நீ எனக்கு மனைவி அல்ல…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 3,074 
 
 

அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது. அந்த நிமிடம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பது தான் என்னுடைய பிரார்த்தனையாக நாள்தோறும் அமைகின்றது.

மகளுக்குக் கோடை விடுமுறை. வழக்கம் போல அம்மா வீட்டிற்கு ஒரு மாதம் சென்றுவிட்டு அன்றுதான் வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கொடுத்தனுப்பிய அரிசி மாவு, ஊறுகாய் , ஒரு வருடத்திற்கான புளி, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். வந்ததிலிருந்து ராம் என்னோடு சரியாகப் பேசவில்லை. ‘என்ன ஆயிற்று உங்களுக்கு. ஊரில் இருந்து வருவதற்கு முன்னால் நாள்தோறும் இரண்டு மூன்று முறை போன் செய்வீங்க. எப்ப வருவாய் என்ற கேள்வியைத் தான் திரும்பத் திரும்பக் கேட்ப்பீர்கள். இப்பொழுது ஊருக்குத் திரும்பி வந்தபின் , உங்கள் முகத்தில் கொஞ்சமும் மகிழ்ச்சியைக் காணவில்லையே. உங்கள் பெண்ணோடு எப்பொழுதும் போல கதை பேசவில்லை. அவளை விளையாட அனுப்பிட்டு நீங்கள் அமைதியாக உட்கார்ந்து இருக்கீங்களே. அம்மா வீட்டில் அதிக நாள் தங்கி விட்டேன் என்று கோபமா?’ உட்கார்ந்திருந்த ராம் மீது சாய்ந்து கொண்டு, அவர் கையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன். அவர் கண் கலங்கியது. அப்படியே என்னை மெதுவாக அணைத்துக் கொண்டார். அவர் உடலில் லேசான நடுக்கம்.

என்னாயிற்று அவருக்கு என்று நினைத்துக் கொண்டே, அவர் கண்ணிலிருந்து கொட்டிய கண்ணீரைத் துடைத்து விட்டேன். ‘தனிமையில் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டீர்கள் போலும். சாரி. இனி மேல் இந்த மாதிரி நிறைய நாள் போய் அம்மா வீடடில் உட்கார்ந்து கொள்ள மாட்டேன். காருண்யாவை மட்டும் அவள் பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றேன். லீவு முடிந்தவுடன் நீங்களும் நானும் போய் இரண்டு நாட்கள் இருந்து, அம்மாவையும் திருப்திபடுத்திவிட்டு காருண்யாவைக் கூட்டிக்கொண்டு வந்துவிடலாம்’.

பதில் பேசாத ராம், என் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மெதுவாக எழுந்தார்.

பீரோவைத் திறந்து மேலாக வைத்திருந்த ஒரு பைலை எடுத்து வந்து என்னிடம் நீட்டினார். அதை வாங்கிப் பார்த்த நான், ‘என்ன இது மெடிக்கல் பைல் போல இருக்கிறது’ என்று கூறிக்கொண்டே மேலோட்டமாகப் பிடித்தேன் . அந்த பைலின் முதல் பக்கத்தில் ராம் என்ற பெயரைப் பார்த்தவுடன் மனது அதிர்ந்தது. கேள்விக்குறியுடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன். பைலை வேக வேகமாகப் புரட்டினேன். ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட், ஸ்கேன் ரிப்போர்ட், மருந்து சீட்டு இப்படி அடுக்கடுக்காகத் தாள்கள். ‘என்னங்க ஆச்சு. நான் ஊருக்குப் போகும் போது நன்றாகத் தானே இருந்தீர்கள் . நான் திரும்பி வருவதற்குள் இத்தனை டெஸ்டா? எழுந்து வந்து அவர் கையைப். பிடித்துக் கொண்டேன்.

மாயா, மெதுவாக அதைப் படித்துப் பார் என்று கூறிவிட்டு நகர்ந்தார்

மனது அதிர்ந்தது. மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் படித்துப் பார்த்தபின் அவருக்கு வந்த நோய் கேன்சர் என்பதைப் புரிந்து கொண்டேன். லங் கேன்சர்… நுரையீரல் புற்றுநோய்.. அப்படியே அதிர்ந்து விட்டேன். வானம் இடிந்து தலையில் விழுந்து விட்டது போல் துடித்து விட்டேன். அந்த நொடி யாருக்கும் வரக்கூடாது. ஓடிச்சென்று அடுத்த அறையில் இருந்தவர் கையைப் பிடித்துக் கொண்டு அழுதேன். ‘எப்படி . இது எப்படி.. ‘ என்று புலம்பினேன்.

மாயா, நீ கலங்கி விடாதே. உன் நம்பிக்கை தான் எனக்கு வாழ்வு தரும். டாக்டர், இது முதல் ஸ்டேஜ் தான் என்று சொல்லியிருக்கிறார்; குணப்படுத்தி விடலாம் என்று உறுதி அளித்திருக்கிறார். நீ அமைதியாக இருந்தால் தான் எனக்கு நிம்மதி. ப்ளீஸ் மாயா.. புரிந்துகொள்.. இப்போதைக்கு இதை உன் அம்மாவிடமும் பிற உறவுகளிடமும் சொல்ல வேண்டாம். என்ன… என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை. நேராக சாமி அறைக்குச் சென்றேன். அப்படியே தரையில் விழுந்து “எங்களுக்கு ஏன் இந்த சோதனை… நாங்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தரவில்லையே எங்களுக்காக இந்தக் கொடுமை” என்ற அரற்ற தொடங்கினேன்.

ஓடிவந்து என்னைத் தூக்கி அணைத்துக் கொண்ட ராம், ‘மாயா, ப்ளீஸ் கலங்காதே. எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. புரிந்து கொள். உன் வருத்தத்தை நம் பெண் காருண்யாவிடம் காட்டி விடாதே. அவளுக்குப் புரிந்து கொள்கின்ற வயது இல்லாவிட்டாலும் உன் அழுகையைப் பார்த்து துடித்துவிடுவாள். ப்ளீஸ் மாயா. உன்னிடம் பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். அதுதான் என்னை வாழ்விக்கும். உன்னையும் நிம்மதியாக வாழ விடும். நானும் ரிப்போர்ட்டைப் பார்த்து முதலில் அதிர்ந்துவிட்டேன். டாக்டரிடம் கதறினேன். அவர் தான் என்னைச் சமாதானம் செய்தார். “கலங்காதே ராம். உனக்கு இது ரொம்ப தொடக்க நிலை தான். சரியாக நீ என்னோடு ஒத்துழைத்து, சிகிச்சையை முறைப்படி எடுத்துக்கொண்டால் சரி செய்து விடலாம். என்ன கொஞ்சம் நீண்டகால ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும். கவலைப்படாதே. உன் மனதில் நேர்மறையான எண்ண அலைகள் இருந்தால் தான் என்னுடைய சிகிச்சையில் உனக்குப் பலன் இருக்கும். புரிந்து கொள் என்றார். நானும் கூகுளில் பிரவுஸ் பண்ணி நோயைப் பற்றி அறிந்து கொண்டேன். மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். எதையும் எதிர்நோக்க தயாராக இருக்க வேண்டும். பணத்தை ரெடி செய்து கொண்டு, சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். இது தான் இனிமேல் நாம் செய்யவேண்டியது. அழுது அரற்றி புண்ணியமில்லை புரிந்து கொள்’ என்றார்.

வீட்டுக்கு அருகில் இருந்த காலி மனையை விற்க ஏற்பாடு செய்தோம். பணத்தை அட்வான்ஸ் வாங்கியதும் கீமோ தெரபி கொடுக்க தொடங்கி விட்டோம். அவர் வேலைக்கு லீவு சொல்லி விட்டார். மூன்று மாதம் லீவு பின்னரும் தொடர்ந்தது. மூன்று கீமோ முடித்தாகிவிட்டது. ராம் அதைத் தாங்க முடியாமல் தவித்தார். மிக மெலிந்து விட்டார். கீமோ கொடுத்துவிட்டு வந்தவுடன், நடக்கமுடியாமல் , ஒரு நாள் சிறு குழந்தை போல தவழத் தொடங்கிவிட்டார். ரொம்ப நாளைக்குப் பின் அன்றைக்கு தான் வீட்டில் சமையலைத் தொடங்கியிருந்தேன். அறையிலிருந்த அவர், பாத்ரூம் போவதற்கு நடந்து வர இயலாமல் தவழத் தொடங்கி விட்டார். அப்பாவுடன் இருந்த காருண்யா ‘அம்மா அப்பாவைப் பாருமா’ என்று கத்த தொடங்கி விட்டாள். சத்தம் கேட்டு ஓடி வந்த நான், தவழ்ந்து வரும் அவரைப் பார்த்து விக்கித்து நின்றேன். கையைப் பிடித்துத் தூக்கி, அவரை பாத்ரூம் நடத்திச் சென்றேன். நாளும் பொழுதும் யாருக்காகவும் நிற்கவில்லை. இரண்டு மாதத்திற்குப் பின் ராம் கொஞ்சம் தேறிய பின் அலுவலகம் செல்லத் தொடங்கினார். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. காருண்யாவிற்கு வேண்டியதைச் செய்து தரவும் அவளுக்குப் பாடம் சொல்லி கொடுத்துக் கவனிக்கவும் இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.

ராம், நாள் தவறாமல் மருந்து எடுத்துக் கொண்டிருந்தார். மாதம் ஒருமுறை செக்கப் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்துத் திரும்பவும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றோம். ராமைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு செகண்டரி ஸ்டேஜ் தொடங்கிவிட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் சிகிச்சை கொடுத்து முயற்சித்துப் பார்க்கலாம் என்று ஒரு சிறு நம்பிக்கை கொடுத்தார். இந்த முறை அவரால் கீமோவைச் சிறிதும் தாங்க இயலவில்லை. சிகிச்சையால் தலையில் முடி இல்லாமல் வழுக்கையாகக் காட்சி தந்தார். உடல் மேலும் மெலிந்தது. அவரைப் பார்த்த புதியவர்கள் ,என்னிடம், ‘உங்கள் அப்பாவிற்கு எப்படி இருக்கிறது?’ என்று கேட்கும் அளவிற்கு அவருடைய உருவம் மாறி விட்டது. காருண்யா அவள் அப்பாவிடம் வரவே பயப்பட்டாள். அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டி இருப்பதால் வேறு வழியில்லாது காருண்யாவைப் பள்ளிக்கூட விடுதியில் சேர்த்தேன். என் நேரத்தையும் பொழுதையும் ராமின் அருகிலேயே கழித்தேன். இந்த முறை அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அவசரமாகச் செல்ல வேண்டியதாயிற்று. போனவுடன் அவர் இருந்த நிலையைப் பார்த்து ஐசியூவில் அட்மிஷன் போட்டார்கள் . உடனடியாக ரத்தம் தேவை என்றார்கள் . அதுவும் உடனடியாக ரத்தம் எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு வரவேண்டும் என்றார்கள். அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் ரத்ததானம் செய்பவாரகளை அழைத்து வந்து ரத்தம் சேகரித்துக் கொண்டு வருவது என் பொறுப்பு ஆயிற்று. இந்த முறை பக்கத்துப் படுக்கையில் ஒரு இளம் தம்பதியர் இருந்தனர்.அவள் தன் கணவருக்கு ரத்த புற்றுநோய் என்று கூறினாள். அவர்கள் திருச்சியிலிருந்து சென்னை வந்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கைக் குழந்தையைத் தன் அக்கா வீட்டில் விட்டு வந்ததாக அப்பெண் கூறினாள். திருமணமாகி மூன்று வருடங்கள் தான் ஆகியிருக்கிறது. அவள் நிலைமை என் நிலைமையை விட மிக மோசமாக இருந்தது.

அவள் கணவருக்கும் ரத்தம் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொன்னவுடன், அந்தப் பெண் இந்த ஊரில் எனக்கு யாரையும் தெரியாது. எங்கு சென்று புதிய ரத்தத்தைப் பெறுவது என்று புலம்பினாள். ராமு என்னை அருகில் அழைத்தார்.’ நான் இப்பொழுது ஓரளவு பரவாயில்லை. நீ அந்தப் பெண்ணுக்கு உதவி செய். நீ அந்த பெண்ணோடு சென்று ரத்தம் வாங்கி வா. நான் ஐ சி யு வில் தானே இருக்கிறேன். அதனால் நீ, என் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தப் பெண்ணிற்கு உதவி செய். பாவம் தனியாகத் தவிக்கிறாள்’ என்றார். அவரை விட்டு ஒரு நிமிடம் கூட ஆகல விரும்பாத நான், வேறு வழியில்லாது அப்பெண்ணுடன் சென்று வந்தேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. திரும்ப வந்து அவரைப் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது.

அடுத்த முறை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த பொழுது டாக்டர் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார். ‘அம்மா, என்னால் முடிந்ததெல்லாம் செய்துவிட்டேன். ஆனால் அவர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு இருக்கிறது. முடிந்த அளவு நீங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அவரது இறுதிகாலம் நிம்மதியானதாக இருக்கட்டும்’ என்றார். அதைச் சொல்லும்போது அவர் என் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை. மனதைக் கல்லாக்கி கொண்டு, வேறு வழியில்லாது என்னிடம் பேசியதைப் புரிந்து கொண்டேன். எனக்கும் அது சரியாகவே பட்டது. சென்ற முறை மருத்துவமனைக்கு வந்த போது, அந்த திருச்சி பெண் அழுது அரற்றிக் கொண்டிருந்தாள். அவளை, அவள் அக்கா தேற்றிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்தவர், அப்பெண்ணின் கணவர் இறந்து விட்டதாகக் கூறினார். என் மனது அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ந்தது. ‘ராம் அதைக் கேட்டு விடக்கூடாது’ என்று நினைத்து, அந்தப் பெண்ணைக் கூடப் பார்க்காது, ரத்தப் பரிசோதனைக்குச் சென்று வந்த ராமை வீல்சேரில் வைத்து, காருக்கு அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டேன். எனக்குள் இருந்த கலவரத்தை அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை. ‘டாக்டர் என்ன சொன்னார்’ என்று ராம் கேட்டபொழுது, ‘உங்களுக்குக் கொஞ்சம் பரவாயில்லை என்று கூறினார். இனி அடிக்கடி மருத்துவமனைக்கு வரத் தேவையில்லை. வீட்டிலேயே நர்ஸ் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். ரொம்ப தேவை என்றால் என்னைக் கூப்பிட்டுங்கள். நானே வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்’ என்று கூறினார்.

‘பார்த்தாயா மாயா. டாக்டர் ரொம்ப நல்லவர். என் மீது அவருக்கு ரொம்ப பிரியம். அதனால் தான் வீட்டிற்கே வருகிறேன் என்கிறார்’ என்று குழந்தையாகப் பேசினார். நானும் அதற்கு ‘ஆமாம்’ போட்டேன். வாய் விட்டு அழுவதற்கு கூட ராமின் முன்னால் முடியாது.

ஒவ்வொரு நாளும் பொழுதும் ஒரு யுகமாகக் கடந்தது. அன்று காலை அவரால் பேசக் கூட இயலவில்லை. என்னை ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து வர ஜாடை காட்டினார். அவற்றைக் கொடுத்தவுடன் எழுதத் தொடங்கினார். கை நடுங்கியது. மிகவும் கஷ்டப்பட்டு எழுதினார்.

அவர் அதை என்னிடம் நீட்டிய பொழுது, அவர் கண்ணீர் அந்தத் தாளில் விழுந்து சிதறியது. அதைப் படிக்க முயற்சித்தபோது, என் கண்ணில் நீர் தாரை தாரையாக வடிந்து பார்வையை மறைத்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டே படித்தேன். ‘மாயா! நீ எனக்கு மனைவி அல்ல. நீ என்னுடைய தாய். இன்னொரு பிறவி எடுத்தால், உனக்கு நான் குழந்தையாகப் பிறக்க வேண்டும். உன் மடியில் தவழ வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அவருடைய மனைவி சாரதா தேவி தாயாகக் காட்சியளித்தது போல், நீ எனக்குத் தாயாகக் காட்சியளிகிறாய். உன்னிடமிருந்தும் குழந்தையிடமிருந்தும் விரைவில் விடை பெற்று விடுவேன். எனக்குத் தெரியும். நீ காருண்யாவை நன்கு பார்த்துக் கொள்வாய் என்று. அந்த நிம்மதி என்னை அமைதியாக எடுத்துச் செல்லும். எதை நினைத்தும் வருந்தாதே. வாழ்க்கை இதுதான். அதன் போக்கில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக நீ விதவைக்கோலம் கொள்ளக் கூடாது. இப்பொழுது இருப்பது போலவே நீ இருந்து காருண்யாவைக் கவனித்துக் கொள். என் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் தந்துள்ளேன். உனக்கு நிச்சயமாக என் அலுவலகத்தில் வேலை கிடைத்துவிடும். நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தும்மா’ என்று எழுதியிருந்தார். அன்று இரவே அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

அவரின் நிழலாக இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆம்… காருண்யாவிற்காக வாழந்து தான் ஆக வேண்டும். அன்று அவருக்குத் தாயாகக் காட்சியளித்த நான், இன்று காருண்யாவிற்குத் தாயும் தந்தையுமாக அர்த்தநாரீஸ்வரராக விளங்குகின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *