“இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா…?” சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது,
அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று அந்த குழந்தை எதிர்பார்க்கவில்லை பாவம், வீட்டின் மூத்த பிள்ளை தலையில் அடி வாங்கியதும் மற்ற பிள்ளைகள் பேசாமல் பிசுபிசுப்பாய் தட்டில் கருத்து உருண்டிருந்த களியை. உப்பும் காரமும் குறைச்சலான புளியங்காய் புளிப்புடன் ஒரு மார்கமாக கீரைக் குழம்பு என்று பெயர் எடுத்த பச்சை திரவத்தில் தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தன,
“நான் நாலு மகாராணிங்கள பெத்து போட்டிருக்கேன், தினத்துக்கும் சுடச்சுட சோறும் பருப்புக் கொழம்பும் வச்சி தரேன், பொரியல்கூட ரெண்டு வகையா செஞ்சி வச்சிடறேன், சாப்டுட்டு போய் தாயம் வெளையாடிட்டு இருங்க போங்க,”
நான்கும் பெண் பிள்ளைகளாக பிறந்துவிட்டது, அந்த குடிகாரன் ஒவ்வொரு சாமியாக வேண்டிக்கொண்டு “இந்த முறை ஆம்பள புள்ளைதான் பாத்துக்கடி…” என்று பார்க்கச் சொல்லி பிறந்த நான்குமே பொட்டைங்க, திரும்ப எந்த சாமிய வேண்டிக்கிட்டு அடுத்த பிள்ளைய பெத்துக்க சொல்லுவானோ தெரியல,
“என்னடி மொகத்தையே பாத்துகிட்டு, தட்ட பாத்து சாப்டுடி, எதோ நம்ம வயித்த ரொப்பிக்க களியாவது கெடைக்குதே, அதை பாத்துக்கோ, இதும் இல்லாம எத்தனை பேர் இருக்காங்க
அடிபட்ட மூத்தபெண் கண்கலங்க இவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டு பிசுபிசுத்த உருண்டையை வாயில் வைத்து பல் நற நறக்க தின்றது,
சோளத்தட்டு போன்ற விறகு எரியாமல் வெண்புகையை மட்டுமே கக்கி ஒரு புகை நாற்றத்தையும் அந்த களிக்கு தானமாக வழங்கியிருந்தது, தினமும் சோறு சாப்பிட்டா இவளுக்கு நல்லாதான் இருக்கும், அரிசி வாங்க பருப்பு வாங்க காசு வேணுமே, குடிகாரன் நல்லா சம்பாதிக்கிறான், அதைவிட நல்லா குடிக்கிறான், அடுத்த வீட்டு துணி துவைச்சி பாத்திரம் கழுவி வர்ற காசுல உப்பு மிளகாய் வாங்கலாம், அரிசி வாங்க முடியுமா?
அறுவடைக் காலத்தில் ஆரியஞ் சோளம் அறுக்கப்போனா கூலியா கெடைக்கிற சோளம் ஆரியத்த வச்சிகிட்டு வயித்தை கழுவ வேணும், காசா கிடைக்கிற கூலிக்கு உப்பு. மிளகாய் வாங்கி மரத்தில் இருக்கிற புளியங்காய மரத்துக்காரனுக்கு தெரியாம எடுத்துட்டு வந்து வயல்ல இருக்கிற கீரைய வேகவச்சி ஒரு மாதிரியா குழம்புன்ற பேர்ல பொழப்பு ஓடிட்டு இருக்கு, நாம நாக்குக்கா ஏன் சாப்பிடனும் வயித்துக்கு சாப்பிட்டா போதாதா?
“பாத்திரம் தேய்க்க நாளையில இருந்து வராத தாயி, என் மக கொழந்தை பெத்துட்டு இருந்ததால அந்த வேலை என்னால முடியாம இருந்திச்சி, அவதான் புருசன்கூட போயிட்டாளே… இனி நானே பாத்துக்கறேன்” மொதலாளியம்மா சொல்லிட்டா… இனி இன்னொரு வீட்டு பக்கம் போகணும்,
இந்த ஊர்ல எவ தொவைக்கவும். பாத்திரம் கழுவவும் வேலைக்காரிய வச்சிக்கிறா… டவுன் பக்கம் போனா எந்த வீட்டிலயாவது சுலபமா சேந்துடலாம், ஆனா தங்க ஒரு வீடு வேணுமே, வாங்கற சம்பளத்தை வீட்டு வாடகைக்கே தந்தாகணும், இந்த ஊர விட்டாலும் வேற எடம் போய் பொழைக்க முடியாது,
போட்டுக்க ஒழுங்கா துணி இல்ல, ஒரு மொழத்துக்கு கையில தச்சி கிழிஞ்சத போட்டிருக்குங்க, வாய்க்கு மட்டும் நேரா நேரத்துக்கு ருசியா வேணுமாம்,
இதுல இந்த ஊர் வாத்தியார் தொந்தரவு வேற தாங்க முடியல, புள்ளைங்கள படிக்கவை படிக்கவைன்னு, ஒரு சிலேட்டு பல்பம் வாங்கவாவது காசு வேணுமா வேணாமா? வர்ற காசுல உப்பு வாங்கறதா சிலேட்டு வாங்கறதா?
இந்த மனுசன் வாங்கின கூலியில குடிச்சதது பத்தாதுன்னு கடன் வாங்கிவேற குடிச்சிடறான், கடன்காரன் வந்து “கோயா,, கொம்மா”னு திட்டறான், யாருக்கு ஒரைக்கிது, தண்ணியடிச்சி மயங்கி கிடக்கிறவனுக்கா… தண்ணியடிக்காம அத கேட்டிட்டு இருக்கிற குடிகாரன் பொண்டாட்டிக்கா?
தண்ணியடிச்சது அவன் “சாமி… ரெண்டு நாள் பொறுத்துக்கோ நான் தரேன்”னு சொல்லி கடன் கொடுத்தவன் காலை புடிச்சி வாய்தா வாங்கறது குடிகாரன் பொண்டாட்டி,
எக்கேடாவது கெடட்டும்னு சுப்பக்கா செஞ்ச மாதிரி ஒரு மேஸ்திரிகூட போயிடலாம், நாலும் பொட்டப்புள்ளைங்க, என்னவாகும் இதுங்க பாடு, சித்தாள் வேலைக்கு போகலாம். போற மாதிரியா இருக்கு ஒடம்பு, வருசம் ஒவ்வொன்னா நாலு பெத்து மாசத்துக்கு ரெண்டு முறை நெஞ்சி வலியும் தினத்துக்கும் மூட்டு வலியும் வந்து நொண்டிட்டு இருக்கிறவ நடக்கிற பெரிய விசயமா இருக்கு, போய் செங்கல்லையும் சிமெண்ட்டையும் சுமந்தா என்னாகும், அன்னைக்கு சிமெண்ட் கலவையோட சாரத்தில இருந்து விழுந்த மாதிரி தெனம் விழுந்து மண்டையில கட்டு போட்டுட்டு இருக்க வேண்டியதுதான்,
மழையில்லாம வெள்ளாமையும் இல்லாம போச்சி, பொட்டல் காட்டுல என்ன வேலை செய்யறது, மழை மாரி வந்தா நல்லா பொழைச்சிகலாம், பிஞ்சும் பூவுமா எதாவது பொறுக்கிட்டு வந்து சமைச்சி சாப்பிடலாம், ஏரியில இருக்கிற கொஞ்சம் ஈரத்துக்கு இன்னும் எத்தனை நாளைக்கு எலை தழை இருக்குமோ தெரியல, அப்புறம் இந்த கீரை கொழம்பும் கிடைக்காது,
போன மாசம் மூணாவது புள்ளைக்கு அம்மை வந்து காய்ச்சலா வந்து படுத்துகிட்டு வேலைக்கு போக முடியல, பத்து நாளைக்கு முன்னாடி மூத்ததுக்கு பேதியாகி வயித்தில எதுவும் தங்காம சாக பொழைக்க ஆயிடுச்சி, தர்மாஸ்பத்திரியில எவன் ஒழுங்கா வயித்தியம் பாக்கறான், சொந்த ஆஸ்பத்திரிக்கு போக காசு கடன் வாங்கி அது வேற நூத்தைம்பது ரூபாய் கடன் தரணும், அந்த மகராசன் பட்ட ரெண்டாயிரம் ரூபா கடனுக்கு மாசம் நூறு ரூபாய் வட்டியா மட்டும் அழ வேண்டியிருக்கு, பாத்திரம் தேச்சி வர்ற நாநூறு ரூபாய்ல நூறு இப்படியே போயிட்டா மீதிய வச்சி என்ன குடும்பம் நடத்த,
இப்படி வட்டியா மட்டுமே கட்டிட்டு வந்தா எப்ப அந்த மொத்த கடனையும் அடைக்கிறது, இதோ நாளைக்கு வந்துடுவான் கடன் கொடுத்தவன் புல்லட்ட எடுத்துட்டு புடுபுடுன்னு, அவன் காசு கேப்பான் கடன் வாங்கினவன் தண்ணியடிச்சிட்டு திண்ணை மேல வாந்தி எடுத்துட்டு படுத்திட்டு இருப்பான், புல்லட்டுல வர்றவன் என் அம்மாவையும் பாட்டியையும் ஒழுக்கமத்தவங்கன்னு கேவலமா பேசுவான், தந்துதான்ஆகணும்,
இந்த புள்ளைங்களுக்கு எத்தனையோ வாட்டி சொல்லியாச்சி, வேண்டாண்டி நமக்கு ராஜா வூட்டு புள்ளைங்க சகவாசம்னு, கேக்கல, சேர்றது பூரா பணக்கார வீட்டு புள்ளைங்களோட, அப்புறம் அதே மாதிரி இருக்க ஆசை வராதா? ராஜா வூட்டு புள்ளைங்க மாதிரி இருக்க நமக்கு என்ன குடுப்பினை இருக்கு, எந்த ஜென்மத்து பாவமோ இவன கட்டிட்டு லோல்படறேன்,
வேடிக்கை பாத்துட்டு வந்து என் கிட்டே கேக்குதுங்க “யம்மா தோசை செஞ்சி போடும்மா… சூப்பரா வாசனை அடிக்கிது,” யார் வூட்டுல வேடிக்கை பாத்திச்சிங்களோ… மூணாவது புள்ளை கேக்குது, “தோசை எப்படிம்மா இருக்கும்,?” வேடிக்கை மட்டும்தான் பாத்திருக்குங்க, பாக்கவச்சி தின்ன மகராசன் யாருன்னு தெரியல, அதான் ராஜா வூட்டு புள்ளைங்க பின்னாடி போகதிங்கடின்னு சொன்னேன், தோசை சட்டியே இல்லாத வீடு என் வீடு, என்னைக்கு தோசையும் இட்லியும் செஞ்சேன், தோசை சட்டியும் இட்லி பாத்ரமும் வச்சிக்க,
வேலை செய்யற வீட்டுல பழையதுன்னு சோறும் குழம்பும் தர்றாங்க, சோறுதான் மீதியாகும் டிபன் எப்படி மீதியாகும், எவ்வளவு தேவையோ அவ்வளவு தோசையும் பூரியும் செய்யறாங்க, மீதியானா தானே கொண்டாந்து கொட்டுவாங்க, கொட்டியிருந்தா கொண்டாந்து புள்ளைங்களுக்கு தோசைன்னா என்னன்னு காண்பிச்சிருக்கலாம்,
ஒரே நாள் கறியும் சப்பாத்தியும் தின்னிருக்குங்க, செஞ்சி முடிச்சி தின்ன போகும் போது சாவு சேதி வந்திடுச்சி, மொத்தத்தையும் எடுத்திட்டு போடியம்மான்னு மொதலாளியம்மா குடுத்து விட்டுட்டாங்க, நாலு புள்ளைங்களும் மூக்கில நீர்வர எத்தன வேகமா சாப்பிட்டதுங்க… ஒரு அம்மாவுக்கு புள்ளைங்க சந்தோசமா சாப்பிடறத பாக்கறத தவிற வேற எது சொகமான விசயமா இருக்கும் இந்த உலகத்தில, என்ன ஆண்டவன் நல்லபடியா நொட்டையில்லாம படைச்சிருந்தா நானும் கறியெடுத்து சப்பாத்தி செஞ்சி போட்டிருப்பேனே என் புள்ளைங்களுக்கு, கடன் கட்டவே உசிர் போகுது, கறிக்கு எங்க போக,
ராணியக்கா பாக்கறப்ப எல்லாம் டவுன் பக்கமா வந்திடுடின்னு கூப்பிட்டுகிட்டேதான் இருக்கு, இந்த குடிகார மனுசன டவுன்ல கூட்டிட்டு போய் சமாளிக்க முடியுமா? வர்றவங்க போறவங்க கிட்டயெல்லாம் சண்டைக்கு நிப்பானே, ஜெயிலுக்கு வேற போகணுமா நான், ஒருத்தர் வீட்டுக்கு பாத்திரம் கழவத்தான் போனாங்க ராணியக்கா… பிறகு யார் யாரையோ பிடிச்சி ஒரு கான்மெண்ட் ஸ்கூல்ல ஆயாவா சேந்துட்டாங்க, மாசமானா ஆயிரம் சொலையா சம்பாதிக்கிறாங்க, அதுவுமில்லாம ஸ்கூல் புள்ளைங்களோட பெத்தவங்க மாசம் பத்து ரூவா தந்து அது வேற ஐநூறு வரும் போல இருக்கு போதாதா,
அப்படி எதுனா கான்மெண்ட் ஸ்கூல் இருந்தா பாத்து சேத்து விடுக்கான்னு சொல்லியிருக்கேன், கெடைச்சா ஆண்டவன் புண்ணியம், இவனும் குடிக்கிறத நிறுத்திட்டு அங்க வந்து எதாவது வாட்ச்மேன் உத்யோகம் பாத்தான்னா பரவாயில்லையே… நாம ஓஹோன்னு பொழைக்கலாமே…, நாலு நாள் ஓடி ஓடி சம்பாதிக்கிறான், எட்டு நாள் ரோடு ரோடா குடிச்சிட்டு விழுந்து கெடக்கறான், படிச்சவன் தானே, இவனோட படிச்சவங்க கம்பெனியில சேந்து ஆயிரமாயிரமா சம்பாதிக்கல, குடிச்சே அழிஞ்சி போயிட்டான்,
படிச்சவன்னு என் அம்மா இவனுக்கு வீட்ட வித்து கல்யாணம் பண்ணி வச்சா? இப்ப இல்லாட்டியும் ஒரு நாள் வேலை கெடைக்காமயா போயிடும்னு சொன்னா? வேலையும் கெடைக்கல ஒன்னும் கெடைக்கல, அவ போய் சேந்துட்டா. புடிச்சிகுடுத்த கை சொறங்கு புடிச்ச கையின்னு அவளுக்கு என்ன தெரியும்,
“யேய்… என்னடி சும்மா இருக்கவங்க, சீக்கிரம் தின்னுங்கடி… வெளக்கு சும்மா எரிஞ்சிகிட்டு இருந்தா சீமெண்ணைக்கு எங்க போறது,”
அவர்களுக்கு தொண்டையில் அந்த களி இறங்க மாட்டேன் என்கிறது,
“சீக்கிரம், ம்… எடு எடுடி… கையில, ஐஞ்சி நிமிசத்தில சாப்பிடணும்,”
“நல்லா இல்லம்மா…” ரெண்டாவது பிள்ளை சொன்னது, இதை தத்துக்கு கேட்டார்கள், நல்ல அழகாய் இருக்கும், ஏகத்துக்கும் அறிவு, என்னமா பேசும், அதனால் கேட்டார்கள், தத்து குடுத்திடுனு, நான் ஏன் தரணும், பட்டினியா செத்தாலும் என்னோட சாகட்டும் அதுங்க,
“எல்லாம் நல்லா இருக்கும் சாப்பிடு,”
“நல்லா இல்லம்மா…” ரெண்டாவது புள்ளை புத்திசாலியாக அழகாக இருந்தால் மட்டும் என்ன? அடித்தால் வலிக்காதா? இருக்கிற கோபத்தையெல்லாம் அதன் மேல் காட்டினாள், நாளைக்கு கடன் கொடுத்தவன் வட்டி கேட்டு வருவான். காசுக்கு எங்கே போக… நாளையில இருந்து வேலைக்கு வரவேணான்னு சொல்லிட்டா. வேலைக்கு எங்க போக… குடிகாரன் இன்னும் வரவேயில்லை. இந்த இருட்டில தேடிட்டு எங்க போக…,
வீட்டுல உப்பு. மிளாகாய் சொட்டு இல்லை. வாங்கறதுக்கு எங்க போக… இத்தனை பிரச்சினைகளுக்கும் அந்த குடிகார புருசனையா அடிக்க முடியும், அவன் தானே தினம் இவளை அடிக்கிறான், அதனால் பிள்ளைகளை அடித்தாள்,
இரண்டாம் பிள்ளை வலி தாங்காமல் வீரிட்டு கத்தியது, அந்த சத்தம் காதை பிய்த்துக் கொண்டு போய் இவளை வெறி கிளப்ப ரெண்டாம் பிள்ளையின் மயிற்றை பிடித்து இழுத்து குனிய வைத்து முதுகில் படீர் படீர் என்று அடித்தாள், முதல் பெண். அதுதானே மூத்தது தடுக்க வேண்டிய கட்டாயம், தடுக்க வந்தவள் கன்னத்தில் பொறி பறக்க அறை வாங்கினாள், கடைசி பிள்ளை இவர்களின் சத்தத்தில் வீரிட்டபடி தூக்க கலக்கத்தில் எழ அதைப்பிடித்து உலுக்கி தொப்பென்று உருட்டி பாயில் விட்டாள், மூன்றாம் பிள்ளை பயத்தில் மண்தரையில் மூத்திரம் போனதுமில்லாமல் கால் உதைத்து அழும்போது பக்கத்தில் இருந்த சொம்பு நீரையும் கொட்டிவிட்டது, படுக்க இடம் இல்லாமல் போனதால் அதை எட்டி உதைத்தாள், வேதனை எத்தனை பேர் எத்தனை விதமாய் சொன்னாலும். பாடினாலும.; எழுதினாலும் பட்டவர்களுக்கு தான் தெரியும் வேதனை, வறுமை கொடிது, வறுமை மிகக் கொடிது,
பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் நின்று கத்தினான் ,”ஏய் நாய்ங்களா… ராத்திரியில மனுசன் தூங்கறதா இல்லையா? பிசாசுங்க மாதிரி கத்தறிங்களே… மூடிட்டு தூங்குங்கடி, சத்தம் போட்டா சட்டி பானைய தூக்கி வெளிய போட்டுடுவேன் ஆமா…”
அவனுக்கென்ன ஜவுளிக் கடை வைத்திருக்கிறான், காசாக கொட்டிக் கிடக்கிறது, வயிறுமுட்ட தின்ற அவன் பிள்ளைகள் காம்ப்ளான் குடித்துவிட்டு டிவி பார்த்தபடி தூங்குவார்கள், பசியில் நல்ல உணவு கிடைக்காமல் அம்மாவை கெஞ்சுகிற இந்த பிள்ளைகள் கத்தாமல் இருப்பார்களா?
அவன் வீடு புதுசு, கண்ணாடி மாதிரி கட்டிவச்சிருக்கான், பக்கத்தில இருக்கிற குடிசை அவனுக்கு இலக்காரம்தான், எத்தனையோ பேசி பாத்துட்டான். ஆள்வெச்சி மெரட்டி பத்துட்டான், குடுத்திடு இந்தவீட்டன்னு, இந்த விசயத்தில குடிகாரன் பரவாயில்லை, “எவன் வந்து கேட்டாலும் இருக்கிற வீட்ட குடுக்க மாட்டன்டா டோய்…”னு தண்ணிபோட்டு வந்து சத்தம் போட்டதில் ஜவுளி கொஞ்சம் அடக்கமாகத்தான் இருக்கான், அந்த கோபத்தை அப்பப்ப இப்படி புருசன் இல்லாத நேரத்தில காண்பிப்பான்,
“எதுக்குடி புள்ளைங்க அழுதுங்க தள்ளாடியபடி குடிகாரன் வந்து சேர்ந்தான், நேத்தே காசு இல்லாமல் இருந்தான், இன்றைக்கு எப்படி வந்திருக்கும், குடிகாரன்களுக்கு மட்டும் காசு எப்படியாவது வந்து விடுகிறது, அது மாயாஜாலம்,
“கேக்கறேன் இல்லே, சொல்லுடி புள்ளைங்கள. என் கண்ணுங்கள என்னடி பண்ண நீ, அடிச்சியாடி…? கொன்னுபோடுவேன், சொல்லு அடிச்சியா…? டேய் கன்னு அடிச்சாளாடா…? சொல்லு, கொன்னு போட்டுடறேன் அவள, இவ போனா இன்னொரு கழுதை…,, சொல்லு கன்னு”
சும்மா ஒரு இதுக்கு. பொழுது போக்காவே பொண்டாட்டிய அடிக்கிற இவனுக்கு. காரணம் கெடைச்சா போதாதா… வீடு முழுக்க பாத்திரங்கள் இடிபட தள்ளாடி தள்ளாடி அவளை அடித்துக் கொண்டிருந்தான், பிள்ளைகள் மூலைக்கொன்றாக நின்று அழுது கொண்டிருக்கின்றன, இன்னும் கொஞ்சம் நேரம் அப்படித்தான் இருக்கும், பிறகு மெல்ல அடங்கும், அரவம் அடங்கும், கூச்சல் அடங்கும், அவன் வாந்தி எடுத்துவிட்டோ எடுக்காமலோ ஆடை அவிழ்ந்தபடி தூங்கிவிடுவான், பிள்ளைகள் அழுது ஓய்ந்த அயற்சியில் ஒன்றொன்றாய் கேவியபடி தூங்கிவிடும்; அவள் பிறந்த சோகத்தை. வளர்ந்த சோகத்தை. வாழ்ந்த சோகத்த நினைத்தபடி தூங்கிவிடுவாள், மையிருட்டில் யாருக்கும் தெரியாமல் பட்டினி உயிர்கள் சவம் போலும் இப்டி தூங்கிக் கொண்டிருக்கும், நிலா பார்ப்பவர்கள் பார்க்கலாம், நட்சத்திரம் பார்ப்பவர்கள் பார்க்கலாம்,
எல்லோருக்கும் விடிவது போல இவர்களுக்கும் பொழுது புலர்கிறது, அவன் எழுந்துவிட்டான், போதை தெளிந்திருந்தது, தலை வலியெடுக்கிறது, காப்பி வேணும், பால் கலக்காத காப்பி, குடித்தால்தான் தலைவலி போகும், அது அவன் பழக்கம், பிள்ளைகள் ஒவ்வொன்றாக எழுந்தது பசியில் பரிதாபமாக அம்மாவை எழுப்பிக் கொண்டிருந்தன, இத்தனை நேரம் தூங்க மாட்டாளே… இன்னுமா தூங்கறா,,?
“ஏய் எழுடி… நேரமாச்சி சாப்பாடு செஞ்சிட்டு வேலைக்கு போகலையா?”
அவள் எழவில்லை, செத்துபோயிட்டாளா, வயித்தில் ஒதைச்சிருக்கக் கூடாது, பிள்ளைகள் இத்தனை புரட்டியும் சவம் போல உருள்கிறாளே… தொட்டுப்பார்த்தான், சில்லென்றிருந்தது உடம்பு, அய்யைய்யோ… மெய்யாலுமே செத்துப் போயிட்டாளா…? நாலு புள்ளைங்கல எவன் காப்பாத்தறது, முடியாதுடி யம்மா எழுந்துக்கோ… செத்து போயிட்டியா நீ,, போய் மூக்கில் கை வைத்து பார்த்தான், மூச்சி வரலையா? ஐயையோ… பிறகு மெல்ல சிரித்துக் கொண்டான், கண்ணுங்களா உங்க அம்மா இன்னும் சாகலை… எழுந்துக்குவா இருங்க…
கடைசி பிள்ளை கொஞ்சம் பிஞ்சு, அதற்கான பால் இன்னும் அவள் மார்பில் இருக்கிறது, அந்த பிள்ளை கத்தியதும் அவளால் தூங்க முடியவில்லை, எழுந்துகொண்டாள், சமாதானபடுத்தி பால்கொடுத்தாள்,
“காப்பிபோட்டு குடுடி…”
“காப்பி தூள் இல்ல
“நான் வாங்கியாறேன்”
“சக்கரை இல்ல”
“நான் வாங்கியாறேன்”
“நீயா…? காசு”
“இருக்குடி நெறைய இருக்கு, அட்வான்ஸ் வாங்கியிருக்கேன், ஐநூறு ரூவா,”
“பொய் பேசாத… எங்க காமி”
“நான் ஏண்டி பொய் பேசறேன், இதா பாரு, எங்க வம்சத்தில எவனும் பொய்பேச மாட்டான், தெரிஞ்சிக்கோ…”
“இருநூறுதானே இருக்கு, மிச்சம் எங்கயா…? குடிச்சிட்டியா… அவ்வளவு குடிச்சிட்டு வெறும் வயித்தோட படுத்தியா? கொடல் வெந்து ரத்தவாந்தி எடுத்து எங்கள நடுத்தெருவுல நிறுத்திட்டு சாகப்போற நீ…”
“அப்டிலாம் சாக மாட்டேண்டி… சும்மா சாபம் விடாத, பாவமா இல்ல என்ன பாத்தா?”
“அதான் கேக்கறேன், அவ்வளவு காசுக்கு குடிச்சிட்டு வெறும் வயித்தில் படுத்தா வயிறுவெந்து கருகி போயிடாதா?”
“எப்படி கருகும்? ஏழு பரோட்டா. ஒரு பிளேட் மட்டன். ரெண்டு ஆம்லேட். ஒரு ஆப்பாயில், எப்படி கருகும்”
அவளுக்கு கண்கலங்கின, ராத்திரி நல்லசாப்பாடு கேட்டு இந்த பிள்ளைகள் பட்டினியாக படுக்கிறது, மூன்று ஆள் தீனியை ஒருத்தன் தின்று வந்து பிள்ளைகளுக்கு முன்பே இதை சொல்கிறான், இவன் தகப்பன், இவனுக்கும் பிள்ளைகள் பிறக்கின்றன,
“புள்ளைங்க ராத்திரி பட்டினியா படுத்திச்சிங்க தெரியுமா உனக்கு”
“சாப்பாடு செஞ்சி போடறதுக்கு என்ன?”
“வீட்டுல என்ன இருக்கு, கொஞ்சம் ராகிமாவு இருந்தது களி செஞ்சேன், வெறகு இல்லே சரியா வேகவும் இல்ல, பிசுபிசுன்னு இருக்கு, புளிச்ச கீரையில உப்பில்லாம கடைஞ்சா புள்ளைங்க எப்படி சாப்பிடும் சொல்லு, அதுங்க நல்ல சாப்பாடு சாப்ட்டு எத்தனை நாள் ஆச்சி தெரியுமா?
“நீ கரியும் முட்டையுமா தின்னுட்டு வந்திருக்கே…”
“காசு இருக்கே, இப்ப பாரு நான் போயி கிடாஆட்டுக் கறியும் மைதாமாவும் வாங்கியாறேன், பரோட்டா போட்டு கொழம்பு வை”
“பரோட்டா சுட தோசைசட்டி வேணும், அதை வாங்கு மொதல்ல,”
“கருமாந்தரம் புடிச்சவளே…இந்த காசுக்கு தோசசட்டி மட்டுந்தாண்டி வரும். இன்னொரு நாளைக்கு தோசசட்டி வாங்கிக்கிடலாம், இன்னைக்கு கறியும் சோறும்”
“கறி சோறு தின்னுவியா? இன்னம் கொஞ்ச நேரத்தில கடன்காரன் வருவான்,”
“நான்வேனா தண்ணி போட்டுட்டு வந்துடட்டுமா? பயத்தில கேக்க மாட்டான்,”
“தண்ணி போட்டா அவன் உன்ன கேக்க மாட்டான், என்ன கேப்பான் ஆத்தா அம்மான்னு”
“என்ன செய்யட்டும்”
“அவனுக்கு நூறுரூபாய் குடுத்துடு, அரை கிலோ கறி எடுத்துக்கோ, உப்பு மட்டும் வாங்கிக்கோ போதும்”
“சோத்துக்கு…”
“அது வேறையா… அரிசி அரைகிலோ வாங்கிக்க”
“அவ்வளவுதான் காசு சரியா போச்சி”
“எப்படி? இன்னும் ஐம்பது மீதியாகுமே”
“எனக்கு தண்ணிக்கு வேணுமேடி… தண்ணியடிச்சிட்டு சாப்ட்டாதாண்டி கறிகொழம்பே ருசிக்கும்,”
“எங்கயோ ஒழிஞ்சி போ, இது உருப்பிடற குடும்பம் இல்ல,”
“சும்மா சலிச்சிக்காதடி… நான் இப்படியேவா இருந்திடுவேன், அடுத்தவாரம் நூல் மில்லுக்கு ஆள் எடுக்கிறாங்களாம், அங்க போயி சேந்திட்டா என்னடி கஷ்டம் நமக்கு,”
“நெஜமாவா?”
“ஆமாம், பாரு ஒரே வாரம் சேந்திடறேன், மொத நான் பாத்த வேலை தானே, சம்பளமும் கூட தருவாங்க, எழுந்து ஆகற வேலைய பாரு, இம்மா நேரம் தூங்கறே, வேலைக்கு போகலையா, செத்துப்போயிட்டனு நெனைச்சேன்,”
“செத்தா இன்னொன்னு கட்டிக்கிடலான்னு பாத்தியா?”
“ஆமா”
“கட்டிக்கோ, அவளுக்கும் நாலு பெத்துக்கோ,”
“சும்மா தமாஷ் கண்ணு, நீ ஏன் தூங்கினே சொல்லு,”
“அந்தம்மா வேலைக்கு வரவேணான்னு சொல்லிட்டா, வேற வீடுதான் பாக்கணும்,”
“அப்டியா…? கண்டுக்காத, நான் வேலைக்கு போயிட்டா நீ எதுக்கு வேலைக்கு போகணும், கண்டுக்காத, நான் கடைக்கு போயிட்டுவந்திடறேன்,”
“யோவ் காப்பிதூள் வாங்கிட்டு வந்திடுயா, உனக்கு தலைவலி போகாதே அத குடிக்கலனா,”
கறி வந்துவிட்டது, அதை வெட்டுவதை. மசால் அரைப்பதை. அதை சட்டியில் இட்டு கொதிப்பதை வேடிக்கை பார்க்கின்றன பிள்ளைகள், இதற்கு முன் இந்த வீட்டில் இப்படி ஒரு வாசனையை பார்த்ததேயில்லை, கம கமவென கறிக்குழம்பு வாசனை, தளதளவென கொதிக்கிறது, நாக்கில் எச்சில் ஊறுகிறது, சீக்கிரம் சீக்கிரம் என்று நச்சரித்தபடி தட்டை எடுத்து வைத்து ஏந்தியபடி தட்டில் விழப்போகும் கறித்துண்டிற்காக காத்திருக்கின்றன நான்கு. குடிகாரன் வீட்டு இளவரசிப்பிள்ளைகள், “வேகட்டும் இருடி…” என்று அம்மா சமாதானம் செய்கிறாள், அந்த மனுசன் மில் வேலைக்கு போனால் மாசமொரு முறை கறிக் குழம்பிற்கு பஞ்சமிருக்காது இல்லையா?
வெளியே புல்லட்டில் கடன் கொடுத்தவன் புடுபுடுவென வருகிறான், புருசன் கடன் அடைக்க நூறுரூபாய் தந்துவிட்டு தண்ணியடிக்க சென்றிருக்கிறான், இவள் அந்த நூறை புல்லட்காரனிடம் தந்து சரியா இருக்கா என்கிறாள், அவன் சரியா இருக்கு என்று இளித்தபடி பைக்கை உதைத்து கிளம்புகிறான்,
உள்ளே மூன்றாம் பிள்ளை ஆர்வக்கோலாறில் கறிக்குழம்பு கொதிக்கும் அழகை பார்த்தபடி அம்மாவைப் போல் கரண்டி வைத்து குழம்பை கிளறுகிறது, அம்மா வந்து “ஏய் எண்ணடி பண்ணற? அதுக்குள்ள என்ன அவசரம்” என்கிறாள், அம்மா போட்ட சத்தத்தில் பிள்ளை கரண்டியை தவற விடுகிறது, அது பக்கத்தில் இருந்த மண்னென்னை பாட்டில் மேல் விழுகிறது,
மண்ணென்னை பாட்டில் கவிழ்ந்து அடுப்புக்கும் அடுக்கிவைத்திருந்த விறகுக்குமாக சிந்தி அடுப்பிலிருந்த நெருப்பு விறகிற்கும் விறகிலிருந்து தென்னை ஓலைக்கும.; தென்னை ஒலையிலிருந்து கூரைக்குமாக தாவுகிறது, மண்ணென்னை விதியின் ஏவலாள்;, சடசடவென பற்றிக் கொள்கிறது, அவள் தண்ணீரை அள்ளி நெருப்பில் ஊற்றப்போக. அந்த படபடப்பில் பிள்ளை இடிபட்டு நெருப்பில் விழப்போக. நெருப்பு சுட்டு வேதனை தாங்காமல் பிள்ளை கத்த. சுட்ட இடத்தை இவள் பார்த்து சமாதானம் செய்வதற்குள் சிறு நெருப்பு அசுரனாய் கூரையை பிடித்திருந்தது,
கத்தியபடி உள்ளே தூளியில் இருந்த நான்காம் பிள்ளையை எடுத்துக் கொண்டு. மற்ற பிள்ளைகளையும் இழுத்தபடி வெளியே வந்து கத்த ஆரம்பித்தாள்,
“ஐயோ வீடு பத்திக்சிச்சே…”
அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீர் கிடைத்தவர்கள் தண்ணீரும், வீடு கட்ட கொட்டி வைத்திருந்த மணல் கிடைத்தவர்கள் மணலும் எடுத்து போட்டு அணைத்தார்கள், ஒரு வழியாக நெருப்பை அணைத்தாயிற்று, ஒரு பாதி அளவுக்கு கூரை எரிந்து கிழட்டு நாய் போல பல் இளித்து நின்றது, இனி இவள் எந்த கூரைக்கு கீழ் படுப்பாள்,
பக்கத்து வீட்டு ஜவுளிக் கடைக்காரன் சேதி கேட்டு கடைவீதியிலிருந்து ஓடிவந்தான், அவன் ஜவுளி சரக்கெல்லாம் அந்த குடிசை வீட்டை ஒட்டிய அறையில்தான் அடுக்கி வைத்திருக்கிறான் அதவும் பற்றிக்கொள்ளுமோ என்று பதறி உயிர் போகுமளவுக்கு பயந்து போனான், “நாதேறி முண்ட… பொறுப்பில்லாம வீட்ட பத்தவச்சிருக்கியே… பக்கத்தில இருக்கிற துணி பத்தியிருந்தா லச்சரூபா போயிருக்குண்டி, இந்நேரம் என் வீட்டையும் எரியவுட்டிருப்பே, இனிமே இங்க குடியிருந்தா கொன்னே போட்டுடவேன், ஊரு விட்டே ஓடிபோயிடு” என்று சொல்லியபடி அவளை மயிற்றை பிடித்து அடிக்க ஆரம்பித்தான், நான்கு பிள்ளைகள் அழுகின்றன, அவனோடு சேர்ந்து கொண்டு அவன் மனைவியும் அடித்தாள், ஊர் இது நியாயம்தானே லச்சரூபா துணி எரிஞ்சி போயிருந்தா இவ தருவாளா என்று வேடிக்கை பார்த்தது,
இன்னொரு பக்கத்து வீட்டுக்காரனும் சேதி கேட்டு ஓடி வந்தான், நெருப்பை அணைக்க அவன் வீடு கட்ட வைத்திருந்த மணலை எடுத்து சேதாரப்படுத்திவிட்டார்கள், அவன் மணலுக்கு காசு கேட்டு அடித்தான், வாயின் ஓரமாக அவளுக்கு ரத்தம் வந்தது, உதைத்ததில் கீழே விழுந்து கிடந்தாள்,
குடிகாரன் வந்தான், பத்து பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு அடித்தார்கள், ஊடு எரிஞ்சி போயிருக்கு போய் தண்ணி போட்டுட்டு வந்திருக்கானே என்று சொல்லி சொல்லி அடித்தார்கள், அவனுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது இந்த போதையில்,
குடிகாரன் நடுரோட்டில் அடிபட்டதால் இன்னும் ஏறிக் கொண்டிருந்த போதையில் விழுந்து கிடக்க. இவள் நான்கு பிள்ளைகளோடு எரிந்த வீட்டின் வாசல் முன்பாக கண்ணீரோடு மண்டியிட்டு உட்கார்ந்திருந்தாள், ஆசை ஆசையாய் பிள்ளைகள் வாயில் எச்சில் ஊற கொதித்த கறிக்குழம்பு சட்டியில் மண்ணும் தண்ணீருமாக நிரம்பி ஆறிப் போயிருந்தது, எரிந்து போகாத ஜவுளிக் கடைக்காரணின் லட்சரூபாய் துணிகளுக்காக வருத்தப்பட்ட இந்த ஜனம் மண்விழுந்த குழம்புச்சட்டியைப் பற்றி கடைசிவரை பேசிக் கொள்ளவேயில்லை.