நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 10,430 
 
 

மஞ்சளையும் சந்தனத்தையும் அரச்சி ஒரே சீரா பூசுன, புதுசா சமஞ்ச பொண்ணு கணக்கா ஊற சுத்தி செவ்வந்தி பூக்க பூத்து கெடக்கு.செவந்து கெடக்கு ஊரு. இந்த ஊருக்கு கொளத்தூர் ங்கற பேர்க்கு பதிலா செவ்வந்திபுரம்னு பேர மாத்தி வைக்கக்கூட பரிசீலன பண்லாம் னா பாத்துக்கோங்க. மானம் பாத்த பூமி, தப்பாம பேயர மழையினால வெள்ளாமா சுகபோகமா நடக்குது அந்த கிராமத்துல.

மேடதெரு மூணாம் வீடுதான் கனகாம்பரத்தோட வீடு, பேருதான் கனகம் ஆனா அழகுல குறிஞ்சிப்பூ. அம்புட்டு அழகு. இளங்கருப்பு நெறம். தாவணி போட்ட தண்ணி கொடம். மஞ்ச பூசுன முகமும் எடுத்து வச்ச சாந்தும் லச்சணம் அவ மொகதக்கா, இல்ல அவளால அதுகளுக்கு அழகானு கண்டு புடிக்க முடியாத வனப்பு. தலைமுடியில ஒரு தனி முடி, கூட கொறச்சலா ஆயிட கூடாதுன்னு ஒத்தையடி பாத கணக்கா அளவா வகிடெடுத்து எண்ணவச்சி இறுக்க பின்னிவிட்டா அவ ஆத்தா முத்தம்மா, பின்னி விட்ட ஜடை பொரளுது பளபளங்கற சாரபாம்பா. கிட்டத்தட்ட அவ பின்னல் அகலத்துக்கே அளவா இருக்கு அவ இட. மாரிமுத்து செட்டியோட ரெண்டவதா பொறந்த ஒத்த மக தான் கனகா. அதிகம் படிச்சபுள்ள தான் மூணாப்பு வரைக்குமில்ல படிச்சிருக்கா. அளவான கண்டிப்போடையும் அறிவோடயும் வளந்து நிக்கிற பதினெட்டு வயசு பதும.

மண்ண விட்டு நிழல் பிரிஞ்சாளும் உன்ன விட்டு நான் பிரிய மாட்டேனடி யாத்தானு ரெட்ட வாழையா ஓட்டுனவ கனகத்தோட கூட்டாளி எதித்த வீட்டு கருப்பஞ்செட்டி மக மோகனம். கள புடுங்க போனாலும், மாடு மேய்க்க போனாலும் புளியங்க அடிக்க போனாலும் தண்ணி எடுக்க போனாலும் சோளதட்ட சுட போனாலும் ஒன்னா சுத்துற கழுதைங்க ரெண்டும். பாவாட கட்டறதுக்கு முன்ன இருந்தே பாண்டி ஆட்ட தோழிக . அவுக வீட்ல கவுளி கத்துனாலும் இவுக வீட்ல கோழி முட்ட போட்டாலும் சேதி பகிந்துக்குவாக. மோகனதொட ஆத்தா அப்பன் இவளுக்கு ஆத்தா அப்பன் மாதிரி தான். ஆனா மோகனத்தோட ரெண்டாவது அண்ணன் காமராசு மட்டும் இவளுக்கு அண்ணன் மாதிரி இல்லன்னு அர பாவாட கட்டுன வயசுலேந்து நெனச்சிபுட்டா நெஞ்சாங்கூட்டுல. காமராசு திங்கிறதுக்காகவே தின்பண்டம் சுட்டு போய் குடுக்குற எதுத்த வீட்டுக்கு. எட்டி பாத்து பாத்து பூரிச்சிபோறா மனசுக்குள்ள. கூட சேர்ந்தும் பொடுசுல விளயாண்ட புள்ளைங்க தான் என்னமோ அவன் நடந்துகுற நட உழைக்குற உழ இவளுக்கு புடிச்சிபோது.

மேற்க கள்ளுக்குடிக்கு வாக்கபட்டு போறா மோகனம். ஊரு கன்மா தாண்டி என் கண்ணுனு அழுறா மோகனம், அந்த அருவிதாண்டி என் கண்ணுனு அலறுறா கனகம். பொண்ணு போன போட்டுவண்டி மறஞ்சி போச்சு, மனசு பிரிவுல கறஞ்சி போயிருச்சு.

மோகனத்துக்கும் கண்ணாலம் ஆச்சு, கனகத்த பொண்ணு கேக்காம இருபாங்களா அவுக சொந்தபந்தம், வரிசைகட்டி பொண்ணு கேட்டு வராக, என்னமோ எந்த சம்மந்தமுமே கூடிவரல. காமராச கண்டாலே உசுருக்குள்ள யாரரோ கிச்சிகிச்சி மூட்நாப்ள இருக்கு கனகுக்கு, உள்ளங்கால்ல நாணல வச்சி வருடுனாப்ள கூசுது. ஒளிஞ்சி நின்னு பாக்குறதும் மறைஞ்சி நின்னு அவன் குரல கேக்குறதுமா ஓடுது நாளு. கனகுவும் காமராச தான் கட்டுவேன் னு வைராக்கியம் வச்சிருக்கா மனசுல, அதுக்கு பேரு தான் காதல் னு அவளுக்கு எட்டுல, இருகட்டும் பேரா முக்கியம், கழுத அது எதுவேணாலும் இருந்துட்டு போவட்டும். கனகு, ஊருக்கு அவ ஆசையா சொல்லாட்டியும் உரியவனுக்காச்சும் சொல்லுனுமா இல்லையா. சொல்லலாம் னு தெகிரியம் வந்து போனாலும் முன்னைக்க நடக்க மாட்டிங்கிது அவ வாழத்தண்டு காலுங்க.

அப்பஞ்சொந்தம் கேட்டாலும் தட்டிகளிச்சிப்புட்றா அவ சொந்தம் நின்னாலும் அதே பண்றா அவ ஆத்தா முத்தம்மா. கனகு தன் காதல சொல்ல போறதும் இல்ல காமராசு கிட்ட. விடிய விடிய யோசிச்சி ஒரு வழி பண்ணிபுட்டா ஆத்தாவ கவுக்க. விடிய காலைல கோழி கூவி எழுப்பி விட்டுச்சோ இல்லையோ எழுந்து போய் பஞ்சாரத்து கோழிங்கள தெறந்து விட்டு தல கொல்லைக்கு தொரத்தி விட்டா. கோழிங்க கால கடன முடிக்கனும்ல. அடுபெரிச்சி காப்பி தண்ணி கலந்தா ஆத்தா அப்பன் அண்ணனனுக்கு போய் குடுத்தா. வெளிய எதுத்த வீட்ட எட்டி பாத்தா, மோகனம் வந்துருக்கா புருஷன் வீட்டு ஆளுங்க கூட. உச்சி குளுந்து போன கனகு. தான் போட்ட கணக்கு சரியாய் வரும்னு மனக்கணக்கு பண்ணிட்டா. கட்ட பொறுக்கல அவளுக்கு வெரசா வேலைங்கள முடிச்சா அடுபங்கரையில அழுத்தி தேச்சி குளிச்சா ஆத்தங்கரையில. சாமிய கும்பிட்டு தின்னீரு அள்ளி வச்சா.

மோகனத்த பாத்துட்டும் வந்துட்டா வீட்டுக்கு. அவ ஆத்தா முத்தம்மா காதுல ஒரு சேதியும் சொன்னா கனகு. அப்புறம் என்ன அடுத்த மாத்தி முகுர்த்ததுலையே கண்ணாலம் ஆகி போச்சி கனகுக்கும் காமராசுக்கும். எடுத்த வீட்டுல, தான் ஆச பட்ட வீட்டுல தான் கூட்டாளி வீட்லயே வாக்கபட்டுட்டா. கனகுக்கும் மோகனத்துக்கும் ஒன்னாவே கருத்தரிச்சி புள்ள பெத்துகிட்டாளுக.

அப்புடி என்னத்த ஆத்தா காதுல கடிச்சா கனகு னு தெரிஞ்சிக்க வேணாமா, முத்தம்மாக்கு நல்ல வசதியான குடும்பத்துல தம்மகளை கட்டிகுடுக்க தான் விருப்பம்னு ஒரு கட்டத்துல தெரிஞ்சி போச்சு கனகுக்கு. காமராசு வீட்டுக்கும் சொத்து பத்து காடுகர ஓரளவுக்கு இருந்தாலும் அவுக இருக்குற பண்ண வீட்டுல கருப்பஞ்செட்டி கூட பொறந்த ஆறு அண்ணன்மாருக்கும் பங்கு இருக்கு. அந்த வீடு மொத்தமும் கருப்பஞ்செட்டிக்கு தான் னு செத்து போன கருப்பஞ்செட்டியோட அப்பன் எழுதி வச்ச உயிலு கெடச்சிட தாகவும் அந்த வீடு இவுக பெருக்கே கிரயம் ஆகிட போவதாவும், அதுனால தான் மோகனம் விருந்துக்கு வந்துருக்கா னும் சொல்லிபுட்டா. வெளிய சொன்னா, பங்காளிங்க பங்கு கேட்டு நிப்பாய்ங்க னு கமுக்கம்மா இருந்துட்டாங்க அவுக ஆளுங்க னும் சும்மா சொல்லி தான் பாத்த கனகு, ஒடனே தண்ணிக்குள்ள அமுக்குன பந்து கணக்கா எந்திரிச்சா முத்தம்மா. ஆளைவிட்டு அனுப்பி பொண்ணு கேக்க வச்சிட்டா கமராசுக்கு தம்மகள. கண்ணுக்கு முன்னாடியே தம்மக வசதியா வழரதயும் பாத்துகிட்டா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *