பச்சைச் சேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 246 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“நான் வீட்டிலே வந்து நுழையறப்போ உள்ளே பேச்சுக் குரல் கேட்டுதே, செல்லி! ஆர் வந்திருந்தாங்க?” என்று மனைவியைக் கேட்ட வண்ணம் அவள் கொடுத்த டீயைப் பருகத் தொடங்கினான் கந்தப்பன். 

“டீயைக் குடியுங்க, சொல்றேன்” என்று கொஞ்சலாகச் சொல்லி அவன் காலடியில் உட்கார்ந்தாள் அவள். பிறகு ஏதோ எண்ணியவள்போல், “ஆமாம், உங்களுக்கு எந்தக் கலர் ரொம்பப் பிடிக்கும், சொல்லுங்க?” என்று கேட்ட வண்ணம் செல்லி எழுந்து உள்ளே சென்று புடவைப் பொட்டலம் ஒன்றுடன் திரும்பினாள். 

”அடே! எவ்வளவு அழகான பாசிப் பச்சைச் சேலை ! உன் அம்மாவா வாங்கி அனுப்பிச்சிருக்கா?” என்றான் அவன். 

“ஆமாம்! போன மாசந்தானே ஒண்ணு அனுப்பிச்சாங்க? அதுக்குள்ளற ஆசையைப் பாரு! இந்தப் புடவை 25 ரூபாய்க்குக் கொடுக்கிறேன் என்கிறாங்க, வாங்கலாமா?”

“அப்படியானால் தேவலை! யார் அப்படி மலிவாய்க் கொடுக்கறது?”  

“அடுத்த வீட்டிலே குடி வந்திருக்காங்களே. உங்களுக்குக் கூடத் தெரியுமாமே, அவள் மகன் முருகனை? போன மாசம் அவன் பட்டாளத்திலே சேர்ந்தூட்டானாமே? 

“உம்.புதுப் புடவையை ஏன் அவங்க விக்கிறாங்களாம்?” 

“கலர் அந்தம்மாவுக்குப் புடிக்கல்லையாம். ‘உன் செவப்பு ஒடம்புக்கு ஏத்த கலர்’ என்கிறாங்க” என்று கூறிச் சிறிது வெட்கத்தால் தலைகுனிந்தாள் செல்லி. 

“பட்டாளத்திலே சேர்ந்த முருகன் தாயார் கொடுத்த பச்சைப் புடவையா?” என்று கேட்டுச் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் கந்தப்பன். 

“ஏன், இந்தப் புடவைக்கு என்னங்க?” என்று வினவினாள் அவள். 

“நல்லாத்தான் இருக்கு, செல்லி! ஆனால் நமக்கு வாணாம் அது ! நான் வேறே வாங்கித் தரேன் உனக்கு!” 

“இருவத்தஞ்சு ரூபாய்ப் புடவை வலுவிலே பதினஞ்சுக்கு வரது. வாங்கித் தர இஷ்டமில்லை. கடையிலே போய் வேறே வாங்கித் தாராராம், வாங்கி!” என்று முனகினாள் செல்லி.

“அந்தப் புடவை வேண்டாங்கறேன்! புத்தியில்லை உனக்கு?’ என்று அதட்டினான் அவன் சிறிது உஷ்ணமாகவே. 

என்றைக்கும் தன்னை ஒரு வார்த்தை கடினமாய்ச் சொல்லாத தன் புருஷன் – அதுவும் தான் முழுகாமல் இருந்த சமயம்- திடீரென்று இப்படிக் கோபித்துக்கொண்டது அவள் மனத்திற்குப் பெரும் துயர் அளித்தது. 35 ரூபாய் சம்பளத்தில் இருக்கும் அவன் இருபத்தைந்து ரூபாய்க்கு எப்படித் தனக்கு புடைவை வாங்க முடியும்? – இதே யோசனையில் படுக்கையில் புரண்டாள் அவள். 

இரவு மணி பன்னிரண்டிருக்கும். மெள்ளத் தன் புருஷன் எழுந்து வெளியே செல்வதைக் கண்டு அவள் பதறினாள். கேவலம் ஒரு புடைவைக்காக அவர் மனசைப் புண்படுத்தி விட்டோமே! எங்கே போகிறாரோ என்னவோ!’ என எண்ணி மெள்ளப் பின்தொடர்ந்தாள். பக்கத்துத் தெருவிலுள்ள ஸேட் கடைக்கல்லவா போகிறார் அவர்? ஏன்? பார்க்கலாமென்று தெருவில் ஒதுங்கி நின்றாள். 

எங்கும் நிசப்தம். ஒன்றிரண்டு நாய்களின் ஊளையும், காற்றில் அசையும் இலைகளின் சப்தமும் அந்த நிசப்தத்தைக் கலைத்தன. ஸேட்டின் கடைப் பூட்டைத் தன் கணவன் மறு சாவி போட்டுத் திறப்பதைக் கண்ட செல்லிக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. “ஐயோ! எனக்காகத் திருடவுமா துணிந்து விட்டார்!” என்ற கேள்வி எழுந்தது மனத்தில். அடுத்த நிமிஷம் “ஐயையோ! வேண்டாம்! வேண்டாம்! பச்சைப் புடைவை வேண்டாம்!” என்று அலறிவிட்டாள். 

“செல்லி! செல்லி ! ஏன் இப்படி அலறுகிறே! செல்லி! ஏன் இப்படி நடுங்குகிறது உன் உடம்பு? இதோ நான் பக்கத்தில்தானே இருக்கிறேன்! கனாக் கண்டாயா?” என்று அன்புடன் கூறி அவள் கைகளை நடுங்காதபடி பிடித்துக்கொண்டான் கந்தப்பன். 

“இங்கேதானே இருக்கீங்க? எங்கேயும் போகல்லையே!” என்று கூறிக் குருடிபோல் அவனைத் தடவிப் பார்த்தாள் அவள். அவனும் எழுந்து உட்கார்ந்துகொண்டான். 

”அப்பா! என்ன பயங்கரமான கனவு!” என்று எழுந்து உட்கார்ந்துகொண்டாள். 


இரண்டு மாத காலமாயிற்று. புடைவைப் பேச்சே நின்றிருந்தது. “தை மாசம் பிறந்தால் உங்கம்மா வந்து உன்னை இட்டுக்கிண்டு போயிடுவா! இல்லையா, செல்லி?” என்றான் கந்தப்பன். 

“ஆமாம்! பின்னே?” என்றாள் அவள். 

“வருகிற பொங்கலுக்கு மூணு ஆசாமியாச்சு” என்றான் பெருமிதத்துடன். 

“அதை யார் கண்டாங்க?” 

“ஏன்? சட்டை, குல்லாவெல்லாங்கூடத் தச்சு வச்சுப் பிட்டு…” 

“சரிதான்! ஆனால் நான் வருகிறது மறு பிறவிதானே?”

“பயித்தியம்! பயமுறுத்துகிறதைப் பார்” என்று அவன் வெளிப்படப் பேசினான். 

எனினும், கந்தப்பனுக்கு மனத்தில் நடுக்கந்தான் செல்லியைப் போல மனைவி கிடைக்கப் புண்ணியம் செய்திருக்க வேணும். ஸேட் கடையில் வேலை கிடைக்க ஜாமீன் வேண்டியிருந்தது. செல்லி அப்பொழுது எவ்வளவு சந்தோஷத்துடன் தன் அட்டிகையை அவனிடம் கழற்றிக் கொடுத்தாள்! அதைப் பற்றி என்றாவது பிரஸ்தாபித்திருப்பாளா அவனிடம்?  அவனுக்குத்தான் அவள் கேட்டதை வாங்கிக் கொடுக்க யோக்கியதையில்லை. தீபாவளிக்கு ஸேட் ஒரு சன்மானமும் அளிக்கவில்லை அவனுக்கு. ‘முருகனின் தாய் அந்தப் பச்சைப் புடைவையைச் சும்மாக் கொடுத்தாலும் வேண்டாம் அது, செல்லிக்கு. பொங்கலுக்காவது அதே போல் ஒரு புடைவை வாங்க ஒத்தாசை செய்ய மாட்டாரா?’ என்று எண்ணி மனம் புழுங்கினான் கந்தப்பன். 

பொங்கலன்று சாயங்காலம்,”செல்லி… இ…ஈ! செல்லி!” என்று அழைத்தவண்ணம் தூக்கமாட்டாமல் சாமான்களைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் அவன். “சோறு வடிச்சுண்டிருக்கேன். இதோ வரேன்” என்று பதில் சப்தம் போட்டாள் அவள்.” தோ பார்!” என்று பச்சைச் சேலையைப் பிரித்து அவளுக்குக் காண்பித்தான், அவளுடைய குதூகலம் நிறைந்த முகத்தை ஆசையுடன் காண ஆவல் கொண்டு. ஆனால் செல்லி, “எனக்கு வேண்டியதில்லை” என்பது போல் தலையாட்டினாள். 

“ஏன் செல்லி ! என்மேல் கோபமா?” என்று கேட்டான் ஏக்கம் நிறைந்த குரலில். 

“பணம் கொடுத்துத்தானே வாங்கினீங்க?” என்று கேட்டாள் செல்லி ஒரு விம்மலுடன். 

“என்ன நெனைச்சே? பணம் கொடுக்காமே எங்கனாச்சியும் தூக்கி வந்தூட்டேன்னா? உன் புருசன் திருட்டுப் பயலுன்னா நெனைச்சே? இதோ பார், ஸேட் கொடுத்த பொங்கல் பணத்தில் மிச்சங்கூட இருக்கு” என்று ஓர் ஐந்து ரூபாய் நோட்டை வீசினான் அவளிடம். “இல்லே ! இல்லே! அப்படி நெனைக்கல்லே…” என்று ஏதோ குழறினாள் அவள். 

செல்லி ஊருக்குப் போய் மூன்றாவது மாதம். கையில் உள்ள தந்தியைப் படித்துப் படித்து ஆனந்தத்தில் ஆழ்ந்தான் கந்தப்பன். 

“அப்பாடா! இனிமேல் அவளிடம் விஷயத்தைச் சொல்லலாம். பயமில்லை… பெண் குழந்தையாமே? செல்லியைப்போல் இருக்குதோ! என்னைப்போல் நாகப் பழமாய் ஜொலிக்குதோ” என்று தானாகவே பேசிப் பூரித்தான். 

மூன்றாவது மாதமே திரும்பி விட்டாள் செல்லி. குழந்தை என்னவோ கந்தப்பன் சந்தேகித்தபடி நாவற்பழ வர்ணந்தான். இருந்தாலும் அவன் கண்ணுக்கு அது வெகு அழகாகவே தோன்றியது. “இந்த மாதிரி கறுப்பாய் இருக்கிறதற்குப் பிள்ளையாய் இருந்தால் கிருஷ்ணன்னு பேர் வைக்கலாம். இப்போ என்ன செய்யறது?” என்றான் அவன். 

“பேர் வைச்சாச்சு, திரௌபதின்னு” என்றுரைத்து, “ஆமாம். முன்னே ஒரு நாள் சண்டை போட்டீங்களே, அந்தப் பச்சைப் புடைவைக்கு…..” என்று ஆரம்பித்தாள். 

”நானே சொல்லிப்பிடறேன்” என்றான் அவன் இடைமறித்து. செல்லி பொறுமையுடன் கேட்டாள். 

“முருகனுக்கு அவன் பொண்டாட்டி மேலே உசிரு. அவளுக்கு ஆசைப்பட்டு அதை வாங்கியாந்தான். புடவையைப் பிரிச்சு எடுத்துக் கட்டறத்துக்குள்ளே மாரடைச்சுச் செத்தூட்டா அவள். அந்தத் துக்கத்திலேயே அவன் பட்டாளம் போயிட்டான். அவன் தாயார் மெள்ள அந்தப் புடவையை உங்கிட்ட விக்கப் பார்த்தாள். பெண்டாட்டிக்குப் புடவை வாங்கின கதை யெல் லாம் எங்கிட்டச் சொல்லி முருகன் அழுதிருக்கான். இரு உசிருக்காரி கிட்ட அதை யெல்லாம் சொல்லிப் பயமுறுத்த வேண் டாமின்னுதான் நான் உங்கிட்ட சொல்லல்லை. அதை நீ கட்டியிருந்தால் கட்டாயம் இப்போ உசிரோடு, குழந்தை திரௌபதியோடே இங்கே கல்லுக் கணக்காய்க் குந்தியிருக்க மாட்டே!’ என்றான். 

இதைக் கேட்டுச் செல்லி விழுந்து விழுந்து சிரித்தாள். 

“இதென்ன பரிகாசம், செல்லி?” 

“அது இல்லை. அதே புடவையைத்தானே கடைசியிலே நீங்களும் வாங்கியாந்தீங்க?” 

“ஆர் சொன்னா! எங்க ஸேட்டுக் கடையிலே இந்த மாதிரி ஒண்ணே ஒண்ணு இருந்தது. அஞ்சு ரூபாய் தள்ளி இருபது ரூபாய்க்குக் கொடுத்தாரு” என்றான் சிறிது கோபத்துடன் கந்தப்பன். 

“நான் சொன்னா நம்பிக்கைப்படுமா? நான் சேலையை வேண்டாமின்னு சொன்ன மறு நாளே முருகன் தாயார் அதை வாங்கின ஸேட்டிடமே பதினஞ்சு ரூபாய்க்குக் கொடுத்துட்டதாகச் சொன்னாள். நீங்க வேலை செய்யும் ஸேட்டுக் கிட்டத்தான் வாங்கினாளாம் அதை. அங்கே அப்புறம் அந்தத் தினுஸுப் புடவை வராததனாலே ஸேட் வாங்கிக் கொண்டானாம். அதைத் தான் நீங்க எடுத்திருக்கீங்க!’ 

“ஆச்சரியமாய் இருக்கே! சரி! எடு அந்தப் புடவையை. இனிமேல் இங்கே அது வாணாம்”. 

“ஐயய்யோ! இப்ப என்கிட்ட இல்லையே அது!” 

”எங்கே, தொலைச்சுட்டாயா?” 

“இல்லை. நான் ஊருக்கு வர ஒரு வாரம் இருக்கறப்போ, என் தங்கை வந்தா; ஒரு நாள் அந்தச் சேலையை, கட்டிப் பார்த்தா. அண்ணைக்கு அவளுக்கு ஒரு லாட்டரிப் பரிசு விழுந்துடுத்து. ‘நல்ல அதிருஷ்டச் சேலை அக்கா இது! எனக்குக் குடுத்துடு’ என்று வாங்கிண்டு போயிட்டா அதை!” 

“வேடிக்கையாத்தான் இருக்கு! ஒரே சேலை…அதனால் ஒருத்தருக்கு அதிருஷ்டம், இன்னொருத்தருக்குத் துரதிருஷ்டமா?” என்று மூக்கில் கை வைத்துக்கொண்டான் கந்தப்பன்.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *