பாம்பு மனிதர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 6,646 
 
 

முயற்சியே எடுக்காமல், உழைக்காமல் நினைத்ததை, ஆசைப்பட்டதைப்பெறவேண்டும் என குறுக்கு வழியில் சென்று, பிறர் உழைத்துச்சேர்த்ததை தனதாக்கி வாழும் சூழ்ச்சி மனம் கொண்டவன் தான் மிகின்.

கரையான்கள் கடுமையாக உழைத்து தனக்கென வீடு கட்டும் அமைப்பைக் கொண்டவை. அக்கரையான்கள் கட்டிய புத்தெனும் வீட்டை அபகரித்து தான் வாழ பயன் படுத்திக்கொள்ளும் பாம்பு இனம். அப்படிப்பட்ட பாம்பின் குணம் கொண்ட மனிதர்களின் செயல்பாடுகள் யதார்த்தமாக உழைத்து சேமித்து மிச்சப்படுத்துபவர்களை அச்சப்பட வைக்கும்.

படிப்பிலும் நாட்டம் செல்லவில்லை. ஊரைச்சுற்றவும், யோசிக்காமல் செலவு செய்யவும் தந்தையின் பாக்கெட்டிலிருந்து கேட்காமலேயே பணத்தை எடுத்துக்கொள்வதும், தந்தை திட்டும் போது தான் எடுத்ததாக அவனது தாய் தன் கணவனிடம் மகனுக்காக திட்டு வாங்குவதும் மிகினுக்கு சாதகமாகிட திருடிச்செலவழிக்கும் அக்கெட்ட பழக்கம் அவனிடம் தொடர்ந்தது.

தேர்வு சமயத்தில் வேண்டுமென்றே வீட்டிலிருந்து பள்ளிச்சீருடை அணிந்து செல்லும் போதே வேறு உடை எடுத்துச்சென்று வெளியிடத்தில் உடை மாற்றி, ஊர் சுற்றி, பள்ளிக்குச்சென்று தேர்வு எழுதாமல் வந்ததால் தேர்ச்சி பெறாமல் போனதைக்கண்டு கவலை கொண்டு பள்ளியில் தந்தை விசாரிக்க, தேர்வே எழுதாமல் தன் மகன் தேர்ச்சி பெறாமல் போனது கண்டு கண் கலங்கினார். 

இனி படிப்பு வராது என்பதை உறுதி செய்து கொண்டு மகன் மிகினை நண்பர் ஒருவரின் மளிகைக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டார்.

பள்ளியில் படிக்கும் போதே மகினா எனும் உடன் படிக்கும் பெண்ணைக் காதலிக்கக் கட்டாயப்படுத்தி கத்தியால் கையை அறுத்துக்கொண்டதும், அவளது பெயரோடு தனது பெயரையும் சேர்த்து போர்டில் தானே எழுதி விட்டு யாரோ எழுதி விட்டார்கள் என பொய் பேசியதும் தெரிய வர நண்பர்கள் ஒதுங்கினார்கள். மகினாவும் ஒதுங்கினாள்.

மகனின் நிலையால் வேதனைப்பட்ட தாய் வசந்தி அருகிலுள்ள ஒரு ஜோதிடரிடம் அவனது ஜாதகத்தைக்காட்டி எதிர்காலம் பற்றிக்கேட்டாள்.

“இத பாருங்க வசந்தியம்மா உங்க பையன் பிறக்கும் போதே லக்னத்துல கேது இருக்கற மாதிரி அமைப்போட பிறந்துட்டான். ஒன்பது கிரகங்கள் இருக்குதுன்னா அதுல கேது தான் எல்லா கிரகங்களையும் விட வலிமையானது. அந்த கிரகம் லக்னத்துல நின்னா பெத்தவங்க பேச்ச மட்டுமில்ல. ஊருலகத்துல ஆரு பேச்சையும் கேட்க மாட்டாங்க. இதுக்கு குரு பார்வை இருந்தா பாதிப்பு குறையும். மாறா செவ்வாய் பாக்குது. கேள்வி கேட்டா பெத்தவங்கன்னு பாக்காம கை ஓங்கி அடிக்க வருவான். எனக்குத்தெரியும். நீ உன்ற வேலையப்பாத்துட்டு போன்னு மரியாதையில்லாம பேசுவான். உங்க தேவைக்கு போன் பண்ணினா எடுத்துப்பேச மாட்டான். அவன் தேவைன்னா நூறு தடவை கூட உடாம கூப்பிட்டே இருப்பான். சாப்பாடும் உங்களுக்கு இருக்கான்னு கேட்டு சாப்பிட மாட்டான். நாள் நட்சத்திரம் பார்க்காம  மட்டன், சிக்கன், மீன், முட்டை வேணும்னு கேட்பான். அதிகமா கடைல தான் சாப்பிடுவான்.பொண்ணுங்கள கட்டாயப்படுத்தி லவ் பண்ணச்சொல்லுவான். ஒரு பொண்ணுக்குத்தெரியாம இன்னொரு பொண்ணோடயும் பழகுவான். வயசுல பெரியவங்களோட நல்லா பழகுவான். அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவான். கல்யாணமே ரெண்டு, மூணுன்னு பண்ணறவங்க இந்த மாதர அமைப்பு உள்ளவங்க தான்னா பாத்துக்கங்களே… பாம்பு மாதர சீறிட்டு வந்து பேசறது உங்களுக்கு பயமா இருக்கும்….” 

“ஆமாங்க. நீங்க நேர்ல பாத்த மாதரியே சொல்லறீங்க. சில சமயம் இவன ஏண்டா பெத்தம்னு தோணுது. படிக்கவும் இல்ல. வேலைக்கும் ஒழுங்கா போறதில்ல. ரவுடிப்பசங்களோட சேர்ந்துட்டு ஊரச் சுத்தறான். ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணிக்கு ஊட்டுக்கதவத்தட்டறான். டெய்லியும் குடிச்சிட்டு வாரான். லைசென்ஸ் எடுக்காமயே பைக் ஓட்டறான். என் கிட்ட சட்டம் பேசாதேங்கிறான். இதெல்லாம் அவனோட அப்பனுக்குத்தெரியாம மறைச்சுட்டுதாம் போறேன். இதெல்லாம் அவருக்குத்தெரிஞ்சா அடிச்சே கொன்னு போடுவாரு. ஆரு செஞ்ச பாவமோ…. நிம்மதியே இல்லைங்க. இதுக்கு ஏதாச்சும் நல்ல பரிகாரம் இருந்தா சொல்லுங்க…” எனக்கூறி கண்ணீர் சிந்தினாள் வசந்தி.

ஜோதிடர் பரமசிவம் பரிகாரம் எனும் பெயரில் பலவித பொருத்தமற்ற பரிகாரங்களைச்சொல்லி மற்ற சிலரைப்போல் பணம் சம்பாதிப்பவரில்லை. எளிய வழிபாடுகளை கூறி நல்ல காலம் வரும் வரை பொறுமையாக இருக்குமாறு வழிகாட்டுவதால் அவரை முதல் முறை சந்திக்க வருபவர் தொடர்ந்து வருவார்.

“இத பாருங்க வசந்தியம்மா என்ன சத்துள்ள உரம் போட்டாலும் தொட்டாலே முள்ளால குத்தற கருவேலா மரம் பசி போக்கற மாமரமா மாறாது. அது போலத்தான் பரிகாரம். பரிகாரத்துலயே பெரிய பரிகாரம் என்னன்னா ஆடற மாட்ட ஆடிக்கறக்கனம், பாடற மாட்ட பாடிக்கறக்கனம்னு நம்ம முன்னோர்கள் சொன்ன மாதர அவனோட குணத்துக்கு தகுந்தமாதர நீங்களும் மாறிக்கோணும். உங்க ஆயுசுக்கும் ஊடு, காட்ட உங்க பையம் பேர்ல எழுதி வெச்சிரக்கூடாது. எழுதி வெச்சா உடனே வித்துப்போடத்தான் பார்ப்பான். அப்பறம் சொத்திருந்தும் சோத்துக்கில்லாம தெருவுல தான் படுக்கோணும். செத்துப்போவேன்னு மெரட்டிங்கூட சொத்தக்கேட்பான். அவன நம்பி ஜாமீன் போட்டா ஜாமீன் போடறவன் தான் கடன் கட்டோணும். நாஞ்சொல்லறது கடவுள் சொல்லற மாதிரி நெனைச்சிட்டு அதப்படி மனச உறுதியா வெச்சுக்கங்க” அறிவுரை சொன்ன ஜோதிடரிடம் நன்றி சொல்லி வீட்டிற்கு கிளம்பினாள் மிகினின் தாய் வசந்தி.

வீட்டிற்குள் காலடி வைத்ததும் பாத்திரங்கள் உருண்டோடும் சத்தம் அதிர்ச்சியளித்தது வசந்திக்கு.

“நீயெல்லாம் ஒரு பெத்த தாயா…?” உறுமினான் மிகின்.

“ஏஞ்சாமி….? என்னாச்சு….?”

“என்னாச்சா…? ஒன்னுமே ஆகல… அதுதான் கேட்டேன்.”

“என்ன ஒன்னுமே ஆகல…?”

“இன்னைக்கு என்ன கெழம…?”

“ஞாயித்துக்கெழம. அதுங்கூடத்தெரியாத முட்டாளா நானு…?”

“ஆமா நீ முட்டாள் தான். அடி மட்ட முட்டாள்”

“ஏண்டா இப்படிப்பேசறே…? ஒரு பெத்த தாயப்பாத்து இப்படியா பேசுவாங்க…?”

“ஏண்டி கழுத. இன்னைக்கு ஞாயித்துக்கிழம. ஆட்டுக்கறி எடுத்து ஆக்கி வெக்கோணும்னு தெரியாதா உனக்கு..‌? வாரம் பூராம் அந்த விரதம், இந்த விரதம்னு இட்லி, தோச, சப்பாத்தி, அரிசீம்பருப்புன்னு செஞ்சு வெச்சர்றே.‌‌..? இன்னைக்காச்சும் வாயிக்கு ருசியா சாப்பிடலாம்னு வந்தா இன்னைக்கும் பருப்பு, ரசம்னு பண்ணித்தொலைச்சிருக்கே. அதனால தான் சோத்தையும், பருப்பையும் தூக்கி வெளிய வீசினேன்…”

“டேய் பாவி…. ஏண்டீனாடா கேக்கறே…? கல்யாணமாயி இருபத்தஞ்சு வருசத்துல உன்ற அப்பங்காரன் ஒரு நாள்ல என்னைய இப்படி பேசியிருப்பாரா..‌? ஆக்கி வெச்ச அன்னத்த ஆராச்சும் தூக்கி வாசல்ல வீசுவாங்களா..‌? நீ எப்படிடா என்ற வகுத்துல வந்து பொறந்து தொலைச்சே…. கடவுளே…. பழனி ஆண்டவா…. ஒன்னு இவனத்திருத்து…இல்லேன்னா என்ற உசுரப்புடிங்கிக்கோ…” டக்கென தரையில் அமர்ந்து தேம்பி, தேம்பி அழுதாள்.

இந்த நேரம் தந்தை மாதவன் வீட்டில் நுழைய மனைவியின் நிலையையும், வீட்டில் பாத்திரங்கள் கிடப்பதையும் கண்டதும் மகனை முறைத்துப்பார்த்து கோபம் தலைக்கேற அருகில் கிடந்த சப்பாத்திக்கட்டையை எடுத்து கண்மூடித்தனமாக மிகினை அடித்துவிட, காலைப்பிடித்து கெஞ்சவே அடிப்பதை நிறுத்தியவர் தானும் கதறி அழுதார்.

அவர் இதுவரை அடிக்காமல் தற்போது அடித்தது தற்போதைய அவனது செயலுக்காக மட்டுமில்லை. கடந்த சில வருடங்களாக படிப்பு, வேலை, பணத்திருட்டு, கெட்டவர்கள் சேர்க்கை, குடிப்பது என அவனது ஒவ்வொரு செயலையும் பார்த்து, கோபத்தை அணையில் தேக்கிய தண்ணீரைப்போல் அடக்கி வைத்தவர், இன்று அவனது செயல் அவரது கோபமெனும் அணை உடையக்காரணமாகியது.

காலைப்பிடித்தவன் திடீரென கோபம் தலைக்கேற எழுந்தவன் “என்னை அடிக்கிறளவுக்கு வந்திட்டீங்களா…? உங்களப்பாரு நடு ரோட்ல பிச்சை எடுக்க வைக்கிறேன்” என கூறி விட்டு பைக்கை எடுத்து வேகமாக ஓட்டினான்.

ஒரு மாதம் வீட்டிற்கு வரவில்லை. நண்பனின் வீட்டில் தங்கியிருப்பதாக பெற்றோர் விசாரித்த போது தெரிந்து கொண்டு, அவனாக வரட்டும் அது வரை நிம்மதி என அப்படியே விட்டு விட்டனர். பாம்பு வீட்டிற்குள் வர வேண்டும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அது போலத்தான் பாவிகளின் நிலையும்.

மாதவன் தன் நண்பர் கணேசனை எதேச்சையாக கோவிலில் சந்தித்த போது” உன்ற பையன் அடிக்கடி எங்க பக்கத்து வீட்ல நைட்ல வந்து தங்கறதாக என்ற மனைவி சொன்னா. அது நல்ல இடம் இல்லையே மாதவா… அந்த வீட்டு பொம்பளை கொஞ்சம் அப்படி, இப்படி… சொல்லறதுக்கே கூச்சமா இருக்குது. தம்பையன் வயசுள்ள ஒரு பையனையே பணம் புடுங்க மாத்திட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். ஏற்கனவே அவ பையனோட பிரண்டுன்னு சொல்லிட்டு வந்த பையனை பெரிய கடன்காரனா மாத்தி சொந்தமா வீடு வாங்கீட்டு அவன வெளில அனுப்பிச்சவங்கதா ஆத்தாளும் மகனும். அவளோட லட்சணம் புடிக்காம புருசனும் கூட வாழல‌. சொல்லறத சொல்லிட்டேன். இனி உன்னோட இஷ்டம்” என நண்பன் சொல்லக்கேட்டதில் வானமே இடிந்து தன் தலையில் விழுந்தது போலிருந்தது.

விசயத்தை மனைவியிடம் சொல்ல வீட்டிற்கு சென்ற போது மிகின் வீட்டில் தலை கவிழ்ந்தபடி அழுது கொண்டிருந்தான். பக்கத்தில் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.

“ஏணுங்க நம்ம பையன்…. இல்லைங்க இந்த நாதாரி…. அவன் சபதம் போட்ட மாதிரியே நம்மள நடு வீதிக்கு கொண்டு வந்துட்டானுங்க….” கதறியழுத மனைவியை அணைத்தபடி என்னவென விசாரித்தார் மாதவன்.

“சார் உங்க பையன், உங்க வீட்டு பத்திரத்த வெச்சு அவனோட பிரண்டுக்கு வீடு வாங்க எங்க ஃபைனான்சுல கடன் வாங்கியிருந்தான். இப்ப கடன் கட்டறதுமில்ல.  வீட்டு மதிப்ப நாலு மடங்கு அதிகமா பொய் சொல்லி கடன் வாங்கியிருக்கான். நாங்க வீட்ட வித்திடலாம்னு இருக்கோம். இல்லேன்னா எங்களுக்கு நஷ்டமாயிடும்” என உள்ளே இருந்த நபர் கூற மயக்கம் வந்தவாறு கீழே படுத்துகொண்டார் மாதவன்.

ஒரு முறை வெற்றுப்பேப்பரில் தன்னிடம் கையெழுத்தை இதற்குத்தான் வாங்கியுள்ளான் தன் மகன் என்பது இப்போது தான் புரிந்தது. தற்போது மகன் மிகினை அடிக்கத்தோன்றவில்லை. மனம் சுக்கு நூறாக உடைந்து போனதால் அடிக்க உடலில் திறனும் இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *