நேரம் தப்பிய பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 2,549 
 
 

வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கும் நான், என்னை இறக்கிவிட்டுச்சென்ற பஸ்ஸின் பின்விளக்கின் வெளிச்சம் மறையும் மட்டும் சற்று நேரம் பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன் நினைவுகள் வீட்டை நோக்கி வட்டமிட்டுகொண்டிருக்கிறது.

நள்ளிரவை அண்மித்த நேரம் நான் மட்டும் அந்த பஸ் தரிப்பிடத்தில்….வீட்டுக்கு எப்படி போவது,வாப்பாவிடமிடமிருந்து என்ன சொல்லி தப்பிப்பது, உம்மா என்ன சொல்வாவோ “உனக்கு எத்தனை நாளைக்குத்தான் சொல்வது வாப்பாவைப்பற்றி தெரியும்தானே நேரகாலத்தோடு வீட்டுக்கு வரத்தெரியாதா..” கோபித்துக்கொண்டு நிற்பாவே எப்படி சமாளிக்கலாம்.. மனம் குழம்பியவனாக நடந்துகொண்டிருக்கிறேன்.

இரவு ஒன்பது மணிக்குள் வீட்டில் இருக்கவேண்டும்,ஆகக் கூடினால் பத்து மணிவரை அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் அதுவும் தொடராக இருந்தால் ஒன்பது மணி என்பது அரை மணித்தியாலத்தால் குறைக்கப்படும் இதுதான் வாப்பாவின் சட்டம்,கட்டளை,நிபந்தனை,வரையறை எல்லாம், முடிந்தவரை ஒன்பது அல்லது ஒன்பதுற்குள் வீடு வந்து விடுவேன், தப்பி தவறி பத்துமணி தாண்டிவிட்டால் அன்று வீட்டில் பெரிய அமர்க்களம் சூறாவளி இவைகளை தரிசிக்கவேண்டியிருக்கும்.

ஆனால் இன்று நண்பன் கலீல் பார்த்த வேலையால்…”பேய்ப்படமோ பிசாசிப்படமோ பிறகு ஒரு நாளக்கு பார்ப்போம் இதற்குப்பின் பார்த்தால் எனக்கு வீடுசெல்ல முடியாது கடைசி பஸ் எடுத்தாலும் வீட்டுக்கு செல்ல நள்ளிரவாகிவிடும் அப்புறம் எனது வாப்பாவை பற்றி ஒனக்கு தெரியும்தானே”

“எந்த நாளுமாடா மச்சான் இன்று ஒரு நாள்தானே புதுப்படம்டா பாத்திட்டு போடா”

அவனது வேண்டுதலை தட்டிக்களிக்கமுடியாமல் போனதின் பலனை அனுபவிக்கப்போகிறேன், வீட்டில் ரீவி பார்ப்பதென்றாலும் சில கட்டுப்பாடுகளை வாப்பா விதித்திருந்தார், செய்திகள் மற்றும் கல்வியோடு சம்பந்தமான நிகழ்ச்சிகள் உலகநடப்புகள் போண்றவைகளை பார்க்கலாம், சினிமாப்பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்கள் எதுவும் பார்க்கமுடியாது.

இருந்தபோதும் வாப்பா வீட்டில் இல்லாத நேரங்களில் ஏதாவது பார்ப்போம் என்றால்.. “வாப்பா எவ்வளவுதான் கட்டுப்பாடு விதித்தாலும் எல்லாம் உங்கட எதிர்கால நன்மைக்குத்தான் மகன் செய்கிறார் இந்தக்காலம் எங்கட அந்தக்காலம் மாதிரி இல்லயே அந்த காலத்தில ரீவி,போண் எதுவுமே இல்லை அதுமட்டுமா சிலஇடங்களில மின்சாரமே இல்ல ஆனால் இப்போ எல்லாம் இருக்கு அதனால்தான் உலகமே கெட்டுக்கிடக்கு ,அதோட ஏதோ தூளாம் ,ஐசாம் என்றெல்லாம் கதைக்கிறாங்க பெற்றோர்களும் தங்கடதங்கட பிள்ளைகளிடத்தில கவனம் செலுத்தாட்டி நாடேகெட்டுப்போகும் அதுதான் வாப்பா அப்படி கடுமையாக நடந்து கொள்கிறார் ,வாப்பாவுக்கு உங்கமேல இரக்கம் இல்லாமலில்ல உமக்கு தெரியுமா மகன் சிலநேரங்களில.. ’என்னைப்பற்றி மகன் என்ன நினைக்கிறானோ” என்று வாப்பா அடிக்கடி என்னிடம் கவலைப்படுவாரு அப்போவெல்லாம் நம்மட மகன் அப்படி எல்லாம் நினைக்கமாட்டான் என்று நான்தான் ஆறுதல் படுத்துவன் அப்போது அவரின் கண்கள் கலங்கி இருக்கும்”உம்மாவின் அந்தவார்த்தைகள் எனக்கும் கண்ணீரை வரவழைக்கும்

அன்றொரு நாள் கண்ணீர்வடித்த நான்தான் இன்று எனது வீட்டுக்கு செல்லும் வழியில் இருக்கும் சபா நாநாவின் வீட்டை அண்மித்துக்கொண்டிருக்கிறேன். அவரின் வீட்டிலிருந்து பத்து வீடு களிந்தால் எனது வீடு வந்துவிடும், வீதியெல்லம் தெருவிழக்குகள் இருந்தபோதும் சபா நாநா வின் வீட்டுக்கு முன்னால் இருக்கும் .விளக்கு கடந்த ஒரு சில மாதங்களாக எரிந்ததாக ஞாபகம் இல்லை. அதைப்பற்றி அவருக்கும் கரிசனை இருப்பதாகவும் தெரியவில்லை, அவர் வீட்டுக்கு முன்னால் இருளாக இருப்பது பற்றியும் அவருக்கு கவலை இல்லை போலும், மிசார சபையில் உயர்பதவியில் இருந்து ஓய்வுபெற்றிருக்கும் அவரால் மின்சார சபைக்கு சின்னதாக ஒரு வேண்டுகோள் விடுத்தாலே போதும் அடுத்தவினாடி மின்சாரசபையே அவரது காலடியில் நிற்கும்,

சபா நாநா வின் வீட்டுக்கு முன்னால் கும்மிருட்டு என்று சொல்வார்களே அப்படி ஒரு இருள் என்றாலும் கேற்றடியில் ஒளிரும் மங்கலான அவர் வீட்டு வெளிச்சத்தில் “கடிநாய் கவனம்” என்று எழுதப்பட்ட வசனம் மட்டும்

தெளிவாக தெரிகின்றது,அதனால் எனக்கு அச்சம் ஏற்படப்போவதில்லை காரணம் அங்கு கடி நாய் இருந்தால்தானே, அப்படி என்றால் ஏன் அவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கேட்கக் கூடும் , அதைத்தான் நானும் ஒருநாள் அவரிடமே கேட்டுமாட்டிக்கொண்டேன் “நாய் இருக்கும் இல்லாமல் இருக்கும் நீ உமது வேலையப்பாரு” அவர் என்மீது கடிந்து கொண்டதை அவர் வீட்டில் நாயாவது இருந்தால் எனக்காக வாலை ஆட்டி கவலைப்பட்டிருக்கும்.

“கடிநாய் கவனம்” என்பது எனக்குத்தான் விழங்கவில்லை என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அன்றிலிருந்து சபா நாநா வின் முகத்தையே நான் பார்ப்பதில்லை, நாற்பது வயதில்தான் நாய்க்குணம் என்பார்கள் எழுபதே கடந்த நாநாவுக்குஇப்படியா…, பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் அவரும் மனைவியும் தனியாக இருப்பதால் கடைசிகாலத்தில் பக்கத்தில் மக்கள் இல்லை என்ற கவலையோ என்னவோ?

இருளை கடக்கும்போது நண்பனின் வீட்டில் பார்த்த பேய் படக்காட்சிகள் முன்னால் வந்து போவதுபோல் ஒரு பிரமை, சீ.. அதெல்லாம் நிஜம் இல்லையே எல்லாம் வெறும் நடிப்பு என்று மனம் சொன்னாலும் இருள், நள்ளிரவு எல்லாம் எனது மயிர்கால்களை உசுப்பிவிடுகிறது அந்த பயத்தை விட வாப்பாவின் ஞாபகம் வேறு.

வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் வெளிக்கேற்றில்போடப்பட்டிருக்கும் பூட்டு ”சுவரால் குதித்து உள்ளே வா” என்று சொல்லிக்கொண்டிருக்கிறது சத்தம் இல்லாமல் குதிக்கவேண்டும் முடியவில்லை இருந்தும் முயற்சிக்கிறேன் ..முன்விறாந்தையில் வாப்பா சாய்வு நாற்காலியில் குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறார், உம்மா பக்கத்தில்.. எனது நடமாட்டத்தில் விழித்துக்கொண்டு பார்த்த பார்வை இருக்கிறதே சிலநேரம் வாப்பாவின் குறட்டையை கூட கலைத்துவிடலாம் “சொறி உம்மா” உம்மாவிற்கு கேட்டதோ என்னவோ அடுத்த நொடி எனது அறைக்குள் சென்று மெதுவாக கதவை சாய்த்துக்கொள்கிறேன்.

“எங்கடி அவன் இன்னும் வரல்லியா”

“அவன் அப்பவே வந்திட்டான் “

“என்னை எழுப்பிருக்கலாமே”

“உங்கட தூக்கத்தையும் குறட்டையையும் கலைத்தா என்னிலதான் எரிஞ்சிவிழுவின்க..அதுதான்…”

“இப்ப எங்க அவன்”

“அந்தா…றூமுக்க கொறட்ட விட்டுக்கொண்டிருக்கிறான்”

நான் அவர்களின் சம்பாசனைகளை கேட்டவனாக கண்களைமூடாமல் மூடிக்கொண்டு போர்வையை இழுத்துக்கொள்கிறேன், எப்படி சரி எனது தூக்கத்தை பார்க்க வாப்பா வருக்கூடும் “டேய் இவ்வளவு நேரமா எங்கடா போன” என்று அதட்டுவார் நான் ஒன்றுமே தெரியாதவன்போல் கண்களை இறுக மூடிக்கொள்வேன்.

“தூங்குபவனை எழுப்பி விடலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்ப முடியாது” என்று அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகளை வாப்பா நினைக்கக்கூடும்.

(கற்பனை)

நன்றி: “தமிழன்” வாரஇதழ் 01/01/23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *