கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 9,617 
 
 

(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆழ்ந்துதுயின்று கொண்டிருக்கும் அவள் உண்மையிலேயே உறங்குகிறாளா அல்லது தன்னிலை நழுவியேங்கிக் கிடக்கிருறாளா என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளை ஏக்கத்துடன் உற்றுப் பார்த்துப் பெருமூச்செறிந்தான்.

பனியில் நனைந்து வெளுத்திருக்கும் மலரில் சிதறிக் கிடக்கம் பனித்துளிகள் போல் அவள் முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. துவண்ட மேனியளாக ஒரு கையைத் தலைக்கு மேலாக மடித்துக் கொண்டு, மற்றொரு கையை மார்பின் மீது துவளவிட்டு அவளும் பஞ்சனையில் துவண்டு கிடந்தாள்.

‘அவள் அழகிதானா? அவள் கறுப்பில்லையா?’

கண்ணன் தன்னையே கேட்டுக் கொண்டு அவளை உற்றுக் கவனித்தான். காலம் கடந்த வினா என்பதையும் அவன் உள்ளுணர்வு உணரத்தான் செய்தது.

அவள் அழகிதான். சந்தேகமில்லை. கறுப்பு அழகில்லை என்றால் கரிய திருமேனி யனாகிய அந்தத் திருமாலுக்கு அத்துணை மகத்துவம் வருவானேன்? அவன் தங்கை பார்வதி? மாதா பராசக்தி அல்லவா? வையமெல்லாம் வாழ வைப்பவளும் கறுப்புத்தான்.

இதோ கட்டிலில் கண் கவரும் இந்த பாமா தன்னிலே நிறைவு பெற்றுப் பார்ப்பவர்களையும் நிறைவு பெறச் செய்யும் அடக்கமான அழகி.

ஆனால், ஆறேழு வருஷங்களுக்கு முன் கண்ணனுக்கு இதொன்றும் விளங்கவில்லை.

அவள் கரிய நிறம்தான். அது மட்டுமில்லை. ஒற்றை நாடியான தேக அமைப்பு. தலை நிறைய சாட்டைபோல் நெளியும் கூந்தல் அழகு அந்தக் கறுப்பின் முன் எடுபடவேயில்லையே!

பாமா அவன் அறையில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்தவுடன் ஏதோ ஒரு மிருகத்தைப் பார்ப்பதுபோல் அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

கோயிலில் இருக்கும் விளக்குப் பெண் ஒன்று அசைந்தாடி நிற்பதுபோல் தோற்றமளித்தாள் அவள். வெட்கம் வேறு அவளைச் சூழ்ந்துகொள்ளவே குனிந்த தலையை அவள் நிமிர்த்தவேயில்லை.

“என்ன இது? எங்கே வந்தாய்?” கண்ணனின் அதட்டும் குரலில் அவள் துணுக்குற்று நிமிர்ந்தவுடன் அழகின் பூரணத்துடன் நெடிதுயர்ந்து நிற்கும் கணவனை நன்றாகப் பார்த்தாள். பார்த்தவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

‘இவர்? இவர்? இவ்வளவு அழகா? அம்மாடி!’- மனம் பொங்கிப் பூரிக்க விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள் பாமா.

கண்ணன் சுட்டெரிப்பதைப் போல அவளைப் பார்த்தான்.

“அதோ பார்! இது என்னுடைய அறை. இங்கே உனக்கு ஒன்றும் வேலை கிடையாது. நீ போகலாம்.”

வாசற்படியைச் சுட்டிக் காட்டிய விரலின் அசைவிலேகூட வெறுப்பு நிழலாடியது. அவள் வெளியே வரவில்லை. அறையின் மூலையில் முடங்கிக் கொண்டாள்.

இதோ இன்று பஞ்சணையில் அமைதியாக உறங்குகிறாளே அதே பாமாதான். இந்த பாமா வேறு. வேதனைத் தீயில் தன்னை அர்ப்பணம் செய்து மீளா இதயநோய்க்கு ஆளாகி இன்று கணவனின் அன்பை அடைந்தும் அநுபவிக்க முடியாமல் ஏங்கிக் கிடக்கிறாள்.


விடிய இன்னும் இரண்டு ஜாமங்கள் இருந்தன. வெளியே புல்தரையில், இலைகளில், தென்னங் கீற்றுகளில் பனிநீர் முத்து முத்தாகப் பளபளத்தன. அவள் முகத்தில் அரும்பி யிருந்த வியர்வையைத் துண்டில் ஒற்றிவிட்டான் கண்ணன்.

கணவனின் கரம் பட்டவுடன் அவள் இமைகள் லேசாகத் திறந்து மூடின. வெள்ளை வெளேர் என்று வெளுத்திருந்த அந்த விழிகளில் சோகம் பொழியும் இரு கருமையான வட்டங்கள் ஒளி மங்கிப் புரண்டு கொடுத்தன.

“பாமா! பாமா! ஏதாவது சாப்பிடுகிறாயா? பழரசம் தரட்டுமா?”

பாமா மூடிய விழிகளைத் திறக்காமல் அவன் கொடுத்ததைச் சுவைத்து, உதடுகளை நாக்கினால் தடவிக்கொண்டே அயர்வுடன் படுக்கையில் கிடந்தாள்.

கண்ணன் சாய்வு நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தான். பாழும் பொழுது நகர்வதாகக் காணோம்.

நோயாளியும், இராப் பொழுதும் ஒன்றுடன் ஒன்று உறவாடி இணைந்து மெதுவாக நகர்வதுபோல் இருந்தது அவனுக்கு. இவளை அவன் அழகில்லை என்று அன்று ஒதுக்கிய காரணம? பெண்ணைப் பார்ப்பதற்கு அவனும்தான் போயிருந்தான். யாரும் அவன் கண்களைக் கட்டிவிடவில்லை.

வீட்டுக்கு வந்ததும் அம்மா, ‘என்னடா சொல்கிறாய்’ என்று கேட்டாள்.

“நீ என்ன சொல்கிறாய்?”

“நிறம்தான்-” என்று இழுத்தாள் அம்மா.

“அப்போ விட்டுத் தள்ளு. வேறு பார்க்கிறது…”

“தள்ளுகிறதா? அவர்கள் செய்கிற மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள். பெண்களின் கறுப்பு நாளடைவில் உதிர்ந்து போகும். அதுதான் ஏதேதோ விற்கிறதே இந்த நாளில் பூசிக்கொண்டால் சிவப்பாகிவிடுகிறாள்-“

“சரி-உன் இஷ்டம்.”

மாப்பிள்ளை அழைப்பைச் சாதாரணமாகவா நடத்தினார்கள்? இரட்டை நாயனம் பாண்டு உள்பட அமர்க்களமான ஊர்வலம் தன்னுடைய பிள்ளை வைர மோதிரம் பளபளக்க, சூட்டும், கோட்டுமாக ஊர்வலம் வருவதைப் பெற்ற மனம் கண்டு பூரித்துப் போயிற்று. சும்மாவா பின்னே? ஒரு மாவட்டத்துக்கே அவன் அதிகாரி. கலைக்டர்!

நிச்சய தாம்பூலத்தின்போது உள்ளேயிருந்து பெண்ணின் வரவை எல்லாரும் எதிர்பார்த்து அந்த அறையின் வாசற்படியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாமா வந்தாள். சம்பந்தி வீட்டில் கசமசவென்று பேச்சு ஆரம்பமாயிற்று.

‘கறுப்பு. கறுப்பு…’ எல்லாருமா அப்படிச் சொல்ல வேண்டும்?

“ஏண்டா கண்ணா! இந்தக் கரிக்கட்டையைக் காலில் கட்டிக்கொண்டாயே அப்பா, உனக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா?” அவன் மாமி வந்து பொரிந்து தள்ளியவுடன் கண்ணன் நிலை கொள்ளாமல் தவித்தான்.

தீர்ந்துபோன விஷயத்தை ஒழுங்குபடுத்தி உருவப்படுத்திப் பேசித் தீர்ப்பதற்கென்றே பலர் வந்திருந்தார்கள். பந்தல் நிறைய பளபளத்த பாத்திரங்களின் பெருமையிலேயே லயித்திருந்த அவன் தாய்க்கு தன் மருமகளை ஏறிட்டுப் பார்க்க அன்று மாலைதான் முடிந்தது.

அந்த ஆணழகனின் பக்கத்தில் பாலில் விழுந்த தூசுபோல் அவள் அமர்ந்திருப்பதைத் தாய் கவனித்தாள்.

‘நம் கண்ணனின் அழகு எங்கே? எல்லாரும் சொல்வதுபோல நாம் பணத்துக்கு அடிமையாகிவிட்டோமா?’

கண்ணன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. ‘மாப்பிள்ளைக்கு என்ன குறை? கலகலப்பாக இல்லையே’ பெண் வீட்டார் முன்பு இந்தக் கேள்வி பெரிய உருவில் நின்று அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது.


இதோ அவன் எதிரே கண்மூடி மெளனியாகிப் படுத்திருக்கும் அவளைக் கவனித்தான் கண்ணன்.

“மிஸ்டர் கண்ணன் உங்கள் மனைவியின் உலக வாழ்க்கை இனி நாட்கள் அளவில்தான் இருக்க வேணடும். அந்த மார்வலி வந்தால் அவள் பிழைக்க மாட்டாள்.”

ஒரு வாரத்திற்கு முன்பே வைத்தியர் முடிவாகக் கூறிவிட்டார். வியாதியின் முடிவாக, வைத்தியரின் முடிவாக மட்டும் இருந்திருந்தால் அவன் வேதனைப்பட மாட்டான். மாலையிட்டுத் தன்னை மணாளனாக ஏற்றுக்கொண்ட மறு விநாடியிலிருந்து அவள் இதயச் சுவர்களைத் தகர்த்து அவளுக்கு இவ்வித முடிவை ஏற்படுத்தியவன் அவன்தானே.

மறுபடியும் அவன் அவளை உற்று நன்றாகக் கவனித்தான். அவளுடைய நிறமே மாறிவிட்டதே. நல்ல சிவப்பாக இராவிட் டாலும், மாந்தளிர் மேனியளாக இப்பொழுது அவள் காணப்பட்டாள், கழுத்தில் பசுமையாகத் துலங்கும் மஞ்சள் சரடும் நெற்றியிலும் வகிட்டிலும் இட்ட குங்குமத்துடன் ஒரு தெய்வ மங்கையாகத்தான் இருந்தாள். அழகு என்பது – வெறும் வெளித் தோற்றத்தை மட்டும் பொறுத்ததில்லை. அழகின் இருப்பிடமே இதயம்தான் என்பதை அவன் புரிந்துகொள்ள இவ்வளவு காலம் பிடித்துவிட்டதே! வெளியே அமைதி மட்டும் இல்லை. ஒரே பனி. மார்கழி மாதத்தின் கூதல் உடலைத் துளைத்துவிடும்போல் இருந்தது. மெல்லிய துகிலால் உலகையே போர்த்திவிட்டாற்போல் உலகம் மறைந்து கிடந்தது.

இந்தப் பனியிலும் சாரலிலும் அவள் மேனியெங்கும் வியர்த்துக் கொட்டிக் கொண்டேயிருந்தது. வேதனைத் தீயைத் தணிக்க இயற்கை அவளுக்கு இந்த அற்புதமான வசதியைச் செய்து வருகிறது போலும்.

முதன் முதலாக அவளைச் சொல்லால் சுட்டவுடன் அவள் சகித்துக்கொண்டுதான் அதை விழுங்கிக் கொண்டாள். காலத்தின் தேய்வில் மனத்துக்கு மாறுதல் உண்டு என்று நம்பினாள். அவனோ? தன் அந்தஸ்தின் போதையில், அழகன் செருக்கில் அவளைத் துச்சமாக மதித்தான். ஒருநாள், ஒரு பொழுது அவன் குரலெடுத்துத் தன்னை அழைப்பான் என்கிற நம்பிக்கையில் ஒரு வருடம் ஓடிவிட்டது.

பாமாவின் அப்பா வந்தார் பெண்ணைப் பார்த்துப் போக.

“என்ன அம்மா இப்படி இளைத்துவிட்டாய்?” – உபசாரத்துக்காகக் கேட்ட வார்த்தை அல்ல.

“இல்லையே அப்பா, எப்பொழுதும் போலத்தான் இருக்கிறேன்.”

“நீ சொன்னால் எனக்குக் கண் இல்லையா அம்மா?”

தந்தையை ஏறிட்டுப் பார்த்தவள் தலையைக் குனிந்து, கண்ணீர் உகுத்தாள். அப்புறம் அவள் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள்.

“உன்னிடம் மாப்பிள்ளை பேசுவதே கிடையாதா? ஏனென்று கேட்பதில்லையா? நீ பேசாமல் இருக்க உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தமடி அம்மா!”

தாயின் கேள்விச் சரங்கள் மகளின் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து வேதனைப்படுத்தின.

“என்னை ஒன்றும் கேட்காதே அம்மா. அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னைப் பிடிக்கவில்லை.”

“பிடிக்கவில்லையாமா?” என்று இரைந்தார் தகப்பனார்.

தகப்பனார் இரைவதற்கு மேலும் ஒருபடி போகத் தயாராக இருந்தாள். ஆனால் பாமாவின் கரங்கள் அவர் முன் நீண்டு இடைமறித்தன.

தொலைதுாரத்திலிருந்த ரயில் நிலையத்தி லிருந்து ‘கூ’ வென்ற ஓசையுடன் ரயில் கிளம்பும் சத்தம் கேட்டது கண்ணனுக்கு. தன்னுள்ளே வெவ்வேறு மனத்தையுடையவர்களை ஏற்றிக்கொண்டு தான் சேருமிடத்தையே லட்சியமாக எண்ணி விரையும் அந்த ஓசையை உற்றுக் கவனித்தான்.

எப்படியோ அவனால் ஒதுக்கப்பட்ட பாமா மறுபடியும் அவன் இருப்பிடத்தை லட்சியமாகக் கொண்டு வந்துவிட்டாள்.

“எப்படி? எப்படி?” என்று மருகினான் அவன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியே போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அவன் கார் மரத்தில் மோதி அவனுக்குக் கால் எலும்பு முறிந்துவிட்டது. முதலில் ஆஸ்பத்திரியில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்கே வந்துவிட்டான். வீட்டில் யார் இருக்கிறார்கள்? அம்மாதான் போய் ஆறு மாதங்கள் ஆகின்றனவே! அதற்கும்தான் பாமா வந்திருந்தாள். அவன் ஒரு கோடியிலும், அவள் ஒரு கோடியிலுமாக இருந்து எப்படியோ தாயின் ஈமக்கடன்களை முடித்துவிட்டனர். கடைசியாக ஊருக்குப் போகும் தினத்தன்று அவள் கூடத்தில் அவன் முன் வந்து நின்றதும் அவன் சேவகனைத் திரும்பிப் பார்த்ததும், சேவகன் காரோட்டியை விளித்ததும் திரைக் காட்சிகள் போல் தெரிந்தன.

அவ்வளவு பெரிய வீட்டில் இதே கட்டிலில் படுத்து ஜன்னல் வழியாக அடிவானத்தையும், மரங்களையும், மனிதர்களையும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போயிற்று. அவன் மனமறிந்து குளிர்ந்த வார்த்தை பேசி நடந்துகொள்ள யாரிருக்கிறார்கள்?

திடீரென்று மனத்திலே ஏக்கம் பிறந்ததும் ‘அவள்?’ என்று நினைத்தான் அவன். ஆங்…அவளைப்பற்றிய நினைப்பு அவன் மனத்தின் மூலையில் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.

அவள் கருப்போ, சிவப்போ, அழகோ, குருபியோ வாழ்க்கைப் பிரயாணத்தில் அவனுடன் அவளால்தான் வரமுடியும். மற்றவர்கள் எல்லாரும் விருந்தினர் போலத்தான்.

அவன் மனம் இவ்விதம் முதன் முதலாக அவளைப்பற்றி எண்ணத் தொடங்கியபோது, எங்கோ ஒர் ஊரில் ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் தினசரித்தாளில் தன் வேதனையை மறக்க முயன்று கொண்டிருந்த பாமாவுக்குக் கலைக்டர் கண்ணனின் உடல்நிலை கொஞ்சம் சீரடைந்து வருவதாகச் செய்தி வந்திருப்பதைக் காண முடிந்தது. பதைபதைத்தாள் அவள்.

பூஜை அறையிலிருந்து வெளியே வந்த தந்தையை ‘அப்பா’ என்று அழைத்தாள்.

“அப்பா! அவருக்கு உடம்பு சரியில்லையாம். நான் போகிறேன் அப்பா அங்கே!”

‘யாருக்கு? அவனுக்கா?’ வெறுப்பாக உமிழ்ந்தார் அவர்.

“ஆமாம் அப்பா. போகிறேன்.”

“போ.போ…”


கட்டிலில் துயில் கொள்ளும் பாமா அசைந்து படுத்தாள். முத்தென வியர்வை முகமெங்கும் அரும்பி வழிந்தன. பனியிலே நனைந்து கசங்கியமலர் காற்றில் அசைவதுபோல் தோற்றமளித்தாள். “இந்த மலரை நான் எப்படித்தான் கசக்கி விட்டேன்?” துக்கம் தொண்டையை அடைக்க முணுமுணுத்தான் கண்ணன்.

அன்று காலொடிந்து கிடந்தவன் எதிரில் அந்தக் காலை நேரத்தில் தெய்வ மாதுபோல் வந்து நின்றாள் பாமா.

“நீயா?” என்றான் கண்ணன். “ஏன் வந்தாய்?” என்று கேட்டு வாசலைச் சுட்டிக் காட்டி விடுவானே என்று அச்சத்துடன் நுழைந்தவளுக்கு சாயுஜ்ய பதவி கிடைத்தாற்போல் இருந்தது.

“உங்களுக்கு உடம்பு சரியில்லையாமே.”

இருவரும் ஒன்றும் பேசவில்லை.

‘பாமா அழகிதான். அவள் கறுப்பாக இருந்தால் என்ன? பளிங்கான அவள் இதயத்தை அறிந்து கொள்ளாத பாழாகி விட்டேனே?’.

அவளை அவன் நன்றாகக் கவனித்துப் பேசவே அவன் மனச்சாட்சி இடங் கொடுக்கவில்லை. அன்பெனும் தெய்வத்தின்முன், குரூரமுள்ள ஒரு கல்நெஞ்சன் குற்றவாளியாக நின்றிருந்தான்.

கண்ணன் உடல்நிலை தேறியதும், மார்வலி என்று அவள் துடித்ததும், படுக்கையில் விழுந்ததும் அவன் மனச்சாட்சிக்கு ஒரு மறுப்பாக அமைந்தன.

‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதா?’

பாமா பேசி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எப்பொழுதாவது கண் திறந்தால் ஆவலுடன் அவனைப் பார்த்துவிட்டு, விழிக்கிடையில் முத்தென நீர் தேக்கி விழிகளை மூடிக் கொண்டு விடுவாள்.

‘பாமா எப்படியும் பிழைத்துவிட வேண்டும். இந்தப் பெரிய வீடடுக்கும், என் இதய சாம்ராஜ்யத்துக்கும் அவள் ராணி ஆகிவிட வேண்டும். ஆண்டவனே! அவளைப் பிழைக்க வைத்து விடு’ என்று வேண்டுவான் அவன்.

அவன் உள்ளக்குரல் ஓங்கி ஒலித்து ஆண்டவனே அடையும் முன்பே பாமா நீர் துயிலில் பனிபடர்ந்த அந்தக் காலை நேரத்தில் துவண்ட மலராக ஓய்ந்து விட்டாள்.

அவன் வாயடைத்து, மெய் விதிர்க்க சக்தி இழந்த சிவனைப் போல நின்றான். திருமகள் நீங்கிய வைகுந்தமாக அந்த வீடு மெளன சோகத்தில் ஆழ்ந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *