

தோராயமாக ஒரு கற்றையைப் பிடித்த பூசாரி, “நீ ஓடுனா ராசா முடியுல யாரு தங்குவா ராசாத்தி?” என்றார்.

குருவன் விடாமல் தட்டிக் கொண்டிருந்தான்.

“அந்த அங்காள பரமேசுவரி ஓடியாறா.. அவ தங்கியிருப்பா” என்றான் முண்டாசு.

“ஏமாத்துறியாடி.. என்ன மசுருக்கு உன்னை நம்புறது?” என்று பூசாரி முண்டாசின் முகத்தில் அறைந்தார்.

“இல்லே.. விட்டுர்றேன்.. எனக்குக் கடா வேணும்” என்றான் முண்டாசு.

சரேலென்று பாலுவின் முடிக்கற்றையை வெட்டினார் பூசாரி. பாலு மயங்கி விழுந்தான். முண்டாசு ஏதோ முனகியபடி குறுகினான். குருவன் வாளித் தண்ணீரை அப்படியே முண்டாசு மேல் கொட்டினான். அரிசிமாவு கரைய அதையெடுத்து அவன் மேல் சோப்பு போல அப்பினான். “எல்லாரும் கண்ணை மூடிக்குங்க” என்றான்.

நாங்கள் கண் திறந்த போது முண்டாசைக் காணோம். கோழிக்கூடையையும் காணோம்.

பூசாரி ரவியின் அம்மாவை அழைத்து, “அம்மா.. பையனை கூட்டிட்டுப் போய் படுக்க வைங்கம்மா. காட்டேறி உலாத்தக் கிளம்பிட்டா. இனி பலி கொடுத்தப் பெறவு தான் மலையேறுவா. ஆனா பாலுத்தம்பிக்கு இனி தொல்லை தரமாட்டா” என்றார். எங்களைப் பார்த்து, “பசங்களா.. எந்திரிங்க.. இனி கவனமா இருக்கணும் தெரியுதா?” என்றார்.

பிறகு பாறாங்கற்களைச் சுட்டி ரவியின் அம்மாவிடம், “இதா இந்த அரிச்சந்திரன் கல்லு நாலும் உங்க வீட்டு நாலு மூலைல வச்சிருங்க.. பௌர்ணமி முடிஞ்சதும் சுடுகாட்டுல எறிஞ்சுறலாம். அதும் குருவன் செஞ்சுருவான். அவனுக்கு பத்து ரூவா குடுத்துருங்க” என்றார்.

அத்தனை அம்மாக்களையும் வரிசையாக அழைத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்தார். பழத்தில் குருவன் செய்திருந்த கட்டை விரல் ஓட்டையில் மஞ்சள் குங்குமத்துடன் பாலுவின் முடியும், உடைந்த காட்டேறிக் கபால மரத்துண்டும் செருகியிருந்தது. “அம்மா.. இந்த எலுமிச்ச.. கழிப்புக்கு.. இதை உங்க வீட்டு வாசல்ல குழி தோண்டிப் புதைக்கணும்.. தா குருவன் செஞ்சிருவான். அதுக்கு அஞ்சு ரூவா தனியா குடுத்துருங்க.. நீங்க பழத்தைத் தொட்டுக் கொடுத்தா போதும்.. கை வாசம் ஒட்டணும்” என்றார்.

பிறகு ஆளுக்கு மூன்று பழங்களைத் தனியாகக் கொடுத்தார். “அம்மா.. இந்த எலுமிச்சங்க.. காவலுக்கு.. ஒரு பழத்தை வீட்டு நெலப்படியில கட்டிவைங்க. ஒரு பழத்தை சாப்பாட்டுல கலந்து உள்ளுக்கு எடுத்துருங்க.. கடைசி பழத்தை பூசைல வச்சுருங்க பௌர்ணமி வரைக்கும்” என்றார். “மறந்துறாதீங்க.. காட்டேறி உலாத்திட்டிருப்பா.. காட்டேறி சூனியத்தை பாலுத்தம்பிக் கிட்டேயிருந்து வாங்கிட்டுப் போயிட்டான் முண்டாசு.. காட்டேறி இனி உங்க வீட்டுப் பக்கம் வரமாட்டா.. பௌர்ணமி ராத்திரி ஏரியம்மன் பேயோட்டத்துல அந்தப் பொண்ணோட உசிருலந்தும் காட்டேறியை விரட்டிறுவோம்.. அது வரையிலும் ரொம்பக் கவனமா இருக்கோணும்”.

4

கழிப்பின் உடனடி விளைவு, ஸ்ரீதரின் பிரிவு. எங்கள் வட்டத்திலிருந்து நிரந்தரமாக விலகிக் கொண்டான். ஈசுவைக் காணோம். தகவல் தெரிந்து கொள்ள வழியில்லாமல் போனது. அவளை “வீட்டோடு வச்சிருப்பாங்க” என்றார் தணிகாசலம். பாலுவைப் பற்றியும் எங்களைப் பற்றியும் கடைத்தெருவிலும் பிற இடங்களிலும் விசாரிக்கத் தொடங்கினார்கள். ரவியின் வீட்டில் கலவரமாக இருந்ததேயொழிய, எங்கள் வீடுகளில் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. சிலுவையில் இறந்தபின் இயேசு பிழைத்து வந்ததைச் சொல்லி, ஜேம்சின் அம்மா இறந்தவர் அத்தனை பேரும் அரூபமாகத் திரிவதாகவும் பொன்னாளுக்குக் காத்திருப்பதாகவும் சொன்னார். எல்லாருமே ஆண்டவரின் பிள்ளைகள்தான் என்பதால் ரத்தக்காட்டேறியைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை என்றார். நாங்கள் பயந்தோம்.

எங்கள் வழக்கத்தில் எதுவும் மாறவில்லை. மறுநாள் பிற்பகல் வழக்கம் போல் சிந்தாளம்மன் கோவிலில் சேர்ந்தோம். கோவில் பின்புறச் சுவரோரமாக இருந்த மஞ்சள் வட்டத்தில் ஒரு எருக்கம்பூக் கொத்தையும், இரண்டு கண்ணாடி வளையல்களையும் வைத்திருந்தார்கள். காட்டேறித் தடம். பௌர்ணமி வரையில் யாரும் அருகே போகமாட்டார்கள். கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, நான் சாம்பா ஜேம்ஸ் ரவி நால்வரும் சீட்டாடிக் கொண்டிருந்தோம். பாலு வரவில்லை. பல் பிடுங்கிய வலியில் துடித்தபடி வீட்டிலேயே கிடந்தான்.

“பாலுவுக்கு எப்டிறா இருக்கு?” என்றான் சாம்பா.

“வாயெல்லாம் செம்த்தியா வீங்கிருக்குடா. நைட்டு பூரா உளறிட்டிருந்தான். மாமா இன்னிக்கு வந்து பாலுவை கூட்டிட்டுப் போனாலும் போவாரு” என்றான் ரவி.

“டேய்! பௌர்ணமி வரைக்கும் இங்கதாண்டா இருக்கணும்.. காட்டேறி உலாத்திட்டிருக்கா.. பாலுவைப் பாத்தா பிடிச்சுக்குவா..அப்படி அவன் தப்பிச்சிட்டான்னு வை.. நீதான்..” என்ற ஜேம்ஸ், “ராசாத்தி!” என்று உரக்கக் கூவித் திடீரென்று ரவியின் முடியைப் பிடித்தான். நடுங்கி வீறிட்டான் ரவி. சாம்பாவும் ஜேம்சும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

“ஏண்டா.. நீங்க வேறே…” என்றேன். ரவி உண்மையிலேயே ஆடிப்போய்விட்டான்.

மதியம் வழக்கம் போல் சாராய நீர் மோர் பருகிவிட்டு சுவரோரமாகப் படுக்க வந்தார் பூசாரி. “கண்ணுங்ளா.. கவனமா இருக்கோணும்..”

“பூசாரிண்ணே.. யாரந்த முண்டாசு ஆளு?” என்றான் சாம்பா.

“கழிப்பு நடத்துனா காட்டேறி வாடையை வாங்கிட்டுப் போவ இன்னொரு ஆளு வேணும்.. நல்ல கெடாவான ஆளு.. வாடை பிடிச்சுகிட்டு காட்டேறி வருவா.. வந்தா காட்டேறியை அடக்கி வைக்க தெகிறியம் வேணும்.. பாலுத்தம்பி பச்சப்புள்ள.. தாங்காது.. பாலுத்தம்பியை அக்குள்ள வச்சுகிட்டுப் போயிடுவா காட்டேறி.. அதான் முண்டாசைக் கொண்டாந்தோம்.. பௌர்ணமி மட்டும் மறைவா இருப்பான்..”

“எங்கிருந்து பிடிச்சீங்க?.. அந்தாளு மூஞ்சைக் கூடப் பாக்க முடியலே..”

“இதுக்கெல்லாம் வேத்தூரு ஆளு கொணாறணும்.. காட்டேறிக்கு அடையாளம் தெரியாம இருக்கணும்ல? முண்டாசு குன்னத்தூர் வெட்டியான்.. எப்பவும் கொணாறது தான்.. சுடுகாட்டுலயே இருப்பான்.. காட்டேறி கிட்டே வரமாட்டா”

“பாலுவோட அப்பா வராரு இன்னிக்கு.. பாலுவைக் கூட்டிட்டுப் போயிடுவாரு பூசாரிண்ணே”, வத்தி வைத்தான் ஜேம்ஸ்.

“அய்யோ.. அப்படி செய்யக்கூடாது கண்ணுங்ளா.. பாலுத்தம்பி இங்கயே இருக்கோணும்.. ஊர் எல்லையத் தாண்டுனா கழிப்புக் காவல் பொசுக்குனு போயிரும்.. காட்டேறி பின்னாலயே சுத்திட்டிருப்பா.. கப்புனு பாஞ்சிருவா.. அம்மா கிட்டே கன்டிசனா சொல்லுப்பா.. நானும் பொழுது சாஞ்சு வூட்டுக்கு வந்து சொல்றேன்.. இப்ப கண்ண சுத்துது..” என்றபடிப் புரண்டு படுத்தார்.

“டேய் ரவி.. நான் சொன்னேன்ல?” என்று கண்ணடித்தான் ஜேம்ஸ்.

செய்தியைச் சொல்ல ரவி வீட்டுக்குக் கிளம்பினோம். ரவியின் அம்மா எங்களைப் பார்த்ததும், “பாலு இல்லியே? உங்களைத் தேடிட்டுப் போறதா சொன்னானே?” என்றார்.

வந்த விஷயத்தைச் சொன்னோம். “அண்ணா நாலு மணிக்கெல்லாம் வந்துருவான்.. அவங்கிட்டே சொல்லி பாலுவை இங்கயே இருக்கச் சொல்றேன்.. அதுக்கப்புறம் அவன் பாடு அவன் பிள்ளை பாடு. தலையெழுத்து!” என்றார்.

“நாங்க பாலுவைத் தேடுறோம் மாமி” என்று கிளம்பினோம். பம்மல் வட்டாரங்கள் முழுதும் ஒரு மணி நேரத்துக்கு மேல் சைக்கிளில் சுற்றித் தேடினோம். திரும்பி வருகையில் காய்கறிக்கடைக் குமாருடன் பாலு பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். “டேய்.. வீட்டுக்கு வாடா” என்று அதட்டினான் ரவி.

என்னுடைய சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டான் பாலு. “பின்னால உக்காருடா” என்றான் என்னிடம். “வீட்டுக்குத் தானடா? வாங்க..” என்று கிளம்பினான். குமார் கடையிலிருந்து ரவி வீடு அரை மைலாவது இருக்கும். ஜெட் வேகத்தில் பறந்தான் பாலு. பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கு எலும்பெல்லாம் கழண்டு போனது. நான் கதறக் கதறச் சிரித்துக் கொண்டே சைக்கிள் ஓட்டினான் பாலு. மனித வேகமே அல்ல. செத்தாலும் பரவாயில்லை என்று சிவன் கோவில் திருப்பத்தில் குதித்து விட்டேன். கைகளில் சிராய்ப்புடன் எழுந்து உட்கார்ந்தேன். பாலு சிவன் கோவிலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மற்றவர்கள் வந்தார்கள். “என்னடா ஆச்சு? எங்கடா அவன்?” என்றான் சாம்பா.

இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். “த்தா.. ஓட்டாண்டா..மனுசனேயில்லடா.. பேயாட்டம்ல வண்டி ஓட்டுறான்?” என்றேன் கடுப்புடன். ரவியிடம் “டேய்.. நிச்சயமா பாலுவுக்கு என்னவோ ஆயிருச்சுடா” என்றேன்.

ரவி வீட்டு வாசலில், பாலு உட்கார்ந்திருந்தான். எங்களைப் பார்த்துச் சிரித்தான். என்னிடம், “என்னடா பயந்தியா?” என்றான் இயல்பாக. எனக்கு வந்த ஆத்திரத்தில் சரமாரியாகத் திட்டினேன்.

எங்களிடம், “என்னானு தெரியலடா.. வாய் துருதுருனுச்சு.. தனியா வேறே இருந்தனா..உங்களைத் தேடிட்டு வந்தேன்.. காய்கறிக் கடை குமாரைப் பாத்தனா.. அவனோட போனேன்” என்றான்.

வெளியே வந்த ரவியின் அம்மா, “எங்கடா போனே? அண்ணா வரவரைக்கும் இங்கயே இருடா” என்று அதட்டிவிட்டு உள்ளே போனார்.

“இவ எங்கடா இங்க வந்தா?” என்றான் பாலு.

“என்னடா இது எங்கம்மாவை மரியாதை இல்லாம..” என்றான் ரவி கோபமாக.

“இல்லடா.. அதோ பாருடா.. நம்மளையே பாத்துட்டிருக்கா.. திலகம் தானே?”

“எங்கடா..” என்று சுற்றுமுற்றும் பார்த்தோம். எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.

“ஓடறா பாருடா” என்றான் பாலு. எனக்கு எதுவும் தெரியவில்லை. எட்டிப் பார்த்த ஜேம்சும் சாம்பாவும் “அட.. அது யாரோடா” என்றான்.

பூசாரி சொன்னதை அவனிடம் சொன்னோம். “டேய்.. பௌர்ணமி வரைக்கும் இங்கயே இருடா..”

“ரைட்டு.. எனக்கு மயக்கமா இருக்குடா.. தூங்கணும்” என்று உள்ளே போனான் பாலு. “சாயந்திரம் பாக்கலாம்டா..படம் போறோமில்லே?” என்று ரவியும் அவன் பின்னே போக, நாங்கள் கிளம்பினோம்.

வழியில் காய்கறிக்கடைக் குமார் வந்து கொண்டிருந்தான். எங்களை மறித்தான். “தொரெ.. பாலுக்கு கழிப்பு செஞ்சாங்களா.. மெய்யாலுமா?” என்றான்.

“ஆமா”

தலையிலடித்துக் கொண்டான். “எங்கூட்டு கோழிக்குஞ்சுங்க நாலைக் கடிச்சுப் போட்டான்பா.. அதான் அவசரமா ஓடியாந்தேன்.. கழிப்பு பலிக்கலே.. உடனே அவங்க வூட்ல சொல்லி அவனைக் கட்டிப்போட்டு திரும்ப கழிக்கச் சொல்லு.. சாயந்திரம் நானே வந்து சொல்றேன்.. மொதல்ல எங்க வூட்டுக்கு காவல் வைக்கணும்..” என்றான்.

குமார் விலகியதும், “வேறே வேலை இல்லடா.. டேய்.. நைட்டு படம் போவறதுக்கு ரெடியாவணும்டா.. வேலியிழுத்துக் கட்டலின்னா எங்கப்பா சினிமா போவக்கூடாதுன்வாரு” என்றான் சாம்பா.

அன்றிரவு பல்லாவரம் லட்சுமி தியேடரில் சினிமா போகத் திட்டம் போட்டிருந்தோம். பாடாவதிப் படம். ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் ட்ரெய்லர் காட்டுவதாக ஒரே பரபரப்பு. அதனால் போக நினைத்தோம். லதா என்று ஒரு புது நடிகையை “செம கட்டை மச்சி” என்று ஏற்கனவே உசுப்பேத்தியிருந்தார்கள்.

“ஒண்ணு செய்வோம்.. உங்க வீட்டு வேலியை மொதல்ல கட்டுவோம்.. பிறகு ரவி வீட்டுக்குப் போவோம்” என்றான் ஜேம்ஸ். எல்லாவற்றுக்கும் தீர்வு வைத்திருப்பான். மாலை ஆறு மணிவரை மூன்று பேருமாக சாம்பா வீட்டு வேலியை இழுத்துக் கட்டினோம். தட்டிவேலி ஏறக்குறைய சுவர் போல வந்ததைப் பார்த்த சாம்பாவின் அப்பா, சந்தோசத்துடன் எங்கள் மூவருக்கும் சினிமா டிகெட் வாங்கப் பணம் கொடுத்தார்.

ரவி வீட்டுக்குப் போகும் வழியில் ஜேம்ஸ் மெள்ள, “டேய்… மதியம் யாரையோ பாத்து பாலு என்ன சொன்னான்? திலகம்னு சொன்னான்ல? அவனுக்கு எப்படிரா திலகத்தைத் தெரிஞ்சிருக்க முடியும்? இங்க இருந்துகிறோம், நமக்கே தெரியாது..” என்றான்.

ரவி வீட்டு வாசலில் ஒரு குதிரை வண்டி நின்றிருந்தது. பல்லாவரம் ஸ்டேஷன் முத்திரையுடன். பாலுவின் அப்பா வந்திருந்தார். அறிமுகம் செய்து கொண்டதும், “நீங்கள்ளாம் படிச்சவங்க தானே? இந்த மாதிரி காட்டுமிராண்டிப் பழக்கமெல்லாம் அனாகரீகம் மட்டுமில்லே, ஆபத்துனு உங்களுக்குத் தெரியாதா? உங்கப்பாம்மா இதுக்கு ஒத்துக்கிட்டாங்களா? பம்மல்னா சரியாத்தான் இருக்கு..” என்று எங்களை ஒரு பிடி பிடித்தார்.

ரவியின் அம்மா குறுக்கிட்டார். “அவங்களை ஏன் கோவிச்சுக்குறே அண்ணா? பாலுவை விடச் சின்னவா..” என்று எங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். “டேய் துரை.. அந்த பூசாரி என்னடா சொன்னார்?” என்று என்னை மாட்டிவிட்டார்.

“வந்து.. பௌர்ணமி வரைக்கும் பாலு எங்கயும் போகக்கூடாது..”

“பேத்தல்..” என்றார். குதிரைவண்டிக்காரனை அழைத்தார். “இந்தாப்பா.. இந்தப் பெட்டியை எடுத்துட்டுப் போய் வண்டில வை”

“சரிண்ணா.. அப்புறம் உன் இஷ்டம்” என்றார் ரவியின் அம்மா, தொண்டை கரகரக்க.

“உன் மேலே எனக்கு ஒரு வருத்தமும் இல்லடி.. இதெல்லாம் பேத்தல்.. பாலுவுக்கு ஒண்ணும் இல்லே.. பயப்படாதே” என்றார். பாலுவை அழைத்து, “டேய், போலாம் வாடா.. பிராட்வே போய் பஸ் பிடிக்கணும். லேட்டாச்சு பார்” என்றார்.

அவர்கள் வீட்டுப்படியில் இறங்கும் பொழுது, கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்கள் பூசாரியும் குமாரும். “ஐரம்மா.. ஐரம்மா..”

பாலுவைப் பார்த்துவிட்டு, “ஐயா.. உடனே உள்ற ஓடு” என்றார் பூசாரி.

“என்னய்யா இது? யாருயா நீங்க?” என்றார் பாலுவின் அப்பா.

“சாமி.. வெவகாரம் முத்திருச்சு சாமி.. அம்மா.. புள்ளய உள்ளாற கூட்டிட்டுப் போங்க” என்ற பூசாரி சற்று நிதானித்து, “யம்மா.. முண்டாசு மதியம் செத்துட்டாம்மா.. தலையைத் திருகிப் போட்டிருச்சும்மா காட்டேறி” என்றார்.

பாலுவின் அப்பா புரியாமல் விழித்தார். ரவியின் அம்மா அலறாத குறையாக, “என்னாச்சு?” என்றார்.

“குன்னத்தூர் பாமணி சுடுகாட்டுல போலீசு பாத்துச் சொல்லிச்சு. முண்டம் ஒரிடத்துலயும் தலை இன்னொரு இடத்துலயும் கெடந்துச்சாம். மூஞ்சுலயும் ஒடம்புலயும் ஓனாய் கீறினாப்ல வெளாறாம்.. பட்டப் பகல்ல அதும்.. நான் கேள்விப்பட்டதும் ஒடனே ஒடியாந்தேன். பாலுத்தம்பில ஏறி மதியம் நாலஞ்சு கோழிங்களை வேறக் கடிச்சுப் போட்டுறுச்சாம்..”

“நான்சென்ஸ்” என்று ஏகத்துக்குக் கத்தினார் பாலுவின் அப்பா. ஜேம்ஸ் சாம்பா நான் ரவி நால்வரும் பயத்தோடும் சுவாரசியத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தோம். “இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.. நாங்க கிளம்புறோம்”.

வேகமாக வெளியே ஒடிய பூசாரி, அதே வேகத்தில் திரும்பி வந்தார். “யம்மா.. அரிச்சந்திரன் கல்லுங்க எங்கம்மா? காணோமே?” என்றார்.

“காணோமா? அதை யார் எடுத்துப் போட்டா?” என்றார் ரவியின் அம்மா.

“என்ன அத்தே… நீ தானே கல்லு ரெண்டையும் எடுத்துத் தூக்கிப் போடுனு சொன்னே?” என்றான் பாலு நிதானமாக.

“நான் எங்கடா சொன்னேன்?”

“மதியானம் இவங்களைத் தேடிட்டுப் போனப்போ நீ வெளில நின்னிட்டிருந்தே.. பாலு.. இந்தக் கல்லைத் தூக்கியெறினு சொன்னியே? ஞாபகமில்லே?” என்ற பாலுவைத் திடுக்கிட்டுப் பார்த்தார் ரவியின் அம்மா. “மத்தியானம் நீ ப்ரென்ட்சைப் பாக்கப் போறதா சொன்னப்போ, நான் கிணத்தடில தானடா இருந்தேன்?”

“காட்டேறி போக்குக் காட்டியிருக்குமா” என்றார் பூசாரி.

“எனக்கு மனசே சரியில்லண்ணா.. நாளைக்கு கார்த்தாலயாவது போ.. உன்னைக் கெஞ்சிக் கேக்கறேன்” என்று எங்கள் முன்னிலையில் அழத்தொடங்கினார் ரவி அம்மா.

“என்ன இழவா போச்சு.. சரி சரி.. அழாதே.. நாளைக்குக் காலைல போறோம்” என்று பெட்டிப் படுக்கையை உள்ளே கொண்டு வரச்சொன்னார் பாலுவின் அப்பா.

“டேய்.. நான் படத்துக்கு வரலடா.. நீங்க போங்க” என்றான் ரவி.

சினிமா முடிந்து நள்ளிரவுக்கு மேல் மாமி வீட்டுக்கு வந்தால், வாசல் ரூமில் ரவி படுத்துக் கொண்டிருந்தான். “என்னடா?” என்றேன்.

“பாலு ஒரேயடியா வாந்தியெடுக்க ஆரமிச்சாண்டா.. ரத்தவாந்தி.. என்னென்னவோ பெனாத்தினான்.. அவனை தாம்பரம் சேனடோரியம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிருக்காங்க.. அம்மாவும் மாமாவும் அங்கதான் இருக்காங்க.. என்னை இங்க படுக்கச் சொல்லிட்டுப் போயிருக்காங்க..”

மறுநாள் பத்து மணிக்கு மேல் நாங்கள் நால்வரும் பாலுவைப் பார்க்கப் போனோம். ஆஸ்பத்திரியில் கொடுக்கச் சொல்லி பூரிக் கிழங்கு டிபன் கட்டிக் கொடுத்திருந்தார் மாமி.

பாலுவைத் தனிவார்டில் வைத்திருந்தார்கள். அவன் அப்பா உண்மையிலேயே அரண்டு போயிருந்தார். “நீங்க அவனைப் பாக்காதீங்க.. பயந்துடுவீங்க” என்றார். ரவியின் அம்மா விசும்பிக் கொண்டேயிருந்தார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்.. நாங்க அவனோட ப்ரெண்டு” என்று தைரியம் சொல்லிவிட்டு ஜேம்ஸ் தலைமையில் உள்ளே நுழைந்தோம். அவர் சொன்னது போலவே பாலுவைப் பார்க்கப் பயமாக இருந்தது. பலத்த மூச்சுடன் தூங்கிக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் இருந்துவிட்டு வெளியே வந்தோம்.

“டாக்டரைக் கடிச்சுட்டாம்பா.. கை விரலை படக்குனு கடிச்சு.. எங்க வீட்டுக் குழந்தையா இப்படி..” என்று ரவியின் அம்மா அழுது புலம்பினார்.

பாலுவின் மரணம், எங்கள் நட்பு வட்டத்தின் முதல் மரணம். சற்றுத் திக்குமுக்காடிப் போயிருந்தோம். பேயா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று எங்களுக்கு ஆராயத் தோன்றவில்லை. நடந்ததை நடந்தபடி ஏற்றுக் கொள்ளும் பருவம்.

இரண்டு நாள் பொறுத்து ரவி வீட்டுக்குப் போனோம். ஆறுதலாக ஏதாவது பேசுவோம் என்று போனால் அங்கே தணிகாசலமும் என் மாமியும் இருந்தார்கள். பூசாரி உண்மையிலேயே அழுதார். “சொன்ன பேச்சு கேக்காம போயிட்டம்மா.. கவனமா இருக்கோணும்னு எத்தினி சொன்னேம்மா.. அந்தத் திலகந்தேன் வேசமாடி பாலுத்தம்பியை கல்லைத் தூக்கிப் போடச் சொல்லியிருக்கோணும்.. அவளை என்னா செய்யுறேன் பாருங்கமா..” என்று ஆவேசத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

“என்ன செய்யப் போறீங்க?” என்றேன்.

மாமி குறுக்கிட்டு, “டேய்.. இன்னும் காட்டேறி கழிப்பு போகலைடா.. இப்போ ரவிக்கு எதுவும் ஆயிடக்கூடாதேனு பயப்படறா மாமி..” என்றார்.

“காட்டேறியை விரட்டிருவோம் கவலைப்படாதீங்கம்மா” என்ற பூசாரி, இன்னொரு கழிப்புக்கான ஏற்பாடுகளை விவரிக்கத் தொடங்கினார்.

அடுத்தப் பௌர்ணமியில் காட்டேறி பூசை நடந்தது. ஈசுவை உண்டு இல்லையென்று செய்துவிட்டார்கள். ஆட்டை வெட்டி அவள் தலையில் கவிழ்த்ததும், ஏரியம்மன் கோவிலிலிருந்து சிந்தாளம்மன் கோவில் வரை அவளை ஒரு கயிறு கட்டித் திமிறத் திமிற இழுத்து வந்ததும், ரத்தம் கலந்த பொங்கலை அவள் உருட்டி உருட்டி வெறியோடு விழுங்கியதும், பூசாரியின் பச்சை பச்சையான திட்டுக்களும், உடுக்காட்டமும் திகிலூட்டின. எனினும், ஆஸ்பத்திரிப் படுக்கையில் பாலுவைப் பார்த்த அதிர்ச்சிக்கு இணையாகவில்லை.

முகமும் கைகளும் வெடித்து, நெற்றியில் கொப்புளங்களுடன், வலது கண் வெறும் குழிக் காயமாக, ‘அஹ்ஹ்!’ என்று கட்டுவிரியன் போல் உரக்க மூச்சுவிட்டுக் கொண்டு ஒரு பதின்ம வயது நண்பன் படுத்திருந்தக் காட்சியின் அதிர்ச்சி எங்களைப் பல நாட்களுக்கு இரவில் உறைய வைத்தது.

பிற கோடைகளில் நிறைய விசித்திரங்கள் நிகழ்ந்திருந்தாலும், பாலுவுடன் கழித்த நாட்களின் அதிர்ச்சி விசேஷமானது.

– 2012/03/27

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *