பக்கவாத்தியம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 10,049 
 
 

இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய மௌலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டு இருந்ததை கௌரி கவனித்தாள். ஆபீஸில் ஏதோ நடந்திருக்க வேண்டும்!

என்ன ஏது என்று விசாரிப்பதற்குள், மௌலியின் பெண் ராதா ஓடி வந்தாள்.‘‘எஃப்.எம்-ல தாத்தாவோட ‘தனி’ வந்திட்டிருக்குப்பா! கேக்கலையா?’’ என்றாள்.

‘‘அடடா, ஆறரை மணிக்குப் பிச்சுமணி கச்சேரி& அப்பா மிருதங்கம்! ஆபீஸ் ரகளைல எல்லாமே மறந்தே போச்சு!’’ என்றபடி, ரேடியோ இருந்த படுக்கை அறைக்கு ஓடினான்மௌலி. ‘இதுவரை பிச்சுமணி பாட்டு கேட்டீர்கள். அனுராதா வயலின், நாகராஜ ஐயர் மிருதங்கம்’ என்று அறிவித்துக்கொண்டு இருந்தது ரேடியோ!

‘‘த்சொ! அப்பாவின் ‘தனி’யை மிஸ் பண்ணிட்டேனே!’’ என்று மௌலி வருத்தப்பட, ‘‘விடுங்க!

இது மறு ஒலிபரப்புதான். பத்து நாளைக்கப்புறம் மறுபடியும் போடுவான். சரி, வாங்க சாப்பிடலாம். உங்களுக்குப் பிடிச்ச வெங்காய சாம்பாரும், பொரிச்ச அப்பளமும்!’’ என்றாள் கௌரி.

சாப்பாடு பரிமாறிக்கொண்டே மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள்… ‘‘ஆபீஸ்லேர்ந்து வந்தப்போ உங்க முகம் கடுகடுனு இருந்ததே, ஆபீஸ்ல ஏதாவது தகராறா?’’

‘‘அதையேன் கேக்கறே! எம்.டி-னு ஒரு மடையன் இருக்கானே, அவன் சொல்றான்… நான் வெறும் ‘ஸ்கோரர்’தானாம்! ஃபேக்டரி விஷயத்துல நான் ஒண்ணும் யோசனை சொல்லக்கூடாதாம்’’ என்று நிறுத்தினான் மௌலி.

‘‘அது என்ன ‘ஸ்கோரர்’?’’

‘‘கிரிக்கெட்ல பேட்ஸ்மேன் ரன்கள் எடுப்பான். பௌலர் விக்கெட் எடுப்பான். அதையெல்லாம் குறிச்சுக்கறவன்தான் ‘ஸ்கோரர்’. ஆட்டம் முடியறப்போ யார் யார் எத்தனை ரன்கள் எடுத்தா, யார் யார் விக்கெட் எடுத்தான்னு சொல்றது அவன் வேலை. அது மாதிரி கம்பெனியின் வரவு செலவு எவ்வளவு, லாபமா, நஷ்டமா,அதை வெச்சு போனஸ் தரலாமா, கூடாதா,பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட் எத்தனை என்கிறதை மட்டும் நான் சொன்னாப் போதுமாம். மத்தபடி கம்பெனியோட வரவைக் கூட்டவோ, செலவைக் குறைக்கவோ நான் எதுவும் யோசனை சொல்லவேண்டியது இல்லையாம். அந்த மாதிரி சில யோசனைகளை என் ‘ரிப்போர்ட்’ல எழுதியிருந்தேன். அதைக் கிழிச்சுப் போட்டுட்டு, ‘நீ வெறும் ஸ்கோரரா இருந்தாப் போதும். நான் செய்ய வேண்டியதைப்பத்தி நீ ஒண்ணும் ஆலோசனை சொல்ல வேண் டியது இல்லே’னு மூஞ்சியிலஅடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிட்டான். சே… பேசாம வேலையை ராஜினாமா பண்ணிடலாமானுகூடத் தோணுது’’ என்று முடித்தான் மௌலி. கௌரி பதறிப் போனாள்.

‘‘அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க. அப்பாகிட்ட இதுபத்திப் பேசுங்க. மத்தபடி உங்க எம்.டி. நல்ல மூட்ல இருக்கிறப்போ உங்க யோசனையைச் சொல்லிப் பார்க்கலாமே! இன்னிக்கு அவருக்கு யார் மேலயாவது கோபமோ என்னவோ, அதை உங்க கிட்ட காட்டியிருப்பார்னு தோணுது!’’ என்றாள் கௌரி.

‘‘போடி பைத்தியம்! இவனெல்லாம் நான் சொல்றதைக் கேப்பானா, என்ன? ‘நிதி நிர்வாகம்’ பத்தி நான் இன்ஸ்டிடியூட்டுல முதல் மார்க் வாங்கினேன். மெடல்கூட வாங்கியிருக்கேன். ‘நிதி நிர்வாகி’னு பேரோடு நிறையச் சம்பளம் தந்தா மட்டும் போதுமா? என் திறமையை உபயோகிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேணாமா?’’ என்று பொருமியபடியே சாப்பிட்டு எழுந்தான் மௌலி.

வெளியே வாக் போயிருந்த நாகராஜன் திரும்பி வந்தார். ‘‘இப்பத்தான் வந்தியா மௌலி, நாளைக் காலைல ஸ்ரீதர்னு ஒரு புதுப் பாடகனுக்கு என்னை வாசிக்கச் சொல்லியிருக்கா. பிறவி மேதை, நல்ல பாடாந்தரம்னு அவனைப் பத்தி பிச்சுமணியே நிறைய சொல்லி என்னைச் சம்மதிக்க வெச்சார். நாளைக்குச் சாயந்தரம்பிச்சு மணியின் கச்சேரியும் இருக்கு. அதுக்கும் நான் தான் வாசிக்கிறேன். நாளைக்கு ஞாயித்துக் கிழமைதானே… ரெண்டு கச்சேரியையும் நீ கட்டாயம் கேக்கணும். ஆபீஸ் வேலை அது இதுன்னு இருந்துடாதே!’’ என்றார்.

அடுத்த நாள் இரவு… அப்பாவும் பிள்ளையும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

‘‘நீ ஸ்ரீதர் கச்சேரிக்கு சம்மதிச்சே இருக்கக்கூடாது, அப்பா! வெறும் சர்க்கஸ்! அப்ளாஸ் வாங்கறதுலேயே குறியா ஜால வித்தையெல்லாம் செய்யறான். இது ரொம்ப நாளைக்கு ஓடாது. நீ கூட அந்தப் பையன் பாட்டுக்கேத்த மாதிரி மிருதங்கத்தை அடி அடின்னு அடிச்சுட்டே!’’ என்று சொல்லி நிறுத்தினான் மௌலி.

‘‘சரி, சாயந்திர கச்சேரி எப்படி?’’

‘‘ஆஹா, அதான் கச்சேரி. ஏ.ஒன்! உங்க மிருதங்கமும் என்னமா பேசித்து! தனியும் வெகு ஜோர்!’’

சற்று இடைவெளிவிட்டு நாகராஜன் சொன்னார்… ‘‘மௌலி! ஒண்ணு சொல்லவா? நிஜத்துல ரெண்டு கச்சேரியிலும், நான் வழக்கம்போலதான் வாசிச்சேன். ‘பக்கவாத்தியம் பக்க வாத்தியமாத்தான் இருக்கணும். பக்கா வாத்தியமாயிடக் கூடாது’ன்னு சொல்வார் பாலக்காடு மணி ஐயர். மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் கூட ‘நீ என் பாட்டுக்கு எங்கடா வாசிச்சே? நீ உன்-பாட்டுக்கு வாசிச்சிண்டிருந்தே!’ன்னு ஜோக் அடிப்பார். அதுதான் சரி. பாடறவங்களை அனுசரிச்சு வாசிக்கிறதுதான் பக்கவாத்தியக்காரங்களோட கடமை. ஸ்ரீதரும் அவன் அப்பாவும் காலையில என்னைக் கட்-டிண்டு, ‘பிரமாதமா வாசிச்சீங்க. ரொம்பத் தேங்க்ஸ்’னு பெருமையாச் சொன்னாங்க. பிச்சுமணிகூட ‘பையனை உற்சாகப்படுத்தி அற்புதமா வாசிச்சேடா’ன்னு பாராட்டினார்… அது இருக்கட்டும். உன் ஆபீஸ்ல ஏதோ பிரச்னைன்னு கௌரி சொன் னாளே..?’’

‘‘பக்கவாத்தியக்காரங்களைப் பத்தி நீ சொன்னதைக் கேட்டப்புறம் என் பிரச்னை அநேகமா தீர்ந்துட்டுதுப்பா!’’ என்றான் மௌலி. இப்போது அவன் முகம் தெளிந்திருந்தது.

– 08th ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *