பாத்தியதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,233 
 
 

1

“அண்ணா , இன்னும் எத்தனை மையில் தூரம் இருக்கிறது பட்டணம்?”

“கையில் ‘கெய்டை’ வைத்துக்கொண்டு என்னையா கேட்கிறாய்?”

“இல்லை, அண்ணா! நீ கொடுத்த பக்கம் தவறி விட்டது. புரட்டினால் புதிசு புதிசா எதெல்லாமோ வருகிறது. எடுத்துக் கொடேன்” என்று கெஞ்சுதலாக என் பக்கம் ‘கெய்டை’ நீட்டினாள் ஜானகி. பக்கத்தையும் எடுத்துக் கொடுத்து, சிறு குழந்தைகளுக்கு மணி பார்க்கக் கற்றுக்கொடுப்பது போல், ‘கெய்ட்’ பார்க்கச் சொல்லிக் கொடுத்தேன்.

ஜானகியை முதல் முதலாகப் புருஷன் வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண் டிருந்தேன். புறப்பட்ட இடத்திலிருந்து எழும்பூர் வரையில் உள்ள எல்லா ஸ்டேஷன்களையும் பார்த்துக்கொண்டு வரும் ஸ்வாரஸ் யத்தில் ஜானகி ஈடுபட்டிருந்தாள். முதல் முதல் செய்யும் நீண்ட தூரத்துப் பிரயாணத்தின் உற்சாகம் அவளுக்கு அதிகம் இருந்தது.

எனக்கும் தூக்கம் வராமல், ஜன்னல் கதவுக்கு வெளியே விளிம்பில் முகத்தை அமிழ்த்திக்கொண்டு, எதிரே தோன்றிய இருள் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கவிந்த இருளில் கண் ஒளியே இருளடைந்தது. குளிர்ந்த காற்று முகத்தில் குத்தி மூச்சுத் தடுமாற வைத்தது. வந்து போய்க்கொண் டிருந்த ஸ்டேஷன்களெல்லாம் ஜானகியின் மனத்தில் தாக்கல்’.

நான் ரொம்ப நேரமாக மௌனமாய் இருந் திருப்பேன் போல் இருக்கிறது. ஜானகி தன் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி மௌனத்தைப் போக்கினாள் ; ”என்ன அண்ணா , யோசனை பிரமாதமர்க? பேசவே வில்லையே! மன்னி ஞாபகம்” என்று குறும்புச் சிரிப்புக் கலந்த குரலில் கேட்டாள்.

“ஆமாம். நீ ராஜம் ஞாபகமாக இருப்பது போல்” என்று பளிச்சென்று சொல்லிவிட்டேன்.

ஜானகியின் புருவம் சுருங்கி உதடு பிதுங்கியது.

“போ அண்ணா!” என்று வெடுக்கென விழுந்து, நத்தை போல் தலையை உள்ளே இழுத்துக்கொண்டு, தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அடுத்த க்ஷணம் அதை மறந்து விட்டு, “ஊதக் காற்று அடிக்கிறது; கதவை மூடிவிடு” என்றாள்.

சிரித்துக்கொண்டே நான் ஜன்னலை மூடினேன். பஜானகி ! மன்னி ஞாபகமா என்று கேட்டாயே, அதில்லை …….” என்று இழுத்தேன்.

“பின்னே வேலையைப்பற்றியா?”

“இல்லை, உன்னைப்பற்றித்தான்.”

“என்னைப்பற்றியா?” என்று ஜானகி ஆச்சரியப்பட்டுக் கேட்டாள். நான், “ஆம்” என்று தலையை அசைத்தேன்.

“அங்கச்சியைப் பிரியணுமே என்று இருக்கோ?”

பாதி உண்மையை வெளிப்படுத்தி விட்டது ஜானகியின் அந்தச் சூக்ஷமக் கேள்வி.

“அது ஒரு காரணம். இன்னும் ஒன்று: புருஷன் வீட்டில் நீ எவ்வளவு சமத்தாக இருக்கப் போகிறாயோ என்பது.”

ஜானகி சிறிது கோபங் கொள்ளுகின்ற பாவனையைக் காட்டினாள். “பார்த்தாயா, எனக்கு அசட்டுப் பட்டம் கட்டுகிறாயே!” என்று கேட்டாள்.

“அதல்ல, ஜானகி. நீ நம்ம வீட்டில் சமத்தாக இருப்பதற்கும் புருஷன் வீட்டில் இருப்பதற்கும் வித்தியாசம் எவ்வளவோ உண்டு.”

“எப்படி?” என்று கேட்டாள் ஜானகி.

“நம் வீட்டில் உன் குணம் எல்லோருக்கும் தெரியும். அனுசரித்துப் போவார்கள். அங்கேயோ புது உறவுக்காரர்களிடம் நீ அனுசரித்துப் போக வேண்டும். அது கொஞ்சங் கஷ்டந்தானே?” என்று விளக்கினேன்,

ஜானகி கொஞ்சம் யோசனை செய்தாள். நான் சொன்னது அவளுக்குச் சரியாகப்பட்டது. “அண்ணா, நான் என்ன சின்னக் குழந்தையா இன்னும்? இது தெரியாதா?” என்று அலக்ஷியமாகவும், அனுபவமான பெண்ணின் கர்வத்துடனும் கூறினாள் – சாந்தி ஆகி ஒரு வாரத்தில் புருஷன் வீடு போகும் பெண்!

நான் சிரித்து விட்டேன். அது ஏளனமாகப் பட்டது ஜானகிக்கு. “நீயே பாரு. நான் எவ்வளவு சமத்தாக இருக்கப் போகிறேன், பாரேன்!” என்று கடகடவென்று வார்த்தைகளை உதிர்த்தாள், கூடை திறந்து புஷ்பங்கள் உதிர்வது போல.

“குருடனுக்குக் கண் தானே வேண்டும்!” என்பது தான் அதற்கு என் சுருக்கமான பதில்.

ஜங்ஷனுக்குள் வண்டி ஓய்ந்து வந்து நின்றது. ‘திருச்சிராப்பள்ளி!” என்று ஜன்னலுக்குத் தாவி ஓடினாள். ஜன்னல் கதவுகள் கீழே விழவும் மின்சார விளக்குகள் கண்ணைப் பறித்தன. பலவிதச் சப்தங்கள் உருப்படி இல்லாமல் காதுகளில் ஒரே சமயத்தில் தாக்கின. ஜானகி உற்சாகத்தில் இடுப்பு வரை ஜன்ன லுக்கு வெளியே நீட்டி, செயற்கை விநோதங்களை ரஸித்து, என்னையும் அதில் ஈடுபட இழுத்தாள் – முந்திய சம்பாஷணையை முழுதும் மறந்துவிட்டு. என் தேகம் ஈடுபட்டதே தவிர மனசு மறுத்து விட்டது.

2

“நான் என்ன சின்னக் குழந்தையா?” என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப மனசு ஞாபகப் படுத்திக்கொண் டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல் லாம் ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்ட ரெயில் இருட்டில் வகிடு எடுத்துக்கொண்டு சென்றது. அதே சமயம் இருள் நுரையை அலையடித்து ஒதுக்கிக் கொண்டு நில வொளி ஆகாசத்தில் பரவ ஆரம்பித்தது. என் மனத் திலும் பழைய நினைவுகள் பரவலாயின.

அன்று வரை ஜானகியோடு கேலி , வம்பு செய்வதே என் பொழுது போக்காக இருந்திருக்கிறது. அவளை அழவிட்டு ஒன்றுக்குப் பத்தாக வார்த்தைகள் வாங்கிக் கட்டிக்கொள்வதில் எனக்குப் பிரியம் அதிகம்.

ஒரு நாள் சம்பவம் : சமையல் பொறுப்பு அவளிடம் விடப்பட்டிருந்தது. சாதம் பதமாகும் சமயம். வாசலில் வம்பு வளர்த்துக்கொண் டிருந்த எங்களோடு பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்தாள், சமையல் ஞாபகம் கொஞ்சமும் இல்லாமல். எத்தனையோ தரம் எச்சரித்திருந்தும் மறந்து விட்டாள்.

யாரோ எனக்கு ஞாபக மூட்டி விட்டார்கள். ஜானகி பயத்துடன் சிரித்துக்கொண்டு உள்ளே ஓடி விட்டாள். நான் கூட வருவதைக் கண்டதும், “தப்பு , தப்பு. இனிமேல் இல்லை” என்று கெஞ்சினாள். கண்டிக்கும் பாவனையில், “அறையட்டுமா?” என்று தலைக்கு மேல் கையை ஓங்கி விட்டேன். அடிக்கும் உத்தேசம் அப்போது இல்லை எனக்கு.

கையை ஓங்கியது அவளுக்குத் துடுக்காகப் பட்டது போல் இருக்கிறது. தற்காப்புக்காக உயர்ந்த கை தணிந்தது. தொட்டு அடிக்க மாட்டேன் என்ற தைரியம் வந்தது. “இதோ, எனக்குக் கல்யாணம் ஆச்சு. தொடாதே!” என்று ஜயப் பார்வையுடன் எதிர்த்தாள்.

“ஹும்! அப்படி வேறு நினைப்பா?” என்று சொல்லிக்கொண்டே லேசாக இரண்டு தரம் தட்டி விட்டேன். அவள் வார்த்தைகளில் தொனித்த அந்த அந்நிய பாவம் எனக்குச் சரியாகப் படவில்லை. இத்தனை தாள் இருந்த உரிமை திடீரென இன்று இல்லையா என்று பட்டது.

ஜானகியின் கண்களில் ரோஷத்தினால் நீர் கூடி விட்டது. “இன்னும் அடியேன்!” என்று கசந்து கூறிக்கொண்டே கீழே உட்கார்ந்து அணைந்த அடுப்பில் ஊதத் தொடங்கினாள்.

என் அதிகாரத்தைச் செலுத்திவிட்டேன் என்று ஒருபுறம் திருப்தி. ஜானகி அதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கண் கலங்கியதைப் பார்த்த யின் என் மனசும் கலங்கிவிட்டது. மௌனமாக நின்று அவள் வேலையைக் கொஞ்சம் கவனித்தேன். ‘ஏன் அடித்தோம்?’ என்று தோன்றியது.

ஜானகி வைத்திருந்த கைக்கரண்டி பலமாகப் பாத்திரத்தடியில் பட்டது. அது அவள் மன நிலையைக் காட்டியது. ”மெள்ளக் கிண்டு. பாத்திரம் ஓட்டையாகப் போகிறது!” என்று கேலியாக அவள் கோபத்தை மாற்றப் பேசினேன். “நீ என் கூடப் பேசவேண்டாம், போ!” என்று ஜானகி கடுமையாக எச்சரித்தாள்.

“பின்னே ஏன் என்னிடம் சம்பிரதாயம் போட்டாய்?”

பதில் பேசவில்லை ஜானகி. இரண்டு உசிதமான வார்த்தைகள் பெறாமல் அந்த இடம் விட்டுப் போக மனம் வரவில்லை. “அடேயப்பா , பேசமாட்டாயோ?” என்று கேட்டேன், மனக் கலக்கத்தை மறைத்துக் கொண்டு. முரட்டுச் செய்கை மனத்தில் உறுத்தியது.

அதற்கும் பதில் இல்லை. அவளைச் சமாதானப் படுத்தவும் வேறு வழி தெரியவில்லை. கோபம் வந்தது. “சரி, எனக்கும் வைராக்கியம் செலுத்தத் தெரியும்!”
என்று சொல்லிக் கொண்டே சட்டெனத் திரும்பிப் புறப்பட்டேன்.

“எப்பவும் பேச மாட்டேன்னு சொன்னேனா?” என்று உடனே வாய் திறந்தாள் ஜானகி, எங்கே இனிப் பேசாமல் இருந்துவிடுவேனோ என்ற பயத்தில். நான் திரும்பிப் பார்க்கவும் அவள் திரும்பவும் சரியாக இருந்தது. “கோபம் ஓடிப் போச்சு” என்று பலமாகச் சிரித்துக் கத்தினேன். லேசாகச் சிரித்துவிட்டு, ஜானகி முகத்தைத் திருப்பிக்கொண்டாள். என் அதிகார கர்வத்தை அவள் அன்பு வார்த்தைகள் மட்டம் தட்டி விட்டன.

3

ஜானகியின் சிரிப்புக் கலந்த விளையாட்டு வீட்டில் சதா எதிரொலித்துக் கொண் டிருக்கும். அவள் கல கலத்த சிரிப்பு, பெண்மையின் அடக்கத்தையும் மீறிச் செல்வது போல் தோன்றும். அவ்வளவு கட்டுப் பாடற்ற உற்சாகம் !

“சாயந்திரத்திற்குள் பத்துப் பட்டை பஞ்சு பன்னித் தரவேண்டும், ஜானகி!” என்பேன். “என்னாலே முடியாது!” என்று கண்டிப்பாக ஜானகி மறுத்து விடு வாள். தப்பி ஓட வழி பார்ப்பாள். நான் வழி மறிப்பேன் சுதந்திரத்தைத் தடை செய்வது அவளுக்குக் கோப மூட்டும். “அடித்தாலும் மாட்டேன்!” என்று பிடிவாதமாகக் கீழே உட்கார்ந்து விடுவாள். என் முரட்டு அதிகார ஆயுதம் பலஹீனப்பட்டு விடும். மனசு சங்கடத்தில் ஆழும்.

“சரி, நானே பஞ்சு பன்னிக் கொள்கிறேன்” என்று வெறுத்துக் கூறி விட்டுத் தனியே உட்காருவேன். கொஞ்ச நேரம் ஜானகி யோசனை செய்வாள். பலவிதம் அவள் மனசில் அலை மோதும். என் மனசு கசிவது அவளுக்குப் பொறுக்காது. கோபத்தை மாற்ற முயலு வாள், நான் முயலுவது போலவே.

மெதுவாகக் கிட்ட வருவாள். நான் தனியே பஞ்சு பன்னுவது கண்களில் உறுத்தும். “ஐந்து பட்டைதான் பன்னித் தருவேன்!” என்று பேரம் ஆரம்பிப்பாள்.

“ஒரு பட்டை கூட வேண்டாம்!” என்று எடுத்தெறிந்து உதாசீனமாகப் பேசுவேன்.

என் கோபத்தைத் தணிக்க உறுதி கொண்ட மனசு அதை லக்ஷியம் செய்யாது. சட்டென்று ஒப்புக்கொள் ளவும் மாட்டாள். என் பிடிவாதத்தைக் கண்டு தொனி கொஞ்சம் குறையும். தாவி உட்கார்ந்து பஞ்சைக் கையில் எடுத்துக் கொண்டு, “சின்னப்பட்டையாகப் பத்துப் பன்னுவேன். பெரிய பட்டை போடக் கூடாது” என்று மறுபடியும் பேரம்.

“உன் இஷ்டம்; சம்மதமானால் செய்.”

“பார்த்தாயா? ஒரு வழிக்கும் வரமாட்டேன் என் கிறாய் என்று சிணுங்கிக் குறும்பாக முகத்தைப் பார்ப்பாள். நான் சிரிப்பை மறைக்க முயலுவேன்.

“பெரிய பட்டை போட்டால் உனக்குத்தானே கஷ்டம்! நன்றாக நூற்க வராது. எனக்கென்ன!” என்று என்னைக் கட்டுப்படுத்திவிட்ட வெற்றியுடன் பார்ப்பாள்.

“பின் ஏன் பேரம் பேசுகிறாய்?”

இருவரும் போட்டி போட்டுப் பஞ்சு பன்ன ஆரம் பிப்போம். “அவன் தான் உன்னைச் சதா வைகிறானே, அவனுக்குப் போய்ப் பஞ்சு பன்னிக்கொண்டு இருக்கிறாயே!” என்று வீட்டில் யாராவது கேட்டால், “பின்னே வேறு யார் பன்னித் தருவார்கள், நான் தரா விட்டால்? ஐயோ பாவமாய் இருக்கிறது!” என்று அனுதாபமாகவும் கேலியாகவும் சொல்வாள். இப்படி எத்தனையோ சம்பவங்கள்!

4

இன்று ஜானகி புருஷன் வீடு போகிறாள். சென்று போன நாட்களைப்போல் நாங்கள் இனி எப்போதும் சேர்ந்து இருக்க முடியாது. அந்தப் பாத்தியதை புதிதாக முளைத்த கணவன் என்பவனுக்கு மாற்றப்பட்டு விட்டது.

ஒரே கூட்டில் வளர்ந்து வந்த ஒரு தாய்க் குஞ்சு களிடையே அதுதான் முதல் பிரிவு – வேதனையின் எழுச்சி!

பதினைந்து வயது நெருங்கியும் இன்னும் அவள் பிஞ்சு மனசு முதிரவில்லை. உற்சாகத்துடன் அடித் தொண்டையிலிருந்து வார்த்தைகள் பீறிட்டுக் கிளம்பும், புருஷத் தொனியில். பாடிக்கொண்டே அலக்ஷியமாகப் பாத்திரத்தைத் தூக்கும் போது வழுக்கி உடைந்த பாத்திரங்கள் எத்தனை! ”எனக்கு என்ன பேர் வாங்கித் தரப் போகிறாளோ , புருஷன் வீட்டில் !” என்று அம்மா அடிக்கடி அங்கலாய்ப்பாள்.

இந்த விளையாட்டு மனசு எப்படிக் கட்டுப்படப் போகிறது என்பதைப்பற்றித்தான் என் மன வெழுச்சி. நான் ரஸித்தேன், அவள் விளையாட்டையும் கேலியையும். துடுக்குப் பேச்சைப் பொருட்படுத்த மாட்டேன். புருஷன் வீட்டில் ……. ? அவன் எப்படிப்பட்டவனோ? துடுக்கையும் விளையாட்டையும் தப்பாக அர்த்தம் செய்து கொண்டு விட்டானானால்? இந்த நினைப்பிலேயே கண்ணயர்ந்து விட்டேன் , கதவில் சாய்ந்து கொண்டு.

“விடிந்து போச்சு. எழும்பூர், அண்ணா!” என்று ஜானகி எழுப்பினாள்.

மெல்லிய திரை மூடி மங்கலாகத் தெரியும் ஓவியம் போல் இருந்தது வானவெளி. நீலமும் கருமையும் காணாத சாம்பல் நிற ஒளி எங்கும் பரவி நின்றது. கோதியிராத ஜானகியின் தலையும், நித்திரை காணாமல் புகைப்பட்டுக் கருத்துச் சீறிக் கிடந்த அவள் முகமும் அந்த மங்கலான சித்திரத்துக்கு உவமை தந்தன. ஜானகி முகம் கழுவிப் பளிச்சென்று ஆனபோது வான வெளியும் சாம்பல் நிறம் மாறிச் சூரிய ஒளியில் பிரகாசம் அடைந்தது. ஜானகியைப்பற்றிய நினைப்புத் தான் என் மனத்தில் இடைவிடாமல் சுழன்று கொண்டிருந்தது.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *