பாசம் போகும் பாதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 8,098 
 
 

“ அசோக்!….எனக்கு ரெண்டு வாரமா உடம்புக்குச் சரியில்லே!……காலையிலே எழுந்திரிக்கும்போதே ஒரே தலை சுத்தல்…….உள்ளங்கால் பூராவும் ஒரே எரிச்சல்……வாயில் புண் வந்து ஆற மாட்டேன்கிறது……..ஒரு வாரமா நெஞ்சு வலியும் இருக்குடா!….வீட்டிலே ஒரு வேலையும் செய்ய முடியலே!…டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்!…..” என்று முணகிக் கொண்டே தன் மகன் அசோக்கிடம் சொன்னாள் பூரணி.

“ சரியம்மா!….நீ ஒண்ணும் கவலைப் படாதே!…….டி.பி. ரோட்டிலே ஒரு கார்டியாலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் இருக்காராம்!…….அவர் ரொம்பக் கெட்டிக்காரர் என்றும் ,அவர் இது விஷயத்தை கவனிச்சாச் சீக்கிரம் சரி செய்திடுவாரென்று எங்க ஆபிஸிலே எல்லோரும் சொல்லியிருக்காங்க!……நான் இன்னைக்கு சாயந்தரமே அவரிடம் உன்னை கூட்டிக் கொண்டு போறேன்!…..கவலைப் படாதே!……நீ ரெடியா இரு!…”

“ நான் வேண்டுமானால் அத்தையை நாம ரெகுலராப் பார்க்கும் டாக்டர் சாம்பசிவத்திடம் கூட்டிக் கொண்டு போய் காட்டி விட்டு வரவா?….” என்று கேட்டாள் அசோக்கின் மனைவி துர்கா.

அதெல்லாம் வேண்டாமடி!……அம்மாவுக்கு அறுபத்திஐந்து வயசுக்கு மேலாச்சு…….இந்த வயசிலே எல்லா டெஸ்டுகளையும் எடுத்து தரவா பார்த்திட்டா நல்லது!……அம்மாவை நீ ரெடி பண்ணி வை….நான் இன்னைக்கு நாலு மணிக்கே வந்திடறேன்!….வந்தவுடன் அம்மாவை உடனே கிளினிக்கிற்கு கூட்டிக் கொண்டு போறேன்!….” என்று சொல்லி விட்டு ஆபிஸுக்கு கிளம்பிப் போனான் அசோக்.

மாலையில் சரியாக நாலு மணிக்கெல்லாம் வந்து விட்டான் அசோக். பூரணியும் தயாராக இருந்தாள்.

பாசம் போகும் பாதைஉடனே அம்மாவை அழைத்துக் கொண்டு, ஆர்.எஸ். புரம் டி.பி. ரோடு ‘கிளினிக்’கிற்குப் போனான். அவன் நினைத்தபடி, உடனே டாக்டரைப் பார்க்க முடியவில்லை! சிட்டியிலேயே நெம்பர் 1 டாக்டர் அவர். அதே சமயம் காஸ்ட்லியான டாக்டரும் கூட!……..அதனால் அங்கு கூட்டம் இருக்காது என்று அசோக் நினைத்துக் கொண்டான்.

அசோக்கிற்கு இன்னும் உலக அனுபவம் பத்தாது!……..தங்கம் பவுன் இருபத்திரண்டாயிரத்தைத் தாண்டி விட்டது……..புதன், வெள்ளிக் கிழமைகளில் ஒப்பணக்கார வீதியில் இருக்கும் நகைக் கடைகளில் போய் பார்த்தால் தெரியும்!…..காலையில் காய்கறி மார்க்கெட்டில் இருக்கும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும்!…..எதையும் எந்த விலை கொடுத்தும் வாங்க ஒரு கூட்டம் ரெடியா இருக்கு!

பாவம்! அசோக் அம்மாவை டாக்டரிடம் காட்டி விட்டு, வீடு திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகி விட்டது! துர்கா அவர்களோட வருகைக்காக ஆவலோடு காத்திருந்தாள்.

“ டாக்டர் அத்தையைப் பார்த்து விட்டு என்ன சொன்னாங்க!…..”

“ அதையேண்டி கேட்கிறே?……அவ்வளவு சீக்கிரமா டாக்டரைப் பார்க்க முடியலே!…..அம்மா தனக்கு இருக்கும் கஷ்டங்களை எல்லாம் சொன்னாங்க!…..அங்கே இருக்கும் அஸிஸ்டெண்ட் டாக்டர் பிளட் டெஸ்ட், சுகர் டெஸ்ட், இ.ஸி.சி., எக்கோ, என்று நிறைய டெஸ்டுகளுக்கு எழுதுக் கொடுத்திட்டார்….அதையெல்லாம் எடுத்து, அவைகளின் ‘ரிஸல்ட்’களை வாங்கிட்டுத் தான், பெரிய டாக்டரையே பார்க்க முடிந்தது!…..அதே சமயம் அங்கு போனது ரொம்ப நல்லதாப் போச்சு!….அம்மாவுக்கு சுகர், பிரஸர், கொலஸ்ட்ரால், அல்சர் எல்லாம் இருக்கு……எல்லாம் ஆரம்பக் கட்டம் தான்!……அப்படியே கவனிக்காம விட்டா …ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் சிறுநீரகப் பாதிப்பு எல்லாம் வருமாம்!….நல்ல மருந்தா எழுதிக் கொடுத்திருக்கிறார்…அவைகளை சாப்பிட்டா இரண்டு மாசத்திலே சரியாகி விடுமாம்!…அதே சமயம் சுகருக்கும், பிரஸருக்கும் ஆயுசுக்கும் மருந்து சாப்பிட வேண்டுமாம்!…”

“ பீஸ் கூட எக்கச் சக்கமா வாங்கியிருப்பாங்களே?……” என்று கேட்டாள் துர்கா.

“ டெஸ்ட், டாக்டர் பீஸ், மருந்து என்று எல்லாம் சேர்ந்து ஐயாயிரம் ஆச்சு!….ஆரம்பத்திலேயே கவனிச்சிட்டது நல்லதாப் போச்சு….இல்லாட்டா பெரிய பிரச்னை எல்லாம் வருமென்று சொல்கிறார்…ரெண்டு மாசத்திற்கு மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார்…அதையும் வாங்கிட்டு வந்திட்டேன்..இரண்டு மாசம் இந்த மருந்தை சாப்பிட்ட பிறகு, உடம்பு எப்படி இருக்கிறதென்று பார்த்து விட்டு தேவைப் பட்டா வேறு மருந்து எழுதித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்..ரண்டு மாசம் கழித்து கட்டாயம் வந்து காட்டச் சொன்னார்!…

அம்மா!….நீங்க மருந்து மாத்திரையெல்லாம் எடுத்துக் கொண்டு உங்க ரூமிற்குப் போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்க!…ரெண்ட் மாசம் மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்காச் சாப்பிடுங்க…அதன் பின் மீண்டும் டாக்டரிடம் போய் வரலாம்!….” என்று அசோக் சொன்னான்.

“ சரியடா!…எனக்கும் களைப்பா இருக்கு….நான் போய் படுத்துக்கிறேன்…..” என்று சொல்லி விட்டு பூரணியும் அவளுடைய ரூமிற்குப் போனாள்.

பூரணியின் மகன் அசோக் ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா வில் மானேஜர் உத்தியோகம் பார்க்கிறான். நல்ல சம்பளம்.

பூரணி, அரவிந்தன் தம்பதிகளுக்கு அசோக் ஒரே மகன். வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் மிகவும் கஷ்டப் பட்டு அவனை நன்கு படிக்க வைத்து, கௌரவமான உத்தியோகத்தையும் தேடிக் கொடுத்து, நல்ல இடத்தில் பெண் பார்த்து கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். அவர்கள் தங்கள் கடமையில் ஒரு குறையும் வைக்க வில்லை!

அந்தக் குடும்பம் நிம்மதியாக மூச்சு விட்ட நேரத்தில் தான், அந்த எதிர்பாராத விபத்து நடந்து விட்டது!

மார்க்கெட்டிற்கு டூ வீலரில் போன அரவிந்தன் மேல் லாரி மோதி, அந்த இடத்திலேயே உயிர் போய் விட்டது!

பூரணிக்கு ஏற்பட்ட மன புண் வடுவாக ஆற சில வருடங்களே ஆகி விட்டன! அதன் பின் வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அதில் தன்னை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் பூரணி!

எல்லா வேலைகளையும் மாமியாரே இழுத்துப் போட்டுச் செய்தது துர்காவுக்கு ரொம்ப வசதியாகப் போய் விட்டது!

பூரணிக்கு அறுபத்திஐந்து வயசாகி விட்டது. இதுவரை தலைவலி, காய்ச்சல் என்று கூட அவள் படுத்ததில்லை! டாக்டருக்கு, மருந்துக்கு என்று நயா பைசா செலவு செய்ததில்லை! கடந்த ஒரு மாதமாகத்தான் ஒரு வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து போய் விட்டாள்!

அசோக், துர்காவுக்கு தங்கள் ஒரே மகன் பிரசன்னா மேல் கொள்ளைப் பிரியம்! அவன் ஆசைப் பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்த்தார்கள்.

துர்காவுக்கு வீட்டில் அதிக வேலைகள் இல்லாததால் அவள் பிரசன்னா படிப்புக்கு உதவியாக இருந்தாள்.

அவன் ஆசைப்பட்டான் என்று அவனுக்கு தனியாக ஒரு கம்பியூட்டர் வாங்கிக் கொடுத்து, இண்டர் நெட் கனெக்ஷன் வாங்கிக் கொடுத்தது ரொம்ப தப்பாகப் போய் விட்டது!

எந்த நேரமும் பேஸ்புக், விளையாட்டு என்று கம்பியூட்டரே கதியாக என்று கிடந்தான். அவனை வழிக்கு கொண்டு வர முடியாமல், அசோக்கும், துர்காவும் தவியாகத் தவித்தார்கள்.

பூரணி தான் தன் பேரனிடம் பிரியமாகவும், பலசமயம் அவன் எதிர்காலம் பாழ் பட்டுப் போய் விடும் என்று விளக்கி கெஞ்சிச் சொல்வாள்.

பாட்டியின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல், அதற்காகவே பிரசன்னா புத்தகத்தை எடுத்துப் படிப்பான். பூரணியும் அவனுக்குப் பிடிச்சதை எல்லாம் சமைத்துப் போடுவாள்!

பிளஸ் டூ பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது! பூரணிக்கு இன்றைய கல்வி முறை எல்லாம் நன்றாகத் தெரியும்! பிளஸ் டூ மார்க்கை வைத்துத்தான் நல்ல காலேஜ், நல்ல கோர்ஸ் எல்லாம் கிடைக்கும் என்பது அவள் அறியாதது அல்ல!

பிரசன்னா அம்மா, அப்பா செல்லம்! அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும். அதனால் ஜாலியாக இருந்து பழகி விட்டான். அவன் படிப்பதே பாட்டியின் அன்புத் தொல்லைக்குத்தான்!

பூரணி தன் பேரன் விஷயத்திலும் தன் கடமையை சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப் பட்டாள்! அதற்காக நேரம், காலம் பார்க்காமல் கஷ்டப் பட்டு உழைத்தாள். எப்படியோ அவன் பிளஸ் டூ தேர்வு வரை சமாளித்து விட்டாள்.அதன் பிறகு தான், அவளால் முடியாமல் போய் விட்டது! அதனால் தான் தன் மகன் அசோக்கிடம் சொல்ல நேர்ந்தது!

டாக்டரும் முழு நம்பிக்கை கொடுத்து விட்டார். ரெண்டு மாசத்தில் சரி செய்து விடலாமென்று! அந்த நம்பிக்கையோடு இருந்தாள் பூரணி.

அன்று பிளஸ் டூ தேர்வு ரிசல்ட் வந்து விட்டது. பிரசன்னா 920 மார்க் வாங்கி பாஸ் செய்திருந்தான். ஓரளவு சந்தோஷம் தான்!

கோவையில் நெம்பர் 1. காலேஜ் அவிநாசி ரோட்டில் இருக்கிறது. அந்தக் காலேஜுக்கு நாட்டிலேயே நல்ல பெயர் உண்டு. அந்தக் காலேஜில்தான் பிரசன்னாவைச் சேர்க்க வேண்டுமென்று அசோக், துர்கா இருவருமே ஆசைப் பட்டார்கள்!

அந்த காலேஜில் மெரிட் கோட்டாவில் சேர வேண்டுமானால் 1100 மார்க் வாங்கியிருக்க வேண்டும். 920 க்கு நினைத்துக் கூட பார்க்க முடியாது!

மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்க்க அசோக் இரண்டு வாரமாக அலைந்து கொண்டிருந்தான். அசோக்கும், துர்காவும் எந்த நேரமும் அது பற்றிய ஆலோசனையில் இருந்தார்கள்.

அசோக் ரூமிற்கு காப்பி கொடுத்த டம்ளர்களை எடுக்கப் போனாள் பூரணி. உள்ளே துர்காவும், அசோக்கும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ என்னங்க!…..பிரசன்டா அட்மிஷன் என்னாச்சுங்க?…..”

“ அதை ஏன் கேட்கிறாய்?……மானேஜ்மெண்ட் கோட்டா என்று போனா டொனேசன் மூணு லட்சம் கேட்கிறாங்க! அதுக்கும் சிபாரிசு!….அது தான் யோசிக்கிறேன்!…”

“ இதில் யோசனை என்ன இருக்கு?……நமக்கிருக்கிறது ஒரே பையன்!…..அவனுக்குச் செய்யாம வேற யாருக்கு நாம் செய்யப் போறோம்?…”

“ அதுக்கில்லையடி!…..வெறும் டொனேசனோடு நிற்காது!……அந்தக் கோட்டாவில் சேர்த்தா பீஸும் ஒரு லட்ச ரூபாயிற்கு மேலே வரும்!….அதுமட்டுமல்ல பிரசன்னா காலேஜ் அட்மிஷன் கிடைச்சா அவனுக்கு ஒரு லட்ச ரூபாயில் பைக் வாங்கித் தரவேண்டுமென்று ஏற்கனவே சொல்லி வைத்திருக்கான்!…அது தான் யோசனையா இருக்கு!….”

“ இதில் யோசனையே வேண்டாம்!….அவன்ஆசைப் பட்டதை வாங்கிக் கொடுத்தாத்தான் அவன் நன்றாகப் படிப்பான்! டிகிரி முடிச்சப்பறம் எம்.பி.ஏ. படிக்க வைக்க வேண்டும்!….”

“ அதற்குப் பிறகு அவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாளா ஆசை!…..இப்படியே ஒவ்வொன்னாப் போனா நம்மால் சமாளிக்க முடியுமா என்று தான் யோசிக்கிறேன்!…..”

“ நீங்க அதற்காக கவலைப் படாதீங்க!….இனிமே நாம சிக்கனமா இருந்தா சமாளிச்சிடலாம்!.. நம்ம வீட்டிலே தேவை இல்லாத அநாவசிய செலவுகள் ரொம்ப அதிகம்!….அவைகளை எல்லாம் கட் பண்ணிட்டா சமாளிச்சிடலாம்!…”

“ அதுவும் சரி!…இனி நம்ம வீட்டிலே ஆடம்பரச் செலவோ, அநாவசியச் செலவோ எதுவும் இருக்க கூடாது!…..”

பூரணி அவர்கள் பேச்சுக்கு நடுவில் ரூமில் புகுந்து காப்பி டம்ளர்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.

கடந்த இரண்டு மாசமா டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிட்டு வந்ததால், பூரணியின் உடல் நிலை நன்கு தேறி விட்டது. பழையபடி எல்லா வேலைகளயும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தி விட்டாள்.முன் தினமே மருந்து, மாத்திரை எல்லாம் தீர்ந்து போய் விட்டது. டாக்டரிடம் போனால் ஒரு நாள் ஆகி விடும்! பாவம், அசோக்கிற்கு வீண் சிரமம் எதற்கு? மறு நாள் தானே டாக்டரிடம் போய் செக்கப் செய்து மருந்து, மாத்திரைகள் வாங்கி வந்து விடுவதென்று முடிவு செய்து கொண்டு படுக்கைக்குப் போனாள் பூரணி.

மறுநாள். பூரணி குளித்து விட்டு புடவை மாற்றிக் கொண்டு தயாராக வந்தாள். அசோக் அலுவலகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

அதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு.

“ அப்படியா?…வேறு வழியில்லையா?….சரி அட்மிஷனுக்கு ஓ.கே. சொல்லி விடுங்க!….மூணு லட்சம் தானே!……நான் பணத்தோட அங்கு வருகிறேன்!…”

அம்மா தன்னிடம் பேசுவதற்காக காத்திருப்பதைப் பார்த்தான்.

“ என்னம்மா?……” என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டான்.

“ அசோக்!… டாக்டர் என்னை இன்று மறு ‘செக்கப்’ பிற்கு வரச்சொல்லியிருக்கிறார்…..என் உடம்பு இப்ப நல்லாத் தானிருக்கிறது…ஆர்.எஸ்.புரம் தானே நானே போயிட்டு வந்திடறேன்…நீ எதற்கு அநாவசிமா லீவு போட வேண்டும்?”

அம்மா!…உனக்கு நான் சொல்ல மறந்திட்டேன்!….அந்த டாக்டர் சரியில்லையம்மா!..அதை இதைச் சொல்லி காசு புடுங்குவதிலேயே குறியா இருக்கிறார்!…என்னோடு சேலத்தில் படிச்ச நண்பன் பாபு நம்ம ஜி,எச். க்கு மாறுதலாகி வந்திருக்கிறான். அவனிடம் உன்னைப் பற்றிச் சொன்னேன்! உனக்கு வந்திருக்கிற பிரச்னை வயசான எல்லோருக்கும் வருகிற பிரச்னை தானாம்!….”

“ அப்படி தெரியலையடா அசோக்!……அந்த டாக்டரிடம் போய் வந்த பிறகு தான் என் உடம்பு ஓரளவு பழைய மாதிரி வந்திருக்கு!…..”

“ இல்லையம்மா….நீ புரியாம பேசறே!….அந்த டாக்டரிடம் போனா நாலாயிரம், ஐயாயிரம் கறந்திடுவார்!….அதற்காகத் தான் அவர் தேன் ஒழுகப் பேசுகிறார்…..என் பிரண்ட் பாபுவிடம் உன்னை கூட்டிக் கொண்டு போகிறேன்!….மருந்து கூட அங்கு இலவசமா வாங்கிட்டு வந்திடலாம்!…வீண் செலவு எதற்கு? ஜி.ச். என்று தப்பா நினைக்காதே!…..இந்தக் காலத்திலே அங்கு தான் எல்ல வசதியும் இருக்கு!…என் பிரண்ட் அங்கு ஒரு டிபார்ட்மெண்டிற்கே ஹெட்.!….வீணா எதற்கு அநாவசிய செலவுகள் செய்ய வேண்டும்?…”

“ அப்படியா!……சரியப்பா!…” பூரணியின் முகம் வாடிப் போய் விட்டது!

நேற்று அவன் தன் மனைவியிடம் சொன்ன அநாவசியச் செலவுகள் லிஸ்டில் வயசான தாய்க்கு செய்யும் வைத்திய செலவும் வரும் போலிருக்கிறது!

மூன்று லட்சம் டொனேசன் கொடுத்து,அட்மிஷன் வாங்கி ஒரு லட்சம் பீஸ் கட்டி, ஒரு லட்ச ரூபாய்க்கு பைக் வாங்கி தான் பெற்ற மகனுக்கு கொடுக்க தயாராக இருக்கும் தன் அருமை மகன், தன்னை வயிற்றில் சுமந்து, வாழ் நாள் பூராவும்ஆயிரம் கஷ்டங்கள் பட்டு, தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த பெற்ற தாய்க்கு முதுமையில் ஒரு நாலாயிரம் செலவு செய்து வைத்தியம் பார்ப்பதை அநாவசிய செலவு என்று நினைக்கும் தன் மகனை நினைக்கும் பொழுது அவள் மனசே நூறாக உடைந்து விட்டது!

வில்லிலிருந்து புறப்படும் அம்பு நேராகத் தான் போகும்! அது திரும்பி வராது! இந்தப் பாசம் கூட அப்படித்தான் போகும் போலிருக்கிறது! அப்பா, மகன், பேரன் என்றுதான் போகும் போலிருக்கிறது! மகனின் பாசம் அவன் மகன் மேல் தானிருக்கிறது! அது பின்னால் திரும்பி அப்பா, தாத்தா, என்று வருவதில்லை!

பாசம் கூட வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு தானோ!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *