“பேசாம தற்கொல பண்ணிக்லாம்னு தோணுது, மிஸிஸ் வாங்”, என்று முனகினார். சட்டென்று என் மூளை ஸ்தம்பித்தே விட்டது. உடம்பு சரியில்லையோ. எழுபதைக் கடந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து இப்படியான சொல் வருவதென்றால்? என்ன சொன்னார் என்றே புரியாதபடி முதலில் மிகுந்த மென்குரலில் முனகினார். இரண்டாவது தடவை சற்றே குரலை உயர்த்திச் சொன்ன போது தான் எனக்கு சொற்களே புரிந்தன. கைபேசியில் மின்னிய இலக்கத்திலிருந்து தான் கூப்பிட்டது ஃபாதிமா என்றே தெரிந்தது. நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்த போதிலும் பல்லாண்டுகளாகத் தனியே இருந்தார்கள் அவரும் அலியும். அதை நினைத்து மறுகுவதே அவர்கள் அனுபவிக்கும் ஆகக் கொடிய துயரம். இரண்டு மணிநேரமாகச் சூழலை மறந்து மூழ்கியிருந்த முக்கியக் கோப்பிலிருந்து என் கவனம் முற்றிலும் விலகியிருந்தது.
“ஃபாதிமா, அலிக்கு ஒண்ணுமில்லையே?”, என்றதற்கு “தூங்கறாரு”, என்றார். “ஆர் யூ ஓகே? அடுப்பெல்லாம் அணைச்சிட்டீங்களான்னு செக் பண்ணிட்டு நா வரவரைக்கும் அமைதியா படுத்திருங்க, அஞ்சே நிமிஷத்துல வந்தர்றேன்”, என்றேன். “ம்”, என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். நிமிர்ந்து வெளியே பார்த்தேன். வெளிர்நீலச் சீருடையில் முதியோர் காலையுணவு சாப்பிட்ட பிறகான வேளையில் சக்கர நாற்காலிகளிலும் ஊன்றுகோலுடனும் தாழ்வாரத்தில் மெல்லத் திரிவது அறை வாசல் வழியே தெரிந்தது. உணவுக்கூடத்தில் தட்டுகள், கரண்டிகள் அகற்றப்படும் ஓசைகளுடன் பேச்சுச் சலசலப்புகளும் கலந்து கேட்டன. சாமி, “ஐ டோண்ட் வ்வாண்ட் திஸ் லௌஸி பிரேக்ஃபாஸ்ட். சாப்ட மாட்டேன். இத நாய் கூட தின்னாது”, என்று இரைவது தெளிவாகக் கேட்டது. அடிக்கடி அவர் செய்த ஆர்பாட்டங்கள் பழகிய ஊழியர்கள் தம் போக்கில் வேலையைத் தொடரக் கற்றிருந்தனர்.
முடிக்க வேண்டிய வேலைகள் எக்கச்சக்கமிருந்தன. ஆனால், வேறு வழியில்லை. இனி வேலையில் மனம் ஒன்றுவதும் மிகக் கடினம். தாமதிக்காமல் ஒரு நடை நேரில் சென்று என்னவென்று பார்க்கலாமென்று கோப்புகளை மூடிவிட்டுக் கிளம்பினேன். மழை பெய்து ஓய்ந்திருந்ததில், கார் மீது நீர்க்கோலங்கள் கருப்புப் பின்னணியில் சூரிய ஒளியின் வண்ணச் சிதறல்களை இரைத்தன. வேலியோரம் ஓடிய ஓணான், வண்டியோசை கேட்டு ஒரேயொரு கணம் நின்று நிமிர்ந்து உற்றுநோக்கி விட்டு பட்டென்று பாய்ந்தோடி மறைந்தது.
ஓய்வு பெற்ற பிறகும் அலி வங்கி ஒன்றில் ‘செக்யூரிடி கார்ட்’ வேலைக்கும் மூன்றறை வீட்டுக்கும் சொந்தக்காரராகத் தான் இருந்தார். சில ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் பக்கவாதம் அலியைப் படுக்கையில் தள்ளியிருந்தது. சக்கரநாற்காலியில் தான் வாசம். இல்லையானால், படுக்கை.
அடுத்தாண்டில் அவர்களுடைய ஒரே மகனுக்கு திருமணமானது. மகனுக்கு தனியார் வீடு வாங்க கூடுதல் பணம் வேண்டியிருந்தது. மகன் வந்து அலியிடம் பணம் கேட்டான். கோணல் சிரிப்புடன், “என்கிட்ட ஏது பணம்?”, என்றார். தரையைப் பார்த்துக் கொண்டே,“இப்டி சொன்னா என்ன அர்த்தம்?”, என்று பதில் கேள்வி கேட்டான். அப்பா நிமிர்ந்து பார்த்த ஒரு வினாடிப் பார்வையில் அவனுடைய கேள்விக்கு விடை கிடைத்ததா என்று தெரியவில்லை. அலியோ தன் போக்கில் நாளிதழை மேலும் அகலமாக விரித்துப் பிரித்துக் கொண்டு தன் தலையை உள்ளுக்குள் கவிழ்த்துக் கொண்டதும், “இந்த வயசுல இங்க ஏன் தனியா இருக்கணும்? பேசாம என்னோட வந்திருக்கலாமே? அம்மாவுக்கும் அறுபது வயசாகுது”, என்ற மகனுடைய எண்ணம் புரியாதவறாக, “இல்ல, வேணாம். நாங்க தனியாவே இருந்துக்கறோம்”, என்றதிலேயே நின்றார்.
“இந்த வீட்ட வித்தா பணம் கெடைக்கும்ல, அத எனக்குக் கொடுத்தா ‘கொண்டோமினியம்’ வாங்க எனக்கு எவ்ளோ சின்னாங்கா இருக்கும்”, என்ற மகனைப் பார்த்து, “க்கும், அதானே பார்த்தேன். ஏதோ மாயம் நடந்து பெத்தவங்க மேல கரிசம் தான் வந்துருச்சோன்னு ஒரேயொரு கணம் நெனச்சிட்டேன்”, என்றார் குத்தலாக. அதற்குப் பிறகு, அப்பாவிடம் பேசுவதை விட்டு விட்டு அம்மா மனதைக் கரைக்க ஆரம்பித்தான்.
“இருக்கறது ஒரே பையன், வேற யாரக் கேப்பான்னு சொல்லுங்க”, என்று ஃபாதிமா மகனுக்காக அலியிடம் நாள்கணக்கில் வாதாடினார். அவரது வற்புறுத்துதலுக்கு இணங்கிய அலி வீட்டை விற்று, பணத்தையும் மகனுக்குக் கொடுத்து புதுவீட்டுக்கும் அவர்களுடன் போனார்கள். புதுமனை புகுவிழா முடிந்து ஒரே மாதத்தில் உப்புப் பெறாத விஷயத்திற்கு தந்தைக்கும் மகனுக்கும் சண்டை மூண்டு, அடங்காமல் வலுத்ததில் இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போது, “இத நா ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனா, இவ்ளோ சீக்கிரமே நடக்கும்னு எதிர்பார்க்கல்ல”, என்று ஃபாதிமாவைக் கடிந்து கொண்டார். ஒன்றுமே பேசாதிருந்த அவர், “அவன் என்ன செய்வான் பாவம். இதெல்லாம் அவனக் கட்டிகிட்டவ செய்ற வேலை”, என்று மகனுக்குப் பரிந்து பேசி அவனை நினைத்து எப்போதும் உருகினார். “நல்ல வேள, முழுப்பணத்தையும் கொடுத்தர்ல. பாதிய வச்சிருந்தேன் பேங்க்ல”, என்று சொன்ன அலி உடனேயே ஓரறை வீட்டை வாங்கினார். அலியின் முன்பு மகனைக் குறிப்பிட்டுப் பேசுவதை ஃபாதிமா விட்டுவிட்டார். அவ்வப்போது அவர் இல்லாத நேரங்களில் அவன் எண்ணை அழுத்தி அவன் குரலைக் கேட்க முயல்வார். அதைக் கூடப் பொறுக்காத மகன் தன் கைபேசி இலக்கத்தை மாற்றி விட்டான்.
மகள்களுக்கோ கடுங்கோபம். எப்போதாவது பிள்ளைகளுடன் வருவார்கள். கொஞ்ச நேரம் இருந்து பேசுவார்கள். ஆனால், பெற்றோருக்காக சல்லிக் காசு செலவிடுவதில்லை. “அவன் ஒருத்தன் தான் உங்களுக்கு பிறந்தவன்ற மாதிரி அவனுக்கே முழுசாக் கொடுத்தீங்கள்ல? அப்புறம்?” சொல்லி வைத்துக் கொண்டாற் போல நால்வரும் கேட்டார்கள். ஏற்கனவே இருந்த கொஞ்சநஞ்ச ஒட்டுதல்களையெல்லாம் கூட வேண்டுமென்றே விலக்கிக் கொண்டார்கள். ஏதும் பிரச்சனையென்றால், செலவு வந்து விடுமோ என்று பயந்து தவிர்த்து ஓடி விடுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒருகட்டத்தில், மகனிடம் பேசிப் பார்ப்பதென்று முடிவானது. பெற்றோரையும் பிள்ளையையும் அலுவலகத்திற்கே அழைத்திருந்தேன். தந்தையோ எப்போதும் போல, “மகனா? அப்டி யாரும் எனக்கில்லையே,.”, என்று சொல்லி விட்டார். விடாமல் விளக்கிச் சொன்ன பிறகு, “நா வரல்ல, வேணும்னா ஃபாதிமாவ அனுப்பி வைக்கிறேன்”, என்று வர மாட்டேனென்று கூறி விட்டார். “அவன் பேச்சைக் கேட்ட எனக்குக் கோபம் வரும். உங்களுக்கும் பிரச்சனை தான். எதுக்கு வீணா,..” அதே கோபத்துக்கு பயந்து தான் அவர் முன்னால் அவரது மகன் நிற்பதில்லை.
மகன் வரும் தருணத்தையே எதிர்பார்த்தவர் போல வாயிலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ஃபாதிமா. அன்றைக்கு அவர் மடியில் ஏதோ பொட்டலம் இருந்தது. பரபரவென்று நுழைந்த மகனைப் பூரிப்புடன் பார்த்துக் கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தார். அம்மாவின் மீது ஒரு நொடிக்குமேல் பார்வையை வைக்க விரும்பாதவனைப் போல என்னைப் பார்த்து, “ரொம்ப நேரம் இருக்க முடியாது. சீக்கிரம் போகணும்”, என்றான்.
“இல்ல, நேரமாகாது. நீங்க உக்காருங்க. ஏதும் குடிக்கறீங்களா?”, என்றதும் அடுத்த இருக்கையிலிருந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டே என்னிடம், “என்ன பேசணும்?”, என்றான். ஃபாதிமா பொட்டலத்தை நீட்டிக் கொண்டே, “நெய் பிஸ்கட், உனக்குப் பிடிக்கும்னு நானே செஞ்சேன்”, என்றார். “இப்பல்லாம் எனக்குப் பிடிக்கறதில்ல. அதத் தின்னா எனக்கு வெயிட் போட்ருது”, என்றான் கவனமாகக் கையை நீட்டிவிடாமல். ஃபாதிமா ஒன்றும் சொல்லாமல், மெதுவான பொட்டலத்தை அவன் கையருகில் நகர்த்தினார்.
பெற்றோர் இருவருடைய நிலை பற்றி விளக்கிய போது ஈடுபாடில்லாமல், அதே நேரம் ஒரேயொரு முறை கைபேசியில் வந்த குறுஞ்செய்தி யாரிடமிருந்து என்று பார்த்ததைத் தவிர அலட்சியப்படுத்தாமல் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். ஏற்கனவே என்ன பேசலாம் என்று தயாரித்துக் கொண்டு வந்திருந்தவற்றை உள்ளுக்குள் மறுபரிசீலனை செய்வது போல அமைதியாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, இதமாக, “பெத்தவங்க இல்லையா? இப்டியா கைவிட்ருவீங்க?”, என்று கேட்டேன்.
“அதக் கேக்க நீ யாரு?”, என்று உறுமினான். “வெறும் சோஷியல் வொர்க்கர் தானே? இல்ல கெழவனுக்கு ஏதாச்சும்,…”, என்று கொச்சையாகச் சொல்லி என் வாயை அடைத்தான். “நாகரிகமாப் பேசத் தெர்லன்னா மொதல்ல கத்துட்டு வாங்க, நாம அப்புறம் பேசலாம்”, என்று நுனிநாக்கு வரை வந்த சொற்களை விழுங்கினேன். அதுவரை அவனில் இருந்த மௌனம் குறுக்கிடாமல் கேட்கும் பண்பு என்று நினைத்தது பெரிய தவறென்று முடிவெடுத்த வாறே பொறுமையாக ஃபாதிமாவின் கண்கள் பெருகுவதைப் பார்த்தேன். அரை நொடி பார்வையால் மன்னிப்புக் கோரியவர் சட்டென்று குனிந்து கொண்டார். உள்ளுக்குள் வெறுப்பை மட்டுமே கவனமாகச் சுமந்து கொண்டு வந்தவனிடம் பேசுவதில் என்ன தான் பயன்? மகன் எழுந்த போது சட்டென்று கலவரம் கொண்டவர் போலானார். மேசையிலிருந்து பொட்டலத்தை எடுத்து நீட்ட நிமிர்ந்தவர் முகத்தில் ஏமாற்றம். கிடுகிடுவென்று வெளியேறியிருந்தான்.
ஃபாதிமா வந்து கதவைத் திறக்கத் தாமதமான போது என் உடல் பதறுவது எனக்கே தெரிந்தது. என்னைக் கண்ட நொடியில் அவர் கண்கள் நிறைந்தன. தோளில் கைவைத்து மறுகையால் லேசாக முதுகில் தடவிக் கொடுத்தேன். வீட்டுக்கு கூடத்தில் நாங்களிருவர் மட்டுமே இருந்தோம். பேச ஆரம்பிக்கவே பல நிமிடங்கள் எடுத்தார். அவர் முகத்தையே கூர்ந்து பார்த்தவாறு காத்திருந்தேன்.
அலி அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். உறங்கும் முன்னர் சாப்பிட்டிருப்பார் போலும். படுக்கைக்கு அருகில் அகற்றப்படாமல் சிறுமேசை மீது தட்டும் கிண்ணமும் காய்ந்து கிடந்தன. நான் கவனிப்பதைக் கண்ட ஃபாதிமா மெதுவாக அறைக் கதவைச் சாத்திவிட்டு வந்தார். “முன்ன மாதிரி என்னால உடனுக்குடன் செய்ய முடியறதில்ல. இன்னைக்கும் கஞ்சியான்னு ஒரே ஆர்பாட்டம். மறுபடியும் ‘மீ’ செஞ்சி குடுத்தப்ப தான் சாப்டாரு. ராத்திரி சரியா தூங்காததாலயோ என்னவோ இன்னைக்கி எனக்கு முடியில. ஆனாலும் பட்னியா கெடப்பாரேன்னு செஞ்சேன். மிச்சக் கஞ்சிய ராத்திரி நாந்தான் குடிக்கணும்”, என்றார் தீனக்குரலில்.
அரை மணிநேரம் உட்கார்ந்து பேசிய பிறகு அவருக்கு அலி சுமையாகியிருந்தது வெட்டவெளிச்சமானது. அதிகநேரம் படுத்தே கிடந்ததால் நாளடைவில் அலியின் உடலெடை மிகவும் கூடிவந்ததில், அவரைத் தூக்கி உட்கார வைத்துத் துடைத்து விடக் கூட ஃபாதிமாவால் முடியவில்லை. அவர் உடல் முன்பைவிட ஒடுங்கி முற்றிலும் பலமிழந்து போனது. எழுந்து நடமாட முடியவில்லையென்றாலும் மனைவியை விட அவர் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தார்.
அலி உறக்கம் கலைந்து, “ஃபாதிமா யாரு வந்திருக்காங்க?”, என்று கேட்டதுமே, சட்டென்று எழுந்து அறைக்குள் சென்று, “மிஸிஸ் வாங்”, என்றார். நானும் எழுந்து போனேன். “எப்டியிருக்கீங்க அலி?”, என்று கேட்டதும், “ம், ரொம்ப நலம். நீங்க?”, என்று பதிலுக்குக் கேட்டார். சக்கரநாற்காலியில் அவரை உட்கார வைக்க உதவினேன். ஒற்றை ஆளாக எப்படி இவரைத் தூக்கி உதவுகிறார் ஃபாதிமா என்று சற்றே அதிசயமாக இருந்தது. “ஃபாதிமா, நீ எங்க ரெண்டு பேருக்கும் டீ போடு”, என்றதும், “வேணாம். இன்னைக்கி நாம கீழ காஃபி ஷாப்ல போய் குடிப்போமே”, என்று ஃபாதிமாவை இருத்தினேன். அலி என் முகத்தை ஆராய்ந்தார்.
“குடும்ப நீதிமன்றத்துக்குப் போய் உங்க மகன் மேல வழக்குப் போட உங்களுக்கு விருப்பமா?”, என்று கேட்டேன். “முன்ன நீங்க கேட்டப்பயே நா ரெடியாத் தானே இருந்தேன். இவதான்,..”, என்றார் அலி. அதைச் சொல்லும் போது எப்போதும் ஏற்படும் கடுமை, முகத்தில் தெரிந்தது. அடிக்கடி நீயும் கையெழுத்துப் போடு என்று மனைவியை வற்புறுத்திப் பார்த்தார். ஆனால், ஃபாதிமாவுக்கு அதில் துளியும் இஷ்டமில்லை.
“நா ஃபாதிமாவைத் தான் மீண்டும் ஒருமுறை கேட்டேன்.” இந்தப் பேச்சு வரும் போதெல்லாம் மௌனத்தின் மூலமே கணவனை எதிர்த்து வந்தார். அலி அருகில் இல்லாததை உறுதி செய்து கொண்டு “என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை”, என்பார் தணிந்த குரலில். இருவரும் கையொப்பமிடாவிட்டால் வழக்கு நிற்காதென்று அவருக்குத் தெரிந்திருந்தது. அவர்களுடைய மகனுக்கும் அது நன்கு தெரியும். அதை விட அம்மா என்றைக்கும் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவனுக்கு இன்னும் நன்றாகவே தெரிந்திருந்தது. அம்மா எப்போதும் மகனைப் பற்றி வாஞ்சையுடன் நினைப்பவர், பேசுபவர். அவனைப் பிறர் ஏசக் கேட்க அவரால் முடிவதில்லை. அலி திட்டும் போதும் வேறு பேச்சை எடுப்பார். அல்லது, மெதுவாக அவ்விடம்விட்டு நகர்ந்துவிட முயல்வார்.
“இவ ஒத்துக்க மாட்டா.”, என்றார். மருத்துவமனைக்குப் போக துணை, அலியைக் குளிப்பாட்ட மற்றும் வீட்டுச் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் தகுந்த ஆள் ஏற்பாடு செய்தோம். இருந்தாலும், அலி இல்லாத தருணங்கள் ஃபாதிமாவுக்கு வேண்டும் என்று அனுமானிக்கப் பட்டது. “நாம இப்ப மாற்று ஏற்பாடு செய்யணும். நீங்க டே கேர்ல,..”, என்று ஆரம்பித்ததுமே, “அது மட்டும் வேண்டாம் மிஸிஸ் வாங்”, என்று ஆரம்பித்தார் கையை ஆட்டியவாறே. சில நொடிகளில் வேகம் அடங்கியவராக, “ஃபாதிமாவ தனியா வீட்ல விட்டுட்டு,.. எப்டி? சொல்லுங்க, ம்?”, என்று இழுத்தார்.
“தனியா அவங்க இருக்கணும்ன்றேன்”, என்றேன் பொறுமையைச் சற்றே இழந்து.
“ஹோமுக்குப் போகறதுன்னாவே,..”
“டே கேர் தானே?”
“…”
“இது நாம ஏற்கனவே முன்னயே விரிவா டிஸ்கஸ் பண்ணது தான். டேகேர்னா உங்களுக்கு ஏன் பிடிக்கறதில்ல? அதான் எனக்குப் புரியல்ல. ட்ரை பண்ணா தானே தெரியும். குழந்தையப் போல அடம்பிடிக்காதீங்க அலி, ப்ளீஸ்.”
ஒருவரும் ஒன்றும் பேசாமல் இருந்ததில், கூடத்து சுவர் கடிகாரத்தில் நொடிமுள் ஏற்படுத்திய ஓசை கேட்கக் கூடியதாக இருந்தது. “அலி, இப்ப அவங்க பிரச்சனையே நீங்க தான். வீக்கா இருக்கறதால அவங்களால் செய்ய முடியல்லன்ற புரிஞ்சிக்கங்க. நீங்க அவங்க கூட இருக்கற நேரம் குறையறது தான் அவங்களுக்கு நல்லது”, என்று புரிய வைத்து போது கேட்டுக் கொண்டார். “இன்னும் சில வருஷங்கள் அவங்க நல்லா இருக்கணும்னு நெனச்சா அப்பப்ப அவங்களத் தனியா விட்டுட்டு இருக்கணும் நீங்க,..”
நிமிர்ந்து என்னைப் பார்த்த அலியின் கண்கள் பளபளத்தன. ஃபாதிமாவைப் பார்த்த போது அவர் தூரத்தே பார்வையை இருத்தி அமர்ந்திருந்தார்.
“வாரத்ல மூன்று அல்லது நாலு நாளைக்கு பகல் முழுக்க நீங்க ஹோம்ல இருக்கற பகல் நேரப் பராமரிப்பு நிலையத்துக்கு வந்து இருக்கணும். நாலு பேரப் பாப்பீங்க,.. அங்க நீங்க உடற்பயிற்சி செய்லாம். உங்க உடல் எடை குறையும். ஃபிஸியோ தெரபி செஞ்சிட்டே வந்தா சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி நிக்க முடியும். அதுக்கப்புறம் மெதுவாக அடியெடுத்து வைக்க, பிடிச்சுகிட்டு நடக்கவும் முடியும். நடக்கக் கூட முடியலாம். முக்கியமா, ஃபாதிமாவுக்கு ஓய்வு கிடைக்கும். அவங்களும் வேற எங்காச்சும் போகலாம். வேற ஆட்களப் பார்க்கலாம். வீட்லயே ஒய்வாச்சும் எடுக்கலாம்”, என்ற போது தலையாட்டியும் கண்ணசைத்தும் ஒத்துக் கொண்டார்.
– கணையாழி-மார்ச்- 2012