“சுஜி.. ஏ சுஜி..நான் சொல்றத கேளும்மா..வீணா அடம்பிடிக்காத..
நீ இப்படி பண்ணினா ,எல்லாரும் என்னதான் சொல்லுவாங்க..பொண்ண வளர்த்துருக்க இலட்சணத்த பாருன்னு..ப்ளீஸ் மா..அம்மா சொல்றத கேளும்மா..” என்று சுஜியை கெஞ்சி கொண்டிருந்தாள் சித்ரா.
“முடியாதும்மா போம்மா” என்று மீண்டும் அடத்தை தொடங்கினாள் சுஜி.
“ என்னங்க, இங்க வாங்க..வந்து உங்க பொண்ண இந்த புடவையை கட்டிக்க சொல்லுங்க..நான் சொல்ற எதையும் காதுல வாங்கராப்பல இல்ல இவ..எல்லாம் நீங்க குடுக்கற இடம்..என் பேச்சை இவ மதிக்கறதே இல்ல..நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு” என்று கணவன் ரகுவிற்கும் சேர்த்து அர்ச்சனையை ஆரம்பித்தாள் சித்ரா.
ஹாலிலிருந்து எழுந்து உள்ளே வந்த ரகு, “சுஜிக்கன்னா.. அம்மா சொல்றத கேளேண்டா..இந்த பங்க்ஷனுக்கு புடவை தான் மா சரி..அப்பதான் பொண்ணா லட்சணமா அழகா இருப்பே..கட்டிக்கோடா” என்று சொன்னான்
ரகுவை லேசாக நிமிர்ந்து பார்த்த சுஜி, இல்லப்பா, இது நிக்கவே மாட்டேங்குது..பாதில விழுந்துட்டா..”என்று பாதியிலேயே நிறுத்தி விட்டுசித்ராவை பார்த்தாள்
சுஜி யை பார்த்து முறைத்து விட்டு “இதோட நான் நாலாவது வாட்டி கட்டி விடறேன்.அங்க இங்கன்னு அலைஞ்சுகிட்டு, கலைஞ்சு போச்சுன்னு வந்து நிக்கிறா உங்க மக..நாம எப்ப கெளம்பி எப்ப எல்லாரையும் வரவேற்கிறது.அதுமில்லாம வரவங்க இவ ஜீன்சும் டாப்சுமா இருந்தா என்ன பத்தி என்ன நினைப்பாங்க..கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேன்கிறா” என்று சலித்தாள்.
இப்போது ரகு சுஜியை பார்க்க, அவள் மீண்டும் சித்ராவை பார்த்து விட்டு தலை கவிழ்ந்தாள்.
“போச்சு, இன்னிக்கு இவளால் நான் கட்டிவச்சுருக்கற மானம் மரியாதை எல்லாம் போக போகுது..எல்லாரும் என்ன கேள்வி கேக்க போறாங்க..பாட்டு பாடி பாத்துக்கோன்னு சொன்னா அதையும் செய்யல..அவங்க பாட சொன்னா என்ன பண்றது ஐயோ .. ” மீண்டும் புலம்ப தொடங்க,
ரகு..பொறு சித்ரா,,சுஜிக்கு அது முடிலன்னும் போது நீ ஏன் கம்பெல் பண்ற..அவ இஷ்டப்படி டிரஸ் பண்ணதான் விடேன் என்றான்.
உடனே சர்ரென்று ஏறியது கோபம் சித்ராவிற்கு..பொரிய ஆரம்பித்தாள்.
”இது தான் ..நீங்க கொடுக்கற இடம் தான் இத்தனைக்கும் காரணம்..இந்த அமெரிக்கால, நான் நம்ம பண்பாட கட்டிக்காக்கிற மாதிரி புடவை கட்டி பான்சி டிரஸ் காம்பெட்டிஷன் ல இவள வின் பண்ண வைக்க ட்ரை பண்ணறேன்.நீங்களும் இவளோட சேந்துக்கிட்டு ஜால்ரா தட்டுறீங்களே..ஸ்கூல் பங்க்ஷனுக்கு நாந்தான் சீப் கெஸ்ட்..இவ ஜெயிக்காட்டி என் கெளரவம் என்னாகும்.. இவ வயசுலேயே இவ்வளவு அடம் பண்ணா எனக்கு எவ்வளவு அடம் இருக்கும்..இத பாரு சுஜி..நீ இன்னைக்கு புடவைதான்கட்டற..ஜெயிக்கற.அவ்வளவுதான்” என்று சொன்னவளை,
புடவையை கையில் பிடித்துக்கொண்டு பரிதாபமாக பார்த்தது ஐந்து வயது சுஜி.