நீர்த்தாரைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2012
பார்வையிட்டோர்: 11,507 
 
 

அந்த செருப்புக்கடை கண்ணாடி சட்டங்கள் எல்லாம் போட்டு பளபளவென்று இருந்தது. செருப்புக்கடையில் குமாரின் அப்பா தான் இருந்தார். சுப்பிரமணியின் அப்பாவையும், சுப்பிரமணியையும் பார்த்தவர், வாங்க, வாங்க! என்றார். குமாரின் அப்பா டிரைவர் வேலை தானே பார்த்தார். செருப்புக்கடையும் வச்சிருக்காரே என்று தோன்றியது குமாருக்கு.

‘நம்ம பயலுக்கு செருப்பு வாங்க வந்தேன், நல்ல விலை அதிகமா அழகான செருப்பா எடுத்துக் கொடுங்க! போட்டு நடக்கும் போது பய, ராசா மாதிரி இருக்கணும்!’

“எடுத்துடுவோம்! இப்போ தான் பர்மால இருந்து வந்திருக்கு இந்த செருப்பு! பாருங்க! சும்மா மெத்து மெத்துண்ணு இருக்கும்!”

சிவப்புக்கலரில், பூக்கள் படம் போட்டிருந்த செருப்பை, ஒரு டப்பாவில் இருந்து பிரித்து போட்டார். நைலான் வார் வைத்து செருப்பு பளபளவென்று இருந்தது. சுப்பிரமணிக்கு பொறுக்கமுடியவில்லை. வேகவேகமாய், காலை கீழே போட்டிருந்த செருப்புக்குள் நுழைத்தான். அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

“அப்பா! இதையே வாங்கிக்கலாம்பா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” என்றான்

‘இதே வாங்கிக்கலாம், ஆனா வளர்ற பய, கொஞ்சம் பெருசா எடுத்துப் போடுங்க!’ என்றார்

“செஞ்சுடுவோம்!” என்று அவர் எடுத்து வந்த செருப்பு, அவன் அப்பா போடுவது போல பெரிதாக இருந்தது.

அப்போது குமார் ஒரு கதவைத் திறந்து கொண்டு கடைக்குள் இருந்து வெளியே வந்தான். அவன் காலிலும் அதே போல பெரிய செருப்பு இருந்தது. சுப்பிரமணி இப்போது வேகமாய் அவனுக்குக் கொடுத்த பெரிய செருப்பை எடுத்துக் கொண்டு, நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அதன் பின்னால், மோதிர வாரை பிடித்தபடி ஒரு கம்பி கட்டியிருந்தது. செருப்புக்கு அவனுடைய அப்பா காசு கொடுக்கும் போது, கடைக்குள் இருந்து ரயில் ஒன்று ‘கூ’வென சத்தமிட்டுக் கொண்டே வந்தது. அதைக் சுப்பிரமணியின் அம்மா தான் ஓட்டி வந்தாள். இடுப்பில் தம்பிப்பாப்பா இருப்பதைப் பார்த்தான்.

திடீரென்று முழிப்பு வந்துவிட்டது. சுப்பிரமணியபுரம் ரயில்வே கிராஸில் ரயில் ‘கூ’வெனக் கத்திக் கொண்டே ஓடுவது கேட்டது. எழுந்ததுமே, செருப்பு இருக்கிறதா என்று நார்க்கட்டிலில் இருந்து இறங்கித் தேடினான். செருப்பைக் காணோம். அப்பா, சேந்தியில வைத்திருப்பாரோ என்று யோசித்தவன், நார்க்கட்டிலில் படுத்திருந்த அப்பாவை எழுப்பினான்.

“அப்பா! அப்பா!” என்று உசுப்பத் தொடங்கியதும், முனகிக் கொண்டே எழுந்தார் சுப்பிரமணியின் அப்பா.

‘என்னய்யா, இந்த நேரத்துல உசுப்புற? அப்பாவுக்கு அசதியா இருக்குய்யா!’

“அப்பா நேத்து நீ வாங்கிக் கொடுத்த செருப்பக் காணோம்பா!”

‘நேத்து எங்கய்யா வாங்குனோம், இன்னைக்குத் தானே கூட்டிப்போறேன்னு சொன்னேன்? கெனாக்கண்டியா?’ திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணி.

‘படுத்துத் தூங்குயா, இன்னைக்கு வாங்கிடலாம், சரியா?’

“சே!” என்று அலுத்துக் கொண்டே திரும்பவும் அப்பாவுக்கு அருகில் படுத்துக் கொண்டு, அவரின் மார்பில் ஒட்டிக் கொண்டான். அப்பாவின் மேல் இருந்த வாசனை அவனுக்கு ரொம்பப் பிடித்தது.

அப்பா சொன்னால், சொன்னதை செய்து விடுவார். அம்மா தான் பொய்க்கோளி, எப்பவுமே சொல்வதை செய்ய மாட்டாள். கேட்கும்போதெல்லாம் அப்பாவைத்தான் குறை சொல்வாள். அதனால் சுப்பிரமணிக்கு அம்மாவை இப்போதெல்லாம் பிடிப்பதே இல்லை. அவன் தூங்குவதும் இனி அப்பாவுடன் என்றாகிவிட்டது. முதல் நாள் காலையில் எழுந்தவுடன், அவனை அவர் தான் குளிப்பாட்டினார். குளிக்கும் போதே அவன், அப்பாவுடன் கொஞ்சி, கொஞ்சி பேசிக் கொண்டிருந்தான்.

“அப்பா!, எஞ்செருப்பு அந்து போச்சுப்பா? நேத்து மாணிக்கண்ணே கடைக்கிட்ட வரும்போது சகதில மாட்டிக்கிச்சு, இளுத்து பாத்தேனா, அந்துக்கிச்சு!”

‘வேற செருப்பு வாங்கிடலாம், தீபாவளி வருதுல்ல, அப்போ, அப்பா ஒன்னைய டவுன் ஹால் ரோடுக்கு கூட்டிட்டுப் போயி, புதுச்செருப்பு வாங்கித்தரேன் போதுமா!’

“நேத்து பள்ளியோடம் விட்டு வர்றயிலே, அந்து போச்சுப்பா, அம்மா ஏன்டா செருப்பு பிச்சன்னு அடிச்சுச்சுப்பா!” என்று லேசாய் விசும்பினான்.

‘அவ கிடக்கா மடக்கழுத! நீ அழுவாத, நான் வாங்கித்தாரேன் எந்துரைக்கு!’

“எனக்கு அம்மாவ பிடிக்கவே இல்லப்பா! எனக்கு ஒன்னைய தான் ரொம்ப பிடிக்கும்!”

‘அப்படி சொல்லக்கூடாது தங்கம், நம்மம்மா பாவம்ல, அவளுக்கு யாரிருக்கா?’

“அம்மாவுக்குத் தான் தம்பிபாப்பா இருக்குல!”

‘நீயுந்தான் பாப்பா அம்மாவுக்கு! ரெண்டு குட்டிங்களுமே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்பவும் வேணும்ல, இனிமே அப்படி சொல்லக்கூடாது சுப்புக்குட்டி!’ என்று சொல்லும் போதே, அவனுடைய அப்பா சோப்பை வயிற்றில் தேய்க்க, வளைந்து நெளிந்து சிரித்தான்.

“நான் குட்டி இல்லப்பா, நான் பெருசு, தம்பி பாப்பா தான் குட்டி! உனக்கு ஒண்ணுமே தெரில!”

குனிந்து அவனுடைய பாதத்தில் சோப்பு போட்டுக் கொண்டிருந்தவரை, தாடையைப் பிடித்து, நிமிர்த்தி,

“அப்பா, என்னயப் பாரேன்!” என்றான்.

‘என்னய்யா?’

“குமாரு அவங்கப்பா, அவனுக்கு போன மாசம் புது சூ வாங்கி தந்திருக்காருப்பா, இவ்வளோ பெருசு!” என்று கையை விரித்துக் காட்டினான். கையில் இருந்த சோப்பு நுரையில் ஒட்டிக் கொண்டு இரண்டு கைகளுக்கும் இடையில் பாலம் கட்டியது சோப்பு நுரை. அதைப்பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. குமாரின் சூ வை விட்டு, இப்போது அவனுடைய அப்பாவை சோப்புக்குமிழைப் பார்க்கச் சொன்னான். நிமிர்ந்து பார்த்தார்.

‘பாரு, சோப்பு முட்டைக்குள்ள கலர்கலரா தெரியுது பாரு, ஒம்மூஞ்சி கூட தெரியுது பாரு!’

“எங்க, எங்க?” அவன் பார்ப்பதற்குள்ளாகவே அது உடைந்தது. லேசாய் காலை உதைத்து அழ ஆரம்பித்தான். காலை உதைத்ததில், கினத்துமேட்டில் இருந்த தண்ணீர் சலப் சலப் என்று தெறித்தது.

‘ஆடாதய்யா, பாரு அப்பா மேலெல்லாம் தண்ணீ தெறிக்குது!, கண்ணை மூடு, மூஞ்சிக்கு சோப்பு போடலாம்’

அவன் கண்ணை மூடிக்கொள்ள, அரக்கி சோப்பை அவன் முகத்தில் தேய்த்தார். தேய்த்துக் கொண்டே, மூக்கில் விரலை வைத்து, சீந்தச் சொன்னார்.

‘ம்ஹூ சொல்லு!’ அவர் அவன் மூக்கை சீந்தும் போது, க்கே என்று கத்தினான்.

‘அவ்ள தான் அவ்ள தான், மூக்கச் சீந்தலேன்னா, அசிங்கமா வடவடன்னு இருக்கும்ல! உம்மூஞ்சக் கழுவி அம்மா ரசம் வச்சுடுவா, உடம்ப எப்பவும் சுத்தமா வச்சுக்க வேணாமா!’

“ம்! அப்பா எனக்கு ஐஞ்சு, ஆறு நாளு லீவுப்பா!” என்று மூன்று விரல்களைக் காட்டியவன், பலமாய் தலையசைச்சு, இன்னும் ஒரு விரலை விடுவித்தான்.

‘அட்ரா சக்கே ன்னானா! ஆறு நாளு லீவா, நானும் ஒன் பள்ளியோடத்துக்கே படிக்க வந்துடவா?

“ப்போப்பா…! எங்க பள்ளியோடத்துல சின்ன பையனுங்க தான் படிக்கிறாய்ங்க! ஒன்ன மாதிரி மீசை வச்சிருந்தா அங்க சேக்க மாட்டாங்க!” வாயில் வழிகிற தண்ணீரும், எச்சிலும் கலந்து தெறித்தபடி பேசினான்.

அவன் பள்ளிக்கூடத்தில், தீபாவளிக்கு இப்போதே லீவு விட்டு விட்டார்கள். இது போல காம்பவுண்டில் இருக்கும் எல்லாக்குழந்தைகளுக்கு லீவு ஆரம்பித்து விடும். தீபாவளி முடிந்து பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கும் வரை காம்பவுண்ட்டே ஏக களேபரத்துடன் இருக்கும். எல்லாக்குழந்தைகளும் மொட்டைமாடிக்கு போய் விளையாடுவார்கள். அவர்கள் அங்கே குதிப்பது, வீட்டுக்காரக் கிழவிக்கு தலையில் குதிப்பது போலிருக்கும். ஒரு கம்பை எடுத்துக் கொண்டு, மாடிக்குச் சென்று குழந்தைகளை விரட்டிப் பிடிக்க முயல்வதும் அவர்கள் அவளை ஏய்ப்பதும் விடுமுறைக் காலங்களில் வாடிக்கையான ஒரு விஷயம். குழந்தைகளின் தகப்பன்கள் வரும்வரைக் காத்திருந்து, அவர்களின் குழந்தைகள் செய்த சேட்டைகளையெல்லாம் பட்டியல் போடுவாள். கூடவே, அவரவர்களின் சம்சாரங்களும் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கெடுப்பதாய் ஒரு புகாரும் இருக்கும்.

சுப்பிரமணியின் அப்பாவுக்குத் தெரியும். அம்மாதான் சுப்புவைக் கண்டித்து வளர்ப்பதும், இவர் உருவி உருவி செல்லம் கொடுப்பதும். பேறுகாலத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும், உதவிக்கு ஆளில்லாமல் அல்லாடும் தன் மனைவியை பார்க்கையில் அவருக்கு வருத்தமாய் இருக்கும். குழந்தையை கவனிப்பதிலும் தான் பெரிதாய் அவளுக்கு உதவமுடியவில்லை என்பதை நினைக்கும் போது, மனைவியின் மீது பிரியம் அதிகமாகிவிடும்.

சுப்பிரமணிக்கு இப்போது ஆறு வயதாகிறது. பக்கத்தில் இருக்கும் சகாயமாதா ஆரம்பப் பள்ளியில் படிக்கிறான். காம்பவுண்டில் இருக்கும் அனேக குழந்தைகள் அதே பள்ளியில் படிப்பதால், பள்ளி சென்று விடுவதிலோ, அழைத்து வருவதிலோ, சுப்பிரமணியின் அப்பா, அம்மாவிற்கு சிரமம் இருப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில் இருக்கும், அமுதா தான் எல்லோரையும் பள்ளிக்கு போகவர பார்த்துக் கொள்கிறாள். அவளால் முடியாத பட்சத்தில், அடுத்த கிளாஸில் இருக்கும் ராணி பொறுப்பை எடுத்துக் கொள்வாள். இது போன்ற காம்பவுண்ட்களில் ஒரு பெரிய வசதி இது. அமுதா எப்படியாவது டீச்சராகிவிட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவள். மற்ற குழந்தைகளை மேய்ப்பதிலும், அவர்களை பார்த்துக்கொள்வதிலும் அவளுடைய டீச்சராகும் முனைப்பு நன்றாகவே தெரியும். அவள் காட்டூரணியில் இருந்து அத்தை வீட்டுக்கு படிக்க என்று வந்த போது, சுப்பிரமணி அவளிடம் அப்படியே ஒட்டிக் கொண்டான். அவளுக்கு சுப்பிரமணியை பிடித்துவிட்டது. அக்கா, அக்கா என்று அவள் பின்னாடியே திரிவான்.

புதுச்செருப்பு கிடைக்கப்போகிறது என்று நினைத்த போதே அவனுக்கு அத்தனை சந்தோஷமாய் இருந்தது. இதை அமுதா அக்காவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அப்பா, மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிட்டு, மாலையில் திரும்ப வேலைக்குப் போகும்போது, அவனையும் அழைத்துச் செல்வதாய் சொல்லி இருக்கிறார். அப்போது தான் செருப்பு வாங்கித்தருவார். அவனுக்கு செருப்பு வாங்கும் சந்தோஷத்துடன், இன்னொரு சந்தோஷமும் சேர்ந்து கொண்டது. அப்பாவுடன் சாயங்காலம் அவர் வேலை செய்யும் இடத்துக்கு செல்லும் போது, மாரிமுத்து அண்ணன் இருந்தால், அவனுக்கு ரோஸ்மில்க் இல்லாட்டி ஜிகர்தண்டா வாங்கித்தருவார். சுப்பிரமணிக்கு ஜிகர்தண்டாவை விட ரோஸ்மில்க் தான் பிடிக்கும். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு துடித்தது.

அப்பா வேலைக்குப் போனபிறகு, காம்பவுண்டில் இருந்த எல்லாக் குழந்தைகளிடமும், அவனுடைய அப்பா அவனுக்கு புது செருப்பு வாங்கிக் கொடுக்கப்போவதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களும், தங்களுக்கு தீபாவளிக்கு வரப்போகும், ஜிமிக்கி, ஸ்டிக்கர் பொட்டு, பட்டுப்பாவாடை என்று தத்தமது கனவுகளை விரித்துக் கொண்டிருந்தார்கள். குமாருக்கு மட்டும் அவன், சுப்பிரமணியைப் பார்த்த போது பொறாமையாய் இருந்தது. அவனுடைய ‘சூ’ இப்போ கொஞ்சம் பழசாகிவிட்டது என்று அவனுக்கு வருத்தமாய் இருந்தது. அமுதா அவன் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்

சுப்பிரமணியின் அம்மா, அமுதாவிடம் பிரியமாய் இருப்பாள், சுப்பிரமணி பார்ப்பதற்கு அவனுடைய அம்மாவைப்போலவே இருப்பான். ஏதாவது பலகாரம் செய்தால், அமுதாவுக்கு தவறாமல் கொடுப்பாள். பதிலாய் அவளும், சுப்பிரமணியின் அம்மாவுக்கு சிறு சிறு உதவிகள் செய்வாள்.

புதிதாய் வாங்கப்போகும் பொருட்களைப் பற்றி கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அடுத்து தீபாவளிக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆளுக்காள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சுப்பிரமணிக்கு தீபாவளிக் கதை என்றால், ரொம்ப பிடிக்கும்.

தீபாவளிக்கு முதல் நாள் எல்லோரும் மொட்டை மாடிக்கு வந்துவிடுவார்கள். வந்து வானத்தில் வரும் ராக்கெட்டுகளை எண்ண வேண்டும். அது தான் அவர்களுக்கு விளையாட்டு, யார் அதிகம் எண்ணுகிறார்களோ, அவர்களுக்கு தோற்றவர்கள், 5 சீனிவெடிகள் தரவேண்டும். போன தீபாவளியின் போது, சுசீலா தான் ஜெயித்தாள். இந்த வருஷம், சுப்பிரமணி தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதுவும் புதுச் செருப்பு போட்டால், உயரமாகிவிடலாம், அப்போ வானத்தில் நிறைய ராக்கெட்டுகளை பார்க்க முடியும் என்று தோன்றியது.

‘சுப்பு, உங்கம்மா கூப்பிடுற மாதிரி இருக்கு! கீழ போய் பார்த்துட்டு வா!’ என்றாள் அமுதா.

“போக்கா, நாம்ப்போல எனக்குக் கேக்கல!”

‘இங்க பாரு! கேக்குதா?’ என்று சத்தம் வந்த திசையைப் பார்த்து அவனைத் திருப்பினாள் அமுதா. அங்கிருந்து எழுந்து, மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவரில் எக்கி குனிந்து கீழே பார்த்தாள்.

‘அத்தை, சுப்பு இங்க தான் இருக்கான்!’ என்றாள்

“அக்கா நாம்போலை, ஒங்கூட தான் இருப்பேன், நான் போய்ட்டா, என்ன விட்டுட்டு நீங்கெல்லாம் கத பேசுவீங்க!”

‘இல்லை, நாங்க யாரும் பேசமாட்டோம், நீ வந்த பெறகே பேசலாம்!’ என்றாள்

சுப்பிரமணியின் அம்மாவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. அமுதா அவனையும் அழைத்துக் கொண்டு, மற்றவர்களிடம் சாயந்திரம் விளையாடலாம் என்று சொல்லிவிட்டு, கீழே இறங்கினாள். சுப்பிரமணி அவள் பாவாடையைப் பிடித்தபடியே உடன் இறங்கினான். கீழே வந்ததும் இருவரும் பார்த்தபோது, அடுப்படியில் தம்பிப்பாப்பாவை வைத்துக் கொண்டே, அடுப்பில் விறகைத் தள்ளிக் கொண்டிருந்தாள் சுப்பிரமணியின் அம்மா.

‘ஏன்டா தொண்டத்தண்ணி வத்றாப்ல, கத்திக்கிட்டு கிடக்கென், உனக்கு காது கேக்கலயா? லீவு விட்டதுமாச்சு, என் உசுர வாங்குறதுமாச்சு!’ என்றாள்.

‘இல்லத்தை, மச்சுல தான் இருந்தோம், அதான் கேக்கலை!’ என்று அவனுக்கு ஆதரவாய்ப் பேசினாள் அமுதா.

“அவனுக்கு நீ வக்காலத்தா, சரி போய் ரெண்டு தேங்காச்சில்லு வாங்கியாந்துரு!” என்று அவனிடம் சில்லறையைக் கொடுத்தாள்.

“‘நாம்போ மாட்டேன், ஓயாமக்கடைக்குப் போகச்சொல்லிட்டே இருக்க!”

‘சொன்ன பேச்சக்கேக்கலேன்னா, சாப்பாடும் கிடைக்காது ஒரு மயிருங்கிடைக்காது, அப்பாவ செருப்பு வாங்கித் தர வேணாம்னு சொல்லிடுவேன்!’

‘அத்தை, நாம்போயி வாங்கியாரேன்!’ என்றாள் அமுதா

“நீ ஏம்போவணும், உனக்கா வடிச்சுக் கொட்டுறேன், அவம்போட்டும், நீ போனா, உங்க கெழவி பிடிச்சு என்னக்கத்தும், சமஞ்ச குமரியக் கடைக்கு அனுப்புறவ!’ ன்னு

‘இந்தாப் பிடி!’ என்று அவன் கையில் காசைத் தினித்துவிட்டு, அழுகிற தம்பிப்பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே போனாள். ‘அழுவாத ராசா, இந்தாப்பாலைக்குடி!’ என்று அவன் அம்மா சொல்வது அவனுக்குக் கேட்டது. நிமிர்ந்து, அமுதாவைப் பார்த்து முழித்தான். கண்கள் கலங்கியிருந்தது அவனுக்கு.

‘வா, வா நம்ம ரெண்டு பேரும் பொயிட்டு வந்துடலாம், அம்மாட்ட சொல்லாத!’ என்று கீழ்க்குரலில் சொல்லி அவனை இழுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.

தேங்காய்ச்சில்லைக் கொண்டு வந்து அம்மாவிடம் நீட்டினான். அமுதாக்காவின் பெரியத்தை ஏதோ வேலை கொடுக்க, அவள் அங்கே போய் விட்டாள்.

‘அங்கன வை, எம் மூஞ்சி முன்னாடி வந்து நீட்டுற, நாந்தான் தம்பிப்பாப்பாவை தூங்க வச்சுட்டு இருக்கேன்ல, தெரியல உனக்கு? வச்சுட்டு எங்கியும் போயிராத, சட்னி அரச்சுடுறேன், தோச சாப்ட்ட பெறகு போ வெள்ளாட!’ என்று தொட்டிலை பிரித்து, தம்பிப்பாப்பாவை பார்த்து, ‘தூங்குடா செல்லம், அம்மாவுக்கு வேலை இருக்குல்ல? இங்க வா வந்து தம்பியப்பாரு எப்படி சிரிக்கிறாம்பாரு!’ என்று சுப்பிரமணியை அழைத்தாள்.

லேசாய் வந்து எட்டிப் பார்த்தான். அவனுக்கு தம்பிப்பாப்பா அழகாய் சிரிப்பது பிடித்திருந்தது. அவன் கன்னத்தை கிள்ள வேண்டும் போல இருந்தது. தொட்டிலுக்குள்ளே கையை விட்டு, அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள, அவன் அழத்தொடங்கிவிட்டான்.

‘அழ வச்சிட்டியே பாப்பாவ? இப்படித்தான் கொஞ்சுவாங்களா, போய் அங்க ஒக்காரு வரேன்!, என்று அவனிடம் சொல்லிவிட்டு ‘யாருடா செல்லம், அண்ணெ ஒரு மடசாம்பிரானி, கிள்ளிட்டானா, அவனை அடிச்சிடலாம்! அழுவாத!’ என்றபடியே சுப்பிரமணியைப் பார்த்து முறைத்தாள்.

தம்பிப்பாப்பாவை கொஞ்சும் போது அம்மா எவ்வளவு அழகாக இருக்கிறாள். தம்பிப்பாப்பா வருவதற்கு முன்னால், தன்னைக் கொஞ்சும் போதும் அழகாகத்தான் இருப்பாள். அப்போதெல்லாம், அவன் அம்மாவை விட்டு பிரிவதே இல்லை. அம்மா தான் எப்போதும் சாப்பாடு ஊட்டி விடுவாள். கதை சொல்வாள். சாமிப்பாட்டு சொல்லித்தருவாள். ஆனால் இப்போதெல்லாம், எல்லாமே தம்பிப்பாப்பாவுக்குத்தான். தம்பிப்பாப்பாவுக்கு, கதையும் புரியாது, பாட்டும் தெரியாது ஆனாலும், அவனுக்குத் தான் அம்மா பாட்டுப்பாடி கதையெல்லாம் சொல்கிறாள். தலை குனிந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.

குனிந்தபடியே தூங்கி விழுந்தவனை எடுத்து, படுக்கையில் கிடத்தினாள் அவனுடைய அம்மா. தேங்காய்ச்சில்லை எடுத்துக் கொண்டு, பொரிகடலையும், பச்சமிளகாய், கொஞ்சம் புளி, கறிவேப்பிலை, கட்டிப்பெருங்காயம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, அம்மி இருந்த நடையில் வைத்து அரைக்கத் தொடங்கினாள். அவளுக்கு உடம்பெல்லாம் வேதனை எடுத்தது. அம்மிக்கல்லை இழுத்து அரைக்கும் போது, மூச்சு வாங்கியது.

சட்னியை தாளித்து, இறகு போல இரண்டு தோசைகளை வார்த்து தட்டில் வைத்துவிட்டு, அவனை எழுப்பினாள்.

எழுந்தவுடன், “சாயங்காலம் ஆயிடுச்சா?” என்றான்

‘ஆயிடுச்சு, எந்திரி சாப்பிடு முதல்ல, இன்னும் சாயங்காலம வரலை, காலையில தான்’ என்றாள்.

அவனுக்கு அப்பா எப்போது வந்து தன்னை செருப்பு வாங்கக் கூட்டிக் கொண்டு செல்வார் என்று தோன்றியது. அம்மா கொடுத்த தோசை ருசியாய் இருந்தது. இன்னுமொரு தோசை கேட்டு, அன்றைக்கு மூன்று தோசை சாப்பிட்டான்.

அப்பா வரும்வரை என்ன செய்வது என்று தெரியவில்லை. பைக்கட்டில் வைத்திருந்த தீப்பெட்டிப் படங்களை எடுத்தான். அதை வைத்துக் கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தான். குமாரிடம் கப்பல் படம் போட்ட தீப்பெட்டிப் படங்கள் நிறைய இருந்தது. இவனிடம் இருப்பதெல்லாம், மிருகங்களும், ரயிலும், பூக்களும் தான். மாணிக்கம் அண்ணனின் கடையில் தான் கப்பல் படம் போட்ட தீப்பெட்டிப்படங்கள் இருப்பதை பார்த்திருக்கிறான். அப்பா வந்ததும், காசு கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அம்மாவிடம் தீப்பெட்டிப்படம் என்றால் காசு கொடுக்க மாட்டாள். பால்கோவா வாங்க வேண்டும் என்றால் தான் தருவாள். பால்கோவா பொட்டலத்தில் சில சமயம் நாலனா காசு வைத்திருப்பார்கள். அது கிடைத்தால், தீப்பெட்டிப்படம் வாங்கிவிடலாம் என்று தோன்றியது.

“அம்மா!”

‘என்னடா?’

“அம்மா, எனக்கு பத்துக்காசு குடும்மா!” என்றான்.

அவன் விரித்து வைத்திருந்த தீப்பெட்டிப்படங்களை பார்த்தவள், ‘எதுக்குடா, தீப்பெட்டிப்படம் வாங்கவா?’ என்றாள்

“இல்லம்மா, பால்கோவா வாங்க!”

‘எங்கிட்ட காசு எதுவும் இல்லை, உங்கப்பா வந்தப்புறம் வாங்கிக்க!’ என்று அடுப்படிக்குள் புகுந்து விட்டாள்.

வேறு வழியேதும் தென்படாமல், காம்பவுண்ட் நடைக்கு வந்து, மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டான். யாரையும் காணோம் நடையில். எழுந்து, ஜெயாத்தை வீட்டில் வந்து பார்த்தான். அமுதாக்கா வாழைப்பூவை ஆய்ந்து கொண்டிருந்தாள், அவளுடைய பாட்டியுடன் உட்கார்ந்து.

அவனை நிமிர்ந்து பார்த்து, ‘வாடா, வாழப்பூ மொக்கு, சாப்புடுறியா?’ என்றாள்.

“ம்ம்” என்று பலமாய் தலையாட்டினான்.

‘பேசாமல் ஒக்காரு, தரேன்!’ என்றாள்.

வாழைப்பூவை மடல் மடலாய் பிரித்து, உள்ளே இருக்கும் பூவின் நரம்பை பிய்த்து தனியே வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பாட்டியும், அவளுடன் சேர்ந்து சொளகில் வைத்து ஆய்ந்து கொண்டிருந்தாள். வாயில், இடித்த வெற்றிலையை மென்றுகொண்டே,

‘என்னடா செய்யுறா ஒன் ஆத்தாக்காரி?’

“அது ஆத்தாக்காரி இல்லை, எங்கம்மா!”

‘அது தான்டா! வெங்கலத்தி எனக்குத் தெரியாதா? அவ தான் என்ன செய்யுதா?’

“ம், சோறாக்குறாங்க! ஒங்களப்போல வெத்தில பாக்கு போட்டுக்கிட்டு, தாயம் வெளாடிட்டே இருப்பாங்களா எப்பப்பார்த்தாலும்?” என்றான். அமுதா அவன் கோபத்தையும், பதிலையும் பார்த்துவிட்டு நமுட்டாய் சிரித்தாள்.

‘இம்புட்டுக்காண்டு இருந்துக்கிட்டு, என்ன பேச்சு பேசுது பாரேன்?’ என்று அமுதாவிடம் சொல்வது போல சொன்னாள், அமுதாவின் பாட்டி.

“அக்கா நாம்போறேன்! என்று எழுந்து கொள்வது போல செய்ய, அமுதா அவன் டவுசரைப் பிடித்து இழுத்து உட்கார வைக்க முயன்றாள். அன்னாக்கயிற்றில் இருந்து பிடுங்கிக் கொண்டு, டவுசர் கீழாய் இறங்க, வேகமாய் இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டான்.

அமுதாவின் பாட்டி சிரித்தாள். அமுதாவிற்கும் சிரிப்பு வந்தது.

‘இருடா, உனக்குத்தானே வேகவேகமா உரிக்கென்’ என்றாள். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். வாழைப்பூ உள்ளே இருக்கும் மொக்கு அவனுக்கு பிடிக்கும் என்று அமுதாவுக்கு தெரியும், அதனால் அவன் அங்கிருந்து போகமாட்டான் என்று தெரிந்தாலும், அவனை சமாதானம் செய்வது போல கொஞ்சினாள்.

காம்பவுண்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஏதோ சைக்கிள் வருவது போலத் தெரிந்ததும், வெளியே வந்தான். அவன் அப்பா தான் வந்து கொண்டிருந்தார், வாழைப்பூ மொக்கை மறந்து அங்கிருந்து, அமுதா கூப்பிடக் கூப்பிட, ஓடினான். அப்பாவின் சைக்கிளைப் பின்னிருந்து ஆர்வமாய்த் தள்ளினான்.

அப்பாவின் சைக்கிளின் கேரியரில் வைத்திருந்த பொட்டலம், அவனுக்கு என்னவென்று அறிய ஆர்வமேற்படுத்தியது. சைக்கிளை நிறுத்திவிட்டு, அவனைத் தூக்கிக் கொண்டு, சைக்கிள் கேரியரில் இருந்த பொட்டலத்தை எடுத்துக் கொண்டார். வீட்டுக்குள் நுழைந்ததும், தம்பி தூங்குவதைப் பார்த்து சுப்பிரமணியத்திடம், வாயில் விரல் வைத்து சப்தமெழுப்பாதே என்று பாவனை செய்தார். அம்மா அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

‘குமாரி இங்க வா? வந்து சுப்புக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு!’ என்று பொட்டலத்தை அவன் கையில் கொடுத்தார்.

பொட்டலம், நீயூஸ் பேப்பரில் கட்டப்பட்டிருந்தது. கையில் வாங்கியதும் கனமாய் இருந்தது.

“என்னதுப்பா?”

‘பிரிச்சுப்பாரேன்!’

அவசர அவசரமாய் பிரித்தான். உள்ளே பளபளவென்ற கருப்பு வாரில் செய்த செருப்பு. அவனுக்கு உடனே கண்கள் விரிந்து பிரகாசமானது.

“யாருக்குப்பா?”

‘என்னோட ராசாக்குட்டிக்குத் தான்!’

“தம்பிப்பாப்பாக்கு இல்லை, எனக்கு மட்டும் தான்!” என்று அவனுடைய அம்மாவைப் பார்த்தபடியே, செருப்பை நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுக்கு மாரிமுத்து அண்ணனும், ரோஸ்மில்க ஞாபகம் வந்ததும், முகம் லேசாய் வாடியது.

“போப்பா, நீ வேலைக்குப் போகும் போது என்னையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீலப்பா!”

‘ஆமா சொன்னேன்! ஆனா இந்த செருப்பப் பாத்தேனா, நம்ம ராசாவுக்கு பொருத்தமா இருந்துச்சா? அப்புறமா ஒன்ன வந்து கூட்டிட்டுப் போகும்போது வித்துப் போயிட்டா என்ன பண்றது, அதான் வாங்கியாந்துட்டேன்!’

“நீ வேலைக்கு வரும்போது வந்தா, மாரிமுத்து அண்ணன் எனக்கு ரோஸ்மில்க் வாங்கிக் கொடுக்கும்ல?”

‘இப்போ என்ன அதுக்கு, சாயந்தரம் நான் வேலைக்குப் போகும்போது கூடவே வா, புதுச்செருப்பு போட்டுக்கிட்டு!’ என்று சொல்லவே ஓரளவு சமாதானம் ஆகி, செருப்பை மாட்டிக் கொண்டு அமுதாவிடம் காட்ட ஓடினான்.

இத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த சுப்பிரமணியின் அம்மா,

‘அவனக் கூட்டிட்டு போயே வாங்கி வந்துருக்கலாம்ல? எத்தனை ஆசயா எல்லார்ட்டயும் சொல்லிட்டே இருந்தான்’ என்றாள்.

‘கூட்டிட்டு போய் வாங்கலாம் தான், ஆசயாத்தான் இருக்கு, ஆனா பாலத்துக்கு கீழே செருப்பு தைக்கிறவர்ட்ட வாங்கின செருப்பை, அவனக்கூட்டிட்டு போய் வாங்கினா நல்லாவா இருக்கும்? இன்னைக்குப்பாத்து வரும்படி எதுவுமில்ல, இருந்ததே இருபது ரூவா தான், அதுலயும் நீ தம்பிக்கு சளிமருந்து வாங்கணும்னு சொல்லிட்டியா, வேற வழி தெரியலை. ஆனா இதுவும் லேசுபட்ட செருப்பா நினைக்காத, தோல்ச் செருப்பு தான், அடியிலப் பாத்தின்னா, டயரை அறுத்து வச்சு தைச்சுருக்கான், தேயவே தேயாது! நல்லா உழைக்கும்’ என்றார்.

அதற்குள் அமுதாவிடம் செருப்பைக் காட்டி விட்டு, பஸ் ஓட்டுவது போல ஆர்ன் அடித்துக் கொண்டே வந்து நின்றான். புதுச்செருப்பு பெருமிதம் தெரிந்தது அவன் முகத்தில்.

— ராகவன் (http://koodalkoothan.blogspot.com/)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *