பழுப்பு நிறக் கவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 5,775 
 

(இதற்கு முந்தைய ‘கோயில் விளையாட்டு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

‘யெல்லோ பேஜஸ்’ மூலமாக வெடினரி டாக்டர்களின் சிலரது தொலைபேசி எண்களைத் தேடியெடுத்துத் தொடர்பு கொள்ள முயன்றோம். அன்று தீபாவளி என்பதால் ஒருவரும் கிடைக்கவில்லை. கடைசியில் ‘ப்ளூ க்ராஸ்’ அமைப்பிற்கு தொடர்பு கொண்டோம். அவர்களோ “இன்று ஏற்கனவே நிறைய கேஸ்கள் இருக்கின்றன… நாளைக்கு வண்டியை அனுப்புகிறோம்” என்று சொல்லிவிட்டார்கள்.

பூனைக் குட்டிகளுக்கு ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால்? அதற்கு மேல் நினைத்துப் பார்க்கவே என்னால் முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய அகிலாண்டேஸ்வரி அம்மன் படத்தின் முன்னால் உட்கார்ந்துகொண்டு மெளனமாகப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

குட்டிகள் எப்படி இருக்கு என்று போய்ப் பார்ப்பதும், கண்ணீர் விடுவதுமாக ஒருவித அவஸ்தையுடனே அந்த வருட தீபாவளி எனக்குக் கழிந்தது.

மறுநாள் பொழுது விடிந்தவுடனே குட்டிகளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதே என்ற பயத்துடன் போய்ப் பார்த்தால், இரண்டும் பக்கத்து காலி மனையில் பச்சைப் புதர்களுக்கிடையில் இருந்தன. ஆங்காங்கே தானாகவே முளைத்திருக்கும் காட்டுச் செடிகளுக்கிடையே ஏதோ புற்களைத் தேடித்தின்று உடம்பை சரிசெய்து கொள்ளும் என்று எப்போதோ எங்கோ நான் படித்தது ஞாபகம் வந்தது.

நான் பிரார்த்தனை செய்த அகிலாண்டேஸ்வரியின் அருளால், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் குட்டிகளின் உடல்நிலை எப்படியோ முற்றிலும் குணமாகிவிட்டது.

இந்தத் தீபாவளி நிகழ்ச்சிக்குப் பிறகு ‘தேன்நிலா’ சுத்த சைவமாக மாறிவிட்டதோடு எங்கள் வீட்டைத் தவிர வேறு எங்கும் போவதில்லை. இப்போது அதற்கு சாதமும் ஒத்துக் கொள்வதில்லை என்பதால் பிஸ்கெட்டுகள் வாங்கி வைத்து பாலுடன் குழைத்துக் கொடுக்கத் தொடங்கினோம். அதுவும் உணவு விஷயத்திலும், உணவு உட்கொள்ளும் நேரத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டோடு இருக்கத் தொடங்கிவிட்டது.

நாட்கள் செல்லச் செல்ல எனக்கு ‘தேன்நிலா’வின் பேரில் அக்கறை அதிகமாகிக் கொண்டிருந்தது. அதுவும் அப்படித்தான். காலையில் நான் தியானம் செய்துவிட்டு வரும்வரை எனக்காகக் காத்திருந்து பிறகுதான் சாப்பிடும். என் கட்டளைக்கு மட்டும்தான் கீழ்ப்படியும். என் மேல் அதற்கு அன்பு அதிகமாகியது.

ஒருநாள் மாலை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர். வெகு காலத்திற்குப் பிறகு சந்திக்கிறோம் என்பதால் பேச்சும் சிரிப்பும்; பழைய நாட்களின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து மகிழ்வதுமாக நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு விடைபெற்றபோது மணி இரவு பத்துக்கும்மேல் ஆகிவிட்டது. அவர்களை வழியனுப்பிவிட்டு சமையலறை வேலைகளைப் பார்ப்பதற்காக என் அக்காவுடன் உள்ளே போனபோதுதான் ஒருவிஷயம் சட்டென எனக்கு உறைத்தது.

“அச்சச்சோ பூனைக்குட்டிகளுக்குச் சாப்பாடு போட மறந்தே போனோமே. தேன்நிலா நம்ம வீட்டை விட்டா வேறு எங்கேயும் சாப்பிடாதே… எங்கே இருக்கோ பார்க்கிறேன்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியே ஓடினேன்.

வெளியில் விளக்கு எரிவதைப் பார்த்துவிட்டு எழுந்து வரட்டும் என்று நடைபாதை விளக்குகளின் ஸ்விட்சுகளைப் போட்டுவிட்டு, நடைபாதை எங்கும்; தொட்டிகளின் இடைவெளிகளில்; காம்பவுண்டு சுவரில்; மோட்டார் ஷெட்டில்; மாடிப்படி வளைவில்; மொட்டை மாடியில்; பக்கத்து காலி மனையில்; எங்காவது தென்படுகிறதா என்று தேடி தேடிப் பார்த்தேன்.

தேன்… தேன்நிலா… மேங் மிங் மியாவ் மியாவ் என்று பலவிதமாக சப்தம் கொடுத்துப் பார்த்தேன். ஊஹும், அது வரவேயில்லை. எனக்கு மிகுந்த பதட்டமாகிவிட்டது.

பொதுவாக நாங்கள் எப்போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு பூனைக் குட்டிகளுக்குச் சாப்பாடு போட்டுவிடுவது வழக்கம். என்றைக்காவது அபூர்வமாக தாமதமாகி விட்டால் உடனே ஹால் அல்லது படுக்கையறை இவற்றில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை எங்கள் பேச்சுக்குரல் மூலம் தெரிந்துகொண்டு ஓடிவந்து அந்த ஜன்னலின் மேல் ஏறி நின்று மேங் மேங் என்று கத்தி கத்தி சாப்பாடு கொடுக்கச்சொல்லிக் கூப்பிடும். ஆனால் இப்போது புதிய மனிதர்களைப் பார்த்து பயந்துபோய்க் கூப்பிடாமல் விட்டுவிட்டது போலும்.

‘பாவம் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்ததோ? காலையில் சாப்பிடதோடு சரி. மதியம்கூட தேன்நிலா சாப்பிடும்போது ஆரஞ்சு ஓடிவந்து விடவே தேன் விட்டுக்கொடுத்துப் போய்விட்டது. இப்போது இரவும் பட்டினி என்றால் எப்படித் தாங்கும்? அது எப்படி நான் கவனக்குறைவாக இருக்கப் போயிற்று? அதற்குப் பிஸ்கெட்டை குழைத்து வைக்க மூன்று நிமிடங்கள் ஆகுமா? எப்படி இப்படி சுத்தமாக மறந்து போனேன்? அட்லீஸ்ட் நாம சாப்பிடும்போதாவது அதுக்குச் சாப்பாடு போடணுமேன்கிற விஷயம் என் ஞாபகத்து வரலையே?…’

இப்படிப் பலவித எண்ணங்கள் எனக்குள் அலைமோத, கைகள் இயந்திர கதியாக டார்ச்சை அடித்துக் கொண்டிருக்க, ‘தேன்நிலா’ எங்கேயும் காணப்படவில்லை. மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கனத்த இதயத்தோடு வீட்டிற்குள் திரும்ப யத்தனித்தபோது, என் பார்வையில் அதன் பிளாஸ்டிக் தட்டு தென்பட்டது. அதில் மொய்த்துக் கொண்டிருந்த எறும்புகளை அப்புறப் படுத்துவதற்காக அந்தத் தட்டை வாசல் படியில் நான்கைந்து முறை ‘தட் தட்’ என்று தட்டினேன்.

என்ன அதிசயம்? ‘மீயாங்’ என்று எங்கிருந்தோ தேன்நிலாவின் குரல் கேட்டது. அடுத்த கணம் இடதுபுற காம்பவுண்டு சுவரிலிருந்து குதித்து என்னருமை தேன்நிலா ஓடிவந்தது.

அவ்வளவுதான், எனக்குப் போன உயிர் திரும்ப வந்தது. அதுவரை பூனைக்குட்டி மேலே பட்டால் அலர்ஜி அது இதுவென்று எனக்குள் போட்டு வைத்திருந்த விலங்குகள் உடைந்தன. குனிந்து இரண்டு கைகளாலும் அதை அள்ளியெடுத்து அப்படியே மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டேன். என் பாசத்தையெல்லாம் திரட்டி அதன் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.

அதுவோ என்னுடைய எதிர்பாராத இந்தச் செய்கையினால் பயந்துபோய் துள்ளிக் குதித்தது. ஆனாலும் மேங் மேங் என்று என் காலைச் சுற்றிச்சுற்றி வந்தது.

உள்ளே ஓடிப்போய் ப்ரிட்ஜைத் திறந்து பாலை எடுத்து வந்து தட்டு வழிய வழிய அதற்கு ஊற்றி வைத்தேன். அதுவும் மதியத்திலிருந்து பட்டினியானதால் வேக வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ஒட்டியிருந்த அதன் வயிறு கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக என் வயிற்றுக்குள் இனம் புரியாத குளிச்சி பொங்கியது.

தட்டில் இன்னும் கொஞ்சம் பால் மீதம் இருக்கும்போதே, தலையைத் தூக்கிக் கொண்ட ‘தேன்நிலா’ வழக்கம்போல குனிந்து தன் உடம்பை நக்கிக்கொண்டது. பிறகு என்மீது இப்படியும் அப்படியுமாக ஓரிரண்டு தடவைகள் ஈஷியபடி உரசிவிட்டு, ‘மேங்’ என்று நன்றி சொல்லிவிட்டு தொட்டிக்கு ஒரு தாவல் தாவியது. அங்கேயிருந்து மறுபடியும் காம்பவுண்டு சுவர்மீது ஒரு தாவல் எனத்தாவி சுவர்மீது ஏறி நடந்து இருளில் என் பார்வையை விட்டு மறைந்தது.

அது போனவுடன் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே வந்தேன். கதவுகளைப் பூட்டும்போதும், பால் பாத்திரத்தை எடுத்து ப்ரிட்ஜினுள் வைக்கும்போதும் எனக்குள் ஏதோ ஒரு புதிய உணர்வு உருவாகியிருப்பதை உணர்ந்தேன்.

என் வயிற்றுக்குள்ளிருந்து புறப்பட்ட அந்த உணர்வு என் நாடி நரம்புகளின் வழியே உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. இதுவரை உணர்ந்தறியாத அந்தப் புதிய உணர்வின் பரவசத்தினால் ஆட்கொள்ளப்பட்ட நான் நேராக என் அறைக்குப் போய் பீரோவைத் திறந்தேன்.

துணிமணிகளுக்கடியில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த, வெகு நாட்களாகப் பிரிக்கப் படாமலிருந்த அந்த பழுப்பு நிறக் கவரை வெளியில் எடுத்தேன். அதிலிருந்த அம்மாவின் போட்டோவை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அந்தப் போட்டோவையே உற்று நோக்கினேன்.

போட்டோவில் அம்மா இல்லை. அம்மா உட்கார்ந்திருந்த நாற்காலியில் நான் உட்கார்ந்திருக்க, என் மடியில் ‘தேன்நிலா’ உட்கார்ந்திருந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *