கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 27,764 
 
 

ராஜீ:

நாற்பதைக் கடந்து ஐந்து வருஷம் ஆகிறது. அழகான பெண்களைப் பார்த்தால், தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. இதுதான் அழகு என்று நிரந்தரமான கோட்பாடு ஏதாவது மனதில் இருக்கிறதா? கேவலம், அப்படியும் இருந்து தொலையவில்லை. திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ச்சேய்… இவளையா இவ்வளவு நேரம் பார்த்தோம்’ என என்னையே நொந்துகொண்டு, தலையைத் தொங்கப் போட்டுக்கொள்வேன்.

அதுவும் நாற்பது வயதுக்கு மேலும் அழகாக இருக்கிற பெண்களைப் பார்த்தாலே, பதற்றமாகிவிடுகிறேன். ரசிக்கும் ஆர்வத்துடன், குறைந்துவரும் என் தோற்ற இளமையும் சேர்ந்துகொண்டு, ரசிக்க முடியாத பதற்றத்தை உண்டு பண்ணிவிடுகிறது. உடனே வயிற்றைத் தடவிப்பார்ப்பேன். முன்தள்ளி, நாய்க் குட்டி ஒன்று உடம்பை சுருக்கிப் படுத்து இருப்பதுபோல் மெத்துமெத்தென்று இருக்கும் தொப்பையை ஓங்கிக் குத்திக்கொள்ளலாமா எனத் தோன்றும்.

வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் வரும் வரைக்கும் எந்தயோசனை யும் எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தாலும்கூட, சாலையில்புன்னகைத்த படி செல்லும் ஒரு தேவதை, தன் பங்குக்குக் கல்லெறிந்துவிட்டுப் போய்விடுகிறது. தலையை உதறி, பிதுங்கும் விழியை உள்ளே தள்ளி, துடிக்கும் இதயத்தைச் சமாதானப்படுத்தி, அலுவலகத்துக்குள் நுழை வதற்குள்… ப்பா… நரகம்தான்!

வயது கூடக்கூட அழகான பெண்களைப் போலவே, அறிவான பெண்களும் இம்சிக்கிறார்கள். படைத் தளபதியைப் போல் நிர்வாகம் செய்யும் பெண்களையும் மதிநுட்பத்துடன் செயல்படும் பெண்களையும் பார்க்கும்போது, அடிவயிறு சில்லிட்டுப்போவதை எப்படித்தான் தடுத்து நிறுத்த முடியுமோ?

எனது சமீபத்திய சித்ரவதை வினோ மேம்!

வினோ:

பகிர்தல்

மனசுக்குப் பிடித்தப் பெண் பின்னால் மட்டும் கூச்சத்துடனும் பயத்துடனும் சுற்றும் பையன்களை என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் பார்த்திருக்கிறேன். காதலித்துவிட்டால் உயிரைக் கொடுத்துக் காதலிப் பதும், காதலில் தோல்வி என்றால் தாடி வளர்த்துக்கொண்டு வாழ்க் கையே தொலைந்ததுபோல் சுற்றிவந்த பையன்களை, 25 வயதில் கடந்திருக்கிறேன். கல்யாணமாகி ஒரு குழந்தை பெற்று, மரியாதையான ஓர் இடத்துக்கு வந்துவிட்டால் ஆண்களின் பார்வையில் இருந்து தப்பிக்கலாம் என நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், மிட்டாய்க் கடையைச் சுற்றி எப்போதும் ஈ மொய்க்கத்தானே செய்யும் என்பதைப் போல்… சதா மொய்க்கும் கண்கள். முன்பெல்லாம் வயது வித்தியாசத்துக்கேனும் கண்ணியம் அல்லது மரியாதை இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் 15 வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களின் கண்களும் விதிவிலக்கின்றித் திரும்பிப் பார்க்கின்றன.

நான் ஒரு வேலைப் பைத்தியம். எந்த நேரமும் எனக்கு வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். அதுகூட டேக் ஆஃப் ஆன விமானத்தைப் போல், பரபர வேகத்தில். நிறுத்தி… நிதானம் எல்லாம் கிடை யாது. வேகத்திலும் நேர்த்தி பழகிவிட்டது.

அருண் பிறந்தவுடன், அவன் தூங்கி எழுவ தற்கு முன்பே காலை வேலைகளைச் செய்வது, இருபது வருடங்களாகப் பழகிவிட்டது. காலை ஏழரை மணிக்குள் காலை டிபன், மதியம் கேரியர் எல்லாம் தயாராகிவிடும். அதன் பிறகு அமர்ந்து நாளிதழ் பார்த்துவிட்டு, குளித்து, ரெடியாகி, அன்றைய வேலைகளை மனசுக்குள் ளேயே ஓடவிட்டுக்கொண்டுக் கிளம்பும்போது, முகத்தில் டென்ஷன் வர வாய்ப்பே இருப்பது இல்லை.

நாளைக்கு அணிய வேண்டிய ஆடையை முதல் நாளே தீர்மானித்து, எடுத்துவைத்துவிடு வேன். என்னைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆடைக்கும் ஒவ்வொரு மனநிலை வைத்திருக்கி றேன். ஒவ்வோர் ஆடைக்கும் பின்னால் ஓர் ஆழமான சம்பவம் நினைவில் இருக்கும். புதிய ஆடை என்றால், அதனை அணியும் தினத்தை முன்பே தீர்மானித்துக்கொள்வேன். எப்போதுமே நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். வீட்டில் இருந்தாலும். சோர்வு உடலிலும் ஆடையிலும் தெரியாதவண்ணம் பார்த்துக்கொள்வேன்.

என்னைப் பலரும் திரும்பிப் பார்த்துக் கடப்பது தெரிந்தாலும்கூட நான் கண்டுகொள்ளவே மாட்டேன். என் உயரமும், உயரத்துக்கான சரியான எடையும், ஆடையும் சேர்ந்து தந்திருக்கும் இந்தத் தோற்றத்தைப் பார்க்காமல் கட்டாயம் கடக்க வேண்டும்… என்று நான் எப்படிச் சொல்ல முடியும்?

ஆனால், இந்த ராஜீ மட்டும், எப்போது வாய்ப்புக் கிடைக்கும் என்று தீவிரமாக இருப்பது எனக்குத் தாமதமாகத்தான் புரிந்தது. காதல் இல்லை… சத்தியமாக! ஆனாலும் காதல் போன்ற ஒன்றை, பரவசத்துக்காகக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் இந்தத் தலைமுறை நோய், ராஜீக்கும் இருப்பது புரிந்தது. என்னுடைய சமீபத்தியப் பிரச்னை ராஜீயும் அவனுடைய செல்போனும்தான்.

ராஜீயும் வினோவும்:

”கதவைத் திறக்கிறதும் பஸ்ஸரை அழுத்துறதும் பேரலலா நடக்கிற மாதிரியே இருக்கு மேம்…’ – வினோ மேமைப் பார்த்து ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுவேன்.

”கார்ல வர்றப்பவே இன்னைக்கான வேலை களை யோசிச்சு பிளான் பண்ணிடுவீங்களா? வந்தவுடனே நீங்க சீட்ல உட்கார்றதுக்கு முன்னா டியே, உங்க பி.ஏ-வை உங்க முன்னால நிக்க வெச்சிடறீங்களே…” – வியப்பேன். பெண்களிடம் எதையாவது ஒன்றை வியந்து பேசினால்தான், பின்னால் விஷயமே இல்லாமல் மணிக்கணக்காகப் பேச முடியும் என்பது என்னுடைய முன் அனுபவம்.

பகிர்தல்2

”வீட்டைவிட்டுக் கிளம்பின அடுத்த விநாடியே, வேலைதானே ராஜீ நம்மை எல்லாம் இயக்குது. அதுக்குத்தானே கை நீட்டி சம்பளம் வாங்குறோம். அப்புறம் எனக்கு நிதானமா வேலை செய்றதுக்கு அறவே பிடிக்காது…” இந்த பதிலை சொல்வதற்குள் வினோ மேம் இரண்டு, மூன்று ஃபைல்களைப் பார்த்துக் கையெழுத்துப் போட்டு முடித்திருப்பார்.

”நிறைய லேடீஸைப் பார்த்திருக்கேன் மேம்.காலைல உள்ள வர்றப்பவே தலையெல்லாம் கலைஞ்சு, பூச்சரம் பின்னலுக்குக் கீழே ஒதுங்கிக் கசங்கி… ப்பா… பாத்ரூம் உள்ளே பத்து நிமிஷம் போய்ட்டு வெளியில வந்தாதான்… கொஞ்சமாச்சும் பாக்கிற மாதிரி இருப்பாங்க. உங்களுக்கு எப்படி மேம் முன் நெத்தி முடிகூட கலைய மாட்டேங் குது..?” – நான் மனசுக்குள் தினம் கேட்கும் கேள்வி இது. இன்றைக்கு நேரடியாகவே வினோவைப் பார்த்துக் கேட்டேன்.

ஏதோ ஒரு ஃபைலைப் பார்த்துக்கொண்டி ருந்த வினோவின் கைகளில் எந்தத் தயக்கமும் இல்லை. விறுவிறுவென்று கையெழுத்துப்போட் டபடியே என் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாததுபோல் இருந்தார்.

”புரமோஷன் வந்த பிறகுதான் நீங்க கார்ல வர்றீங்களாம் மேம். முன்னால பஸ்ஸுல வர்றப் பவும் இதே மாதிரிதான் இருப்பீங்கனு ஹெச்.ஆர். நேத்து லஞ்ச் டைம்ல சொன்னார்.”

வினோ மேம் என்னை நிமிர்ந்துப் பார்த்து சிரித்தார்.

”ராஜீ… ஆபீஸ்ல வொர்க் பண்ற ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 5 ரூபா 72 பைசா சம்பளம் தர்றாங்க. ப்ளீஸ்… அதுக்கு வேலை செய்றேனே!”

”ஹோ… நீங்க இவ்ளோ நல்லாக் கணக்குப் போடுவீங்களா? தேங்க்ஸ் மேம். கட்டாயம்

லஞ்ச் டைமுக்கு வருவேன்!” எனச் சிரித்துக் கொண்டே, என் பையை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.

நான் கதவைத் திறந்துகொண்டு வெளியேறப் போகும் ஆசுவாசத்துக்காக, அவருடைய கைகள் இரண்டு, மூன்று விநாடிகள் காத்திருப்பதை உணர முடிந்தது. நான் வெளியேறினேன்.

வினோவும் ராஜீயும்:

எஸ்.எம்.எஸ். வந்திருக்கும் செய்தியை செல் போன் அறிவித்தது. ‘ராஜீ’ என்றிருந்தது. அவன் எப்போது அனுப்பியிருப்பான் என்று யோசித்துக்கொண்டே குறுஞ்செய்திக்குள் போவதற்குள் அடுத்த மெசேஜும் அவனிடமிருந்து வந்திருந் தது. ‘தேவதைகளுக்கு வயதில்லை’ என்றது முதல் செய்தி.’தேவதைகள் நினைத்தபோது பார்க்கக் கிடைக்கக் கூடியவர்களே…’ என்றது இரண்டாவது செய்தி. விநாடி நேரத்துக்குள் எப்படி அனுப்பினான் என்ற சுவாரஸ்யம் அளவுக்குக்கூடசெய்தியின் சாரம் என்னை ஈர்க்கவில்லை. யாருக்கோ, யாராலோ சொல்லப்பட்ட வார்த்தைகளை, அர்த்தமே இல்லாமல், யாருக்கு அனுப்புகிறார்கள். செய்தியை அழித்து விட்டு, வேலைக்குள் நுழைந்தேன். இடைவெளி இல்லாத வேலைக்குள் நுழைந்திருந்த நேரத்திலும், மனசுக்குள் ‘தேவதைகளுக்கு வயதில்லை’ என்ற வரி, இரண்டு முறை வந்து விட்டுப்போனது. எதற்கு இதை நமக்கு அனுப்பினான்?

மதிய சாப்பாட்டு நேரத்துக்குச் சரியாக ஒரு நிமிடம் முன்பாகவே வந்து நின்றான். ‘உட்காரு’ என்பதைப் போல் சைகை காட்டினேன். செல்போனில் குறுஞ்செய்தியின் சத்தம் கேட்டது. மேலே இவன் பெயரைப் பார்த்தவுடனேயே ஆச்சர்யக் கேள்விகள். ‘ம்ம்ம்…பாருங்க’ என்பதைப் போல் உதட்டைப் பிதுக்கி, முகத்தால் ஜாடை செய்தான். ‘நான் நல்லவனா, கெட்டவனா எனக்குத் தெரியாது. சத்தியமாக நல்லவன் இல்லை. ஆனால், கெட்டவன் என்று சொல்லிக்கொள்கிற நல்லவன்’ என்றிருந்தது.

நான் நிதானமாக செல்லை எடுத்து, ‘ப்ளீஸ் டோன்ட் செண்ட் பார்வர்டட் எஸ்.எம்.எஸ். டு மீ ’ என ஒவ்வொரு எழுத்தாக டைப் செய்து அனுப்பினேன். எனக்கு நிறையக் குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கம் இல்லாததால், மெதுவாகவே அனுப்பினேன். ஆனால், அந்தக் குறுஞ்செய்தி வந்ததாகவே அவன் காட்டிக்கொள்ளவில்லை. அவன் குறுஞ்செய்திஅனுப்புவதும் தெரியாது. படிப்பதும் தெரியாது. எப்படி சில விநாடிகளில் டைப் செய்து அனுப்புகிறான் என வியப்பாக இருக்கும். அவ்வளவு அழகாக அவன் செல்போனைக் கையாள்வான்.

எனக்கு செல்போன் என்பது தொடர்புக் கருவி மட்டுமே. கேட்ட கேள்விக்குப் பதில் அல்லது கேட்க வேண்டிய கேள்வி… இதற்கு மட்டுமே செல்போன் எனக்குப் பயன்பட்டது. ராஜீ என் னோடு தினமும் சாப்பிடும்போதும் தேநீர்இடை வேளைகளிலும் பேசத் தொடங்கிய பிறகு, என் மீதான அவன் உரிமைகள் அதிகரித்தன. காலையில் அலுவலகம் கிளம்பும் முன்னால் ஐந்தாறு குறுஞ்செய்திகளையாவது அனுப்பிவிடுகிறான். ‘காலை வணக்கத்தில் ஆரம்பித்து, இன்றைக்குக் காலை யில் என்ன டிபன்? இன்று என்ன கலர் சேலை?’ என்பது வரை முதலில் பொதுவான விசாரிப்பு களாக இருந்தன. அந்தக் குறுஞ்செய்திகளில் ஒன்றிரண்டுக்காவது பதில் போடுவேன். ஒற்றை வார்த்தைப் பதில்கள்தான். பொதுவான விசாரிப்புகளைக் கடந்து சில செய்திகள் சட் டென்று ஒரு கணத்தில் அந்தரங்கத்தைத் துழாவு வதைப் போல் நிறம் மாறும்.

‘இன்றைக்கு ஓ.டி. இருந்துச்சா?’ எனக் காலையில் வரும் குறுஞ்செய்திக்கு, என்ன அர்த்தம் எனப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். இதில் ஏதோ தவறு இருக்கு என நிதானிப்பதற்குள், அந்தக் குறுஞ்செய்தியை மறக்கடிப்பதைப் போல், ‘பல மனிதர்கள் தாங்கள் சம்பாதித்த பெருமையை, பாவம்…இறுதிக் காலத்தில் தாங்களே அழித்துவிடுகிறார் கள்’ என ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி தந்த புரிதலில் நான் ‘ss’ என இரண்டு தடவை ‘எஸ்… எஸ்’-ஐ அழுத்தி, பதில் அனுப்பிவிட்டு, குளிக்கப்போய்விட்டேன்.

அலுவலகம் கிளம்பிய பிறகு, செல்போனை எடுத்துப் பைக்குள் வைத்துக்கொண்டுக் கிளம் பினேன். எந்தத் தவறிய அழைப்பும் குறுஞ்செய்தியும் வரவில்லை.

கார் அலுவலகம் நோக்கி விரைந்தது. வண்டியில் ஏறி உட்கார்ந்த அடுத்த விநாடி, கேமராவில் பார்த்த மாதிரி, ராஜீயிடமிருந்து குறுஞ்செய்தி. ‘கிளம்பிவிட்டீர்களா… மேம்?’ எங்கிருந்துதான் இவன் பார்ப்பான்? இதுவே ஒரு வேலையா? எனக் குறுஞ்செய்தியை அழிக்க முனைந்தபோது, மேலே இருந்த குறுஞ்செய்தி எனக்குள் ஒரு துடிப்பை உதறவிட்டது. kis ss a’ என அவன் அனுப்பியிருந்த செய்தி.

உடல் நடுங்கியது. அதிகமாக வியர்த்தது. உதடு ஒட்டியது. பாட்டிலை எடுத்து ஒரு வாய் தண்ணீர் குடித்தேன். ‘எத்தனை மணிக்கு அனுப்பியிருக்கான்?’

நேரம் பார்த்தேன். 8.45 மணி.

நான் குளிக்கச் சென்றிருந்த நேரம். இன்னும் வியர்த்தது. குறுஞ்செய்தி வந்த தகவல் மேலே இல்லையே? செல்போனை எடுத்து யார் பார்த்திருப்பார்கள்? சாப்பிடும்போது அருண் யாரிடமோ போன் பேசிக்கொண்டு இருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அருணும் அவரும் பல நேரம் என் செல்போனிலிருந்துதான் பேசுவார்கள்.

குமட்டுவதுபோல இருந்தது. கண்களை மூடிக்கொண்டு, இருக் கையில் சாய்ந்தேன். முகம் முழுக்க மனதின் குழப்பம் வியர்வையாக வழிந்தது. திடீர் என்று வயதானதுபோல், கை கால்களில் தொய்வு. அலுவலக வளாகத்துக்குள் கார் நுழைவதற்கு முன்பே இறங் கத் தயாராக இருக்கும் எனக்கு, இன்று அலுவலகம் வந்ததே தெரியவில்லை. டிரைவர் ‘மேடம்’ என்ற பிறகே அலறி அடித்துக்கொண்டு கண்களைத் திறந்து விழித்துப் பார்த்தேன். இமை கள் பிரிக்க முடியாமல் வலித் தன.

சீட்டில் உட்காரும் முன் பாக, ராஜீ புதுசான ஒரு சிரிப்புடன் எதிரே வந்து நின்றான்.

”பார்த்தீங்களா..? உங்க பி.ஏ. வர்றதுக்கு முன்னாடி இன்னைக்கு நான் வந்து நின்னுட்டேன். பஸ்ஸருக்கு வேலையே இல்ல மேம்…” என்றான்.

”ராஜீ, என் பையன் இன்ஜீனியரிங்…” என்று முடிப்பதற்குள்,

”மேம், அன்னைக்குப் பார்த்தேனே… உங்க பையன்கூட உங்களைப் பார்த்தா, இன்னும் வயசு கம்மியா தெரியிறீங்க. புதுசாப் பார்க்குற யாராவது ரெண்டு பேரையும் பார்த்து…”

பதறிவிட்டேன்.

”ச்சூ… பேசாதே ராஜீ!”

குரலின் கடுமை அவனுக்குள் பதற்றத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.

”ரெண்டு பேரையும் பார்த்து, அக்கா… தம்பினு சொல்வாங்கனு சொல்ல வந்தேன் மேம்!”

”ஏன் இன்னைக்கு டென் ஷனா இருக்கீங்க?”

”எனக்கு காலையில என்ன எஸ்.எம்.எஸ். அனுப்புனீங்க?”

”நிறைய மெசேஜ் அனுப்பு னேன் மேம்?”

”நான் எதைக் கேட்குறேன்னு உனக்குத் தெரியலையா?”

”ஹோ… அந்த கிஸ்ஸா?”

எனக்கு வியர்த்தது.

”எஸ்… எஸ்-ன்னா சும்மா ஒரு ரைமிங்காக கிஸ்ஸானு கேட்டேன் மேம். அவ்ளோதான்…”

”ரைமிங்கா?”

”எஸ்ஸ்…”

ஒன்றும் புரியவில்லை.

”அருணுக்குக் கல்யாண வயசாகுது ராஜீ!”

”உங்களுக்குத்தான் நான் மெசேஜ் அனுப்பி னேன் மேம்!”

”அவன் பார்த்தா என்ன நினைப்பான்?”

”அப்ப, பார்க்கலைன்னா ஓ.கே-வா?”

பல்லைக் கடித்துக்கொண்டேன்.

”எனக்கு எதுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பறீங்க? நான் கேட்டேனா?”

”ஜஸ்ட் ஷேரிங் மேம்…”

”உங்ககிட்ட எனக்கு ஷேர் பண்ண ஒண்ணும் இல்லை.”

”நான் ஷேர் பண்ணிக்க விரும்பறேன்.”

”உங்க நம்பரை ப்ளாக் பண்ணிருவேன்.”

”எத்தனை நம்பரைப் பண்ணுவீங்க? என் நம்பரை பண்ணலாம். இந்த ராஜீக்குப் பதில் எத்தனையோ ராஜீ வருவாங்களே…”

”மரியாதை தெரிஞ்ச ஒருத்தர், ரெண்டு பேர்கூட பேசிக்கிறேன்.”

”நோ ப்ராப்ளம். டிரை பண்ணுங்க. பட், நான் மட்டும்தான் கெட்டவன்னு சொல்லிக்கிற நல்லவன்கிறதை மட்டும் மறந்துடாதீங்க மேம். பை.”

கிளம்பினான். அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். செல்போன் ஸ்க்ரீனையே பார்க்காமல், பின் பக்கம் செல்போனைவைத்துக் கொண்டு ஏதோ மெசேஜ் தட்டிக்கொண்டே ராஜீ கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான்.

ஏ.சி-யின் குளிர்க் காற்றைக் கிழித்தபடி வெப்பக் காற்று உள்ளே வந்துகொண்டிருந்தது!

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *