பகுத்தறிவுக்கு சவால்

0
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 9,748 
 
 

“என்னப்பா, எங்கட மூத்தவன நினைக்க கவலையாக வருகுது! அவனாலதான் எனக்கு வருத்தங்கள் கூடிக்கொண்டு வருகுது! எந்த வேலைக்கும் போறானில்ல! நாங்களாப் போய் சேர்த்துவிட்டாலும் அதில நிண்டு பிடிக்கிறானில்ல! குழப்பம் பண்ணிக் கொண்டு வந்து போடுறான்! சினேகிதர் மாரோட சேர்ந்து, சந்திவெளிய நிண்டு பேப்பிராக்குப் பார்க்கிறான்! அதுகும் பெட்டைகளோட சேட்டவிட்டதென்று இங்க முறைப்பாடு!…. என்ர பிள்ளையில ஒரு பிழையும் இல்ல! அவன் தங்கமான பிள்ளை!… எல்லாம் கிரகக் கோளாறால வந்த வினைதான்! நீங்க ஒருக்கா எங்கட வேலுப்பிள்ளை சாத்திரியாரிட்ட போய், பொடியன்ர சாதகக் குறிப்பக் காட்டிக் கேளுங்கோ! என்ன கிரக தோஷமோ தெரியல்ல, பரிகாரம் ஏதும் சொல்லுவார்! அவர் நினைச்ச காரியமும் பார்க்கிறவர்! உண்மையாய் அவரில ஏதோவொரு தெய்வ சக்தி இருக்குது!…. இங்க எத்தின பேருக்கு அச்சொட்டா, நடக்கப்போறதை எல்லாம் சொல்லியிருக்கிறார்! நீங்க கட்டாயம் மூத்தவன அவரிட்ட கூட்டித்தான் போக வேணும்!”

மனைவி வள்ளிநாயகி அடிக்கடி இதே சாயல்பட கதைத்து, கணவன் பரமேஸ்வரனைத் துளைத் தெடுத்துப் போட்டாள்! அவனும் இதற்கெல்லாம் பதிலளித்து அலுத்துவிட்டான்! பரமேஸ்வரன் பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை கொண்டவர்! சாஸ்திரம் சம்பிரதாயம், செய்வினை சூனியம், கலையாடி கும்பம்காவடி… எல்லாம் அதில் நம்பிக்கை கொண்டோரை எல்லாம் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் மாஜ்மாலம்…!” என்பார்.

“அப்ப எங்கட மகன ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வர என்னதான் வழி சொல்லுங்கோ பார்ப்பம்! சும்மா எல்லாத்தையும் குறை சொல்லிக் கொண்டு இருக்கிறத விட்டுப்போட்டு ஒரு வழியக் காட்டுங்கோ பார்ப்பம்!”

“நான் படிச்சதக் கொண்டு சொல்லுறன், மனம் போலத் தான் வாழ்வு! எண்ணம் போலத்தான் வாழ்வு! மனோ சக்தி தான் கடவுள் சக்தி! நல்ல சிந்தனையோட இருந்தால் நல்லதுதான் நடக்கும்! உன்ர மகனுக்கு சரியான மனக் கோளாறு! சிந்தனையை மாற்றினால் அல்லாது இவனுக்கு விமோசனம் இல்லை!” அவர் அடித்துச் சொன்னார்!

“ஐயோ நீங்களும் ஓர் அப்பனா? பிறத்தியாருக்கு கதை சொல்லுமாப்போல சொல்லுறீங்கள்!”

“சரி… சரி… கத்தாத! உனக்கும் உன்ர மகன குறை சொன்னால் பிரஷர் கூடுவிடும்! நாளைக்கே வேலுப்பிள்ளைச் சாத்திரியாரிட்ட கூட்டிக் கொண்டு போறன்!” என்றார் பரமேஸ்வரன். என்றாலும் அவர் நெஞ்சில் பலப் பல சிந்தனைகள்… இந்தச்சனம் போகும் போக்கில் என் மனைவியாளும் போகிறாள்! போதாக் குறைக்கு என்னையும் துளைத்தெடுக்கிறாள்! இவர்கள் நம்பிக்கை எல்லாம் சரிதானா? உண்மையானதுதானா?

அவர் முன்னர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் வேலை பார்த்தவர். வேலைக்காக அடிக்கடி டொக்கியாட் வீதியால் போவார் வருவார்! அப்படிப் போய் வருகையில் முற்றவெளிக்கு முன்னால் அடி பருத்த வாகை மரங்கள் நிழல் பரப்பி நிற்கும்! அதனடியில் நிழல் பரப்பில் ஆங்காங்கே குறத்திப் பெண்கள் சாத்திரம் பார்த்துக் கொண்டிருப்பர். காற்சட்டை போட்ட உத்தியோகம் பார்க்கின்ற மெத்தப்படிச்ச துரைமார்கள் கூட, கையைக் கொடுத்து அவளிடம் சரணாகதியடைந்து, அவள் சொல்வதையே வேதவாக்காகக் கொண்டு கேட்டுக் கொண்டிருப்பர்.

அவளின் ஒருபிள்ளை பாலுக்கு அழும். இன்னொன்று சோறுக்கழும்! அவள் தலைவிதி அவளுக்கே தெரியாமல் இருக்கும்!… இதையெல்லாம் கண்டும் காணாதது போல, அவர்கள் தம் எதிர்கால வாழ்வை அவள் வாயில் இருந்து எதிர்பார்க்கிறார்கள்! அவளுக்கோ கையெழுத்தும் போடத் தெரியாது! நாட்டை ஆளும் அதிபதி யாரென்றும் தெரியாது! ஊரையாளும் பிரதிநிதியையும் தெரியாது! அப்படிப்பட்ட பிரகிருதியிடம் இந்தக் கனவான் கையேந்துகிறார்!

இது போன்று எத்தனையோ காட்சிகளை அனுதினமும் கண்டு பரிகாசப் புன்னகையை உதிர்ப்பார் பரமேஸ்வரன்! போவோர் வருவோரைப் பார்த்து, “ஐயாட நெஞ்சில ஒரு கவலையிருக்கு…! வாங்கையா என்னெண்டு சொல்லுறன்…!” இதைக் கேட்டு முன்னால் போகிறவன் ஓட்டத்தை நிறுத்தி, அவள் முன்னால் போய் குந்திடுவான். வந்த வேலையும் மறந்து பரமேஸ்வரன் சிரித்துக் கொண்டே போய்க் கொண்டிருப்பார், இவர் தம் அறியாமையை நினைத்து. ஒவ்வொரு மனிதனுக்கும் யோசனையும் கவலையும் இருக்கும் தான், கவலை இல்லாத மனிதனே இல்லை! அவன் படிக்காவிட்டாலும், மனோவியலைத் தெரிந்திருக்கிறான்! மனித மனதை அறிந்திருக்கிறான்! சொல்லாலேயே சுண்டி இழுத்து விடுகிறான்!

“ஐயாட குடும்பத்தில பிரச்சினையொண்டு இருக்குது…” “ஆர்ர குடும்பத்திலதான் பிரச்சினை இல்லை!”

“ஐயாட மனசு தங்க மனசு! தொட்டதெல்லாம் பொன்னாகும்…!” புகழுக்கு மயங்காதவர் ஆரு! அவரும் சரணாகதிதான்! இப்படியாக இந்த வலை வீச்சுக்கெல்லாம் வசப்படாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று போய்க் கொண்டிருப்பவர்தான் பரமேஸ்வரன்!

‘இவர்கள் விதவிதமான சொல் அலங்காரங்களோடு, பகுதி பகுதியாக விதம் விதமாக கொஞ்ச சொல் நடைகளைப் பாடமாக்கி வைத்திருப்பர். அந்த மூன்று நான்கு பேச்சைத்தான் வருவோருக்கெல்லாம் பாடம் ஒப்புவிப்பர்! அந்தப் பேச்சுமொழி பொதுவானதாக எல்லோருக்கும் பொருந்துவதாகவே இருக்கும்! ஒன்றிரண்டு விலகிச் சென்றாலும், பெரும்பாலும் பொருந்திக் கொள்ளும்! இதை யெல்லாம் மோட்டுப் பிறவிகள் காற்சட்டை போட்டிருந்தும், கைநீட்டி நிற்கும்!’

இப்படியெல்லாம் எண்ணி மனதுள் சிரித்து வருபவர் பரமேஸ்வரன். இவர் அந்நாளில் திராவிடர் கழகப் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்! இவரின் குடியரசுப் பத்திரிகையை விரும்பிப்படித்தவர். அவரிடம் இந்த சாத்திர சம்பிரதாயங்கள் எல்லாம் எடுபடாது!

அவர் மனைவி வள்ளிநாயகி சல்லியம்மன் கோவில் திருவிழாவுக்குக் காலையிலேயே போய்விட்டாள்! பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போன அவள், அடுத்தநாள் காலையிலேதான் வந்தாள்! வரும்போது பெரிய பலாப்பழத்தோடுதான் வந்தாள்! சல்லி, சாம்பல்தீவு பலாப்பழத்துக்கு எங்கும் தனிமரியாதை செல்வாக்கு உண்டு! ஒரு சுளையை எடுத்து வாய்க்குள் வைத்தால் தேன் பூசியது போலிருக்கும். மோட்சத்துக்கே அழைத்துப் போகும்! அப்படியொரு சுவை! சல்லியம்மன் பொங்கல் விழாவுக்கு போகிறவர்கள் பெரும்பாலும் புட்டும் பலாப்பழமும் சாப்பிடத்தான்! அந்த அழகான கடற்கரை மணலில் கிடந்து கொண்டு இருப்பதே பேரின்பம்தான்! அம்மன் அருள் பெற்றது போலத்தான்! இதற்காக மட்டும் பரமேஸ்வரன் அங்கு போயிருக்கிறார்.

ஆனால் இம்முறை அவர் போகவில்லை. ஏனோ தெரியவில்லை! வள்ளிநாயகி சல்லியில் கண்ட காட்சிகளை விரித்துரைத்தாள் என்றாலும், இம்முறை தீ மிதித்த நெருப்பிலே நடந்த அதிசயக் காட்சியைத்தான் வாயோயாமல் வாயூறிச் சொல்லிக் கொண்டே இருந்தாள்!.

“நெருப்பு தணல் செந்நிறத்தில தக தக எண்டு எரிஞ்சு புகைஞ்சு கொண்டு இருக்கும், கடல் காத்துக்கு மேலும் சிவந்து கொண்டிருக்கு! எங்கட பக்தர்கள் எத்தினபேர் வெறும் மேலோட, வெறும் காலோட கைய கும்பிட்டுக் கொண்டு நிரை நிரையா நடந்து போனாங்கள் சர்வ சாதாரணமாக! அவங்களுக்கு ஒண்டும் செய்ய இல்ல! பாத்தீங்களா அவங்கட பக்திய! அம்மாளாச்சியின்ர புதுமைய!!” இதைச் சொல்லும்போது வள்ளிநாயகி மிகவும் உணர்ச்சி வசமானாள்! பரவசநிலை!

இதையெல்லாம் ஆறுதலாகக் கேட்டுக்கொண்டிருந்த பரமேஸ்வரன் ஒரு மௌனப் புன்னகை உதிர்த்தார்! அவள் உணர்ச்சி பரவசம் அடங்கிய பின், மெல்லப் பேசலுற்றார்.

“நெருப்பில் கனபேர் நிரை நிரையாக நடந்தாங்கள் தான், இன்னும் கனபேர் நடக்க இருக்கிறார்கள்தான், வருசாவருசம் இங்க மட்டுமல்ல, எத்தினையோ இடங்கள்ல நடக்கிறாங்கள்தான், அது எல்லோருக்கும் தெரியும்தான், அதைப் பெருசா ஆச்சரியமா கதைக்கத் தேவையில்லாத விசயமெண்டுதான் நான் நினைக்கிறன்!”

“ஏன்… ஏன்…. அப்பிடிச் சொல்லுறீங்கள்? நீங்கள் அங்கவந்து பார்த்தீங்கள் எண்டால் தெரியும்…! மெய் சிலிர்க்கும்!”

“நீ, எல்லாத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டு கத்தாத! பிரஷர் கூடப் போகுது! மனத அமைதியா வைச்சிருக்கப் பழக வேணும். அப்பதான் சுக தேகியாக வாழ ஏலும்! நீங்க கோயில் கோயிலாகத் திரியுறீங்க, ஆனா டாக்குத்தர்மார் தாற மருந்தில்லாவிட்டால் நீங்கள் எப்பவோ மக்கம் போய் சேர்ந்திருப்பீங்க!”

“தேவையில்லாத கதை வேணாம்! இப்ப அனல் நெருப்பில் நடக்கிறதப்பற்றி என்ன சொல்லப் போறீங்க? அதைச் சொல்லுங்கோ முதல்ல, அது என்ன மாதிரி அதிசயம்! வேற சமயத் தெய்வங்களால இது ஏலுமோ!”

“எல்லோரும் நெருப்பில நடக்கலாம்! இதுக்கு பக்தியோ அருளோ தேவையில்ல! நெருப்பில நடக்கிறவங்கள, எங்க நெருப்பில அப்படியே நிற்கச் சொல்லு பார்ப்பம்! கூத்தாடிக் கொண்டு ஓடுவார்!” சொல்லிவிட்டு அவர் சிரித்தார்! வள்ளி எரித்து விடுவது போல கணவனைப் பார்த்தாள்! “இந்தக் கதைகளாலதானே கடவுள் சாபம் விழுந்து, ஒரு விருத்தியும் இல்லாமல் வீழ்ந்து கிடக்குது எங்கட குடும்பம்!” என்று தலையில் அடித்துக் கொண்டு அப்பால் போனாள்!

“பதில் சொல்ல ஏலாவிட்டால் நீ ஏனப்பா ஆத்திரப்படுகிறாய், வீணா பிரஷர் வந்து கிடக்கப் போறாய்!”

இது நடந்து மூன்று மாதமிருக்கும். கணவன் வந்து களையாறு மட்டும் காத்திருந்து. ஒரு கோட்பாட்டை முன்வைத்தாள்! இவள், அக்காள் அம்பிகை நாயகியிடம் போய் ஓர் ஆச்சரியமான செய்தி கொண்டு வந்து முன்வைத்தாள்.”

“என்னங்க இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?”

“எதுக்கு…!”

“அக்கா முள்ளியவளை வற்றாப்பளப் பொங்கலுக்குப் போய் வந்தவ! அங்க நெடுகிலும் நடக்கிற அதிசயமொண்ட இன்டைக்கு கண்டு வந்து சொன்னவ!….”

“என்ன புளுகினவ…?”

“புளுகுனவவோ..! கண்கண்ட உண்மையத்தான் சொன்னவ….. ஐயர் கடல் தண்ணிய விளக்கில் ஊற்றி எரிச்சுக் காட்டினவர்…! எத்தின திரி, எவ்வளவு பிரகாசமாக, எரிஞ்சுது தெரியுமோ! சனங்கள் எல்லாம் இந்த அதிசயத்த கண்டு. அரோகரா… அரோகரா எண்டு கத்தி குளறி விழுந்து புரண்டுதுங்கள்! பாத்தீங்களா அம்மாளச்சியின்ர புதுமைய…!!” இதைச் சொல்லும் போது வள்ளிநாயகிக்கு பரவசநிலைதான்! பரமேஸ்வரனையும் பரவசநிலையில் மூழ்கடித்து விட வேண்டும் என்ற தவிப்பு! இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? வாயைமூடு! என்ற எச்சரிக்கை அவள் பேச்சில் தொனித்தது! பரமேஸ்வரன் மனையாளைப் பார்த்து பெரிதாகச் சிரித்தார்! பரிகாசச் சிரிப்புத்தான் அது! பரிதாபத்துக்குரியவளாக அவளை நோக்கினார்! இவளை மட்டுமல்ல, இந்தச் சமூகத்தையே பரிகசிப்பது போலிருந்தது அவர் முக பாவனை!

“என்ன பைத்தியகாரன் போல சிரிக்குறீங்கள், சிரிச்சு மழுப்பாம சரியாப் பதில் சொல்லுங்கள் பார்ப்பம்!” அவள் சவால் விட்டாள்.

பரமேஸ்வரன் கவிழ்ந்திருந்த தலையைநிமிர்த்தி இப்படிக் கேட்டார். “ஐயர் பக்தர்கள் கொண்டு போன திரிய எரிச்சவரோ, தான் கொண்டு வந்த திரியில எரிச்சுக்காட்டினவரோ? “இதென்ன கேள்வி! அவர் கொண்டுவந்த திரியில தானே எரிப்பார்!”

“அங்கதான் விசயமிருக்கு! நீங்க கொண்டு போய் திரிய குடுத்துப் பாருங்க அப்படி எரிப்பாரா எண்டு, கடைசி மட்டும் ஏலாது! அம்மாளாச்சியின்ர அருள்பாலிப்பால அந்தத் திரிய எரிக்க ஏலாது! இவர் கொண்டுவார திரியிலதான் விசயமிருக்கு! நீரிலும் எரியக் கூடிய விதமான இதுக்கெண்டு தயாரிச்சுக் கொண்டு வாறவர்! “இது என்ன புதினமான கதை! அப்படியுமொரு செப்படி வித்தை காட்ட ஏலுமா? இத நான் கடைசி மட்டும் நம்பமாட்டன்!”

“உண்மைய அறிஞ்சால் நம்பித்தான் ஆகவேணும்! தண்ணியிலையும் திரி எரியுற இரகசியத்த நான் இப்ப சொல்லப் போறன். கவனமாக்கேள், அத்திமரம் இருக்கல்லோ, அது ரொம்ப விசேசமான ஒரு மரம்!

(தொடர் 21 ஆம் பக்கம்)

பகுத்தறிவுக்கு… (15 ஆம் பக்க தொடர்)

அந்த மரத்தக் கீறினால் பால் வரும்! அந்தப்பால்ல பருத்தித் துணியில பிரட்டி எடுக்க வேணும். பிறகு அந்தப் பாலில் பூசி எடுக்க வேணும், காயவிட வேணும், இப்படியே ஐந்து முறை செய்தால், அந்தத் துணியத் திரியாக்கினால் தண்ணிபட்டால் பற்றி எரியும்! அதிலையும் உப்பில எரிசக்தி இருக்கு. உப்புத்தண்ணிக்குப் பத்தி எரியும்!…. இதே வேலைய சதுரக்கள்ளிப் பாலும் செய்யும்!… இதில விஞ்ஞானமும் இருக்கு! இதைத்தான் செப்படி வித்தையாக்கி, பக்தி எண்டு பேய்க் காட்டுறார் ஐயர்!”

இதை வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த வள்ளிநாயகிக்கு ஏற்கவும் முடியவில்லை, தள்ளிவிடவும் முடியவில்லை, துள்ளிக்கொண்டு திட்டாமலும் விட இயலவில்லை!

“இந்தத் தெய்வ சாபமான கதையாலதானே ஒண்டாலயும் விருத்தி இல்லாமல் கிடக்குறீங்கள்!… சரிசரி இந்த விண்ணாணக் கதையெல்லாம் விட்டுப்போட்டு, மூத்தவன்ர அலுவலப் பாருங்கோ, அவன் எங்க போறான் வாறான், என்ன செய்யுறான், எண்டு ஒண்டுமாத் தெரியல்ல! எல்லாம் மர்மமா இருக்குது! அவனப் பற்றி வீண் கதைகளும் வருகுது! என்ர பிள்ள தங்கமான பிள்ள! எல்லாம் கிரகக் கோளாறுதான்! நாளைக்கே வேலுப்பிள்ளை சாத்திரியாரிட்டக் கூட்டிக் கொண்டு போங்கோ! அவர் நினைச்ச காரியமும் பார்ப்பார், பரிகாரமும் சொல்வார்! எப்ப இருந்து சொல்லிக் கொண்டு வாறன் கவனிக்குறீங்கள் இல்லையே! நாளைக்கே நீங்கள் அங்கக் கூட்டிக் கொண்டு போக இல்லையெண்டால் நான் சாப்பாடு இல்லாமல் கிடந்து சாவன்!”

இந்தக் கதையோடு பரமேஸ்வரன் வாக்குவாதத்தை கைவிட்டு அடுத்த நாளே மகனையும் கூட்டிக் கொண்டு போனார் வேலுப்பிள்ளைச் சாத்திரியிடம்! அவர் ஏற்கனவே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்தான். அவர் சாத்திரம் பார்ப்பார் என்று தெரியும். பத்திரிகைகளுக்கும் சோதிடப்பலன், வருடப்பலன் பார்ப்பார் என்று தெரியும்! இதையெல்லாம் அவர் படிப்பவர்தான் ஆனால் இதிலெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை! முற்றுமுழுதாக நம்பக் கூடியதாக இல்லை! பொதுவானதாக இருக்கும்.

யூகத்தின் அடிப்படையில் எழுதியதாகவிருக்கும்! நமக்கோ பெரும்பாலும் பொருத்தமில்லாமல் இருக்கும்!….. இப்படியாக சாத்திரத்தைப் பற்றி அவர் எள்ளல் இருக்கும்! சோதிடம் மனோதிடத்தை அழித்து, அதை நம்பியவனை குட்டுச் சுவராக்குகிறது! சோதிடம் சொல்பவன் உயர்ந்தான், கேட்டான், நம்பிக் கெட்டான்!….. இப்படியாக சாத்திரத்தைப் பற்றி அவர் பகுத்தறிவு சொல்லும்! ஆனால் இந்த நினைச்ச காரியம் சொல்வது பற்றி பலரும் நல்லபிப்பிராயம் சொல்லியிருக்கிறார்கள்! இதை நேரிடையாகவே கண்டுணர வேண்டும் என்று அவாவும் இருந்ததால் மகனோடு சென்றார் அங்கே!

வேலுப்பிள்ளைச் சாத்திரியின் வீடு பிரமாண்டமானது! சோதிடம் சொல்லி நல்ல வரும்படி அவருக்கு! உள்ளே கால்வைத்தால் கனபேர் வரிசைக் கிரமமாக காவலிருந்தார்கள். பரமேஸ்வரனும் மகனும் அந்த வரிசையில் அமர்ந்தனர். உதவியாள் ஒரு பெண். ஒழுங்குகளையும், தொட்டாட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள். மனைவியோ வேலைக்காரியோ தெரியவில்லை! உட்செல்வோரும் வெளிச் செல்வோமாயிருந்தது!

தந்தையும் தனயனும் உள்ளே போய் விபூதி குங்குமம் பூசி விரித்த பாயில் அமர்ந்தனர். சாத்திரியாரும் பாயிலேதான் வீற்றிருந்தார். ஏதோ தியானத்தில் இருப்பது போலிருந்தார்! புகை மண்டலமாக இருந்தது, அது வாசனையை அள்ளித்தந்தது! சைவ தெய்வங்களின் சித்திரங்கள் படமாய் விரிந்து கிடந்தன. முக்கியமாக ஆஞ்சனேயர் படம் கொலுவீற்றிருந்தது. முன்னே குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவரிடம் அனுமர் வாலாயம் இருக்கிறதாம்!

“நீங்கள் யாருக்காக வந்தீர்களோ, அவரின் பெயரையும், எழுதி வந்த காரியத்தையும் எழுதி மூன்றாக மடித்துத் தாருங்கள்” என்றார். அவர் பேனையும் காகிதம் முன்னால் இருந்தது. பரமேஸ்வரன் மகனின் பெயரை எழுதினார் பரமானந்தம் என்று. வந்த நோக்கம் என்னவென்றும் நாலேவரிகளில் எழுதினார். எழுதிய காகிதத்தை மூன்றாக மடித்து அவரிடம் நீட்டினார்.

அதை வேண்டிய சாத்திரியார், திரிபோல சுருட்டி முன்னே எரிந்து கொண்டிருந்த விளக்கில் அதை எரித்தார்! அது எரிந்து கருகியது! அந்தக் கரிச்சாம்பரை முன்னே இருந்த எண்ணெய் பூசிய கட்டையில் பூசினார். நன்றாகப் பூசியபின், அக்கட்டையில் கிடந்த கரியைத்தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் இமை வெட்டாமல்! அப்படிப் பார்த்துக் கொண்டே பேசத் துவங்கினார்.

“நீங்கள் ஒரு வாலிபனின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள்! அவரின் பெயர்…. ‘ப’ வரியில் துவங்கி ‘ன’ வரியில் முடிகிறது!…… இவர் தீவிரமான புரட்சிகரமான சிந்தனை போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்! அதற்கு ஏதுவான கட்சியோடோ, இயக்கத்தோடோ, குழுக்களோடோ தான் தொடர்பினைக் கொண்டிருக்கிறார்! நீங்கள் பாராமுகமாயிருந்தால், உங்களை விட்டு வெகு தூரம் போய் காணாமலே போய்விடுவார்!…. பருவ வயதில் பாலியல் இச்சை தீர்க்கப்படாமையால் தான் இப்படியான போக்கில் போய்க் கொண்டிருக்கிறார்! இந்த ஆபத்தில் இருந்து இவரைக் காப்பாற்ற ஒரேயொரு வழிதான் இருக்கிறது…. அவசரமாக அவசியமாக இவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும்! கால்கட்டு போட்டால்தான் இவர் அடங்கி, நல்ல மனிதனாக வாழத்துவங்குவார்…..!”

தட்சணையைச் செலுத்தி வீடு வந்த பின்னும் பரமேஸ்வரனுக்கு மூளை தீவிரமாக வேலை செய்தது! மகனின் பெயரையும் சரிபடவே இசைத்திருக்கிறார்! இவன் மனப் போக்கையும், மனோவிகாரத்தைத் தீர்க்கும் தீர்வையும் சொல்லியது மிகவும் பொருத்தமானதாகச் சரியானதாகவே அவருக்குப் பட்டது! தெய்வ அருள் வாக்காகவே தோன்றியது! பகுத்தறிவு வாதம் செய்யத் தோன்றவில்லை!

மனைவி வள்ளிநாயகியிடம் அங்கே நடந்ததை, அவர் சொன்னதை அப்படியே பாடம் ஒப்புவித்தார்!

“பார்த்தீங்களா, எப்பதுவக்கம் நான் சொல்லிக்கொண்டு வாறன் இனி எண்டாலும் இதுகள நம்புறீங்களா? என்ர பிள்ள தங்கமானவன்! அவனில ஒரு பிழையும் இல்ல! காலா காலத்தில ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்காதது எங்கட பிழை! கெதியா அவனுக்கு ஒரு சீதேவியைப் பாருங்க! அவசரமாக கலியாணம் செய்து வைக்க வேணும்!

பரமேஸ்வரன் துரிதமாகச் செயல்பட்டார்தான் பெண் பார்க்கும் படலம் நடைபெற்றதுதான், ஆனால் பரமானந்தத்தைப் பற்றி அரசல் புரசலாகக் கதை பரவியதால் பலரும் பெண் கொடுக்கத் தயங்கினார்கள்! திருமணப் பேச்சு இழுபடவே செய்தது!

காலம் இவர்களுக்காக காத்திருக்குமா? திடீரென்று பரமானந்தத்தைக் காணவில்லை! அவன் ஏதோவொரு ஆயுதக் குழுவோடு சேர்ந்து விட்டான் என்ற செய்தி மட்டுமே கிடைத்தது! வள்ளிநாயகி அழுது புலம்பியதுதான் மிச்சம், அவனைக் காணக் கிடைக்கவில்லை! வள்ளிநாயகி நிம்மதியாய் இருக்க விடுகிறாள் இல்லை! பரமேஸ்வரன் ஓடித் திரிந்து தேடித்திரிந்து வாடிச் சோர்ந்தே போனார்! மகனை மீட்டுக் கொண்டுவர இயலவில்லை! இந்த நம்பிக்கையும் போய்விட்டது! இயமனிடம் அகப்பட்டவனைக் கூட மீட்கலாம்…. ஆனால் அவர்கள் பிடியில் சிக்கியவனைக் காப்பற்றவே முடியாது, என்று தெரிந்துவிட்டது! முயற்சியைக் கைவிட்டார்! ஆனால் தாயுள்ளம் அழுது வடிவதை நிறுத்தவே இல்லை!

இது நடந்து சில மாதங்கள் சென்றிருக்கும், பரமேஸ்வரன் தனக்குப் பழக்கப்பட்ட அதே டொக்கியாட் வீதியால் போய்க் கொண்டிருக்கிறார். தம்பியார் தொலையில் பேசினார் அம்மாவுக்கு வருத்தம் கடுமை! இதுதான் இறுதியோ தெரியவில்லை! உடன் வரவும்! இந்த அறிவித்தல் கேட்டதும் விரைந்து கொண்டிருக்கிறார் ஈருளியில்! அந்த வீதியால் நேரே போனால் மனையாவெளி வருகிறது. அங்கேதான் அம்மா இருக்கிறார் தம்பி வீட்டில்.

இவர் போய்க் கொண்டே இருக்கையில் காளி கோயில் வந்து அதைக் கடக்க இருக்கையில் ஒரு குரல் “ஐயா! கொஞ்சம் நில்லுங்கோ! நீங்க உங்கட அம்மாவுக்கு வருத்தம் பார்க்கத்தானே போறீங்க! வாங்க என்ர கதையக் கேளுங்க!

பரமேஸ்வரன் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து போனார்! துவிவண்டி எப்படி நின்றதோ அவருக்கே தெரியாது! குரல் வந்த திசையை திரும்பிப்பார்த்தார்! சாத்திரம் சொல்லும் குறத்தி ஒருத்திதான் இவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்! இவர் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டவராக அவள் முன்னே போய் அமர்ந்தார்! அவர் அவள் முகத்தைப் பார்த்தபடி இருந்தார். அவளும் அவர் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்! சற்று நேரம் உற்று நோக்கிய அவள், ஏதோ அவரைப் பற்றிய இரகசிய உண்மைகளைக் கண்டு கொண்டவள் போன்ற திருப்தியில் பார்வையைத் திருப்பினாள்.

வெற்றிலை ஒன்றை எடுத்து ஏதோ கீறி எழுதினாள். மூன்றாக மடித்து பரமேஸ்வரனிடம் நீட்டினாள். அவர் மடிப்பை விரித்து பார்த்தார். என்ன ஆச்சரியம், அவர் பெயர் அச் சொட்டாக எழுதப்பட்டிருந்தது, ‘பரமேஸ்வரன்’ என்று! அவர் ஆச்சரியத்தால் விறைத்து உறைந்தே போய்விட்டார்! இவ்வளவு காலமாக இவர் செய்த பகுத்தறிவு வாதங்களுக்கு பலமான அடி விழுந்தது போலாயிற்று!

அவள் இவர் கையை நீட்டச் சொல்லவில்லை! கைரேகை பார்க்கவில்லை! முகரேகையை மட்டும் பார்த்துக் கொண்டே சொல்லத் துவங்கினாள்: ஐயா, உங்களுக்கு மூன்று சகோதரர்கள், நீங்கள் மூத்தவர், அப்பா இளம் வயதில் பரகதியடைந்து விட்டார், அம்மாதான் உங்களை வளர்த்து ஆளாக்கினார். அம்மா இப்ப வருத்தமாக இருக்கிறார். ஆனால், இப்போதைக்கு அவவுக்கு சாவு வராது! நீங்க பெற்ற கடன் தீர்த்த பின்னர்தான் சாவு வரும்! உங்களுக்கு நான்கு பிள்ளைகள். ஒரு பிள்ளைய நீங்க இழக்க வேண்டி வரும்! ஆனால், ஐயாட புண்ணிய கருமங்கள், அம்மாட பக்தி விசுவாசங்கள் கொண்டு வந்தும் சேர்க்கும்!……மூன்று மாதத்தின் பின் என்னை வந்து சந்தியுங்கோ, நான் சொன்னதெல்லாம் நடந்தேறியிருக்கும்”

எல்லாம் சொல்லி முடித்த அவள் தலை கவிழ்ந்திருந்தாள்! இவர் தலைகால் புரியாமல் குழம்பிப் போனார்! அந்தக் குறத்தியை சிரம்தாழ்த்தி வணங்க வேண்டும் போல் இருந்தது! தெய்வ அருள் பெற்ற நங்கையைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டே இருந்தார்! சட்டைப் பையைத் துழாவினார். சில்லறைகள் தான் கிடந்தது! கையைப் பார்த்தார் மோதிரம் மின்னியது! ஆய்வுக்கு அகப்படாதவற்றை விஞ்ஞான உலகும், பகுத்தறிவு உலகும் மூட நம்பிக்கை என்று தான் சொல்லிக் கொண்டிருக்கும்! ஆனால் நம் பகுத்தறிவுக்கு எட்டாத ஏதோ ஒரு சக்தி – உண்மை கட்புலனுக்கு எட்டாமல் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறது! சிந்தனையோடு மோதிரத்தை அடகு வைத்துக் குறத்திக்குப் பணம் கொடுக்கப் போகிறார் பரமேஸ்வரன்!

– சூசை எட்வேட், திருகோணமலை (ஜனவரி 2016)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *