நேற்றைய நினைவுகள் கதை தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 12,081 
 
 

ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று பொரிந்து தள்ளினார். “இங்கே பாரு சுசீலா, இப்படி முன்னே பின்னே பழக்கமில்லாத புது எடத்துல என்னத் தனியா விட்டுட்டு இனிமே எங்கேயும் போகாதே. உன்னால் கூடக் கூட்டிக்கொண்டு போகமுடியாவிட்டாலும் பரவாயில்லே, இங்கேயே யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் இருந்துக்கிறேன். என்னால் இங்கே தனியே இருக்கமுடியாதும்மா, ராத்திரி தூக்கமே வரலை. ரொம்ப பயமா போயிட்டுது.

“காலைலே தலைவலி. கரண்ட் இல்லாததால ஃபேன் இல்லே. வேர்த்துக் கொட்டறது. ஃப்ரிட்ஜ் பால் கெட்டு சாமான் எல்லாம் வீணாப் போச்சு. காலிங் பெல் வேலை செய்யலேன்னு பாலை வாசல்லயே போட்டிருக்கான். நாய் வந்து கடிச்சு பால் மாடிப்படி வாசல்ல கொட்டிக்கிடக்கு. தண்ணியைக் கொட்டிக் கழுவிவிட்டேன். வேற என்ன செய்ய முடியும்.. ஒன்பது அடிச்சாத்தானே வேலைக்காரி வருவாள்…

“அவள் வந்ததும் ஒரு பாட்டம் அழுதேன். நீயாவது துணையாக இரேன்னேன். அவள் என்ன செய்வாள்…பள்ளிக்கூடப் பசங்களை காலைல கொண்டுவிட்டு அழைச்சிண்டுவந்து, அந்தக் குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு குடுத்து, டப்பாக்களைக் கழுவி வச்சு – பாவம், அதுல தானே அவளுக்கு வருமானம்…

“நாம்ப துணி துவைக்க, பாத்திரம் தேய்க்க குடுக்கும் பணம் அவள் வீட்டு வாடகைக்கே சரியாகிவிடும்னு சொல்லியிருக்கா… அவள் சம்பாதிச்சுத்தானே குடும்பம் நடக்கிறது… புள்ளையை வளத்து சாப்பாடு சாப்பிட முடியறது…

“நீயும்தான் இந்த அக்கம்பக்கத்துக்காரங்க கிட்டே சொன்னியே, கிழவி தனியா இருக்கா, அப்பப்போ கவனிச்சுக்கங்கன்னு… ஒரு ஈ,காக்கா எட்டிப் பாத்துதா? இல்லயே… இதுவே நாம்ப முன்ன இருந்தமே, அங்கே எல்லோரும் தாயாப் பிள்ளையா, அதுக்கும் மேலேயே, சொந்தத்துக்கும் ஒரு படி மேலாய் – அப்படி ஒரு ஒறவு… நீங்கள்ளாம் என்னைத் தனியா விட்டுட்டு பெரிய யாத்திரைக்கே போயிட்டீங்க, அப்பவும் ஒரு நாள் கரெண்ட் இல்லே. கீழே இருந்தவர், மாடியிலே இருந்தவர், எதிர்த்த வீட்டுக்காரர், பக்கத்து வீட்டுக்காரர்னு எல்லோருமா கரெண்ட் ஆபீசுக்கே போய் கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்திட்டாங்க.. ஆள் மேல ஆள் இ.பி. ஆபீஸ்லேயிருந்து அலறி அடிச்சிக்கிட்டு வந்து பாத்தாங்க… ஆனால், ஏதோ கோளாறுன்னு சொல்லி ஒரே ஒரு விளக்கு மட்டும் எரியும்படி அவசரமா ஒரு ரிப்பேரைப் பண்ணிக்கொடுத்துவிட்டுப் போனார். மறுநாள் வந்து முழுசா சரிசெஞ்சுக் கொடுத்தாங்க…

“அதற்குள், சமையலறைக்கு இன்னும் கரெண்ட் வரலையேன்னு ரவா தோசைக்கு நனைத்துவைத்திருந்ததை எடுத்துக்கொண்டு போய் அரைச்சு சட்னியும் அரைச்சுக்கொண்டு வந்தாள் அடுத்த வீட்டு மகராசி! ஃபேன் ஓடலைன்னா கொசுக்கடிக்கும். எங்கள் வீட்டிற்கு வந்து தூங்கலாம்”, என்று ராஜி கூப்பிட்டாள். ‘இல்லை வேண்டாம், ஃபேன் வந்துவிடுமோ என்னவோ, நான் இங்கியே இருக்கேன்”, என்று சொன்னேன்.

“உடனே, மாடிவீட்டுப்பையன் கொசுவராமலிருக்க சுருள்வத்தியைக் கொண்டு வந்து கொளுத்திவச்சு, “நான் துணைக்கு உங்ககூட படுத்துக்கறேன் பாட்டீ”, என்று சொன்னான். ”வேண்டாண்டா கண்ணா! ஸ்கூல் போக உங்கம்மா எழுப்பவேண்டும். நீ மாடியிலேயே படுத்துத்தூங்கு”, என்றேன். எல்லோருமே அவரவர் ஃபோன் நம்பரை நான் கேட்காமலேயே எனக்கு எழுதிக் கொடுத்திருந்தார்கள். என்னை அப்படி அரவணைச்சுப்பாங்க. பெரியவர்கள், சின்னவர்கள் எல்லோருக்குமே என்மேல் அன்பு, மரியாதை நிறைய இருந்தது அங்கே.

“இங்கே என்னவோ ‘பாஷ் ஏரியா’ன்னு சொல்கிறார்கள். என்ன லாபம்னா ‘மெய்ண்டனென்ஸ் சார்ஜ்’ன்னு சுளையாக ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். வேறென்ன?”

_மாமியாருக்கு பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. “என்ன சொல்கிறீர்கள் அம்மா… கரெண்ட் போயிட்டா நாங்கள் மாத்திரம் என்ன செய்ய முடியும்? ஒருத்தருக்கொருத்தர் அங்கலாய்த்துக்கொள்வோம். ஆனானப்பட்ட அமெரிக்கா, கனடா, இங்கிலாண்ட்லேயெல்லாமே ரெண்டுநாள் எல்லோரும் கரெண்ட் இல்லாமே திண்டாடிப்போனார்களே”

“அங்கேயெல்லாம் எப்படி தெரியுமா? ஏர்கண்டிஷன் இல்லையானா வெரச்சுப் போயிடுவார்கள். லிஃப்ட் வேலை செய்யலைன்னா எல்லாமே ஸ்தம்பிச்சு நிக்கவேண்டியதுதான். நமக்காவது கொஞ்சம் சமாளிக்க முடியும். அங்கேயோ குளிர்தேசம். பவம், அந்த மக்களெல்லாம் என்ன செய்யமுடியும்? நீங்கள் தனியா இருக்கமுடியும்னு தைரியமாச் சொன்னதால், அதுவும் ரெண்டுநாள் தானேன்னு போனோம். போய்த்தான் தீரணும்னு எந்தக் கட்டாயமுமில்லை தான்“,என்று சமாதானமாகப் பேசியதும் மாமியார் பாவம், குழந்தைபோல் மனசு மாறிவிட்டாள்!“என்னை எல்லோரும் விசாரித்தார்களா? நம்ம ஊருக்கு வரேன்னு சொன்னார்களா? யாரெல்லாம் வந்திருந்தார்கள்? குஞ்சலத்துக்கு பத்து வருஷம் கழிச்சு பிறந்திருக்கும்பிள்ளை அழகாகஇருக்கா? என்ன பேர் அதுக்கு?” என்று அடுக்க ஆரம்பித்தாள்.

மாமியாருக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று ஞாயிறன்று நாங்கள் முன்பு குடியிருந்த காலனிக்கு அழைத்துச்சென்றேன். எங்களுடன் குடியிருந்தவர்கள் பெரும்பாலும் காலி செய்துவிட்டார்கள். புதிதாக யார்யாரோ வந்திருந்தார்கள். எங்களுக்குப் பரிச்சயமுள்ளவர்களின் விலாசத்தைக் கொடுத்தார்கள். ராஜி அமெரிக்கா போயிருந்தாள். ரமா பிறந்தகம் போயிருந்தாள். ஜெயா மாற்ற லாகிப் போய்விட்டிருந்தாள். சாவித்திரி எப்போதும்போல் ஞாயிறன்றும் அலுவலகம் போயிருந்தாள்.

’யாரும் தங்களுடைய புதுவிலாசத்தைக்கூடத் தராமல் எங்கெங்கோ போய் விட்டார்களே’ என்று நான் நினைத்தபோது லட்சுமி சொன்னாள். “எல்லோருமே கூட இருக்கும்போதுதான் உறவு, சினேகம். இடங்கள் மாறும்போது சினேகமும் மாறிவிடுகிறது. நேற்றைய நினைவுகள் கதைதான். இன்றைய நிகழ்வுகள்தான் நிஜம்”, என்றாள்.

முற்றிலும் உண்மை அல்லவா!

நான் என் மாமியாரின் முகத்தைப் பார்க்கத் துணிவின்றி “நாங்கள் புறப்படுகிறோம்”, என்று சொல்லி, “மழைவேறு வரும்போலிருக்கிறது”, என்றபடி எழுந்துவந்தேன். நம் புதுவீட்டு அக்கம்பக்கத்துடன் சினேகம் வளர்த்துக்கொள்வது நல்லது என்று யோசித்தபடி வீடுவந்தேன். பாவம்! என் மாமியார் மௌனமாகிவிட்டது வேதனையாக இருந்தது.

– 09 ஜூலை, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *