நான் படித்த பள்ளியில் ‘முன்னாள் மாணவர்கள் சந்திப்பு’ என அழைத்திருந்தார்கள். காலை பத்து மணிக்கு என அழைப்பிதல் காட்டினாலும் படித்த பள்ளி என்பதால் எனது மன அலாரம் படித்தபோது போன நேரத்துக்கே போகச்சொல்லும்படி அடித்தது.
பதினேழு வயதில் பனிரெண்டாம் வகுப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது ஐம்பத்தேழு. நாற்பது வருடங்களைக்கடந்து விட்டு தினமும் பள்ளிக்கு நடந்து சென்ற பாதையை ஆராய்ந்தபடி இன்றும் நடந்தே சென்றேன்.
என் வீட்டிலிருந்து நான் படித்த பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் என நடக்கும் தூரம் தான். ஐந்து கிலோ மீட்டர், பத்து கிலோ மீட்டர் என சைக்கிள் வாங்க பணமில்லாமல் நடந்தே வரும் நண்பர்களும் இருந்தார்கள். எனக்கு சைக்கிள் இருந்தாலும் நடந்து வரும் நண்பர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதால் நானும் நடந்தே செல்வேன்.
பனிரெண்டாம் வகுப்பு படித்த பின் மேலும் படிக்க வசதியிருந்தும் பக்கத்து பெரிய நகரத்திலிருந்த பெரியப்பாவின் ஜவுளிக்கடையை பார்க்கவேண்டுமென முழு நேரமாக அங்கேயே வேலைக்கு சேர்ந்தவன், அவருக்கு வாரிசு இல்லாததால் நானே வாரிசாக வேண்டிய நிர்பந்தத்தால் திருமணம் செய்து கொண்டு ஜவுளித்தொழிலே கதி என செட்டிலாகிவிட்டேன்.
உறவுகளின் விசேசங்களுக்கு ஊருக்கு வந்தாலும் உடனே செல்ல வேண்டிய தொழில் நிர்பந்தம் காரணமாக ஊரைச்சுற்றிப்பார்க்க இதுவரை வாய்ப்பு வரவில்லை. இப்போது பசுமையான நினைவுகளை பணி சுமை மறந்து அசை போட முடிந்தது. தற்போது உடனே செல்ல வேண்டிய நிலையில்லை. தொழிலை எனது மகன் சுந்தரனும், மருமகள் வாசுகியும் பார்த்துக்கொள்கின்றனர். மனைவி விசாலாட்சி கால் மூட்டு வலி காரணமாக தொலைக்காட்சியோடும்,புத்தகங்களோடும் வாழ்ந்து வருவதால் வெளியில் விழாக்களுக்கு, உறவினர் விசேசங்களுக்கு நானே சென்று விடுகிறேன்.
தனியாக பயணம் செய்ய பிடிப்பதால் காருக்கு ஓட்டுநரை அழைப்பதில்லை. சிலர் தாங்கள் எந்தக்காரில் வருகிறோம் என தங்களுடைய வசதி நிலையைக் காட்டிக்கொள்ள காரிலேயே விழா நடக்கும் இடம் வரை வந்து இறங்கினர். தற்போது ஒரு கோடிக்கும் மேல் விலை கொடுத்து வாங்கிய பென்ஸ் காரில் வந்திருந்தாலும் அப்போது சைக்கிளில் போனால் நடந்து வருபவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடும் என்று நினைத்து நடந்து போனது போலவே இன்று காரில் வந்தால் பைக்கில் வந்திருப்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடுமென வீட்டில் காரை நிறுத்தி விட்டு நடந்தே வந்து விட்டேன்.
வரும் வழியில் வானுயர்ந்த கட்டிடங்கள் வரிசை கட்டி நின்றன. இல்லாததே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நகரம் நவீனமாக மாறியிருந்தது. நாங்கள் படிக்கும் போது பள்ளியின் நுழைவாயிலுக்கு எதிராக ஒரு பெட்டிக்கடை இருந்தது. அதில் சிலேடு, பென்சில், பேனா, நோட்டு, முறுக்கு, கம்பரக்கட்டு, தேன் மிட்டாய் கிடைக்கும். பள்ளி விடும் நேரத்தில் ஐஸ் பெட்டியுடன் வீரப்பனைப்போல பெரிய மீசை வைத்திருப்பவர் நின்றிருப்பார்.
இப்போது அந்த இடத்தில் பெரிய பேக்கரி, ஹோட்டல், ஐஸ்கிரீம் கடை, துணிக்கடை, பேன்ஸி கடை, வங்கி ஏடிஎம், கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர், செல்போன் கடை என மாணவர்களுக்கு தேவையானதெல்லாம் வரிசை கட்டி நின்றன.
அப்போதெல்லாம் தினமும் ஒரு ரூபாய் அம்மாவிடமிருந்து வாங்கி வந்தாலும், நண்பர்களுடன் அனைத்தும் வாங்கினாலும் பத்து பைசாவாவது எனது ராசிக்கு மீதமாகிவிடும். வீட்டிற்கு போகும் வழியில் இருக்கும் பெருமாள் கோவில் முன் கால் நடக்க முடியாமல் அமர்ந்திருக்கும் வயதானவருக்கு மீதமாகும் காசை அப்படியே போட்டு விடுவேன். ‘நீ நல்லா இருப்பே’ எனும் வாழ்த்து கிடைக்கும் போது சந்தோசமாக இருக்கும். இப்போது நன்றாகவே இருக்கிறேன்.
ஓடு வேய்ந்த பள்ளிக்கட்டிடம் கான்கிரீட் கட்டிடமாக மாறி இருந்தது. நான் தான் முதல் நபராக வந்திருப்பேன் என நினைத்துப்போனால் பலரும் ஆங்காங்கே நின்று நலம் விசாரித்து, பழைய கதைகளைப்பேசிக்கொண்டிருந்தனர்.
என்னைக்கண்டவுடன் ஓடோடி வந்ததவள் ரமா தான். டை போடாத நரைத்த முடி. முகம் மட்டும் மாறவே இல்லை. “டேய் சங்கரா… எப்படிடா இருக்கே…?” என கேட்டபடி எனது கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள்.
அவள் இரண்டாவது கேட்ட கேள்வி “உனக்கு எத்தனை குழந்தைகள்…?”
“பையன் ஒருத்தன். அவனும் என்னோட தொழிலையே பார்க்கிறான்” என தொடங்கி பல விசயங்களைப்பேசினோம்.
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? ” என நான் கேட்டதும் பதில் பேசாமல் விம்மி, விம்மி அழுதாள். நான் அழக்கூடாது என ஆறுதல் சொன்னேன்.
ரமாவுடன் பிறந்தவர்கள் நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் . ரமா முதல் பெண். சிறுவயதிலேயே அப்பா விபத்தில் முடமாகி விட அப்பாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். பனிரெண்டாவது முடித்து வேலைக்கு போனவள் உடன் பிறப்புகளுக்கு திருமணம் முடித்து கடமைகளைச்செய்தவள், தன் வாழ்க்கையை மறந்து விட்டாள். அது கூட தேவலை. உடன் பிறப்புகள் அனைவரும் ரமாவை மறந்து போனதும், அவள் தனித்து வாழ்வதும் தான் அவளது விம்மலுக்கு காரணம். எனது மனைவிக்கு போன் போட்டு அவளுடன் பேசக்கொடுத்தேன். அவளது தற்போதைய நிலையைத்தெரிந்தவள் எங்களுடன் வந்து விடுமாறு கூற, பட்டுப்போன மரம் பூத்து விட்டது போல் ரமாவும் முகம் மலர்ந்து புன்சிரிப்பை உதிர்த்தவளாய் சம்மதித்து விட்டாள்.
ரமா எங்களது குடும்பத்தில் ஒருத்தியாக வரப்போகிறாள் என்பது அவளை விட எனக்குத்தான் அதிக மகிழ்ச்சியாக இருந்தது.
அவளது கண்களில் கண்ணீர் வந்து நான் பார்த்ததில்லை. ‘புன்னகையரசி’ எனும் பட்டப்பெயர் பள்ளியில் அவளுக்கு உண்டு. எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதோடு அழுதுகொண்டு இருப்பவர்களையும் சிரிக்கவைத்து விடுவாள். அவளுடன் நேரம் எளிதாகப்போய்விடும். அது தானே வயதான காலத்தில் வேண்டும். எனது மனைவிக்கும் மனம் விட்டுப்பேச இது வரை யாரும் கிடைக்கவில்லை. வயதான காலத்தில் தனிமை கொடுமை.
உண்மையைச்சொல்லப்போனால் பள்ளி நாட்களிலேயே ரமாவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரண்டு பேரும் விடுமுறை நாட்களில் கூட பள்ளி மரத்தடி நிழலில் சேர்ந்து படிக்க வருவதைப்பார்ப்பவர்கள் காதலர்களாகத்தான் நினைத்தனர். சில விசமிகள் மரத்தில் ரமா-சங்கரன் என எழுதியும் வைத்தனர். இதையெல்லாம் என் மனைவி விசாலாட்சியிடம் ஏற்கனவே கூறியிருந்தேன். அவளும் ஊருக்கு போனால் ரமாவின் வீட்டிற்கு அழைத்துச்செல்லுங்கள் எனக்கூறியிருந்தாள்.
“நட்பை கலங்கப்படுத்துகிறார்கள்” என்பாள் ரமா. “உண்மையாக இருந்தால் தவறில்லையே ….” என்பேன்.
“நீயுமா…? படிக்கிற வயசுல அந்த நெனப்பே வரக்கூடாது. நமக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு. கடமை தான் முக்கியம்” என்பாள். ரமாவை நல்ல நட்பின் இலக்கணமாகவே பார்த்தேன்.
ஆரம்ப காலங்களைப்போல அந்திம காலங்களிலும் அவளது கபடமற்ற, களங்கமற்ற நட்புடன் பயணிக்க வாய்ப்பளித்த, சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அழைத்தவர்களுக்கு நன்றி என மனதுக்குள் கூறிக்கொண்டு விழாவில் கலந்து கொண்டேன்.