பாரதி வாசம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 3,444 
 

பதினைந்து வருடங்களுக்கு முன் சொந்த ஊரை விட்டு சென்ற குடும்பம், பால்ய கால நண்பன் ரகுராமனை ஆடுதுறை கடைத்தெருவில் இவ்வளவு நெருக்கத்தில் பார்ப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கார்த்திகேயன். வயது 30.

கொஞ்சமாய் அதிர்ந்து அதிகமாய் ஆச்சரியப்பட்டான்.

ஆனாலும் அவன் இவனைக் கண்டுகொள்ளாமல் செல்வது கண்டு துணுக்குற்றான்.

காரணம் கால இடைவெளி , இல்லை…. ஏதோ சிந்தனை, பார்க்காதது, கவனிக்காதது என்பது இவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

தன் அருகில் நடந்து கடந்து செல்பவனை…

“ரகு ! “அழைத்தான்.

அவன் நின்று இவனைத் திரும்பி புரியாமல் பார்த்தான்.

“என்னயா கூப்பிட்டீங்க..?! “சந்தேகமாய்க் கேட்டான்.

“ஆமாம்…!”

“என்ன விசயம் ..?”

“என்னைத் தெரியலை..?”

“தெரியலை….”

“புத்தக்குடி அக்கரகாரம்தானே நீ..?”

“ஆமாம்…”

“நான் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சின்னப்பண்ணை பையன் !”

அவனுக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

“ஏ…! கார்த்திகேயா.??…!!….”சட்டென்று மலர்ந்து இரு கை விரித்து அணைத்தான்.

“மன்னிச்சுக்கோடா… மறந்துட்டேன். ! “அவன் இவன் கையைப் பிடித்துக் குலுக்கி வருத்தப்பட்டான். “எப்படி இருக்கே..? “கேட்டான்

“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே..?”

“நல்லா இருக்கேன் கலியாணம் ஆச்சா..?”

“இன்னும் இல்லே.”

“நன்றி, ஏன்…?”

“மனசுல ஒருத்தி இருக்காள். இன்னும் மறையல…”

“சரி விடு. இங்கே என்ன பண்றே..?”

“நான் அரசு ஆசியராய் இந்த ஊருக்கு சமீபமாய் மாற்றலாகி வந்தேன். இங்கே பக்கத்துல அரை எடுத்து தங்கி இருக்கேன்.”தன் இருப்பைச் சொன்னான் கார்த்திகேயன்.

“சரி. நம்ம ஊர் எப்படி இருக்கு. ?”

“நீங்க வந்த பிறகு அந்த தெரு அப்படியே இருக்கு. உங்க வீடு யார் கைக்கோ மாறி குடி இருக்காங்க. மத்தபடி முன்னேற்றம் இல்லே. நீ இங்கே எப்படி..?”. கேட்டான்

“பக்கத்து கிராமத்துல இருக்கேன்.”

“அப்படியா…? நீ லண்டன் போயிருந்ததாய் கேள்விப்பட்டேன்.”

“ஆமா. அங்கே அஞ்சு வருசமா வேலையிலிருந்தேன். பிடிக்காம திரும்பி இங்கே பக்கத்துல கிராமத்துல கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் பார்க்கிறேன்.”

“என்னடா சொல்றே..? “ரகுராமன் சொன்னது கார்த்திகேயனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“நிசம்தான் சொல்றீயா..? “திரும்பக் கேட்டான்.

“ஆமாம். இன்னைக்கு உனக்கு விடுப்புதானே..!”

“ஆமா..?”

“ஏதாவது வேலை இருக்கா..?”

“இல்லே..!”

“இருந்தாலும் நீ என்னோடு வந்துதான் ஆகனும். நான் என் விவசாய நிலம். கிராமத்தைச் சுத்திக்காட்டனும்..! “கண்டிப்பாகச் சொன்னான்.

“சரி. வர்றேன். அம்மா, அப்பா இருக்காங்களா..?”

“அம்மா இல்லே. அப்பா மட்டும் இருக்கார்.”

“அவர்….”

“தயக்கம் வேணாம். வா. “அருகில் நின்ற தன் வண்டியைத் தொட்டான் ரகுராமன்.

இருவரும் பயணித்தார்கள்.

“ஆமாம். நீ வேலையை விட்டு இங்கே வந்து எத்தனை வருசமாச்சு..?”

“தகவல் தொழில் நுட்ப படிப்பு படிச்சு முடிச்சு 25 வயசுக்கெல்லாம் லண்டன் வேலைக்குப் போனேன். அங்கே அஞ்சு வருசம் வேலை செய்தேன்.நல்ல சம்பளம். பிடிக்கலை. திரும்பிட்டேன். அங்கே இருந்த பண்ணை நிலத்தையெல்லாம் வித்துட்டு…மொத்தமா அஞ்சு வெளி நிலம் இங்கே வாங்கி விவசாயம் பார்க்கிறேன்.”

“சொந்த ஊர்ல விவசாயம் பார்க்காமல் இங்கே நிலம் வாங்கி விவசாயம் செய்ய காரணம்..?”

“இந்த ஆடுதுறை அருமையான ஊர். தெற்கே காவிரி. வடக்கே கொள்ளிடம். நிலத்தடி நீர்பாசனத்துக்குப் பஞ்சமே இல்லே. இது எல்லாத்தையும்விட முக்கிய காரணம் அப்பா..”

“அப்பாவா…?! …”காரணம் புரியாமல் விழித்தான் கார்த்திகேயன்.

“சொல்றேன். அப்பா அங்கே தான்தான் உசந்தவன், உசந்த சாதின்னு பழமையில் ஊறி கீழ் சாதி ,மேல் சாதி என்கிற பாகுபாடெல்லாம் பார்த்து யாரையும் தொடாமல், தொடவிடாமல்.. ஏன் பக்கத்து வீடான உன் வீட்டில் கூட என்னை பழவிடாமல் ரொம்ப ஆச்சாரமாய் இருந்தார். எனக்கு அப்பவே அது பிடிக்கலை. படித்த பிறகு. இன்னும் பிடிக்கலை. வேலைக்குப் போன பிறகு அதிகம் பிடிக்காமல் அந்த ஆச்சாரத்தின் மீதே வெறுப்பு.. இந்த மனுசனை மாத்தனும். அவர்கள் மத்தியிலேயே வாழ விடனும், சாதி, மேல்தட்டு, கீழ் தட்டு இல்லே என்கிறதைத் தெரியப்படுத்தனும்ன்னுதான் இந்த ஊர்ல நிலம் வாங்கி அப்படி அவரை வாழ விடுறேன். “என்றான்.

கார்த்திகேயனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“இதை நான் அந்த ஊரிலேயே செய்யலாம். இவரை அப்படியே பார்த்து பழக்கப்பட்ட அந்த மக்களும் ஒத்துழைக்க மாட்டாங்க. இவரும் அடம் பிடித்து வீட்டிலேயே முடங்கி விடுவார்ன்னு தெரிந்துதான் இடம் மாத்தினேன். “என்றான்.

கார்த்திகேயனுக்கு அவன் பாரதி வாசம் வெகுவாக பிடித்தது.

“அப்புறம் இன்னொரு விசயம்….?”

“என்ன…?”

“என் தங்கை சீதா கலியாணம் ஆகாமல் கன்னிப்பெண்ணாவே இருந்துடுவாளோன்னு கவலைப்பட்டேன். அது தீர்ந்தது.” என்றான்

“எப்படி..?”

“அதான் இத்தனை நாளாய் தேடின மச்சான் நீ மாட்டிக்கிட்டியே..?”

“ரகு…!! ” அலறினான்.

“உன்னைக் கடத்திக்கிட்டுப் போறதே…அவளிடம் காட்டத்தான்! அது எப்படிடா மச்சான் பதினைந்து வருசத்துக்கு முன்னாடியே யாருக்கும் தெரியாமல் அவளைக் கணக்குப் பண்ணி அவளை உன் நினைவாகவே இருக்க வைச்சே..?!!” ஆச்சரியமாகக் கேட்டான் ரகுராமன்

கார்த்திகேயன் பதில் சொல்லாமல் சமைந்தான்!!

வண்டி விரைவாக சென்று கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *