நெஞ்சமடி நெஞ்சம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 4,294 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

ஹரிஹரனின் தலை அசைவிற்கு தன் தலை அசைவைப் பதிலாகத் தந்த ரூபிணி அவனைப் பின் தொடர்ந்து ஆபிஸின் அறையை விட்டு வெளியே வந்தாள். நிமிர்ந்த நடையுடன் அவன் வேகமாய் நடந்து அவள் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டான். சற்று நேரத்தில் ரூபிணி அவனை மறந்தும் விட்டாள். 

“என்னடி விஷயம்..?” ப்ரீதி மீண்டும் வினவ நடந்ததைக் கூறினாள். 

“புத்திசாலித்தனமான காரியம் செஞ்சே.. அவரை மாதிரி ஆளுக கிட்ட எல்லாம் நாம் மோதக்கூடாது…” 

அவரைப் பார்த்துப் பயந்து நான் புகாரை வாபஸ் பண்ணவில்லை ப்ரீதி. நடந்த தவறுக்கு நான் தண்டனை வழங்குகிறேன்னு சொன்னார்.. அதனால் தான் நான் புகாரை வாபஸ் பண்ணினேன்.” 

“எதுவோ ஒன்னு.. மோதல் இல்லையே.. அந்த மட்டிலும் சரி…” 

ப்ரீதி சொன்னதையே தான் ஜமுனாவும் கூறினாள். கோமளாவும் வாசவியும் அதை ஆமோதித்தனர். 

”ஜமுனா.. அவரிடம் மோதுவதும் மோதாமலிருப்பதும் பிரச்னை இல்லை. அவரது ஆள் தவறு செய்தான் என்பதை அவர் புரிந்து கொண்டார். கண்டித்து வைப்பதாகக் கூறினார். நான் புகாரை வாபஸ் வாங்கிட்டேன்.” 

“என்னவோ போ. நீ இவ்வளவு சகஜமாய் பேசுகிறாயேன்னு எனக்கு இருக்கு. ஊரே அவர் பெயரைக் கேட்டால் குலை நடுங்கிப் பயப்படுது.. நீ அவர் எதிரே சேர் போட்டு உட்கார்ந்து கலந்து உரையாடிவிட்டு வந்திருக்கிறாய்… கேட்கவே ஆச்சர்யமாய் இருக்கு. இளங்கன்று பயமறியாதுன்னு சும்மாவா சொல்லி வைத்தாங்க.” 

“ஆமாம்.. நீ பெரிய கிழவி.. நான்தான் இளங்கன்று.”

“என்னை விட இளையவள்தானே நீ…” 

“அதற்காக என்னை இளங்கன்று ஆக்கி விட்டாய்.. சரி… இளங்கன்று பயமறியாமல் வந்தது கிழவரைப் பார்த்து இல்லையே.” 

“அடிரா.. சக்கை.. பாருடி இவளை.. ஹரிஹரனைப் போய் சைட் அடிச்சிருக்காள்..” ஜமுனா கூறவும் மற்ற இருவரும் கலகலவென்று சிரித்தனர். 

ரூபிணியின் முகம் சிவந்து விட்டது. 

“ஏய்.. சைட் அது இதுன்னு சொல்லாதே. அவரைப் பார்த்தால் அப்படி ஒன்றும் வயதானவர் போல் தெரியவில்லை… அதைத்தான் சொன்னேன்.” 

“நீ எதைச் சொன்னாயோ… எங்கள் காலேஜிற்கு ஓர் முறை அவர் வந்து இருந்தார். விறைப்பாய் அவர் பார்த்துக் கொண்டு வந்தபோது எனக்கு குளிர் ஜுரமே வந்து விட்டது… நீயானால் ஏதேதோ சொல்லுகிறாய்… சரி விடு.. பிரச்னை ஒரு முடிவுக்கு வந்ததே.. இப்போது தான் எனக்கு நிம்மதியாய் இருக்கிறது…” ஜமுனா உண்மையான மன நிம்மதியுடன் கூறினாள். 

ரூபிணியும் அதை அறிவாள். இரண்டு நாட்களாகவே அவள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்ததை அவள் பார்த்துக் கொண்டுதானே இருந்தாள்… ஜமுனா பழைய படி கலகலப்பாய் பேசியது ரூபிணிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 


ஹரிஹரன் தன் முன்னால் வந்து நின்ற லாரன்ஸை சினத்துடன் பார்த்தான். லாரன்ஸ் பயத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். பக்கத்தில் பிரசாத் கையிரண்டையும் பின்னால் கட்டி.. கால்களை அகல விரித்து நின்றிருந்தான். தூரத்தில் கப்பலில் சரக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தனர். மீன் பதனிடும் தொழிற்சாலைக்கே உரிய மணம் மூக்கைத் துளைத்தது. அவர்கள் நின்றிருந்த பாண்டிச்சேரி ஹார்பரின் ஓரமாய் கடலலைகள் வந்து கரையை அடித்துத் தொட்டுச் சென்று கொண்டிருந்தன. 

கடல் காற்றின் ஈரம் கூட ஹரிஹரனின் உஷ்ணத்தை தணிக்கவில்லை. அவன் கொதித்துக் கொண்டிருந்தான். 

“உன்னிடம் வேலை பார்க்கிறவன் உன் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்று அந்தப் பெண் கேட்டாள்… உன் மரியாதையை காற்றில் பறக்க விட்டது நானில்லை.. உன்னிடம் வேலை பார்க்கும் உன் ஆள் தான் என்று சொன்னாள். அவள் சொன்னது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். இந்த ஹரிஹரன் துணிச்சல்காரன். என் துணிச்சலை ஆண்களிடம் தான் காட்டியிருக்கிறேன். பெண்ணைச் சீண்டிப் பார்த்ததில்லை.. நீ அதைச் செய்யத் துணிந்திருக்கிறாய்… இதற்கு உனக்கு என்ன தண்டனை தரப்போகிறேன் தெரியுமா?” 

லாரன்ஸ் ஹரிஹரனின் காலில் விழுந்தான். 

“அந்தப் பெண் யாரோ… எவரோ… முன்பின் தெரியாத பெண் சொன்னதை நம்புகிறீர்கள்.. நான் சொல்வதை நம்ப மாட்டேன் என்கிறீர்களே…” 

ஹரிஹரன் லாரன்ஸின் முடியை கொத்தாகப் பிடித்துத் தூக்கி அவன் கன்னங்களில்.. பளார்.. பளார்.. என்று மாறி மாறி அறைந்தான். 

“எனக்குப் பொய் பிடிக்காது. பொய் சொல்பவனைக் கட்டோடு பிடிக்காது.. உன்னிடம் பொய்யிருக்கிறது. இனி நீ என்னிடம் வேலை பார்க்க முடியாது… ஓடிப்போ.” 

“ஐயா… நீங்கள் வேலையை விட்டு நிறுத்தி விட்டால் என் குடும்பம் பட்டினி கிடந்து செத்துப் போகும்.. என் பெண்டாட்டி பிள்ளைக்கு எப்படி நான் சோறு போடுவேன்.” 

“உடம்பில் திமிர் இருக்கப் போய்த்தானே.. ஹோட்டலுக்கு சாப்பிட வந்த குடும்பப் பெண்ணிடம் வாலாட்டியிருக்கிறாய்.. உன் திமிர் அடங்க வேண்டாமா..? போட்டிங் போன இடத்திற்குப் பின்னாலேயே துரத்திப் போயிருக்கிறாயே.. அப்போது உன் பெண்டாட்டி பிள்ளைகள் நினைவுக்கு வரவில்லையா?” 

“தெரியாமல் செய்து விட்டேன் ஐயா.. மன்னித்து விடுங்கள்.” 

“எனக்கு மன்னிக்கத் தெரியாது என்று உனக்குத் தெரியாதா? கார்மேகம்.. இங்கேவா.. “

கார்மேகத்தை ஹரிஹரன் அழைக்கவும் லாரன்ஸ் நடுங்கிப் போய் விட்டான். அடுத்து என்ன நடக்கும் என்பதை அனுமானித்தவனாய், 

”ஐயா.. வேண்டாங்க ஐயா..” என்று கதறினான். அவனது கதறலை ஹரிஹரன் செவிமடுக்கவில்லை. அருகில் வந்த கார்மேகத்தை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் சிறிதளவும் கருணையில்லை. 

“கார்மேகம்.. இவன் என்னை போலீஸ் ஸ்டேஷன் வாசல் படியை மிதிக்க வைத்து விட்டான். இவன் மேல் என் எதிரிகள் புகார் கொடுத்திருந்தால் அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்பி இருப்பேன். கொடுத்தது பாதிக்கப்பட்ட ஒரு பெண். இவனை வெளியே கொண்டு வந்தது என் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக… இவனைக் காப்பாற்றுவதற்காக இல்லை. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமென்று நீயே தீர்மானித்துக் கொள். இனி இப்படி ஒரு தவறை இந்த ஜென்மம் முழுவதும் இவன் செய்யக்கூடாது.” 

கார்மேகம் லாரன்ஸின் பயந்த விழிகளைப் பார்த்தான்.

“ஐயா… இவன் நம்மோடு இருக்கிறவன்.” 

“இருந்தவன்.. இருக்கிறவனில்லை…” 

“ஐயா முடிவு அப்படியிருந்தால் உங்கள் நிழலை விட்டு அனுப்புவதே இவனுக்குப் பெரிய தண்டனை தானே. அதற்கு மேலும் வேறு ஒரு தண்டனை கொடுக்க வேண்டுமா ஐயா.. ஏற்கனவே இரண்டு நாட்களாய் பட்டினி போட்டு இவனை அடித்துத் துவைத்திருக்கிறேன். இனி அடித்தால் இவன் தாங்க மாட்டான்… விட்டு விடுங்கள்…” 

ஹரிஹரன் வெறுப்பை உமிழும் பார்வை பார்த்தான். 

“ஓ.கே… நீ சொல்வதால் விட்டு விடுகிறேன். இனி இவன் என் கண் பார்வையில் படக்கூடாது. நம் தொழில் நடக்கும் இடங்களில் இவன் காலடி வைக்கக்கூடாது. கணக்கை முடித்து விடு…” 

“ஐயா…” லாரன்ஸ் அலறினான். 

“பணக்கணக்கை சொன்னேன் கார்மேகம்.” 

ஹரிஹரன் அங்கிருந்து விரைவான நடையுடன் அகன்று காரில் ஏறிச் சென்று விட்டான். நடக்க முடியாமல் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் தள்ளாடிக் கொண்டிருந்த லாரன்ஸை கோபத்துடன் பார்த்த பிரசாத், 

“அன்னைக்கே படித்துப் படித்துச் சொன்னேன். எம்.டி.க்கு பெண்களிடம் பொறுக்கித்தனம் பண்ணினால் பிடிக்காது. கடுமையா பனிஷ் பண்ணுவார்ன்னு… நீ கேட்கவில்லை.. இப்பப்படு. நம்ம எம்.டி. உன்னை துரத்திட்டார்ன்னு தெரிந்த பின் இந்த சுத்து வட்டாரத்தில் யார் உனக்கு வேலை கொடுக்கப் போகிறாங்க? பிழைப்புக்கு வழியில்லாமல் உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்கிட்ட.. எம்.டி. சார் எல்லா விசயத்திலேயும் வேகமானவர்ன்னு பெயர் வாங்கினவர்தான். லேடிஸ் விஷயத்தில் அவரைப் பார்த்து ஒரு பயல் ஒரு வார்த்தை விரல் நீட்டிச் சொல்ல முடியாது. நீ ராஸ்கல். அவருடைய பெயரைக் கெடுக்கிறது போல காரியம் பண்ணிட்டு உன் பொழைப்பில் நீயாய் மண்ணை அள்ளிப் போட்டுக் கிட்டு உட்கார்ந்திருக்க.. போ.. போய்.. யாரு சொன்னால் எம்.டி. காது கொடுத்துக் கேட்பாரோ. அவங்க காலில் போய் விழு” என்று கூறிவிட்டு ஹார்பரை விட்டு அகன்று விட்டான். 


விழுப்புரத்தில் ஹாஸ்டல் அறையில் கட்டிலில் படுத்து நாவல் படித்துக் கொண்டிருந்த ரூபிணியிடம் ரோஜாரமணி வந்து, 

“அம்மா.. உன்னைத் தேடி ஒரு பொம்பளையும்.. ஆம்பளையும் ஜதையாய் வந்திருக்குதுக.. உட்காரச் சொல்லிட்டு வந்தேன். வா.. வா” என்று அழைத்தாள். 

தலையை வாரிக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்த ரூபிணி, 

“ஜதையா.. அப்படின்னா..?” என்று வினவினாள். “ஜோடியா வந்திருக்கிறாங்களாம். அதைத்தான் அப்படிச் சொல்கிறாள். ஏன் ரோஸ்.. அவங்க யாரு.. எவருன்னு விசாரிச்சயா?” 

“விசாரிச்சேன்ம்மா… வாயைத் தொறந்தாத்தானே… பதினாறு வயதினிலே சினிமாவில் வர்ற சப்பாணி ‘சந்தைக்குப் போகணும்… காசு கொடு’ன்னு புலம்பின மாதிரி.. ரூபிணியம்மாவைப் பார்க்கணும்கிறதை விட்டுட்டு வேற பேச்சு பேச மாட்டேங்குதுங்க.. சரி அங்கன உட்காருங்க ரூபிணியம்மாவை இட்டாரேன்னு சொல்லிட்டு வந்தேன். நீ வாம்மா.” 

“இங்கே போய் யாரு என்னைப் பார்க்கணும்னு தேடி வந்திருப்பது.” 

“அட.. நீ வேற தேவையில்லாத ரோசனை பண்ணிக்கிட்டு இருக்கே.. நேர வந்து பார்த்தால் தெரிஞ்சு போகுது.. அதுகளைப் பாத்தா பாவமா கீது.. வாம்மா.” 

“ரோஸ்.. உனக்கு இவ்வளவு கருணை மனமா? ச்சு… ச்சு.. உன் பெயர் இனிமேல் ரோஸ் இல்லை. அன்னை தெரஸா.” 

“போம்மா.. உனக்கு வேற வேலையே இல்லை… எப்பப் பாரு என் பெயரை மாத்தி வைச்சுக்கிட்டு இருப்ப.. உன்னை ஜமுனான்னு கூப்பிடாமல் யமுனான்னு கூப் பிட்டால் உன் மனசுக்கு எம்மாங் கஷ்டமா இருக்கும்?” 

“தம்மாத்துண்டு கூட கஷ்டமா இருக்காது. ஏன்னா.. மறதி மணிமேகலை என்னை தினத்துக்கு ஒரு பெயர் சொல்லித்தான் கூப்பிடுது…” 

ரூபிணி புன்னகையுடன் ரோஜாரமணியுடன் படியிறங் கிப் போனாள். 

“எங்கே இருக்கிறாங்க.” 

“அந்தா இருக்காங்க பாரு… 

ஹாஸ்டலின் முன் பக்கமிருந்த தோட்டத்து மரத்தடியில் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சியின் மேல் அமர்ந்திருந்தவர்களை சுட்டிக் காட்டினாள் ரோஜாரமணி. 

“இவனா…?” தூக்கி வாரிப் போட்டது ரூபிணிக்கு. “வணக்கம்மா…” எழுந்து நின்று கை கூப்பினான் லாரன்ஸ். அருகினில் பெருவிரலை வாய்க்குள் வைத்து சுவைத்துக் கொண்டிருந்த பரட்டைத் தலை குழந்தையை இடுப்பினில் வைத்துக் கொண்டு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். 

“நீயா.. நீ ஏன் என்னைப் பார்க்க வந்தாய்?” 

“இதுக்குத்தான்ம்மா…” அவன் பெண்டாட்டியோடு ரூபிணியின் காலில் விழுந்தான். 

ரூபிணி பதறிப் போய் பின்னால் நகர்ந்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். மாலை மயங்கி இருள் பரவிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆஸ்டலில் அடைபட்டிருந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பி லாரன்ஸைப் பார்த்து அதட்டினாள். 

“எழுந்திரு.. ஏன் இப்படி முட்டாள்தனமாய் காரியம் பண்ணுகிறாய்?” 

லாரன்ஸின் மனைவி தேம்பி அழுதாள். முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டே அழுகுரலில் பேசினாள். 

“இது முட்டாத்தனமான காரியமில்லம்மா.. அந்த மகராசன் பண்ணையில வேலை பார்த்த மப்பில் உங்க கிட்ட இந்த மனுசன் வம்பு பண்ணியதுதான் முட்டாள்தனம்… அந்த ஐயாகிட்ட அண்டிப் பிழைச்சவங்க கெட்டுப் போனதில்லம்மா. இந்த கெட்டுப் போன மனுசனாலே. என் பொழைப்பு நட்டாத்தில நிற்குதும்மா. நானும் இந்த மனுசனும் மூணு நாள் பட்டினியில கிடக்கிறோம். கைப்பிள்ளைக்கு பால் வாங்கிக் கொடுக்க கையில காசில்லம்மா. நீங்க மனசு வைச்சா எங்களை பட்டினியிலிருந்து காப்பாத்த முடியும். எங்களுக்கு வேற போக்கிடம் இல்லம்மா. அந்த மகராசன் துரத்தி விட்டுட்டா.. ஆதரிக்க எந்த நாதி வரும்? உங்கள கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்ம்மா. இந்த ஆள் செஞ்சதுக்கெல்லாம் தண்டனை அனுபவிச்சிருச்சும்மா… இரண்டு நாள் பட்டினி போட்டு அடிச்சு நொறுக்கிட்டாரு ஐயா… பத்தாக்குறைக்கு வேலையையும் பிடுங்கிக்கிட்டு விரட்டி விட்டுட்டாரு” அந்தப் பெண் பொங்கி அழுதாள். 

ரூபிணிக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவள் எதிரே நின்ற பெண்ணுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது என்று தெரியாமல் விழித்தாள். 

அத்தியாயம்-8

“இனிமேல் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் இந்த மனுசன் காலைத் தொட்டு கும்பிடும்மா. ஜெயி லில் தூக்கிப் போட்டிருந்தாலும் இந்த மனுசன் திருந்தி இருக்காதும்மா. ஐயா போட்ட போடில் திருந்திருச்சும்மா. உங்களுக்கு கோடிப் புண்ணியம் உண்டு. நீங்க ஒரே ஒரு வார்த்தை ஐயாகிட்டச் சொன்னீங்கன்னா நாங்க உயிர் பிழைச்சுக்குவோம். எங்க உயிரைக் காப்பாத்துங்கம்மா” அந்தப் பெண் கெஞ்சினாள். 

”நானா.. உனக்கு ஏதாவது மண்டையில் மசாலா இருக்கா? என்னிடம் வந்து உங்க முதலாளியிடம் பேசச் சொல்கிறாயே.. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? நான் யார்? அவர் யார்? நான் சொன்னால் அவர் எப்படிக் கேட்பார்? இங்கே வந்து என்னிடம் அழுது புலம்புவதை அவரிடம் போய் செய்ய வேண்டியதுதானே…” ரூபிணி திரும்பி ஹாஸ்டலுக்குள் போகப் போனாள். 

அந்தப் பெண் சட்டென்று தன் கையிலிருந்த குழந்தையை ரூபிணியின் முன்னால் போட்டு விட்டாள். 

“இந்தப் பச்சை மண்ணு முகத்தைப் பாருங்கம்மா. இதைத் தாண்டி நீங்க போங்க.. நாங்க எங்க முடிவைத் தேடிக்கிறோம். ஐயாகிட்ட எப்படிம்மா நாங்க போக முடியும். ஐயா ஒன்றை முடிவு செஞ்சா செஞ்சதுதான். யார் போய் அவர் காலில் விழுந்தாலும் தீர்மானிச்சதை மாத்திக்கவே மாட்டார்.” 

ரூபிணி கலங்கிப் போய் குழந்தையைத் தூக்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள். செய்வதறியாமல் தவித்தபடி கேட்டாள். 

”ஏம்மா.. நீ அவரிடம் வேலை பார்த்த ஆளின் மனைவி. நீ சொல்வதையே கேட்டுக் கொள்ளாதவர். நான் சொல்வதை எப்படிக் கேட்பார்?” 

“நீங்க பாதிக்கப்பட்டவங்கம்மா. நீங்க சொன்னால் நிச்சயம் எடுபடும். எங்க உசிரைக் காப்பாத்த முடியும். கொஞ்சம் தயவு பண்ணுங்கம்மா…” 

ரூபிணி தன் கையிலிருந்த செல்போனை யோசனையுடன் பார்த்தாள். ‘என்னிடம் ஒருவன் வம்பு பண்ணினான். அவனைத் தண்டிக்க நினைத்து புகார் கொடுக்கவில்லை… இனி இது போன்ற தவறுகளைச் செய்ய அவன் பயப்பட வேண்டும்.. அதனால் தான் புகார் கொடுத்தேன்’ என்று அன்று அவனிடம் சொன்னாள். 

‘தண்டனையை நான் கொடுக்கிறேன். நீங்கள் கேட்டதை நான் செய்கிறேன். என்னை நம்புங்கள்’ என்றான் அவன். இன்று சொன்னதை அவன் செய்து விட்டதற்கு சாட்சியாக தண்டிக்கப்பட்டவனின் மனைவி வந்து கதறி அழுகிறாள். 

லாரன்ஸ் அயோக்கியன்தான். அவன் ஆட்டம் அடங்கி விட்டது. ஹரிஹரன் அடக்கி விட்டான். இனியும் அவன் தண்டனையை அனுபவிப்பது அதிகப்படி. அவன் அனுபவிக்கும் வேதனையை நிறுத்துவதுதான் சரியான செய்கை. அவன் செய்த தவறுக்கு அவனது குடும்பம் பாதிக்கப்படுவது முறை ஆகாது. 

ரூபிணி அந்தப் பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாமல்.. தன் கட்டை விரலை விடாமல் சுவைத்துக் கொண்டிருந்தது. 

ரூபிணி தீர்மானித்து விட்டாள். 

“லாரன்ஸ்.. உங்களிடம் உங்கள் முதலாளியின் போன் நம்பர் இருக்கிறதா” 

அவள் தன்னிடம் பேசியதும் லாரன்ஸ் நம்ப முடியாமல் திகைத்தான். கையெடுத்துக் கும்பிட்டான். 

“அம்மா.. என்னிடம் நீங்கள் பேசுகிறீங்களா?” நாத்தழுதழுத்தான். 

“செய்தது தவறுன்னு உணர்ந்து கொண்டால் போதும். வேறு என்ன எனக்கு வேண்டும்? இந்த பூமியில் பிறந்தவர்கள் எல்லோருமே மகாத்மாக்கள் கிடையாது லாரன்ஸ்.. அந்த மகாத்மா காந்திக்கே ஏன் மகாத்மான்னு பெயர் கிடைத்தது தெரியுமா? அவர் செய்த சின்னச் சின்ன தவறுகளைக் கூட ஒளிவு மறைவில்லாமல் தன் ‘சத்திய சோதனை’ என்ற சுய சரிதைப் புத்தகத்தில் எழுதினார். அந்தத் தவறுகளைத் திருத்திக் கொண்டார். மீண்டும் அந்தத் தவறுகளை அவர் செய்யவே இல்லை. அதனால்தான் அவருக்கு ‘மகாத்மா’ என்ற பெயர் கிடைத்தது. நீங்கள் திருந்தி விட்டீர்கள். இனி அந்த மாதிரியான செயல்களை செய்ய மாட்டீர்கள். எனக்கு அதுபோதும். உங்கள் முதலாளியின் செல்போன் நம்பரைச் சொல்லுங்கள்…” 

லாரன்ஸ் சொன்னான். முன் பின் தெரியாத யாரோ பார்க்க வந்து இருக்கிறார்கள் என்றதும் எதற்கும் இருக்கட்டுமென்று முன்னெச்சரிக்கையாய் கையில் செல்போனோடு கீழே வந்திருந்த ரூபிணி அந்த நம்பருக்கு போன் பண்ணினாள்… மறுமுனையில் கம்பீரமான.. கனத்த.. ஆண் குரல் கேட்டது. 

“ஹலோ…” 

ரூபிணி உதடு கடித்தாள்… பேச ஆரம்பித்து விட்டு இனிப் பின் வாங்க முடியாது… பின் வாங்கவும் கூடாது. 

“சார்.. நான் ரூபிணி பேசுகிறேன்.” 

”ரூபிணி. ? ஓ.. நீங்களா சொல்லுங்கள்… நான் அந்த லாரன்ஸை பனிஷ் பண்ணி விட்டேன்… அதைக் கேட்பதற்காகத்தானே போன் பண்ணினீர்கள்?” 

“இல்லை சார்… லாரன்ஸிற்கு வேலை கொடுங்கள். அவரை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளத் தான் போன் பண்ணினேன்.” 

“வாட்…?” 

“யெஸ் சார்… இங்கே என் ஹாஸ்டலுக்கு லாரன்ஸ் அவருடைய வொய்ப் குழந்தையோடு என்னைப் பார்க்க வந்திருக்கிறார். அவருடைய வொய்ப் அழுகிறார்கள். கைக்குழந்தை வேறு… பாவம் சார். அவரை மன்னித்து விடுங்கள்.” 

மறுமுனையில் ஓர் நொடி நிசப்தம் நிலவியது. 

“ரூபிணி.. நீங்கள் போலீஸில் அவன் மேல் புகார் கொடுத்தீர்கள்…” 

“நீங்கள் வந்து சொன்னதும் புகாரை வாபஸ் பண்ணி விடவில்லையா?” 

“எதன் பேரில் வாபஸ் பண்ணினீர்கள்? அவனை தண்டிக்கிறேன் என்று நான் சொன்ன பின்னால்தான் வாபஸ் வாங்கினீர்கள். ஹரிஹரன் வாக்குத் தவற மாட்டான்.” 

“அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் சார். நீங்கள் கேட்டுக் கொண்டதை நான் செய்து விட்டேன். நான் கேட்டதை நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். இத்துடன் போதுமே… லாரன்ஸை வாழ்நாள் முழுவதும் தண்டிக்க வேண்டுமா? அவர் தனி மனிதர் இல்லையே. வொய்ப் குழந்தையென்று அவரை நம்பி இன்னும் சில ஜீவன்கள் வாழ்கின்றார்களே. நீங்களே கை விட்டு விட்டால் அவர்கள் எங்கு போவார்கள்?’ 

“எனக்கு மன்னிக்கத் தெரியாது ரூபிணி.” 

“எனக்காக மன்னிக்கக் கூடாதா?” 

“என்ன சொன்னீர்கள்… இன்னொரு முறை சொல்லுங்கள். ’” 

“எனக்காக அவரை மன்னித்து விடுங்கள் சார்.” மறுமுனையில் மீண்டும் ஓர் வினாடி மௌனம் குடி கொண்டது. 

“சரி… உங்களுக்காக.. நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் ரூபிணி உங்களுக்காக மட்டுமே அவனை நான் மன்னிக்கிறேன். உங்கள் வார்த்தைக்காக மன்னிக்கத் தெரியாத இந்த ஹரிஹரன் அவனது வழக்கத்தை மாற்றிக் கொண்டு அவன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக மன்னிக்கப் போகிறான்.. லாரன்ஸை நாளையிலிருந்து வேலைக்கு வரச் சொல்லுங்கள்… 

“தேங்க் யு சார்.. தேங்க்யூ வெரிமச்.” 

“நன்றியெல்லாம் எதற்காக? என்னை அந்நியப்படுத்தவா? வேண்டாம். பட் ஒன் வொர்டு ரூபிணி.” 

“என்ன சார்?” 

“நீங்கள் இவ்வளவு இளகின இதயத்தோடு இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. யு ஆர் ஸோ சாப்ட்.” 

மறுமுனை துண்டிக்கப்பட்டு விட்டது. சுற்றிலும் கவிந்திருந்த இருள் ரூபிணியின் முகச் சிவப்பை மூடி மறைத்தது. மெல்லிய உதடுகளை தன் அரிசிப் பற்களால் கடித்துக் கொண்டவள். லாரன்ஸைப் பார்த்துக் கூறினாள். 

“நீங்கள் நாளையிலிருந்து வேலைக்குப் போகலாம் லாரன்ஸ். உங்கள் முதலாளி உங்களை மன்னித்து விட்டார். வேலைக்கும் வரச் சொல்லி விட்டார்.” 

“நிஜமாகவா…?” 

நம்ப முடியாத திகைப்பு லாரன்ஸின் வார்த்தைகளில் வெளிப்பட்டது. யார் சொன்னாலும் கேட்காத ஹரிஹரன். இந்தப் பெண் சொன்ன வார்த்தையை கேட்டு விட்டானா? கட்டுக்கடங்காத கடலை தன் உள்ளங்கைக்குள் கட்டுப்படுத்தும் இந்தப் பெண்ணிடமா அவன் வம்பு பண்ணினான்? உடல் நடுங்க ரூபிணியின் கால்களில் விழுந்தான் அவன். 

“அம்மா.. தாயே.. என்னை மன்னிச்சிடுங்கம்மா. உங்க சக்தி தெரியாமல் மோதி விட்டேன்.” 

“அடடா… நான் சாதாரணமானவள் லாரன்ஸ்.. சக்தி அது இதுன்னு பினாத்தாமல் ஒழுங்காய் போய் வேலையில் சேருங்கள். ஆனால் ஒன்று… இனிமேல் இது போன்ற தவறுகளை…” 

“நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன்.” 

“அது போதும் போய் வாங்க…” 

ரூபிணி லாரன்ஸின் குழந்தையை வாங்கி அதன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். பேசிக் கொண்டே ஹாஸ்டல் வாசலுக்கு வந்தார்கள். 

உள்ளேயிருந்து ஜமுனா ரூபிணியைத் தேடிக் கொண்டு வந்தாள். 

“இங்கே என்னடி பண்ணுகிறாய்? யார் இவங்க..? இவன் இவன் இவன்தானே உன்னிடம் வம்பு பண்ணியவன்? இதுகளா உன்னைப் பார்க்க வந்திருப்பது?” 

“ஜமுனா.. எல்லாவற்றையும் விவரமாய் நம் ரூமுக்கு வந்து சொல்லுகிறேன்.. இப்ப ஒரு இருநூறு ரூபாய் வேண்டுமே. உன்னிடம் இருக்கிறதா? பர்ஸ் மாடியில் ரூமில் இருக்கு.”

“இந்தா.” 

ஜமுனா கொடுத்த பணத்தை வாங்கி லாரன்ஸின் மனைவியிடம் கொடுத்தாள் ரூபிணி. 

“அம்மா.. இது எதுக்கும்மா. வாழ்க்கை பூராவும் நாங்க பசியில்லாமல் வாழ வழி செஞ்சிட்டிங்க. அது போதும்மா.” 

“உடனே பசி தீர வேண்டாமா? நீங்கள் இரண்டு பேரும் பசி தாங்குவீர்கள். குழந்தை தாங்குமா? வைத்துக் கொள்…”

அவள் கண்களில் கண்ணீர் வழிய லாரன்ஸைப் பார்த்தாள். “பார்த்தாயா.. இந்தப் புண்ணியவதி குணத்தைப் பாரு… இந்தம்மா மனசு நோகப் பேசி இது கையைப் பிடிச்ச இழுத்து கதி கலங்க வைச்சே.. உன்னை மன்னிச்சு வேலை வாங்கிக் கொடுத்ததுமில்லாமல் நம்ம பசி தீர்க்க பணமும் கொடுக்குதே. இது தெய்வம்ய்யா.. நீ பண்ணின பாவத்துக்கு உன்னை என்னா செய்தா தேவலாம்.” 

“எதுவும் செய்ய வேணாம். பணத்தைப் பிடி தவறை உணர்ந்து திருந்தி விட்டவர்களை திரும்பத் திரும்பச் சொல்லால் காயப்படுத்துவது தான் பெரிய தவறு. போய் விட்டு வாங்க.” 

அவர்கள் போய் விட்டார்கள். 

“என்னடி நடக்கிறது இங்கே? அவர்கள் பேசிக் கொள்வது பாதி புரிகிறது. பாதி புரியவில்லை.”

“ரூமுக்குப் போய் பேசிக் கொள்ளலாமே…”

“அதுவும் சரிதான்.. பசிக்குது..சாப்பிடப் போகலாம் வா.”

ஜமுனா டைனிங் ஹாலில் கலகலப்பா பேசிக் கொண்டே சாப்பிட ரூபிணி மௌனமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனம் திரும்பத் திரும்ப ஹரிஹரன் பேசிய வார்த்தைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. 

‘உங்கள் வார்த்தைக்காக மன்னிக்கத் தெரியாத ஹரிஹரன் அவனது வழக்கத்தை மாற்றிக் கொண்டு அவன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக மன்னிக்கப் போகிறான்.’ 

“எதுக்குடி இப்படி முகம் சிவக்கிறாய்? சப்பாத்தி நல்லாயிருக்குன்னுதானே சொன்னேன். அதற்குப் போய் இப்படி ஓர் நாணமா? என்ன ஆச்சு?” 

“உம்.. குழந்தை அழுகுது.” 

“அதுக்குத்தான் இருநூறு ரூபாய் கொடுத்து விட்டிருக் கிறாயே.. அவங்க உட்வார்ட்ஸ் கிரைப் வாட்டர் வாங்கிக் கொடுத்துக்குவாங்க. நீ உன் கதைக்கு வா. எதுக்கு இந்த ஜொலிஜொலிப்பு?” 

“ஏதோ.. நகையைப் பத்திப் பேசுவது போல் பேசுகிறாய்?” 

“நகைதான்… இதுவும் நகைதான். உன் புன்னகை.”

ரூபிணி முகம் சிவக்க மீண்டும் புன்னகைத்தாள். 

“தோடா… ஏண்டி… இந்தச் சிரிப்பு சிரித்தால் ஏதோ விஷயமிருக்குன்னு அர்த்தம்… ஆனால் நீதான் சாமியாரிணி ஆச்சே. எப்படி இதுன்னு தான் எனக்குப் புரியலை.” 

“போடி..” 

ரூபிணி எழுந்து கை கழுவச் சென்று விட்டாள். 

‘உங்களுக்காக மட்டுமே அவனை நான் மன்னிக்கிறேன்.’ 

கார் டிரைவரிலிருந்து… மிகப் பெரிய பொறியியல் கல்லூரியின் சொந்தக்காரர் வரை அஞ்சி நடுங்கும் வல்லமை படைத்தவனின் வாய் உதிர்த்த வார்த்தைகள் இவை. 

அவளுக்காகவா…? அவளின் வார்த்தைக்கு அவன் கட்டுப்பட்டானா? எதற்காக…? அவள் மிகச் சாதாரணப் பெண். அவனிருக்கும் உயரத்தை அண்ணாந்து பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவள். அவளின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்க வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லையே… அவசியம் இருந்தாலும் வளைந்து கொடுக்காதவன் ஆயிற்றே… பின் ஏன் அவள் சொல்லுக்கு தன் வழக்கத்தை கைவிட்டு வளைந்து கொடுத்தான். ? 

அது உணர்த்திய செய்தி புரிய அவள் மனம் சிறகடித்தது. இதுவரை இல்லாத இனம் விளங்கா உணர்வு எழுந்து ‘குப்’பென்று அவள் உடல் முழுவதும் பரவியது. 

அத்தியாயம்-9

‘இனம் விளங்கவில்லை – எவனோ 
என் அகம் தொட்டு விட்டான்..’ 

தூண்டிற் புழுவினைப் போல் துடித்த பெண் கூறுவதாய் பாரதியாரின் கவிதை சொல்கிறதே… அந்தத் தவிப்பை இன்று அனுபவித்தாள் ரூபிணி. 

ஓர் நாள்… சில நிமிடங்கள் மட்டுமே பார்த்த அவன் முகம் நினைவில் வர மறுத்தது… அவனது ஆண்மை நிரம்பிய கனத்த குரல் மட்டுமே… அதில் தொனித்த கம்பீரம் மட்டுமே… அவள் நினைவில் நின்றது. 

ஹரிஹரன்…! பெயரைக் கேட்டால் அழுத குழந்தை வாய் மூடுமாமே… இன்று அவன் பெயரை நினைத்தாலே அவளது நெஞ்சம் இனிக்கிறதே ஏன்? 

“சரியாப் போச்சு போ.. குழாயைத் திறந்து விட்டுக் கையைக் கழுவாமல் அப்படி என்னடி யோசித்துக் கொண்டிருக்கிறாய். சாப்பிட்ட கையே காய்ந்து விட் டது? வாட் இஸ் ராங் வித் யு?” 

“நத்திங்.. நத்திங்…” 

அவசரமாய் கையைக் கழுவினாள் ரூபிணி.. அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி கையைக் கழுவிய ஜமுனா, 

“ஊஹூம்.. நீ இன்றைக்கு ஒரு மார்க்கமாய் இருக்கிறாய்… திருதிருவென விழிக்கிறாய். எதுவோ உன்னிடம் சரியில்லை. ரூமுக்கு வா.. பேசிக் கொள்கிறேன்…” என்றபடி விடுவிடென்று முன்னால் போனாள். 

மாட்டிக் கொண்ட உணர்வுடன் நாக்கைக் கடித்துக் கொண்ட ரூபிணி அவளைப் பின் தொடர்ந்தாள். 

“ஜமுனா.. உன் ரூம் மேட் காமினி என்ன செய்கிறாள்..” வார்டன் மணிமேகலை வினவினாள். 

“இதுகூட இது ஒரு லொள்ளு. மேடம் இதோ என் கூட ஆடு திருடின கள்ளி போல ஓர் விழி விழித்துக் கொண்டு வருகிறாளே இவள்தான். என் ரூம் மேட் ரூபிணி.. காமினி இல்லை.” 

“ரூபிணியை எனக்குத் தெரியாதா? நீ போம்மா.” 

“ஏய்.. வந்து விடுடி. அது பாட்டுக்கு வேறு ஏதாவது தாமினின்னு ஆரம்பித்து வைக்கும்.” 

ஜமுனா சன்னக் குரலில் எச்சரித்தவாறு விரைந்தாள். 

“ஹி.. ஹி.. போய்விட்டு வருகிறேன் மேடம்…” ரூபிணி மணிமேகலையிடம் விடைபெற முனைய அவள் மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு ரூபிணியை ஏற இறங்கப் பார்த்தாள். 

”ஏம்மா.. எந்த ஊருக்குப் போகிறாய்? உனக்கு டிரான்ஸ்பர் கிடைத்து விட்டதா?” 

ஜமுனா தள்ளி நின்று கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள். 

“ஏய்ய்.. வாடி இங்கே…” 

மீண்டும் விடைபெற்றால் மணிமேகலை வேறு எதையாவது கேட்டு வைப்பாளென்ற பயத்தில் ரூபிணி வாயே திறக்காமல் ஜமுனாவிடம் ஓடினாள். 

“ஏண்டி.. இன்னைக்கு பேக்கு போல நடந்து கொள்கிறாய். சாப்பிட வந்தோம். மாடியிலிருக்கிற ரூமிற்குப் போகிறோம். என்னவோ ஏழு கடல் தாண்டி போகப் போகிறவள் மாதிரி மறதி மணிமேகலையிடம் போய் பிரியா விடை வாங்கிக் கொள்கிறாயே. அது கேட்டு வைத்தது பார் சரியான ஓர் கேள்வி. சில சமயம் மறதி மணிமேகலை கூட புத்திசாலி ஆகி விடுகிறது. உன்னைப் போல புத்திசாலிகள் மண்டூகம் ஆகி விடுகிறார்கள்.” 

“சரி.. சரி.. ஏனிப்படி மண்டகப்படி நடத்துகிறாய்…”

“நீ செய்யும் கேணத்தனமான வேலைகளுக்கு மண் டகப்படி நடத்தாமல் மெச்சிக் கொள்ளனுமா.. உள்ளே வா.. ரூம் கதவை லாக் பண்ணப் போகிறேன்.” 

இனி ஜமுனா கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவாள். எப்படி பதில் சொல்வது? யோசனையுடன் அறை ஜன்னலுக்குப் போய் வானத்தை வெறித்தாள் ரூபிணி.. நட்சத்திரங்கள் கண் சிமிட்ட வானில் நிலவு தன் பவனியைத் தொடங்கியிருந்தது. அவள் உடல் மேல் இரவு நேரக் குளிர் காற்று தொட்டு விளையாடியது. 

மனதில் ஓர் சிலிர்ப்புடன் ஜமுனாவின் கேள்விக் கணைகளை எதிர்பார்த்து நின்றிருந்தவள். அவளிடமிருந்து எந்தவித வார்த்தைகளும் வெளிவராமல் போகவே திரும்பிப் பார்த்தாள். 

கட்டிலில் அமர்ந்து தலையணையை மடியில் வைத்து அதில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு கைகளில் முகம் புதைத்தவளாய் ஜமுனா மௌனமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“என்னடி…?” 

“எதுவும் பேச மாட்டேன்கிற…?” 

“நீ பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்… ” ஜமுனாவின் பார்வை அவளைத் துளைத்தது. ரூபிணி தடுமாறினாள். 

“எதைச் சொல்ல…?” 

“நீ மௌனமாய்… மௌனத்தை ரசிப்பதற்கான காரணத்தைச் சொல்லு.” 

“ஜமுனா..”. 

ரூபிணி உதடு கடித்து தலை குனிந்தாள். ஜமுனாவின் முகம் பார்க்காமல் சொல்லி முடித்தாள். ஜமுனாவின் முகம் மாறியது… இருண்டது. 

“ரூபிணி…” ஜமுனாவின் குரலில் கவலை இருந்தது. “சொல் ஜமுனா…” ரூபிணி கனவில் மிதந்தவளாய் பதில் கூறினாள். 

“இது சாதாரண விசயமல்ல.” 

“எனக்கும் தெரிகிறது.” 

“எனக்கென்னவோ.. நீ நெருப்போடு விளையாடுகிறாய் என்று தோன்றுகிறது.. இது மிகவும் அபாயகரமான விளையாட்டு…” 

ரூபிணியின் முகம் சிந்தனையைக் காட்டியது… மௌனமாய் கட்டிலின் மெத்தையில் கைவிரலால் கோலமிட்டாள். பின் தலை நிமிர்ந்து ஜமுனாவைப் பார்த்துக் கூறினாள். 

“நான் இந்த விளையாட்டை ஆரம்பிக்கவில்லை ஜமுனா… என்னால் ஒரு குடும்பமே பட்டினி கிடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது எப்படி?” 

“அன்றைக்கே நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இது நடந்திருக்குமா? போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுக்காதே என்று எவ்வளவு முறை எடுத்துச் சொன்னேன்? நீ கேட்கவில்லையே…” 

‘தவறு செய்தவனுக்கு தண்டனை வேண்டாமா? அவன் மேலும் மேலும் இது போல தவறுகளைச் செய்யாமல் தடுக்க வேண்டாமா?”

“இப்போதுதான் அவனுக்கு தண்டனை கிடைத்து விட்டதே. இதில் மேலேயும் ஏன் தலையைக் கொடுத்தாய்?” 

“இது அதிகப்படியான தண்டனை ஜமுனா.. அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தாயா? அதைப் பார்த்த பின்னும் அதைப் பட்டினி போட மனம் வருமா? நீயே சொல்..”. 

“அதற்காக… அதற்காக… ரூபிணி எப்படி நீ ஹரிஹரனுடன் போனில் பேசத் துணிந்தாய்? உனக்குப் பயம் என்பதே இல்லையா?” 

“எதற்குப் பயம்? அவரும் மனிதர்தானே…” சொல்லும்போதே அவனை முதன் முதலில் பார்த்தபோது ‘இரும்பு மனிதன்’ என்று தான் எண்ணியது ரூபிணிக்கு நினைவில் வந்தது. 

“என்னடி… இவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாய்? அவரைப் பற்றிய பேச்சு என்ன சொல்கிறது தெரியுமா? அவர் ஒரு ‘தாதா’ என்று சொல்கிறது… அவர் மிகப் பெரிய பணக்காரர். உன்னாலும் என்னாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பணக்காரர். அரசியலில் அதிக அளவு செல்வாக்கு உள்ளவர். கட்சி பேதமில்லாமல்.. இந்தப் பகுதியில் யார் ஜெயிக்கிறார்களோ.. அவர்கள் அனைவரும் அவர் கேட்பதை செய்து கொடுப்பார்கள். அவர் விரல் நுனியில் ஒரு ராஜாங்கமே நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரிடம் போய் விளையாட்டாய் பேசியிருக்கிறாய்…” 

“அது விளையாட்டுப் பேச்சில்லை ஜமுனா…” 

“அவருக்கு அது விளையாட்டாய் தோன்றி விட்டால் என்ன செய்வாய்? வேண்டாம் ரூபிணி… இது போன்ற செயல்களை இனி செய்யாதே. விட்டுவிடு. உன் மேல் அக்கறையிருப்பதால்தான் சொல்கிறேன். இது விபரீத விளையாட்டு.” 

ஜமுனா படுத்து விட்டாள். இயந்திரகதியில் விளக்கை அணைத்து விட்டுப் படுத்த ரூபிணிக்கு தூக்கம் வரவில்லை. 

‘தூங்காத கண்ணென்று ஒன்று.
துடிக்கின்ற சுகமென்று ஒன்று 
தாங்காத மனமென்று ஒன்று 
தந்தாயே நீயென்னைக் கண்டு.’ 

கண்ணதாசனின் திரைப்படப் பாடல் அவளது நெஞ்சினில் ஒலித்தது. ‘துடிக்கின்ற சுகம்..!’ எவ்வளவு சரியான வார்த்தை.. துடிப்பது சுகமாய் அமைவது எப்படி? உணர்ந்தவள் தவித்தாள். துடித்தாள். 

‘நெருப்போடு விளையாடுகிறாய்..!’ 

‘இல்லை ஜமுனா… நான் நெருப்போடு விளையாடவில்லை. அவர் நெருப்பென்று நினைத்து நான் பேசவில்லை.. பேசி முடித்த பின்னால் தான் என் தேகம் சுடுகின்றது. இந்தத் தவிப்பை உனக்கு எப்படிப் புரிய வைப்பேன். சொல்ல முடியாத இந்த சுகமான வேதனையை வார்த்தைகளால் விவரிக்க வழி தெரியாமல் துடிக்கிறேன் ஜமுனா… ‘

ரூபிணி தலையணையில் முகம் புதைத்து தலையை உலுக்கிக் கொண்டாள். புரண்டு படுத்தாள். 

‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா.. நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.’ 

தீயும்.. நீராய் மாறி குளிர்விக்கும் விந்தையான விளையாட்டு இது, ரூபிணியின் இதழ்களில் புன்னகை அரும்பியது. ‘இது உனக்குத் தெரியாது ஜமுனா… அவன் பெயரைச் சொல்லும் போதே நீ பயப்படுகிறாய்… நினைக்கும்போதே என் நெஞ்சம் இனிக்கிறது’. 

வெறும் நினைவு தானே… அவனை நினைக்கக் கூடவா என் மனதிற்குத் தடை…. ? தன் உணர்வுகளுக்கு விடை கிடைத்து விட்ட தெளிவுடன் கண் மூடி உறங்கி விட்டாள் ரூபிணி. 

அடுத்து வந்த நாட்களில் அவனைப் பற்றிய பேச்சையே ரூபிணி எடுக்காததால் ஜமுனா அதை மறந்தே போனாள். 

ரூபிணியின் அலுவலகத்தில் மூர்த்தி என்ற ஒருவன் கோயம்புத்தூரிலிருந்து மாறுதலாகி வந்து சேர்ந்தான் வந்த முதல் நாளே ரூபிணியிடம் வந்து தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். 

”ஐ.. ஆம் மூர்த்தி.. கோவையிலிருந்து வருகிறேன்.”

“ஆபிஸில் சொன்னார்கள்.. என்ன வேண்டும் சார்?”

“நீங்கள் தான் வேண்டும்.” 

“வாட்…?” 

“உங்கள் அறிமுகம்தான் வேண்டும்.”

“எதற்காக…?” 

“ம்ம்… பார்த்த முதல் பார்வையிலேயே வசீகரித்து விட்டீர்கள்.” 

அவனது குரலில் ஓர் மாற்றம் இருந்தது. முன்பின் தெரியாத பெண்ணிடம் இப்படியா பேசுவார்கள்? ரூபிணிக்கு கோபம் வந்தது. 

“கேட்ட முதல் பேச்சிலேயே வெறுக்க வைத்து விட்டீர்கள்.” ரூபிணி பட்டென்று பதில் சொன்னாள். 

மூர்த்தியின் முகம் சுருங்கி விட்டது. தன்னுடைய அழகான தோற்றத்தில் அவனுக்கு கர்வம் உண்டு. தன் தோற்றத்திலும் பேச்சிலும் மயங்காத பெண்கள் இல்லை என்பது அவனது எண்ணம். இதுவரை அவன் வேலை பார்த்த ஊர்களில் அலுவலகத்திலும், வெளியிலும்.. அவனது அழகிலும்.. நளினமான பேச்சிலும் மயங்கிய பெண்கள் ஏராளம். இவள் மட்டும் என்ன பெரிய மேனகையா? இவ வளை மயக்க அவனால் முடியாதா? 

முதல் நாளே சவாலை எடுத்துக் கொண்டான் அவன். அதன் பின் ரூபிணியைக் கவர்வதையே தன் வாழ்க்கையின் லட்சியமாய் நினைத்துக் கொண்டு.. தினமும் அவளிடம் வந்து பேச்சுக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டான். 

“என்னப்பா மூர்த்திக்கு தினமும் உன்னிடம் சந்தேகம் கேட்க வேண்டும் போல் இருக்கிறதே. என்ன விசயம்?” ப்ரீதி வினவினாள். 

“தேவையில்லாமல் என்னைச் சீண்டிப் பார்க்கிறார். அதுதான் விசயம்.. ப்ரீதி.. நான் ஜூனியர்.. வேலையில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட முடியவில்லை. இவர் என்னை விட எட்டு வருடம் சீனியர். இவருக்குத் தெரியாத வேலையா.. எனக்குத் தெரியும்? என்னிடம் பேச்சுக் கொடுக்க இதெல்லாம் ஒரு சாக்கு…” 

“ம்ம்.. வேலைக்கு வந்து விட்டால் இது ஒரு கஷ்டம்.”

“ஜவஹரையும் இந்த ஆளையும் இணை சேர்த்து நினைக்கிறாயா?” 

‘சேச்சே.. ஜவஹர் ஓர் டீசன்ட் மேன்.. என்னிடம் மட்டும்தான் வழிவார். இந்த மூர்த்தி எல்லாப் பெண்களிடமும் வழிவான்.. தான் ஒரு மன்மதன் என்கிற நினைப்பு அவனுக்கு…” 

“அவன் மன்மதனாகவே இருக்கட்டும். அதற்காக அவனிடம் எல்லாப் பெண்களும் மயங்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லையே. எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கவில்லை.” 

“அதனால்தான் உன்னைத் தொல்லை செய்கிறான். நீ அவனுக்கு பெரிய சவால் ஆகிவிட்டாய் போல…” 

“ஏன்… நீ கூடத்தான் அவனுடன் பேச மாட்டாய்.. உன் அலட்சியம் அவனுக்கு ஓர் சவால் இல்லையா?” 

ப்ரீதி அதற்குச் சொன்ன பதில் ரூபிணியின் சிந்தனையைத் தூண்டியது. அது தன் மனதில் பதியும் என்றோ. அதனாலேயே ஜமுனா சொன்ன நெருப்பு விளையாட்டை மீண்டும் ஓர் முறை அவள் விளையாடிப் பார்க்க நேருமென்றோ அவள் அப்போது நினைக்கவேயில்லை. 

– தொடரும்…

– நெஞ்சமடி நெஞ்சம் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 2010, அறிவாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *