கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 3,445 
 
 

இரவு மணி 10.10.

“என்னங்க..! நம்ப பொண்ணு இப்படி இருக்காளே….! அவளுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா…?”கேட்டு கட்டிலில் தன் அருகில் படுத்திருக்கும் கணவன் பக்கம் ஒருக்களித்துப் படுத்தாள் அம்புஜவள்ளி.

“என்ன செய்யிறது அம்புஜம்..? அது அவளோட விதின்னு விட்டுட வேண்டியதுதான். !”சாம்பசிவத்திற்குச் சொல்லும்போதே துக்கம் தொண்டையடைத்தது.

“அப்படி விட்டுட முடியுமா..? !. அவளை பார்க்கப் பார்க்க என் பெத்த வயிறு பத்தி எரியுதுங்க…”விசும்பினாள்.

“எனக்கும் தெரியுதுதான். சொன்னா கேட்கமாட்டேன்கிறாளே…?!”இவரும் கமறினார்.

“அவள் தான் குழந்தை. பிடிவாதம் பிடிக்கிறாள்ன்னா நாமும் அவளை அப்படித் தனி மரமா விட்டுட முடியுமா..? அப்படி விட்டுட்டா…. அவளுக்கும் கீழ் உள்ள அவ தங்கச்சிங்க எப்படி எடுபடுவாங்க..?….. நம்ம தலையெழுத்து நமக்கு வாய்த்த நாலும் பொண்ணாய்ப் பிறந்திருக்கு..”

“கஷ்டமாத்தான். !” என்று பெருமூச்சு விட்ட சாம்பசிவம்….

“என்னமோ… மாமா பை யனும், நீயும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்குயிராய்க் காதலிச்சீங்க. முன் பகை காரணம் ரெண்டு வீட்டிலேயும் சம்மதிக்க வைக்கிறதுக்காக ஒன்னா விசம் குடிச்சீங்க. அல்ப ஆயுசு அவன் போய்ட்டான். உன் உயிர் கெட்டி நீ தப்பிச்சுட்டே. போனவன் போனவன்தான். அவனையே நினைச்சி வாழ் நாள் முழுக்க உருகிக்கிட்டிருந்தா வந்துடவாப் போறான்..? நீ மனசை மாத்திக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கோம்மான்னு…… நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் அம்புஜம். கடைசி வரை பிடி கொடுக்க மாட்டேன்கிறாள். அது செத்துப்போன மாமன் பையனுக்கு செய்யும் துரோகம். அதை செய்யமாட்டேன்னு சொல்லி பிடிவாதம் பிடிக்கிறாள். இப்படி பிடிவாதம் பிடிக்கிறவளை வலுக்கட்டாயமாக எப்படி திருமணம் முடிக்க முடியும்..? அதட்டி உருட்டி அப்படியே கட்டி வைச்சாலும் வாழ்வாள்ன்னு என்ன நிச்சயம். ? தற்கொலை செய்து நம்ம தலையிலும் கட்டியவன் தலையிலும் கல்லைத்தூக்கிப் போட்டுவிட்டுப் போனால் என்ன செய்ய முடியும்..? நம்ம தலையெழுத்து அவளைக் கடைசி வரைக்கும் தனிமரமாய்த் தாங்க வேண்டியதுதான்.” கமறினார்.

“இவளால என் மத்த பொண்ணுங்க வாழ்க்கை, எதிர்காலம் வீணாகிடும்ங்க….”அம்புஜவள்ளியால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் விம்மினாள்.

“அழாதே அம்புஜம். காதலிக்கிறவங்கள்ல ரொம்பப்பேரு…. தன் குடும்பத்தை நினைச்சி, அண்ணன், தங்கச்சிங்களுக்காக தங்கள் காதலித்த தியாகம் செய்றாங்க. பெத்தவங்க சொல்படி கேட்குறாங்க. நம்ம பொண்ணு செத்தவனுக்குக்காக உருகுறாள். குடும்பம், தங்கைகளுக்காக காதலை தியாகம் பண்ண மாட்டேன்னு சொல்றா. எல்லாம் நாம வாங்கி வந்த வரம் ! ”

”…………………………….”

“இதுல பாரு அம்புஜம். இவள் வாழனும் என்கிறதுக்காகத்தான் பிழைச்சிருக்கிறாள்ன்னு இவளுக்குத் தெரியல. நெனைச்சா செத்துப்போகலாம். ஆனால் நினைக்கிறபடி வாழ முடியாது. ஆச்சாரியா இருக்கா..? நெனைச்சா செத்துப் போறதுக்கு ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், பத்துப் பதினைந்து தூக்க மாத்திரைகள் போதும். ஆனா… நாம நினைக்கிறபடி வாழ முடியுமா பாரு..? வாழ்க்கையில காதல்தான் பெரிசு, உசத்தின்னு நினைச்சி நான் இப்படியே வாழ்ந்துடுறேன்னு சொல்றாள். அவள் நினைப்புதான் பெரிசா இருக்கு. அவளை நினைச்சி கண்ணீர் வடிக்கிற நம்பளையோ, அவளால பாதிக்கப்படுற அவள் சகோதரிகளையோ அவ நெனைச்சிப் பார்க்கலைப் பார்த்தியா…? ”

“ஆமாங்க…”

“ஒரு நாள் அவகிட்ட…. நீ கல்யாணம் பண்ணிக்கம்மா, காலப்போக்குல காதல், கவலை எல்லாம் சரியாய்ப் போயிடும் ! – சொன்னேன். அதுக்கு அவ… மனசால ஒருத்தனோடு வாழ்ந்துகிட்டு இன்னொருத்தனோட எப்படி வாழ முடியும்…? ன்னு கேட்கிறாள். நான் என்ன சொல்ல முடியும்..? அவள் சொல்றதும் நியாயம்தானே..! உடனே அப்படி வாழ முடியாதுதான். ஆனால் வாழ நினைத்தால் வாழலாம். ஒருத்தன், மனைவி செத்துப் போனதும் மறுவருசம் திரும்பறதுக்குள்ள மறுமணம் முடிச்சி வாழறான். காலம்தான் பெரிய கரைப்பான்னு அவளுக்குப் புரியல. வாழ்க்கையின் இன்ப துன்பத்தில் இதெல்லாம் சொல்லாம கொள்ளாம மறைஞ்சி ஒழிஞ்சி போய்டும்ன்னு அவளுக்குத் தெரியல. சொன்னாலும் புரியல. உதாரணத்துக்கு நீயும் நானுமே சாட்சி. என் முதல் மனைவி இறந்ததும் உன்னைத் திருமணம் முடிச்சிப் புள்ளைக்குட்டிப் பெத்து மகிழ்ச்சியாய் இல்லே. அனுபவப்பட்ட உனக்கும் எனக்கும் புரியுது. அனுபவப்படாத அவளுக்குப் புரியல.”

“……………………..”

நீ கூட நினைக்கலாம். ஆம்பளைக்கு அப்படி முடியும். பொம்பளைக்கு அப்படி முடியாது. ஆம்பளை மனசு வேற. பொம்பள மனசு வேறன்னு நினைக்கலாம். மனம் என்கிறது எல்லாருக்கும் பொது . ஒன்னுதான். மாற்றத்துலத்தான் வித்தியாசமிருக்கு. ஆம்பளை மனசு சட்டுன்னு மாறும். பொம்பளை மனசு மெதுவா மாறும். மாற முடியாதுன்னு இல்லே. ”

“இப்போ விதவைங்க, விவாகரத்து ஆன பெண்களெல்லாம் மறுமணத்துக்கு முன் வர்றாங்க. ஆண்களும் அவர்களைத் தயக்கமில்லாமல் ஏத்துக்கிறாங்க. காலம் மாறிப் போச்சு. நம்ம பொண்ணு இன்னும் அனார்கலி காலத்திலேயே இருக்காள். அதுக்காகக் காதலைக் குறை சொல்லலை. நம்ம பொண்ணு மனசுல காலத்துக்குத் தகுந்த மாற்றமில்லையேன்னு வருத்தப் படுறேன். தன் முடிவுதான் சரின்னு நினைச்சி நம்ம நிம்மதியெல்லாம் கெடுத்து விட்டு அவள் நிம்மதியாய் இருக்காள் !” சாம்பசிவம் அதற்கு மேல் பேச முடியாமல் வாயை மூடி கட்டிலில் மல்லாந்து படுத்தார்.

தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த ஜனனி பெற்றோர்கள் பேச்சுகளை ஒன்று விடாமல் கேட்டாள்.

ஒரு முடிவிற்கு வந்தாள்.

காலையில் எழுந்ததும் முதல் வேளையாக… தன் தாய் தந்தையரைச் சந்த்தித்து ….

“ராத்திரி நீங்க பேசினதெல்லாம் கேட்டேன். என் தவறு புரிஞ்சுது. மனசு மாறிட்டேன். உங்க விருப்பப்படி எனக்கு வரன் பாருங்க.”சொன்னாள்.

“நீ தூங்காம இருக்கே என்கிறது தெரிஞ்சுதான்ம்மா… நாங்க அப்படி பேசி, நடப்பைப் புரிய வைச்சு உன்னைத் தெளிய வச்சோம் ! ‘ – அம்புஜம், சாம்பசிவம் தங்கள் மனங்களில் சொல்லாமல் சொல்லிக் கொண்டார்கள். !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *