பண்ணை வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,127 
 
 

மதியம் முடிந்து மாலை தொடங்கும் நேரத்தில் எழுத்தாளர் ரங்கா ராவும் அவரது உதவியாளர் வேலுவும் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் நடந்து கொண்டிருந்தார்கள். வேலு பேசினான்.

‘ஏன் அண்ணே நாம இறங்கின பொன் விளைந்த களத்தூர் ஊர் பஸ் ஸ்டாப் லிருந்து ரொம்ப தூரம் கூட்டி வந்துட்டீங்க எந்த ஊர்ன்னு தெரியல பெயர்ப்பலகை கண்ணில் படலை… கால் குடையுது’

வனத்தின் நடுவில் இருந்த ஒரு பாறையில் வேலு அமர்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்.

‘என்ன பார்க்கறே’

‘திரும்பிப் போக வழி தெரியலைன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ‘

‘அதா நெனச்சே?’ என்றபடி மரத்தின் அடியில் உள்ள கருங்கல்லில் அமர்ந்தார் ரங்கா ராவ்.

‘இல்ல நான் ஒல்லிக்குச்சியா இருக்கேன். பாம்பு அல்லது வேற வனவிலங்குகள் வந்தா அலறி ஓடிடுவேன். வடிவேலு சார் சொல்றா மாதிரி நீங்க பல்கா இருக்கீங்களே எப்படி ஓடுவீங்க ன்னு யோசிச்சேன்’

‘நல்ல எண்ணம் யா உனக்கு’

‘ஏன் அண்ணே உங்களுக்கு இந்த ரங்கா ராவ் பேர் யார் வச்சாங்க?’

‘அது பெரிய கதை சுருக்கமா சொல்றேன்’

‘இருட்டுவதுக்குள்ள சொல்லி முடிச்சுடுவீங்களா’

‘எனக்கு பெயர் சூட்டற நிகழ்ச்சில எங்க அம்மா அவங்களுக்கு பிடிச்ச நடிகர் பேரு சொன்னாங்களாம் எங்க அப்பா அவருக்கு பிடிச்ச நடிகர் பேர் சொன்னாராம் சுத்தி இருந்த உறவினர் என்ன இப்படி சினிமா பைத்தியம் ஆக இருக்காங்கன்னு பார்த்தாங்களாம் அப்ப என்னோட அப்பா வழி தாத்தா நான் சொல்ற பேர் வைங்க எனக்கு பிடித்த நடிகர் ரங்கா ராவ் பேர் வைங்க ன்னு சொன்னாராம் இப்படி தான். தாத்தா பேரு சௌந்தர ராஜன், அப்பா பேரு வரதன் எஸ். வி. ரங்கா ராவ் ன்னு வந்துடுச்சு’

‘இதை மறக்காமல் உங்க சுயசரிதையில் எழுதுங்க.. அண்ணே அங்க பாருங்க மரங்களுக்கு இடையே ஒரு குட்டி பண்ணை வீடு.. அழகா இருக்கு’

வேலு சொல்லி முடிப்பதற்குள் எழுந்து நின்ற ரங்கா ராவின் முதுகில் ஒரு உருவம், துப்பாக்கியை வைத்தது.

‘அண்ணே இந்த தாத்தா உங்க முதுகில் துப்பாக்கி வெச்சி இருக்காரு’

பதறினான் வேலு.

தாத்தாவா என்றது அந்த உருவம். ‘இல்ல ஐயா பெரியவர் இல்லை ஒங்க உடுப்பு பார்த்தா இராணுவத்துல இருந்தா மாதிரி தெரியுது ஐயா’ என்றான் வேலு. ‘ரெண்டு பேரும் வாங்க என் கூட’ என்றார் அந்தப் பெரியவர் துப்பாக்கியைக் காட்டியபடியே. இருவரும் எதுவும் பேசாமல் அவர் பின்னால் சென்றனர். அவர் அங்கு இருந்த பண்ணை வீட்டுக்குள் அவர்களை அழைத்துச் சென்றார். அவர்களை இருக்கைகளில் அமர வைத்தார். துப்பாக்கியை கீழ் உடுப்புக்குள் வைத்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தார். ‘கலா’ என்று குரல் கொடுத்தார். உள்ளிருந்து மலர்ந்த முகத்துடன் ஓர் பேரிளம் பெண்மணி தண்ணீர் டம்ளர்களுடன் வந்தார். அவர்களிடம் கொடுத்தார். ரங்கா ராவும் வேலுவும் தண்ணீரைப் பருகினர்.

‘கலா இவர்தான் செங்கல்பட்டுல போதைப் பொருள் நடமாட்டம் பத்தி தைரியமா போலீசாருக்கு தகவல் கொடுத்த போலீஸ் இன்பார்மர் வாசு தம்பி’

வேலு சன்னமான குரலில் வினவினான் ‘ஒங்களுக்கு வாசுன்னு தம்பியா.. ஒரு வருஷமா வேலை செய்யறேன். சொல்லவே இல்ல’

‘சும்மா இருய்யா’ என்று முணுமுணுத்தார் ரங்கா ராவ்.

வீரப்பாவைப் போல் சிரித்தார் பெரியவர். ‘கலா நான் துப்பாக்கி முனையில் அழைச்சிட்டு வந்ததனால பாவம் பயந்துட்டாங்க அவங்களுக்கு டீயும் சமோசாவும் கொடு’ என்றார். பெண்மணி உள்ளே சென்று தின்பண்டங்கள் உள்ள தட்டையும் தேநீர் கோப்பைகளையும் இருவரின் முன்னால் இருந்த சிறிய மேசையில் வைத்தார். பெரியவர் சாப்பிடுங்க என்றவர் பேசத் தொடங்கினார் – ‘என் பேரு நாகரத்தினம். இவங்க என் மனைவி கலா ராணி. நான் இந்த ஒல்லி தம்பி சொன்னா மாதிரி எக்ஸ் மிலிட்டரி மேன்.. நீங்க சமுதாயத்துக்கு சேவை செஞ்சதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். துப்பாக்கி காமிச்சது சும்மா ஒரு வேடிக்கைக்கு மனசுல வெச்சுக்காதீங்க. இந்த பண்ணை வீடு எங்க அண்ணன் மகன் ராகேஷ்க்கு சொந்தம், இங்க இருங்க சித்தப்பான்னு அவன் எங்களுக்கு விட்டிருக்கான், கலா அந்த ரொக்கப் பரிசை இவருக்கு உன் கையால் கொடு ‘

பெண்மணி மீண்டும் உள்ளே சென்றார். வேலு முணுமுணுத்தான் ‘அண்ணே லீவு நாள்ல இங்க வந்ததுக்கு ரொக்கத்தை வாங்கிகிட்டு இடத்தை காலி பண்ணலாம். நான் அவன் இல்லைன்னு சினிமா டைட்டில் சொல்லாதீங்க ‘

இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே சென்று கை கழுவி விட்டு வந்து தேநீரை அருந்தினர்.

பணம் உள்ள உறையுடன் அந்தப் பெண்மணி திரும்பிய போது கட்டுடல் கொண்ட உயரமான இளைஞன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்தான்.

வாப்பா ராகேஷ்… எங்க அண்ணன் மகன்… ராகேஷ் துப்பறியும் நிபுணர் – டிடெக்ட்டிவ் ஏஜென்சி நடத்தறாரு. ராகேஷ், உனக்கு சிநேகம் ஆனார்ன்னு சொன்னியே செங்கல்பட்டு போலீஸ் இன்பார்மர் வாசு… நீ அவரோட இருக்குற போட்டோ ஷேர் பண்ணி இருந்த இல்லை, அதை வைச்சு மரத்தடியில் நின்னுகிட்டு இருந்தவர அடையாளம் கண்டு நான் அழைச்சிட்டு வந்தேன்’

ராகேஷ், அமர்ந்து இருந்த இருவரையும் ஏற இறங்கப் பார்த்தான்.

‘சித்தப்பா, வாசு, குழந்தைகள் திருமணம் நடக்கிற கிராமத்துக்கு போறேன், இன்னொரு நாள் ஒங்க சித்தப்பாவை வந்து பார்க்கறேன் ன்னு வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்ணாரே.. அப்ப சார் நீங்க… ‘

ரங்கா ராவ் பேசினார் -‘சார் ஐயா கையில் துப்பாக்கி உடன் அழைத்து வந்ததால சரியா அறிமுகம் செஞ்சுக்க முடியல, நான் வாசு இல்ல நீங்க கரெக்டா கண்டுபிடிச்சுட்டிங்க, என் பேரு ரங்கா ராவ் சென்னை ஆதம்பாக்கத்தில் ஜெராக்ஸ் சென்டர், பிரின்டிங் பிரஸ் நடத்திகிட்டு இருக்கேன். இவரு வேலு என் உதவியாளர் ஆக இருக்காரு தொடர் விடுமுறை கடைக்கு ஜனங்க வர மாட்டாங்கன்னு பொன் விளைந்த களத்தூர் வந்தோம் அங்கிருந்து நடந்தே இங்க வந்து சேர்ந்துட்டோம்’

வேலு சொன்னான் ‘அண்ணன் ஒரு எழுத்தாளர் கதாசிரியர் கூட. செய்தி மடல் பத்திரிகையில எஸ். வி. ஆர் ன்ற பெயர்ல சிறுகதை தொடர்கதை எழுதறாரு… ‘

‘அப்படியா ஒங்க கதையில எல்லாம் வரா மாதிரி என்ன ஒரு ட்விஸ்ட் ‘

பெரியவர் நாகரத்தினம் மீண்டும் வீரப்பாவானார்.

‘சரி ஐயா நாங்க உத்தரவு வாங்கிக்கறோம் என்றார் ரங்கா ராவ்.

‘ஒங்க கதை எல்லாம் படிச்சு இருக்கேன். நீங்க ஒங்க கதை சொல்லல் மூலம் நல்ல மெசேஜை எல்லாம் சொல்றீங்க.. கலா அந்த உறையை அவர் கிட்ட கொடு’

‘இல்லை வேண்டாம் ஐயா’ என்றார் ரங்கா ராவ். பெண்மணி, அவர் அருகில் வந்து ரங்கா ராவின் கைகளில் உறையைத் திணித்தார். ராகேஷ் ‘வாங்கிக்கங்க சார்’ என்றான். இருவரும் மூத்த தம்பதியரை கைகூப்பி வணங்கி விடை பெற்றனர். ராகேஷ் ‘இருட்டு ஆயிடுச்சு வாங்க ஒங்கள செங்கல்பட்டு பஸ் வர்ற ஸ்டாப் ல விடுறேன்’ என்றான். மூவரும் பண்ணை வீட்டை விட்டு வெளியே வந்தனர். பெரியவர் மீண்டும் சிரிக்கும் ஒலி, அவர்கள் ஜீப்பில் ஏறும் போது கேட்டது.

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *