பவள மல்லிகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 2,718 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏன் மாமி, கண்ணன் புல்லாங்குழல் ஊதினால் புலியும் பசுவும் பக்கத்திலே பக்கத்திலே நின்று கேட்குமாமே! இந்தக் காலத்திலே மனிதர்களெல்லாம் அடித்துக் கொண்டு சாகிறார்களே. கண்ணன் இப்போது இந்த உலகத்தில் வந்து புல்லாங்குழல் ஊதினால் எல்லோரும் சாதுவாய்ப் போய்விட மாட்டார்களா?”

அன்று கோகுலாஷ்டமியாகையால் தமிழ் வசனத் தில் உள்ள பாகவதத்தை நான் படித்துக்கொண்டிருந்தேன். தசம் ஸ்கந்தத்தில் கோபாலன் செய்த திருவிளை பாடல்களைப் படித்துக் கொண்டே வந்தேன். பக்கத்தி லிருந்து அம்புஜம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் கேட்ட கேள்விதான் அது. குழந்தைப் பெண் ஆனாலும் அவளுக்குத் தெய்வ பக்தி அதிகம். கண்ணன் என்றால் அவளுக்குப் பிரியம். எங்காவது பாகவத உபந்நியாசம் நடந்தால் அவள் தன் பாட்டியுடன் போய்க் கேட்பாள். இந்தப் பழக்கத்தால் அவளுக்குக் கண்ணனுடைய கதை களில் அநேகம் தெரியும். சில சமயங்களில் தான் கேட்ட கதையை அவள் சொல்லும் போது பார்க்க வேண்டும்; சாட்சாத் கோகுலத்தில் ஒரு கோபிகையானவள் கண்ண னுடைய திருவிளையாட்டை நேரே கண்டு விவரிப்பது போலவே இருக்கும். அவளை அறியாமல் அவள் கண் ணிலே நீர் வந்துவிடும். “அழகான குழந்தை, கண்ணனை யாராவது அடிப்பார்களா, மாமி? அவனைப் பார்க்காமல், அவனோடு பழகாமல், அவன் பேச்சைக் கேட்காமல் இருக்கிற நமக்கே அவனிடம் அத்தனை ஆசையாக இருக்கிறதே. அவனை வளர்த்த அம்மாவுக்கு இருக்காதோ? அவனைக் கட்டிப்போட்டு அடித்தாளாமே! என்ன கல் மனசு பாருங்கள்.” கொஞ்சம் மௌனம் ; பின் கட கட வென அவள் கண்ணில் நீர் பெருகும்.

‘கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுடன் விளையாடிய கோபிகளில் ஒருத்திதான் இப்படி வந்திருக்கிறாளோ!’ என்று கூட நான் நினைப்பேன். ஒன்பது வயசுச் சிறுமிக் குப் பொம்மை யென்றும் பூவென்றும், துணியென்றும் மணியென்றும் ஆசை இருக்காதோ? அவள் ஆசையே அலாதி. பொம்மை முதலியவற்றில் ஆசையில்லை யென்றா சொன்னேன்? உண்டு, உண்டு. ஆனால் எல்லாம் கண்ணனுக்காகத்தான். கிருஷ்ண பொம்மை யென்றால் வைத்துக் கொண்டு கூத்தாடுவாள். அதற்கு நகை பூட்டுவாள். வித விதமான அலங்காரம் செய்வாள். பூச்சூட்டுவாள்.

ஆம்; பூவைக் கோத்து மாலை கட்டிக் கண்ணனுக்கு அலங்காரம் பண்ணுவாள். இத்தனை திறமை இவளுக்கு எங்கிருந்து வந்ததென்று ஆச்சரியமாக இருக்கும். எப் படித்தான் பொறுமையாக அந்த அலங்காரத்தைச் செய்வாளோ!

அந்தப் பூமாலை தான் என்னையும் அம்புஜத்தையும் பிணைத்தது. எங்கள் வீட்டில் இவருக்குப் பாங்கியில் வேலை. காலையில் ஏழரை மணிக்கே போய் விடுவார். பதினொரு மணிக்கு வருவார். அவள் ஏழு மணிக்கே வந் விடுவாள். எங்கள் வீட்டுக் கொல்லையில் பவள மல்லிகை மரம் ஒன்று இருந்தது. ராத்திரியாகிவிட்டால் கம்மென்று பூத்துக் குலுங்கும். ஒரு மைல் தூரத்துக்கு அதன் வாசனை பரவும்.

காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தால் நேரே அந்த மரத்தடிக்குப் போய்விடுவாள். பூ பொல பொலவென்று உதிரும், பெரிய புட்டிக் கூடை நிறையப் பொறுக்கிச் சேர்ப்பாள். கூட யாராவது வருவார்கள். ஆனால் அப்படி வருகிற குழந்தைகளுக்கு அவளைப் போல அத்தனை பொறுமை இராது. சில நாள் ஒருவருமே வரமாட்டார்கள். அவள் தனியே தான் பொறுக்குவாள். நான் இவருக்குச் சுச்ரூஷை செய்து அனுப்பிவிட்டு மரத்தடிக் குப் போனால் அநேகமாக எல்லாப் பூவையும் பொறுக்கி யிருப்பாள். கொஞ்ச நஞ்சம் விட்டுவிட்டுப் போக அவளுக்கு மனசே வராது. நானும் ஏதோ பேருக்குப் பொறுக்கி அவள் கூடையில் போடுவேன்.

“கல்யாணி மாமி, நேற்றைக்கு என்ன கதை தெரி யுமோ? கண்ணன் சத்தியபாமைக்காகப் பாரிஜாத மரம் கொண்டு வந்து நட்டானாம். அது என்ன ஆச்சுத் தெரியுமா? மரம் சாத்தியபாமை வீட்டில்; பூவெல்லாம் ருக்மிணி வீட்டில் கண்ணன் திருட்டுத்தனம் பார்த்தீர்களா?” என்று ஒரு நாள் பூப்பொறுக்கிக்கொண்டே அவள் சொன்னாள்,

“அந்தக் கதை என்ன? இப்போதுதான் பாரேன். இந்தப் பாரிஜாத மரம் எங்கள் வீட்டில் இருக்கிறது. நான் ஜலம் விட்டுக் காப்பாற்றுகிறேன். ஆனால் பூவெல்லாம் உங்கள் வீட்டுக்குப் போய்விடுகிறது!” என்று சிரித்துக் கொண்டே நான் சொன்னேன்.

“போங்கள், மாமி நான் உங்களை எடுத்துக்கொள்ள வேண்டாமென்றா சொன்னேன்? நீங்கள் உத்தரவு தந்ததனால் தானே நான் இங்கே வந்து பொறுக்குகிறேன்?”

“ஆமாம். அந்தக் கதையில் அடுத்த வீட்டுக்காரிக்கு உபயோகப்பட்டது பூ. இங்கே நாலு தெருத் தாண்டிய போகிறது. பூ. அந்த ருக்மிணியைக் காட்டிலும் இந்த அம்புஜத்தினிடம் கண்ணனுக்குப் பிரியம் அதிகம்”

அவள் பூப் பொறுக்கிக் கொண்டிருந்தவள் அப் படியே நின்று விட்டாள். அந்தக் குழந்தை மனசில் என்னவெல்லாம் கற்பனை செய்துகொண்டாளோ!

“என்ன, சும்மா நிற்கிறாயே ! இந்த மரம் உங்கள் வீட் டில் பூவைக் கொண்டு போய்ச் சொரியாது. இது பட்டணத்து மரம். பொறுக்கிக் கொண்டு தான் போக வேண்டும்” என்று அவளை இந்த உலகத்துக்கு இழுத்து வந்தேன் . அவள் உடனே என் பரிகாசப் பேச்சுக்கு ஏற்றபடி, “ஆமாம், பட்டணத்தில் குடியிருக்கிறவர்கள், தாங்கள் வேறொருவர் வீட்டில் குடியிருக்கும் ஞாபகமே இல்லாமல் வீட்டைச் சொந்த வீடாகவே எண்ணிக் கொள்வார்கள்” என்று தானும் வேடிக்கையாகப் பேசினாள்.

உடனே எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. “அம்புஜம், இந்த வீட்டுக்காரரும் அவருடைய சம்சாரமும் வடக்கேயிருந்து இந்த ஊருக்கே வருகிறார் களாம். அவர் ‘ரிடையராகி வருகிறார். இதுவரையில் இந்த வீடு முழுவதும் எங்களுடைய சுவாதீனத்தில் இருந் தது. எல்லா இடங்களிலும் பழகினோம். இனிமேல் அவர்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும். எங்கள் இடத் தோடு நாங்கள் நின்று விட வேண்டும்” என்றேன்.

“ஏன், அவர்களுக்கு இடம் போதாதா? குழந்தை குட்டிகள் அதிகமோ?” என்று கேட்டாள் அம்புஜம்.

“குழந்தையும் இல்லை; குட்டியும் இல்லை. ஊராருக்கு உபகாரம் பண்ண அவர்களுக்கு மனசே வராதென்று எங்கள் அகத்து மாமா சொல்கிறார். இவர் பாங்கியிலேதான் ஊர்ப்பட்ட பணம் சேர்த்து வைத்திருக்கிறாராம், அந்த மனிதர்.”

“எப்படி இருந்தாலும் உங்கள் குணத்துக்கு எல்லோரும் சிநேகமாகிவிடுவார்கள்.”

“வரப்போகிற கிழவரையா சொல்லுகிறாய்?” என்று சிரித்தபடியே கேட்டேன்.

அவளும் சிரித்தபடியே, “போங்கள் மாமி, அவருடைய அகமுடையாளை நீங்கள் வசியப்படுத்தி விடுவீர்களென்றல்லவா சொல்லுகிறேன்?” என்றாள். இருவரும் சிரித்தோம்.

***

பெரிய தெரு எங்கே இருக்கிறது, குப்பு முத்து முதலி தெரு எங்கே இருக்கிறது? அங்கே இருந்து அம்புஜம் நாள் தவறாமல் பூவுக்காக வந்துவிடுவாள். பள்ளிக்கூடத்தில் ஐந்தாவதோ ஆறாவதோ வாசிக்கிறாளாம். அவள் தகப்பனார் பள்ளிக்கூடத்து வாத்தியாராம். அம்மா இல்லை யாம். அகத்தில் பாட்டி மாத்திரம் இருக்கிறாளாம். இரண்டு தம்பிமார்கள்.

அவளைக் கண்டது முதல் அவளிடத்தில் எனக்கு ஒரு பற்று ஏற்பட்டு விட்டது. அதோடு அவள் தாயில்லாக் குழந்தை என்பது தெரிந்தது முதல் இரக்கமும் சேர்ந்து கொண்டது. பாவம்! தாய் அன்புக்கு ஏங்கிய உள்ளம் கண்ணன் நினைவில் திருப்தியடைய எண்ணுகிறதோ!

உண்மையைச் சொல்லப் போனால் எனக்குக் கண்ணனிடத்தில் பிரமாத பக்தி ஒன்றும் இல்லை. ஏதோ பெரியவர்கள் சொல்லிக் கொடுத்தபடி தெய்வத்துக்குப் பயப் படத் தெரியும். பிள்ளையார், சிவன், பெருமாள் என்று சொல்லத் தெரியும். கோவிலுக்குப் போவேன்; அர்ச்சனை செய்வேன்.

அம்புஜம் மெல்ல மெல்ல என் உள்ளத்திலும் கண் ணன் நினைவைப் புகுத்தினாள். அந்தத் தியானமோ என்னவோ பகவான் கண் பார்த்தார். எங்கள் வீட்டில் ஒரு கண்ணன் உதயமானான். அவளோடு பழகின ஒரு வருஷத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. நான் வெளியூருக்குப் போகவில்லை. என் தாய் ஊரிலிருந்து என் சகாயத்துக்கு இங்கே வந்திருந்தாள்.

எங்கள் கண்ணனிடத்தில் அம்புஜத்துக்கு உண்டான பிரேமைக்கு அளவே இல்லை. குழந்தையைக் குலுக்கிக் கொஞ்சிக் கசக்கி விடுவாள். எல்லாவற்றுக்கும் நான் இடம் கொடுப்பேன். அவளைக் கடிந்துகொள்ள யாருக்குத்தான் மனசு வரும்?

வீட்டுக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார். வடக்கே வாழ்ந்தவராகையால் ஆசார விவகாரத்தில் அவருக்கு அபி மானமே இல்லை. மீசை வைத்துக் கொண்டிருந்தார் பிராம்மணர். அவருக்கும் எங்கள் வீட்டில் இவருக்கும் நெருங்கிய பழக்கம். நான் மாத்திரம் மனிதரையே பார்த்ததில்லை. அவருடைய மனைவியோ மகா சாது. நல்லதும் தெரியாது; பொல்லாததும் தெரியாது.

வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததில் என் மன சுக்கு என்னவோ சங்கடமாக இருந்தது. சர்வ சுதந்தரத் துடன் அந்த வீட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந் தோம். இனிமேல் அப்படிச் செய்ய முடியாதே இங்கே வராதே, அங்கே குப்பையைப் போடாதே என்று அவர் கள் சொல்ல ஆரம்பித்தால்?

நல்ல வேளை! வந்த அம்மாள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை. அந்தப் பிராம்மணரும் அப்படிப் பொல்லாதவரென்று தோன்றவில்லை.

வந்து ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் வழக்கம் போல அம்புஜம் வந்தாள். அவளைக் கண்டவுடன் வீட்டுக்காரர், “இந்தக் குட்டி யார்? தினந்தோறும் வருகிறாளே!” என்று கேட்டார்.

“பெரிய தெருவிலிருந்து வருகிறேன், தாத்தா” என்று கூசாமல் பதில் சொன்னாள்.

அவர் முகம் ஏன் அப்படிச் சுளிக்க வேண்டும்? அவர் கை மெதுவாக மீசையைத் தடவிக் கொடுத்தது.

“போக்கிரிப் பெண்ணாய் இருக்கிறாயே!” என்று கோபத்தோடு சொன்னார்.

அந்த வார்த்தை என் காதில் விழுந்த போது எனக்கு என்னவோ போல் இருந்தது. அவள் அதைச் சட்டை பண்ணாமல் விறுவிறு வென்று மரத்தடிக்குப் போய் விட்டாள்.

என் மனசு சரியாக இல்லை. ‘பாவம்! அந்தத் தாயில்லாப் பெண்ணிடம் சள்ளென்று விழுந்தாரே அவர்; என்ன காரணம்?’ என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். அவரைத் தாத்தா என்று சொல்லி அழைத்தாளே, அதற்குத்தான் அவர் கோபம் கொண்டிருக்க வேண்டும் என்று ஊகித்தேன். பிள்ளை இல்லாதவர்கள் பல் விழுந்தாலும் இளமை கொண்டாடுவார்கள் என்று கேட்டிருக்கிறேன். அது நினைவுக்கு வந்தது. நான் அழுவதா, சிரிப்பதா? அம்புஜத்திடம் மாத்திரம் சொல்லி வைத்தேன்; “அவரை இனிமேல் தாத்தா என்று கூப்பிடாதே” என்றேன்.

இன்னும் இரண்டு நாள் சென்றன. புழைக் கடைப் பக்கம் பூப்பறிக்க அம்புஜம் வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். அந்தப் பிராம்மணர் சட்டென்று அவளைப் பார்த்து, “ஏ குட்டி, என்ன அவ்வளவு சுதந்தரத்தோடு நீ பாட்டுக்குப் போகிறாயே. யாரைக் கேட்டுக் கொண்டு போகிறாய்?” என்றார்.

“கல்யாணி மாமியைக் கேட்டேன், மாமா” என்றாள் குழந்தை.

“என்னையல்லவா கேட்க வேண்டும்?” என்று உரிமை பேசினார் கிழவர்.

“உங்களையா? சரி, கேட்கிறேன்; எங்கள் கண்ணனுக்குப் பூமாலை கட்டிச் சாத்துகிறேன். அதற்காகத் தான் பூப்பொறுக்குகிறேன். பவளமல்லிகைப் பூ, பகவானுக்காகத்தானே ஏற்பட்டிருக்கிறது? அதை நாங்களெல்லாம் வைத்துக் கொண்டால் உடனே வாடிப் போகும். பகவானைச் சேர்ந்தால்தான் அதற்கே சந்தோஷம். பக்தர்கள் மனசு மாதிரி மிருதுவான பூ அது.”

இதென்ன! அம்புஜம் பிரசங்கமல்லவா செய்கிறாள்? எனக்கு அதைக் கேட்டு உடம்பு புல்லரித்தது.

“அடியே… இந்தக் குட்டி என்ன, வாயாடியாக இருக்கிறதே! சரி, சரி, போ” என்று சொல்லி அந்தக் கிழவர் உள்ளே போய் விட்டார்.


அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டுக்காரப் பிராம்மணர் எங்களவரோடு பேசிக் கொண்டிருந்தார். “என்ன, விசுவநாதன், இந்த வீட்டில் சில சில்லறை ‘ரிபேர்’ செய்யலா மென்றிருக்கிறேன். முக்கியமாகக் கொல்லைப் புறத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். அந்த மரம் இருப்பது பெரிய ஆபாசமாக இருக்கிறது. தினந்தோறும் ஊர்ப்பட்ட இலை விழுந்து சாக்கடையை அடைத்துக்கொள்கிறது. அதை வெட்டி விடலாமென்று நினைக்கிறேன்.”

ஹா! எனக்குச் சுரீரென்றது. ‘அட, படுபாவிப் பிராம்மணா’

எங்களவர் என்ன சொல்லப் போகிறாரென்று கவனித்தேன்.

“எவ்வளவோ காலமாக இருக்கிறது. நிறையப் பூக்கிறது. அதை வெட்டலாமா?” என்றார் இவர்.

“ஆமாம் அது பூத்து யாருக்குப் பிரயோசனம்? சம்பங்கியா, மல்லிகையா, ரோஜாவா? இந்தப் பூவை யார் வைத்துக் கொள்கிறார்கள்?”

“அதற்கில்லை. யாராவது நாலு பேர் பூஜைக்கென்று பொறுக்கிக் கொண்டு போகிறார்கள்.”

“அதுவுந்தான் தொந்தரவு. காலையில் எழுந்தவுடன் குளிக்கிற இடத்தில் கிழவிகளும் குழந்தைகளும் வந்தால் நாம் எப்படி நம் வேலையைப் பார்க்கிறது?”

எங்களவர் ஒன்றும் பேசவில்லை. நான் பல்லைக் கடித்துக் கொண்டேன். ‘இவர் இப்படி மழுங்குணி மாங்கொட்டையாக அவர் சொல்கிறதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே!’ என்று கோபம் கோபமாக வந்தது.

மறுநாளே கிழவர் அம்புஜத்துக்கு உத்தர விட்டுவிட்டார்; “இந்தா, இனிமேல் பூப்பொறுக்க வராதே மரத்தை வெட்டப் போகிறேன். நாளை முதல் இங்கே வந்து பூப்பொறுக்கக் கூடாது” என்று கடு கடுப்பாகச் சொன்னார்.

குழந்தை பதறிப்போய் ஓடி வந்தாள். “மாமி, இனி நான் என்ன செய்வேன்! என் கண்ணனுக்காகவே இந்தப் பாரிஜாத மரம் முளைத்திருக்கிறதென்று நினைத்தேனே! மாமி, என் கண்ணனுக்குப் பூவைத் தந்த இந்த மரத்துக்கு இந்தக் கதியா வரவேண்டும்! பூவும் மொட்டுமாகக் குலுங்கும் மரத்தை வெட்ட ஒருத்தருக்கு மனசு கூட வருமா?” என்று புலம்பித் தீர்த்தாள். கிழவர் எங்கோ வெளியில் போய்விட்டார்.

மறுநாள் அம்புஜம் காலையில் வரவில்லை. எனக்குத் தான் இழவு விழுந்தது போல இருந்தது. கொல்லைப்பக்கம் போனேன். மலர்ப் படுக்கை போட்டாற்போல் பூ உதிர்ந்திருந்தது. நான் அவற்றைப் பொறுக்கினேன். பொறுக்கும்போதே என்னை அறியாமல் கண்ணீர் விட்டேன். அவ்வளவையும் பொறுக்குவது என்ன, சுலபமான காரியமா? குழந்தை, நவீன கோபிகை போல் வந்த அம்புஜம், சிரமத்தைப் பாராமல் சிரத்தையோடு பொறுக்கினாளே! எனக்கு இடுப்பு வலித்தது. பொறுக்கினவரைக்கும் போதுமென்று எடுத்துக்கொண்டு பெரிய தெருவுக்குப் போனேன், அம்புஜத்தின் வீட்டுக்குத்தான். அவள் பள்ளிக்கூடம் போயிருந்தாள். அவள் பாட்டியிடம் பூவைக் கொடுத்துவிட்டு, “பாட்டி, அம்புஜத்தைச் சாயந்தரம் தவறாமல் வரச்சொல்லுங்கள். நானே பூவைக் கொண்டுவந்து தருகிறேனென்று சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அந்த வார்த்தை அம்பு. ஜத்திற்கு ஆறுதல் அளிக்கும் என்று நினைத்தேன். ஆனால் எத்தனை நாளைக்கு நான் பூவைக் கொண்டுபோய்க் கொடுக்க முடியும்? அந்தக் கிராதகப் பிராம்மணர் மரத்தையே வெட்ட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறாரே!


அன்று மாலை அம்புஜம் வரவில்லை. எனக்குப்போதே போகவில்லை. அவளைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை. எங்கள் குழந்தையைக் கொஞ்சாமல் அவளுக்கும் போது போகாது. அப்படி இருக்க, அவள் வரவில்லை. சாயங்காலம் அவளைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். யாரோ சொந்தக்காரர்கள் வந்துவிட்டார்கள். கைக்காரியமும் ஒழியவில்லை.

மறுநாள் காலையில் சீக்கிரம் அம்புஜத்தின் வீட்டுக்குப் போனேன். “அவள் சிநேகிதி ஒருத்தி வீட்டுக்குப் போயிருக்கிறாள்” என்று பாட்டி சொன்னாள். கொண்டு போன பூவைக் கொடுத்தேன். வேலை இருந்ததால், சாயங் காலம் அம்புஜத்தை அனுப்பச் சொல்லி, வந்து விட்டேன்.

நல்ல கடுவெயில்; மணி மூன்று இருக்கும். அம்புஜம் வேர்க்க விறுவிறுக்க, “மாமி, மாமி!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள்.

“என்னடி கண்ணே! இப்படி என்னை மறந்துவிட்டாய்?” என்று அவளைக் கட்டிக்கொண்டேன். எனக்கு ஏன் அப்போது தொண்டையை அடைத்தது, அழுகை வந்தது என்று தெரியவில்லை.

“மாமி, மாமி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு தெரியுமா? அங்கே என் சிநேகிதி வீட்டில் பவளமல்லிகை இருக்கிறது, மாமி. எங்கள் கண்ணனுக்கு இனிமேல் அந்தப் பூவைத்தான் சாத்தப் போகிறேன். இரண்டு நாளாக எனக்காக இங்கேயிருந்து கொண்டு வந்து கொடுத்தீர்களே! உங்களுக்கு இனிமேல் அந்தச் சிரமம் வேண்டாம். கண்ணன் இடம் காட்டி விட்டான், மாமி” என்று படபட வென்று கூறினாள்.

இரண்டு நாளாக அவள் பவளமல்லிகை எங்கே கிடைக்கும் என்று தேடியிருக்கிறாள், பாவம்!

“அப்படியானால்…” மேலே எனக்கு வார்த்தை வரவில்லை. என் அருமை அம்புஜத்தைத் தினந்தோறும் பார்க்கும் சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காதா? ஒருகால் அவள் கண்ணனுடைய ஞாபகத்தில் என்னையே மறந்துவிடுவாளோ? எங்கள் வீட்டுக் கண்ணனைக்கூடவா மறந்துவிடுவாள்?

அட பாழும் பிராம்மணா உனக்கு இந்தவயசில் இந்தக் குழந்தையின் பூப்போன்ற மனசு தெரியவில்லையே! பூ மரத்தை வெட்ட எண்ணுகிறாயே! அந்தக் குழந்தை எவ்வளவு அழகாகச் சொன்னாள்! அந்தப் பூ மனிதருக்குப் பயன்படாதாம்; தெய்வத்துக்காகவே இருக்கிறதாம்! மிகவும் மிருதுவான பூவை ஏற்கும் கண்ணபிரான், அம்புஜத்தின் இருதயத் தாமரையின் மென்மையிலும் ஆனந்தம் அடைகிறான். இதை அந்த மனித மிருகம் உணரவில்லையே! பூவைக் கண்டு வெறுப்பது மனித சுபாவமென்று சொல்லலாமா? அசுர சுபாவம் அது; சே, சே! கொடூரமான ராக்ஷஸ சுபாவம்!.

“மாமி, நான் பள்ளிக்கூடத்திலிருந்து இதைச் சொல்லத்தான் வந்தேன். சாயங்காலம் முடிந்தால் வருகிறேன்” என்று என் எண்ணத்தைக் கலைத்தாள் அம்புஜம்.

“மறந்துவிடாதே என்னை வந்து போய்க்கொண்டிரு” என்று தழுதழுத்த குரலில் கூறினேன்.

“என்ன, அப்படிச் சொல்லுகிறீர்கள்? இரண்டு நாளைக்கு ஒரு தடவையாவது வந்து பார்க்கிறேன்” என்று அபயம் கொடுத்தாள் அம்புஜம்.

இரண்டு நாட்கள்: மறுநாள் வரவில்லை; அடுத்த நாளும் அவள் வரவில்லை. மறுநாள், நான் போய்ப் பார்ப்பதாக எண்ணியிருந்தேன். இடி விழுந்தாற்போலச் சமாசாரம் வந்தது. ‘அம்புஜம் பூப்பொறுக்கப் போகும் போது மோட்டார் வண்டியில் அகப்பட்டுக்கொண்டாள்’ என்ற திடுக்கிடும் செய்தி வந்தது. நான் மூர்ச்சை போட்டு விழுந்திருக்கவேண்டும். விழவில்லை. ஆனால் ஆவேசம் வந்தவளைப் போல என் குழந்தையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு ஓடினேன். எப்படி அவ்வளவு வேகமாக ஓடினேனென்று எனக்கே தெரியவில்லை. இங்கே புறப்பட்டவள் அம்புஜத்தின் வீட்டுக்குள் போய் நின்றேன். “என் கண்ணே!” என்று கத்தினேன். அம்புஜம் கட்டிலின் மேல் கிடந்தாள்.

வழக்கம்போல, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவுக்குப் புறப்பட்டாளாம். பைகிராப்ட்ஸ் ரோடில் போகும் போது ஒரு கார் அவள் மேல் ஏறிவிட்டதாம். படுபாவி யாரோ வேகமாக வந்தவன் ஏற்றிவிட்டானாம். நல்ல வேளை! உயிருக்கு ஆபத்தில்லை. குழந்தை அந்த நிலையிலும் சாமர்த்தியமாகத் தப்ப எண்ணியிருக்கிறாள். அடுத்து ஒரு ரிக்ஷா வரவே அதன்மேல் மோதி விழுந்து விட்டாள். மோட்டார் காலைச் சிராய்த்துக் கொண்டு போய்விட்டது. காலில் எலும்பு ஏதாவது முறிந்துவிட்டதோ என்னவோ தெரியவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து கட்டுக்கட்டி அனுப்பியிருந்தார்கள். அம்புஜத்தின் தகப்பனார், டாக்டரிடம் விவரம் தெரிந்து கொள்ளப் போயிருந்தார்.

நான் போனபோது குழந்தை களைப்பினால் கண்ணை மூடி அயர்ந்து படுத்திருந்தாள். அவள் பக்கத்தில் கண்ணன் பொம்மை இருந்தது. அந்தப் பொம்மையைக் கண்ட போது, என் அறியாமையால் அப்படியே அதை உடைத்து விடலாமா என்று நினைத்தேன். பிறகு அம்புஜத் தோடு பழகின வாசனை, வேறு எண்ணத்தைக் கொண்டு வந்து விட்டது. அந்தக் கண்ணன் தான் அவள் உயிருக்கு ஹானி வராமல் காப்பாற்றியிருக்க வேண்டும்.

பக்கத்தில் சிறு பெண்களும் பக்கத்து வீட்டு மனிதர் களும் கூடியிருந்தார்கள். பாட்டி புலம்பினபடியே அம்புஜம் காரில் அகப்பட்ட கதையை யார் யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தாள். அம்புஜத்தின் பக்கத்தில் அவர்களை விடாமல் அவள் பள்ளிக்கூடத்து வாத்தியாரம்மாள் பாதுகாத்துக் கொண்டிருந்தாள். வெளியே தாழ்வாரத்தில் ஆளுக்கொரு பேச்சுப் பேசிக்கொண்டிருந்தார்கள். எப்பொழுது எப்பொழுதோ நடந்த கார் விபத்துக்களின் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்,

ஒரு வயசான சுமங்கலி, “இப்படியும் ஒரு பிராம்மணன் உண்டோடி? தன் வீட்டில் பூப்பொறுக்கப்படா தென்று சொல்லிவிட்டானாமே! அதைத் தலையிலே தூக்கிக்கொண்டா போகப் போகிறான்?” என்று சொன்னாள். எங்கள் வீட்டுப் பிராம்மணர் பிரபாவந்தான் அவ்வளவு தூரம் பரவியிருக்கிறதென்று உணர்ந்து கொண்டேன்.

மெல்ல அம்புஜத்திற்கு அருகில் வந்தேன். வாத்தி யாரம்மாளிடம் என்னைப்பற்றி முன்பே அம்புஜம் சொல்லியிருக்கிறாள். நானும் பார்த்திருக்கிறேன். அவள் பக்கத்தில் பேசாமல் நின்று கொண்டேன். கண்ணில் நீர் மல்க, அம்புஜத்தின் மேல் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நின்றிருந்தேன், என் கண்மணி, என் மேல் வைத்த பிரியமோ என்னவோ, அது வரையில் கண்ணைத் திறக்காதவள், “அம்மா” என்று சிணுங்கியபடியே கண்ணைத் திறந்தாள். அவளுக்கு அம்மா இல்லை. நான் தான் முன்னே நின்றேன். “கண்ணா!” என்று அடுத்தபடி மெல்லச் சொன்னாள். என் கையில் உள்ள குழந்தை களுக்கென்று சிரித்தது. இந்த உலகத்து நிகழ்ச்சியைக் கண்டா கண்ணன் சிரித்தான்?

“மாமி, நீங்களா? பூக்கொண்டு வந்தீர்களா?”

பூவைக் கொண்டு வருவதா? எனக்குத்தான் ஒன்றுமே புரியாமல் ஓடி வந்திருக்கிறேனே! குழந்தைக்குப் பூவின் மேல் தான் எத்தனை ஆசை! “கொண்டுவந்திருக்கிறார்” என்று சடக்கென்று வாத்தியாரம்மாள் பதில் சொல்லி, என் அசட்டுத்தனத்தால் விளைய இருந்த ஆபத்தினின்றும் காப்பாற்றினாள்.

***

பார்த்தேன், கண்ணீர் விட்டேன். இரண்டு வார்த்தை பேசினேன். வீட்டுக்கு வந்தேன். வந்தது முதல் புலம்பித் தீர்த்தேன். என் ஆத்திரத்தைக் கொட்டினேன். வீட்டுக்காரர் கொடுமையைப்பற்றி என்ன என்னவோ சொன்னேன்.

“கண்ணனுக்குக் கண் குருடாகிவிட்டது. குழந்தையின் ஆசையை அறியாதவனா அவன்? தனக்குப் பூவைத் தந்த மரத்தை இரக்கமில்லாமல் வெட்டப் போவதைக் கண்ணன் தடுக்கவில்லை; தன்னையே சதா தியானிக்கும் சிறுமியின் காலை ஒடித்த காரையும் தடுக்கவில்லை. இதுவா நியாயம்? அநியாயம் செய்பவர்கள், பச்சை மரத்தை வெட்டுகிறவர்கள், பக்திமான்களைத் துன்புறுத்துகிறவர்கள் – இவர்கள் தம் மனம் போல நடமாடக் காலைக் கொடுத்த தெய்வம், மகா பக்தையாகிய இந்தக் குழந்தையின் காலுக்கா ஊனம் உண்டாக்க வேண்டும்?”

என்ன வந்தாலும் வரட்டுமென்று தான் கத்தினேன். கிழவர் காதில் என் வார்த்தை பட்டதோ என்னவோ தெரியவில்லை. அன்று மாலை அந்தப் பிராம்மணருடைய மனைவி என்னிடம் வந்தாள். “அந்தக் குழந்தை வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டாள்.

“எந்தக் குழந்தை?” என்று தெரியாதவளைப்போலந் கேட்டேன்.

“அம்புஜம்.”

கடுகடுப்போடு இடத்தைச் சொன்னேன். உடனே ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு அந்த அம்மாள் அம்புஜத்தைப் போய்ப் பார்த்து வந்தாள். நான் பிறகு போனேன். அந்த அம்மாள் மிகவும் பிரியமாகப் பேசினதாகச் சொன்னார்கள். “மரத்தை வெட்டி விட்டீர்களா?” என்று அம்புஜம் கேட்டாளாம். “இல்லை” என்று பதில் சொன்னாளாம்.

நான் சிறிது நேரம் அம்புஜத்தோடு பேசிவிட்டு வந்தேன். காலில் எலும்பு முறிந்திருக்காது என்று டாக்டர் சொன்னதாகத் தெரிந்து ஆறுதல் பெற்றேன்.


இது என்ன ஆச்சரியம்! ஒருநாளும் இல்லாத திரு நாளாக வீட்டுக்கார அம்மாள் பவள மல்லிகை மரத்துக்கடியில் காலையில் பூப்பொறுக்கிக்கொண்டிருந்தாள், அந்தக் கிழவர் தூரத்தில் நின்றபடியே, “நாழிகையாகி விட்டது” என்று சொல்லிக்கொண்டு நின்றார்.

சில நிமிஷங்களில் இருவரும் பூவோடு புறப்பட்டார்கள். நான் ஒரே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். அவர்கள் ரிக்ஷாவில் போனார்கள். எனக்கு என்ன நடக்கிறதென்று பார்க்க ஆசை. நானும் ஒரு ரிக்ஷாவைத் துக்கொண்டு பின் தொடர்ந்தேன். வேலைக்காரியிடம் குழந்தையை விட்டு விட்டு வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போனேன். அந்த இரண்டு பேரும் அம்புஜத்தின் வீட்டில் இறங்கினார்கள். நான் வேகமாகவே முன்னால் போனேன்.

இருவரும் உள்ளே நுழையும் போது பூக்கூடையை வீட்டுக்காரர் கையில் வாங்கிக்கொண்டார். அம்புஜத்துக்குப் பக்கத்தில் சென்றார். அவர் கால் பின்னலிட்டது. அப்படியே கூடையை அவளருகில் வைத்தார். நிற்கமுடியாமல் உட்கார்ந்து விட்டார்.

இதென்ன? அவர் விக்கி விக்கி அல்லவா அழுகிறார்? எனக்கு இது கனவா நனவா என்று விளங்கவில்லை. “குழந்தே, நான் பாவி! குழந்தையில்லாத பாவி! உன் பூப்போன்ற உள்ளத்தை வாட்டினேன். உன் காலை ஒடித்தவன் கார்க்காரன் அல்ல. நான் தான். இந்தா, அம்மா! இந்தப் பூவை வைத்துச் சொல்கிறேன். உன் மனசை நோகச் செய்ததற்குக் கடவுள் எனக்குத் தண்டனை தரட்டும். உன் கால் சௌக்கியமாகட்டும்..நீ மான்குட்டி துள்ளுவது போல மறுபடியும் என் வீட்டுக்கு வந்து பூப்பொறுக்குவதை நான் பார்க்க வேண்டும்.”

அவர் ராட்சசர் என்று நினைத்திருந்தேனே! கடின மான ஓட்டுக்கும் உள்ளே மிருதுவான வழுக்கை இருக்கும் இளநீரோ அவர் மனம்? அன்று என்ன என்னவோ சொல்லிச் சட்டம் பேசினாரே! அவரா இவர்?

“மாமா, மரத்தை வெட்டி விட்டீர்களா?” என்று கேட்டாள் குழந்தை.

“தாத்தா என்றே சொல் அம்மா! நான் இனிமேல் இளமை கொண்டாட மாட்டேன். மரத்தை வெட்டப் போவதில்லை. நெடுமரமாக நிற்கும் என்னை வெட்டினாலும் வெட்டலாம்; உன்னைப்போன்ற குழந்தைகளுக்கும் கண்ணனுக்கும் பிரியமான அந்த மரத்தை வெட்டுவது மகா பாவம்!”

இதையெல்லாம் அவர் எங்கே தெரிந்துகொண்டார்? முன்பு தெரியாமற் போயிற்றா? திடீரென்று ஞானோதய மாயிற்றா? அம்புஜத்தின் பக்தி ரஸவாத வித்தையைச் செய்து விட்டதா? கண்ணா உன் திருவிளையாடலைக் கதையிலே காண்பானேன்? இதோ காண்கிறேனே! இதைக் காட்டிலும் ஆச்சரியம் ஏது?.

அம்புஜம் கால் சொஸ்தமாகி எழுந்தாள். காலில் ஆடுசதையில் தழும்போடு அவளுக்கு வந்த விபத்து நின்றது. கண்ணன் அவளைக் காப்பாற்றினான். அந்தக் கால் தழும்பைக் காட்டிலும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரின் உள்ளத்தில் பட்ட தழும்புதான் ஆழமானது. இப்போது அம்புஜம் தினந்தோறும் எங்கள் வீட்டுக்கு வந்து பூப் பொறுக்கிப் போகிறாள். என்னைப் பார்க்கிறாளோ இல்லையோ, அந்தக் கிழவரைப் பார்த்து இரண்டு வார்த்தையாவது பேசாமல் போகிறதே இல்லை.

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *